அத்தியாயம் 39
தன் வீட்டுக்கு பின்னால் இருக்கும் மாட்டுத் தொழுவத்தின் அருகே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார் கொடியின் அப்பா ராஜவேலு. அவர் தனிமையில் மது அருந்துவது மிகவும் அரிது. ஆனால், சில நாட்களாக இப்படித்தான் குடித்துக் கொண்டிருக்கிறார். எந்நேரமும் மதுக்கோப்பையும் முகத்தில் அரும்பிய தாடியுமாக அவரை பார்க்க ஆண்டாளுக்கே பரிதாபமாக இருந்தது.
“ஏனுங்க மாமா, இப்டி ராவும் பகலுமா குடிச்சு ஒடம்ப கெடுத்துக்குறீங்கோ? சொன்னா கேளுங்க் மாமோ”, என்றாள். அவர் பேசாமல், அவளை பார்க்காமல் குடிப்பதிலேயே முனைப்பாய் இருந்தார்.
“நாந்தா சொல்றேனல்ல?! அதிய குடுங்க இங்குட்டு”, சொல்லி மதுக்கோப்பையை பறிக்க முயன்றாள். அவளது கையை தட்டி விட்டு எழுந்து நின்றார்.
“எல்லாம் ஒன்னாலதாண்டி”, என்றார். அதிர்ந்து போனாள். எப்போதுமே அவர் இவ்வாறு பேசுயதில்லை. அதுவும் மரியாதையின்றி “டி” போட்டு பேசுவது மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது அவளுக்கு.
“என்ட்ற புள்ளைய என்ட்றகிட்டருந்து பிரிச்சிட்டியல்ல?”, என்று அவர் சொன்னதும், பாறாங்கல்லை வயிற்றில் கட்டிவிட்டது போலொரு வலி அவளை தாக்கியது.
“எம்புள்ளைய தாய்க்கு தாயாயிருந்து பாத்துக்குவன்னு நம்பியிருந்தேன்”, வாய்க்குழறி சொன்னார்.
“இப்போ என்னத்த பாக்காம வுட்டுப்போட்டாக? என்த்துக்கு இப்டி ஒளறிட்டிருக்கீக?”, என்றாள் ஆவேசமாக!
“பாக்கல! பாத்துருந்தீன்னா, எம்புள்ள ஒன்னை நாயிலும் கேடா வெரட்டுமாக்கு? என்னைய,....”, தொண்டைக்குழிக்குள் எதுவோ சிக்கியது. தடுமாறினார்.
“என்ட்ற மேல எம்புள்ளைக்கு பயமிருக்குதுன்னு நெனைச்சீட்டுருந்தேன். இல்ல, அது வெறுப்பு. பெத்த அப்பனா இருந்துபோட்டு, அவள கவனிக்காம, கொள்ளாம ஊர் மேஞ்ச அப்பன்,.. எம்மேல வெறுப்பு இருந்துருக்குது. அதேன், புள்ள, பாசத்துக்கு ஏங்கி காதல், கீதல்னு தடம் மாறி போயிருச்சு”, குழறலும் கோபமுமாக சொன்னார்.
“அப்போ, நடந்த எல்லா தப்புக்கும் நாந்தா காரணங்குறீகளா?”, ஆண்டாளுக்கு கோபமாக வந்தது.
இல்ல, நாந்தே காரணம், என்ட்ற புள்ளைக்கு பாசத்த குடுத்து வளக்காம, சாதி, வேசி சகவாசம்னு திரிஞ்ச நாந்தே, எம்புள்ள என்னைய வெறுத்ததுக்கு காரணம். நாந்தே, நாந்தே, அவள நாம்பாத்துருக்கோணும். வளத்திருக்கோணும். கொடி, என்ட்ற கொடி”, புலம்பிக் கொண்டே அவ்விடத்தைவிட்டு சென்று விட்டார். ஆண்டாளுக்கு கோபமும் அழுகையுமாக வந்தது. அவள் தடுத்தும் கேட்காத கண்கள், கண்ணீரை கசித்து விட, கந்தவேல் அவளை பார்த்தார். கணவன் முன் தன்னிலையை தாழ்த்திக் கொள்ள விரும்பாதவள், கண்ணீரை துடைத்து நிமிர்ந்து நின்றாள்.
