• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் -14

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
46
45
18
Chennai


உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -14

தொழிற்சாலைக்கு வந்தவன் பாவையிடம் சொல்லி விட்டு அவன் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தான்.பாவையோ தொழிற்சாலைக்ககுள் சென்றவள் மற்ற விவரங்களைப் பார்க்கச் சென்றான்.


மகிழுந்தின் மற்ற பாகங்கள் பற்றிய விவரங்களை பாவை பார்த்துக் கொண்டிருக்க நேரம் சென்றதே அவளுக்கு தெரியவில்லை.ஓரளவு எல்லா விவரங்களையும் பார்த்து முடிக்க நேரத்தைப் பார்க்க மாலை ஆகியிருந்தது.


வேலைப் பளு இருந்ததால் பசியும் தெரியாமல் இருந்தது.இப்போது நேரத்தைப் பார்க்கவும் அவளுக்கு இன்னும் பசி எடுக்க ஆரம்பித்தது.அவளுடன் எடுத்து வைத்திருந்த சாப்பாடு பையை தேடியவள் அது கிடைக்காமல் போக சோர்ந்து போய் உட்கார்ந்தாள்.


அப்போது கிம் கைப்பேசியில் அழைத்தவன் “பாவை ஆபிஸ் ரூம் வாங்க சாப்பிடலாம்” என்றான்.


இவளோ “சார் நான் கொண்டு வந்த என்னோட லஞ்ச் பேக் எங்கேன்னு தெரியலை”


“ம்ம்… நான் கண்டுபிடிச்சுட்டேன் பாவை நீங்க வாங்க” என்றதும் சரி என்று அந்த அறையை நோக்கி செல்ல ஆரம்பிக்கும் போதே எங்கே வைத்தோம்? என்று யோசிக்க ஆரம்பித்தவளுக்கு இதற்கு முன்னால் அவள் அமர்ந்திருந்த மரத்தின் பக்கம் வைத்திருந்தது நினைவுக்கு வர வேகமாக கிம்மை பார்க்கச் சென்றாள்.


அங்கே அந்த அறையில் காத்திருந்தவன் பாவையைக் கண்டதும் “பாவை வெயிட் பண்ணுங்க உங்க சாப்பாட்டை சூடு பண்ணச் சொல்லி இருக்கேன் இப்போ வந்திடும்” என்றான்.


அவளோ சற்றே தயக்கத்தோடு “சார் என்னோட லஞ்ச் பேக்கை நான் ஏற்கனவே நாம போன பேக்டரில வைச்சுட்டேன்” என்ற போது அவனோ “ம்ம்… தெரியும் எனக்கு அங்கிருந்து கால் வந்துச்சு உங்க லஞ்ச் இங்கே வைச்சுட்டு போய்ட்டீங்கன்னு அதான் நானே போய் வாங்கிட்டு வந்துட்டேன் இங்கே எனக்கு தெரிஞ்ச ஒரு வொர்க்கரோட வீடு பக்கத்தில் இருக்கு ரொம்ப லேட்டாயிடுச்சு அதான் சாப்பாட்டை திரும்ப சூடு பண்ணச் சொன்னேன்.சாப்பிடும் போது நல்லபடியாக நீங்க சாப்பிடனும் தானே உங்க அம்மா மெனக்கெட்டு செய்து இருக்காங்க” என்றான்.


கிம்மை என்னச் சொல்வதென்று தெரியாமல் ஒரு வார்த்தையில் “ரொம்ப தாங்ஸ்” என்று சொல்லும் போது அவன் கொடுத்து இருந்த சாப்பாடும் வந்தது.


கிம் “பாவை சாப்பாடு வந்திடுச்சு நீங்க சாப்பிடுங்க”என்றான்.


அவளோ “நீங்களும் வாங்க சார் ஒன்றாக சாப்பிடலாம்” என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் அவனும் அவளுடன் சேர்ந்து சாப்பிட அமர்ந்தான்.


வெஜிடபிள் பிரியாணி,முட்டை,சப்பாத்தி அதற்கு தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு வருவல் கொஞ்சம் காய்கறி சேலட் என்று கிம்மிற்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வந்திருக்கிறாள் என்று அவள் கொண்டு வந்திருந்த சாலட்டை பார்த்து புரிந்துக் கொண்டவன் புன்னகை ஒன்றை சிந்தினான் கிம்.அவனின் புன்னகையை கண்டுக் கொண்டவளோ எதுவும் தெரியாதது போல் இருந்துக் கொண்டாள்.


பாவையின் அம்மாவின் சாப்பாட்டை இரசித்து ருசித்து சாப்பிட்டவன் பாவையிடம் “உங்க வீட்டில் என்னை அழைச்சு எப்போ விருந்து -ஜான்ஜி வைப்பீங்க” என்றதும் புன்னகை ஒன்றை பதிலாகத் தந்தாள் பாவை.


