• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 1

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 1

"வாங்க மிஸ்ஸஸ் தேவ் ஆனந்த்! உங்களுக்காக தான் காத்திட்டு இருந்தேன்.. இப்படி வாசல்லயே நின்னா என்ன அர்த்தம்?" முதலிரவிற்காக அலங்காரம் செய்திருந்த அந்த அறையின் உள்ளே இருந்தவன் வாசலில் தயங்கி நின்ற அபிநயாவை வரவேற்ற விதம் அவள் எதிர்பார்த்தது தானோ?

"இன்னும் என்ன யோசிக்குறீங்க? அதுக்கான டைம் எல்லாம் எப்பவோ முடிஞ்சி போச்சு.. எப்படியும் உள்ளே வந்து தான் ஆகனும்" நிஜத்தை தான் கூறினான் அவன்.

கொஞ்சம் பயம் இருந்த போதும் அதை மனதில் மறைத்து அவள் தயங்கி உள்ளே வந்த விதத்தில் அவளின் பயம், பதட்டம் என அனைத்தையும் அறிந்து தெரிந்து உள்வாங்கி முகத்தில் எதையும் காட்டாதவாறு அமர்ந்திருந்தான் தேவ்.

கையில் இருந்த பாலை தன் அத்தை கூறியபடி அவனிடம் ஊற்றிக் கொடுக்கும் அளவுக்கு தைரியம் இல்லை. அருகில் இருந்த டேபிளில் அதை வைத்துவிட்டு நின்றவள் முகத்தில் இப்போது அவ்வளவு பயம்.

"ஹ்ம்ம் அப்புறம்?" அலங்கரத்திருந்த கட்டிலில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து அவன் கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் குனிந்து கொண்டாள்.

"மணமேடையில கல்யாணம் எப்ப நிக்கும்? எப்ப இவன் மேல பழி போடலாம்? எப்படி எல்லாரையும் சம்மதிக்க வைக்கலாம்னு பக்கா பிளான் தான்.. ஆனாலும் நானும் உன் ட்ராமாக்கு ஈசியா வழி போட்டுக் கொடுப்பேன்னு நீ நினைச்சிக் கூட பார்த்திருக்க மாட்டல்ல?" தேவ் கேட்க, கைகளை இறுக்கி கோர்த்தபடி நின்றவள் முகத்தில் பயத்தையும் மீறி தவறு செய்த பாவம்.

"நான்.. நான்.. வேணும்னு செய்யல.. என் அத்.. அத்தை.." அபிநயா பயத்தில் திக்கி திணற, இப்போது அமைதியாய் கைகட்டி அவள்முன் அவளைப் பார்த்தவாறு நின்றான் தேவ்.

"டோர் லாக் போடு" என்ன சொல்ல வருகிறாள் எனக் கேட்காமல் அவன் இப்படி சொல்ல, "ஹான்" என நிமிர்ந்து பார்த்தவள் அவன் சொன்னதும் தன் காதில் கேட்டதும் சரி தான் என்பதை போல அவன் கண்களாலும் கைகளாலும் கதவைக் காட்ட, இப்போதே கண்ணைக் கட்டியது பெண்ணுக்கு.

சொன்னதை செய்துவிட்டு வந்து மீண்டும் அதே இடத்தில் நின்று கொண்டாள்.

"உட்காரு.. பேசலாம்" அமைதியாய் தான் மீண்டும் கூறினான். இவளுக்கு தான் அவன் என்ன தண்டனை கொடுக்கப் போகிறானோ என்ற பயம்.

"அஸ்வினி உனக்கு சிஸ்டர் இல்ல?" தேவ் கேட்க,

"ஹ்ம்ம்" என தலையாட்டினாள்.

"லவ் பண்ல.. ஒன் சைட் லவ் ஆர் லவ் பெய்லியர் எதுவும் இல்ல.. மேரேஜ் புடிக்காமலும் இல்ல.. உங்க வீட்டுலயும் எந்த ப்ரோப்லேமும் இல்ல.. ஸோ உனக்காக தான் மண்டபத்துல இருந்து கல்யாணம் வேண்டாம்னு அஸ்வினி போயிருக்காங்க ரைட்?"

