• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷27

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
அத்தியாயம் 27


விடிஞ்சா டீ தர்றதுலருந்து, தூங்குறதுக்கு முன்னாடி பால் தர்ற வரைக்கும் எனக்கான எல்லா வேலைகளையும் முகம் சுழிக்காம செய்றான்னு சொல்றத விட, ரசிச்சு செய்றான்னு தா சொல்லணும். பனியன், ஜட்டி கூட தொவைச்சு போடுறா. முடியாம படுத்துக்கிட்டா கால் பிடிச்சு விடக் கூட கௌரவம் பாக்குறதில்ல. ஆனா, என்னைய புருசனா மட்டும் ஏத்துக்க மாட்டேங்குறா. என்ன மாதிரி பொண்ணு இவ? இவ மனசுல என்ன இருக்கு? நா இருக்கேனா இல்லியா? ஒருவேளை வேற யாராவது இருக்காங்களா?”, ச்சே” என்று சொல்லி தலையை உலுப்பிக் கொண்ட துரையரசன்,

தோட்டத்தில் செடிகளுக்கு நீர் பாய்ச்சியபடி, வேலைக்காரர்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த கொடியின் மீது பார்வை பதித்த்திருந்தான். தன்னறையின் பாலகனியில் நின்று பார்த்து கொண்டிருந்தவனுக்கு கண்ணிமைக்கவும் நினைவில்லை. அவளை ஆராயும் போதெல்லாம் தலை வலிப்பது போலிருந்தது. ஒவ்வொரு நொடியும் தன் பொறுமை பறி போவதாக உணர்ந்தான்.

பற்றாக்குறைக்கு கொடியை படிக்க அனுப்ப வேண்டாம் என்று உறுதியாக சொல்லி விட்டதோடு,

பெத்த அப்பன பாக்க புடிக்காத புள்ள. புள்ளைய எட்டிப் பார்க்க கூட வராத அப்பன். என்ன குடும்பம் இது? நம்ம எனசனத்துக்க மூஞ்சில முழிக்க முடில. ஒரு வேள விருந்து கூட தர முடியாத வக்கத்த குடும்பத்துலயா, பொண்ணெடுதுருக்குறன்னு நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேக்குறாக”, என்று அவ்வப்போது சலித்துக் கொண்டிருக்கும் புவனா வேறு மண்டையை குடைந்தாள்.

இதற்கிடையில், துரையரசன் உடுக்கும் வேட்டியும் சட்டையும் கொஞ்சம் விறைப்பாக நின்று விட்டால் போதும்,

என்னண்ணே வீட்ல விசேசமுங்களா?”, என்று அவனது அரிசி மில்லிலும், சர்க்கரை ஆலையிலும் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்களும் கேட்க ஆரம்பித்து விட்டனர்" என்பது வேறு கவலையாக இருந்தது.

பெருமூச்சு விட்டான். மிருதுவான துண்டு வேட்டி[towel] ஒன்றை தோளில் போட்டுக் கொண்டு, குளியலறை நோக்கி நடந்தவனின் கண்களில் பட்டது மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள். கண்கள் சுருக்கினான்.

புத்தகங்களை எடுத்து பார்த்தான். எல்லாமே தொல்லியல் ஆராய்ச்சி பற்றிய புத்தகங்கள். புத்தகங்களை பிரித்து பார்த்தான்.

தினேஷ்”, அவனது உதடுகள் உச்சரித்தது.




குழந்தை மோனியின் முத்தங்களால் தினேஷின் முகம் முழுவதும் எச்சிலாகியிருந்தது. ஹாலில் போடபட்டிருந்த சிறிய சோஃபாவில் தினேஷை உட்கார வைத்து, கட்டிப்பிடித்து, முத்தங்கள் கொடுத்து, அவனத் காதை கடித்து, ரகளை பண்ணிக் கொண்டிருந்தாள் மோனி.

காயத்ரியால் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

போதுண்டா, வுடு”, அவன் சொல் அவளுக்கு புரிந்ததோ என்னவோ இறுதியாக ஒரு முத்தத்தை அவனது உதட்டில் பதித்து விட்டு அவனை பார்த்து சிரித்தாள். சிரிப்பை சிந்திய அவ்விரு பற்களும் மிக அழகாக தெரிந்தது.

மோனி, இங்க வா”, காயத்ரி அழைக்க, இன்னும் வேகமாக தினேஷை கட்டிக் கொண்டாள் மோனி.