இருவருக்கும் உள்ளான ஒரு பிணைப்பு இப்பொழுது லேசாக ஆரம்பித்தது.அவளின் சிறு விஷயங்களையும் அவன் கவனித்து செய்ய ஆரம்பிக்கையில் பாவையின் மனதின் ஓரம் அவனைப் பற்றிய எண்ணங்கள் வர ஆரம்பித்தன.


அவனின் யாரென்று தெரியாத ஒருவனின் அன்பான அக்கறை அவளை கொஞ்சம் கொஞ்சமாக அவன் பக்கம் இழுத்தது.இருவரும் முதலில் குறுஞ்செய்தியில் காலையில் ஆரம்பித்த வாழ்த்துக்கள் இரவில் இரவு வணக்கத்தோடு முடிந்தது.நேரில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.


பாவை அவனைப் பிடித்து இருக்கிறது என்று சொல்லவில்லை.ஆனால் கிம் அவளுடனான தன் நெருக்கத்தை சின்னச் சின்ன உரையாடல்களிலும் புன்னகையிலும் காட்டினான்.


சென்னையில் உள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்க துணைக்கு பாவையை தன்னோடு அழைத்தான்.அவர்களுடன் சில நேரங்களில் விமலாவும் வருவாள்.கிம் இவர்கள் இருவருடன் ஒரு நல்ல நட்பு பாராட்டி வந்தான்.


ஒருநாள் விடுமுறை தினம் அன்றைக்கு பாவை முக்கியமான சில கோப்புக்களை தயார் செய்ய வேண்டி இருந்தது.அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்ததால் கிம்மை கைப்பேசியில் அழைத்தாள்.


“ஹலோ சார்”


கிம் “சொல்லுங்க பாவை”
என்றான்.


“சார் நாளைக்குள்ள மீட்டிங்கான ப்ராஜெக்ட் பைல்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டேன் சில கரெக்ஷ்ன்ஸ் இருக்கு நீங்க வீடியோ கால்ல வந்தால் மிஸ்டேக்ஸ் சொல்லச் சொல்ல நானே சரி பண்ணிடுவேன்” என்றாள்.


அவனோ கொஞ்சம் தயங்கியவாறு “அதை நாளைக்கு பார்த்துக்கலாம் பாவை” என்றதும் இவளோ அதிர்ச்சியாகி மனதினுள் ‘'எப்போதும் வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லுறான் நம்ப முடியலையே’ என்று யோசித்தவள் “என்னாச்சு சார்?”


அவனோ “கொஞ்சம் கண்ணு வீக்கமாக இருக்கு எதாவது அலர்ஜி ஆயிடுச்சான்னு தெரியலை இப்போ ரீட் பண்ண முடியாது” என்றான்.அப்போது தான் அவளுக்கு நினைவு வந்தது அவன் வெறும் குரல் பதிவுக்கான குறுஞ்செய்தி மட்டும் அனுப்பி இருந்தது நினைவுக்கு வந்தது.


உடனே “சார் உங்க வீட்டோட அட்ரஸ் அனுப்பி விடுங்க நான் நேர்ல வந்து என்னன்ன சந்தேகம் இருக்கோ கேட்டுக்கிறேன் அப்போ நீங்க சொல்லத் தானே போறீங்க நானே பார்த்துக்கிறேன்” என்றாள்.


உடனே கிம் “வேண்டாம் பாவை எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத சிரமம்?” என்றதற்கு அவளோ பிடிவாதமாக விலாசத்தை அவனிடம் கேட்டு விட்டு அவள் அம்மாவிடம் தோழியை பார்க்கச் செல்வதாகச் சொல்லி கிம் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புச் சென்றாள்.


ஓரளவு இணைய உலாவியின் உதவியால் கிம்மின் குடியிருப்பை கண்டுபிடித்தவள் அவன் இருக்கும் பத்தாவது மாடிக்குச் சென்று அலார மணியை அழுத்தவும் கிம் வந்து கதவை திறந்து விட்டான்.


தலையில் தொப்பி முகத்திற்கு முகமூடி அணிந்து அவன் நிற்பதை பார்த்து “என்னாச்சு சார்? இப்போ முகத்தை எனக்கு தெரியாமல் எதுக்கு மறைக்கிறீங்க?” என்று உரிமையாக அவன் அணிந்திருந்த தொப்பியை கழற்றினாள்.கண்களின் வீக்கம் ஓரளவு தெரிந்தது.


அவனிடம் “மாஸ்க்கை கழற்றுங்க” என்று அவள் உத்தரவாகச் சொல்லவும் அதையும் செய்தான்.அவனது தாடையைப் பிடித்து லேசாக அங்கும் இங்கும் திருப்பிப் பார்த்தவள் அங்கங்கே சிவந்துப் போய் இருப்பதை கவனித்தாள்.

