அத்தியாயம் 38
“எங்கப்பன் ஒரு முழு நேர குடிகாரன். கூலிக்கு மூட்டை தூக்குறவன் குடிக்க ஃபாரீன் சரக்கும், ரம்மும் கிடைக்குமா? பட்டச்சாராயத்த குடிச்சு குடிச்சு ஈரலழுவி போச்சு. நாம்பொறந்த அன்னைக்கு எங்கப்பா செத்து போயிட்டான். அதனால ராசியில்லாத என்னை எங்கம்மா தூக்கி சாக்கடையில போடல, வளத்தா. கூலிக்கு சித்தாள் வேலைக்கும், வீட்டு வேலைக்கும் போவா. பல நாள் பட்டினிதா. ஒரு நாள் எங்க அம்மாகூட பொறந்த தாய்மாமன் ஒருத்தன் வீட்டுக்கு வந்துருந்தான். என் வீட்டுக்கு அனுப்புக்கா, பசியில்லாம புள்ளைய நா வளக்குறேன்னு எங்கம்மாகிட்ட சொல்லி, என்னை அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனான். பதினெட்டு மணி நேரம் மாடா வேலை செஞ்சா, மூணு வேள பழைய சோறு போடுவான். அம்மாவுக்கு சாப்பாட்டுக்கும் கொஞ்சமா பணங்குடுப்பான். எனக்கு பதினாலு வயசிருக்றப்ப, எங்கம்மாக்கு ஒடம்புக்கு முடியாம போச்சு. எனக்கு கூலியா கெடைக்கிற பழைய சோத்த வச்சு, நா எப்டி எங்கம்மாவ காப்பாத்துறது? எனக்கு தெரிஞ்ச ஒரு பீடாக்கடைக்காரங்கிட்ட, எனக்கொரு வேலை வாங்கி குடு பையான்னு கேட்டேன். அவன் ஒரு வீட்ல வேலை வாங்கி குடுத்தான். அந்த வீட்ல அவங்க ஒயிஃப், தங்கச்சி, அக்கா, சித்தின்னு ஏழெட்டு பொம்பளைங்க. என் மொதலாளியும் இன்னொரு வயசானவனுந்தா ஆம்பளைங்க. வீடு தொடைக்க, சமைக்க, பாத்திரங்கழுவன்னு எனக்கு வேலையிருக்கும். செல நாட்கள்ல ராத்திரி தங்கியிருந்து வேலை செய்ய சொல்லுவாங்க. அப்டி நா ராத்ரி வேலை செய்யும் போதெல்லாம், அங்க நிறைய ஆட்கள் வருவாங்க. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இருக்கும். நா ஏதோ விசேஷம்னு நினைச்சுக்குவேன். நாள் போக போகதா தெரிஞ்சுது, ராத்திரில அங்க நடக்குறது விபச்சாரம்னு”, அவள் சொல்ல, சந்தியா விழிகள் விரித்தாள்.
