அத்தியாயம் 29
வா தாயி, வாங்க மருமொவன!!",அபிராமி அழைக்க செழியனின் வீட்டுக்குள் வந்து கொடியும் துரையும்.
எந்தங்க்க்கோ, வாடா செல்லோ", பாண்டியன் கொடியை அழைக்க, கொடி கோபம் மறைத்து, சிரித்து வைத்தாள். துரையின் சிரிப்பில் பொய்யில்லை.
அண்ணே, ரூம சூப்பரா ஏற்பாடு பண்ணிட்டோமுங்க்", சொன்ன படி வந்தான் சரவணன்.
துரையை பார்த்து ஒருமுறை சிரித்துக் கொண்டான்.
சரிடா, போயி வாழ ஏலை கொண்டா. அப்படியே, நாலு எழனியுங்கொண்டா", தடபுடல் செய்தார் பாண்டியன்.
வீட்டை சுற்றி பார்த்த துரை சோஃபாவில் அமர,
என்ன உக்காந்துட்டீக? வேல இருக்குதல்ல", சொன்னார் பாண்டியன்.
ஏனுங்க, என்ன பண்றீக? உக்காந்த் மனுசன போயி ", அபிராமி அதட்டினாள்.
அதில்லடி, புள்ளைக்கும் பொண்ணுக்கும் வாங்கி வச்ருக்ற புதுத் துணிய கொண்டா. அதிய உடுத்துட்டு கோயிலுக்கு போவேணாமா? உக்காந்து கிட்ட கதையாகுமா?", பாண்டியன் சொல்ல துரை சிரித்தான்.
பூச பதினோரு மணிக்கு தான?! என்னத்துக்கு இப்டி பறக்குறீக? நீங்க இருங்க தம்பி, காப்பி கொண்டாரேன். இவுக இப்புடித்தே பேசிக்கிருப்பாக. அதிய சட்ட பண்ணாதீக", என்ற அபிராமி சமையலறைக்கு செல்ல, எழுந்த துரை அமர்ந்தான்.
வாசலில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினார் ராஜவேலு. அவரை பார்த்ததும் கொடியின் முகம் சுருங்கியது. கோபம் ஆட்கொண்டது.
உடன் ஆண்டாளும் வருவதை கண்ட கொடி, பேசி விடுவது என்று தீர்மானித்தே விட்டாள்.
ஆண்டாளின் பின்னால் வந்த கந்த வேலு மற்றும் அவரது இரு மகன்களின் வரவு, யாரையும் உறுத்துவது இல்லை. மகிழ்ச்சியாக்கவும் இல்லை.
ஆத்தா கொடி எப்டியாத்தா இருக்க?! பாத்து எம்புட்டு நாளாச்சாத்தா?", ஓடி வந்து கொடியை கட்டி அணைத்தாள் ஆண்டாள். தன்னை கட்டிக் கொண்ட ஆண்டாளை, உதறி தள்ளி விட்டாள் கொடி. தடுமாறி விழ எத்தனித்த ஆண்டாளை கந்தவேலு பிடித்துக் கொண்டார்.
துரை கண்கள் சுருக்கினான். அனைவரும் அதிசயமாக பார்க்க, தேநீர் கொண்டு வந்த அபிராமி அதிர்ந்து நின்று விட்டாள்.
இங்க பாருங்க பெரிப்பா, செழியன் அண்ணே கூப்புட்டான்னு தா ஒங்க வீட்டுக்கு வர சம்மதிச்சேன். இவங்க இங்க இருப்பாகன்னா நா கெளம்புறேன்", கொடி கோபமாக சொல்ல,
கொடி, நீ ரொம்ப ஓவரா பண்ணிட்டுருக்ற", சத்தமாக சொன்னபடி துரை எழுந்தான்.
கொடி தலை குனிந்து அமைதியானாள்.
