• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷14

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
6373be0dffb7c952f5a55c1dbe080274.jpg


அத்தியாயம் 14

நா பொறந்து எனக்கு நெனைவு தெரியும் போது, எங்கம்மா எங்கூட இல்ல. எனக்கு சாப்பாடு குடுக்குறது, குளிப்பாட்டுறது, டிரஸ் போட்டு விடுறது எல்லாமே எங்க சித்திதா செய்வாக. சித்தியோட பசங்க, ராமன், சுபத்ரா. அவங்ககூட தா எப்போவும் வெளையாடுவேன். அவங்களுக்கு என்னை ரொம்ப புடிக்கும். ஆரம்பத்துல எனக்கும் அவங்க புள்ளைகளுக்கும் இடையில, சித்தி காட்டுன பாரபட்சம் புரியல. வளர வளர புரிஞ்சது. அப்பா முன்னாடி அன்பா நடந்துக்குற சித்தி அப்பா இல்லாத சமயத்துல, என்னய மட்டும் கண்டிப்பாக. அத மொதல்ல கண்டிப்புன்னு தா நினைச்சேன். பொறவாலதா தெரிஞ்சது, அது மெரட்டல்னு”, சொன்ன கொடி எழுந்து அமர்ந்து கொள்ள, துரையும் எழுந்து அமர்ந்தான்.

அப்பா இல்லாத நேரத்துல எங்க சித்தி பேச்ச கேக்காட்டி போனா, அப்பா வந்ததும் நா செய்யாததெல்லாம் செஞ்சதா சொல்லி குடுத்தாக. அப்பாக்கு கோவம் வர்ற மாதிரி சொல்லி குடுத்தாக. நா சின்ன கொழந்த இல்லியா? அப்பா எம்பேச்ச விட, சித்தி பேச்சதா நம்புனாக. என்னை ரொம்ப அடிச்சிப் புடுவாக. தேவையான அளவுக்கு நா அடி வாங்குன பொறவு சித்தியே அப்பாவ சமாதானம் செய்வாக. இந்த சூதை புரிஞ்சிக்க எனக்கு பத்து வருசம் தேவைப்பட்டுச்சு”,

ஒங்க சித்தப்பா எதுவும் கேக்க மாட்டாகளா?”,

கொடி சிரித்தாள்.

சித்தப்பாக்கு அந்த வீட்ல மரியாதை கெடையாது. அப்பாவும் சித்தப்பாவ மதிக்க மாட்டாக”,

ஏன்?”,

வாழ்க்கையில தோத்து போனவகள கூட மதிப்பாக. தொழில்ல தோத்து போனவகள யார் மதிப்பாக?”, கொடி கேட்டாள்.

துரை சிரித்தான்.

நீங்க ஸ்கூல் லீவ் வுட்டா சந்தோசப்படுவீகளா?”, கொடி கேட்க,

பின்ன, லீவுன்னாலே ஜாலிதான?”, துரை சிரித்தபடி சொன்னான்.

ஆனா நா வருத்தப்படுவேன். ஸ்கூலுக்கு ரெண்டு லீவ் விட்டா அந்த ரெண்டு நாள் நா எங்க சித்திகூட இருக்கணுமே”, கொடி சொல்ல,

அப்போ, கொடிக்கு ஸ்கூல்ல இருக்க புடிக்கும்”, சொல்லி சிரித்தான்.

ம்ம், புடிக்கும், எனக்கு நெறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காக. அப்றம் ஸ்கூல் போனா, செழியண்ணே, சுவாதி, சந்தியா, சாரதியண்ணே, எல்லாரையும் பார்க்கலாம். பேசலாம், நேரம் போறதே தெரியாது”,

இவங்கல்லாம்,....”,

இவங்கலாம் என்னை விட நாலு வயசு பெரியவங்க. அப்போ நாலு பேரும் ப்ளஸ் டூ படிச்சிட்டுருந்தாக. ஆனா நாலு பேரும் வேற வேற டிப்பார்ட்மென்ட். அவங்கலாந்தான் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ரிலேட்டிவ்ஸ், எல்லாம்”, சொல்லி சிரித்தாள்.

அவளின் முக மலர்ச்சியை மனதிற்குள் குறித்து கொண்டான்.

