அத்தியாயம் 28
நா சொன்னேனல்ல, எல்லாரும் என்னைய அம்மா இல்லாத புள்ளன்னு இரக்கமா பார்ப்பாக. ஆனா தினேஷ் மட்டும்,….”, சொல்லி நிறுத்தி விட்டு அமைதியானாள் கொடி.
தினேஷ் மட்டும்?”, துரை கேள்வியாக அமர்ந்திருந்தான்.
தினேஷ் மட்டும் என்னை அம்மாவாவே பாத்துக்குவாக”, கொடி சொல்ல திகைத்து பார்த்தான் துரை.
அப்போ ஒனக்கும் தினேஷை புடிக்கும் இல்ல”, துரையின் அழுத்தமான வார்த்தைகளை அர்த்தமாக உள் வாங்கினாள் கொடி.
எதற்கும் தயாரானவளாக சொன்னாள்,
என்னால ஒங்ககிட்ட பொய் சொல்ல முடியாது. எனக்கும் தினேஷை புடிக்கும்”, என்று.
அவளையே பார்த்திருந்தவன், மேஜையின் மீதிருந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை அவளிடம் காட்டினான்.
“என்றும் உன் சிரிப்பை நேசிக்கும் தோழனாக,
தினேஷ்…” என்ற வாசகம் அதில் இருந்தது.
கொடி துரையை பார்த்தாள்.
தோழன்,…. அவ்ளோ உயிர்த் தோழனா?”, கேட்டான்.
ஆம் என்று தலையசைத்தாள்.
அப்றம் ஏன் அவரு நம்ம கல்யாணத்துக்கு வர்ல?”, கேட்டான்.
வர முடியாத சூழ்நிலை”, என்றாள்.
ம்ம், இம்புட்டு பாசமா, அலைஞ்சி திரிஞ்சி புக்ஸ்ஸெல்லாம் வாங்கி அனுப்பிருக்காக. அவுகளுக்கு பணமனுப்ப வேணாமா? அவுக அட்ரஸ் குடு”,
அவள் பேசாமல் நின்றாள்.
என்னாச்சு?’,
அவுக இருக்குற எடம் எனக்கு தெரியாது”,
லேசாக சிரித்துக் கொண்டவன்,
எங்கிட்ட பொய் சொல்ல மாட்டேன்னு சொன்ன?”, என்றான். அதிர்ந்து பார்த்தாள்.
ஓ அட்ரஸ் அவுகளுக்கு தெரியும். அவுக அட்ரஸ் ஒனக்கு தெரியாதா?”,
ஹான்,.. அது,… இந்த புக்ஸ்ஸெல்லா நம்ம வீட்டு அட்ரஸ்ஸுக்கு வர்லீங்க. செழியண்ணே வீட்டுக்குதே வந்துச்சு”, பதில் கிடைத்து விட்ட சந்தோஷம் அவளது முகத்தில் தெரிந்தது. அதை அவனாலும் உணர முடிந்தது.
மீண்டும் லேசாக சிரித்துக் கொண்டான்.
ஒங்க அண்ணன் வீட்டு அட்ரஸ்ஸ தெரிஞ்சிக்கிட்ட தினேஷ்க்கு, ஓ வீட்டு அட்ரஸ் தெரிஞ்சிக்க முடியாதுன்னு சொன்னா, எங்கியோ தப்பாருக்குற மாதிரியில்ல? ”, அவன் கேட்டான். அவள் எச்சில் விழுங்கி நின்றாள்.
ஒங்க அண்ணனுக்கு தினேஷ் அட்ரஸ் தெரியும். ஒனக்கு தெரியாதுன்னா நம்புற அளவுக்கு நா முட்டாளா?”,
பதிலில்லை அவளிடம். சூறாவளியில் சிக்கி கொண்ட காகிதமாக அல்லாடியது மனம்.
அப்டியும் தெரியாதுன்னா, தெரிஞ்சிக்க!, தினேஷ் பூனேல இருக்காக. ஆண்ட் திஸ் இஸ் ஹிஸ் அட்ரஸ்”, சொல்லி கொரியரில் வந்த அனுப்புனர் அட்ரஸ் எழுதப்பட்ட காகிதத்தை அவளது கைக்குள் திணித்தான்.
