• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 34

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
IMG_20210622_163933.jpg


அத்தியாயம் 34

பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நம்மூரு சேரிக்கார எளந்தாரி பைய ஒருத்தன், ஆத்தா கோயிலுக்குள்ளார, ஆத்தாள கும்பிட வந்துட்டான்னு, சாமி ஒனக்குத்தே, எனக்குத்தேன்னு தர்க்கம் பண்ணி, மேல் ஆளுக கூட, நம்ம ஆளுகளும் சேர்ந்துட்டு சேரியை எரிச்சு, அந்த சனங்க கூட அடி வச்ச சம்பவம் நெனைவிருக்குதா", கல்யாணி கேட்க, காவேரி ஆமென்பதாக தலையசைத்தாள்.



அன்னைக்கு, சித்தப்பனும் கணேசனும் கூட கம்பை தூக்கிட்டு மல்லுக்கட்ட போயிட்டாக, ஞாவகொ இருக்குதல்ல?", கல்யாணி அழுகையினூடே கேட்க, காவேரி அழுகையினூடே ஆமென்று தலையாட்டினாள்.



கலவரத்துல வெட்டுக்குத்து ஆயிபோச்சுன்னு ஊர்லருக்ற பொம்பளைங்க அம்புட்டு பேரும் பதறி போயி, கலவரம் நடக்குற இடத்துக்கு ஓடுனாங்க. நீயும் ஓடுன", காவேரியை பார்த்து கல்யாணி சொன்னாள்.



நீ ஓடுறத பார்த்த சந்த்யாவும் பயந்து போயி உன் பின்னாலயே ஓடி வந்துருக்றா. அதிய நீ கவனிக்கல சித்தி. இந்த செழியன் பையன், எங்கருந்து சந்த்யாவ பாத்தாண்டு தெரீல. அவன் சந்த்யா பின்னால ஓடி வந்துருக்றான்",



ஏ சந்தியா நில்லுடி, அங்க போகாத!! அங்க போனா ஒன்னைய கொன்னுருவானுங்க", சொல்லிய படி, பதின் மூன்று வயதான சந்தியாவின் பின்னால் ஓடி வந்தான், அதே வயதை உடைய செழியன்.



அதி வேகமாக ஓடி வந்த சிறுவன் செழியன், கூட்டத்திற்கிடையே, சிறுமி சந்தியாவின் கையை பிடித்திழுத்து நிறுத்தினான்.



ஏலே, என்னைய வுடுல, எங்க அம்மா போறா, வுடு", பதறிய சந்தியாவை இறுக்கமாக பிடித்துக் கொண்டான் செழியன்.



பெண்கள் சிலரும், ஆண்கள் சிலருமாக ஓடிய அந்த கூட்டம் ஓடி மறைந்த பிறகே அவளை விட்டான்.



போல!! எல்லாம் ஒன்னாலதா!! எங்க அம்மா போயிட்டா. நாம்போயி ரங்கன் மாமன கூட்டிட்டு, அம்மாவ பாக்க போறேன்", சொல்லி விட்டு இடது புறமிருந்த தென்னந்தோப்புக்குள் இறங்கி வேகமாக நடக்க தொடங்கினாள் சிறுவன் சந்தியா.



முழங்கால் பிடித்து பெருமூச்சு விட்டான் சிறுவன் செழியன். மூச்சிறைத்து முடித்து விட்டு, செழியன், தோப்புக்குள் சென்றான். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் சந்தியாவை காணவில்லை.



சுற்றும் முற்றும் தேடியவன், அவள் ரங்கனை தேடி செல்லப் போவதாக சொன்னது நினைவுக்கு வரவே, ரங்கனின் தோட்டத்தை நோக்கி நடந்தான். வாழைத் தோப்புக்குள் நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று “ஆ” என்று அலறும் சந்தியாவின் குரல் கேட்டு திடுக்கிட்டவன், “சந்தியா” என்று சத்தமாக அழைத்தான். பதிலேதும் வராமல் போகவே,



ஏ, எப்பவும் வெளையாடுற மாதிரி வெளையாடாதடி! ஊருக்குள்ளார நெலவரம் சரியில்ல. எங்க ஒளிஞ்சுட்டுருக்க?”, சற்றே சத்தமாக கேட்டபடி அங்கங்கு ஓடி தேடி பார்த்தான். பின்னும் அமைதி நிலவவே,



நாம்போறேன் சந்த்யா”, என்றவன் ரங்கனின் தோட்டத்தின் திசையில் நடக்க தொடங்கிய சில வினாடிகளில்,



ஆஆஆ, என்னை வுடு மாமா, நா அம்மாட்ட போணும், விடு”, என்ற சந்த்யாவின் அழுகுரலோடு,



பேசாம இரு கழுத, செத்த நேரந்தே”, என்ற யாரோ ஒரு ஆணின் குரலும் கேட்க, செழியன் பயந்து விட்டான்.