என்னதா எல்லாரும் அன்பா பேசினாலும் பழகினாலும், அவங்க எல்லார்கிட்டேயும் ஒரு அனுதாபம் தெரிஞ்சது. அது எனக்கு புடிக்கல”, கொடி சொல்ல,

எனக்கு புரியல”, என்றான் துரை.

நா அம்மா இல்லாத புள்ளங்கிறதால அனுதாபம் காட்டுவாக. அதெனக்கு புடிக்கல. அதுலயும் செழியண்ணே ரொம்ப ஓவரா பண்ணும்”,

செழியன்,........”, கேள்வியாக இழுத்தான் துரை.

எங்க அப்பாவோட, தாத்தாவோட, அண்ணனோட, பேரனோட மகன்”, கொடி சொன்னாள்.

ம்ம், தெளிவா புரிஞ்சிருச்சு”, துரை சிரித்தான்.

என்ன புரிஞ்சது”,

செழியன் ரொம்ப நெருங்கின அண்ணன்னு”, சொல்லி சிரித்தான்.

அவளும் சிரித்தான்.

என்னை பத்தி யாராவது எதாது கிண்டலா சொன்னாலே அடிக்க போயிருவான். எங்கிளாஸ் பசங்ககிட்ட அவ எந்தங்கச்சி, எவனாது அவகிட்ட ஒரண்டையிழுத்தா, வேற மாதிரி ஆயிரும்னு சொல்லுவான்”,

மச்சான் இன்னும் என்னென்ன சொல்லுவாக?”,சொல்லி துரை தலையணையில் சாய கண்கள் சுருக்கினாள்.

உனக்கு அண்ணன் எனக்கு மச்சாந்தான?”, சொல்லி புருவம் உயர்த்தினான்.

செழியண்ணனுக்கு சாதி பாத்து பேசுறவகள புடிக்காது. எங்க வாத்தியார், எங்க கிளாஸ்ல படிக்கிற ஒரு பையனை ரொம்ப வேலை வாங்குவாரு",

வேலைன்னா",

வேலைன்னா,.... பரீட்சை பேப்பர் திருத்துறது, அவர் ரூமுக்கு வரைக்கும் புக்ஸ் நோட்ஸ் எல்லாம் சொமந்து கொண்டு போறது. அவர் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி வைக்கிறது.",

என்னது?! பாத்திரம் கழுவ சொல்வாரா?!",

ம்ம், ஆரம்பத்துல நாங்க அதை பெருசா எடுத்துக்கல. அர்ஜுனை தா கணக்கு வாத்தியாருக்கு ரொம்ப புடிச்சிருக்குன்னு பேசிக்குவோம்”,

அர்ஜுன் ,......”, கேள்வியாக பார்த்தான்.

எங்க கூட படிக்கிற பையன். அவனைதா கணக்கு வாத்தியார் வேலை வாங்குவாரு”,

ஓ",

அன்னைக்கு ஒரு நாள் திடீர்னு அர்ஜுனை டாய்லெட் கிளீன் பண்ண சொல்லிட்டாரு. அவரு சொன்னப்போ எனக்கே சங்கடமா இருந்துச்சு. பாவம், அர்ஜுனுக்கு எப்புடி இருந்திருக்கும்ல”, கொடி கேட்க,

ஆம் என்பதாக தலையசைத்தான் துரை.

அர்ஜுன் முடியாதுன்னு சொன்னான். கேவலம், சாக்கடையள்ளுறவன் பையன் என்னியவே எதுத்து பேசுறியான்னு கேட்டு, வாத்தியார் அவனை அடிச்சிட்டாரு”,

ம்ம்”, சொல்லும் போது துரைக்கு விவகாரம் புரிந்து போனது.

அர்ஜுன் அந்த விஷயத்தை தினேஷ்கிட்ட சொல்லிட்டான். தினேஷ் செழியண்ணங்கிட்ட சொல்லிட்டான்”, கொடி சொல்லிக் கொண்டிருக்கும் போது,

தினேஷ் யாரு?”, குறுக்கிட்டான் துரை.

திடுக்கிட்டு அவன் முகம் பார்த்தாள் கொடி.

என்னாச்சு?”,

ம்ஹூம், ஒண்ணுமில்ல, தூக்கம் வருது”, என்றாள்.

இதெல்லா நியாயமே இல்ல கொடி”, என்றான்.

அவள் புரியாமல் பார்த்தாள்.

