• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 11

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 11


மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தது செழியனின் கார்.

அவனும் அவளும் மட்டும் ஆன இந்த பயணத்தை அவன் ரசித்து அமர்ந்திருக்க, அப்படி இயல்பாய் இருக்க விடாமல் சிறு உறுத்தல் மலருக்கு.

அதை கேட்கவும் முடியாமல் கேட்காமல் இருக்கவும் முடியாமல் என அவள் தடுமாறி அமர்ந்திருக்க, தனக்கு பிடித்தவளுடனான இந்த பயணத்தையும் குளிர் காற்றையும் உள்வாங்கி வற்றாத புன்னகையுடன் வண்டியை இயக்கிக் கொண்டிருந்தான் செழியன்.

"மதுரைல என்ன பேமஸ் மலர்?" செழியன் கேட்க, தன் யோசனையில் இருந்தவள் அவன் திடீர் கேள்வியில் விழித்தாள்.

"ஹான்! என்ன கேட்டிங்க?"

"இல்ல மதுரைல என்ன பேமஸ்னு கேட்டேன்" என்றான் மீண்டும்.

"மீனாட்சி அம்மன் கோவில் தான்.."

"ஓஹ்! வேற!"

"வேற! அரண்மனை ஒன்னு.. நாயக்கர் மஹால்னு சொல்லுவாங்க.." அவள் கூற,

"ஹ்ம்! நாயக்கர் மஹால் தானே? கேள்வி பட்டிருக்கேன்" என்றான்.

"ம்ம்ம்" என்று அவள் தலையசைக்க,

"வேற?" என்றான் மீண்டுமாய்.

"வேற என்ன? தெரியலையே" என்றவளுக்கு சிறிது நேரம் பேசாமல் வந்தால் பரவாயில்லை என்று தோன்றியது.

இப்படி அமைதியாய் இருந்ததில்லை அவளும். மனதின் குழப்பம்.. குழப்பத்தின் காரணம் என அவள் மனது வேறு எங்கும் செல்லாமல் எதிலும் ஈடுபடாமல் இருக்க, இயல்பை தொலைத்து அமர்ந்திருந்தாள்.

"உன்னை பேச வைக்க தான் இதெல்லாம் கேட்டதே! இதுக்கு பஸ்லயே வந்திருக்கலாம் போல.." என்றான் அவள் அமைதியைக் காட்டி.

"சரி என்னை தெரியுமா உனக்கு?" அவன் கேட்க,

"அதான் இருக்கீங்களே?" என்றவளைப் பார்த்து அவன் சிரித்து,

"என்னோட டீடெயில்ஸ் தெரியுமான்னு கேட்டேன்.. உடனே வீட்டு அட்ரஸ் தானேன்னு கேட்டுடாத" என்றதும் அவளுக்கும் சிறு புன்னகை தோன்றியது.

"ஸ்கூல், காலேஜ் எல்லாமே சென்னை தான்.." என்றவன் கல்லூரி பெயரையும் கூறினான்.

"கவினை அங்க இருந்து தான் தெரியும்.. அவன் இல்லைனா இப்ப எதுவுமே இல்ல" என்றவனது அர்த்தம் அவளுக்கு புரிய வாய்ப்பில்லை.

"அப்பா கம்பெனியை பார்த்தாலும் தனியா எதாவது செய்யணும்னு ஆசை.. முடிவு பண்ணினதும் கவின், பிரேம்கிட்ட கேட்டேன்.. இவங்க ரெண்டு பேர் தான் பேமிலிக்கு அப்புறம் எனக்கு எல்லாமே"

"சென்னை தாண்டி எங்கேயும் போனதில்ல.. காலேஜ் முடிச்ச டைம்ல இருந்து தான் கவின் கூட மதுரை வர ஆரம்பிச்சதே" அவன் கூற இவள் கேட்டபடி வந்தாள்.

"சின்னதா அப்பப்ப ட்ரிப் போயிருக்கேன்.. பட் ஸ்டே பண்ணதில்ல.. ம்ம் போலாம்" என்றான் ஏதோ யோசித்தவனாக.