ஒனக்கு ஒருத்தர புடிக்கலங்குறதுக்காக, எல்லாரும் அவங்கள வெறுக்க வேண்டிய அவசியமில்லை", துரை சொன்னான்.
கொடி பேசாமல் நின்றாள்.
அவங்ககிட்ட சாரி கேளு", துரை சொல்ல, ஆண்டாள் சிரித்தாள்.
கொடி பேசாமல் நின்றாள்.
இது நம்ம வீட்டில் கொடி. இங்க யார் வரணும் வரக்கூடாதுன்னு சொல்ற உரிமை ஒனக்கு இல்ல, அவங்ககிட்ட சாரி கேளு", துரை சொன்னான்.
இது என் செழியன் அண்ணன் வீடு. இங்க பேசுறதுக்கு எனக்கு உரிமையிருக்கு. எங்கண்ணனுக்கு என் ஃபீலிங்ஸ் புரியும். சாரி கேக்குற அளவுக்கு நா இவங்களுக்கு எந்த தப்பும் பண்ணல", கொடி சொன்னாள்.
இந்தாத்தா, தப்புடி, புருசன எதுத்து பேசக்கூடாது", அபிராமி கொடியிடம் சொல்ல,
தப்பு யார் செஞ்சாலும் தப்புதா பெரியம்மா. இம்புட்டு வருசமா நீங்க எதுத்து பேசாமலே இருந்தீகளே!! சரியாயிட்டாங்களா? ", கேட்ட கொடி பாண்டியனை பார்த்தாள். பேச்சடைத்தது அபிராமிக்கு.
அவ்விடமே அமைதியானது.
இவைகளுக்கு என்னய பத்தி என்ன தெரியுமா?! என் நெலமை என்னன்னு என்ன தெரியும்?! இங்க யாரு நல்லவக, யாரு கெட்டவகன்னு இவங்களுக்கு தெரியுமா? அவுக தெரியாம பேசுறாக. அவுகளுக்கு நான்தானே புரிய வைக்கணும். நா அமைதியா இருந்தா அவுகளையும் சகதிக்குள்ளார இழுத்து போட்டுப்புடுவாக, இந்த ஊரு பெரிய மனுசங்க!!”, துரையை கை காட்டியபடி சொன்ன கொடி தகப்பனை முறைத்து பாருங்க, எல்லோருக்குமே விரலில் நண்டு கடித்த நிலைதான்.
புதிர்களுக்கு விடை தேடி வந்த துரையரசன் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தான்.
உசுரும் மொகமும் இல்லாத ஒங்க கௌரவத்த காப்பாத்த என் மனச சாகடிச்சிட்டீக.! அத்தோட முடிஞ்சு போச்சு. ஒங்களுக்கும் எனக்கும் அல்லாத்தையும் ஓட்டுக்கா முடிச்சுப்போட்டே. இன்னும் என்னய ஒறவு கொண்டாடிட்டு வராதீக”, தன் தகப்பனை பார்த்து கோபமாகவே சொன்னாள் கொடி.
ராஜவேலு அசையாமல் நின்றார்.
அப்பங்கிட்ட இப்டியெல்லாம் பேசக்கூடாதாத்தா. அப்பனுக்கு ஒன்னய வுட்டா ஆறிருக்கா சொல்லு”, அபிராமி கொடியின் நாடியை பிடித்து சமாதானமாக சொன்னாள்.
இவுகளுக்கு அல்லாருமிருக்க பெரியம்மா. எனக்குத்தே ஆருமில்ல”, அவளின் சொற்கள் துரையின் இதயத்தை சுருக்கென்று தைத்தது.
ராஜவேலு கிளம்பி விட்டார்.
ராஜவேலு”, பாண்டியனின் அழைப்பு அவரது காதுகளில் விழாவில்லை.
ஆரு முன்னாலயும் தலை குனியாத மாமன பேசிபுட்டியல்ல! நீயெல்லா வெளங்கவே மாட்டடி”, சொல்லி விட்டு சென்றாள் ஆண்டாள்.