இவனுக்கு எப்படி தெரியும் என்கின்ற அதிர்ச்சியோடு அவள் அவனைப் பார்க்க, இது மட்டுமா என்பதைப் போல அடுத்தடுத்த அதிர்ச்சிகளை கொடுத்தான் தேவ்.

"ஹ்ம்ம்! அஸ்வினி சாப்டர் எனக்கு தெரிஞ்சு முடிஞ்சு போச்சு.. இப்ப நீ சொல்லு.. எதுக்காக இந்த கல்யாணம்? பொய் சொன்னா எனக்கு கன்னாபின்னானு கோபம் வரும்.. உண்மையை சொல்லு பார்க்கலாம்" கூறியவன் அவனே பாலை டம்பளரில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தான்.

அபிநயாவிற்கும் அனைத்தையும் சொல்வதே சரி என்று தோன்ற அனைத்தையும் கூற தயாரானாள்.

"அஸ்வினிக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா எங்க அத்தை தான் வேணும்னே அவ முன்னாடி என்னை பத்தி பேசி, நீ கல்யாணம் பண்ணிகிட்டா அவளுக்கு கல்யாணம் நடக்காதுன்னு சொல்லி அவளை போக வச்சுட்டாங்க..." சொல்லிவிட்டு இவள் அவன் முகம் பார்க்க,

"எனக்கு அது தேவை இல்ல.. நீ எதுக்காக நான் உன்னை காதலிச்சு ஏமாத்தினதா அத்தனை பேர் முன்னாடி மண்டபத்துல சொன்ன?" கோபம் தெரியவில்லை என்றாலும் பலர்முன் அவமானப்பட்ட வலி தெரிந்தது தேவ் முகத்தில்.

"இல்ல இல்ல.. நான் அப்படி எல்லாம் சொல்லல.. நான் வேணா இப்பவே எல்லார்கிட்டயும் உண்மையை சொல்லிடுறேன்.. நான்... நான்... தெரியாம பண்ணிட்டேன்" அழத் தயாராய் இருந்தாள்.

அப்போதும் அவன் அவள் முகத்தை தான் ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தான் அவளே சமாதானம் ஆகும் வரை.

"என்ன உண்மையை போய் இப்ப சொல்ல போற? தேவ் என்னை காதலிக்கலனா? ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல இவ்வளவு நேரம் என்கூட இருந்துட்டு இப்ப போய் இப்படி சொன்னா நான் உன்னை மிரட்டி சொல்ல வச்சதா நினைக்க மாட்டாங்க? இல்ல அதான் உன் பிளானா?" அவன் சொன்ன பின் தான் அவள் கேள்வியின் அபத்தமே அவளுக்கு புரிந்தது.

"நான்... எதையும்... வேணும்னு பண்ணல... எனக்கு பயமா இருக்கு... ஸ்ரீக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நான் இங்கேயே இருந்துக்குறேனே" பயம் இருந்த போதும் அபிநயா சொல்லிவிட இப்போது கண்கள் முடிச்சிட அவளைப் பார்த்தான் தேவ்.

"ஸ்ரீ?" கேள்வியாய் மீண்டும் அவளைப் பார்க்க,

"ம்ம்ம்... ஸ்ரீ தேவி. என் மாமா பொண்ணு" அவள் சொல்ல,

"வாட் நான்சென்ஸ்? அதுக்கும் இப்ப நடந்த கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்?" இப்போது தான் அவனின் கோப முகத்தையே பார்க்கின்றாள்.

இவ்வளவு நேரம் அவன் முகத்தில் கோபத்தின் சாயல் இல்லை என்பதும் இப்போது தான் புரிந்தது.

"அது.. அது.. ஸ்ரீயும் இந்த வீட்ல இருக்குற தேவ் ராஜும் விரும்புறாங்கனு.."

“என்ன?”