என்னை விட இவரு ஒனக்கு ஒசத்தியா போயிட்டாராடி?”, சற்றே கோபம் மெருகேர கேட்டவள், மோனியின் கைப்பிடியை தினேஷின் கழுத்திலிருந்து கழற்ற முயன்றாள்.

ஹும்ம்ம்”, லேசாக சிணுங்கி தினேஷை இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்டது குழந்தை.

ஒத வாங்க போற, வாடி”, சொல்லி குழந்தையை இழுத்தாள்.

காயத்ரி”, அழைத்து அவளை பார்த்தான். சட்டென்று விலகிக் கொண்டவள் தலை குனிந்து சொன்னாள்,

இனிமே நீங்க இங்க வராதீங்க தினேஷ்”,

ஏன்?”,

ஏன்னு ஒங்களுக்கே தெரியும்”,

கொழந்த மூலமா நா ஒன்ன தப்பா மூவ் பண்றேன்னு சந்தேகப்படுறியா?”, உடைத்துக் கேட்டான்.

நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் கட்டி நின்றது.

ப்ளீஸ், ட்ரை டூ அண்டர்ஸ்டேன்ட் மை ஃபீலிங்க்ஸ் தினேஷ். எனக்கு மோனிய விட்டா யாருமில்ல”,

ஒரு நொடி மட்டும் சிந்தித்தவன் எழுந்தான்.

அம்மாட்ட போங்க செல்லம்”, குழந்தையிடம் சொன்னான்.

குழந்தை இன்னும் இறுக்கமாக அவனை பற்றியது.

கொழந்தைய நா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். நீ ஆஃபீஸ்க்கு கெளம்பு”, சொல்லி விட்டு நகர்ந்தான்.

தினேஷ்”, காயத்ரி அழைக்க திரும்பினான்.

ஒனக்கு யாருமில்லாம இருக்கலாம். மோனிக்கு நா இருக்கேன். என் மனசுல எதுவுமில்ல. ஓ மனசுல எதாது இருந்தா சொல்லு. நா வெலகி போயிர்றேன், குடும்பத்தோட”, சொன்னான். பார்த்தபடி நின்றாள்.

ஆனா அப்பொவும் மோனிக்கொண்ணுன்னா வருவேன்”, சொல்லி விட்டு நிற்காமல், குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினான்.

சோஃபாவில் அமர்ந்தவளின் கண்களை கடந்தது வெள்ளம்.

மணி, லவ் யூடா”, என்றாள் தனக்கு மட்டும் கேட்கும் படி.





ஜாதக புத்தகத்தை கீழே வைத்தார் சோதிடர்.

காவேரியும் செல்லியும் ஆர்வத்தோடு எதிரில், தரையில் அமர்ந்திருந்தனர். கதிரேசன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, வெள்ளையன் இன்னொரு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

கல்யாணி வந்தாள்.

வாடி, வந்து உக்காரு. எப்போ வர சொன்னேன். எப்போ வந்துருக்க?”, காவேரி சொல்ல, அங்கிருந்தவர்களை புரியாமல் பார்த்தாள் கல்யாணி.

நா ஃபோன்ல சொன்னேனல்ல. இவுகதே”, காவேரி சொல்லவும் கல்யாணி சிரித்து வைத்தாள். காவேரிக்கு அருகில் கல்யாணியும் உட்கார்ந்தாள்.

பத்துக்கு எட்டு பொருத்தமிருக்குது. செய்யலாம், ப்ரச்சினையில்ல. நல்லாருக்குது”, சோதிடர் சொல்ல, சிரித்தனர் வயதான பெண்கள் இருவரும்.

அப்போ தேதி குறிச்சிரலாமுங்களா?”, செல்லி கேட்டாள்.

இந்தாடி, அவசரப்படாத, சந்த்யாகிட்ட ஒரு வார்த்தை கேட்க வேணாமா?”, வெள்ளையன் சொன்னார்.

அவகிட்ட நா பேசிக்கிறேனுங்க. நீங்க தேதிய குறிங்க”, என்றாள் காவேரி.

சித்தி, சந்தியாட்ட ஒரு தடவை கேட்டுட்டு முடிவு பண்ணு”, காவேரியின் காதுக்குள் கிசு கிசுப்பாக கல்யாணி சொன்னாள்.

நல்ல எடம் புள்ள, அவகிட்ட பேசிக்கலாம்”, கல்யாணி காதுக்குள் காவேரியும் கிசு கிசுப்பாகவே சொன்னாள்.

