• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 37

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
Screenshot_20230721_230818.jpg


அத்தியாயம் 37



திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் ரயில் நின்றபோது சாரதி ரயில் பெட்டியில் ஏறினான்.



“கேஸ் என்னாச்சுல?”, செழியன் சாரதியிடம் கேட்டான்.



“செத்தவன் ஒரு ப்ரொஃபெஷனல் கில்லர்னு ப்ரூஃப் பண்ணியாச்சு. செம்பன் சார் சேஃப்”, என்றான் சாரதி. செழியன் சிரித்தான்.



துரையும் கொடியும் அழுத்தத்தோடு இருந்த போதிலும் துரை, சாரதியை நலம் விசாரித்துக் கொண்டான். கொடி சிரிக்க மறந்த பொம்மையாக இருந்தாள். சந்தியாவும் சாரதியுடன் இயல்பாக பேசிக் கொண்டாள்.



கவினும், கல்யாணியும் ரயில் நிலையத்தை ஏதோ போல் அதிசயித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.



“யக்கோவ்,.. ஜாலிதே, சந்தியா சாக்குல பூனேய சுத்திப்பாக்க போற” சாரதி கல்யாணியை சீண்டினான்.



“சாலியா?”, கேட்டு முறைப்போடு அவனை மேலிருந்து கீழாக பார்த்த கல்யாணி,



“பொச்சுல மொளகாப்பொடிய தேச்சுப்போடுவேனாமா, சாலி கேக்குதாக்கு சாலீ?”, என்றாள்.



“ஆத்தீ”, சாரதி அதை பொத்திக் கொள்ள, சந்தியாவும் கொடியும் தன்னிலை மறந்து வாய் மூடி சிரித்தனர். முழுதாக இரண்டு நாட்கள் பயணம், பிரயாணிகள் சோர்வாகியிருந்தனர்.



ஐந்தாறு வாரங்களுக்கு பிறகு, தினேஷ் வீட்டுக்கு குழந்தையுடன் வந்த காயத்ரி வாசலிலேயே நின்று விட்டாள். குளித்த தலையை துவட்டியபடியே வந்த தினேஷ் அவளை பார்த்து சிரித்தான். காயத்ரிக்கு பேச்சு வரவில்லை.



கவனித்தாலும் கவனிக்காதவர் போல் செய்தித்தாள்களை புரட்டினார் தேவேந்திரன்.



அடுப்பங்கரையிலிருந்து வந்த கமலி, “அண்ணி வாங்க”, என்றபடி மோனியை வாங்கிக் கொள்ள, அண்ணி என்ற அழைப்பு அவளுக்கு புதிதாக இருந்தது. பேச்சுக்குரல் கேட்டு, லட்சுமி வெளியே வந்தாள். அவளை பார்த்ததும் காயத்ரி முகத்தில் பயம் எட்டிப் பார்த்தது.



“வா தாயி”, லட்சுமி அழைத்தாள். வந்தாள்.



“நானே ஒன்னைய தேடி வரோணும்னுதே நெனைச்சிகிட்டு கெடந்தேன். பொசுக்குன்னு எதியாச்சும் சொல்லிப்போடுவியோன்னு பயம், அதேன்”, வெள்ளந்தியாக தயங்கினாள் லட்சுமி. காயத்ரி பார்த்தாள்.



“எங்கயனும் அந்த காலத்துல, திண்ணைப்பள்ளிக்கூடம் வச்சு புள்ளைகளுக்கு எழுதப்படிக்க சொல்லிக்குடுத்த பண்டிதருதே. ஆரையும் பொசுக்குன்னு பேசிரப்புடாதுன்னு சொல்வாக. எதோ மெதப்புல பேசிப்புட்டேன். மனசுல வச்சிக்கிராம வூட்டுக்கு வர போவ இராத்தா”,



“இல்லீங்கம்மா, நா எதும் மனசுல வச்சுக்கல. இங்க வர நேரங்கெடைக்கல, அதான்”, காய்த்ரி சமாளித்தாள்.



