• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷22

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
அத்தியாயம் 22

ஆகாயத்திற்கு கீழ் துரையரசன் வீட்டு மொட்டை மாடி மிக சிறிதான பரப்பளவோடே தெரிந்தது. மேற்கில் மறைந்து கொண்டிருந்த இளஞ்சிவப்பு கதிரவனின், நிலா போன்ற, வட்ட வடிவ, நெருப்பு கோளத்தின் ஏதோ ஒரு புள்ளியை வெறித்து கொண்டிருந்தாள் கொடியழகி.

செழியன் கொடியிடம் பேச சொல்லி சந்தியாவுக்கு சைகை செய்தான்.

சந்தியா கொடியின் தோளில் கை வைத்தாள். திரும்பி பார்த்த கொடியின் கண்களில் நெருப்பாக வியர்த்து வழிந்தது நீர்.

வேண்டாங்கொடி, இதோட நெறுத்திக்க,.. இப்புடியே பண்ணிட்டுருந்தேன்னா, இங்க இருக்குறவங்களுக்கு சந்தேகம் வந்துரும். பொறவு ஓ பொழப்புதே கெட்டு போவும்”, சந்தியா சற்றே கடிந்து தான் பேசினாள்.

கொடி செழியனை பார்த்து பின் சந்தியாவை பார்த்தாள்.

அவனுக்கு எல்லாந்தெரியும்”, சந்தியா சொன்னாள். கொடி செழியனை பார்த்து தலை குனிந்தாள்.

செழியன் சந்தியாவிடம் கண் சைகை செய்தான்.

இந்தேரு கொடி, கொஞ்ச கொஞ்சமா நீ ஒன்னைய சரி பண்ணிக்கணும். இல்லன்னா,”. சந்தியா முடிக்கும் முன்,

என்னைய என்னக்கா பண்ண சொல்ற? முடியலக்கா”, சொல்லி அழுதாள் கொடி.

துக்கத்தை விழுங்கினான் செழியன்.

செத்துரலாம்னு கூட நெனைச்சேன். ஆனா, நா செத்தா, ஒடனே செழியனையும் கொன்னுருவேன்னு அப்பா மெரட்டுறாக. சாகவும் முடியாம வாழவும் முடியாம செதைஞ்சிட்டுருக்றேன்”, சொன்னவள் இன்னும் விசும்பி அழுதாள்.

ஓஹோ, செத்துட்டா எல்லாஞ்சரியாயிரும்னு முடிவு பண்ணிட்டீகளோ?”, செழியன் கேட்க, அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள் கொடி.

அம்புட்டு பெரிய மனுசியாயிட்டியல்ல?”, அவன் கேட்க, அவள் பேசாமல் நின்றாள்.

இம்புட்டு யோசிக்கிறவளுக்கு அன்னைக்கே எங்கிட்ட உதவி கேக்கணும்னு தோணலியாமா? கேளுடி”, செழியன் சந்தியாவிடம் சொன்னான்.

சந்தியா கொடியை பார்த்தாள்.

எந்தங்கச்சி கல்யாணத்துக்கு வெள்ளையுஞ்சொள்ளையுமா நின்னு கேமராக்கு போஸ் குடுக்குறத வுட்போட்டு, நானே வீடியோ எடுத்தனல்ல!! அதேன், என்னய வேலைக்காரன்னு நெனைச்சிட்டாளாட்டுருக்குது”, செழியன் சந்தியாவை பார்த்துதான் சொன்னான்.

இல்லண்ணா”, சொன்னவள் வேகமாக வந்து தமையன் தோளை கட்டிக் கொண்டாள். சந்தியா கண்ணீர் கலந்து சிரித்தாள்.

இந்தா,... இந்த நாடகமெல்லா வேணான்னு சொல்லு. இப்டி அழுகாச்சி நாடகம் நடத்திதே இம்புட்டு நாளா ஏமாத்திட்டுருக்குறா”, செழியன் சொல்ல, மெதுவாக விலகி பாவமாக நின்றாள் கொடி.

ஒனக்கெல்லா அறிவே கெடையாதால? ஓ நெழல தேடி வந்த புள்ளைய இப்டிதா வெரட்டுவியாக்கு?”, சந்தியா செழியனை கடிந்து கொண்டாள்.