“தெரிஞ்சு என்ன செய்ய? அம்மாவுக்கு மருந்து செலவு, சாப்பாட்டு செலவு. இருக்ற வேலைய விட்டா, வேற வேலை தேட தெரியாது, யார கேக்குறது. பீடாக்கார பையாகிட்ட விசயத்த சொன்னேன். அங்க என்ன நடந்தா ஒனக்கென்ன? நீ செய்றது வீட்டு வேலை! செஞ்சுட்டு காச வாங்கிட்டு போன்னு சொன்னான். எனக்கும் அதுதா சரின்னு பட்டுது. அங்கியே வேலை செஞ்சேன். ஒருநாள் அம்மாக்கு ரொம்ப சீரிய்ஸாயிருச்சு. ரத்தம் ரத்தமா கக்க ஆரம்பிச்சுட்டா. ஆஸ்பத்திரில சேத்தேன். டாக்டர் செவென்டி தவுசண்ட் இருந்தாதா ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க முடியும்னு சொன்னாரு. நா வேற எங்க போவேன்? மொதலாளிகிட்ட போய் பணம் கேட்டேன். நா பணம் குடுத்தா எப்டி திருப்பி குடுப்பன்னு கேட்டாரு. திருப்பிக் குடுக்க வழியும் சொல்லி தந்தாரு”, அவள் நிறுத்தினாள். சந்தியா திக் திக் இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கு இந்த ஒலகத்துல அம்மாவ தவிர யாருமில்ல. அவள காப்பாத்த என்னை அடமானம் வச்சிட்டேன். அம்மா அப்போதைக்கு நல்லாயிருந்தா. மொதலாளி தந்த கடன் தீர்ற வரை, கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் அந்த வீட்ல, நய்! அது விடுதி, விபச்சார விடுதி. அஞ்சு வருசத்துக்கப்றம், எந்த மாக்கீலியே கடன் வாங்கினேனோ, அந்த அம்மாவே செத்து போயி முழுசா ஒரு வருசமாயிருச்சு, இன்னும் எங்கடன் தீரலியான்னு மொதலாளிகிட்ட சண்ட போட்டேன். சண்ட பெருசாகி போய்த்தொலன்னு என்னை வெரட்டி விட்டான். வெளிய வந்து மட்டும், பத்தினியாவா வாழ முடியும்? இல்ல, வாழத்தா விடுவானுங்களா? பட்டினிய கூட பொறுத்துக்கலாம். தேவ்டியா, வேஷ்யான்னு ஒரு தீண்டத்தகாதவ மாதிரி, எல்லாரும் என்னை அருவருத்து ஒதுக்குனதத்தா என்னால தாங்க முடியல. மறுபடியும் அந்த பழைய மொதலாளிகிட்டயே போயி சேர்ந்துக்கலாமான்னு கூட தோணும். அப்பதா அந்த இன்ஸ்பெக்டர் என்னை புடிச்சிருக்றதா சொன்னான். ஒன்னை கட்டிக்க முடியாது வச்சிக்கிறேன்னு சொன்னான். இனியாது ஒருத்தனுக்கு வாழ்ந்து முடிச்சிரலாம்னு, அவங்கூட இருந்தேன்”,
கடைக்கு சென்ற சிறுமி இரண்டு பத்து ரூபாய் மிரிண்டா பாட்டில்களுடன் வந்தாள். சந்தியாவுக்கும் செழியனுக்கும் கொடுத்தாள். செழியன் வாங்கிக் கொண்டான். சந்தியா வாங்கவில்லை. அதிர்ச்சியோடு பார்த்தாள்.
ஏ வாங்கிக்க”, என்றான் செழியன். வாங்கிக் கொள்ள சிறுமி உள்ளே சென்று விட்டாள். சிறுமி சென்ற திசையை பார்த்தாள் சந்தியா.
“அவ எம்பொண்ணுதா”, என்றாள் அவள். சந்தியா பார்த்தாள்.
“அந்த இன்ஸ்பெக்டர்தா அவ அப்பன்”, என்றாள்.
சந்தியாவுக்கு புதிதானதொரு மனநிலை உருவாகியிருந்தது. அது என்னவென்று அவளால் வரையறுக்க முடியவில்லை.
“கொஞ்ச நாள் அவங்கூட,... சந்தோஷமாதா இருந்துச்சு. இந்த வீட்ல அவந்தா என்னை குடி வச்சான். இவளும் பொறந்துட்டா”, சந்தியாவிடம் சொன்ன அவள்,
“அரே, ஸ்கூல் வேன் வந்த்ரும். ஜல்தி கிளம்பு”, என்று சத்தம் கொடுத்தாள்.
“டீக்ஹே மா”, என்று உள்ளிருந்து குழந்தையின் சத்தம் வந்தது.