கல்யாணி வருந்தினாள்.

நீங்க தேதி வைங்க. நாம்பேசிக்குறேன்”, காவேரி சொல்ல, சோதிடர் பஞ்சாங்கத்தை புரட்டினார்.

வர்ற சித்திரா பௌர்ணமி முடிஞ்சதும், அடுத்த நாளு நிச்சயம் பண்ணிக்கலாமுங்க. வைகாசி மொத முஹூர்த்தம் நல்லாருக்குது. அன்னைக்கே கல்யாணத்த வச்சிக்கலாமுங்க”, சொன்னார் சோதிடர். கல்யாணிக்கு வயிற்றில் பயப் பந்து உருண்டது.

சாமி தட்சணை எவ்ளோன்னு சொன்னீங்கன்னா”, பவ்யமாக காவேரி கேட்டாள்.

நா சாமியில்ல. புண்ணாக்கு யாவாரி. எங்கப்பன் சொல்லி தந்த சோசியக்கலை செத்துப் போவக்கூடாதுன்னு, இதிய செஞ்சுட்டுருக்றேன். இருவத்தியொரு ரூவா கொண்டா. ஒரு மணியானா கடைப்பையன் சாப்ட போயிருவான். சீக்ரம் போவோணும்”, சொன்ன சோதிடருக்கு அவர் கேட்ட தட்சணையை வெள்ளையன், கதிரேசன் இருவரும் நீட்டினர்.

நீ இன்னும் உரிமக்காரனாவலியல்ல”, வெள்ளையனிடம் சொன்னவர்,

நீ கொண்டா”, என்று கதிரேசன் கையிலிருந்த பணத்தை வெடுக்கென்று பிடுங்கி கொண்டார்.

எழுந்தவர்,

கல்யாணி சாயங்காலமா கடை பக்கமா வா. ஒம்பையனுக்கு வயித்தால போவுதுன்னு ரங்கன் சொன்னான். மருந்து தாரேன்”, சொல்லி விட்டு சென்றார். பெற்றவர்கள் நால்வரும் சிரிக்க, பெறாதவள் மட்டும் கலக்கத்தோடு இருந்தாள்.




காயத்ரியோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கூட விசாரிச்சிட்டேன் சார். காயத்ரி எங்கயிருக்காங்கன்னு எந்த தகவலும் கெடைக்கல. ஜெயில்ல கேசவனை இன்டெர்வியூ பண்ண வீடியோ. முருகன் அவனை அடிக்கும் போது அவன் டர்ரான வீடியோ, எல்லாம் இதுலருக்கு”, சொல்லிக் கொடுக்கும் போது சிரித்தாள் சுவாதி. வாங்கி கொண்ட செம்பனும் சிரித்தார்.

அமைதியாக அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த செழியனை பார்த்தும் ஒரு சிரிப்பினை கொடுத்தார் செம்பன். செழியன் கையாலாகாதவனாக அமர்ந்திருந்தான்.






மேனேஜருக்கு டீ குடுத்தீங்களா?”,

இதோ கொண்டு போறேம்மா”,

தனா சார் ரூமுக்கு பிசினஸ் பேச வந்துருக்கிறவங்களுக்கு காஃபியும், ஸ்னாக்ஸ்ஸும் குடுக்க சொன்னேனே. குடுத்தாச்சா?”,

எடுத்து வச்சிட்டுருக்கேம்மா”,

ஸ்டாஃப்ஸ்கு டீ டைம்ல என்ன ஸ்னாக்ஸ் குடுத்தீங்க? எந்த கடையில வாங்குனீங்க?”,

அதூஊ, வந்து,…..”, அலுவலகத்தின், தேநீர் தயாரிக்கும் சமையல் அறையில், கோபாலின் மனைவி கனகம், உடன் வேலை செய்யும் பணிப்பெண்ணை பார்த்தாள்.

அவள ஏன் பாக்குறீங்க? இதெல்லாம் ஒங்க வேலைதான? நாஞ்சொல்ற எந்த வேலையும் செய்றதில்ல. எது கேட்டாலும் பே பேன்னு முழிக்கிறது. சரி, எனக்கொரு டீ போடுங்க”, சுஹாசினி காட்டமான குரலில் தான் சொன்னாள்.

கனகம் அருகில் நின்ற ஒரு பெண்ணை பார்க்க,

நா ஒங்ககிட்ட தா சொன்னேன். போடுங்க”, அதிகாரமாக சொன்னாள் சுஹாசினி.