சாரிண்ணா, எங்கப்பன், பாண்டியன் பெரியப்பா, மதிவாணன் மாமா, இவுகள பத்தியெல்லா ஒனக்கு முழுசா தெரியாது. என் காதலுக்கு உதவி கேட்டு, ஒங்கப்பனுக்கு எதிரா, ஒன்னய நிறுத்த எனக்கு இஷ்டமில்ல”, கொடி சொன்னாள்.

இந்த கொலைகார பையலுகள பத்தி ஒனக்கு எப்போலருந்து தெரியும்?”, செழியன் கேட்டான்.

பதிமூனு வயசுலயே தெரியும். எங்கப்பனுக்கு பொண்டாட்டிதே இல்ல. வப்பாட்டிக அதிகம்னு தெரியும். வப்பாட்டி வைக்கிறதுல அவுகளுக்கு சாதி தோஷமில்லண்டு தெரியும். மதி மாமனுக்கு எங்கப்பன் ஜால்ரான்னா பாண்டியன் பெரியப்பா மதி மாமன் வளக்குற நாய்ன்னு தெரியும்”, கொடி சொல்ல, எச்சில் விழுங்கி சோகம் கோபம் இரண்டையும் அடக்கினான் செழியன்.

மூணு பேரும் ஒண்ணு கூடி பேசினாகன்னா, எதோ ஒரு மனுச உசுரு பூமிய வுட்டு போக போவுதுன்னு தெரியும். அம்புட்டு ஏன்? அவுக மூணு பேரும் ஆர் ஆர கொன்னுருக்காக, என்னென்ன அட்டூழியம் பண்ணிருக்காகங்கிற அம்புட்டு வெவரமும் எனக்கு தெரியும்”, கொடி நிதானமான குரலில் சொன்னாள்.

இம்புட்டு தெரிஞ்சுட்டு, இவ்ளோ வருசமா, எங்ககிட்டலாம் இத பத்தி ஏன் பேசல?”, செழியன் கேட்டான்.

கொடி சந்தியாவை பார்த்தாள்.

கேக்குறனல்ல?”, செழியன் சற்றே குரல் உயர்த்தினான்.

சந்தியாக்காதே செழியங்கிட்டயும் சுவாதிகிட்டயும் மறந்து கூட இதப்பத்தி சொல்லிராதன்னு சொன்னாக”, கொடி சொன்னாள். செழியன் சந்தியாவை முறைத்தான். அவள் கண்டுகொள்ளாமல் நின்றாள்.

அவுகள மொறைக்காதண்ணா, ஒ மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு நெனைச்சிருப்பாக. யோசிச்சு பாரு, தினேஷ் கூட இப்டி நெனைச்சுதே ஒங்கிட்ட எதையும் சொல்லிருக்க மாட்டாக”, கொடி சொல்ல, கூசி போனான் செழியன். கண்களில் நீர் நிறைந்தது.

இந்தா, இந்த அழுவாச்சி படமெல்லா இங்க ஓட்டாத. எனக்கு இதையெல்லா பாக்க நேரமில்ல. வந்த வேலைய மட்டும் பாரு”, சந்தியா செழியனின் மனநிலையை சீராக்க சொன்னாள். அவளை ஒரு முறைப்பு முறைத்து விட்டு தங்கையை பார்த்தான் செழியன்.

நடந்ததெல்லாம் முடிஞ்சு போச்சல்ல! விருந்துக்கு கூட வரமாட்டேன்னு எதுக்கு அடம்பிடிச்சிட்டு கெடக்குற?. அங்கிட்டு ஆளாளுக்கு ஒண்ணு பேசுறாக”, செழியன் கொடியிடம் சொன்னான்.

பயமாருக்குதுண்ணா, நம்மூருக்கு வந்தா, அங்ஙன கெடக்குற குடிகார பையலுவளே, என்னையும் தினேசையும் பத்தி இவுககிட்ட போட்டு குடுத்துருவானுக. நா என்னய பத்தி கவலப்படல. நா அசிங்கப்பட்டுருவேன்னு மெரளல. இவுக பாவம்ண்ணா. ஆண்டாள் இவுகள நல்லா பேசி ஏமாத்திருக்கு. என் காதல் வெவகாரந்தெரிஞ்சா, இவுக நெலை கொலைஞ்சி போயிருவாக. அப்றம் அத்த..., புள்ள வாழ்க்கை போச்சுன்னு தெரிஞ்சா, உசுரையே வுட்டுருவாக. இவுகல்லாம் என்ன தப்பு செஞ்சாக? அவுக ஏன் ஒடைஞ்சு போகோணும்?”, கொடி கண்களில் நீர் கழன்றது. தலையை கவிழ்த்தி அழுதாள்.

