• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷23

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
அத்தியாயம் 23

சந்தியாவும் செழியனும் சென்ற பிறகு சேலையிலிருந்து நைட்டிக்கு மாறிய கொடி, தலையில் சூடியிருந்த மல்லிகைப்பூவை அகற்றவில்லை. மனிதன் காதல் கற்க தொடங்கிய காலம் முதலே, காதல் செய்யும் காதலர்களின் ரகசியங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவை பூக்கள்.

தன் படுக்கை அறை முழுவதும் பரவி நிற்கும் மல்லிகை மணத்தின் பரவசத்தை நுகர்ந்தபடியே அறைக்குள் நுழைந்தான் துரை. அவனின் பரவசம் உணரா கொடியோ அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக விலக்கி பார்த்து கொண்டிருந்தாள்.

ஓய்”, அவளின் காதருகில் நெருங்கி வந்து அழைத்த, அவனின் அழைப்பில் இருந்த சரச உணர்வு அவளுக்கு புரியவில்லை.

ம்ம்”, திரும்பினாள்.

அங்க என்ன பாத்துட்டுருக்க?”,

இங்க என்ன? பெரியார், மார்க்ஸ், புக்ஸ் மட்டுந்தா இருக்கு”, அவள் சொல்ல,

ம்ம், எனக்கு அவங்க ரைட்டிங்க்ஸ் தா புடிக்கும்”, துரை சொன்னான்.

டோட்டலி கம்யூனிசம்”,

ம்ம், ஒனக்கு கம்யூனிசம் புடிக்காதா?”, கேட்டவன் அவளை நெருங்கி நிற்க நாசிக்குள் ஏறிய மல்லிகை மணம், இன்னும் நெருங்க சொல்லி தூண்டியது.

அவளது கழுத்தை உரசிக் கொண்டே, நைட்டிக்குள் மறைந்திருந்த தாலியை தாங்கிக் கொண்டிருக்கும், தாலி சங்கிலியை பார்த்த துரை, தன் உணர்வில் குற்றமிருப்பதாக நினைக்க சாத்தியமில்லை. இன்னும் நெருங்கினான்.

துரையின் மீது கொண்ட நம்பிக்கையால் அவள் அவனின் செய்கையை சந்தேகிக்கவில்லை.

அப்டியில்ல, ஒரே விதமான புக்ஸ், ஒரு குறிப்பிட்ட ரைட்டர்ஸ் எழுதின புக்ஸ்னு இல்லாம எல்லாவிதமான புக்ஸ்ஸையும் படிக்கணும். அப்போதா சரி எது? தப்பெதுன்னு புரியும்.”, கொடி இயல்பாக சொல்லி, அடுத்த புத்தகத்தை விலக்க,

ஓ, அப்போ நீ எல்லா மாதிரியான புக்ஸ்ஸையும் படிப்பியா?”, கேட்டவனின் கண்கள் அவளது அங்கங்களை தழுவி மீண்டு அவளது கண்களை பார்த்தது. சிரித்த படி திரும்பி ஒருமுறை அவனை பார்த்து விட்டு, புத்தகங்கள் மீது பார்வையை செலுத்தியவள்,

ம்ம், ஆனா ஹிஸ்டோரிக்கல் புக்ஸ் மேல எனக்கு இன்டெரெஸ்ட் ஜாஸ்தி”, என்று சொல்லவே, அவன் அவளது இடையை பிடித்திழுத்து, அவளை தன்னோடு சேர்த்தான். திடுக்கிட்டு திரும்பி அவனது முகம் பார்த்து தொண்டைக்குள் எதையோ விழுங்கினாள்.

நீ இப்டியே இருந்தா ரொம்ப நல்லாருக்கும் கொடி”, சொன்னான். இப்போது தான் அவனது உணர்வையும் உரிமையையும் புரிந்து கொண்டவளாக பார்த்தாள். அவனோ கண்களில் தாபம் தாங்கினான்.

ரொம்ப நாளா ஒங்கிட்ட சொல்லணும்னு நெனைச்சிட்டுருக்கேன். ஐ லவ் யூ”, அவன் சொல்லில் உதிர்ந்து போனாள். பதறியும் போனாள்.