ஒன்னால எங்கிட்ட பொய் சொல்ல முடியுங்கொடி. சொல்ற”, சொன்னவன் படுக்கை அறையை விட்டு வெளியேறினான்.
அவன் சென்ற திசை பார்த்தவளின் கண்கள் அவளது அனுமதியை எதிர்பார்க்கவில்லை. தன் வேலையை திறம்பட செய்தது.
பகலவன் எல்லோருக்கும் பொதுவாகத்தான் கண் விழித்தான். ஆனால் எல்லோரும் சுயநலமாகத்தான் கண் விழித்தார்கள்.
கோணங்கியின் பேரன் வேலை செய்யும் கம்பனியின் அட்ரஸ்ஸை சேகரித்துக் கொண்ட சுவாதி, இன்று அவ்னை நேரில் சந்திக்க முடிவு செய்திருந்தாள். எனவே சீக்கிரமாகவே விழித்துக் கொண்டாள்.
காலை கதிர்கள் வீட்டுக்குள் நுழையும் போது சுவாதி வேலைக்கு செல்ல தாயாராகி வீட்டு வரவேற்பறைக்கு வந்தாள். அதிர்ந்து நின்றாள்.
வரவேற்பறை முழுவதும் மனிதத் தலைகள் நிரம்பி இருந்தது. பெண்கள் பட்டுப் புடவையில் ஜொலித்து கொண்டிருக்க, வயதான ஆண்கள் வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தனர். சற்றே வயது குறைந்த ஆண்கள் பேண்ட் சட்டையில் வந்திருந்தனர். ஆண்களில் சிலரது மீசை நிமிர்ந்து நின்றது. மீசைக்கு கீழிருந்த சிரிப்பு சுவாதிக்கு ஆயாசமாக இருந்தது.
டீப்பாவில் இடம் போதாமல் தரையில் பரப்பியிருந்த தாம்பூல தட்டுக்கள் பல்லிளித்தது.
இதுதாங்க் பொண்ணு”, அங்கு நின்றிருந்த ராஜவேலு சொன்னார்.
சுவாதி கண்கள் சுருக்க, அங்கிருந்த பெண்கள் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டனர்.
நவீனை பார்த்தாள் சுவாதி. அவன் அவளை காண கூசி தலை குனிந்தான்.
கூட்டத்துக்கு நடு நாயகமாக அமர்ந்திருந்த மதிவாணனுக்கு அருகில் நின்றிர்ந்த கௌசல்யாவை பார்த்தாள் சுவாதி. அவளும் தலை குனிந்து கொள்ள,
பொண்ணு லட்சணமாத்தா இருக்றா. நம்ம பையனுக்கு சோடியா இருக்கும்”, கூட்டத்துக்குள் வயதான பாட்டி ஒருவர் சொல்ல, சுவாதிக்கு கோபம் ஏறியது. தகப்பனை தீயாக பார்த்தாள். அவரோ அவளை ஏறெடுத்தும் பாராமல், கூட்டத்தை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
மாப்பிள்ளையாக அலங்கரிக்கப் பட்டிருந்தவன் அருகிலிருந்த வயதான முதியவரின் காதுக்குள் ஏதோ சொன்னான். அவர் மற்றவர்களை பார்த்து சிரித்தார்.
பையனுக்கு பொண்ண புடிச்சிருக்குது. பொண்ணையும் ஒரு வார்த்தை கேட்போடுங்கோ”, மாப்பிள்ளை வீட்டாரில் நடு நாயகமாக இருப்பவர் சொன்னார். அவர் மாப்பிள்ளையின் தகப்பனாக இருக்கலாம் என்று சுவாதி யூகித்தாள்.
எம்பொண்ணுக்கு நான்னா உசுரு. என் உசுருக்கு ப்ரச்னையாகுற மாதிரி அவ நடந்துக்க மாட்டா. என் சம்மதந்தே எம்பொண்ணு சம்மதம். எனக்கு ஒரே பொண்ணு, எனக்கு சொந்தமானதெல்லா அவளுக்குத்தா. இதுக்கு மேலு பேச ஒண்ணுமில்லன்னு நெனைக்கிறேன்.”, சபையினை பார்த்து கம்பீரமாக சொன்னார் மதிவாணன்.