எல்லாம் புரியுதல்ல!! நீ இப்டியே மூஞ்சிய தூக்கி வச்சிட்டு வூட்டுக்குள்ள குறுக்கா மறுக்கா திரிஞ்சா மட்டும் ஒம்புருசனும் மாமியாரும் சந்தோசப்படுவாகளா? அப்போ மட்டும் வெசனப்பட மாட்டாகளாக்கு?”, கொடியின் தோள் தொட்டு சந்தியா கேட்க, சட்டென சந்தியாவின் தோள் சாய்ந்து கட்டிக் கொண்டு அழுதாள் கொடி. செழியன் தன் விழியில் கசிந்த நீரை வேறு திசை திரும்பி துடைத்துக் கொண்டான்.

முடிலக்கா, ஒட்டவும் முடில, வெலகவும் முடில, வாழவும் முடில, சாகவும் முடில, உசுரு நெருப்புல பொசிங்கிட்டுருக்கு. ஆனா என்னால சாக முடில. சித்திரவதையா இருக்கு”, சொல்லி பொங்கி அழுதாள் கொடி. கொடியை அணைத்துக் கொண்ட சந்தியா கண்ணீர் நிறைந்த விழிகளுடன் செழியனை பார்க்க, அவன் கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்வுகள், அவனது கன்னத்தில் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

அழுது கொண்டிருந்த கொடி சட்டென நிமிர்ந்தாள்.

ஒருத்தன மனசுல வச்சிட்டே இன்னொருத்தங்கூட வாழ சொல்லி ஒரு பொண்ண கட்டாயப்படுத்துற சாதிய அள்ளி தீயில போடணுங்கா”, ஆவேசமாக சொன்னாள். சந்தியா சுதாரித்து தன் கண்ணீரை துடைத்து கொண்டாள்.

வலிதாம்புள்ள, ஆனா தாங்கிக்கணும். பொம்பளங்க,..... நாம வலிய தாங்கிக்காட்டி, சுத்தியிருக்குறவங்க நிம்மதியா வாழ முடியாதுடி”, சந்தியா சொல்ல,

ஏன்? என்னத்துக்கு வலிய தாங்கிக்கணும். பொம்பளங்களும் உசுருதே, ஒங்களுக்கும் உணர்வு இருக்குதல்ல!”, செழியன் சொன்னான்.

ஏல, நீ வாய பொத்திட்டு இருக்க போறியா இல்லியா? இவ வலியில ஊசிய எடுத்து குத்தாத”, சந்தியா சற்றே சத்தமாக கண்டித்தாள்.

ஒனக்கு எங்கிட்ட வாயாடுறத தவிர்த்து எதாது தெரியுமாடி?”, சந்தியாவிடம் கேட்டவன் கொடியருகில் வந்தான்.

வலியில்லாத வாழ்க்கை இங்க யாருக்குமில்ல கொடி. வலிய தாங்கி பழகி அதுக்குள்ளயே தேங்கிறக்கூடாது. புரியுதல்ல?”, கேட்கும் போது சந்தியாவை அழுத்தமாக பார்த்தான் செழியன். சந்தியா தடுமாறினாள்.

அந்த வலியையே வாழ்க்கைக்கு அடிக்கல்லா போடணும். கீழ தள்ளி போட்டவன், சந்தோஷமா கைய தட்ட ஆரம்பிக்கிறதுக்குள்ளார எந்திரிச்சி நிக்கணும்”, செழியன் சொன்னான். இருவரும் செழியனின் சொற்களில் இருந்த அழுத்தத்தின் மீது கவனம் கொண்டனர்.

ஓ உணர்ச்சிக்கு மரியாதை குடுக்காம, ஒன்னைய கல்யாணத்தால ஒடுக்க நினைச்ச ஒங்கப்பன் முன்னால, நீ ஆசைப்பட்ட மாதிரி, ஒரு ஆர்க்கியாலஜிஸ்டாகணும். ஓ சொந்தக்கால்ல நின்னு வாழணும். பாதியில வுட்ட படிப்ப வுட்ட எடத்துலருந்து கன்டினியூ பண்ணு. நானிருக்குறன்,...”, செழியன் சொன்னான்.