அவள் மறுப்பான செய்கை எதுவும் செய்யாமல் போகவே இன்னும் இழுத்தணைத்து, அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான். நிமிர்ந்து நின்ற கொடியின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர், அவனது கழுத்தில் விழுந்து, தன் மறுப்பை சொன்னது.

திடுக்கிட்டு எழுந்து அதிர்ந்து பார்த்தான். அவள் இடவலமாக தலையாட்டினாள்.

தாலி மட்டுமே பெண்ணை தொடுவதற்கான அனுமதியில்லை” என்று அவனது ஆசான்கள், புத்தகங்களின் மூலம் சொல்லித் தந்தது நினைவை எட்டவே, சட்டென்று விலகினான்.

ப்ளீஸ்,...... சாரி,........ “, சொல்லி கண்ணீரோடு கைகள் கூப்பினாள். உருகிப் போனான். உருவான உணர்வுகளை தொலைத்தான்.

எதுவும் பேசாமல் படுக்கையில் மல்லாந்து படுத்து, கைகளை தலைக்கு கொடுத்தவனின் சிந்தனையில் சந்தேகச் சுவடு விழுந்தது.

அவனருகில் அமர்ந்து கொண்டவளுக்கு அழுவதை தவிர வேறு எதுவும் செய்ய தோன்றவில்லை. ஒரே படுக்கையில் இரு தீவுகளாக கணவன் மனைவி உறவு. இதுவும் இந்த சமூக கட்டமைப்பின் பக்கவிளைவுகளில் ஒன்று.





ஊரின் எல்லையில் அநாதையாக இருக்கும் வேப்பமரம், வந்ததும் சந்தியாவின் ஆக்டிவா நின்றது. அதை பார்த்ததும் செழியனின் பைக்கும் அருகில் நின்றது.

அவள் அவனை பார்க்க அவன் என்ன என்பதாக புருவம் உயர்த்தினான்.

நீ எனக்கொரு ஹெல்ப் பண்ண!!. நா ஒனக்கொரு ஹெல்ப் பண்ணேன். சரியா போச்சு. இனி என்னை பாக்க ட்ரை பண்ணாத”, சந்தியா சொல்ல, சிரித்தபடியே, தலையை நாலாபக்கமும் உருட்டினான் செழியன்.

போல லூசு”, என்றவள் ஸ்கூட்டியின் ஆக்சிலேட்டரை அழுத்தி பிடிக்க,

இருடி, போயிராத”, என்ற செழியன், பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது இருக்கும், பைக்கின் சொந்த கைப்பையை திறந்து வாழை இலை பார்சல் ஒன்றை எடுத்து அவள் முன் நீட்டினான்.

என்ன இது?”,

வாங்கி பிரிச்சி பாரேண்டி”,

ஒண்ணும் தேவையில்ல. நீயே சொல்லு. என்ன இது?”, அவள் கேட்டாள்.

நல்லா மூச்சை உள்ள இழு”, செழியன் சொல்ல,

போடாங்க”, என்றவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.

பயந்தாங்கொள்ளிடி நீ, ஒனக்கு எங்கிட்ட மயங்கிருவோமோன்னு பயம். போ, போ,”, அவன் சொல்ல,

எனக்கென்னல பயம் எரும?”,

அப்போ நல்லா மூச்ச இழுத்து விடு பாப்போம்”, அவன் சொன்னதை போலவே மூச்சை உள்ளிழுத்து வெளி விட்டாள்.

விட்டுட்டேன்”,

இப்போ சொல்லு, இந்த பார்சல்ல என்னயிருக்கு?”, அவன் கேட்ட பிறகு தான் மல்லிகைப்பூ வாசனை நாசிக்குள் ஏறியது அவளது அறிவுக்கு எட்டியது.

சந்தியா முறைத்தாள்.

ஐ லவ் யூ டியர்”, சொல்லி வாழை இலைக்குள் இருக்கும் மல்லிகைப் பூவை அவள் முன் நீட்டினான்.

நீயெல்லாந்திருந்தவே மாட்டியால?”,

ஏய் நா என்னடி தப்பு பண்ணேன் திருந்த! கொடிக்கு பூ வாங்கும் போது பூக்காரம்மா பொண்டாட்டிக்கான்னு கேட்டாக. இல்ல, தங்கச்சிக்குன்னேன். இந்த ஆம்பளைங்களே இப்டிதா. தங்கச்சி மேல இருக்குற பாசத்துல பாதி கூட பொண்டாட்டி மேலயில்லன்னு பூக்காரம்மா சொன்னாக. எனக்கு மட்டும் ரோசம் இருக்காதா?”,

அவள் முறைத்தாள்.