அப்போ, தட்ட மாத்திரலாமுங்களா?”, ஒரு பெண்மணி கேட்டாள். அவள் மாப்பிள்ளையின் தாயாராக இருக்குமென்று சுவாதி கணித்தாள்.
தராளமா”, மதிவாணன் சொல்லும் அதே நேரத்தில்,
இல்லீங்க”, என்றாள் சுவாதி. எல்லோரும் திரும்பி அவளை பார்த்தனர்.
மதிவாணனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
நா பேசணும்”, சுவாதி சொன்னாள்.
பேசு!! ஒனக்கு முழு சுதந்திரத்த நாங்க குடுக்குறோம். பேசு புள்ள”, அந்த பெண்மணி சொல்ல,
என் சுதந்திரத்த ஒங்ககிட்ட குடுத்ததாரு?”, சுவாதி கேட்டாள்.
சட்டென்று வாயடைத்து போன அந்த பெண்மணி,
என்னுங்கிது? பொண்ணு மரியாதியில்லாம எடுத்தெறிஞ்சி பேசுது. இதெல்லா எங்க குடும்பத்துல பழக்கமில்லியாமா. கண்ணாளத்துக்கு முன்னாடி சொல்லி திருத்தீருங்கோ”, மதிவாணனிடம் அந்த பெண்மணி சொன்னாள்.
நானென்ன தப்பு செஞ்சேன்? திருத்துறதுக்கு!”, சுவாதி இயல்பான குரலில் தான் கேட்டாள்.
ஆஆஆ” வென்று வாய் பிளந்தாள் அந்த பெண்மணி.
இதென்னங்க் புரோக்கரே! நல்ல குடும்பம்னு சொன்னீங்கோ, பொண்ணு இம்புட்டு பேரு முன்னாடி, நெஞ்சிய நிமித்திட்டு பேசுது. இதென்னத்துக்கு இங்க எங்கள கூட்டிட்டு வந்தீங்கோ”, அந்த பெண்மணியின் அருகில் இருந்த இன்னொரு பெண்மணி சொல்ல, மதிவாணன் கௌசல்யாவை முறைத்தார்.
எனக்கு பேச சுதந்திரமிருக்குதுன்னு சொன்னீக. அதிய நீங்களே எனக்கு குடுத்துருக்றதாவும் சொன்னீக. இப்போ நா பேசுறதே குத்தமுன்னும் சொல்றீக. எதுக்குங்க் இந்த முரண்பாடு?”, சுவாதி கேட்டு முடிக்க,
சுவாதி, என்னதிது? பேசாம நில்லுடி”, கௌசல்யா மெல்லிய குரலில் கடிந்து கொண்டாள்.
ஒரே பொண்ணுன்னு மச்சான் செல்லமா வளத்துட்டாக. அதே இப்டி,…… பேச்சுதாங்க் இப்புடி. நல்ல திறமைசாலிங்க். ஒங்க அரமனைய கம்பீரமா கட்டி அரசாளுமுங்க”, ராஜவேலு சொல்ல,
அதுவுஞ்சரிதே, நம்ம அரமனைக்கு வர்றவளுக்கு கொஞ்சம் பவுசும் திமிரும் வேணுந்தே”, அதே பெண்மணி சொல்ல எல்லோரும் சிரித்தனர்.
ஓ நீ பாகுபலி சிவகாமி தேவியா, அப்போ நா தேவசேனையாகுறதுல தப்பேயில்ல”, தனக்குள் புலம்பிக் கொண்ட சுவாதி,
எனக்கு கொஞ்சம் தனியா பேசணுமுங்க”, என்றாள். மதிவாணன் பயந்தார்.
அம்புட்டுத்தான! தாராளமா பேசுங்கோ! ஏல, என்ன பாத்துட்டுருக்றவன், போயி பேசிட்டு வா”, என்று மாப்பிள்ளையிடம் சொன்னாள் அவளே தான்.