ஆமா புள்ள, படிப்ப கண்டினியூ பண்ணுடி. வூட்டுக்குள்ளயே அடைஞ்சு கெடந்தா, மனசோடயே பேசி பேசி, புழுங்கி புழுங்கி ஒண்ணுக்காவாம போயிருவ. வெளிய போய் நாலு சனத்துக்க மூஞ்சிய பாத்து பழகினா, தெளிவு வரும். ஒம்புசன் மேல ஒனக்கு ஒரு புடிப்பும் வரும்”, சந்தியா சொன்னாள்.

அதில்லக்கா”, கொடி சொல்லும் போது,

எம்மருமொவா என்ன சொல்றா?”, கேட்டபடி வந்தாள் புவனா. மூவரும் முகத்தை துடைத்து சிரித்தனர்.

கையில் கொண்டு வந்த பழச்சாறு டம்ளர்கள் அடங்கிய தட்டை, அங்கு சிமெண்டால் கட்டப்பட்டிருந்த மேசை மீது வைத்தாள் புவனா.

நீங்க ஏம்மா இதெல்லா எடுத்துட்டு வந்தீக? நாங்களே கீழ வந்துருவோமே!”, சந்தியா சொல்ல,

அட இதுல என்னருக்குது? எம்மருமொவள தேடி வந்த ஒறவுக்காரவுகள நா கவனிக்க வேணாமா?”, புவனா சொல்லி சிரித்தாள்.

குடிச்போட்டு நிதானமா வாங்க. ஒண்ணும் அவசரமில்ல. இது நம்ம வூடு மாதிரி”, சொல்லி விட்டு முக மலர்ச்சியோடு சென்றாள் புவனா.

இல்ல, என்னால இனிமே படிப்புல கான்சென்ட் ரேட் பண்ண முடியாது”, கொடி சொன்னாள்.

ஏன்?”, செழியன் கேட்டான்.

இவ்ளோ பெரிய பாரத்த மனசுல வச்சிட்டு என்னால முடியாது. என்னை விட்டுரு. இனிமே படிப்ப பத்தி பேசாத”,

அடிச்சேன்னா பல்லு முப்பத்திரெண்டும் கழண்டு ஓடிரும்”, சொல்லி கை ஓங்கினாள் சந்தியா. அதிர்ந்து பார்த்தாள் கொடி. செழியனும் அதிர்ந்திருந்தான் தான்..

அப்போ காலம்பூரா இப்டியே இருக்க போறியா? மூஞ்சிய தூக்கி கொடைக்கானல்ல வச்சிட்டு, இந்த வூட்ல ஒரு வேலைக்காரியா?”, சந்தியா அதட்டி கேட்டாள். கொடி பேசாமல் நின்றாள்.

இங்க பாரு, என்னய பாத்து பேசு”, கொடியின் புஜத்தை அழுத்தி பிடித்து நிமிர்த்திய சந்தியா ஒரு முறை சுற்றி பார்த்தாள்.

சொல்லு, இன்னும் தினேஷத்தா நினைச்சிட்டுருக்கியா?”, சந்தியா கேட்க, கொடியின் கண்களில் நீர் பொங்கியது.

சொல்லு, துரை சார் வேணாமா? தினேஷ் தா வேணும்னு முடிவுல இருக்கியா?”, சந்தியா கேட்க,

எனக்கு தெரீல சந்தியாக்கா. தெரீல,......”, என்றவள் சந்தியா கையை உதறி விலகினாள். அழுதாள். செழியன் கலங்கினான்.

சில நொடிகள் உருவான நிசப்தம் மூவர் உள்ளத்திலும் மாபெரும் பூகம்பமாய் வெடித்திருந்தது.

எங்கப்பன மாதிரி துரை சாரும், மோசமானவரா இருந்திருந்தா இவன் வேண்டாம்னு ஈசியா சொல்லிருப்பேன். எந்த தப்பும் செய்யாம துரை சார் கஷ்டப்படறதயும் நா விரும்பல. அதுக்காக அவர ஏத்துக்கவும் முடில”, கொடி சொல்ல,

சாரா? அவுக ஓ புருஷன் புள்ள”,

என்னால அப்படி யோசிக்க கூட முடிலக்கா. தினேஷ் எடத்த என்னால யாருக்குந்தர முடியாது”, அழுதாள்..