விறு விறுப்பா போயிட்டுருக்கும் போது கதைய நிறுத்திட்டு தூங்க போறேங்குற?”,

இல்ல, கொஞ்சம் டயர்டாருக்கு”, தயக்கத்தோடு சொன்னாள்.

சரி தூங்கு, பொறவொரு நாள் பேசிக்கலாம்”, அவன் சொன்னான். அவனருகில் அவனை தீண்டாமல் படுத்துக் கொண்டவள் விழிகளை மூடிக் கொள்ள, அவனோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அனந்த சயனத்தில் இருக்கும் திருமால் போல், ஒற்றைக் கையை தலைக்கு முட்டு கொடுத்து, அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளது கருவிழிகள் மூடியிருந்த இமைகளுக்குள் பரிதவித்து சுழன்று கொண்டிருந்ததை ரசித்தான். சிரித்தான்.

கால் விரல்களும், கை விரல்களும் தனக்குள் சுருங்கி கொள்வதை ரசித்தான். தன் கால் விரல் கொண்டு அவளின் கால் விரலை லேசாக நீவினான்.

சட்டென துடித்து எழுந்து கால்கள் மடக்கி அமர்ந்து, கால்களை விரல்கள் வரை சேலையால் மூடிக் கொண்டாள். அதிர்ந்து விலகினான். அவனை பார்த்து பயத்தோடு எச்சில் விழுங்கினாள்.

ஏய், ஒண்ணும் இல்ல, என்னாச்சு?",

பிளீஸ், வேணாம், பிளீஸ்", அவளது வார்த்தைகள் தொண்டைக்குள் சறுக்கி விழுந்தது.

இல்ல, வேணாம், நா எதுவும் பண்ணல. நீ தூங்காம கண்ண மூடிட்டு இருந்தல்ல!! அதான் சீண்டி பாக்கலாம்னு தோணுச்சு", அவன் சொல்ல, அவளோ பேசவில்லை.

நா வேண்ணா வெளிய போயி படுத்துக்கவா?", கேட்டான்.

இல்ல, அதெல்லாம் வேணாம். நா தூங்கணும்", என்றாள்.

சரி, நா ஒன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்", அவன் சொல்ல, அவனுக்கு எதிர் திசை பார்த்து படுத்துக் கொண்டாள்.

இரு கைகளையும் தலைக்கு கொடுத்து, நிமிர்ந்து படுக்கையில் சாய்ந்த துரை சிந்தனையில் ஆழ்ந்தான்.

செழியன்”, துரையின் உதடுகள் இயல்பாக உச்சரித்தது.



இந்தாடி, புள்ள வந்துட்டான், சீக்கிரம் சோத்த போடு”, பாண்டியனின் குரல் வீட்டுக்குள் வந்த செழியனை வரவேற்றது. இரவு நேரமானாலும், வீடு மின்சார விளக்குகளின் வெளிச்சத்தால் நிரம்பி இருந்தது.

தன் மூன்றாம் கண்ணான கேமராவை கழற்றி வைத்த செழியன், இறுக்கமான முகத்துடன் தனதறைக்குள் சென்று, சிறிது நேரத்தில் லுங்கி அணிந்து வெளியே வந்தான்.

சாப்பாட்டு மேசை முன்பு அமர்ந்தவன் சுற்றி பார்த்தான். இயந்திரம் போல் தட்டை நிமிர்த்தி வைத்து சாதத்தை போட்டாள் அபிராமி.

அந்த கோழி கொழம்ப எடுத்து ஊத்துடி. புள்ள சாப்டட்டும்”, பாண்டியன் சொல்வது செழியனுக்கு எரிச்சலை தந்தது.

அபிராமி கோழி குழம்பை ஊற்றினாள். பாண்டியன் சோற்றை பிசைந்தார்.

ம்மா, நீயும் இரும்மா, சாப்டலாம்”, சொல்லி செழியன் தாயின் கையை பிடித்து, அருகில் இருந்த நாற்காலியில் உட்கார வைக்க முயன்றான்.

அய்யோ, இல்லய்யா, எனக்கு பசிக்கல. நா பொறவால சாப்புட்டுக்குறே”, என்றவள் பாண்டியனின் முகத்தை பார்த்தபடி, தயங்கி நின்றாள்.