“ஆமா! ஸ்ரீயும் ராஜ்ஜூம்…”

"ஷட்டப்! என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு? நீ எந்த கதை சொன்னாலும் நம்பிடுவேன்னு நினைச்சியா? லுக் நீ நான் உன்னை காதலிச்சதா சொன்னதும் ஆமாம்னு சொல்லி இந்த தாலியை கட்டினதுக்கு ரீசன் இருக்கு.. ஆனா அதை வச்சு நீ இந்த வீட்ல கேம் விளையாடலாம்னு நினச்சா உன்னை சும்மா விட மாட்டேன்" கோபமாய் சொல்லியவனை இவள் பயமாய் பார்த்து நிற்க,

"நீ, உன் அத்தை கூட பேசிட்டு இருந்ததை மண்டபத்துல கேட்டேன்.. கல்யாணத்தை நிறுத்துவீங்கனு எக்ஸ்பெக்ட் பண்ணினேன்.. ஆனா இப்படி நீ பண்ணுவன்னு எதிர்பார்க்கல.. எனக்கும் தேவைன்றதால தான் இந்த கல்யாணம் நடந்துச்சு.. ராஜ் பத்தி ஏதாவது தப்பா பேசின..." ஒற்றை விரலை அவளை நீட்டி அவன் பேசிய தோரணையில் தான் இங்கு வந்த நோக்கமே தவிடுபொடி ஆனதை கண் கூடாகக் கண்டு மிரண்டு நின்றாள் அபிநயா.

அறையை திறந்து வெளியே சென்று விட்டான் தேவ்.

செய்வதறியாமல் அப்படியே நின்றவளும் சில நிமிடங்களில் பல யோசனைகளில் தரையில் அமர்ந்தவள் தன் அத்தையின் கோபக் குரலும் அசரீரியாய்க் கேட்க இந்த வாழ்வையும் தனக்கான பாதையையும் நினைத்து பயந்தே நடுங்கி அந்த தரையிலேயே படுத்துக் கொண்டாள்.

அஸ்வினி, அபிநயா! மணிகண்டன் சுசிலாவின் இரு பெண்கள். அஸ்வினியின் ஒன்பதாவது வயதில் தாய் தந்தை இருவரும் ஒரு விபத்தில் இறந்து விட அப்போது முதல் சுசிலாவின் அண்ணன் வினோதன் மாமா வீட்டில் தான் வளர்ந்து வருகிறார்கள்.

வினோதனின் மனைவி விமலா, மகள் ஸ்ரீ தேவி. வினோதன் எவ்வளவுக்கு எவ்வளவு தன் தங்கை மகள்களை நன்றாய் பார்த்துக் கொள்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு கொடுமை அனுபவிக்கிறார்கள் அத்தை விமலா மூலம்.

இப்போது நடந்து முடிந்த தேவ் ஆனந்த் - அபிநயாவின் திருமணமும் இவரின் சூழ்ச்சியால் நடந்தது தான்.

ஆனால் இதில் அபிநயாவே எதிர்பாராதது தேவ்வின் சம்மதமும் இப்போதைய அவனின் பேச்சும்.

விமலா இவர் நேரடியாய் அபி ஆனந்த் திருமணம் நடக்க நின்ற விதம் வித்யாசம் தான்.

யார் இவர்கள்? என்ன நடக்கிறது இங்கே?

அஸ்வினி சுசிலாவின் மூத்த மகள். அபிநயாவை போலவே நல்லவள் தான் என்கின்ற போதிலும் அபிநயாவை விட தெளிவானவள். கல்லூரி வரை படித்து முடித்ததும் தனக்கென ஒரு வேலையை தேர்ந்தெடுத்து ஒரு வருடமாக வேலை செய்து வந்த நிலையில் தான் தேவ் ஆனந்தின் அன்னை கனகா அவளை பெண் கேட்டு வந்தார்.

விமலாவிற்கு கனகா குடும்பத்தின் செல்வநிலை, தேவ்வின் கலையான முகம், அவனின் ஆளுமையான குரல் என அனைத்திலும் பொறாமை மட்டுமே. ஆனாலும் அஸ்வினி தேவ்வின் திருமணத்திற்கு அவர் சம்மதம் சொல்ல ஒரே காரணம் தேவ் உடையது கூட்டு குடும்பம் என்றது தான்.

அதற்கும் உள் நோக்கம் உண்டு. தேவ் ஆனந்தின் குடும்ப சொத்து அனைத்தும் கனகாவின் தந்தை நடராஜன் பெயரில் இருப்பது தான்.