சந்தியா, சந்தியா எங்கடி இருக்க”, கூக்குரலிட்ட படி கால் போன திசையில் ஓட தொடங்கினான்.



எங்கோ தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்த அவளின் அழுகுரல், அவனை உந்தி தள்ளியது. அதி வேகமாக ஓடிக் கொண்டிருந்தவன், தூரத்தில், நிறை மாத கர்ப்பிணியாக நின்று கொண்டிருந்த கல்யாணியை பார்த்ததும்,



மதனீஈஈ”, என்றழைத்த படி ஓடி வந்தான்.



கல்யாணி பதறி விசாரிக்க, செழியன் விஷயத்தை சொன்னான். அருகில் நின்று கொண்டிருந்த ரங்கனும் செழியன் கூற்றை கேட்டு அதிர்ந்தான். மூவரும் ஆளுக்கொரு திசையாக சந்தியாவை தேட தொடங்கினர்.



எங்கோ கேட்டுக் கொண்டிருந்த சந்தியாவின் குரல் மூவரையும் கிலி கொள்ள செய்தது.



பதட்டமும், பயமுமா கழிஞ்ச அந்த பொழுத நெனைச்சா இப்பவும் ஈரக்கொலை நடுங்குது”, கல்யாணி சொல்ல, காவேரி அதிர்ச்சி கலந்த பயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள். கொடியும் சுவாதியும் பயத்தில் கரைந்து நின்றனர்.



சுத்தி முத்தி தேடுறோம். புள்ளய கண்ணுல காண முடில. எங்கயோ அவ அலறுற கொரல் மட்டுங்கேக்குது. திடீர்ன்னு, புள்ள பெக்குறவ பிரசவ வலியில கத்துற மாதிரி, “வீஈஈஈழ்”ன்னு ஒரு சத்தம். நெஞ்சே அத்து விழுந்த மாதிரி இருந்துச்சு. அந்த சத்தம் வந்த தெசையில செழியன் ஓடிருக்கான். அவந்தே அந்த அக்கிரமத்த நேர்ல பார்த்தது,.... அந்த அசிங்கம் புடிச்சவெ, நம்ம புள்ள மேல படுத்து,.......



ஆஆஆ அய்யோ", தலைமுடியை பிய்த்துக் கொண்டு தரையில் சடாரென்று விழுந்து அழுதாள் காவேரி.



அய்யோ, அய்யோ, அய்யோ, மாரியாத்தா எம்புள்ள ஒன்னைய பொய்யின்னு சொன்னது நெசமா போச்சே!! ”, நெஞ்சோடு அடித்துக் கொண்டு கத்தினாள். செழியன் மடியில் தூங்கிக் கொண்டிருந்த சந்தியா, திடுக்கிட்டு அவனை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள்.



கொடியும், சுவாதியும் உடைந்து அழ, செழியன் புழக்கடை பக்கமாக திரும்பி,



ஸ்வாதி”, என்று மெல்லிய குரலில் அழைத்தான். சுவாதி திரும்பி பார்த்தாள். “வா”வென்று சைகை செய்தான்.



செழியனை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்த சந்தியாவை பார்த்த சுவாதிக்கு, காதல் வலி பெரிதென்று நினைக்க தோன்றவில்லை.



அவங்கள அமைதியா இருக்க சொல்லு, இவ முழிச்சிட்டா என்னை விடவே மாட்டா”, என்று சொன்ன செழியனை பார்க்க, சுவாதிக்கு பெருமையாக இருந்தது. சரியென்பதாக தலையை சரித்து அசைத்த சுவாதி சென்றாள்.



காவேரியின் வாயை அழுத்தி பிடித்திருந்தாள் கல்யாணி.