எம்பொண்டாட்டி மேல நா வச்ருக்ற பாசம், எம்புட்டு ஒசத்தின்னு காட்ட வேணாமா?”, சொல்லி பூவை நீட்டினான்.

போல, திருந்தாத பையல!! ”, என்றவள் ஸ்கூட்டியின் ஆக்ஸிலேட்டரை திருக முயல, அக்ஸிலேட்டர் மீதிருந்த அவளது கையை அழுத்தி பிடித்தான் செழியன்.

அவள் திரும்பி பார்த்து முறைத்தாள்.

அவன், தன் கையிலிருந்த மல்லிப்பூ பார்சலை, ஸ்கூட்டியில் தொங்கி கொண்டிருந்த அவளது கைப்பையை திறந்து அதற்குள் போட்டான்.

அவள் பைக்குள் விழுந்த மல்லிப்பூவை தேடி, பைக்குள் துழாவ,

இங்க நாம நின்னு பேசிட்டுருக்றத, இருட்டுக்குள்ள நின்னு எவனாது பாத்தா, வெவகாரமா போயிரும். நா கெளம்பறேன்”, என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்து சென்று விட, மல்லிப்பூவை கையில் எடுத்தவளுக்கு, அதை புழுதியில் எறிய மனம் ஒப்பவில்லை.

சுற்றும் முற்றும் பார்த்தவள், பூவை கைப்பைக்குள் வைத்து கொண்டு கிளம்பினாள்.

ஸ்கூட்டி ஊருக்குள் இருந்த டீக்கடையை தாண்டி செல்லும் போது, கையில் டீ கிளாஸுடன் டீக்கடை முன்பு சிரித்தபடி நின்றிருந்தான் செழியன். அவனை முறைத்துக் கொண்டே சென்றது ஸ்கூட்டி. சிரித்தான் செழியன்.

என்னண்ணே, மதிவாணய்யா நடத்துன யாகத்துல ஆகுதி போட வருவீகன்னு பார்த்தேன். ஆளையே காணோம்”, கேட்டபடி வந்தான் மாறன்.

நீயுமால?”, சொல்லி சிரித்தான் செழியன்.

கருப்பசாமிண்ணே, ஒரு டீ”, மாறனுக்காக சொன்னான் செழியன்.

நாட்டுல இருக்குற பிரச்சினையெல்லா பேச பிரசிடென்டுக்கு டைமில்ல. யாகம் நடத்த டைமிருக்கு”, மாறன் சொன்னான்.

ஏலே சத்தமா பேசாதீகலே. ஆரு காதுலயாது வுழுந்தா கலவரமாயி போவும்”, டீ ஆற்றிய கருப்பசாமி சொன்னார்.

சத்தமா பேசுனாத்தே கலவரமாவுமாக்கு? அண்ணே இங்ஙன டீ குடிக்கத பாத்தா ஆவாதாமா?”, செழியனை கை காட்டி மாறன் கேட்டான்.

நானும் அதியத்தே மாறா வந்ததுலருந்தே சொல்லிட்டுருக்கே. தம்பிதே கேக்க மாட்டுக்காக”, மாறனிடம் சொன்ன கருப்பசாமி,

சீக்கிரம் கெளம்புங்க தம்பி, காலணிக்காரன் கடையில நீங்க டீ குடிச்சீகன்னு, ஒங்க ஐயனுக்கு தெரிஞ்சா, அவுக என்னையத்தே வைவாக”,

வையட்டும்!! எனக்காக நாலு சொல்லு கேட்டுக்குற மாட்டீகளா?”, செழியன் சொன்னான்.

பாத்தியாலே மாறா, வந்ததுலருந்தே இப்டிதா ஏட்டிக்கு போட்டியா பேசிக்கிருக்காக”, கருப்பசாமி சொன்னார்.

மாறன் சிரிக்க செழியனும் சிரித்தான்.