நடராஜனுக்கு ஒரு மகள் ஒரு மகன். கனகாவும் அவருடைய தம்பி குமரனும்.

கனகா திருமணம் ஆன சில வருடங்களிலேயே கணவனை இழந்து குழந்தையுடன் தந்தை வீட்டில் இருக்கிறார்.

கனகா திறமைசாலி என்றாலும் அவரின் முகத்தில் இருக்கும் இறுக்கமும் வார்த்தையில் இருக்கும் கடினமும் என ஆளுமையுடன் எவரையும் தள்ளி நிறுத்தியே வைப்பது அவர் இயல்பு.

தம்பி குமரன் அக்காவின் பேச்சை அப்படியே கேட்டு நடக்கும் நல்லவர். நடராஜன் வயது மூப்பின் காரணமாக நடக்க முடியாமல் வீட்டில் தான் இருக்கிறார். கனகா தான் அவரின் கம்பெனி பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார். குமரன் கம்பெனியில் அக்காவிற்கு துணையாய் இருக்கிறார்.

குமரனின் மனைவி பவானி. ஒரு மகன் தேவ் ராஜ்.

ஆக மொத்தம் கூட்டு குடும்பமாய் இருந்தாலும் சொத்துக்கள் அனைத்தையும் நடராஜன் மகளுக்கு எழுதி வைக்க வாய்ப்பே இல்லை. எப்படியும் மகனுக்கு தான். எனவே கனகா மகனுக்கு இந்த அஸ்வினியை கொடுக்க அவருக்கு எந்த எதிர்ப்பும் முதலில் இல்லை.

இப்படி தான் விமலாவின் கணக்கு ஆரம்பம் ஆனது.

நிச்சயதார்த்தம் விமலாவின் தொல்லையால் வீட்டிலேயே எளிதாய் முடிந்திருக்க, அது முடிந்த பின் தான் அனைத்தையும் ஏடாகூடமாய் யோசித்து செய்யவும் ஆரம்பித்தார்.

நிச்சயதார்த்தத்தில் தேவ் ஆனந்தின் துணை மாப்பிள்ளையாய் உற்ற தோழனும் மாமா மகனும் ஆன தேவ் ராஜ் நிற்க, அஸ்வினி அருகில் நின்றதோ விமலாவின் மகள் ஸ்ரீ தேவி.

இப்படி தேவ் ராஜ், ஸ்ரீ தேவியை பார்த்த பின் தான் மனதில் ஒரு எண்ணம் முளைத்து வேர்விட்டு வளரத் தொடங்கியது விமலாவிற்கு.

அவரின் எண்ணப்படி திருமணத்திற்கு முந்தைய நாள் அஸ்வினியை தனியாய் அழைத்து பேசினார்.

"என்ன அத்தை இந்த நேரம் என்ன பேசணும்?" அஸ்வினி கேட்க,

"உனக்கு கல்யாணம்னதும் சந்தோசமா தாலிக் கட்டிக்க போறியே? உன் தங்கச்சி நினச்சு கொஞ்சமாச்சும் கவலை இருக்கா உனக்கு?" எடுத்ததும் இப்படி தான் ஆரம்பித்தார் விமலா.

"என்னத்தை இப்படி சொல்றிங்க? அபியை அப்படி எல்லாம் நான் விட மாட்டேன்" அஸ்வினி பதறி சொல்ல,

"அது சரி! உனக்கு கல்யாணம் பண்ணவே என் புருஷன் பெரிய இடம்னு லோன் மேல லோன் போட்டு கல்யாணத்தை அலப்பறையா நடத்துறாரு.. இதுல உன் தங்கச்சிக்கும் அப்படி செஞ்சு வச்சா என் பொண்ணையும் பையனையும் நான் தெருவுல தான் விடணும்"

முகத்துக்கு நேராய் இப்படி பேசுபவரிடம் என்ன சொல்ல? அதுவும் அஸ்வினியின் சம்பாத்தியத்தில் தான் பாதி செலவுகள்.. வினோதன் அவரால் முடிந்த அளவுக்கு செய்கிறார்.