இம்புட்டு வருசமா நெருப்ப நெஞ்சுக்குள்ளார சுமந்து, எம்புள்ள மானத்த காப்பாத்திட்டுருக்கேன். அதிய கெடுத்து வுட்டுராத”, கல்யாணி சொல்ல, விசும்பலோடு ஒப்பாரி அலறலை நிறுத்தினாள் காவேரி.



சந்தியா தூங்குறா, கொஞ்சம் அமைதியா இருங்கம்மா”, காவேரியின் அருகில் மண் தரையில் அமர்ந்து விட்ட சுவாதி சொல்ல, கொடியும் காவேரிக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.



ஆருடி அவன்?!, பச்சப் புள்ளைய போயி..., அவனென்ன ரத்தங்குடிக்குற காட்டேரியா? ஆருடி அந்த கட்டையில போறவே?”, விசும்பலுக்கிடையே காவேரி கல்யாணியிடம் கேட்டாள்.



கட்டையில போயிட்யான். ஒங்கொழுந்தியா புருசன்னு, வூட்டுக்கு வரும் போதெல்லா கெடா சோறு ஆக்கிப் போடுவியே! அவெந்தே,...”, கல்யாணி வேண்டா வெறுப்பாக சொல்ல, நெஞ்சை பிடித்துக் கொண்டாள் காவேரி.



ஆருன்னு சொன்ன?”,



சித்தப்பனுக்க ஒண்ணுவிட்ட தங்கச்சி, அதான் அந்த ஆனை மலைக்காரிக்க புருசன்”,



காவேரி விழிகள் விரித்தாள். உள் வாங்கிய மூச்சுக் காற்று வெளிவர மறுத்தது.

அன்று காலையில் அவன் வீட்டுக்கு வந்திருந்ததும், சந்தியாவை பற்றி விசாரித்ததும், மட்டுமல்ல!! அவனது மரண சேதியை கேட்டு காவேரி அழுததும் கூட காவேரியின் நினைவை எட்டியது. உடைந்து போனாள்.



அங்குட்டு அப்டி பார்த்ததும், செழியன் அவனை நம்ம புள்ள மேலருந்து புடிச்சிழுத்து கீழ தள்ளி போட்டுருக்கான். நல்லா குடிச்சிருந்துருக்கான்,....., எந்துரிச்சு வந்தவன், சந்தியாவை தூக்க போன செழியன தூக்கி வீசிட்யான். சின்ன பையனல்ல!! அவனால அந்த மிருகத்த எதுக்க முடீல. மறுபடியும் புள்ளைகிட்ட போன நாய செழியன் கல்லால அடிச்சிருக்கான். கோவத்துல அவன் செழியன அடிச்சிருக்கான்.



செழியன், ரங்கண்ணா, ரங்கண்ணான்னு போட்ட சத்தங்கேட்டு நானும் அவுகளும் ஓடியாந்தோம். வந்து பார்த்தப்ப”, கல்யாணி சொல்லும் போது ரங்கா திரும்பி அழுதான்.



காவேரி நிமிர்ந்து கல்யாணியை பார்த்தாள்.



புள்ள பாவாடையெல்லா ரத்தம்”, கல்யாணி அழுத படியே சொன்னாள்.

காவேரி சத்தமின்றி குலுங்கி அழுதாள். கொடியும் சுவாதியும் கூட அழுதனர்.



அந்த அதிர்ச்சியில மூச்ச மேல இழுத்த புள்ள, மூச்ச விட துடிச்சிட்டு கெடந்தா. நா ஓடி போயி புள்ளைய மடியில தூக்கிட்டேன்”,



தரையில் கிடந்த சிறு செழியனை மிதித்து கொண்டிருந்த வெறியனை மிதித்து தள்ளினான் ரங்கா. அவன் தடுமாறி கீழே விழ, செழியனை தூக்கி விட்டு, சந்தியாவை பார்த்த ரங்கனுக்கும் வெறி பிடித்தது.



செழியன், சந்தியா அருகில் செல்ல, கீழே கிடந்த மிருகத்தை எழ விடாமல் மிதித்து, அவனது கழுத்தில் காலால் மிதித்து நசுக்கினான் ரங்கன்.



