• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷18

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
அத்தியாயம் 18


ஆக்சுவலா, ஒங்கம்மாவும் கமலியும் கொழந்தைய சரியா பாத்துப்பாங்களான்னு ஒரு பயம் இருந்துட்டே இருந்துச்சு”, அந்த மேம்பாலத்தில் நடந்து கொண்டிருந்த காயத்ரி சொல்ல, தினேஷ் சிரித்துக் கொண்டான்.

ரொம்ப நாளைக்கு பிறகு ரொம்ப பாதுகாப்பா ஃபீல் பண்றேன். தேங்க்ஸ்”, சொன்னாள்.

மீண்டும் சிரிப்பொன்றையே பரிசளித்தான்.

இப்போ நீங்க இருக்குற ஏரியாவுலயே எனக்கொரு வீடு பாத்து தர முடியுமா?”, லேசான தயக்கம் இருந்தாலும் கேட்டு விட்டாள் காயத்ரி.

அங்கயா? ஒன்னால ஒருநாள் கூட தாக்கு புடிக்க முடியாது”, தினேஷ் சொல்ல,

எம்பொண்ணு ஒரு நாள் முழுக்க சந்தோஷமா இருந்துருக்கான்னா என்னாலயும் முடியும்”, சொல்லி இதமாக சிரித்தாள். அவனும் மெலிதாக சிரித்தான்.

போர் வாட்டரெல்லாம் கிடையாது. கொழாய் வாட்டர் தா, தண்ணி ரெண்டு நாளைக்கு ஒரு தடவை தா வரும். புடிச்சி ஸ்டோர் பண்ணி வச்சிக்கணும்”,

பண்ணிக்கலாம்”,

ஆஃபீஸ் டைம்ல தண்ணி வந்தா?”,

ஒங்க அம்மாகிட்ட தண்ணிய கடன் வாங்கிப்பேன்”,

சிரித்துக் கொண்டான்.

கொழந்தைய படிக்க வைக்க சி.பி.எஸ்.சி ஸ்கூல்லாம் பக்கத்துல இல்ல. கவர்ன்மென்ட் ஸ்கூல் தா”,

நாங்கூட கவர்ன்மென்ட் ஸ்கூல்லதா படிச்சேன்”, என்றாள்.

அடிக்கடி பவர் கட்டாகும்”,

இன்வெர்ட்டர் வாங்கிக்கலாம்”,

ராத்திரியில கொசு கடிக்கும்”,

குட் நைட் வாங்கிக்கலாம்”, காயத்ரி சொல்ல தினேஷ் மலர்ந்து சிரித்தான்.

நடந்து கொண்டே, அந்த சூப்பர் மார்க்கெட் அருகில் வந்தனர்.

கொழந்தைய கொஞ்சம் வச்சுக்கிறீங்களா? காய்கறி வாங்கிட்டு வந்துடுறேன்”, காயத்ரி வேண்டுகோள் வைத்தாள்.

குழந்தை மோனியை வாங்கி கொண்டான் தினேஷ்.

அந்த சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள் இருக்கும் செக்ஷனுக்கு சென்றாள் காயத்ரி.

குழந்தை சாக்லெட்டை கை காட்டி சிரித்தது.

ஆக்கட்”, என்றது.

சாக்லெட் வேணுமா?”, கேட்டவன் ஒரு சாக்லெட்டை வாங்கி பிரித்து குழந்தைக்கு சாப்பிட கொடுத்தான். சாப்பிட்டாள்.

மீண்டும் சாக்லெட்டை கை காட்டி,

ஆக்கட்”, என்றாள் மோனி.

ம்ம்ஹூம் ஒண்ணுதா, இனி கெடையாது”, என்றவன் அவளது வாயை துடைத்து விட்டான்.

ஆக்கட், அது”, என்றது குழந்தை.

ஒங்கம்மாவுக்கு தெரிஞ்சா என்னைய தாளிச்சிருவா”, சொல்லி கொண்டே சில சாக்லெட்களை பில் போட்டு வாங்கி, பின் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

குழந்தையை மடியில் வைத்து கொண்டு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான். ஒரு சாக்லெட்டை மட்டும் பிரித்து கொடுத்தான். குழந்தை மோனி சாப்பிட்டு முடித்தது.