நீ இப்டியே இருந்தா, நீ ஏன் ஊர் பக்கம் வராம இருக்கங்குற ஒரே கேள்விக்கு விடை தேடுறதுலயே துரை சாருக்கு எல்லாந்தெரிஞ்சி போயிரும்”, சந்தியா சொல்ல கொடி நிமிர்ந்து பார்த்தாள்.

நா என்ன செய்ய?”, கொடி சத்த்மாக கேட்டாள்.

படி”, சந்தியா சொன்னாள்.

இல்ல என்னால முடியாது

ஏன்?”,

ஏன்னா, ஏன்னா,...... தினேஷ் கூட பேசிதா எனக்கு ஆர்க்கியாலஜிஸ்ட் ஆகணும்னு ஆசையே வந்துச்சு. எனக்கு முன்னாலயே ஆர்க்கியாலஜிஸ்ட் ஆகணும்னு ஆசைப்பட்டவுக தினேஷ். என்னாலதே,.. எனக்காகத்தே, அந்த கம்பியூட்டர் வேலையில சேர முடிவு எடுத்தாக”, கொடி சொல்ல செழியன் அதிர்ந்து பார்த்தான்.

அவன் சாஃப்ட்வேர் கம்பனிலதா வேலை செய்றான்னு ஒனக்கெப்டி தெரியும்?”, செழியன் கேட்டான்.

இப்போது கொடி முகத்தில் அதிர்ச்சி படர்ந்தது.

அவுக எங்கருக்காகன்னு ஒனக்கு தெரியுமா?”,

மேலும் கீழும் தலையசைத்தான் செழியன்.

என்னையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னாக. வுட்டுட்டு போயிட்டாகளே”, தன்னை மறந்து புலம்பினாள்.

செழியனும் சந்தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சந்தியாவுக்கு செழியன் சைகை செய்தான்.

கொடி”, சொல்லி கொடியின் தோள் தொட்டாள் சந்தியா.

தன்னிலைக்கு வந்த கொடி, கண்களை துடைத்துக் கொண்டாள்.

என்னால தினேஷ், அவுக நெனைச்சத படிக்க முடியல. நா மட்டும்,,...... இல்ல சந்தியாக்கா, என்னால முடியாது. படிக்க ஆரம்பிச்சாலே அவுக ஞாவகந்தா வரும்”,

சொன்னான்”, செழியன் சொல்ல இருவரும் செழியனை பார்த்தனர்.

நீ இப்டிதா பேசுவன்னு தினேஷ் சொன்னான்”,

கண்ணீர் காய்ந்து சிவந்து போன கண்களால் கொடி பார்த்தாள்.

அவகிட்ட சொல்லு, என்னால என் ஆம்பிஷன அடைய முடியாம போனதுக்கு, கொடி காரணமில்ல. தாயில்லாத கொடி எங்கிட்ட எதிர்பார்த்தது, தாய்ப்பாசத்தைதான்னு, புரிஞ்சிக்க தெரியாத இந்த சாதிய சமூகந்தா காரணம்னு நா சொன்னதா கொடிகிட்ட சொல்லுன்னு சொன்னான்”,

இன்னும் என்ன சொன்னாக?”, தயங்கியபடியே கொடி கேட்டாள்.

இப்போவும் என் ஆம்பிஷன் சாகல செழியா, உயிரோட இருக்கு, இருக்குன்னு நம்புறேன். கொடியோட மனசுல”,

கவனமாக பார்த்த கொடியின் கண்களிலிருந்து நீர்க்கோடு வந்தது.