"அப்புறம்! நீ சொல்லேன்" சொல்லிவிட்டு சாலையில் அவன் கவனம் பதிக்க,

"நான் என்ன சொல்ல? அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி, ரச்சு.. ஜாலியா இருக்கும் வீட்டுல எப்பவும்.. அண்ணா லவ் மேரேஜ்.. அண்ணினால தான் வீடு எப்பவும் சத்தமா இருக்கும்" என்றவள் வீட்டின் நினைவில் புன்னகை பூத்தாள்.

அவனும் பார்த்தபடியும் கேட்டபடியும் வர, "படிச்சது லேடிடோக் வுமேன்ஸ் காலேஜ்" என்று கூற,

"ஹ்ம் தெரியுமே" என்றான் சட்டென்று. அதில் அவளும் சட்டென திரும்பிப் பார்க்க, அவள் பார்வையில் உணர்ந்து,

"இல்ல கவின் சொல்லி இருக்கான்" என்று செழியன் சமாளிக்க, மீண்டும் அவளுள் ஒரு சலனம் அவளை வாயடைக்க வைத்தது.

மறந்திருந்த ஒன்று மீண்டும் நியாபக அடுக்கின் மேலேறி நிற்க, அடுத்த வார்த்தை அவளிடம் இருந்து வராமல் போக, தான் உளறியதிலும் சமாளித்ததிலும் அவன் மனமும் திசை திரும்பி இருந்தது.

ஏழு மணி நேர பயணம். இசையில் சில மணி நேரங்களும், அமைதியில் சில மணி நேரங்களும், செழியனின் வார்த்தைகளில் சில நேரங்களும் என கடந்து மதுரையை வந்து அடைந்திருந்தனர்.

அன்னை தந்தையைக் கண்டதும் ஓடி சென்று அவள் கட்டிக் கொள்ள, அதைப் பார்த்தபடியே பின் வந்து நின்றான் செழியன்.

"ஹாய் மலர் மாமா!" ரச்சனா செழியனிடம் வந்துவிட,

"ஹாய் ஏஞ்சேல்" என தூக்கிக் கொண்டான் அவன்.

"அடிப்பாவி! இவ்வளவு நேரமும் அத்தையைக் கேட்டுட்டு மாமாகிட்ட ஒட்டிக்குற" அஜிதா கேட்க,

"மாமா நான் கேட்டதெல்லாம் வாங்கி தர்றேன்னு சொல்லி இருக்காங்க" ரச்சனா அவன் கூறியதை நியாபகப்படுத்த,

"அதானே பார்த்தேன்.. வந்ததும் வராததுமா.. ஆளைப் பாரு" என்றாள் மகளை அஜிதா.

ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்து செல்ல, அன்னையுடன் சமையலறைக்குள் பேசியபடி சென்றுவிட்டாள் மலர்.

மகேந்திரனுடன் அமர்ந்து செழியன் பேசிக் கொண்டிருக்க, அவன் கைகளுக்குள் ரச்சனா.

"அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க மலர்? பழக எல்லாம் நல்லாருக்காங்க தானே?" சித்ரா கேட்க,

"எல்லாரையும் விடு அதெல்லாம் நல்ல டைப் தான்.. நேத்தே பார்த்தோமே.. அண்ணா எப்படி?" என்று அஜிதா கேட்டாள்.

என்ன பதில் சொல்ல? அவள் பார்த்ததை வைத்தும் கேட்டதை வைத்தும் கூற முடியாதே! இரண்டையும் நம்ப தயாராய் இல்லை.

அவளுக்கே பதில் தெரியவில்லை. கவினிடம் தான் கேட்க வேண்டும்.. பார்த்ததை கேட்டதை என.

அதற்கு முன் எதுவும் பேசி வைக்க வேண்டாம் என்ற முடிவிற்கு வந்தவள் அந்த கேள்வியை தவிர்த்து மற்றதை பேச, சித்ராவும் மகளினை கவனிப்பதில் இறங்கிவிட, அஜிதாவின் கண்களுக்கு அது தப்பாமல் விழுந்தது.

"மலர்!" என்ற மகேந்திரன் குரலுக்கு அவள் வெளியே வர,

"செழியனை உங்க ரூம்க்கு அழைச்சுட்டு போ" என்றான்.

"வாங்க!" என்றவள் பின்னே இவனும் அவள் அறைக்கு சென்றான்.

"ஹ்ம்ம் நைஸ்!" ரசனையாய் அவன் பார்வை அந்த அறையை சுற்றி வந்தது.