நாய் வால நிமிக்க முடியுமா?”, சொல்லிவிட்டு சென்றார் கந்தவேலு.
சந்தியா அடுக்களை வாசலில் நின்று, ஈசி நாற்காலியில் அமர்ந்திருந்த தகப்பனையே பார்த்துக் கொண்டிருந்தாள். காவேரி கல்யாணியை கண்காட்ட, கல்யாணி “நானிருக்கிறேன்” என்பதாக சைகை செய்தாள்.
“இந்தேரு மாமோய், இதுல யோசிக்றதுக்கு ஒண்ணுமில்லியாமா. ஏற்கனவே கண்ணாலம்பேசி நின்னு போயிருக்குது. அவவன் நாக்கு மேல பல்லு போட்டு என்னென்னவோ பேசிக்கிருக்கானுக! செழியன மாதிரி ஒரு பையன் கெடைக்றதுக்கு புண்ணியம் பண்ணிருக்கோணும்”, கதிரேசனிடம் ரங்கா சொன்னான்.
கதிரேசனின் பார்வை நிலத்தில் நிலைக்குத்தியது.
“என்ன? கேமரா புடிக்கிற பையலுக்கு பொண்ண குடுக்கணுமாண்டு யோசிக்கிறியாக்கு?”, கல்யாணி கேட்டாள்.
“சாதி பாக்றியா மாமோ?”, ரங்கன் கேட்டான்.
“ஏனுங்க், புள்ளைக்கும் புடிச்சிருக்குமாட்டமிருக்குது, கொஞ்சம் ரோசிங்க்”, என்றாள் காவேரி. கதிரேசன் மகளை திரும்பிப் பார்த்தார். அவரை எதிர்பார்ப்புடன் பார்த்திருந்த சந்தியா சட்டென தலைகுனிந்தாள். குனிந்திருந்த அவளது முகத்தில், அவளை விட்டு பிரிய முடியாமல் நிலைத்திருக்கும் புன்சிரிப்பு அவளது சம்மத்தத்தை சொன்னது.
“நாம சாதி பாக்கலீன்னாலும், அந்த பைய பாண்டியன் சாதிவெறி புடிச்சவன் ரங்கா. அத நெனைச்சாத்தா ஈரக்கொலை நடுங்குது”, என்று ரங்கனை பார்த்து சொன்னார் கதிரேசன்.
“அம்புட்டுத்தே ஒம்பிரச்சனையா? பாண்டியனே வந்து பொண்ணு கேட்டா குடுப்பியா?”, கல்யாணி கேட்க, அவர் நம்பாத பார்வை பார்த்தார்.
“அவன் நம்மூட்டு படியேறி வருவானாக்கு?”,
“காலம் அல்லாத்தயும், அல்லாரையும் மாத்தீரும் சித்தப்பா. பாண்டியன் இப்போ மாறிட்டாக”, கல்யாணி சொன்னாள்.
கதிரேசன் சில நொடிகள் சிந்தித்தார்.
“நானும் அல்லாங்கேள்விப்பட்டேன். ச்செரி, புள்ள அடுத்த தெருவுல இருக்கப்போறா. நம்மள மீறி எவன் என்னத்த பண்ணிற முடியு? பாண்டியன் வந்து பேசுனா பார்ப்போம்”, என்றார் கதிரேசன்.
“ஏண்டி, இப்டி மூஞ்சிய ஏழு மொழத்துக்கு நீட்டிட்டுருக்ற?”, முல்லையாற்றங்கரை பாறை மீது அமர்ந்திருந்த சந்தியாவிடம், அவளருகில் அமர்ந்திருந்த செழியன் கேட்டான். அவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அணைத்துக் கொண்டான்.