என் ஆம்பிஷனையும் சேத்தி கொடி சாதிக்கணும். அவ படிக்கணும். காதல் தோல்வி எதுக்குமே முடிவில்லன்னு சொல்லு. அன்புக்கு அளவில்லன்னு சொல்லு. ஒலகம் பூரா இருக்குற எல்லா உயிர்கள் மனசுலயும் அன்பு சுரந்துட்டே தா இருக்கும்னு சொல்லு. அப்படி ஒரு அன்பு புதையல் அவளுக்கு கண்டிப்பா கெடைக்கும்னு நா நம்பிட்டுருக்கேன்னு சொல்லு. அந்த நம்பிக்கை தா துரை சார் உருவத்துல அவகூட இருக்குன்னு சொல்லு. அவளுக்கு புரியும். துரை சாருக்கும் அவளை புரியும். நா நம்புறேன். எம்மேல அவ வச்சிருக்குற அன்பு அப்டியே இருக்குன்னா, எனக்காக அவ செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதா. என் ஆம்பிஷன சாக விடாம, அவ காப்பாத்தணும். அத செய்ய சொல்லு”,

நீர்க்கோடுகள் காய்ந்திருந்தது. கொடி வைராக்கிய மௌனத்தின் மீது நின்றிருந்தாள். அவளது தோளில் கை வைத்து தோள் கொடுத்தாள் சந்தியா.

பல நிமிடங்கள் மௌனத்தில் கரைய, இருள் பகலை கவ்வ தொடங்கியது.

செழியன் காத்திருந்தான்.

நா படிக்க துரை சாரும் அத்தையும் சம்மதிப்பாகளா?”, கொடி கேட்டாள். சந்தியா கொடியை கட்டிக் கொள்ள, செழியன் சிரித்தான்.

துரை சார்கிட்ட நாம்பேசுறேன். அதுக்கு நீ எனக்கு ஒண்ணு செய்யணும்”, செழியன் கொடியிடம் சொன்னான்.

என்ன என்பதாக பார்த்தாள் கொடி.

சிரிக்கணும்”, சொன்னான். புரியாமல் இருவரையும் பார்த்தாள் கொடி.

சிரிக்கணும்டி, ஓ புருசன் முன்னாலயும், மாமியார் முன்னாலயும் சிரிச்சி கலகலன்னுருக்கணும்”, சந்தியா சொன்னாள்.

ஓ புருஷனும் மாமியாரும் தப்பானவங்க இல்லயல்ல?”, செழியன் கேட்டான்.

இல்லை என்பதாக தலையசைத்தாள் கொடி.

பொறவு அவங்ககிட்ட நட்போட இருக்க என்ன ப்ரச்சினை?”, செழியன் கேட்டான்.

ப்ரச்சினையெல்லா ஒண்ணுமில்லண்ணா, ஆனா,....”, இழுத்தாள் கொடி.

தினேஷ் நல்லாருக்கான்”, செழியன் சொன்னான்.

கொடி நிமிர்ந்து பார்த்தாள்.

நல்ல வேல, நல்ல சம்பளம், நல்லாருக்கான். அவன பத்தி கவலை படாம நீ சந்தோசமா இரு. காலம் எல்லா காயங்களையும் ஆத்தும்”, கொடியின் தலையை வருடினான் செழியன்.

சரி, வா, உன் ரூம காட்டு எனக்கு”, கொடியின் கைப்பிடித்து சந்தியா சொல்ல,

அவ ரூம்ல நீ என்னடி பண்ண போற?”, செழியன் கேட்டான்.

ஒனக்கு தா மூளையே கெடையாதே! அதனால இதெல்லாம் ஒனக்கு புரியாது. அது சரி!! ஒந்தங்கச்சிக்கு வாங்கிட்டு வந்த சேலை எங்க?”, சந்தியா செழியனிடம் கேட்டாள்.

ஸ்ஸ்ஸ்,... பைக்ல மறந்து வச்சிட்டேன்”,

அதான், அதனால தா ஒனக்கு மூளையில்லன்னு சொன்னேன். போ, போயி எடுத்துட்டு வா’, சந்தியா சொல்ல செழியன் சென்றான்.

கொடியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்த சந்தியா,

என்னடி சேலை இது? ஓ வூட்டு வேலைக்காரி கூட இதவிட நல்ல சேலை கட்டிருக்றா தெரியுமா? மூஞ்சிய பாரு, சோகமா, பழைய படத்துல வர்ற சௌக்கார் ஜானகி மாதிரி. தலையில பூ கூடயில்லாம,.. இந்தா, மனசுல கஷ்டமிருக்குறவங்கலாம், இப்டி இஞ்சி தின்ன கொரங்காட்டந்தா இருக்கணும்னா, ஒலகத்துல எல்லா பொம்பளைகளும் இஞ்சி தின்ன கொரங்குதே”, பட படவென்று பொறிந்து கொண்டே மாடிப்படிகளில் இறங்கிய சந்தியாவின் பேச்சை கேட்டு தன்னை மறந்து சிரித்தாள் அவளது கையோடு கை கோர்த்து இறங்கிய கொடி.