ஆத்தீ, எந்தாத்தண்டி வாசப்படி”, வாசலில் குரல் கேட்டு திரும்பினர். கல்யாணி கவினுடன் வாசற்படியில் ஏறினாள்.



“கல்யாணியக்காம்மா”, கமலிக்கு உற்சாகம் பிறந்தது. கல்யாணியை பார்த்ததும் அரும்பிய லட்சுமியின் சிரிப்பு, கொடியை பார்த்ததும் உதிர்ந்தது. செழியனையும் சாரதியையும் கவனிக்க மறந்து தினேஷ் கொடியை பார்த்தான். துரை எதற்கும் தயாராக இருந்தான். சந்தியா நிலைமை உணர்ந்து அமைதியாகி விட்டாள்.



“இந்தா எம்பூட்டு தூரத்துலருந்து மாஞ்சி ஓஞ்சி வந்துருக்றோம். உள்ள வான்னு கூப்ட மாட்டீகளாக்கு?”, கல்யாணி கேட்க,



“கூப்ட்டாதா வரோணுமாக்கு? உள்ளார வாங்க”, நிலைமை புரிந்து சொன்னார் தேவேந்திரன்.



லட்சுமி வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் மராத்தியில் பேசிக் கொண்டனர்.



“ஏண்டி ஒனக்கு எதாச்சும் இருக்குதா? அந்த புள்ளைய என்னாத்துக்குடி இங்குட்டு கூட்டியாந்த?”, அடுப்பங்கரையில் குசுகுசுப்பாக கேட்டாள் லட்சுமி.



“இது அவ வாழ்க்கை ஆயா”,



“லூசு மாதிரி பேசாத புள்ள! அவளுக்கு கண்ணாளமாயிருச்சு”,



“மனசுல ஒருத்தன், புருசனா ஒருத்தன், அவ நெலமைய நெனைச்சு பாராயா. பாவம்!”,



“அதுக்காக, அவள எம்புள்ளைக்கு கூட்டிக்,….”, லட்சுமி முடிக்கும் முன்,



“வார்த்தைய உடாத ஆயா. கொடி அப்டியாப்பட்ட புள்ள இல்ல. எங்களுக்கும் பொறுப்பிருக்குது. கொடிய அவ புருசந்தே கூட்டியாந்துருக்கான், மறந்துராத”, என்றாள் கல்யாணி. பேச்சு சமையல் கட்டுக்குள் கிசுகிசுப்பாக நடந்தாலும், ஹாலுக்கு கேட்டு விடும் தூரம் தான். ஹாலில் உட்கார்ந்திருக்கும் கொடி காதிலும் விழுந்தது. அவள் அதிரவில்லை. ஒரு தீர்மானத்துடன் வந்திருந்தாள். காயத்ரி கொடியை பார்த்து சிரித்தாள். கொடியும் சிரித்தாள். கமலியும் சந்தியாவும் மோனி மீது கவனமாக இருந்தனர்.



பூனேவின் ஒரு கடற்கரையில்,



“என்ன சார் இது? நீங்க மெச்சூர்டான ஆளு. இங்க ஏன் கொடிய கூட்டிட்டு வந்தீங்க?”, துரையிடம் தினேஷ் அங்கலாய்ப்பாக கேட்டான்.



“நீங்களும் மெச்சூர்டான ஆளு. நீங்க இப்டி கேக்கறதுல அர்த்தமிருக்குதா?”, துரை பதிலுக்கு கேட்டான்.



செழியனும் சாரதியும் பேசவில்லை.



“ஒங்களயெல்லாம் பார்க்க பூரிப்பா இருக்குது சாமி. நா ஒண்ணு சொல்லலாமாய்யா?”, தேவேந்திரன் கேட்டார்.



தினேஷும் துரையும் பார்த்தனர்.



“ஒண்ணுக்கொண்ணு புரிஞ்சிகிட்டு, ஒருத்தர் ஒணச்சைக்கு ஒருத்தர் மருவாதி குடுத்து நடந்துக்குறீக. சாதி, மசுருன்னு பாக்காம ஒண்ணுமண்ணா பேசிக்கிறீக. பெருமையாருக்குது. இது மனசு சம்மந்தப்பட்ட பெரச்சன. இதிய சம்மந்தப்பட்ட பொண்ணு இல்லாம பேசுறதே தப்பு காரியோ”, என்றார் தேவேந்திரன்.