டீ மிஷின்ல டீத்தூளும், பால் பவுடரும் தீர்ந்து போச்சுங்க மேடம். அவிங்க புதுசா வந்துருக்றாங்கோ. அவிங்களுக்கு அதிய போட தெரியாதுங்கோ. இன்னியும் சரிய பளகல. நா வேணுமுன்னா போடட்டுமுங்களா?”, துப்புரவு மற்றும் தேனீர் தயாரிக்கும் பணியில் முதன்மை பணிப்பெண்ணான வயதான, மீனாட்சி அம்மாள் கேட்டாள்.

வேலைக்கு சேந்து முழுசா ரெண்டு நாள் முடிஞ்சி போயிருச்சு. இன்னும் ஒரு டீ போட முடியலன்னா இவுங்க இங்க வேலை செய்யவே லாயக்கில்ல”, சொன்ன சுஹாசினி,

போயி போடுங்க”, என்று கனகத்திடம் சத்தமாக சொன்னாள். கனகம் அசையாமல் நின்றாள். அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

தேநீர் தயாரிக்கும் இயந்திரத்தின் அருகில் சென்றாள். ஆனால் அதை இயக்க தெரியவில்லை.

ஒங்க புருசன் இங்கருக்குற பொம்பளைங்களலாம் கேவலப்படுத்திட்டுருந்தான். இப்போ நீங்க பிசினஸ் பேச வந்துருக்குறவங்கள சரியா கவனிக்காம இந்த கம்பனிய கேவலப்படுத்திட்டுருக்கீக. வெளங்கிரும்!!”, சுஹாசினி சொல்லி முடிக்கும் போது கனகம் அழுதே விட்டாள்.

ஹே சுஹாசினி, டீ கொண்டு வர சொல்லி எவ்ளோ நேரமாச்சு? இங்க என்ன பண்ணிட்டுருக்ற?”, கேட்டபடி வந்த சந்தியா, கனகம் அழுவதை கண்டு துணுக்குற்று நின்றாள்.

என்னாச்சு?”,

சுஹாசினி அவளுடைய பார்வையில் நடந்த சம்பவத்தை விளக்கி சொல்ல, மீனாட்சியும் கருணை கூர்ந்து தன்னுடைய பார்வையில் நடந்ததை சொன்னாள்.

என்ன நடந்திருக்கும்?" என்பது சந்தியாவுக்கு புரிந்தது.

கொஞ்சம் நகருங்கம்மா”, சொல்ல கனகம் நகர்ந்தாள்.

தேநீர் இயந்திரத்தினை திறந்து தேயிலை தூள் மற்றும் சீனியை அதற்குரிய இடத்தில் கொட்டினாள் சந்தியா.

இங்க வாங்க”, சந்தியா அழைக்க கனகம் வந்தாள்.

இதுலதா டீத்தூள போடணும். இதுல சீனிய”, சந்தியா சொல்ல, கனகம் கவனமாக கேட்க தொடங்கினாள்.

நீ ஏன் சந்த்யா இதெல்லாம் செய்ற? நீ எம்.டியோட பி.ஏ”, சுஹாசினி சொல்ல,

நீ ஏன் இதெல்லாம் செய்றன்னு எனக்கு தெரியும் சுஹாசினி”, சிறிதே சிறிது கோபமாக சந்தியா சொன்னாள்.

சுஹாசினி கோபமாக சென்று விட்டாள்.

பிறகு மீனாட்சி அம்மாளும் மற்ற பணிப்பெண்களும் டீ தயார் செய்ய, அதன் செயல்பாட்டை விளக்கினாள் சந்தியா.

இல்லீங்கம்மா, இந்த மிசின பார்த்தாலே பயமாவுதுங்க். வெலை ஒசந்த மிசினில்லீங்களா? எதாது தப்பா போயிருச்சுன்னா, மிசினு பாழா போயிருமோன்னு பயமாருக்குதுங்க்”, கனகம் சொன்னாள்.

அதெல்லாம் மிஷினுக்கு எதுவும் ஆகாது. அப்டியே ஆனாலும் சரி பண்ணிக்கலாம். இப்டியே பயந்துட்டுருந்தீங்கன்னா, எதுவுமே கத்துக்க முடியாது. புரியுதல்ல”, சந்தியா கேட்க சரியென்பதாக தலையசைத்த கனகத்தின் முகம் மலர்ந்தது.