அட, நானென்னத்துக்குங்க இவருகிட்ட பேசோணும்?”, ஸ்வாதி கேட்டாள்.
பொறவென்ன! மாப்பிள்ளையோட அப்பங்கிட்ட பேச போறியாக்கு?”, ஒரு வயதான பெண்மணி சொல்ல, எல்லோரும் சிரித்தனர்.
மதிவாணனும் கௌசல்யாவும் அவமானமாக உணர்ந்தனர்.
அவரென்ன ஜில்லா கலெக்டருங்களா? னா அவருகிட்ட பேட்டியெடுக்றதுக்கு!?”, சுவாதி கேட்க மாப்பிள்ளையின் தகப்பனார் முகம் சுருங்கியது.
இந்தா அம்மணி,.. ஒரு பொட்டப்புள்ளைக்கு இம்புட்டு வாத்துடுக்கு ஆகாதாக்கு. யோசிச்சு பேசு”, என்று கோபமாக ஒரு பெண்மணி சொல்ல,
சுவாதி, நீ உள்ளார போ தாயி, நாங்க பெரியவங்க பேசிக்கிறோம்’, இனியும் சுவாதியை பேசவிட்டால், காரியம் மட்டுமல்ல, குடியும் கெட்டு விடும் என்று நினைத்த ராஜவேலு சொன்னார்.
இல்லீங்க மாமா, பெரியவங்க நீங்க பேசுறதுக்கு முன்னாடி, நா எங்க அப்பாகிட்ட தனியா பேசணும்”, சுவாதி திட்டவட்டமாக சொல்ல, மதிவாணன் சுவாதியை திரும்பி பார்த்தார்.
அவளும் அவரை பார்த்தாள். மகளின் பார்வையின் வீச்சை எதிர்கொள்ள சற்று கடினமாகவே இருந்தது.
அட என்னுங்க கூத்திது? புள்ளைகிட்ட கேக்காமலே பொண்ணு பாக்க ஏற்பாடு பண்ணிபோட்டீகளாக்கு?”, ஒரு பெண் சொல்ல,
என்னுங்கிது?”, மதிவாணனை பார்த்து கேட்டார் ஒரு பெரியவர்.
இல்லீங்க,…… வந்து,…..”,
நம்ம பொண்ணு நம்ம பேச்ச தட்டாதுன்னு ஏற்பாடு செஞ்சுபோட்டாருங்க. சொல்லாம அப்பா இப்டி செஞ்சி போட்டாரேன்னு அதிர்ச்சியில பொண்ணு பேசுதுங்க. ஒண்ணும் சிக்க்லில்லீங்க. இப்போ பேசி பொண்ண கூட்டிட்டு வந்துர்றோமுங்க”, ராஜவேல் சமாளித்தார்.
தப்புங்க், பொண்ணுகிட்ட பேசாம செய்கூடாதுங்க். பொண்ணுகிட்ட பேசி நிதானமா கூப்புடுங்கோ. நாங்க இன்னொரு நாளைக்கு வாறோம்”, என்ற படி எழ முயன்றார் அந்த அதே பெண்மணி.
இல்லீங்க், இல்லீங்க், இன்னைக்கே பேசி முடிச்சு போடலாமுங்க். நீங்க ஒரு பத்து நிமிசம் இருங்க். பொண்ணுகிட்ட பேசிட்டு வந்துர்றோம்”, ராஜவேலு சொன்னார்.
மதிவாணனும் கௌசல்யாவும் சங்கடத்தில் இருக்க, சுவாதி தன் தீர்மானத்தில் நின்றாள்.
மாப்பிள்ளை வீட்டு வயதான ஆண்களும் ஒருவருக்கொருவர் ஜாடையாகவும், மெலிதான குரலிலும் பேசிக் கொண்ட பின் ஒருவர் சொன்னார்,
சரிங்கோ, பேசிபோட்டு வாங்கோ, ஆனா பொண்ணுக்கு விருப்பமில்லாம எதுவும் செய்யக்கூடாதுங்க். ஏன்னா பொண் பாவம் பொல்லாததுங்க். பொண்ணு மனசுக்கு விருப்பமில்லாம வாழ்ந்தா கொலம் வெளங்காம போயிருமுங்க”, மாப்பிள்ளையின் தகப்பனார் தோற்றத்தில் இருந்தவர் சொன்னார்.