கந்தவேலு பரிதாபமாக பார்க்க,
நாங்க கூட ஒனக்கு வேணாமல்லக்கா?”, அவரது மகன்களிடம் ஒருவன் கேட்டான். உடன் நின்ற சிறுவன் பாசத்தோடு பார்த்தான். கண்ணீர் தான் கழலவில்லை.
இல்லை, அந்த இளைஞனின் கேள்விக்கு கொடியிடம் பதிலில்லை.
கந்தவேலுவும், அவரது பிள்ளைகளும் கூட சென்று விட்டனர்.
இம்முறை மனைவியை படிக்காமல் விடுவதில்லை” என்பதில் துரை உறுதியாக இருந்தான். அமைதியாக நின்றிருந்தவன் நடந்தது, "தன் மனைவிக்கு கட்டாயக் கல்யாணம்" என்பதனை மட்டும் உணர்ந்து கொண்டான்.
அறிவு கெட்டவள! மாப்ளய வச்சிகிட்டே இந்த ஆட்டம் ஆடுறவ! வூட்ல என்னென்ன ஆடுவியோ?”, கொடியின் காதல் விவகாரம் பற்றி அறிந்திராத அபிராமி கேட்டு கொடியின் முதுகில் இரண்டு அடிகள் போட்டாள்.
ம்மா வேணாம்”, தடுத்த துரை கொடிக்கு அருகில் வந்தான்.
மனச சாகடிச்சிட்டீக!! அப்டின்னா என்ன அர்த்தம்?', கேட்டான். பதிலின்றி நின்றாள்.
சோ, நம்ம கல்யாணம் ஒனக்கு புடிக்காத கல்யாணம்,... இல்ல?!”, துரை கேட்க,
அதெல்லாமில்லீங்க மருமொவனே,...”, பாண்டியன் குறுக்கே வந்தார். அவரை கை காட்டி நிறுத்தியவன்,
நீ சொல்லு”, என்றான் கொடியிடம். தலை குனிந்தாள்.
அப்பன் மேலருக்ற கோவத்துல ஏதேதோ சொல்லுதுங்க. மத்தபடி கல்யாணம் புடிக்காம இல்லீங்க”, அபிராமி சமாளிக்க முயன்றாள்.
அதிய ஒங்க பொண்ணு சொல்லணுத்த”, என்றான்.
பாண்டியனும் அபிராமியும் கொடியை பார்த்தனர். அவள் அசையாமல் நின்றாள்.
ஏ, வாய தொறந்து பேசுடி. அவுக ஒன்னய தப்பா நெனைக்க போறாக”, அபிராமி சொல்ல,
வேணாம், கட்டாயப்படுத்தாததீக. அவ அவளாவே பேச வேண்டியது நெறைய இருக்குது. இப்போதான வாய தொறந்துருக்றா. பேசுவா”, என்றான் துரை.
மயான அமைதி சில நிமிடங்களை கவ்வி கொள்ள, யாருக்குமே நிலைமையை கையாளும் வழி தெரியவில்லை.
செழியன் மச்சான் எப்போ வருவா?”, பாண்டியனிடம் கேட்டு மௌனம் கலைத்தான் துரை.
அவன் வர்றதுக்கு ராவாயிருமுங்க்”, அபிராமி சொன்னாள்.
ஓ, அப்பொ, நீங்க வாங்க, ஒங்க ஊர சுத்தி காட்டுங்க. இந்தூர்ல பொண்ணெடுத்துருக்றேன். நா ஒங்க ஊர தெரிஞ்சிக்க வேணாமா?”, கேட்டு பாண்டியனின் தோளில் கை போட்டான் துரை.
தூண்டிலில் மாட்டிக் கொண்டதை உணர்ந்த பிறகும், பாண்டியன் சொனனார்.