நம்ம தோஸ்த்தெல்லா என்ன செய்றாக மாறா?”, செழியன் கேட்க,

கவர்ன்மென்ட் கடையில தண்ணிய வாங்கி குடிச்சிபுட்டு அளும்பு பண்ணிட்டு கெடந்தானுக. இப்பந்தே வூட்டுக்கு பத்தி வுட்டு வர்றேன்”, சொல்லி சிரித்த மாறன், ஏதோ நினைவு வந்தவனாக,

செழியண்ணே......, நம்மூரு புளியந்தோப்புக்குள்ளார இன்னும் ரெண்டு மூணுவேரு தண்ணியடிச்சிட்டு இருந்தானுக. அவனுக சரியில்லண்ணே,.. எதோ பெருசா தப்பு பண்ண ப்ளான் பண்றானுகன்னு தோணுது”, தமிழ்மாறன் சொல்லும் போது தர்மனும் அங்கு வந்தான். மாறனுக்கு டீ கொடுத்து விட்டு தர்மனுக்கு டீ ஆற்றினார் கருப்பசாமி.

வுடுல, நம்மூரு எளந்தாரிக பூராவும் புளியந்தோப்புக்குள்ளதே அடிக்கிறானுக. அவனுக ஒளறுனத போயி பெருசா பேசிகிட்டு,....”, செழியன் தட்டிக் கழிக்க முயன்றான்.

இல்லண்ணே, அவனுக ஒவ்வொருத்தனுக்கும் நாப்பது அம்பது வயசுக்கு மேல இருக்கும். எதோ பொம்பள புள்ள வெவகாரமாட்டந்தெரியுது. அதேன்,.....”, வார்த்தையை இழுத்து சிந்தித்தான் மாறன்.

பொம்பள புள்ள வெவகாரமா? என்னல சொல்ற?”, தர்மன் கேட்க, செழியனும் உரையாடலில் கவனம் கொண்டான்.

ஆமாலே, எதோ ஒரு பேரு சொன்னானே! ம்ம்,ம்ம்ம்”,....... மாறன் சிந்தித்தான். செழியன் டீ கிளாஸ்ஸை டீக்கடை திண்டின் மீது வைத்தான்.

ஆ,,,,,, ஞாவொகொ வந்துருச்சு. சந்தியா, ஆமா, சந்த்யான்னுதே என்னமோ பேசிட்டுருந்தானுக. மத்தபடி அவன் பேசினது எதுவும் தெளிவா கேக்கல. எதோ தத்தக்கா புத்தக்கான்னு பேசிட்டுருந்தான்”,

சந்த்யாவா?”, அதிர்ந்தான் செழியன்.

சந்தியான்னா, ஊருக்குள்ள ஏழெட்டு சந்தியா திரீறா. எந்த சந்தியாவ பத்தி பேசுனானுங்களோ”, கருப்பசாமி சொன்னார்.

சந்தேகம் கொண்டவனாக தன் அலைபேசியை அலசிய செழியன்,

இவனா பாரு?”, கேட்டு கோபாலின் புகைப்படத்தை காட்டினான். கண்கள் சுருக்கி சிந்தித்த மாறன்,

ஹா,,,,, இவந்தாண்ணே, ஆனா இவங்கூட இருந்த பையலுகள என்னால பாக்க முடில. திரும்பி உக்காந்துட்டுருந்தானுக. ஆனா...., வாட்ச் மேன் டிரஸ்ல இருந்தானுகண்ணே”, மாறன் சொல்ல செழியனின் முகம் கலவரமானது.

யாரு தம்பி இது?”, கருப்பசாமி கேட்டார்.

என்னாச்சுண்ணே!”, தர்மன் கேட்க, சுற்றும் முற்றும் பார்த்த செழியன் டீக்கடையில் நால்வரையும் தவிர எவரும் இல்லை என்று உறுதி செய்த பின்,

சந்த்யான்னா, என் சந்த்யா”, என்றான். தர்மன் அதிர்ந்தான்.

அட, ஆமால்ல! அண்ணி பேரு கூட சந்தியால்ல! எனக்கிது தோணவே இல்ல பாருங்களேன். அந்த எச்சைக்கும் அண்ணிக்கும் என்னண்ணே பிரச்ன?”, மாறன் கேட்டான்.

ஆருல? எந்த சந்த்யா? என்ன வெவகாரம்?”, கேட்டார் கருப்பசாமி.