ஏல, அல்லாருக்கும் காபி கொண்டா”, எங்கோ நின்ற வேலைக்காரனை ஏவிய ராஜவேலு,
குடிச்சிட்டு பேசிட்டுருங்கோ, இந்தா வந்துர்றோமுங்க்”, சபையிடம் சொல்ல, மதிவாணன் எழுந்தார்.
யார கேட்டுட்டு இவங்கள வர சொன்னீங்க?”,
எம்பொண்ணுக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியாதா?”, மதிவாணன் குரல் உயர்த்தி மகளை அடக்க முயன்றார்.
தெரியாது”, சுவாதி அடங்க மறுத்தாள்.
கௌசல்யா மிரண்டு நிற்க,
இந்தா பொட்டப்புள்ள கொஞ்சம் நிதானமா பேச பழகு”, என்றார் ராஜவேலு.
எப்டி, அந்த வாயில்லா பூச்சி, கொடிய மாதிரியா?’, சுருக்கென்று கேட்டாள் சுவாதி. வாயடைத்து போனார் ராஜவேலு.
நீங்களும் அந்த ஆண்டாள் பொம்பளையும் பண்ற கொடுமை தாங்க முடியாமத்தே கொடி மேரேஜ் முடிஞ்சி விருந்துக்கு கூட ஊர் பக்கம் வராம இருக்றா. எப்புடி? நானும் அப்டியே போயிரவா?”, சுவாதி கேட்க, மதிவாணனுக்கு வலித்தது.
ராஜவேலுக்கு கோபமாக வந்தது.
இந்தா, நாங்க என்ன கொடுமைய பண்ணிபோட்டோமுன்னு, அந்த திருட்டுக் கழுத ஒங்கிட்ட ஒப்பாரி வச்சிருக்குது?”, மகளை பார்க்க முடியாத ஏக்கமும், மகள் தன்னை மதிக்கவில்லையே என்ற கோபமும் கலந்து உள்ளுக்குள் புதைந்திருந்த உணர்வு, சுவாதிக்கான நேரத்திலும், ராஜவேலுவை மகளை பற்றி பேச தூண்டியது.
ஓ நீங்க ஒண்ணுமே பண்லியா? ஹும், பொஞ்சாதி செத்த பொறவு ப்ரம்மச்சாரியா வாழுகதா ஊருக்குள்ள நடிச்சிட்டு, நாளுக்கு ஒரு பொம்பள கூட சுத்துதீகல்ல. ஒங்களுக்கு இதெல்லாம் புரியாது”, சுருக்கென்று சுவாதி கேட்டு விட, அவமானமாக உணர்ந்த ராஜவேலு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினார், புழக்கடை வழியாக!!
இந்தா,.. எல்லாரையும் இப்புடி வாய்க்கு வந்த மாரி பேசிட்டுருந்த, அடிச்சி பல்ல ஒடைச்சு போடுவேன்”, மதிவாணன் மகளை கை ஓங்கினார்.
நீங்க அடிச்சு பல்ல ஒடைச்சாலும் இப்டிதா பேசுவேன். ஏம்பா, அந்தாளே ஒழுக்கமில்லாமருக்றாரு. அவரு கூட்டிட்டு வந்த மாப்ள மட்டும் எப்டி நல்லவனாயிருப்பான்?”, சுவாதி கேட்டாள்.
அம்புட்டுத்தா ஓ ப்ரச்சினையாடா?”, சொல்லி மகளின் தலையை தடவினார் மதிவாணன்.
பேசாமல் நின்றாள் சுவாதி.
எம்புள்ளைக்கு நா விசாரிக்காம செய்வேனா? மாப்ள நல்ல பையண்டா, பாம்பேல உத்யோகம். நெறைய படிச்சிருக்காக. நீ பிரியப்பட்டா கல்யாணத்துக்கு பொறவு நீ வெளிநாட்டுக்கே போயி இருக்கலாம்”, சமாதானமாக சொன்னார் மதிவாணன்.