ஏய், சந்தியா வாய மூடு, மூச்சை இழுத்து வுடு”, செழியன் கதற,



இந்தா சத்தம் போடாத, யாராச்சும் வந்துற போறாங்க். பொம்பள புள்ள வெவகாரம்”, கல்யாணி சொன்னது பதின்மூன்று வயது செழியனுக்கு புரிந்தது.



சத்தம் போடாமல் சந்தியாவின் கன்னத்தில் தட்டிப் பார்த்தவன், ஏதோ யோசனை வந்தவனாக எழுந்து ஓடினான்.



குடியின் போதையும், உடலின் போதையும் வெறியாக ஏறி, மிருகமாக மாறி, பிள்ளைக் கறி கொண்டவனை, வெறியோடு ரங்கன் அடித்துக் கொண்டிருக்க அவன் அலறிக் கொண்டிருந்தான்.



மாமா”, கல்யாணி அழைக்க, ரங்கன் திரும்பினான்.



அவன் வாய மூடு மாமா, புள்ள கெடக்குற கெடைய யாராச்சும் பாத்ர போறாக”, அழுகையோடு கல்யாணி சொல்லும் போது, தன் சட்டையை நீரில் நனைத்து எடுத்து வந்த செழியன், அதை பிழிந்து நீரை சந்தியாவின் முகத்தில் தெளித்தான்.



ரங்கன் அலறிக் கொண்டிருந்த மிருகத்தின் கழுத்தை பிடித்து நெறிக்க, அவனது அலறல் சத்தம் அடங்கியது.



புள்ளைக்கு என்னடியாச்சு?”, ரங்கன் கேட்டான்.



தெரீல மாமா, மூச்சு விட செரமப்படுறா, பயமாருக்குது”, என்ற கல்யாணி சந்தியாவின் நெஞ்சை அழுத்தி,



மூச்சு வுடு புள்ள, மூச்சு வுடுடி”, என்று சொல்ல, ரங்கனும் சிறுமியின் அருகில் வந்தான். குழந்தையின் நெஞ்சில் கை வைத்து அழுத்தினான்.



ஹாஆஆ”, என்று பெரும் இறைச்சலோடு மூச்சு விட்டாள் சிறுமி சந்தியா.



சந்தியா”, செழியன் அழைக்க, அவனை பார்த்த சந்தியா, கல்யாணிக்குள் தன்னை ஒளித்துக் கொண்டு, அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டாள்.



சந்த்யா, நா செழியன், பாரு, நா செழியன்”,



அம்புட்டு பரிதவிப்போட கூப்பிட்டான். மாமாவும் கூப்பிட்டு பார்த்தாக!!
இல்ல,.... புள்ளை செழியனையும் மாமனையுங்கூட பார்த்து பயந்து எங்கிட்ட அப்பிக்கிருச்சு. மாமா தலையில அடிச்சுகிட்டு அழுதாக. இந்த செழியம்பையன் என்ன நெனைச்சாண்டு தெரீல,



சந்த்யா, இங்க பாரு, இங்க பாருடின்னு அவ மூஞ்சியை புடிச்சு திருப்பி, கீழ கெடந்த நாய பாக்க வச்சான். சட்டுன்னு எழுந்து போனான். அங்குட்டு கெடந்த ஒரு கருங்கல்ல தூக்கி அந்த நாயி தலையிலேயே போட்டான்”, கல்யாணி சொல்ல, பெண்கள் மூவரும் அதிர்ந்து பார்த்தனர்.



அங்குட்டே, அந்த நிமிசமே அவன் உசுரு போயிருச்சு”, கல்யாணி சொன்னாள். மூன்று பெண்களும் அதிர்ச்சியோடு கட்டிலில் அமர்ந்து, சந்தியாவின் தலை கோதிக் கொண்டிருந்த செழியனை பார்த்தனர்.



பாரு, அவஞ்செத்துட்டான், இனி அவன் உங்கிட்ட வரவே மாட்டான்”, சொன்ன பதின் மூன்று வயதே ஆன, சிறுவன் செழியன், கல்யாணிக்குள் அடங்கியிருந்த சந்தியா முன் முழங்காலிட்டு நின்றான்.