மீண்டும் குழந்தை சக்லெட்டை கை காட்ட,

போச்சுடா”, என்றவன்,

அங்க பாரு”, என்றபடி தண்ணீர் தொட்டிக்குள் நீந்திக் கொண்டிருந்த மீன்களை காட்டினான். குழந்தை சிரித்தது.

பாத்தியா? இது கோல்டன் ஃபிஷ், ஒன்ன மாதிரியே இருக்கா? அது பிளாக் ஃபிஷ், என்னை மாதிரி இருக்கா? இது என்ன மீனுன்னு தெரியலியே”, அவன் மீன் தொட்டியை பார்த்து பேசிக் கொண்டேயிருக்க,

ப்பா”, என்றது குழந்தை.

அதிர்ந்து குழந்தையின் முகத்தை பார்த்தான். சாக்லெட் கறையால் சூழப்பட்டிருந்த வாயில் இருந்த, மேலிரண்டு கீழிரெண்டு என்று நான்கு பற்கள் தெரியும் படி அழகாக சிரித்தாள் மோனி.

என்ன சொன்ன?”, அவன் கேட்டான்.

குழந்தை அவனை கட்டி சாக்லெட் கறை பதியும் படி, வாயோடு வாய் பதித்து முத்தமிட்டது. தினேஷின் இடது கண்ணில் எட்டிப் பார்த்த கண்ணீர்த் துளி ஒன்று இனம் புரியாத பாசத்தின் ஈரத்தை பேசியது.



செழியண்ணன் ஒருத்தர புடிக்கலன்னா, அவங்ககிட்டருந்து முழுசா வெலகிருவான். ஒரு தப்பு நடந்துருக்குன்னு தெரிஞ்சா, அடுத்து அந்த தப்பு நடக்கவே நடக்காம இருக்க என்ன வழின்னு யோசிப்பான். கோவம் வந்தா சட்டுன்னு கை நீட்டிருவான். எங்க பாண்டியன் பெரியப்பா மாதிரி. ஆனா தினேஷ் ரொம்ப சாது. மத்தவங்க மனசு நோகுற மாதிரி பேச கூட மாட்டான். நடந்த தப்புக்கு தண்டனை தீர்வில்லன்னு சொன்னான்", கொடி சொல்லிக் கொண்டிருக்க, துரை கேட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு குருவுக்கு பணிவிடை செய்றதும், வாஷ் ரூம் கிளீன் பண்றதும் கேவலமில்ல சார். ஆனா, அர்ஜுனை மத்தவங்ககிட்ட பிரிச்சி காட்டுறதுக்காக இதெல்லாம் செய்ய சொன்னீங்க பாருங்க. அந்த புத்திதா கேவலம், அசிங்கம்”, தலைமை ஆசிரியர் அலுவலகத்தின் முன்னால், மாணவ மாணவிகள் கூட்டமாக நின்று கொண்டிருக்க, கணக்கு வாத்தியாருக்கு, மனிதவியல் பாடம் நடத்தினான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தினேஷ்.

மேடம், இவரு செஞ்ச தப்புக்காக, இவரு அர்ஜுன்கிட்ட மன்னிப்பு கேக்கணும். அதுவரை நாங்க இங்கருந்து கலைஞ்சி போக மாட்டோம்”, செழியன் தலைமை ஆசிரியையிடம் சொன்னான்.

ஆமா, போக மாட்டோம்”, பின்னால் நின்ற மாணவ மாணவிகள் ஹோரஸ்ஸாக சத்தமிட்டனர்.

என்ன சார் இதெல்லாம்?”, தலைமை ஆசிரியை அந்த ஆசிரியரிடம் கேட்டார்.

அவர் அமைதியாக நின்றார்.

ஸ்டூடன்ட்ஸ், பிளீஸ்,.கொஞ்சம் அமைதியாக இருங்க", தலைமை ஆசிரியை சொல்ல கூட்டம் சலசலப்போடு அமைதியானது.

"இவரு பண்ணது தப்பு தா. ஸ்கூல் நிர்வாகம் இவரு மேல நடவடிக்கை எடுக்கும். நீங்க இப்போ கிளாஸ்க்கு போங்க”, தலைமை ஆசிரியை சொன்னார்.