பாம்பே, வெளிநாடா?”, சிரித்தாள் சுவாதி. மதிவாணன், கௌசல்யாவுடன் நவீனும் புரியாமல் பார்த்தனர்.
ப்ளஸ் டூ முடிச்சதும், பேங்களூர்ல படிக்க போனதுக்கே போதும் போதும்னு ஆயிட்டேன். இது என் ஊரு, நா என் ஊர விட்டு எங்கியும் போமாட்டேன்”,
அம்புட்டுத்தான! மாப்ள வீட்ல பேசி, மாப்ளய நம்மூர்லயே இருக்ற மாதிரி ஏற்பாடு பண்ணிபோடுவோம்”,
ப்ச், அப்பா ப்ளீஸ்,……”, என்றவள் சில நொடிகள் நிதானித்தாள்.
மாப்ள வூட்டுக்காரவுக வெயிட் பண்ணிக்கிருக்காக”, அழுத்தி சொன்னார் மதிவாணன்.
நா செழியன லவ் பண்றேன்”, சுவாதி சொன்னாள்.
மதிவாணன் தன் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தார்.
விழப்போகும் உயிர் பலியை நினைத்து நெஞ்சில் கை வைத்தாள் கௌசல்யா.
நவீனுக்கும் அதே பயம் தான்!!
ச்சீ, அவனா? அவனாரு? நீயாருன்னு புரிஞ்சிதே பேசுறியாக்கு?”, கடுமையான குரலில் மதிவாணன் கேட்க,
புரீல”, நிதானமாக சொன்னாள் சுவாதி.
அவன் எங்கிட்ட பொறுக்கி திங்குற அடியாளோட மொவன். அவன் எனக்கு மருமொவனா?”, இதுவரை மதிவாணனின் முகத்தில் இப்படியொரு கோபத்தையும் வெறியையும், பேச்சில் இப்படியொரு அல்பத்தனத்தையும் சுவாதி பார்த்ததில்லை. அதிர்ச்சியாக பார்த்தாள்.
அன்றொரு நாள் தாய் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. தாயை பார்த்தாள்.
கண்ணீரோடு வேண்டாம் என்பதாய் தலையாட்டினாள் கௌசல்யா.
பாண்டியன் மாமா, நம்ம சொந்தந்தான? செழியன் எனக்கு மொறைப்பையனில்லியா? இம்புட்டு கேவலமா பேசுறீக?”, சுவாதி அமைதியான குரலில் கேட்டாள்.
இந்தா, இந்த நவீனு கூட எனக்கு மருமொவன் மொறதே வரும். அவெ ஆத்தா எனக்கு ஒண்ணு விட்ட தங்கச்சிதே. அதுக்காக முப்பதாயிரம் ரூவா காசுக்காக வர்றவன் போறவனுக்கு கார் கதவ தொறந்து வுட்டு சல்யூட் அடிக்கிற பையலுக்கு எம்பொண்ண குடுக்க முடியுமா?”, மதிவாணன் கோபமாக பேச, நவீன் சொரணையின்றி நின்றான். அவன் அப்படி நிற்பது சுவாதிக்கு வியப்பாக இருந்தது.
இவனுக்கே எம்பொண்ண கட்டிக்க தகுதியில்லன்னா, கேவலம் அஞ்சுக்கும் பத்துக்கும் கல்யாண வீட்லயும் சாவு வீட்லயும் போட்டோ புடிக்குற பைய அவன். அவெ எம்பொண்ணுக்கு தகுதியா? நா செத்தாலும் நீ நெனைக்கிறது நடக்காது”, வரவேற்பறையில் இருக்கும் சம்மந்தி வீட்டாருக்காக சத்தம் குறைத்து சொன்னார் மதிவாணன்.
அதிர்ந்து நின்றாள் சுவாதி.
வர்ற வைகாசில வந்துருக்குற மாப்ளைக்கும் ஒனக்கும் கல்யாணம்”, சொல்லி விட்டு நடந்தார் மதிவாணன்.