சரி, சீக்ரம் எடுத்துட்டு வாங்க”, சொல்லி விட்டு முன்னால் நடந்த சந்தியாவை, கையில் தேநீர் கோப்பைகளுடன் பின் தொடர்ந்தாள் ஒரு பணிப்பெண்.

ஆரிது?", சந்தியாவை கை காட்டி மீனாட்சியிடம் கேட்டாள் கனகம்.

இதுதே சந்தியா", சொன்னாள் மீனாட்சி.

ஆத்தீ, பச்சை புள்ள கணங்கா பேசிட்டு போவுது. இதையா அந்த பாவி,...... அவனுக்கு குஷ்டந்தே வரும்", தன் கணவனை சாபமிட்டாள் கனகம்.

தனசேகரின் அறைக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு தேநீரும், இணை உணவும் கொடுக்கப்பட்டது.

சந்தியா கட்டடத்தின் வரைபடம் ஒன்றை வந்திருந்தவர்களுக்கு விளக்கி கொண்டிருந்தாள்.

தனாவின் அலைபேசி அழைத்தது.

ப்பா, போன விசயம் என்னாச்சு?”, தனா கேட்டான்.

ஏலே நா அம்மா பேசுறேன்”,

ம்மா”,

பேசி முடிச்சாச்சு தனா, வர்ற வைகாசில கல்யாணத்த வச்சுக்கலாமுன்னு சொல்லிட்டாக”, செல்லி அம்முனையில் சொல்ல, சிரித்த தனா, வரைபடத்தின் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்த சந்தியாவை பார்த்தான்.



ச்சே, நா போட்ட திட்டமெல்லாம் நாசமா போச்சு", தன் வீட்டு ஹாலில் கத்தினான் கோபால்.

இந்த திட்டமெல்லா வேண்டாம் சார்", வாட்ச் மேன் ஒருவன் சொன்னான்.

ஆமா, இந்த திட்டம் வேணாம். இனி திட்டத்த மாத்தோணும்", என்றான் கோபால்.

இருவரும் அதிர்ந்தனர்.

அந்த தனசேகரையும் அவளையும் சேத்தி வச்சி ஊரு கேவலமா பேசணும்ன்னு ஆசைப்பட்டேன். இனி அது நடக்க வழியில்ல. அந்த ச்சிறுக்கியுள்ள, என் முதலாளிக்கு பொஞ்சாதியா? அது நடக்கக் கூடாதுல. நிச்சயம் நடக்கதுக்கு முந்தி அவள ஊரறிஞ்ச தேவ்*யாளாக்கணும்", என்று வெறியோடு சொன்னான் கோபால்.

எப்டி சார்?", ஒருவன் கேட்டான்.

சொல்றேன். நீங்க இப்போ போங்கல. எம்பொஞ்சாதி வந்துட்டா, எல்லாங்கெட்டு போயிரும். இனி வூட்டு பக்கம் வராதீக", கோபால் சொல்ல, இருவரும் வீட்டிலிருந்து வெளியே சென்றனர். எதிரில் புத்தகப் பையை சுமந்த படி வந்தாள் கோபாலின் மூத்த மகள் மேகலா.

வாட்ச் மேன்கள் இருவரும் லேசான சிரிப்பை உதிர்த்து விட்டு செல்ல, கண்கள் சுருக்கினாள்.

யாரிவக?", தகப்பனிடம் கேட்டாள் மேகலா.

என் ஃப்ரெண்ட்ஸ்', சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டான் கோபால். சந்தேகமாக பார்த்தாள் மேகலா.




எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்”, கோபமாக சொன்னாள் சந்தியா.

பேசாமல் நின்றாள் கல்யாணி.

இந்தா,….. இம்புட்டு நாளா நீ சொல்லி நாங்க கேட்டதெல்லாம் போதும். இனி நாங்க சொல்றத நீ கேளு. ஒனக்கும் வெள்ளையன் அண்ணன் பையனுக்கும் வார சித்ரா பௌர்ணமி முடிஞ்சதும் நிச்சயம். வைகாசில கல்யாணம். இதுக்கு நீ சம்மதிக்கலன்னா, எங்கள உசுரோட பாக்க முடியாது, அம்புட்டுத்தேன்”, ஆவேசமாக சொல்லி விட்டு புழக்கடைக்கு சென்று விட்டாள் காவேரி.

மெலிந்த தேகத்துடன் சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்து வந்தார் கதிரேசன்.