முடியாது மேடம், இப்படி நடக்குறது இது முதல் தடவ இல்ல. இதுக்கு முன்னாடி ஒரு டீச்சர் இப்படித்தா, அவங்க கிளாஸ் பொண்ண காலமுக்கி விட சொன்ன பிரச்சினை வந்தது. அதுக்கு நீங்க என்ன பண்ணீங்க?!, டுவெல்த்துக்கு பாடம் எடுத்துட்டுருந்த டீச்சர, அஞ்சாம் வவுப்புக்கு டிரான்ஸ்வர் பண்ணீங்க. இப்போ, அஞ்சாம் வவுப்பு புள்ள அந்த டீச்சரம்மா கால புடிச்சி விட்டுட்டுருக்கு”, சொல்லி செழியன் அங்கு நின்றிருந்த ஆசிரியை ஒருத்தியை பார்க்க, அவள் மெதுவாக உருவி சென்று விட்டாள்.

இவருக்கு சரியான பனிஷ்மென்ட் குடுக்கணும். இனி இப்டி ஒரு சம்பவம் நம்ம ஸ்கூல்ல நடக்க கூடாது”, செழியன் திட்டவட்டமாக சொன்னான்.

ஆமா, மேடம் இவருக்கு சரியான பனிஷ்மென்ட் குடுக்கணும்”, ஹோரஸ்ஸாக மாணவர்கள் சொன்னார்கள்.

தலைமை ஆசிரியை சங்கடத்தில் மாட்டிக் கொண்டாள்.

ப்ளீஸ் சார், பேசாம அந்த பையங்கிட்ட சாரி கேட்டுருங்க”, அந்த வாத்தியாரிடம் மெலிதான குரலில் சொன்னார் தலைமை ஆசிரியை.

போயும் போயும் இவங்கிட்ட நா சாரி கேக்கணுமா? நா என்ன மேடம் தப்பு பண்ணேன்? சாரி கேக்க,.. அர்ஜுன்னு பேர் வச்சிட்டா இவன் சாமி புள்ளையாயிருவானா? சாக்கடையள்ளுறவன் புள்ளைய சாக்கடையள்ள சொன்னேன். இதுல என்ன தப்பிருக்கு?”, கேட்டார் அந்த வாத்தியார்.

ஒங்கப்பன் பனையேறுறவன் தான, பொறவு நீ எதுக்குயா வாத்தியார் வேலை பாக்குற. ரிசைன் பண்ணிட்டு போயா”,

அப்டின்னு யாரு சொன்னது?”, சுருளியாற்றின் தூரல் வீசும் தூரத்தில், பாறையில் அமர்ந்திருந்த துரை கேட்டான்.

தெரீல, யாரோ கூட்டத்துக்குள்ள ஒருத்தன், கிருதி புடிச்ச பைய”, கொடி சொன்னாள்.

அவன் சரியா தான சொன்னான்? இதுல என்ன கிருதி?”,

பாடம் நடத்துற வாத்தியாரை மரியாதை கொறைவா பேசுறது தப்பில்லையா?”, கொடி கேட்டாள்.

வாத்தியாருக்குன்னு ஒரு தகுதி இருக்கு. அந்த தகுதி இல்லாத பையலுகள மதிக்க தேவையில்ல”, சொல்லி இதழ் விரியாமல் சிரித்தான்.

இப்டியேதா தினேஷ் கூட சொல்லுவான்”, சொல்லி துரையை கூர்ந்து நோக்கினாள்.

ஓ, ஒங்க செழியண்ணே என்ன சொல்வாக?”,

ஹா,…. அந்த தெல்லவாரி பையல பத்தி பேசாதன்னு சொல்லுவான்”,

துரை சத்தமாக சிரித்தான்.

ம்ம், அப்றம் என்னாச்சு?”, துரை கேட்டான்.

அப்றம்,…..

பாத்தீங்களா மேடம், ஒங்க முன்னாடியே எப்புடி பேசுறாரு? இவர பனிஷ் பண்ணியே ஆகணும். இவர நீங்க பனிஷ் பண்றீங்களா? இல்ல, நாங்க போலிஸ் ஸ்டேஷன் போகட்டுமா?”, செழியன் கேட்டான்.