ஏலே, சரவணா, வண்டியெடுலே”,
சரவணன் காரை நோக்கி ஓடினான்.
கோயில்ல விசேசமிருக்குது. இன்னைக்கு கூட மச்சான் வேலைக்கு போயிருக்றாக!”, பாண்டியனிடம் மெல்லிய குரலில் கேட்டான் பாண்டியன்.
அவன் ஒரு பொச கெட்ட பைய மாப்ள. ஊர் விசயம் எதுலயும் தலையிட மாட்டான்”. பாண்டியன் சொன்னார்.
அவுகளுக்கு சாமி நம்பிக்கை கெடையாதா?”, கண்கள் சுருக்கி கேட்டாந் துரை.
அப்டியெல்லா இல்லீங்க் தம்பி. வாரா வாரம் வெள்ளிக்கிழமையானா நம்மூரு மாரியாத்தா கோயிலுக்கு போயிருவானுங்க். இன்னைக்கு ஆப்பீஸ்ல ஏதோ வேலையிருக்குதுன்னு போயிருக்றான்”, அபிராமி சொன்னாள்.
காஃபீ குடுக்றேன்னு சொன்னீக. இந்தூட்டு மாப்ள நானு, வந்து இம்புட்டு நேரமாகுது”, துரை சொல்ல,
இந்தா”, என்ற அபிராமி, பதட்டத்தில் டீப்பாயில் வைத்து விட்ட தேனீரை எடுத்து கொடுத்தாள்.
ஆறி போயிருக்குது, பரவால்ல”, என்றவன் குடித்து விட்டு டம்ளரை கொடுத்தான்.
எம்பொண்டாட்டிக்கும் குடுங்க, கொஞ்சம் சூடு தணியட்டும்”, சொல்லி விட்டு, தான் அணிந்திருந்த வேட்டியின், நுனியை காலால் தட்டி கையால் பிடித்த படி நடந்தான் துரை.
என்னாத்தா இப்டி பண்ணிபோட்ட?”, கொடியிடம் மெல்லிய குரலில் கேட்ட, பாண்டியன் துரையின் பின்னால் ஓடினார்.
வர வர ஒனக்கு மெதப்பு ஏறி போச்சு, வாடி இங்குட்டு”, சொல்லி கொடியை இழுத்து சென்றாள் அபிராமி.
இரு ஊர் எல்லைக்கு காவலாக நிற்கும் வீரனாம் கருப்ப சாமி ஆலயத்தின் கொடை விழா வெகு விமர்சையாக தொடங்கியது. சுடிதார் அணிந்த பெண்களின் கூட்டத்துக்கு நடுவே, ஆங்காங்கு தாவணி அணிந்த பெண்கள், சிரிப்பொலிகளுடன் நடமாடிக் கொண்டிருந்த, திருவிழாக் கடைகளைக் கட்டியது. பாவாடை சட்டை அணிந்த பெண் பிள்ளைகளும், கால்சட்டை மற்றும் சட்டையுடன் ஆண் பிள்ளைகளும், விளையாட்டு மைதானத்தில் ஒழுங்கின்றி அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருக்க, ராட்டினத்தில் அமர்ந்திருந்து சுற்றி வருபவர்கள் வட்டத்தின் புள்ளிகளாக தெரிந்தனர்.
இன்னைக்கு கூடவா வேலைக்கு போகணும்? அவள நீ கேக்குறதில்லியா சித்தி?”, கோவில் வாசலில் பட்டுப் புடவையில் ஜொலித்தபடி, மரத்து நிழலில் அமர்ந்திருந்த கல்யாணி காவேரியிடம் கேட்டாள்.
கல்யாணியின் பதினொரு வயது மகன் கவின், புத்தாடையில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தான்.