“என்ன சொல்லிட்டுருந்தேன்? ஹான், இவ பொறந்து ரெண்டு வயசாகுற வர அவன் மட்டுந்தா வீட்டுக்கு வந்துட்டு இருந்தான். அப்றம் பெரிய பெரிய போலிஸ் ஆஃபீஸர்ஸ கூட்டிட்டு வந்து அவங்ககூட,... படுக்க சொன்னான்”,
சந்தியா எச்சில் விழுங்கினாள்.
“முடியாதுன்னு சொன்னப்ப, அடி, ஒதை, கொழந்தைய தூக்கி வீசிருவேன்னு மெரட்டுவான். எது எப்டியோ? எங்கொழந்தைக்காக நா வாழணும், சாக முடியாது. அவன் சொன்னத செஞ்சேன். அவனுக்கு ப்ரொமோஷன் கிடைச்சு பெரிய அதிகாரியாயிட்டான். இங்க வந்தா கௌரவக்கொறைச்சல்ன்னு, பகல்ல மட்டும் வர மாட்டான். எப்பவாச்சும் அர்த்த ராத்ரில வருவான்”,
குழந்தை பள்ளி சீருடையுடன் வந்தாள்.
“ஒரு நிமிசம், இப்போ வந்துர்றேன்”, என்றவள் குழந்தையை பள்ளி வேனில் ஏற்றி அனுப்ப சென்றாள்.
சந்தியாவின் கையை தொட்டான் செழியன். நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
“எம்பயத்த தெளிய வைக்க இந்த வழிதா தோணிச்சா ஒனக்கு?”, கேட்டாள்.
“அப்டியில்லடி, இந்த மாதிரி நிறைய பேர் ஒலகம்பூரா இருக்றாங்க. அவங்களுக்கெல்லாம் இத விட மோசமான கதையெல்லா இருக்குது. அவங்கல்லாம், பயத்துக்கு அடிமையாயிட்டா, ஒரே நொடியில உசுரு போயிரும். ஒனக்கு மட்டுந்தா நடந்துச்சுன்னு நினைச்சிட்டுருக்றயல்ல? அந்த நெனைப்ப மாத்ததே கூட்டியாந்தேன்”, செழியன் சொல்லும் போது, அந்த பெண் வந்து விட்டாள்.
“என்ன பையா? சந்த்யா சிஸ்டர் என்ன சொல்லுது?”, அவள் கேட்டாள். அவன் சிரித்தான்.
சந்தியா அருகில் அவள் அமர்ந்தாள்.
“இங்க இன்னும் நிறைய பேர் என்னை மாதிரியிருக்காங்க. அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடிகூட, எட்டு பேர் சேர்ந்து ஒரு பொண்ண சீரழிச்சு ரோட்ல போட்டுட்டு போயிட்டானுங்க. போலிஸ் அவ உயிர காப்பாத்திருச்சு. ஆனா இந்த ஊரு அவள ஏத்துக்கல, ஏத்துக்கலன்னா, பத்தினியா ஏத்துக்கல. ஒதுக்கி வச்சுருச்சு. பசியில சாகக் கெடந்தவள எதுத்த வீட்டு, தாதிதா கூட்டிட்டு வந்து சாப்பாடு போட்டா. பாவி....., வாழ விடவா சோறு போட்டா? அவளுக்கு வயசாயிருச்சு. அந்த பொண்ண வச்சி சம்பாதிக்க முடிவு பண்ணிட்டா”, என்ற அவள் பெருமூச்சு விட்டாள்.
“ஒங்க அம்மா அப்பா மாதிரி, அப்பா அம்மாவோ, செலியன் பாய் மாதிரி ஒரு லவ்வரோ, வந்து இந்த பொதைகுழில இருந்து எங்கள காப்பாத்திர மாட்டாங்களான்னு எங்க எல்லாருக்குமே ஏக்கமிருக்கு. ஆனா யாரும் வர்ல, வர மாட்டாங்க”, என்றவள் நிறுத்தி ஒரு நொடி எதிர் வீட்டை பார்த்தாள். பிறகு சந்தியாவை பார்த்தாள்.