போலீசுக்கோ கோர்ட்டுக்கோ எங்க வேணா போங்கல. வாரத நா பாத்துக்குறேன். இப்போ என்ன மேடம், என்னய டிஸ்மிஸ் பண்ண போறீகளா? பண்ணுங்க”, என்று அந்த ஆசிரியர் அதிகார தோரணையில் சொல்ல,

இல்ல மேடம், டிஸ்மிஸ் பண்ணிடாதீங்க”, என்றான் தினேஷ்.

அவனை அச்சரியமாக பார்த்தாள் கொடி.

ஒனக்கு கிறுக்கு புடிச்சி போச்சால? இந்த மாதிரி மனுசனுக்கு மனுசன் வித்தியாசம் பாக்குற வாத்தியார் நமக்கு தேவையேயில்ல”, ஆவேசமாக சொன்னான் செழியன்.

கரெக்ட்”, கூட்டத்தில் ஒருவன் சத்தமாக சொன்னான்.

ஆமா, டிஸ்மிஸ் டிஸ்மிஸ் டிஸ்மிஸ் டிஸ்மிஸ்”, மாணவ கூட்டம் ஆர்ப்பரித்தது.

தலைமை ஆசிரியைக்கு செய்வதென்னவென்று புரியவில்லை.

மேடம், போலிஸ்க்கு கால் பண்ணிரலாமா?”, தலைமை ஆசிரியையின் காதுக்குள், ஆசிரியை ஒருத்தி கேட்டாள்.

நோ நோ போலிஸ் வந்தா ஸ்கூல் பேரு கெட்டு போயிரும்”,

நிறுத்துங்க, நிறுத்துங்கல”, சத்தமாக சொன்னான் தினேஷ்.

கூட்டம் அமைதியானது.
தலைமை ஆசிரியையும் மற்ற ஆசிரியர், ஆசிரியர்களும் தினேஷை கவனித்தனர்.

மனுசனுக்குள்ள வித்தியாசம் பாக்குற கேடு கெட்ட புத்தி, இவரோட தப்பில்ல. இந்த சமுதாயம் விதைச்ச தப்பு. பல்லாயிரம் வருசமா ஒவ்வொரு மனுசனுக்குள்ளயும் நா மொதலியார், நா நாடாரு, நா கோனாரு, நா கவுண்டன், நா பறையன்னு ஊறி போயி கெடக்குற விசமிது. நாம அழிக்க வேண்டியது வெசத்ததே. வெசம் ஆட்டிப்படைக்குற மனுசன இல்ல. அதுமட்டுமில்லாம, சுத்து வட்டாரத்துல எம்புட்டோ தனியார் ஸ்கூல் இருந்தும் நம்ம ஸ்கூலுக்கு இம்புட்டு புள்ளைக படிக்க வருதுன்னா, அதுக்கு இவரும் ஒரு முக்கிய காரணம். இவராலதே நம்ம ஸ்கூல்ல படிக்கிற மேக்சிமம் பர்சன்டேஜ் புள்ளைக கணக்குல சென்டம் வாங்குறாக. இவரோட தெறமை நம்மூரு புள்ளைகளுக்கு உபயோகப்படணும்”, தினேஷ் சொல்ல, அந்த கணக்கு வாத்தியார் பெருமிதத்தோடு சிரித்தார்.

ஆமா, கண்டிப்பா இவரோட தெறமை இந்த சமுதாயத்து புள்ளைகளுக்கு உபயோகப்படணும். ஏன்னா, இவரும் ஸ்காலர்ஷிப்ல படிச்சி, டீச்சரானவருதே”, தினேஷ் சொல்ல, வாத்தியாரின் பெருமிதம் காணாமல் போனது.

ஓ ஓ ஓ”, என்று கூச்சலிட்டனர் மாணவ மாணவிகள். இடையிடையே விசில் சத்தம் கேட்டது.

சந்தியா அருகில் நின்ற சுவாதி,

சூப்பர், கரெக்டா சொன்னான்”, என்றாள். சந்தியா சிரித்தாள்.