ஆஃபீஸ்ல ஏதோ முக்கியமான சோலியாம்டி. ஓவர் டைமிருக்குதுன்னா. மாப்ள கூடால கூட ரெண்டு மணிநேரமிருந்தா அவ மனசு மாற வாய்ப்பிருக்கதுல்ல!! அதனாலத்தே நானும் போயிட்டு வான்னுட்டேன்”, காவேரி சொன்னாள்.
ம்க்கும், ஒம்மொவ தான, கண்டிப்பா மாறுவா, நெனைச்சிட்டே இரு”, தனக்குள் முணங்கினாள் கல்யாணி.
தனசேகர் கன்ஸ்டிரக்ஷன் அலுவலகத்திற்குள் சுஹாசினி தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள். சந்தியா தன் வேலைகளை செய்து கொண்டே, சுஹாசினியையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.
இதெல்லாம் லாஸ்ட் மந்த், நம்ம கம்பனியில போட்ட டிசைன்ஸ், இத வெரிஃபை பண்ணா, ஒனக்கு ஏதாவது ஐடியா கிடைக்கும்", சொல்லி அந்த காகிதங்களை கட்டி வைத்த சுஹாசினி, மீண்டும் தன்னிருக்கையில் அமர்ந்து, ஏதோ காகிதங்களை புரட்டவும் எழுதினாள்.
சாரி", சந்தியா சொன்னாள்.
ஒரு நொடி எழுதிக் கொண்டிருந்த கையை நிறுத்திய சுஹாசினி நிமிர்ந்து பார்க்காமல், தன் பணிகளை தொடர்ந்தாள்.
சில நொடிகளுக்கு பிறகு, எழுதிக் கொண்டிருந்த கையை, சந்தியா பிடிக்க, கை நின்றது.
சாரிடி!! ஓங்கோவம் நியாயமானது தா. அதே மாதிரி நா அன்னைக்கு பேசுனது கூட நியாயந்தா", சந்தியா சொல்ல, அவளது கையை உதறி விட்டு எழுந்தாள் சுஹாசினி.
என்னடி நியாயம்? ஒனக்காக அந்த கோபால் நாய அடிச்ச செழியன, பைத்தியக்காரனாக்கி அலைய விட்ருக்கியே அதுவா நியாயம்?", குரல் உயர்த்தி கேட்டாள் சுஹாசினி.
எவருமற்ற அலுவலகத்தில் அவளது குரல் தனித்து ஒலித்தது.
அதிர்ந்து பார்த்தாள் சந்தியா.
அன்னைக்கு அந்த கோவால் பொண்டாட்டிக்காக நீ பேசுனது எனக்கு கோவந்தா. ஆனா, அதுல இருந்த ஒன்னோட மனிதாபிமானம் எனக்கு புரியாம இல்ல. நீ திரும்ப வந்து பேசும் போது, ஒன்கிட்ட சமாதானம் ஆயிரணும்ன்னு தா நெனைச்சுட்டுருந்தேன். ஆனா, ஒனக்கும் தனசேகர் சாருக்கும் கல்யாணம் நிச்சயமாயிருக்குன்னு தெரிஞ்சப்போ, ஒன்னைய வெட்டி போட்டுரலாமான்னு கோவம் வந்துச்சு", சுஹாசினி சொல்ல, சந்தியாவுக்கு பேச நாவெழவில்லை.
நீ இந்த ஆஃபீஸ்ல ஜாயின்ட் பண்ணி என்கூட ஃப்ரெண்ட்டான ரெண்டாவது நாள் செழியன் என்னைய மீட் பண்ணாரு. சந்தியாக்கு ஆம்பளைங்க கூட பேசவும் பழகவும் இயல்பாவே பயம். அவளுக்கு அப்படி ஏதாவது இருந்தா நீங்கதா அவளை பாத்துக்கணும்ன்னு சொன்னாரு", சுஹாசினியின் வார்த்தைகள் சந்தியாவின் கண்களின் திரையில் நீர் படர செய்தது.