“பயமாருக்குதுல. ஒங்கப்பா,....”, என்றாள்.
“அப்பாட்ட பேசிட்டேன்”, என்றான். நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன சொன்னாக?”,
“ஜாமீன் கெடைக்கத்தே கொஞ்சம் செரமமாருக்குது. அடுத்த ஹியரிங்க்ல எப்டியாது வாங்கிர்லாம்னு வக்கீல் சொல்லிருக்காக. ஜாமீன்ல வந்ததும், ஒங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேப்பாக”,
“நெசமா?”,
“நெசமா?”, அவளது தலையில் கைவைத்து சொன்னான். சிரித்தாள்.
சுற்றி பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமில்லை.
தன் அணைப்புக்குள்ளிருந்தவளின், உதடுகளை குறி வைத்தான்.. அவனை உதறி எழுந்தாள்.
“ஹா, அஸ்க்கு புஸ்க்கு, மொதல்ல கண்ணாலம், பொறவாலதே கிஸ்ஸூ”, என்றாள். அவள் பயப்படாமல் பேசுவதே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
“அப்டியா? அப்போ வா, இப்பவே கருப்பசாமி கோயில்ல தாலி கட்டுறேன். கிஸ் பண்ணிக்கலாம்”, என்றான்.
“எதுக்கூ? எங்கயனும், ஒங்கையனும் நடுத்தெருவுல நின்னு சண்ட போட்டுக்கவா? இந்த வேலையெல்லா எங்கிட்ட வேணாம். மொதல்ல போயி ஒங்கப்பன ஜாமீன்ல கூட்டியார வழிய பாரு”, என்றவள் தன் கைப்பையை தோளில் மாட்டிக்கொண்டு திரும்பி நடக்க தொடங்கினாள்.
“ஏ, இர்றி, ஊர் பஸ்ஸ்டாப்ல வுட்டுர்றேன்”, என்றான் சத்தமாக!
“வேணாம், நா தோட்டத்துக்கு போயி கல்யாணியக்காவ பாத்துட்டுதே வூட்டுக்கு போவேன். நீ வூட்டுக்கு போ”, சொல்லிக் கொண்டே நடையின் வேகம் கூட்டினாள். சிரித்துக் கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்தான் செழியன்.
உற்சாகமும் குதூகலமும் நிரம்பிய மனதுடன் தென்னந்தோப்பின் வழியே நடந்து கொண்டிருந்தாள் சந்தியா. திடீரென்று சந்தியா முன் குதித்தான் கோபால். அதிர்ந்து நின்றாள்.
மாலை நேரத்து சூரியனும், வெயில் தணிந்த நிழற்காற்றின் குளிர்ச்சியும், கூடவே புத்தகமும்! வெகுநாட்களுக்கு பிறகு நொடிகள் இதமாக நகர்ந்தது கொடிக்கு!. துரையின் வரவை உணர்வாலயே உணர்ந்து திரும்பி சிரித்தாள். அவனும் சிரித்தான்.
“டீ கொண்டு வர்ட்டுமுங்க்ளா?”,
“இல்லல்ல வேணாம், படி”,
அவள் புத்தகங்களை புரட்ட அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இப்டியே குறுகுறுன்னு பார்த்துட்டேருந்தா எங்குட்டுருந்து படிக்றதாம்?”, புத்தகத்தில் கண்கள் பதித்தபடியே கேட்டாள்.
“அப்போ நாம்போயிரவா?”,
நிமிர்ந்து பார்த்தாள்.
“நா முயற்சி பண்றேனுங்க”, என்றாள்.
“எதுக்கு, முயற்சி?”,
“ஒங்கள லவ் பண்றதுக்கு,....”, தயக்கத்தோடு சொன்னாள்.