“நானும் ஒன்னை மாதிரி பயந்துட்டுருந்தா எம்பொண்ணையும் என்னை மாதிரி ஆக்கிருவானுங்க. நா பயப்படக்கூடாது. எம்பொண்ண படிக்க வச்சு எதாது வெளிநாட்டுக்கு கம்பியூட்டர் வேலைக்கோ, இல்ல, அவ அப்பன மாதிரி போலிஸ் உத்யோகத்துக்கோ அனுப்புற வரை நா பயப்படக்கூடாது, சாகக்கூடாது”, என்றாள் அவள்.
“பயம் வாழ வுடாது. சாகவும் வுடாது. பயத்த கொன்னுரு, வாழ்க்கையும் சாவும் நிறைவாயிருக்கும்”, என்றாள் அவள். சந்தியா அவளை கூர்மையாக பார்த்தாள்.
“எங்க வீட்ல குடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறல்ல?”, சந்தியா கையிலிருந்த ஜூசை பார்த்து கேட்டாள்.
சுதாரித்த சந்தியா,
“ச்சே,ச்சே, அப்டிலா இல்லீங்க் கா”, என்று விட்டு, குளிர்பானத்தை குடித்தாள்.
“தேங்க்ஸ்கா”, செழியன் சொன்னான். அவள் சிரித்தாள்.
வெளியில் நின்ற நண்பனிடம் தேங்க்ஸ் சொல்லி கை குலுக்கினான் செழியன்.
“இந்த ஏரியால, இவ்ளோ தமிழ் தெரிஞ்சவங்க இவங்கதா. அவங்க தமிழ் எப்டி சிஸ்டர்?”, சந்தியாவிடம் நண்பன் கேட்டான்.
“அவங்க மனசு மாதிரியே அழகாருக்கு”, என்றாள் சந்தியா. அவள் சிரித்தாள்.
“வர்றோங்கா”, விடைபெற்று கிளம்பினர்.
நடந்து வரும் வழியெங்கும், வீடுகளின் வாசல்களில் அமர்ந்திருந்த பெண்கள் இப்போது சந்தியாவின் கண்களுக்கு வேறுவிதமாக தெரிந்தனர்.
யாரோ விதைத்த பாவங்களை சுமந்து வலுவிழந்து போன, இந்தியாவின் ஜனநாயகமாக தெரிந்தனர். வக்கிர மிருகங்களால் குதறியெறியப்பட்ட இந்தியாவின் விதவிதமான கலாச்சாரங்களாக, பண்பாட்டின் கீறல் விழுந்த மணிமுடிகளாக தெரிந்தனர்.
செழியன் பைக்கை இயக்கிக் கொண்டிருந்தான்.
“இந்த மாதிரி நாடுபூரா இருக்காங்களா?”, சந்தியா கேட்டாள்.
“ஒலகம் பூரா இருக்றாங்க”, என்றான்.
“இவங்களயெல்லா பார்த்து, எம்பயந்தெளிஞ்சாதா,..... நம்ம,.... செக்ஷுவல் லைஃப் நல்லாருக்கும்ன்னு கூட்டிட்டு வந்தியா”, சந்தியா தயக்கத்தோடு கேட்டதும், பைக்கை ஓரங்கட்டி நிறுத்தினான். திரும்பி அவளை பார்த்தான்.
“டீ சாப்டலாமா?”, கேட்டான். அவள் பார்த்தாள்.
“குடி”, என்றான்.
மேசையிலிருந்த டீயை எடுத்துக் கொண்டாள் சந்தியா.