எப்போ, ராத்திரி பன்னெண்டு மணிக்கா?”, கேட்டான் செழியன்.

அவள் புரியாமல் விழித்தாள்.

இப்போவே மணி பதினொண்ணு ஆவுது. ஒக்காந்து சாப்டும்மா”, என்றவன் அவளின் கையை பிடித்து இழுக்க, அவளோ பாண்டியனையே பார்த்தபடி நின்றாள்.

உட்கார்ந்து சாப்டிறி, அதான் புள்ள சொல்லுகான்ல்ல. சாப்டு”, பாண்டியன் சொல்ல, தயக்கத்துடனேயே உட்கார்ந்தாள் அபிராமி.

பெண்கள் ஆண்களுக்கு சரி சமமாக அமர்வதில் பாண்டியனுக்கு விருப்பம் இருப்பதில்லை" என்பதை செழியன் அறிவான். அறிந்து தான் தாயை சரிசமமாக அமர செய்தான்.

அபிராமிக்கு செழியன் சாப்பாடு பரிமாறினான். அபிராமி பயத்தோடு சாதத்தை பிசைந்தாள்.

செழியன் சாப்பிட்டு முடித்தான். சாப்பிட்டு கொண்டிருந்த அபிராமி, எழுந்தாள்.

இருய்யா, கை கழுவ தண்ணி கொண்டு வாரேன்”, என்றாள்.

ஏண்டி அறிவு கெட்ட முட்டாப்பைய மொவள,... சோறு எடுத்து வைக்கும் போதே கை கழுவ தண்ணியும் எடுத்து வைக்கணும்னு தெரியாதாக்கும்? ஒங்காத்தா ஒன்ன எப்புடிறி வளத்தா?”, படபடவென்று கேட்டார் பாண்டியன்.

சட்டென சத்தமாக சிரித்தான் செழியன். செழியனின் சிரிப்பை பார்த்து, அதிர்ந்தாள் அபிராமி.

செழியன் சிரித்துக் கொண்டே இருந்தான். பாண்டியனுக்கு அந்த சிரிப்பின் அர்த்தம் விளங்கவில்லை.

சற்று நேர சிரிப்பொலி பெற்றவர்களை கலக்கம் கொள்ள செய்தது. சிரித்த படியே சென்று வாஷ் பேசினில் கை கழுவிக் கொண்டவன், திரும்பி வந்து தாயின் தோளை அழுத்தி அவளை உட்கார வைத்தான். தானே சென்று கை கழுவ நீரும் கொண்டு வந்து வைத்தான்.

பிறகு மெதுவாக சிரிப்பொலி மங்கியது. பாண்டியனுக்கு நேர் எதிரில் அமர்ந்தான் செழியன்.

எம்புட்டுத்தே முயற்சி பண்ணாலும், ஒங்களால நல்லவன் மாதிரி நடிக்க கூட முடியலல்ல”, பாண்டியனை கேட்டு சிரித்தான் செழியன். பாண்டியன் புரியாமல் பார்த்தார்.

எப்போவும் ஒங்க கூடாலயே சுத்திட்டுருப்பானே ஒரு அல்லக்கை, அவன எங்க, கொஞ்ச நாளா ஆளையே காணோம்?”, செழியன் கேட்க பாண்டியன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

யாருன்னு புரியலியா?,..... மிஸ்டர்.சரவணன கழட்டி விட்டீகளா?”, கேட்டு புருவம் உயர்த்தினான் செழியன்.

உருவான கோபத்தை மறைத்துக் கொண்டார் பாண்டியன்.

இந்த வேசம் ஒங்களுக்கு நல்லாயில்லப்பா”, என்றான்.

எச்சில் விழுங்கினார்.

நானும் பாத்துட்டுத்தே இருக்கேன். எம்மேல ரொம்ப அக்கறை இருக்குற மாதிரி காட்டிக்குறீக. எம்முன்னால அம்மாவ மரியாதையா நடத்துற மாதிரி நடிக்குறீக. அந்த சரவணனுக்கும் ஒங்களுக்கும் ஒறவேயில்லாத மாதிரி வேசம் போடுறீக. இன்னும் எப்புடி எப்புடியெல்லாமோ நடிக்குறீக”, செழியன் சொல்ல, கைக்குள் இருந்த சோற்றை அழுத்தி பிசைந்தார் பாண்டியன்.