சத்தமாக சிரித்தான்.
“அதெல்லாம் முயற்சி பண்ணி வரவழைக்க முடியாது, தெரியுமல்ல?”,
“அப்போ நானென்ன பண்றதிப்ப?”,
“படி”, என்றான். எழுந்து நடந்தான். அவனையே பார்த்தாள். நடந்தவன் நின்று திரும்பினான்.
“என்னைய புடிச்சா, எம்மேல லவ் வந்தா சொல்லு”, சொல்லி சிரித்துவிட்டு திரும்பி நடந்தான்.
“எம்மேல லவ்விருக்குதா?”, கொடி கேட்டாள். துரை நின்று திரும்பினான்.
“இல்லாமயா கட்டிக்கிட்டேன்”, என்றவன் லேசாக சிரித்து சென்றான்.
கொடியின் இதழ்கள் மலர்ந்தது. முகத்தின் சிகப்பு செவ்வான சிகப்போடு கலந்தது.
“ஒன்னை பார்த்தாலே ஒடம்பெல்லாம் ரத்தம் சூடா ஓடுதுடி! தொடணும்னு கையெல்லா குறுகுறுக்குது”, சொல்லி கைகளை ஒன்றோடொன்று தேய்த்து, வக்கிர பார்வை பார்த்தான் கோபால்.
“த்தா, ஆம்பளையாருந்தா தொட்ரா நாய! பாக்கலாம்”, என்றாள் சந்தியா. அதிர்ந்து விட்டான். அவளிடம் இந்த கோபத்தை எதிர்பார்க்கவில்லை அவன். அதிர்ச்சியை மறைத்தவனாக,
“என்னடி பண்ணிருவ நீயி?”, சொல்லிக்கொண்டே அவளை தொட நெருங்கினான். தன் கால்முட்டியை மடக்கி அவனது உயிர் உறுப்பை உடைத்தாள். குனிந்து பொத்திக்கொண்டவனாக,
“ஆஆ”, என்றலறினான்.
“பொட்ட நாய, எம்புட்டு தைரியண்டி ஒனக்கு?”, வலியை பொறுத்துக் கொண்டு அவன் அவளை தாக்க வரும் போது, சந்தியா தென்னைமட்டை ஒன்றை கையில் எடுத்திருந்தாள். அவளை நெருங்கிய அவனது கையில் வேகமாக அடித்தது தென்னைமட்டை.
அவன் அவளை அதிர்ச்சியோடு பார்த்தான். அவள் வெறியோடு பார்த்தாள்.
“பொட்ட நானில்லல, நீதா!”, என்றவள் அவனது தலையிலேயே தென்னைமட்டையை போட அவன் அலறினான். அவள் அவனை தொடர்ந்து அடித்தாள்.
பொறுக்கி நாய! பொம்பளன்னா தொடுவியால? தொடறதுக்கு மட்டுந்தே பொம்பளயா? ஒன்னய பெக்குறதுக்கு பொம்பள தேவைப்படலியா? சாவுல நீயெல்லா வாழவேக்கூடாது. செத்து தொல”, அடித்துக் கொண்டேயிருந்தாள். பல வருடக் கோபங்களை, வலிகளை தீர்த்துவிட முயன்றாள், முயன்று கொண்டேயிருந்தாள்.
அங்காங்கு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், அவனது அலறல் குரல் கேட்டு ஓடி வந்தனர்.
“ஆத்தீ, என்ன புள்ளயிது? இவன என்னத்துக்கு இப்புடி போட்டு அடிச்சு வச்ருக்ற?”, ஒரு வயதான பெண் கேட்டாள்.
“தனியா வந்த என்னைய வழிமறிச்சு அசிங்கமா பேசுறாங்க்கா. அதேன் நாலு போடு போட்டேன்”, அவள் சொல்லும்போது ரங்கனும் கல்யாணியும் வந்தனர்.