நல்லா பாரு சந்தியா, அவஞ்செத்துட்டான். நா அவனை கொன்னுட்டேன். இவன் மட்டுமில்ல, எவன் உங்கிட்ட ப்ரச்னை பண்ணாலும் அவன கொன்னுருவேன். என்னை நம்பு”, சொன்னான். கல்யாணிக்குள் விசும்பிக் கொண்டிருந்த சிறுமி சந்தியா, சிறுவன் செழியனை பாய்ந்து கட்டிக் கொண்டாள்.



அன்னையிலருந்து அவள பாதுகாத்துட்டுருக்றான்”, கல்யாணி சொன்னாள்.



கலவரத்துல சித்தப்பனுக்கும் கணேசனுக்கும் அடிபட்டுருச்சுன்னு நீ கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில கெடந்த முப்பது நாளும், ரத்தப்போக்குல கெடந்த புள்ளைய நா பாத்துட்டு கெடந்தேன்”, சொன்ன கல்யாணியின் கண்களிலும், கேட்ட பெண்களின் கண்களிலும் நீர்க்கோடுகள் காயவில்லை.



புள்ள தெம்பான பொறகும், ஸ்கூலுக்கு போமாட்டேன்னு அடம்புடிச்சிட்டு கெடந்தா, நெனைவிருக்குதல்ல?”,



காவேரி ஆமென்று தலையசைத்தாள்.



அப்போ கூட செழியந்தே தைரியஞ்சொல்லி அவள ஸ்கூலுக்கு போக சம்மதிக்க வச்சான்”, கல்யாணி சொன்னாள். காவேரி அழுதாள்.



அப்போ செத்துப் போனவன என்ன பண்ணீங்க?”, சுவாதி கேட்டாள்.



சாதி கலவரத்துல செத்து போன பொணங்ககூடால போட்டுட்டோம்”, ரங்கன் பேசினான். எல்லோரும் அவனை பார்த்தனர்.



அப்போ நடந்த கலவரத்துல சாதி வெறி புடிச்சவனுங்க நெறைய பேர வெட்டி சரிச்சவரு கருப்பசாமியண்ணே!!”, சொன்னான் ரங்கன். ஆமென்று தலையசைத்தாள் சுவாதி.



சந்தியாவையும் செழியனையும் கல்யாணி கூடால வூட்டுக்கு அனுப்பிட்டு, அந்த பொணத்த தோள்ல தூக்கிட்டு நா கலவரம் நடந்த எடத்துக்கு போனேன். ரத்த சூறாவளிக்குள்ள சிக்கி செத்துப் போன ஒடம்புகளுக்கு முன்னால, அரச மரத்தடியில, கையில ஆளுயர அருவாளோட உக்கார்ந்துருந்தாக கருப்பசாமியண்ணே!! அங்குட்டுருந்து, தூரத்துல, அவுகள அரெஸ்ட் பண்ண தைரியம் இல்லாம, அவுக பக்கத்துல போக பயந்துட்டு, போலிஸ் படைக்கு போன் பண்ணிக்கிருந்தாக போலிஸ்காரவுக. கருப்பசாமியண்ணன், என்னைய நிமிந்து பாத்தாக. நா நடந்ததெல்லா அவுககிட்ட சொன்னேன்”,



எங்கூட்டு பொண்டு புள்ளைக மேல கை வச்சா நாம்பொறந்த எனத்த அவமானப் படுத்தீர்லாமாம். அப்டியொரு மூட நம்பிக்கையில எங்க பொண்ணுங்க மேல கை வைக்க வந்த அம்புட்டு பையலுகளையும் வெட்டி சரிச்சுப்புட்டேன். நீ ஒன்ட்ற புள்ளைய தொட்டவன கொன்னு கொண்டாந்துருக்க. இந்த பொணத்துக்காக நா தனியாவா தூக்குல தொங்க போறேன். இங்ஙன போட்டுட்டு போ”, அப்டின்னு சொன்னாக. அந்த பொணத்த கருப்பசாமியண்ணே காலடியில போட்டுட்டு வந்துட்டேன்.



அந்த கடனுக்குத்தே இன்னைக்கும் கருப்பசாமியண்ணே பையலுகளுக்கு மாமா சந்தையில சரக்கு எறக்கி குடுக்குறாக”, கல்யாணி சொன்னாள்.



சில நொடிகள் அமைதி நிலவியது.



சாதி சாதின்னு அது பின்னால ஓடி, அவனவன் தான் வூட்டு கொலக்கொடிய காப்பாத்தாம விட்டுர்றானுங்க. என்னாத்துக்கு,..... சாதி, சாதின்னு,.....”, அழுது ஓய்ந்து புலம்பினாள் கல்யாணி.