“நம்ம செக்ஸ் லைஃப் நல்லாருக்க, நா ஒ மனச ஜெயிச்ச, நல்ல புருஷனா இருந்தா போதும்”, என்றான்.
நிமிர்ந்து பார்த்தாள்.
“இதோட எல்லாம் முடிஞ்சு போயிர போறதில்ல. இன்னும் நீ வேலைக்கு போகணும். கடைத்தெருவுக்கு, கோயிலுக்கு போகணும். அங்கல்லாம் கோபால் மாதிரி, நெறைய பொறுக்கிங்க, மொளைச்சு மொளைச்சு வருவானுங்க. கோபால் மாதிரியென்ன? கோபாலே கூட வர்லாம். அங்கலாம் ஒங்கூடவே நா காவலுக்கு வர முடியாது”, என்றவன் டீயை குடிக்க, அவள் பார்த்தாள்.
“ம்ம், கோபால ஜாமின்ல எடுத்துருக்றாங்க”, என்றான்.
“யாரு?”,
“அவன மாதிரி, அவனோட பொறுக்கி ஃப்ரெண்ட் ஒருத்தன்”,
“இவனுங்கலாம் நீ பயந்து ஓட ஓட தொரத்திட்டே இருப்பானுங்க. இப்டியே பயந்துட்டுருந்தீன்னா, நம்ம கொழந்தைகள எப்டி காப்பாத்துவ? நமக்கு பொண் கொழந்த பொறந்தா அவளயும் ஒன்னை மாதிரி பயந்தாங்கொள்ளியா வளத்த போறியா?”, கேட்டான். அவள் பார்த்தாள்.
“ஒம்பயத்த நா ஜெயிக்க முடியாது. நீதா ஜெயிக்கணும். ஒன்னை விட மோசமான சூழ்நிலையில வாழ்ந்திட்டுருக்ற பொம்பளைங்கள பாத்தியல்ல? இனி நீதா முடிவு பண்ணணும். கோழையாவே வாழ்ந்து சாகப் போறியா? தைரியமானவளா, பயனுள்ள ஒரு வாழ்க்கைய வாழ்ந்து சாகப் போறியான்னு!”, சொன்னான் செழியன்.
சந்தியா சிந்திக்க தொடங்கினாள்.
ஒரு வாரம் பூனேயின் நகர்களை சுற்றிப் பார்த்து களித்து விட்டு விருந்தாளிகள் ஊருக்கு கிளம்பியிருந்தனர்.
காயத்ரி தினேஷுக்கு தன் சம்மதத்தை தெரிவித்திருந்தாள். தினேஷ் லட்சுமியிடம் சம்மதம் வாங்கதான் பெரிய சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. தேவேந்திரனும் கமலியும் லட்சுமியை சம்மதிக்க வைத்தார்கள் என்பதுதான் நிதர்சனம்.
நாட்களின் நகர்வில் தினேஷ் காயத்ரி திருமணத்தை முடித்து விட்டு சொந்த ஊருக்கே சென்று விடுவது என்று தீர்மானித்திருந்தனர் லட்சுமியும் தேவேந்திரனும். பூனேவின் ஒரு தாய்தெய்வக் கோயிலில் காயத்ரி, தினேஷின் கல்யாணம் நடந்தது.
ஊருக்கு வந்து சேர்ந்த கையோடு, துரை தன் தொழில்களை கவனிக்க சென்று விட்டான். கொடி தன் மனதிற்கும் உடம்புக்கும் தேவையான ஓய்வை கொடுத்து புத்துணர்வாகினாள். தினேஷ் அனுப்பி வைத்திருந்த தொல்பொருள் ஆராய்ச்சி புத்தகங்களை புரட்டினாள்.
தொடரும்,.....
அடுத்த பாகத்தில் க்ளைமேக்ஸ் தோழமைகளே! இன்னும் இரண்டு நாட்களுக்குள் பதிவிட்டு விடுவேன்.
சக்தி மீனா.