இளைஞர்கள் நால்வரும் பேசவில்லை.



“வூட்டுக்கு போயி பேசிக்கிறலாம்”,



கிளம்பி விட்டனர்.



வீட்டில் இருப்பதை வைத்து லட்சுமி, பெண்களின் உதவியோடு சமைத்திருந்தாள். லட்சுமிக்கு கொடியின் முகத்தை பார்க்கத்தான் சங்கடமாக இருந்தது. கொடிக்கும் அதே சங்கடமிருந்தது. மற்றபடி விசனமேதுமில்லை. ஆண்கள் வீட்டுக்கு வந்த பிறகு, வீட்டில் இடம் போதாது என்ற நிலை தான்.



“இந்தேராத்தா, இது ஒன்ட்ற வாழ்க்கை. ரோசிச்சி சொல்லோணும். ஒன்ட்ற ஒணச்சைக்கு அல்லாரும் மதிப்பு குடுப்பாங்கோ”, தேவேந்திரன் கொடியிடம் சொல்ல,



“என்னயா பேசிக்கிருக்க? அந்த புள்ளைக்குன்னு ஒரு பொழப்பாயி போச்சுதல்ல?. அதிய கெடுக்குற மாதிரி பேசிக்கிருக்க! ஒனக்கு கிறுக்கிறுக்கு புடிச்சு போச்சா?”, லட்சுமி கணவனை கண்டித்தாள்.



“பயப்படாதீகம்மா, நானொங்க வூட்டுக்கு மருமொவளாவோணும்ன்னு வர்லீங்க்”, கொடி சொல்ல, துரை பார்த்தான். கொடி தினேஷை பார்த்தாள்.



“இவுகள தூண்ல கட்டி வச்சி, ரத்தமொழுக, அடிக்கிறாப்ல ஒரு வீடியோலதே, இவுகள கடைசியா பார்த்தேன். இவுக சௌக்கியமாருக்றாகளான்னு ஒரு தடவ பாத்துப்போடணும்னு இருந்துச்சு. அதேன், தினேஷ பாக்க போவலாமுன்னு எங்கூட்டுக்காரவுக சொன்னதுக்கு நா மறுப்பேதும் சொல்லாம வந்துட்டேனுங்க். இப்போ நிம்மதியாருக்குதுங்க்”, தினைஷை பார்த்தபடியே சொன்னாள். அவனுக்கு அவளை புரிந்தது. லேசாக சிரித்தான். அவளும் சிரித்தாள்.



“எங்கூட்டுக்காரவுக”, இந்த சொல் துரைக்கானது. அவனுக்கும் புரிந்தது. கொடி லட்சுமியை பார்த்தாள்.



“தப்புங்க்ளா? நானொங்க வூட்டுக்கெல்லா வரக்கூடாதுங்க்ளா?”, லட்சுமியிடம் கேட்டாள். லட்சுமி நெகிழ்ந்து போனாள். துரையும்தான்!



வலியை புரிந்து கொண்ட காயத்ரி கொடியின் தோள் தொட்டாள். கொடி கண்ணீரினூடே சிரித்தாள்.

"என்னாலதே சொந்த ஊர வுட்டுபோட்டு, நீங்க குடும்பமா இங்க வந்து வெசனப்பட்டு கெடக்கீக. இனி அதிக்கு அவசியமில்ல, நம்மூருக்கே வந்துருங்கன்னு சொல்லோணும்ன்னுதே வந்தேன். தப்புங்க்ளா?", கொடி லட்சுமியிடம் கேட்டாள். லட்சுமி உறைந்தே போனாள்.

வீடு பேச்சொலியால் நிரம்பியது. தினேஷும் கொடியும் இயல்பாக பேசுவது, அதுவும் துரை இருக்கும் போதே நிகழ்வது, புதுமையாக இருந்தாலும், எல்லோர் கண்ணுக்கும் ஆரோக்கியமாக தெரிந்தது.