செழியன் நடந்ததனைத்தையும் விவரமாக விளக்கி சொன்னான்.

ஆத்தீ, அந்த புள்ளையா? வெவரத்தை அவ அப்பன் கதிரேசண்ட சொல்லிரலாந்தம்பி”,

இல்லண்ணே, அவுக,... ஆளு ரொம்ப வீக்கு. நெஞ்சு வலிக்காரவுக. இந்த விசயந்தெரிஞ்சா உசுருக்கு உத்திரவாதமில்ல. நா பாத்துக்குவேன்”, செழியன் சொன்னான்.

இல்லீங்க் தம்பி, பொட்ட புள்ள”,

நெனைவு தெரிஞ்ச நாளா அவள உசுருக்குள்ள வச்சு வாழ்ந்துட்டுருக்றேண்ணே. நாம்பாத்துக்குவேன்”, செழியன் அழுத்தமாக சொல்ல கருப்பசாமி விழிகள் விரித்து வியந்தார். மாறனை பார்த்தார். மாறன் ஆம் என்பதாக கண்கள் சிமிட்டினான்.

அவன் என்ன பேசுனான்னு எதாது தெரியுமால?”, செழியன் கேட்டான்.

இல்லண்ணே! தத்து பித்துன்னு அவன் பேசுனதெதும் புரில. ஆனா அவன் ஏன் அப்டி பேசுனான்னு இப்போதே புரியுது. நீ போட்ட சூடு அப்டில்ல!? “, மாறன் சொல்ல, செழியன் ஆழ்ந்து சிந்தித்தான்.

செழியந்தம்பி”, கருப்பசாமி கூப்பிட திரும்பினான் செழியன்.

நீங்க அந்த புள்ளைய நெனைச்சிட்டுருக்ற விசயம் ஒங்கப்பனுக்கு தெரிஞ்சா,.... ம்ம், வந்து,.... பாண்டியன் நல்லவருதே,....”, இழுத்தார் கருப்பசாமி. செழியன் சிரித்தான்.

கருப்பசாமிண்ணே, செழியண்ணனுக்கு அவுக அப்பன பத்தி எல்லாந்தெரியும்”, மாறன் சொல்ல, மீண்டும் வியந்து செழியனை பார்த்தார் கருப்பசாமி. செழியன் சிரித்தான்.

அண்ணிய பத்ரமா பாத்துக்கண்ணே! எதனான்னா, எத்தன மணியானாலும் என்னய கூப்டு. யோசிக்காத! சரியா?”, மாறன் சொல்ல,

நாங்கலாம் இருக்கோமுண்ணே. எதுக்கும் அசராத”, தர்மன் சொன்னான். லேசாக சிரித்து சரியென்று தலையசைத்தான் செழியன்.

சதைய திங்குற பேயும், சாதிய காப்பாத்த ரத்தங்குடிக்குற பேயும் அந்த புள்ளை தலை மேல ஒண்ணா சுத்துது. பாத்து சாமி,... சூதானமா இருந்துக்க!”, கருப்ப சாமி சொன்னார். அவரை பார்த்து லேசாக சிரித்து விட்டு தன் பைக்கை கிளப்பி சென்றான் செழியன்.

யண்ணே, நாம இங்ஙன பேசுனது, ஒத்த வார்த்த கூட வெளிய கசியக்கூடாது, தெரியுமுல்ல! ”, மாறன் கருப்பசாமியிடம் சொன்னான்.

ஏல! யார பாத்து என்ன பேசுற? என்னைய வெட்டி ஊத்துனாலும் ஒத்த வார்த்த செதறாது. செழியன இம்புட்டூண்டு நாள்லருந்தே தெரியும்ல. பெத்த அப்பனுக்கும் எனக்கும் வேத்துமை பாக்காம பழகுற பைய. அவனுக்காக என் உசுரு போனா, மசுரு போச்சுல”, கருப்பசாமி சொல்ல, சிரித்தான் மாறன்.