நா உசுரோட இருக்குறதே மாத்திரை புண்ணியத்துலதே. ஒனக்கொரு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்கணும்னுதே உசுர புடிச்சிட்டுருக்குறேன். எப்பவும் பேசுற மாதிரி இப்பவும் பேசிப்புடாதடா”, சொல்லிக் கொண்டிருந்தவர், மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டார். வலது கையால் இடது நெஞ்சை பிடித்தார். கண்கள் சொருக சரிந்தார்.

அப்பா”, சந்தியா தகப்பனை பிடிக்க,

ஒனக்கு என்னாச்சு சித்தப்பா. ஆஸ்பத்திரிக்கு போவோமா?”, ஓடி வந்து பிடித்துக் கொண்ட, கல்யாணி கேட்டாள். கல்யாணி பேசும் குரல் கேட்டு காவேரி ஓடி வந்தாள்.

ஏனுங்க, என்னாச்சுங்க, என்னடி சொல்லி தொலச்ச பாதகத்தி?”, காவேரி மகளை திட்டி கணவனுக்காக புலம்பினாள்.

ஒண்ணுமில்ல சித்தி சித்தப்பன ஒக்கார வையி”, கல்யாணி சொல்ல, கண் சொருக நின்றவரை மூவரும் சேர்ந்து கட்டிலில் படுக்க வைத்தனர்.

படுத்துக் கொண்டவருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

ஏ, அந்த இன்ஹேலர எடு புள்ள", காவேரி சொன்னதும் ஏதோ நினைவு வந்தவளாக தன் கைப்பையை துழாவினாள் சந்தியா.. கதிரேசனுக்காக அவள் வாங்கி வைத்திருந்த மாத்திரைகளை எடுத்தாள். ஓடி வந்து காவேரி கையில் கொடுத்தாள்.

கல்யாணி இன்ஹேலரை எடுத்து தந்தாள்.

இன்ஹேலரை முக்கால் உறிஞ்சிய பிறகு, மாத்திரைகளும் கொடுக்கப்பட்டது. கதிரேசன் சற்றே ஆஸ்வாசம் கொண்டு படுத்தார்.

இந்தேரு சந்தியா, அப்பாக்கு இனிமேல் ஸ்டோக் வர்றது நல்லதில்லன்னு டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்குதல்ல!! அதிய நெனைவுல வச்சிட்டு முடிவெடு", சொல்லி முந்தானையால் கண்ணீரை துடைத்துக் கொண்டே சென்றாள் காவேரி.

சந்தியா கல்யாணியை பார்க்க, அவளோ பேச மொழியின்றி நின்றாள்.




படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த துரைக்கு, ஓவியம் வரையப்பட்ட உயரமான கண்ணாடி டம்ளரில் பால் கொடுத்தாள் கொடி. வாங்கி குடித்தான். காலி டம்ளரை திருப்பி கொடுத்தான்.

ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு டம்ளரை வாங்கி கொண்டு திரும்பியவளிடம்,

தினேஷ்க்கு கொடின்னா ரொம்ப பிடிக்குமோ", என்று கேட்டான் துரை. துணுக்குற்று திரும்பினாள் கொடி.





வித விதமான
உணர்வுகளின் பிடியில்!!
ஊசலாடும் உள்ளங்கள்!!


தொடரும்,.....



தேவரடியார் - தேவ[ர]டியா[ர்].

தேவடிகள் எனப்படும் தேவரடியார் என்னும் சொல்லே மருவி தேவ*யா என்ற சொல்லானது என்பதற்கு சான்று தேவையில்லை.

எனில் புனிதமான தேவரடியார் என்ற வார்த்தை, கெட்ட வார்த்தையான தேவ*யா என்று மாறிய வரலாற்றை அறிந்து கொள்ளத்தான் வேண்டும்.

சக்தி மீனா,......
 
Last edited:

vinodha mohan

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 29, 2023
Messages
29
Evlo varusham aanalum indha emotional blackmail matum maarala...
Pengal avanga unarvugala vida mathavanga unarvugalukaga dhan vaazha vendi iruku...
 

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
Evlo varusham aanalum indha emotional blackmail matum maarala...
Pengal avanga unarvugala vida mathavanga unarvugalukaga dhan vaazha vendi iruku...
Hmmm, intha emotional blackmailukku kaaranam kuuda society la irukra situation thaa illiyaa?! Ellaarum enkiyo etho oru situationukku adimaiyaa irukaanka. Verenna solla!! Thanks vino🤝🏻
 
Top