ஏதோ உறுதி செய்து கொண்டவளாக, வேகமாக நடந்து தகப்பனை தாண்டினாள் சுவாதி. கண்கள் சுருக்கியவரும் வேகமாக நடக்க, கௌசல்யாவும் நவீனும் கூட வேகம் கூட்டி பின்னால் நடந்தனர்.
என் விருப்பத்துக்கும் மரியாதை குடுத்த ஒங்கள நா ரொம்பவே மதிக்கிறேன். நீங்க வளத்த பையன் நல்லவராவே கூட இருக்கலாம். ஆனா மன்னிச்சிருங்க! எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்ல”, கைகள் கூப்பி நின்று சுவாதி சொல்லி முடிக்கும் போது, வந்த மதிவாணன் கோபத்தில் எரிந்து கொண்டிருந்தார். எரிக்க துடித்துக் கொண்டிருந்தார்.
ஏனுங்க, பொண்ணு விருப்பத்த கேக்காம எங்கள பொண்ணு பாக்க வர சொல்லீருக்கீங்களே! இது நியாயந்தானுங்களா?”, ஒருத்தி கேட்க,
இந்தா”, மாப்பிள்ளையின் தகப்பனார் குறுக்கிட்டார்.
அவள் அமைதியானாள்.
அவர் எழுந்தார். எல்லோரும் எழுந்தனர்.
நல்ல பொண்ண பெத்துருக்கீங்கோ. அவளுக்கு விருப்பமில்லாம கல்யாண ஏற்பாடானது தெரிஞ்சும் வந்தவங்கள அவமானப்படுத்தாம அப்பன தனியா கூப்டு பேசுனது, இதுக்கு மேலயும் நாங்க ஏமாந்துரக்கூடாதுண்டு, கையெடுத்து கும்புட்டு மன்னிப்பு கேட்டு, உள்ளத சொன்னது, ஆருக்கும் அஞ்சாம பேசுறது, நல்ல நல்ல குணம் நெறைஞ்ச புள்ளைய பெத்துருக்கீங்கோ. இனியாது அதுக்க விருப்பந்தெரியாம எதும் ஏற்பாடு செய்யாதீங்கோ”, சொல்லி விட்டு அவர் கண் காட்ட எல்லோரும் வெளியேறினர்.
வாரேனுங்க”, சொல்லி கும்பிட்டு விட்டு அவரும் வெளியேறினார்.
சில நொடிகள் அசையாமல் குடி கொண்ட நிசப்தத்தை மகளை ஓங்கி அறைந்து விரட்டினார் மதிவாணன்.
இதுவரையில் தாயிடமும், தகப்பனிடமும் அடி வாங்கியறியாத சுவாதிக்கு அடி வலிக்கவில்லை. அடித்து விட்டார்” என்பதே வலித்தது. அழுதபடி நின்றாள். கௌசல்யாவும் அதே வேலையைத்தான் செய்தாள்.
நவீனுக்கு சுவாதி மேல் இரக்கம் உருவானது.
ஓடும் நதியின் பிரவாகத்தை பார்த்தபடி அசைவற்று நின்று கொண்டிருந்தான் செழியன்.
இப்புடியே நின்னுட்டுருந்தா எப்புடில? நாஞ்சொல்லகத கேளு. அவள தூக்கிட்டு போயி தாலிய கட்டு. எது வந்தாலும் நாங்க பாத்துக்கிடுகோம்”, கல்யாணி சொல்ல, அருகில் நின்ற அவளது கணவன் ரங்கா ஆம் என்பதை போல் தலையாட்டினான்.
புரண்டோடிக் கொண்டிருக்கும் வெள்ளத்தின் மீதான பார்வையை செழியன் விலக்கவில்லை.
ஏல, இப்புடியே கல்லு மாதிரி நின்னுட்டுருந்தா எப்படில? போல, நாஞ்சொல்றேன், அவள தூக்கிட்டு போயி தாலிய கட்டு”, செழியனின் புஜத்தை தன் பக்கமாக திருப்பி சொன்னாள் கல்யாணி.