தரைத்தளத்து சோஃபாவில் அமர்ந்திருந்தபடி மாடியை அண்ணாந்து பார்த்து கொண்டிருந்த துரையின் கண்களில் கொடியின் சிரிப்பு, பசுமையாக விழுந்தது. அவனது இதழ்கள் அனுமதியின்றி விரிந்தது.

செழியன் சேலையை சந்தியாவிடம் கொடுத்தான். பெண்கள் இருவரும் கொடியின் அறைக்குள் புகுந்து கதவடைத்து கொண்டனர்.

ஒண்ணும் ப்ரச்ன இல்லயல்ல? கொடி என்ன சொன்னா?”, துரை செழியனிடம் கேட்டான்.

அதெல்லா ஒண்ணுமில்லீங்க். எங்க சித்தப்பாவையும், ஆண்டாள் சித்தியையும் பாக்க மனமில்லாம இருந்துருக்றா. இனியெல்லா சரியாயிரும். ஒங்ககிட்ட நா கொஞ்சம் பேசணுமே”, சொல்லி சுற்றி பார்த்தான் செழியன்.

செழியனின் தயக்கத்தை புரிந்து கொண்டான் துரை.

நீங்க எங்க வூட்டு தோட்டத்த பாத்ததில்லியல்ல!! வாங்க பாக்கலாம்”, சற்று சத்தமாகவே சொல்லி அழைத்து சென்றான் துரை.

சமையலறையில் நின்ற புவனா மகனின் குரல் கேட்டு சிரித்து விட்டு பின், வேலைக்காரர்களுக்கு உத்தரவு பிறப்பித்து கொண்டிருந்தாள்.

கொடி படிக்கிறதுல எனக்கு ப்ரச்ன எதுவுமில்ல மச்சான். அம்மா கண்டிப்பா சம்மதிக்க மாட்டாக. அதேன் யோசிக்கிறேன்”,

அத்த அந்த காலத்து ஆளு, இப்போ ஊரு கெடக்குற கெடை அவுகளுக்கு தெரியாதல்ல. நீங்கதேன் அவுகளுக்கு எடுத்து சொல்லணும்”, சொல்லிய செழியன் எதிர்பார்ப்போடு நின்றான்.

துரையரசன் யோசித்தான்.

கல்யாணம் பேசும் போதே என்னய விட அதிகம் படிச்ச பொண்ணு வேணாம்னு சொன்னாக. எனக்குத்தே கொடிய பாத்ததும் புடிச்சு போச்சு. நாந்தே அம்மாட்ட பேசி அவுகள சம்மதிக்க வச்சேன். ம்ம்,……”,

செழியன் அமைதியாக நின்றான்.

ம்ம், நா அம்மாட்ட பேசுறேன். அதுக்கு முன்னாடி கொடிகிட்டயும் பேசணும்”, சொல்லி சிரித்தான் துரை.

செழியனும் சிரித்தான்.

ஆத்தீ, எம்மருமொவளுக்கு இம்புட்டு சிரிக்க தெரியுமாக்கு?”, சந்தியா அருகில் புது புடவை கட்டி, பூச்சூடி நின்ற கொடியை பார்த்து, புவனா சொல்லும் போது செழியனும், துரையும் வீட்டுக்குள் வந்தனர்.

கொடியின் மலர்ச்சியை பார்த்த துரை முகம் மலர்ந்தான். செழியனும் சிரித்தான். எல்லோரும் சேர்ந்து இரவு உணவு உண்ண செவ்வந்தி பரிமாறினாள்.

சாப்பிட்டு கை கழுவிய செழியனுக்கு துவாலை ஒன்றை கொடுத்தாள் கொடி. தன் கையை துடைத்தபடியே, சுற்றி பார்த்தான் செழியன். சுற்றிலும் யாருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டவன்,

இனிமே சந்தியாவ அக்கான்னு கூப்டாத. அவ ஒனக்கு அண்ணி”, சொல்லி சிரித்தான். கொடி அதிர்ந்து பயந்தாள்.