ம்மா ப்ளீஸ், போதும்., நீ மூச்ச புடிச்சிட்டு பக்கம் பக்கமா அட்வைஸ் பண்றதால, எந்த யூஸும் இல்ல. நா செய்றது கரெக்ட்டுன்னு எனக்கு தெரியும். அதையே தப்புன்னு என்னய நம்ப வைக்க ட்ரை பண்ணாத. அது ஒன்னால முடியாது”, சமையல் அறையில், சுவாதி சொல்ல, பேச இயலாமல் நின்றாள் கௌசல்யா.

புரிஞ்சிக்கம்மா, இப்போ நா எடுத்துருக்ற புராஜெக்ட் ரொம்ப சென்சிட்டிவ். ஒரு கொலை கேஸ். அதுக்கு நா நெறைய ஹார்ட் வொர்க் பண்ணணும். ஆஃப்டிரால் ஒரு பூஜைக்கு வர்லங்குறத, இவ்ளோ பெருசா பேசிட்டுருக்க!!”, சுவாதி சொல்ல,

சும்மா பெரிய இவளாட்டம் பேசாதடி. ஒங்கப்பன் இந்த ஊருக்கே பிரசிடென்ட்டு. அவுகளுக்கு இல்லாத வேலையா? அவுகளே பூசையில இருந்தாக. நீ அவுகள விட பெரிய ஆளா?”,

இல்ல, அவுகள விட சின்சியர்”, பட்டென்று சொன்னாள் சுவாதி.

தாய் மகளின் உரையாடலை வீட்டு வரவேற்பறையில் நின்று கேட்டு கொண்டிருந்த மதிவாணன் திடுக்கிட்டு கோபம் கொண்டார்.

கௌசல்யா புரியாமல் மகளை பார்த்தாள்.

"என்ன பாக்ற? அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்ட சத்துணவுக்கு குடுக்குற தொகையோட அளவை கவர்ன்மென்ட் குறைச்சிருச்சு. ஏன்னா குழந்தைகளுக்கு பால் வாங்கி குடுக்க கவர்ன்மென்ட்கிட்ட காசில்லயாம்!!. இந்த நிலமையில அங்கன்வாடிகள்ல வேலை செய்றவங்களுக்கு சம்பளம் போதாதுன்னு அங்கங்க போராட்டம் நடந்துட்ருக்கு. நம்மூரு அங்கன்வாடி டீச்சர்ஸ்ஸும், ஆயாவும் கூட கலெக்டர் ஆஃபீஸ் முன்னால தர்ணா பண்ணாங்க. அத கவனிக்க பிரசிடென்டுக்கு நேரமில்ல. ஏழு நாளா குரங்கணி காடு தீப்பிடிச்சு எரிஞ்சிட்டுருக்கு. அத பத்தி பேச அப்பாக்கு மட்டுமில்ல, எந்த அரசியல்வாதிக்கும் நேரமில்ல. பக்கத்து ஊர்ல, கோயிலுக்கு சாமி கும்பிட போன பையன சாதிய காரணங்காட்டி அடிச்சு, மண்டைய ஒடைச்சிருக்கானுக. அத கேக்க ஆளில்ல. யாகத்து முன்னால உக்காந்து ஆகுதி போட்டா செஞ்ச பாவம் தீந்துருமா?", ஆவேச குரலில் சுவாதி மூச்சு விடாமல் பேச,

பாவமா? அவுக என்னடி பாவம் செஞ்சாக?”, கௌசல்யா மகளுக்கு கணவனை பற்றி தெரிந்திருக்குமோ?” என்ற சந்தேகத்துடனும் பயத்துடனும் தான் கேட்டாள்.

பாவந்தாம்மா. ஒரு பொறுப்பான பதவில இருந்துட்டு, அந்த பதவிக்கான கடமையை சரியா செய்யாம, பதவிக்கான சொகுசை அனுபவிக்கிறது கூட பெரிய பாவந்தா”, சொல்லி விட்டு அடுக்களையை விட்டு வெளியே வந்தாள் சுவாதி. மதிவாணன் மகள் கண்ணில் படாதவாறு மறைந்து கொண்டார்.

சுவாதி தன்னறைக்குள் சென்று கதவடைத்து கொண்ட பின், மறைவிலிருந்து வெளியே வந்த மதிவாணனை பார்த்துக் கொண்டிருந்தாள் கௌசல்யா.

அவளை பார்த்தவர் எதுவும் பேசாமல், தனதறை நோக்கி நடக்க,

ஏனுங்க?”, அழைத்தாள் கௌசல்யா. நின்றார். திரும்பவில்லை.