அப்போலருந்து தினம் ஒன்னைய பத்தி கால் பண்ணி கேப்பாரு. ஆரம்பத்துல செழியன் என்கிட்ட தப்பா மூவ் பண்றாரோன்னு கூட சந்தேகப்பட்டேன். எம்புருஷன் கிட்ட ஃபோன குடுத்து பேச சொன்னேன். அப்போ தா, செழியன் ஒன்னைய லவ் பண்றதும், நீ அவரு லவ்வ அக்செப்ட் பண்ணாம, அவர அவாய்ட் பண்றன்னும் தெரிஞ்சுது. ஒரு பொண்ணு மேல, ஒரு ஆம்பளையால இவ்ளோ அக்கறை வைக்க முடியுமான்னு எம்புருஷன் செழியன பத்தி ஆச்சரியமா பேசாத நாளே இல்ல. ஆனா, நீ,...... ச்சே", சொல்லி முகத்தை திருப்பினாள் சுஹாசினி.
சுஹாசினி", சந்தியாவின் உதடுகள் உச்சரித்தது.
செழியனுக்கும் தனசேகருக்கும் என்னடி வித்தியாசம்? எதை பாத்து செழியன வேணாம்னு சொல்லிட்டு, தனா சாரை செலக்ட் பண்ண?",
சந்தியா பேசாமல் நின்றாள்.
ரெண்டு வித்தியாசம், ஒண்ணு சாதி, இன்னொண்ணு பணம் அதானே!! ச்சீ, ஒன்னைய ஃப்ரெண்ட்ன்னு சொல்லவே அவமானமா இருக்குடி",
சந்தியா கண்ணீர் வடித்தாள்.
ஆஃபீஸ்ல நா என் வேலைய செய்வேன். நீ ஓ வேலைய செய். ஆஃபீஸ் விஷயமா ஏதாவது பேசணுமா? பேசு!! நீ கோ ஒர்க்கரா இருந்தாலும் சரி, முதலாளி பொண்டாட்டியா இருந்தாலும் சரி!! ஒருவேளை நா இங்கருக்குறது ஒனக்கு உறுத்தலா இருந்தா, தனா சார்கிட்ட சொல்லி என்னை டிஸ்மிஸ் பண்ணிடு. ஆனா, இனி ஃப்ரெண்ட்ன்னு சொல்லிட்டு வராத!!", சொல்லி விட்டு தன் வேலைகளை தொடர்ந்த சுஹாசினியை பாவமாக பார்த்த சந்தியா, சில நொடிகளுக்கு பிறகு, தன்னருகில் அமர்ந்தாள்.
தனசேகரின் கார் அலுவலகத்துக்குள் நுழைந்தது. அலுவலகத்தின், முன்வாசலில் நின்ற வாட்ச் மேன் சல்யூட் அடித்தார்.
காரிலிருந்து இறங்கிய தனசேகர் அலுவலகத்துக்குள் சென்ற பிறகு, எங்கிருந்தோ வாட்ச் மேன் அருகில் வந்தான் கோபால்.
சார் இப்போ கூட ஒண்ணும் ஆயிரல சார். இதெல்லா வேணாம் சார்”, வாட்ச்மேன் சொன்னான்.
தொடை நடுங்கி பையல!! ஏதாவது சொதப்பி சிக்குன!! சங்கறுத்துப்புடுவேன்", சொன்னான் கோபால். பயந்தார் வாட்ச் மேன்.
நான் சொன்ன மாதிரி செஞ்சிட்டியாலே?", கோபால் கேட்டான்.
ம்ம், ஆமா சார்",
லேய், என்ன செஞ்சன்னு சரியா சொல்லுல, ஒன்னையெல்லாம் நம்ப முடியாது",
நீங்க சொன்ன மாதிரி, ஈவினிங் சுஹாசினி குடிச்ச காஃபியில யாருக்கும் தெரியாம, நீங்க குடுத்த மாத்திரையை மிக்ஸ் பண்ணிட்டேன்",
சூப்பர்ல!! இந்நேரம் மாத்திரை வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கும்", கோபால் சொன்னான்.