நீங்க என்னத்தே முயற்சி பண்ணாலும் ஒங்க சுய குணத்த மறைக்க முடியல பாத்தீகளா? அது ஏன்னு தெரியுதா?”,

பாண்டியன் பேசவில்லை.

ஏன்னா ஒரு மனுசனால, தான் உண்மையா நேசிக்கிற ஒருத்தர்கிட்ட நடிக்க முடியாது. எனக்கு தெரியும், ஒங்க உசுரே நாந்தே”, செழியன் சொல்லவும், தன் எச்சிக் கையால் வாய் மூடி, கண்ணிமைகளை அழுந்த மூடி அழுதாள் அபிராமி.

பாண்டியன் உருவான உணர்வுகளை தொண்டைக்குழிக்குள் விழுங்கினார்.

எனக்கும் அப்படித்தே”,

பாண்டியன் பரிவாக பார்த்தார்.

நீங்க கேவலம் சாதிக்காக மனுசன் உயிரை எடுக்குறவகன்னு தெரியிற வரைக்கும், எனக்கும் அப்படித்தே இருந்துச்சு. இப்போ அப்படி நினைக்க முடியல”,

பாண்டியன் அதிர்ந்தார்.

எவனோ என்னவோ சொல்றத நம்புவ,.. பெத்த அப்பன் சொல்லுறத நம்ப மாட்டியால?”, பாண்டியன் பதட்டத்தோடு கேட்டார்.

ஆரோ சொல்லுகத நம்ப வேணாம், வுட்ருவோம். இந்தா,.. எங்கம்ம கண்ல வழியுற கண்ணீர நம்பலாம்ல்ல. அது பொய்யில்லையல்ல?”, செழியன் நிதானமாகவே கேட்டான்.

பாண்டியன் அபிராமியை பார்த்தார். அவள் எழுந்து சென்று விட்டாள்.

நா நியூஸ் சேனல்ல வேலை செய்றேன். நீங்களும் ஒங்க மச்சான் மதிவாணரும் செய்ற அக்கிரமத்த ஆதாரத்தோட படம் போட்டு காட்ட எனக்கு ரொம்ப நேரமாகாது", செழியன் சொல்ல அதிர்ந்தார்.

ஆனா நா அத செய்ய மாட்டேன்”,

பாண்டியன் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.

ஏன்னா, ஒங்கள எதுக்குறதும், இந்த சாக்கடை அரசியல சுத்தம் பண்றதும் என் லட்சியமில்ல. நா ஒரு சராசரி மனுசன், அம்புட்டுத்தே. நா என் வாழ்க்கைய வாழ ஆசைப்படுறேன். எனக்கு என் சுயநலந்தே முக்கியம். எனக்கு சாதியும் லட்சியமில்ல, சமுதாய புரட்சியும் லட்சியமில்ல. அதனால நீங்க என்னய பாத்து பயப்படவும் தேவையில்ல”, செழியன் சொன்னான்.

அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்தார் தகப்பன்.

என்னய நம்ப வைக்கிறதுக்காக தேவையில்லாம எனர்ஜிய வேஸ்ட் பண்ணாதீக. இந்த ஆக்டிங்க் ஒங்களுக்கு கொஞ்சங்கூட செட்டாகல. வயிறு முட்ட சாப்ட்போட்டு போயி படுங்க”, சொல்லி விட்டு எழுந்து இரண்டடி நடந்த செழியன், நின்று திரும்பி சொன்னான்,

ஒங்கள பத்தி இம்புட்டு தெரிஞ்ச பொறவும், எங்கம்மாவுக்காகத்தே நா இந்த வீட்ல இருக்கேன். என்னை இந்த வீட்டுக்கே வரக்கூடாதுங்குற முடிவ எடுக்க வச்சிராதீக”,

சொல்லி முடித்த செழியன் சென்று தனதறைக்குள் அடைந்து கொண்டான்.

தட்டின் முக்கால் பாகத்தை நிரப்பியிருந்த சாதத்தின் மீது கை கழுவினார் பாண்டியன்.



சுவாதியின் இரவு சாப்பாட்டு தட்டுக்கு அருகில் இருந்த அலைபேசி ஒலித்தது. சாப்பிட்டு கொண்டிருந்த சுவாதி அலைபேசியை எடுத்துக் கொண்டு எழுந்தாள்.

