• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதிகாரம் : 63

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
486
மொழி: இருள் பாணி
பொருட்பால்
அரசியல் இடுக்கண் அழியாமை

இடுக்கண் அழியாமை

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில். (௬௨௨௧ - 621)


துன்பங்கள் வரும் போது, மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக; துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை (௬௱௨௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை. (௬௱௨௧)
-மு. வரதராசன்

நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மாமகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை. (௬௱௨௧)
—சாலமன் பாப்பையா

சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான் (௬௱௨௧)
-மு. கருணாநிதி

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். (௬௨௨௨ - 622)


வெள்ளமாகப் பெருகிவருகின்ற துன்பங்களும், அறிவு உடையவன் தன் உள்ளத்திலே நினைத்த போது, அவனை விட்டு மறைந்து போய்விடும் (௬௱௨௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும். (௬௦௨௨)
-மு. வரதராசன்

வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும். (௬௦௨௨)
—சாலமன் பாப்பையா

வெல்லம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும் (௬௱௨௨)
-மு. கருணாநிதி

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். (௬௨௨௩ - 623)


இடையூறுகள் வந்த போது அதற்காக வருந்தாத மனத்தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவார்கள் (௬௱௨௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார். (௬௱௨௩)
-மு. வரதராசன்

வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர். (௬௱௨௩)
—சாலமன் பாப்பையா

துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள் (௬௱௨௰௩)
-மு. கருணாநிதி

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. (௬௨௨௪ - 624)


தடைப்படும் இடங்களில் எல்லாம், தளர்ந்து விடாமல் வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போன்ற ஊக்கம் உடையவருக்கு நேரிடும் துன்பங்களே துன்பம் அடையும் (௬௱௨௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படும். (௬௦௨௪)
-மு. வரதராசன்

செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும். (௬௦௨௪)
—சாலமன் பாப்பையா

தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரதத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும் (௬௱௨௪)
-மு. கருணாநிதி

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும். (௬௨௨௫ - 625)


மேன்மேலும் துன்பங்கள் வந்தாலும், நெஞ்சம் கலங்காதவனுக்கு நேர்ந்த துன்பமானது, தானே துன்பப்பட்டு அவனிடமிருந்து விலகிப் போகும் (௬௱௨௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும். (௬௦௨௫)
-மு. வரதராசன்

ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும். (௬௦௨௫)
—சாலமன் பாப்பையா

துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும் (௬௱௨௰௫)
-மு. கருணாநிதி

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர். (௬௦௨௬ - 626)

'பொருள் அடைந்தோம்' என்று அதனைப் போற்றிக் காப்பதற்கு அறியாதவர்கள், வறுமைக் காலத்தில் 'பொருளை இழந்தோம்' என்று துன்பம் அடைவாரோ? (௬௱௨௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ. (௬௱௨௬)
-மு. வரதராசன்

பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ? (௬௱௨௬)
—சாலமன் பாப்பையா

இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா? (௬௱௨௬)
-மு. கருணாநிதி

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். (௬௨௨௭ - 627)


இவ்வுடலானது துன்பங்களுக்கு இலக்கானது என்று அறிந்து அதற்கு வரும் துன்பங்களுக்கு உள்ளம் கலங்காமல் இருப்பவர்களே மேலோர்கள் (௬௱௨௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டார். (௬௱௨௭)
-மு. வரதராசன்

உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார். (௬௱௨௭)
—சாலமன் பாப்பையா

துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதைத் துன்பமாகவே கருத மாட்டார்கள் (௬௱௨௰௭)
-மு. கருணாநிதி

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். (௬௨௨௮ - 628)


இன்பம் உண்டாகிய போது அதனை விரும்பாதவனாக, துன்பம் வருதலும் இயல்பு என்று உணர்பவன், எந்தக் காலத்திலும் துன்பம் அடைய மாட்டான் (௬௱௨௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்தபோது துன்பம் முறுவது இல்லை. (௬௱௨௮)
-மு. வரதராசன்

உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான். (௬௱௨௮)
—சாலமன் பாப்பையா

இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை (௬௱௨௰௮)
-மு. கருணாநிதி

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். (௬௨௨௯ - 629)


இன்பமான காலத்திலும் இன்பத்தை நுகர விரும்பாதவன் எவனோ, அவன், துன்பமான காலத்திலும் எத்தகைய ஒரு துன்பமும் அடைய மாட்டான் (௬௱௨௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை. (௬௱௨௯)
-மு. வரதராசன்

தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான். (௬௱௨௯)
—சாலமன் பாப்பையா

இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள் இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு (௬௱௨௰௯)
-மு. கருணாநிதி

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழாயுஞ் சிறப்பு. (௬௱௩௰ - 630)


துன்பமே தனக்கு இன்பமானது என்று கருதித் தொழிலைச் செய்பவன், அவன் எதிரிகளும் அவன் முயற்சியை விரும்பும் சிறந்த நிலைமையை அடைவான் (௬௱௩௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)

ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும். (௬௱௩௰)
-மு. வரதராசன்

ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும். (௬௱௩௰)
—சாலமன் பாப்பையா

துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டிய பெருமை வந்து சேரும் (௬௱௩௰)
-மு. கருணாநிதி.
 
Top