இன்னும் சரியாக விடியாத அதிகாலை விடியலில், ஆள் அரவமில்லா மண் சாலையில், பனிக் குவியலுக்குள், குலுங்கி குலுங்கி வந்து கொண்டிருந்தது மதிவாணனின் கார்.



சரியான நேரத்துல அம்புட்டு பையலுகளும் வுட்டுட்டு ஓடிட்டானுங்க். வெளங்காதவனுங்க். நானே கார ஓட்டிட்டு வர வேண்டியதாருக்குது”, சொல்லிக் கொண்டே தானே காரை இயக்கி வந்தார் மதிவாணன். பனிக்குள் காரை வழிமறித்து நின்றனர் நால்வர்.



ஒருவன் கையில் இரும்புத் தடி ஒன்றை வைத்திருந்தான். அடுத்தவன் கையில் மரக்கட்டை ஒன்றை வைத்திருந்தான். அடுத்ததாக நிற்பவன், அரிவாளும், அதற்கு அடுத்து நிற்பவன் இரும்புத் தடியும் வைத்திருந்தான்.



எறங்குயா”, ஒருவன் இரும்புத்தடியை காட்டி மிரட்ட, மதிவாணன் காரிலிருந்து இறங்கினார்.



யார்ல நீங்கலாம்? நா யாருண்டு தெரியாம வந்துருக்கீகன்னு நினைக்கிறேன். நா இந்த ஊரு பிரசிடன்ட்”, சொல்லி முடிக்கும் போது, அவரது வாயிலேயே இரும்புத் தடி கொண்டு போட்டான் ஒருவன். பற்களும் மதிவாணனுடன் கீழே சிதறியது.



சாலையோரக் கடை ஆயாவின் பண்டத்தின் மீது ஈக்கள் இடைவெளியின்றி மொய்ப்பதை போல் நான்கு வாலிபர்களும் மதிவாணன் மீது பாய்ந்தனர்.







சந்த்யாவின் தலையை தலையணை மீது வைத்து, போர்வை போர்த்தி விட்டு விலகினான் செழியன். திரும்பிய செழியனை கைக்கூப்பி வணங்கிய காவேரி அவனது கால் நோக்கி குனிய,



அய்யோ அத்த”, பிடித்துக் கொண்டான் செழியன்.



புடிங்க மதனி”, செழியன் சொல்ல, கல்யாணி காவேரியை பிடித்துக் கொண்டாள்.



தூங்கி முழிச்சா சரியாயிருவா!! அதுக்கு பெறகு என்னைய எதுக்குல வந்த?ன்னு கேப்பா”, சொல்லி சிரித்தான் செழியன்.



காவேரி மகளை பார்த்தாள்.



நேத்து ராத்திரி நடந்த சம்பவங்களையெல்லாம், எதை எதை எந்த செக்ஷன்ல போட்டுருக்கானுங்கன்னு தெரீல. நாம்போயி பாக்றேன். பொறவால வாறேன்”, காவேரியிடம் செழியன் சொல்ல, சரியென்பதாக தலையசைத்தாள் காவேரி. செழியனுடன் சுவாதியும் வழக்குகளை எதிர்கொள்ள சென்று விட, கொடி சந்தியாவின் அருகில் அமர்ந்தாள்.



நீ சாமி ரங்கா”, சொல்லி ரங்கன் காலில் விழ இருந்த காவேரியை பிடித்துக் கொண்ட ரங்கன்,



இந்தா அத்த, எங்களுக்கு பொட்டப்புள்ள இல்லண்டு நாங்க நெனைச்சதே இல்ல. இப்டியெல்லா பண்ணிக்கிருக்காதீக!!” என்றான். காவேரியை ஆதரவாக தாங்கிக் கொண்டாள் கல்யாணி.





காவல் நிலையத்துக்குள் வந்தனர் செழியனும், சுவாதியும். காவல் நிலையத்தின் ஓர் மூலையில் சில பெண்கள் அமர்ந்திருந்த பெஞ்சில், ஒரு ஓரமாக, தலை குனிந்து அமர்ந்திருந்த பாண்டியனை பார்த்தான் செழியன்.