கவர்ன்மென்ட் குடுத்த ஸ்காலர்ஷிப்ல படிச்ச ஒவ்வொருத்தனும் இந்த சமூகத்துக்கு கடமையாற்ற கடன் பட்டவன். இவரும் கடன் பட்டுருக்காரு. அவரு பட்ட கடனை அவரு அடைக்கும் போது, அதை தடுக்குறது எப்படி அவருக்கான தண்டனையா இருக்க முடியும்?”,

தினேஷ் சொன்னதும் நா என்னை மறந்து கை தட்டிட்டேன். கூட்டத்துல யாருமே கை தட்டல. பக்கத்துல நின்ன புள்ள, என் கைய புடிச்சி நெறுத்துனதும் எனக்கு ஒரே ஷேமா போச்சு”, கொடி சொல்ல, சிரித்தான் துரை.

அப்போதா தினேஷ் என்னைய ஃபர்ஸ்ட் டைம் பார்த்தான். நா அவன பார்த்தேன்”, கொடி சொல்ல,
துரை கேட்டுக் கொண்டிருந்தான்.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, தோழி ஒருத்தியின் பின்னால் ஒளிந்து கொண்டாள் கொடி.

அப்போ இவரு பண்ண தப்புக்கு தண்டனையே குடுக்க வேணாம்னு சொல்றியா?”, கூட்டத்துக்குள் ஒரு மாணவன் கேட்டான்.

ஏ இருங்கல, அதுக்கும் நண்பன் வழி வச்சிருப்பான்”, சொல்லி சிரித்தான் செழியன். தினேஷ் செழியனை பார்த்து சிரித்தான்.

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், இவரு அர்ஜுனை வாஷ் ரூம் கழுவ சொல்லிருக்காரு. அப்டின்னா, வாஷ்ரூம் கழுவுறதுதா இவருக்கு சரியான தனடனை”, தினேஷ் சொன்னான்.

அதிர்ந்து பார்த்தான் துரை.

செத்த பொணத்த தூக்கி எரிக்கிற பைய நீ. எம்புட்டு தகிரியமிருந்தா என்னைய வாஷ் ரூம் கழுவ சொல்லுவ?”, சொல்லி தினேஷை அறைந்தார் கணக்கு வாத்தியார்.

ஹேஏஏ”, கூட்டம் கூச்சலிட்டு ஆர்ப்பரிக்க, தலைமை ஆசிரியை அதிர்ந்து பார்க்க, தினேஷ் தன் கையை காட்டியதும் கூட்டம் அமைதியானது.

கோவப்படாதீக சார், வாஷ் ரூம் கழுவ சொன்னது ஒங்கள இல்ல”, என்றான் தினேஷ்.

துரை ஆர்வமாக பார்த்தான்.

பக்கத்துல இருக்கிற பிரைவேட் ஸ்கூல்ல, ஒம்பதாவது படிக்கிற ஒங்க பையன் வந்து வாஷ் ரூம் கழுவினா போதும்”, தினேஷ் மிக இயல்பாக சொல்ல, விழிகள் விரித்து அதிர்ந்து பார்த்தான் துரை.

ஏலே, ஒன்னைய வெட்டி பொதைக்காம வுட மாட்டேல. எம்புள்ள...., எம்புள்ள வாஷ் ரூம் கழுவணுமா”, சொல்லி ஆவேசமாக தினேஷ் அணிந்திருந்த பள்ளி சீருடையின் காளரை பற்றிப் பிடித்தார் கணக்கு வாத்தியார்.

செழியன் உட்பட, கூட்டம் அதிர்ந்து நின்றது.

இப்டித்தான சார்....., அர்ஜுனோட அப்பாவுக்கும் இப்டித்தான சார் வலிக்கும்?”, தினேஷ் கேட்டான். அதிர்ந்து உறைந்தார் வாத்தியார்.

தினேஷ் இஸ் கிரேட்”, துரையின் உதடுகள் இயல்பாக சொன்னது.

இங்க படிக்கிற பசங்களையும், புள்ளைகளையும் இன்ன புள்ள இன்ன சாதி, இன்ன பையன் இன்ன மதம்னு பாக்காதீக சார். இந்த ஸ்கூல்ல படிக்கிற ஒவ்வொரு புள்ளையும், ஒவ்வொரு பையனும், ஒரு அப்பாவோட மொவன் மொவான்னு பாருங்க. ஒங்களுக்கு இப்டியெல்லாம் தரம் பிரிச்சு யோசிக்க கூட மனசு வராது”, தினேஷ் சொல்ல, ஆம்” என்பதாக தலையசைத்தார் தலைமை ஆசிரியை.