"உன்னை மாதிரியே இருக்கு மலர்" என்றவன் குரல் என்னவோ செய்ய, அவள் வெளியே செல்ல போக, "அந்த பாக்ல இருந்து டிஷர்ட் எடு மலர்" என்றவன் குளியலறை சென்று கதவடைத்துக் கொண்டான்.

மலர் என்று தான் அனைவருமே அவளை அழைப்பது என்றாலும் இவன் அழைப்பதில் ஒரு வித்தியாசம் இருப்பதாய் தோன்றும். இப்போதும் தோன்ற தான் செய்தது.

வெளியில் செல்பவளை நிறுத்தவே அவன் கேட்டிருக்க, அவளும் அவன் கூறியதை செய்தாள்.

ஒன்றை எடுத்து வைத்துவிட்டு போகலாம் என்று நினைத்து பேகை திறக்கவும் அவள் கண்களில் விழுந்தது அந்த பேண்ட்டின் பாக்கெட்டில் இருந்து தொங்கிக் கொண்டு இருந்த சங்கிலியும் பேப்பரும்.

கையில் எடுத்துப் பார்த்தவள் பார்த்தபடி இருக்க, காதில் தோழியின் குரல்.

"இவரா?" என்ற குறுஞ்செய்தியில் மலர் தோழிக்கு பதில் அனுப்பாமல் கேள்வியாய் அதை பார்த்தபடி இருக்க, அழைத்துவிட்டாள் அவள் தோழி.

"ஏய் மலர்! இவரை நீ பார்த்தது இல்ல?" என்று மீண்டும் அவள் கேட்க, மலருக்கு பார்த்த நியாபகமே இல்லை.

"நம்ம காலேஜ்க்கு அடிக்கடி வருவாரு டி.. நம்ம நேத்ரா மேம் ஆளுன்னு பேசுவோமே? மறந்துடுச்சா?" என்று கேட்க, திட்டுகிட்டாள் அவள்.

"என்ன சொல்ற பிரியா? இது அவரா இருக்காது.. நீ நல்லா பார்த்திருக்க மாட்ட" என்று மலர் அடித்து கூற,

"எனக்கு நல்லா நியாபகம் இருக்கு.. உனக்கு இல்லையா?" என்றவள் கேள்விக்கு மலர் அப்படி கவனித்தது இல்லையே!.

ஆனாலும் வகுப்பில் பலர் பேசுவது உண்டு.. நேத்ராவின் அழகையும் உடன் அவர்கள் பார்க்கும் அவனின் அழகையும் என.

யார் என்ன ஏன தெரியாமல் ஒரு பெண்ணைத் தேடி ஆண் வந்தால் அது காற்றில் பரவுவது பல விதங்கள் தானே?

"ப்ரைடே ஆனா இவரை நம்ம காலேஜ்ல பாக்கலாம்.. ஆளு செம்மயா இருக்காருன்னு நம்ம க்ரூப்ல கூட பேசுவோம் இல்ல.. நானே சைட் அடிச்சிருக்கேன்.. எப்படி டி மறந்த? ஆனா நேத்ரா மேம் என்ன ஆனாங்க? லவ்வுன்னு தான் நினைச்சோம்.." என்று இழுத்தவள்,

"இல்லைனும் சொல்ல முடியாது இல்ல.. என்னவோ.. லவ் ஃபெய்லியர் எல்லாம் இப்ப சகஜம் தானே?" போகிற போக்கில் கூறி அவள் வைத்துவிட, அது நெருஞ்சி முள் தான் மலருக்கு.

நினைத்தபடி இருந்தவள் கையில் இருந்த சங்கிலியைப் பார்க்கவும் குழப்பம் கோபமாய் மாறியதோ.

எடுத்த முடிவில் உறுதியாய் இருந்து கண்களால் காண்பதும் கதால் கேட்பதும் பொய் என சில நொடி நிதானித்து இருந்தால் சில மனஸ்தாபங்கள் எழுந்திருக்கவே இராதே!

சங்கிலியுடன் இருந்த அந்த பேப்பரை அவள் கண்டுகொள்ளவே இல்லை. எண்ணங்கள் யாவும் ஒன்றும் ஒன்றும் மூன்றாய் இருக்க, கவனம் சிதறி இருந்தது.