சாதீயத்தை நசுக்க இந்த ஆரோக்கியமான நட்பை விடவும், பெரிய ஆயுதம் வேண்டுமா?



வீட்டில் இடம் போதாமல் போனதால், ஆண்கள், குடியிருப்பின் மொட்டை மாடியில், குடியுடன் குடியேறினர். இன்று இரவு காயத்ரியையும் தினேஷ் வீட்டிலேயே படுக்க சொல்லி விட்டாள் லட்சுமி. மறுக்க முடியவில்லை. வீட்டில் படுக்கை போட்டு படுத்துக் கொண்ட, பெண்களுக்கு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள ஊர்க்கதைகள் நிறைய இருந்தது. இரவின் வெகுநேரம் வரை, பேசி பேசி, சோர்ந்து உறங்கி போயினர்.



அடுத்த நாள் காலையில்,



போன மாதம்தான் டியூ போட்டு தினேஷ் பைக் வாங்கியிருந்தான். அந்த பைக்கை இரவல் வாங்கிக்கொண்டு, சந்தியாவை கட்டாயப்படுத்தி வெளியே அழைத்து சென்றான் செழியன். கல்யாணி விவரமறிந்து தடை சொல்லவில்லை. வந்ததே, அதற்காகத்தானே என்பது போல் இருந்து கொண்டாள்.



“இந்தூர்ல நமக்கு ஆரையுந்தெரியாது. வகதொக தெரியாம வழி மாறி போவப்போறோம்”, பைக்கில் பின்னால் உட்கார்ந்திருந்த சந்தியா கேட்டாள்.



“ஒனக்குத்தே ஆரையுந்தெரியாது. அய்யாவுக்கு அல்லா எடத்துலயும் ஆளுருக்குறாக”, என்ற செழியன் பைக்கை அந்த தெருமுனையில் நிறுத்தினான். ஷாப்பிங்க் மால், தியேட்டர், பீச், ரெஸ்டாரண்ட் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருந்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. இரண்டு மூன்று முடுக்குகள் பிரிந்து செல்லும் முச்சந்து அது.



“எறங்கு”, என்றான். இறங்கினாள்.



“இது என்ன எடம்? இங்க எதுக்கு கூட்டியாந்துருக்க?”,



“இங்க என் ஃப்ரெண்ட் ஒருத்தங்க இருக்காங்க. ஒன்னைய பாக்கணும்ன்னாங்க. அதுக்குத்தே”, சொல்லி அவளது கையை பிடித்தான். அவள் பின்னால் நடந்தாள்.



ஒரு முடுக்குக்குள் சென்றான். தீப்பெட்டிகளை ஒழுங்கில்லாமல் அடுக்கி வைத்தாற்போல், சிறு சிறு வீடுகள். எல்லா வீட்டு வாசலிலும் பெண்கள் இருந்தனர். சேலை கட்டியிருக்கும் விதம் வடநாட்டினருடையதாக இருந்தது. ஹிந்தி டப்பிங்க் சீரியல்களில், நாயகிகள் உடுத்திருந்த சைலைக்கட்டு போலிருந்தது.



ஒரு வீட்டு வாசலில் ஒரு பெண் சிறு பெண்ணொருத்திக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னொரு வீட்டு வாசலில் ஒருத்தி பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள். இன்னொருத்தி, துணி துவைத்து, வீட்டின் முன்னிருந்த கிரில் தடுப்பில், அவைகளை தொங்க விட்டாள்.



அவர்கள் கடந்து செல்லும் போது ஒரு வீட்டின் கதவு படாரென்று திறந்து கொண்டது. அந்த பெண்ணின் கையில் பணத்தை கொடுத்து விட்டு, ஒருவன் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தான். அவள் தன் மாராப்பை ஒதுக்கி விட்டுக் கொண்டாள். அவர்களை பார்க்கும் போது, கணவன் மனைவியாக இருக்கலாம் என்று தோன்றியது. இன்னும் சில தீப்பெட்டி வீடுகளும், பெண்களும் கடந்த பிறகு, அவனை பார்த்து கையசைத்தான் செழியன்.