காளரை பற்றியிருந்த கைகள் விலகியது.

பள்ளி சீருடையில் இருந்த கொடியின் இதயத்தையும், பாறை மீது அமர்ந்திருந்த துரையின் இதயத்தையும் ஆக்கிரமித்தான் தினேஷ்.

கணக்கு வாத்தியார் தலை குனிந்தார்.

எல்லாரும் கிளாஸ்க்கு போங்க. இனிமே இப்டியொரு தப்பு நம்ம ஸ்கூல்ல நடக்காது”, தினேஷ் சொன்னான்.

எல்லோரும் வாத்தியாரை பார்த்தனர்.

வாத்தியார் அர்ஜுன் அருகே சென்றார். அவன் தலையை கோதி, கையை பிடித்தார்.

தான் உணவு உண்டு வைத்த எச்சில் பாத்திரத்தை சிரித்த முகத்தோடு கழுவிய அர்ஜுனின் முகம் வாத்தியார் மனக்கண் முன்னே தோன்றி மறைந்தது. அவரது கண்ணீர்த் துளி ஒன்று அர்ஜுனின் கையில் விழுந்தது. அவ்விடத்தில் நிற்கவும் முடியாமல் வாத்தியார் சென்று விட்டார்.

குட் தினேஷ், வெரி குட்”, தலைமை ஆசிரியை கை குலுக்கி சென்றார்.

சூப்பர்ல”, சொல்லி தினேஷை தூக்கி கொண்டான் செழியன். உயரத்தில் இருந்த தினேஷ் கூட்டத்துக்குள் சிரித்துக் கொண்டிருந்த கொடியை பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சுருளியாற்றின் வெள்ளப் பிரவாகத்தை பார்த்துக் கொண்டிருந்த கொடியின் தோள் தொட்டான் துரை. திரும்பினாள்.




"கொடிக்கென்ன? நல்லாருக்கால்ல?”, முல்லையாற்றங்கரையில் நின்ற சந்தியா கேட்டாள்.

"துரை சார் வந்து என்னைய பாத்தாக!!”, என்று தொடங்கி கொடியின் நிலை பற்றி எல்லாம் விவரித்து சொன்னான் செழியன்.

அச்சச்சோ, பாவி பைய மொவ, இன்னும் தினேஷ தா நெனைச்சிட்டுருக்றாளா?”, தன்னிச்சையாக சொன்னாள் சந்தியா.

என்ன சொன்ன?”, செழியன் அதிர்ந்து கேட்டான்.

ம்ம், இல்லல்ல, ஒண்ணுல்ல”, சுதாரிக்க முயன்றாள்.

தினேஷ் கொடி லவ் பத்தி ஒனக்கெப்டி தெரியும்?”, செழியன் கேட்க,

கொடி தினேஷ லவ் பண்ணது ஒனக்கு தெரியுமா?”, சந்தியா அதிர்ச்சியோடு கேட்டாள்.

ம்ம், தினேஷ் சொன்னான், ஒனக்கு யார் சொன்னது?’,

கொடி சொன்னா”, சந்தியா சொன்னாள்.

கொடியா? அந்த அமுக்குணி, இதெல்லாம் இன்னொருத்தர்கிட்ட ஷேர் பண்ணிக்குமா? எப்போ சொல்லிச்சு?”, செழியன் ஆச்சரியமாக கேட்டான்.

முன்னாடியே,... ஸ்கூல் படிக்கும் போதே சொல்லிட்டா!!",

செழியன் அதிர்ந்தான்.

கொடிக்கும் எனக்கும் ஒரு ஒத்துமை இருக்கு”, சந்தியா சொன்னாள்.

அதான் தெரியுமே”, செழியன் சொல்ல, கண்கள் சுருக்கி கேட்டாள் சந்தியா,

என்ன தெரியும் ஒனக்கு”,

நீ ஒரு அமுக்குணி மூட்ட, அவளும் ஒரு அமுக்குணி மூட்ட, அதான் ஒத்துமை, வேறென்ன!!?”, செழியன் சொல்ல முறைத்தாள் சந்தியா.

ஏ, இப்போந்தா புரியுது, ரெண்டு பேரும் மத்தவங்ககிட்ட அமுக்குணியா இருக்றதால ஒங்களுக்குள்ள எல்லாம் ஷேர் பண்ணிக்கிருக்கீங்க. ரைட்டா?”, அவன் கேட்க அவள் முறைத்தாள்.