எழுதிக் கொண்டிருந்த சுஹாசினி தலையில் கை வைத்தாள்.
எழுந்தாள். தண்ணீரை நோக்கி நடந்தாள். தடுமாறி தலை சுற்றல் கொண்டு சரிய முனைந்தாள். ஓடி வந்து பிடித்தாள் சந்தியா.
என்னடி ஆச்சு?!", பதறினாள்.
ஒண்ணுமில்லடி!! லேசா தலைய சுத்துது", என்றவள் தடுமாற, தாங்கி பிடித்து இருக்கையில் அமர வைத்தாள் சந்தியா.
தண்ணீர் கொடுத்தாள்.
முடில சந்த்யா, தலைய சுத்திட்டு வருது. கண்ணை சொகுது",
என்னாச்சு?", பதட்டமாக கேட்ட படி வந்தான் தனசேகர்..
என்னன்னு தெரில சார், தலை சுத்துதுன்னு சொல்றா", சந்தியா சொல்ல,
ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்", உடனே முடிவெடுத்தான் தனசேகர்.
சார், கொட்டேஷன் குடுக்க நாளைக்கு தா லாஸ்ட் டேட்", சந்தியா சொன்னாள்.
தெரியும் சந்தியா, அதுக்காக இவகள இப்படியே விட முடியாதல்ல!? மொதல்ல இவகள ஹாடப்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு, இவங்க வீட்டுக்கு இந்த ஃபார்ம் பண்ணுவோம். அப்றம் நாம என்ன செய்யணும்ன்னு முடிவு பண்ணிக்கலாம்", தனா சொல்ல, சுஹாசினியை தூக்க தனாவுக்கு உதவி செய்தாள் சந்தியா.
சுஹாசினியை தாங்கி கொண்டு இருவரும் நடந்து வருவதை கண்ட வாட்ச் மேன், ஓடி வந்து உதவி செய்தான்.
மூவரும் சேர்ந்து சுஹாசினியை காருக்குள் ஏற்றினர். சந்தியா சுஹாசினியின் தலையை தன் மடியில் தாங்கி கொண்டாள்.
சார், நா இவ்வளவு ஹாஸ்பிட்டல்ல சேத்துட்டு அவ ஹஸ்பண்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுறேன். நீங்க இங்க, வேலைய பாருங்க", சந்தியா சொன்னாள்.
ஆர் யூ ஷ்யூர்?", தனா கேட்டான்.
ஷ்யூர் சார்”,சந்தியா சொல்ல டிரைவர் காரை இயக்கினார்.
கார் வேகமாக பறந்தது.
அலுவலகத்தின் முன்வாசல் வாட்ஸ்மேன் வெங்கயா சந்தோஷப்பட்டான். தனா அலுவலகத்துக்குள் சென்ற பிறகு, அலுவலகத்தின் பின் வாசலின் வாட்ச்மேன் கிருஷ்ணன் இருக்கும் இடத்துக்குச் சென்றான்.
அலுவலகத்தின் பின்வாசலுக்கு அருகில் இருவரும் ஜெனரேட்டர் அறைக்கு அருகில் சென்றனர்.
நல்ல நேரம்ல வெங்கையா, அந்த சுஹாசினி புள்ள மட்டுந்தா வெளிய போகும்னு நெனைச்சேன். சந்தியா புள்ளையும் போயிருச்சு”, கிருஷ்ணன் சொன்னான்.
ஹப்பாடா, சந்தியா புள்ள தப்பிருச்சு”, என்றான் வெங்கையா.
பின் வாசலின் வழியாக கோபால் உள்ளே வந்தான்.
ஏல, கோவால் சார் வாராக”, வெங்கையா சொல்ல கிசு கிசுப்பான பேச்சை விட்டு இருவரும், கோபாலை பார்த்து சிரித்தனர்.