ஏ சாப்ட்டுப்போட்டு போடி",கௌசல்யா சொன்னாள்.

போதும்மா", என்றவள் அலைபேசி அழைப்பை ஏற்று காதில் வைத்தபடி மாடிப்படி ஏறினாள்.

ஹெலோ நவீன், சொல்லுடா, உன் காலுக்காகத்தா வெயிட் பண்ணிட்டுருக்கேன்”,

இன்னொரு தடவை நல்லா யோசிச்சிக்க சுவாதி”, எதிர்முனையில் சொன்ன நவீன், காவல்துறை கட்டுப்பாட்டு ஆணையர் அறையில், காவல் உடையில் இருந்தான்.

நல்லா யோசிச்சாச்சு நவீன். ஒரு பொண்ணும் ஒரு பையனும் லவ் பண்ணிருக்காங்க. தன் அண்ணனோட பொண்ணு லவ் பண்ணது கொறைஞ்ச சாதிக்கார பையன்னு தெரிஞ்சதும் அந்த சித்தப்பா அந்த பையனை கொலை பண்றாருன்னு சொன்னா, அது பர்சனல் மோட்டிவ். கௌரவத்துக்காக நடந்த மர்டர். பட், கொலை பண்ணது வேற யாரோ...., தண்டனை அனுபவிக்கிறது கேசவன். அப்படின்னா கொலைக்கான மோட்டிவும் மாறுது இல்லியா? கௌரவக்கொலைங்குற கான்செப்ட்டே அடிபட்டு போகுது இல்லியா?”, கேட்டபடி மாடியில் இருக்கும் தனது அறையின் பால்கனிக்கு வந்தாள் சுவாதி.

எதிர்முனை அமைதியாக இருந்தது.

என்ன நவீன் பேசாம இருக்க?”,

மறுபடியும் சொல்றேன் சுவாதி, இந்த மர்டர் இன்வெஸ்டிகேஷன்ல தலையிடாம இருக்குறதுதா ஒனக்கு நல்லது”,

ஏ சும்மா மெரட்டாதடா. ஆரம்பத்துல இந்த கேஸ்ஸ இன்வெஸ்டிகேட் பண்ண போலீஸ் ஆஃபீசர் நீ.., அதான் ஒன்கிட்டலாம் கெஞ்ச வேண்டியிருக்கு. இந்த கேஸ்ல ஒனக்கு தெரிஞ்ச உண்மைய மட்டும் சொல்லு”,

சரி, மொதல்ல இந்த கேஸ் பத்தி நீ என்ன ஸ்டடி பண்ணிருக்க அத சொல்லு”, என்றான் நவீன்.

கௌரவக்கொலை அப்டிங்குறது இன்னும் நம்ம ஆளுங்க காட்டுமிராண்டியாத்தா இருக்காங்கங்குறதுக்கான அடையாளம். ஆனா யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு அரசியல் லாபத்துக்காக கொலைய பண்ணிட்டு அதுக்கு கௌரவக்கொலைங்குற சாயம் பூசுறது அயோக்கியத்தனம்”, சுவாதி சொன்னாள்.

அரசியல் கொலை தா, ஆனா அதுக்காக கௌரவக்கொலை இல்லன்னும் சொல்ல முடியாது சுவாதி”, நவீன் சொன்னான்.

எதுவாவும் இருக்கட்டும். நடந்துருக்குறது மனித உரிமை மீறல். ஒரு பொண்ணோட வாழ்க்கை அழிஞ்சுருக்கு. இந்த மர்டர்ல சம்மந்தப்பட்டுருக்கிறது யாரா இருந்தாலும் அவங்களுக்கு தண்டனை வாங்கி குடுக்காம விடமாட்டேன்", சுவாதி உறுதியாக சொன்னாள்.






அரசியல் எனக்கெதுக்கு?!
அவளோடு என் வாழ்க்கை
அது போதும் என்கிறான்
தோழன்!!

அரசியல் எதிர் வந்தால்
எனக்கென்ன?!
அநியாயம் அழித்தொழிப்பேன்!!
சபதம் கொள்கிறாள்
தோழி!!

அரசியல் துண்டாடும்
பகடைக் காய்களா?!
காதலும் நட்பும்?!




தொடரும்.....


சக்தி மீனா......




 
Top