சிலர் கீழே விழுந்து கிடந்தவனுக்கு தண்ணீர் கொடுத்தனர். ரங்கன் பார்த்தவுடன் கோபாலை அடையாளம் கண்டு கொண்டான்.
“நெறய ரத்தம் போயிருக்குது. போலீஸ் கேஸாயிரப் போவுது”, கூட்டத்தில் யாரோ சொன்னார்கள்.
ரங்கன் சந்தியா கையிலிருந்த தென்னை மட்டையை பிடுங்க எத்தனிக்க, அவள்,
“ஆவட்டும்”, என்றபடி மட்டையை கூட்டத்தை நோக்கி காட்டினாள்.
“ஊரு பூரா, நாடு பூரா, ஒலகம் பூரா இப்டிதா பொம்பள சதைக்காக அலையிறானுவ. இவனுகளுக்கு பயந்துட்டு கெடந்தோம்ன்னா, பொறந்த புள்ளைக்க அம்மணத்தயும்கூட, அருவருப்பாக்கி விட்டுருவானுங்க. போலீஸ் வருமா? வரட்டும்! இவன் பொழைச்சா, பதினஞ்சு நாளு ரிமாண்ட்டு, செத்து தொலஞ்சா மூணு மாசம் ரிமாண்டு! பாத்துக்கிரலாம்”, தென்னைமட்டையை கையில் வைத்து ஆட்டியபடி, சந்தியா சொல்ல, அங்கிருந்த பெண்களில் பலருக்கும் அதுவும் சரிதான் என்று பட்டது. வெளியே சொல்லவில்லை. பலரும் சந்தியாவை பயத்தோடு பார்த்தார்கள். ரங்கன் தென்னைமட்டையை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டான்.
“இந்தா மாமோ, சித்தப்பு, நம்மூரு புள்ளைகிட்ட நம்மூருக்குள்ளார வந்து ஒரண்டை இழுத்துருக்கான். போலீஸ் வந்தா நா செஞ்சேன்னு ஏத்துக்குறேன். எனக்கு நிக்குறியா என்னா?”, ரங்கன் அங்கிருந்த ஆண்களிடம் கேட்டான்.
“அதென்ன மாப்ள அப்டி கேட்டுப்புட்ட? நானிருக்றேன் ஒன்ட்றகூட”, துண்டை தலையில் கட்டினார் அவர்.
நீ என்னாத்துக்குய்யா செயிலுக்கு போற? இந்தா நாய கொண்டுவோயி நம்மூரு சொகாதார ஆஸ்பத்திரில போட்டுட்டு, அஞ்சாறு நா கடிச்சுருச்சுன்னு சொல்லீர்லாம். பாத்துக்கிரலாம் வுடு”, என்றார் இன்னொருவர்.
“என்னத்தடி வேடிக்க பாத்துட்டு நிக்கிற? புள்ளைய கூட்டிட்டு வூட்டுக்கு போ”, ரங்கன் கல்யாணியை அதட்ட, அவள் சந்தியாவை இழுத்து சென்றாள்.
“இந்தா, அல்லாம் அவவ சோலிய பாக்க போ! இங்க நடந்ததெதுவும் மூச்சு வுடப்புடாது”, அங்கு நின்றிருந்த பெண்களை பார்த்து சொன்னார் அந்த வயசானவர்.
“இப்டிதாண்டி, சந்த்யா புள்ள மாதிரி துணிஞ்சுபோடணும். அப்பதே நாமளும் பொழைச்சு வாழ முடியும்”
“ஆமாங்க்கா, அந்த கணக்காப்புள்ளையையும் இதே மாதிரி ஒருநா போடணும். நாயிக்கு பொறந்தபைய குனியும் போதும் நிமிரும் போதும் அந்த பார்வ பாக்குறான்”, தங்களுக்குள் பேசியபடி கலைந்து சென்றனர் பெண்கள்.
தொடரும்,...
இன்னும் ஒரே ஒரு எபி தோழமைகளே!