அவரருகில் வர பயந்தபடி சற்று தொலைவில், உள்ளாடை மட்டும் அணிந்த படி, குத்த வைத்து உட்கார்ந்திருந்த சிலர், செழியனையும் பாண்டியனையும் கைக்காட்டி ஏதோ பேசிக் கொண்டனர்.

என்னம்மா, இருநூறு ரூவா குடுக்குற!! ஐநூறு எடு", காவல் நிலையத்தின், வாசலில் ஒரு பெண்ணிடம் கேட்டார் கான்ஸ்டபிள். அவர்களை கடந்து காவல் நிலையத்துக்குள் வந்த துரையுடன், வழக்கறிஞர் ஒருவரும் வந்தார்.







தொடரும்,……..
 
Last edited:
  • Like
Reactions: Maheswari

vinodha mohan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 29, 2023
29
20
3
Plano , tx
எனக்கு என்ன எழுதன்னு தெரியல மீனா...
கண்ணெல்லாம் கலங்கிருச்சு...
நான் வாழ்கைல வெறுக்கும் முதல் செயல் இந்த வன்கொடுமை....
தப்பா பார்த்தாலே கோவம் வரும் எனக்கு....
ஆனால்... என்ன செய்ய‌..
சொந்தம்னு சொல்லிட்டு உள்ள வர சில நாய்கள் இப்படி செய்யுது....
இது என்னன்னு பல பேருக்கு புரியாது....
இப்படியெல்லாமா சொந்தங்கள் இருக்கும்..‌‌
கதைக்காக எழுதுவாங்கன்னு நினைக்க வேண்டாம்....

நிஜத்தில்... அத்தனை மிருகங்களும் சொந்தம் என்னும் போர்வைல சுத்துது‌....
சொந்தம் மட்டுமில்ல...
அக்கம்பக்கும்னு‌ எல்லா இடத்திலும் இருக்கு....
நம்ம நல்லவன்னு நினைக்குறவன் பாதிக்கு மேல இப்படித்தான்...
நான் கண்ணால பார்த்த உண்மை‌ இது....


சூப்பர் மீனா!!!!!
ஆனால்... இன்னைக்கே நீ என்னைய அழ வச்சுட்ட!!! ❤️
 

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
எனக்கு என்ன எழுதன்னு தெரியல மீனா...
கண்ணெல்லாம் கலங்கிருச்சு...
நான் வாழ்கைல வெறுக்கும் முதல் செயல் இந்த வன்கொடுமை....
தப்பா பார்த்தாலே கோவம் வரும் எனக்கு....
ஆனால்... என்ன செய்ய‌..
சொந்தம்னு சொல்லிட்டு உள்ள வர சில நாய்கள் இப்படி செய்யுது....
இது என்னன்னு பல பேருக்கு புரியாது....
இப்படியெல்லாமா சொந்தங்கள் இருக்கும்..‌‌
கதைக்காக எழுதுவாங்கன்னு நினைக்க வேண்டாம்....

நிஜத்தில்... அத்தனை மிருகங்களும் சொந்தம் என்னும் போர்வைல சுத்துது‌....
சொந்தம் மட்டுமில்ல...
அக்கம்பக்கும்னு‌ எல்லா இடத்திலும் இருக்கு....
நம்ம நல்லவன்னு நினைக்குறவன் பாதிக்கு மேல இப்படித்தான்...
நான் கண்ணால பார்த்த உண்மை‌ இது....


சூப்பர் மீனா!!!!!
ஆனால்... இன்னைக்கே நீ என்னைய அழ வச்சுட்ட!!! ❤️
hmm, சிறுமி, சிறுவர் வன் கொடுமை மட்டுமல்ல! இங்க எடுத்து பேச தயக்கம் கொள்ளும், பயப்படும் கன்டென்ட் நிறைய இருக்கு. படிச்சு தெரிஞ்சுக்கும் போது நானும் அழுறேன், சில சமயங்கள்ல பயப்படுறேன். ஆனா, இதெல்லாம் செய்ய பயப்படாதவன்லாம் நாட்ல தலை நிமிர்ந்து சுத்தும் போது, எழுதவும் பேசவும் நாம ஏன் பயப்படணும்னு நினைச்சப்ப,...... எழுத முடிவு பண்ணேன். உன்னோட தொடர் ஆதரவுக்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள்....