செழியன் சிரித்தான்.

அதெல்லாம் இருக்கட்டும், கொடி தினேஷ் லவ் பத்தி ஒனக்கு தெரியும்ன்னா, அவங்க எப்டி பிரிஞ்சாங்க, ஏன் பிரிஞ்சாங்கன்னு,....", வாக்கியத்தை கேள்வியாக இழுத்தாள் சந்தியா.

ம்ம், தெரியும்", சொன்னவனின் குரல் தாழ்ந்தது.

எ,.... என்ன தெரியும்?",

எங்கப்பன் ஒரு கொலைகாரன்னு தெரியும்", செழியன் சொல்ல, மூச்சை உள்ளிழுத்து விழிகள் விரித்தாள் சந்தியா.

சில நொடிகள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

சரி அது போகட்டும்,.. இப்போ எதுக்கு என்னை இங்க கடத்திட்டு வந்த? அத சொல்லு”, செழியன் மனநிலையை மாற்ற சந்தியா மௌனம் கலைத்தாள்.

கடத்திட்டு வந்தனா? அங்க ஒருத்தன் ரேப் பண்ணேங்குறான், நீ கடத்தல் காரங்குற,.. என்னடி, என்னை வில்லனாக்கலாம்னு பாக்குறீகளாக்கு. நடக்காதுடியே”,

ரேப்பா?”, அவள் ஓரக்கண்ணால் சந்தேகமாக பார்த்தாள்.

அப்டி பாத்தா...., நா வில்லனாயிருவேனாக்கு?”, சொல்லி புருவம் உயர்த்தினான் செழியன்.

சரி, இப்போ, என்னய எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த?”, அழுத்தி கேட்டாள்.

கொடிய பாக்க போணும். நீயும் எங்கூட வரணும். அத சொல்லத்தா, உன்ன பாக்க ஓ ஆஃபீஸ்க்கு வந்தேன். வந்த எடத்துல,….”, செழியன் இழுத்து நிறுத்தினான்.

கொடியோட அண்ணன் நீ. அவள பாக்கணும்ன்னா நீ போ. என்னை ஏன் கூப்புடுற?”,

வேற யார கூப்டுறது? நீதான என் பெட்டெர் ஹாஃப்”, சொல்லி கண்ணடித்தான் செழியன்.

என்னது?”, கேட்டு முறைத்தாள் சந்தியா.

ப்ச், மொறைக்காத சந்தியா, அவ ஒங்கிட்ட தா வெளிப்படையா பேசுவா. ஒன்னாலதா அவள புரிஞ்சிக்கவும் முடியும். துரை சார் வந்து பேசுனப்போ, நெசமா எனக்கு என்ன செய்றதுன்னே தெரீல. அப்போதைக்கு அவர சமாளிக்க, கொடிய வந்து பாக்குறேன்னு சொல்லிட்டேன். அப்றம், தினேஷ்கிட்ட விஷயத்த சொன்னப்போ, அவந்தா சொன்னான், சந்தியாவ கூட்டிட்டு போன்னு”, செழியன் சொன்னான். சந்தியா சிந்தித்தாள்.

நாளைக்கு ஈவினிங்க் கொடிய பாக்க போறோம். வீட்ல லேட்டாகும்னு சொல்லிட்டு வந்துரு”, செழியன் சொன்னான்.

ஹலோ, நா கொடிய பாக்க வருவேன்னு சொல்லவே இல்லியே”, சந்தியா முறுக்கி கொண்டாள்.

வருவ!! எனக்கு தெரியும்”, செழியன் சொன்னான்.

சந்தியா பார்த்தாள்..

தினேஷ் எங்கயிருக்கான்னு ஒனக்கு தெரியுமா?”, சந்தியா கேட்டாள்.

ம்ம்”,

எங்க?”,

சிரித்தான்.

ம்ம், புரியுது, ஃப்ரண்ட ஃப்ரெண்ட்கிட்ட கூட காட்டிக் குடுக்க மாட்ட, இல்ல”,

மீண்டும் சிரித்தான் செழியன்.