அவளது முகத்தை பார்த்தவனின் முகத்தில் உணர்ச்சியே இல்லை.
ஒன்னைத் தவிர வேற எவங்கிட்டயும் அவளால வாழ முடியாதுல”, கல்யாணியின் கண்களில் நீர் வழிந்தது.
சந்த்யா சம்மதிச்சிட்டாளல்ல?”, செழியன் கேட்டான்.
அவ அம்மா புடிவாதத்துக்காக சம்மதிச்சிருக்கா. மனசார சம்மதிக்கல. நாஞ்சொன்னா கேளுல”, கல்யாணி மருங்கினாள்.
ஆமா செழியா, சந்த்யாவை பத்தி முழுசா தெரிஞ்சவன் நீ. ஒன்னய தவிர வேற யார்கிட்டேயும் அவளுக்கொரு நல்ல வாழ்க்க கெடைக்காதுல”, ரங்கா சொன்னார்.
இல்லண்ணே! தனசேகர் சார பத்தி எனக்கு நல்லா தெரியும். வெளிநாட்டுக்கெல்லாம் போயி படிச்சிட்டு வந்தவக. ப்ராடு மைண்டட் மேன்”, அவரு கூட சந்த்யா வாழ்க்க நல்லாருக்கும்”, செழியன் சொல்லி முடிக்கும் போது கல்யாணி அவனை அறைந்திருந்தாள்.
பொறுக்கி பையல! ஒம்பொஞ்சாதிய இன்னொருத்தனுக்கு கட்டி வைப்பியால நீயி?’, அழுகையுடன் ஆவேசமாக கேட்டாள் கல்யாணி.
இதிய சந்த்யா சொல்லட்டும் மதனி. நீங்க சொன்னத செய்றேன்”, அவன் சொன்னான்.
அய்யோ, அவ என்னைக்குல மனசுல இருக்றத ஒடைச்சி பேசிருக்றா?”,
பேசணும் மதனி, அவ பேசாம, நீங்க சொன்ன மாதிரி நா அவள தூக்கிட்டு போயி தாலி கட்டுனா, அவகிட்ட பலாத்காரமா நடந்துகிட்டவனுக்கும், எனக்கும் வித்தியாசமில்லாம போயிராதா?”, கேட்டான்.
போவாது. அவ ஆழ் மனசுக்கு அந்த வித்தியாசம் புரியும். காலப்போக்குல அவ வாழ்க்க நல்லாருக்கும். எவனையோ கட்டிகிட்டா,…..”,
எவனையோ இல்ல, நல்லா படிச்சவக, பெரிய கன்ஸ்டிரக்ஷன் கம்பனி மொதலாளி. அவ வாழ்க்க நல்லாருக்கும். நா ஒரு சாதாரண ஃபோட்டோகிராஃபர், என்னைய கட்டிகிட்டா சந்த்யா எங்கப்பங்கூட ஆயுசுக்கும் போரடணும். எங்கூட இருக்றதவிட, தனசேகர் சார் கூட சந்த்யா வாழ்க்கை நல்லாருக்கும்”, அமைதியாக செழியன் சொல்ல, அவனது சட்டைக் காளரை பற்றிப் பிடித்து எரிநெருப்பாக பார்த்தாள் கல்யாணி.
யோசிச்சு பாருங்க மதனி, நாஞ்சொல்றது சரிதான்னு புரியும்”, செழியன் சொன்னான். கல்யாணி அவனது சட்டைக் காளரை விடவில்லை.
வுடு புள்ள, அவஞ்சொல்றதுலயும் அர்த்தமிருக்குது”, சொல்லி அவளது கையை சட்டையிலிருந்து பிரித்தான் ரங்கா.
ஏதும் பேசாமல் பைக்கை கிளப்பி சென்றான் செழியன்.
ரங்காவின் தோளில் சாய்ந்து அழுதாள் கல்யாணி.
உன் நினைவோடு நான்
உயிர் வாழ!!
உன் சிரிப்பொன்றே லட்சியம்!!
தொடரும்,…..
சக்தி மீனா,…..