• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 13

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
441

மொழி: இருள் பாணி
அறத்துப்பால்
இல்லறவியல்

அடக்கமுடைமை



அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (௱௨௰௧ - 121
)

அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும்; அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும் (௱௨௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும். (௱௨௰௧)
—மு. வரதராசன்

அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும். (௱௨௰௧)
—சாலமன் பாப்பையா

அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும் (௱௨௰௧)
—மு. கருணாநிதி

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. (௱௨௰௨ - 122)


அடக்கத்தைச் செல்வமாகப் பேணிக் காத்து வருக; உயிருக்கு ஆக்கந் தருவது அதனினும் மேம்பட்ட செல்வம் பிற யாதுமில்லை (௱௨௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை. (௱௨௰௨)
—மு. வரதராசன்

அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை. (௱௨௰௨)
—சாலமன் பாப்பையா

மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை (௱௨௰௨)
—மு. கருணாநிதி

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். (௱௨௰௩ - 123)


அறிய வேண்டுவன அறிந்து நல்வழியிலே அடக்கத்தோடு நடக்கும் பண்பைப் பெற்றால், அதன் செறிவை அறிந்து மேன்மையும் உண்டாகும் (௱௨௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும். (௱௨௰௩)
—மு. வரதராசன்

அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும். (௱௨௰௩)
—சாலமன் பாப்பையா

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும் (௱௨௰௩)
—மு. கருணாநிதி

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. (௱௨௰௪ - 124)


தன் நிலையிலிருந்து திரிந்து போகாமல் அடங்கி இருப்பவனின் தோற்றமானது, மலையைக் காட்டிலும் மிகப் பெரிதான உயர்வு உள்ளதாகும் (௱௨௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும். (௱௨௰௪)
—மு. வரதராசன்

தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது. (௱௨௰௪)
—சாலமன் பாப்பையா

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும் (௱௨௰௪)
—மு. கருணாநிதி

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. (௱௨௰௫ - 125)


பணிவாக நடத்தல் என்பது எல்லார்க்கும் நன்மையானதாகும் (௱௨௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும். (௱௨௰௫)
—மு. வரதராசன்

செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும். (௱௨௰௫)
—சாலமன் பாப்பையா

பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும் (௱௨௰௫)
—மு. கருணாநிதி

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து. (௱௨௰௬ - 126)


ஆமையைப் போல, ஐம்பொறிகளையும் இந்த ஒரு பிறப்பிலே அடக்கிக் கொள்ளுதலில் வல்லவனானால், அதனால் எழுமையும் பாதுகாப்பு உண்டு (௱௨௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது. (௱௨௰௬)
—மு. வரதராசன்

ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும். (௱௨௰௬)
—சாலமன் பாப்பையா

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும் (௱௨௰௬)
—மு. கருணாநிதி

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (௱௨௰௭ - 127)


எவற்றைக் காத்தவராயினும் தன் நாவைத் தவறாமல் காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர் (௱௨௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர். (௱௨௰௭)
—மு. வரதராசன்

எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர். (௱௨௰௭)
—சாலமன் பாப்பையா

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும் (௱௨௰௭)
—மு. கருணாநிதி

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். (௱௨௰௮ - 128)


தீய சொற்களாலே வந்தடைந்த பொருளாகிய நன்மை ஒன்றாயினும் ஒருவனிடம் இருந்தாலும், அதனால் எல்லா நன்மையும் இல்லாமற் போய்விடும் (௱௨௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும். (௱௨௰௮)
—மு. வரதராசன்

தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும். (௱௨௰௮)
—சாலமன் பாப்பையா

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும் (௱௨௰௮)
—மு. கருணாநிதி

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. (௱௨௰௯ - 129)


தீயினாலே சுடப்பட்ட புண் உள்ளே ஆறிவிடும்; ஆனால், நாவினால் சுட்ட வடுவானது உள்ளத்தில் ஒரு போதும் மறையவே மறையாது (௱௨௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது. (௱௨௰௯)
—மு. வரதராசன்

ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது. (௱௨௰௯)
—சாலமன் பாப்பையா

நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது (௱௨௰௯)
—மு. கருணாநிதி

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (௱௩௰ - 130)


சினத்தைக் காத்து, கல்வி கற்று, அடங்கி வாழ்தலையும் மேற்கொள்பவனின் செவ்வியை, அவன் வழியில் சென்று அறமானது பார்த்திருக்கும் (௱௩௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும். (௱௩௰)
—மு. வரதராசன்

கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும். (௱௩௰)
—சாலமன் பாப்பையா

கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும் (௱௩௰)
—மு. கருணாநிதி
 
Top