புளிய மரங்களும், மாமரங்களும் அடர்ந்திருந்த அந்த தோப்புக்குள், பகலிலேயே வெளிச்சம் ஊடுருவ தயங்கும். இதுவோ அமாவாசை இரவு,

ஒரு விரிந்த மரத்துக்கு கீழ், அலைபேசி டார்ச் விளக்குகளின் வெளிச்சத்தில் அமர்ந்திருந்த நால்வரின் கைகளிலும் மது நிறைந்த காகித டம்ளர்கள் இருந்தது.

லேய், நெஞ்சு வலிக்குதுல”, என்றான் ஒருவன்.

யாமுல”, என்றான் இன்னொருவன்.

வலிக்குதுல”, நாக்குழற சொன்னவன், தன் கையில் இருந்த மதுவை வாய்க்குள் சரித்தான்.

கேஸ் ஸ்டிரபிளா இருக்கும்ல. ஜெலுசில் வாங்கி தின்னு”, என்றவன் கோழிக்காலை கடித்தான்.

இல்லல, நம்ம கூட்டாளி தினேஷ் காதல கொன்னுட்டானுகல. அதேன், நெஞ்சு வலிக்குதுல மாமா”,

ம்ம்”,

நம்ம பைய ஊர விட்டு எங்கியோ போயி கெடக்கான். சும்மாருந்த பைய வாழ்க்கைய அழிச்போட்டு, அந்த சிறுக்கி மொவா, சந்தோசமா வாழ்ந்துட்டுருக்கா. வுடப்புடாதுல மாப்ள. அவள எதாச்சும் செய்யணும்”, மதுவின் குழறலுக்கு நடுவே அவன் சொல்லி முடிக்கும் போது, அவனது கன்னத்தில் விழுந்திருந்தது ஒரு அறை.

நால்வரும் திடுக்கிட்டு அதிர, அவர்கள் முன் கோபக் கண்களோடு நின்றிருந்தான் மாறன்.

தமிழ்மாறா”, ஒருவன் சொல்ல முடியாமல் சொன்னான்.

வெட்டி பொதைச்சுப்போடுவே”, மாறன் சொன்னான்.

இல்ல மாறா, நம்ம தினேசு பாவம்ல”,

சொன்னவனின் கன்னத்தில் இன்னொரு அறை விழுந்தது.

எம்புட்டு தடவல சொல்றது இந்த தோப்பு பக்கம் வராதீகண்டு! ஏற்கனவே ஊருக்குள்ள எவன் என்ன தப்பு செஞ்சாலும் போலிஸ்காரனுக நம்மாளுவ வூட்டு கதவத்தே தட்டுறானுக. இதுல, நீங்களும் குடி, கூட்டுன்னு திரிஞ்சியன்னா வெளங்குமால?”, மாறன் சொல்ல,

நா வேண்டான்னுதே சொன்னேன் மாறா, இவ்ந்தே”, என்றான் ஒருவன்.

சரி, எல்லா அவவன் வீட்டுக்கு போ. இனி தினேஷ் பத்தி எவனும் மூச்சு விடக்கூடாது, தெரியும்ல”, மாறன் சொல்ல, சரி என்று தலையசைத்த படி அவ்விடம் விட்டு விலகினர் நால்வரும்.

தானும் அவ்விடம் விட்டு நீங்க நினைத்த மாறன் கண்களில் தூரத்தில் ஓர் வெளிச்சம் தெரியவே, அங்கு சென்றான்.

ஒரு மாமரத்தின் தாழ்ந்த இரு கிளைகளுக்கு நடுவே இருந்த இடைவெளி வழியே பார்த்தான்.

கோபாலும் இன்னும் இருவரும் அமர்ந்து போதையேற்றி கொண்டிருந்தனர்.

ஆரு இவனுக? எங்கியோ பாத்த மாதிரியிருக்கே?”, தனக்குள் சிந்தித்த மாறன் அவர்களை கூர்ந்து கவனித்தான்.

சந்தியா, வேச மொவத, ஒன்னய வுதமாத்தேந்தி ”, வெந்து போன நாவால் சொன்னான் கோபால். கோபால் சொல்வது மாறனுக்கு புரியவில்லை. சந்தியா என்ற பெயர் மட்டுமே மாறனின் மூளையில் தெளிவாக பதிந்தது.


தொடரும்,……..


சக்தி மீனா…..
 
  • Like
Reactions: Maheswari