அருகில் சென்றாள்.

நாலஞ்சு வருசமா புள்ளயில்லாம வெரதமிருந்து பெத்த மக!!, பேசுன பேச்ச கேட்டீகளா?”,

அவர் பதில் பேசவில்லை.

என் மக இம்புட்டு அறிவாளியா, நேர்மையா இருக்கான்னு சந்தோசப்பட்டுக்கிரவா? இல்ல, எம்புருசன் ஒரு கொலைகாரன்னு நெனைச்சு வெக்கப்படவான்னு எனக்கு தெரிலீங்க”, அவள் சொல்ல, திரும்பி பார்த்தவரின் விழிகள் சிவந்திருந்தது. மிரண்டாலும் நிமிர்ந்து நின்றாள்.

வேணாமுங்க், நம்மகிட்ட என்னதில்ல. இந்த அரசியல், பதவி, அத காப்பாத்த உயிர் பலி, ஊரார் சாபம் இதெல்லா வேணாமுங்க். நம்ம புள்ளைக்காகவாது,...”, அவள் சொல்லி முடிக்கும் முன்,

எனக்கே புத்தி சொல்ற அளவுக்கு வந்துட்டியல்ல?”, கேட்டார்.

இரு புறமும் தலையாட்டி மிரண்டு விழித்தாள்.

அவ எம்புள்ள, அவள எப்டி என் வழிக்கு கொண்டாரணும்னு எனக்கு தெரியும். போ, போயி ரெண்டு ஆம்ப்லேட் எடுத்தா”, சொல்லி விட்டு மாடியேறினார் மதிவாணன்.

வழக்கம் போல் அடுக்களை மடியில் அழ போனாள் கௌசல்யா.




செழியனின் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழையும் போது செழியனின் பைக் திடீரென நின்று போனது.

ப்ச், ச்சே, ஏதேதோ சிந்தனையில பெட்ரோல மறந்துட்டேனே”, சொன்னவன் பைக்கை உருட்டிக் கொண்டே நடந்து வந்தான்.

செழியனுக்காக வீட்டு வாசலிலேயே காத்திருந்த அபிராமி, வீட்டை தாங்கி நின்ற தூணில் சாய்ந்து தூங்கி போயிருந்தாள். வீட்டு வாசல் வரை பைக்கை தள்ளிக் கொண்டே வந்தவன், தூங்கிக் கொன்டிருந்த தாயை பார்த்து சிரித்தபடியே பைக்கை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தினான். பிறகு தாயருகே அமர்ந்தான். சில நொடிகள் அவள் முகத்தையே பார்த்திருந்தவன் மெதுவாக, தாயின் மடியில் படுத்தான். திடுக்கிட்டு விழித்த அபிராமியின் மடியில் சிரித்தபடி படுத்திருந்தான் செழியன்.

எய்யா, நீ எப்போ சாமி வந்த?”, கேட்டவளின் முகத்தில் பதட்டம் இருந்தது.

ஏம்மா, தூக்கம் வந்தா தூங்க வேண்டியதான! நா சாப்பாடு போட்டு சாப்டுக்க மாட்டேனா?”, இயல்பாக அவன் கேட்க, அபிராமி இயல்பாக இல்லை.

சரிம்மா, வா, போயி தூங்கு”, என்றவன் எழுந்தான். எழுந்தவள் வீட்டுக்குள் பார்த்து, பின் செழியனை பார்த்து அதிர்ச்சியாக விழித்தாள்.

வாம்மா”, என்றவன் அவளின் கையை பிடித்திழுத்து வீட்டுக்குள் அழைத்து செல்ல, செழியனின் அறையில் சாமான்களை உருட்டும் சத்தம் கேட்டது.

கண்கள் சுருக்கி தனது அறையை பார்த்து விட்டு, தாயின் முகத்தை பார்த்த செழியன், தாயின் முகத்தில் இருந்த திருட்டு பயத்தை பார்த்து மேலும் அதிர்ந்தான். உடனே நடப்பதை சரியாக யூகிக்கவும் செய்தான்.

தாயை முறைத்தான். அவள் எச்சில் விழுங்கினாள்....




தொடரும்,........

சக்தி மீனா,......
 
Last edited:
Top