"இங்கப் பாரு... நீ பொழைக்க தெரிஞ்சவ.. ஆனா உன் தங்கச்சி அப்படி இல்ல.. நீ பாட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு போய்டுவ.. நான் அவளுக்கும் கல்யாணம் பண்ணி சீர் செஞ்சி எப்போ என் பிள்ளைகளை பாக்குறது?"

"இப்ப என்ன சொல்ல வர்றிங்க அத்தை?" நேராய் பார்த்து அத்தையிடம் கேட்டாள் அஸ்வினி.

"அது உன் இஷ்டம்.. ஆனா அவளுக்கும் இப்படி கல்யாணம் பண்ணி அழகு பார்ப்பேன்னு நினைக்காத.. ஏதோ ஒன்ன புடிச்சுட்டு வந்து கோவில்ல வச்சு தாலிய கட்டி அனுப்பிவிட தான் என்னால முடியும்.. அப்புறம் என் குடும்பத்துக்கு நீ சாபம் விடக் கூடாது" தனக்கு வேலை இவ்வளவு தான் என்பதை போல பேசிவிட்டு அவர் சென்றுவிட அஸ்வினியும் யோசிக்க ஆரம்பித்தாள்.

தன் அளவுக்கு தங்கைக்கு விவரம் போதாது.. முதலில் அவளுக்கு திருமணம் செய்துவிட்டு அடுத்து தனக்கு பார்திருக்க வேண்டுமோ.. என்று யோசித்தவள் பின் இப்போது தன்னை திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை பற்றி மாமா சொன்னதை நினைவுக்கு கொண்டு வந்தாள்.

"ரொம்ப நல்ல பையன் அஸ்வினிமா.. பார்க்கவும் அழகா தெரியுது.. அப்பா இல்ல அம்மா மட்டும் தான். குடும்பமும் நல்ல குடும்பம்.. பிரச்சனைனு எதுவும் இல்ல" முதல் நாள் பெண் பார்த்து விட்டு சென்ற பின் இப்படி கூறி இருந்தார் வினோதன்.

உடனே முடிவு செய்து விட்டாள் அஸ்வினி. தான் இல்லாமல் திருமணம் நின்றால் அந்த இடத்தில் மணப்பெண்ணாக அபிநயாவை தானே வைப்பார்கள்? அப்படித் தான் தோன்றியது. இந்த ஒரு வருடத்தில் யார் துணையும் இன்றி தனியாய் வாழவும் கற்றுக் கொண்டிருந்த அஸ்வினிக்கு இதுவே சரி என்று தோன்றவும் யாரிடமும் சொல்லாமல் மண்டபத்தை விட்டு வெளியேறி இருந்தாள்.

இதை தான் எதிர்பார்த்திருந்தார் விமலா. இதை ஆனந்த் கேட்டுக் கொண்டிருந்ததை அவர் அறியவில்லை. திருமணத்தை நிறுத்த அவர் பேசுவதும் அவனுக்கு தெரியவில்லை. குழப்பம் வர போகிறது என்று மட்டுமே அவன் நினைத்திருந்தான்.

அடுத்ததாய் விமலா போய் நின்றது அபிநயா முன் தான்.

நடந்ததை அப்படியே கூறி இருந்தார் அவளிடமும். தனக்காக யோசிக்கும் அக்காவை பற்றி அறிந்தவள் தான் அபிநயா..

"நான் என்ன அவளை மண்டபத்தை விட்டா ஓட சொன்னேன். கல்யாணம் நின்னா மானம் போய்டும்.. நீ எதுவும் செய்ய வேண்டாம்.. நான் சொல்றதுக்கு எல்லாம் ஆமாம் போடு அது போதும்" இப்படி சொல்லி தான் அபிநயாவை குறித்த நேரத்திற்கு அழைத்து வந்ததும்.

விமலாவே தான் ஆனந்தின் மேல் பழியைப் போட்டதும். இவன் தானே என்று கேட்டபோது அவன் முகத்தையும் பாராமல் தன் அத்தையின் கிள்ளையும் வாங்கிக் கொண்டு ஆம் என்று தலையை மட்டுமே அசைத்தாள்.