என்னலே குசு குசுன்னு!! எனக்கு தெரியாம ஏதாவது திட்டம் போடுறீகளா?”, கோபால் கேட்டான்.
வெங்கையா நடந்ததை உற்சாகமாக சொன்னான். கோபால் சிரித்தான்.
கிருஷ்ணனும் வெங்கையாவும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.
சந்தியா வருவால!! அவளுக்கு கடமை உணர்ச்சி சாஸ்தி. அவ வருவா, நா விரிச்சு வச்சிருக்குற வலையில கட்டாயம் வுழுவா”, கோபால் வன்மம நிறைந்த குரலில் சொன்னான்.
என்னல!! மணி ஏழாவுது, இன்று அந்த சந்தியாவ காணோம்”, அநாதையாக கிடந்த உத்மபாளையம் ஊரின் பேருந்து நிறுத்தத்தில், நின்று கொண்டிருந்த அறுவரில் ஒருவன் கேட்டான்.
பொறுல, வேலைக்கு போறவளுகன்னா இப்புடித்தே!! எங்கியாச்சும் மேஞ்சுபுட்டு நெதானமா வருவாளுக”, என்றவன் அந்த சிறு கவரை திறந்து, அதை கையில் கொட்டி வாயில் போட்டுக் கொண்டான்.
மேஞ்சுபுட்டுன்னா, அப்டி மேஞ்சுபுட்டா?”, ஒருவன் அசிங்கமான தோணியில் கேட்டான்.
அட, ஆமால”, இயல்பாக சொன்னான். மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
அதில் ஒருவனது அலைபேசி ஒலித்தது.
அண்ணே”,
சோலி முடிஞ்சாலா?”, எதிர் முனையில் ஆர்வத்துடன் கேட்ட பாண்டியன் கோயில் கொடை விழாக் கூட்டத்துக்கு வெளியே நின்றார்..
இல்லண்ணே! இன்னுஞ்சிறுக்கியுள்ள வரல”,
இன்னும் வர்ல?”,
ஆமாண்ணே, வேசைப்பையவுள்ள, எங்குட்டு மேஞ்சிட்டுருக்குதோ?”,
சாக்ரதல, பதமா கழுத்தறுத்துபோடணும். இதுல நா இருக்கேன்னு கடுகளவு கூட கசியக்கூடாது”, பாண்டியன் சொன்னார்.
ச்சரிண்ணே!! முடிச்சிபுட்டு கூப்டுறேன்”, என்றவன் அலைபேசியை துண்டித்தான்.
ஃபியூச்சர் சேனலில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில், ஆள் அரவம் குறைவாக இருக்கும் சாலையின் ஓரமாக நின்றது அந்த பொலேரோ.
யார்றா பீசு?", பொலேரோவுக்குள் நாகரிகமாக உடையணிந்திருந்த ஒருவன் கேட்டான்.
இவந்தா பாஸ்", அவனருகில் அமர்ந்திருந்த, ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் அணிந்த ஒருவன் அலைபேசியில் புகைப்படம் ஒன்றைக் காட்டினான்.
அலைபேசிக்குள் அழகாக சிரித்துக் கொண்டு நின்றான் செழியன்.
இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த வழியா வருவான் பாஸ்",
குட், மிஸ்ஸாயிர கூடாதுடா. இட்ஸ் ய பிக் புராஜக்ட்", என்றவன் அந்த "எஃப் என், ஃபைவ் செவன்" துப்பாக்கியை எடுத்தான்.
சாதிய சாத்தானும்
சாக்கடை சாத்தானும்
அரசியல் சாத்தானும்
அதிகார சாத்தானும்
வெட்டி வைத்த புதைகுழிகளை
வென்று உயிர் பெறுமா?!
மனிதம்!!
தொடரும்......
சக்திமீனா.....