“இதாண்டா வீடு, நா எல்லாம் பேசிட்டேன். நீ பாத்துட்டு வா, நா வெளிய வெயிட் பண்றேன்”, என்றான் நண்பன்.



“தமிழ் பேசுவாங்கல்ல”, செழியன் கேட்டான்.



“ம்ம், பேசுவாங்க”,



“யார் செழியா?”, ஊடாலே கேட்டாள் சந்தியா.



“சொல்றேன், வா”, சொல்லி அடுத்த வீட்டு வாசலுக்கு அழைத்து சென்றான் செழியன். நண்பன் அவர்களை கடந்து வந்து,



“பாபீ”, என்று சத்தமாக அழைத்தான். வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண்மணி வந்தாள். முப்பது வயதுக்கு மேலிருக்கலாம்.



“இவங்கோ தா, நீ சொன்னவங்களா?”, அவள் நண்பனிடம் கேட்டாள்.



“ஆமா பாபி, நம்ம ஃப்ரெண்டு, பாத்துக்கோ”, என்றான்.



“அரே, ஏன் அங்க நிக்குறீங்கோ, உள்ள வாங்க கண்ணுங்களா”, கனிவாக அழைத்தாள்.



“யாரு செழியா இவங்க? இங்க ஏன் கூட்டிட்டு வந்த?”, சந்தியா செழியனின் காதுக்குள் குசுகுசுத்தாள். அவனது கையை இறுக்கமாக பிடித்தாள். அவளது பயத்தை அவன் உணர்ந்தான்.



“நம்ம ஃப்ரெண்டு தா, பயப்படாம வா”, சொல்லி அழைத்து சென்றான்.



“உக்காருங்க”, ஒரு பதின் பருவ சிறு பெண் பாய் ஒன்றை விரித்தாள். செழியன் அதில் அமர, அவனை ஒட்டி அமர்ந்து கொண்டாள் சந்தியா.



“இது தா தம்பி சொன்ன பொண்ணா?”, கேட்டபடி வந்த பெண்மணி,



“கீது, சிங்க் கடையில ரெண்டு ஃப்ரூட்டி வாங்கிட்டு வா. ஓடு”, என்று சிறு பெண்ணை விரட்டினாள். அவள் ஆர்வமுடன் ஓடினாள். சந்தியா திருதிருவென விழித்தாள்.



“அதெல்லா எதுக்குங்க, வேணாம்”, செழியனிடமும் சங்கோஜம் இருந்ததை அந்த பெண்ணால் உணர முடிந்தது. சிரித்தபடி அவர்களுக்கு எதிரில் அமர்ந்தாள். அவள் சந்தியாவையே பார்த்தாள்.



“இவதா, நா மேரேஜ் பண்ணிக்க போற பொண்ணு”,



“புரியுது தம்பி”, என்றவள் சந்தியாவை பார்த்தாள்.



“நா யாருன்னு தெரியுமா?”, அவள் கேட்டாள். தெரியாது என்பதாக தலையசைத்தாள் சந்தியா.



“இந்த ஏரியாவ பத்தி என்ன நினைக்கிற?”,



சந்தியா செழியனை பார்த்தாள்.



“சொல்லு, நானிருக்கனல்ல? என்த்துக்கு மெரளுற?”, என்றான் செழியன்.



“ஏதோ, குடியானவங்க குடியிருக்ற ஒண்டிக் குடித்தனமாட்டமிருக்குது. பார்க்றதுக்கு எல்லாரும் ஏழைங்களா இருக்றாங்க”, என்றாள் சந்தியா.



“இங்கருக்ற பெரும்பாலான பொண்ணுங்க, செக்ஸ் வொர்க்கர்ஸ். நானும்!”, அந்த பெண் சொன்னாள். செழியனை பிடித்திருந்த பிடியை இறுக்கினாள் சந்தியா. அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான் செழியன்.



தொடரும்,……

சக்தி மீனா.
 
  • Like
Reactions: Maheswari