நளைக்கு ஈவினிங்க், கொடி வீட்ல பாப்போம்”, சொல்லி விட்டு திரும்பி நடந்தாள்.

நானே ஆஃபீஸ்க்கு வந்து பிக்கப் பண்ணிக்குறேன்”, என்றான்.

எனக்கு கொடி வீட்டுக்கு வழி தெரியும். நீ ஓ சோலிய மட்டும் பாரு”, திரும்பி, கை விரலை ஆட்டி சொன்னாள்.

ஏண்டி, எங்கிட்ட இம்புட்டு வியாக்கியானம் பேச தெரியுதல்ல! அந்த பொறுக்கி பைய கோபால நாலு அறை வுடுறதுக்கு என்னடி?”, செழியன் கேட்க, சந்தியா தலை குனிந்தாள்.

ஒங்கொண்ணன் ஓடி போனதுக்கப்றம், வீட்டு வாசலுக்கு வந்த கடங்காரனுககிட்ட அம்புட்டு தைரியமா பேசுனியல்ல! அந்த தைரியம் இந்த பொறுக்கி பையல எதுத்து நிக்க ஏண்டி வர்ல?”, அவன் கேட்க அவளோ பேசவில்லை.

எல்லார்கிட்டயும் இஷ்டத்துக்கு வாயாடுறது. எவனோ ஒரு பொறம்போக்கு,…. அவன கண்டா மட்டும் நடுங்குறது”,

அவளது கண்களில் நீர் நிரம்பியது.

இந்தா, இந்த அழுகாச்சி படமெல்லா இங்க ஓட்டாத. கேக்குற கேள்விக்கு வாய தொறந்து பதில சொல்லு”,

பதில தெரிஞ்சிகிட்டே கேள்வி கேட்டா என்னத்த சொல்றது?”, தலை குனிந்தபடியே சொன்னாள்.

அவன் பேசவில்லை. சில நொடிகள் மௌனம் ஆக்கிரமித்துக் கொண்டது.

நா போறேன்”, திரும்பினாள்.

நானே டிராப் பண்றேன்”,

இல்ல வேணாம், நீ கொண்டு போயி வுட்டா, ஆளாளுக்கு என்னாச்சுன்னு கேப்பாக. ஆஃபீஸ் விசயம் வீட்டுக்கு தெரிய வேணாம்”, சொல்லி விட்டு சில அடிகள் நடந்தவள் திரும்பி பார்த்தாள்.

என்னவென்பதாக புருவம் உயர்த்தினான்.

நீ சிகரெட் புடிக்கிறது ஒங்க அம்மாவுக்கு தெரியுமா? போட்டு குடுக்கவா?”, கேட்டாள்.

அவன் அர்த்தமாக சிரித்தான்.

போல, லூசு பையல”, சொல்லி விட்டு திரும்பி விறு விறுவென நடந்தாள்.

ஓய், சிகரெட் புடிக்கிறத வுட்டுடுறேன். என்னைய கட்டிக்கிறியா?”, சற்றே சத்தமாக கேட்டான்.

நெரிஞ்சி முள் இறங்கிய பாதம் திடுக்கிட்டு நிற்பதை போல் நின்றது செழியன் சொல் கேட்ட சந்தியாவின் பாதங்கள்.

செழியன் சிரித்தான்.



தொடரும்,………


சக்தி மீனா…..
 
Last edited:

vinodha mohan

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 29, 2023
Messages
29
இன்னும் எத்தனை இளஞ்சிறகுகள் இந்த சாதி வெறியால் வெட்டியெறியப்படுமோ!!!!
தினேஷ் காயத்ரியை பார்த்தால் மனம் வெதும்புகிறது...


இனவெறியால் வாழ்வை துறந்து பிறந்த மண்ணை துறந்து எங்கோ போக வேண்டிய கட்டாயம்....

பள்ளியில் சமநிலையை உணர்த்தி தலைவனானவனால்
வாழ்வில் உயிர் பிழைத்து ஓடி ஒளிந்து கொள்ளத்தான் முடிந்தது....
மனம் அவனுக்கு கொடி கிடைத்திருக்கலாமென நினைக்க வைக்கிறது...



சூப்பர் மீனா....
👌👌👌😍😍😍😍
உணர்வுகளோடு கலந்துவிட்டது அனிச்சமலர்...
 
Top