அடுத்து யாருமே எதுவுமே பேசத் தேவை இல்லை என்பதைப் போல தேவ் ஆனந்த்தும் அதை ஒத்துக் கொண்டு தாலி கட்ட தயாரான போது கோபத்தில் கனகா மண்டபத்தை விட்டு வெளியேறிவிட நடராஜன் தாத்தாவும் குமரனின் மனைவி பவானியும் தான் ஆனந்த் அருகில் அவனுக்கு பக்க பலமாய் நின்றனர்.

தேவ் ராஜ் உறவைத் தாண்டி ஆனந்திற்கு உயிர் நண்பனானவன். அவனின் துணையுடன் தான் அபிநயாவை கரம் பிடித்திருக்கிறான் ஆனந்த்.

இப்படி நடந்து முடிந்த திருமணம் தான் ஆனந்த் அபிநயா திருமணம்.

விமலாவின் செயலுக்கு காரணம் மகள் ஸ்ரீ தேவியை குமரனின் மகன் தேவ் ராஜிற்கு திருமணம் செய்யும் ஆசையில் தான். அஸ்வினி நிச்சயம் அதற்கு தடையாக தான் இருப்பாள். அபிநயா அந்த இடத்தில் இருந்தால் தான் நினைத்தபடி அவளை ஆட்டி வைக்கலாம் என்பது தான் அவருடைய மொத்த பிளானுமே!.

முதலிரவு அறையில் இருந்து வெளியே வந்தவனை பார்த்த தேவ் ராஜ் அவனை யார் கண்ணிலும் படவிடாமல் தன் அறைக்கு இழுத்து சென்றான்.

"நீ இப்ப ஏன் டா வெளில வந்த?" ராஜ் கேட்க,

"ம்ம்ம்! வேண்டுதல்.." - தேவ்.

"டேய்"

"ப்ச்! படுத்தாத டா.. முடியல! வந்துட்டேன்"

"இதென்ன டா பதில்? நீ தானே லவ் பண்ணினதா சபைல சொன்ன?" ராஜின் கேள்வியில் அவனை பலமாக முறைத்தான் தேவ்.

"முறைச்சா மட்டும்? ஏன்டா அறிவுன்னு ஒன்னு இல்லவே இல்லையா உனக்கு? உங்க அம்மாவை இன்சல்ட் பண்றதா நினச்சு உனக்கு நீயே ஆப்பு வச்சுட்டு நிக்குற.. தெரியுதா உனக்கு?" மீண்டும் ராஜ் அவனை கிண்டல் செய்து அவன் தவறை உணர்த்தப் பார்த்தான்.

நிச்சயம் ராஜிற்கு தெரியும் ஆனந்த் விரும்பி அபிநயாவை திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்த மண்டபத்தில் யார் யார் நம்பி இருந்தாலும் ராஜ் என்பவன் அடித்து சொல்லுவான் ஆனந்த் பொய் சொல்லி தான் இந்த திருமணத்தை நடத்துகிறான் என்று. ஆனால் அந்த நேரம் பார்வையாலேயே ராஜை அமைதியாக்கி இருந்தான் ஆனந்த்.

"இப்ப எதுக்கு அந்த ரூம்ல இருந்து வெளில வந்த? என் கண்ணுல மாட்டின மாதிரி வீட்ல யாரு கண்ணுலயாச்சும் ஏன் உன் அம்மா கண்ல மாட்டியிருந்தாலே போதும்.. அந்த பொண்ணை காலையில இந்த வீட்ல பார்க்க முடியாது.. தெரியும்ல?" ராஜ் கேட்க, இப்போது தான் அன்னை ஞாபகம் வந்தது ஆனந்திற்கு.

"என்னால முடியல டா" என்றபடி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் தேவ்.

"ஏன் டா? அவ தான் பொய் சொல்றானு தெரியுதே.. போனா போகட்டும்" விட்டேற்றியாய் சொல்லிவிட்டு ராஜ் கூலாய் அமர,

"ஆனா நான் பொய் சொல்லையே" என்றான் ஆனந்த்.

தொடரும்..
 

Vinolia Fernando

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 7, 2021
Messages
6
Ethe poi sollalaya.... ada pavi appo abi ha love pannuran ha
 
Top