"பரவாயில்லையே.. எடுத்து வச்சுட்டு போய்ட்டியோன்னு நினச்சேன்" என்று சிரித்தபடி வந்தவன், அவள் கையில் இருந்ததைப் பார்த்ததும்,

"ஓஹ் காட்!" என்றான் தலையில் கைவைத்து.

'சொதப்பல் டா நீ! ஒரு சர்ப்ரைஸ் சரியா குடுக்க தெரியுதா உனக்கு?' என்ற வார்த்தைகளை சத்தமாய் கூறாமல் தனக்குள் சொல்லிக் கொண்டது மட்டும் தான் அவன் செய்த தவறு.

"மலர்! இந்த செயின்..." என்று அவன் கூற வர,

"நேத்ரா மேம் தெரியுமா?" என்றாள் சட்டென்று அவனை பேச விடாமல்.

ஒரு நொடி தெரியாமல் விழித்தவன் பின் நியாபகம் வந்தவனாக மெலிதாய் மட்டும் ஆச்சர்யம் காட்டி சிரித்தவன், "உனக்கு எப்படி..?" என்றான் கேள்வியாய்.

ஒருவேளை கவின் கூறி இருப்பானோ என்ற எண்ணம். ஆனாலும் காரில் வரும் பொழுது கூட எதுவும் கேட்கவில்லையே அவள்? இப்பொழுது எப்படி? என்ற யோசனையில் அவன் முழுதாய் கேட்காமல் விட,

"ஓஹ்! அப்ப உண்மை தானா?" என்றாள் அவன் முகத்தில் உண்டான மாற்றத்தில். குரல் முழுதும் இறுகி இருந்தது. அவள் எண்ணப் போக்கின் விளைவு அது..

அது ஏற்படுத்தப் போகும் விளைவு விபரீதம் என எதையும் அவள் அறியவில்லை.

இவ்வளவு நேரமும் தெளிவாய் யோசித்து கவினிடம் கேட்டு தெரிந்து கொள்ள எண்ணி இருந்தவளின் எண்ணம் எல்லாம் அந்த சங்கிலியிலும் அதிலுருந்த எழுத்துக்களிலும் காணாமல் போயிருந்தது.

தன் காதல் தெரியும் பொழுது அவள் முகத்தின் மாறுதல்கள் என்னவாய் இருக்கும் என பலமுறை நினைத்ததுண்டு அவன்.

அவள் கேட்ட கேள்வியில் இவன் காதலை அறிந்து கொண்டாள் என நினைத்தவனுக்கு அவள் குரலும் சொல்லின் தொனியும் என இப்படி கல்லென அவள் நிற்பதன் அர்த்தம் புரியவில்லை.

"மலர்?" புரியாமல் அவன் அழைக்க,

"நேத்ரா மேம்க்கு கல்யாணம் ஆகிடுச்சா?" என்றாள் அப்போதும்.

ஒருவேளை அவர் திருமணம் ஆனதின் விளைவாய் இவன் திருமணத்திற்கு சம்மதம் கூறி இருப்பானோ என்ற எண்ணம்.

முற்றும் முதலும் இவளிடம் தவறாய் இருக்க, அவள் கேள்வியே அவனுக்கு புரியவில்லை.

"இல்லையே! எக்ஸாம்ல பிஸி.. இல்லைனா கல்யாணத்துக்கு வந்திருப்பாங்க" என்றான்.

"ஓஹ்! அப்ப இப்போ பிரண்ட்ஸா தான் இருக்கீங்களா?" என்றவள் குரல் பேதம் அவனுள் எதையோ உணர்த்தியது.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
போச்சுடா.....
மனசுக்குள் சந்தேகத்தை வைத்துக்கொண்டு மலர் பேச மலரின் மனதில் இருப்பது எது என மன்னவன் அறியாமல்.....
மனக்குழப்பத்தில் இருவரும்......
மதுரை மல்லிக்கும் பேமஸ் மலரு.....
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
போச்சுடா.....
மனசுக்குள் சந்தேகத்தை வைத்துக்கொண்டு மலர் பேச மலரின் மனதில் இருப்பது எது என மன்னவன் அறியாமல்.....
மனக்குழப்பத்தில் இருவரும்......
மதுரை மல்லிக்கும் பேமஸ் மலரு.....
Use pannikuren
 
Top