அவனது கரங்களைப் பிடித்து அழைத்துக் கொண்டு அங்கே இருக்கையில் அமர்ந்தவள் “ஏன் இப்படி அலர்ஜி ஆகிடுச்சு சார்?”

அவனோ “எனக்கு இறால் அலர்ஜி தெரியாமல் நேத்து வாங்கின சாப்பாட்டில் இருந்திருக்கு போல சாப்பிட்டதும் இப்படி ஆகிடுச்சு” என்றான்.


அவளோ பதற்றமாய் “ஏன் இப்படி ஆர்டர் பண்ணி சாப்பிடுறீங்க? கொரியன்ஸ் எல்லோரும் வீட்ல நல்ல சமைப்பாங்களே!” என்றதும்


அவனோ யோசனையாக “இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?”


அவளோ “நான் நெட்ல சர்ஜ் பண்ணி தெரிஞ்சுக்கிட்டேன்” என்றவளுக்கு அவள் சொன்னது நினைவுக்கு வர மாட்டிக் கொண்டோம் என்ற நிலையில் தன் உதட்டைக் கடித்தவள் வேகமாக “அது எப்படியோ தெரிஞ்சது இப்போ அதுவா முக்கியம் வாங்க டாக்டரைப் பார்க்க போகலாம்” என்றாள்.


அவனோ “வேண்டாம் பாவை என்கிட்ட இன்பெக்ஷனுக்கான மருந்துக்கு இருக்கு” என்றான்.


அவளோ விடாமல் “கண்ணுல வேற வீங்கி இருக்கு வாங்க டாக்டர்கிட்ட போய் காட்டினால் எதாவது ட்ராப்ஸ் எழுதி தருவாங்க” என்று அவனை கட்டாயப்படுத்தி தனக்குத் தெரிந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள்.


அவர் பார்த்து விட்டு மருந்தும் கண்ணுக்கு சொட்டுமருந்து என எல்லாவற்றையும் வாங்கி கிம் என்ன சாப்பிட வேண்டும்? என்று எல்லாம் விவரமாக கேட்டு அதையும் அவனோடு வாங்கி வந்தாள்.


அதற்கிடையில் அவளுடைய அம்மா செல்வி கைப்பேசியில் அழைத்து “பாவை அக்கா ஊர்ல இருந்து வந்து இருக்கா நீ எங்கே அம்மா இருக்கே?” என்றதற்கு “அம்மா விமலாக்கு உடம்பு சரியில்லை அவங்க அம்மா ஊருக்கு போயிருக்காங்க நான் அவளை கவனிச்சுக்கிறேன் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்” என்று பொய் சொன்னாள்.


கிம் அவள் பொய் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் அப்படியே வாயில் கைவைத்து அவளைப் பார்க்க அவளோ அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.


அவனோ தலையை ஆட்டி அமைதியாக இருந்தான்.அவனை வீட்டிற்கு அழைத்து வந்தவள் கிம்மிற்கு கண்களில் சொட்டு மருந்து ஊற்றி படுக்க வைத்தவள் சிவந்திருந்த இடங்களில் மருந்தையும் போட்டு விட்டவள் அவனுடைய வீட்டைச் சுற்றிப் பார்த்தாள்.


கிம்முடன் அவள் பழக ஆரம்பித்ததில் இருந்து கொரியன் மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி தன் கைப்பேசியில் வீடியோயாகவும் அதைப் பற்றிய கட்டுரைகளையும் படிக்க ஆரம்பித்தாள்.


மிகவும் சுத்தமாக பொருட்களை சரியாக ஒழுங்காக வைத்திருந்த அந்த இடத்தில் ஒரு அறையைக் கொண்ட வீட்டில் சமையலறைக்குச் செல்ல அங்கே அவனுடைய நாட்டு உணவுப் பொருட்கள் இருக்க இவளோ செயலில் சமையலுக்குத் தேவையான பொருட்களை ஆர்டர் செய்து கொஞ்சமாக சாதமும் ரசமும் செய்து வைத்து அவனுக்கு கொடுத்தாள்.கிம் அவனோடு சாப்பிடச் சொன்னதற்கு வீட்டில் அவளுடைய அம்மா காத்து இருப்பார்கள் என்று சொல்லி அவனை சாப்பிட வைத்தாள்.


கடைசியாக அவள் கொண்டு வந்திருந்த கோப்புகளில் உள்ள சந்தேகத்தையும் தெளிவுப்படுத்தி விட்டு தானே அந்த வேலைகளை அவனுடைய மடிக்கணினியில் செய்து முடித்து விட்டவள் கிம்மிடம் “மறக்காமல் நைட் மருந்து எடுத்துக்கோங்க அப்புறம் நாளைக்கு சாப்பாடு நான் எடுத்து வரேன் எதாவது அவசரம்னா கால் பண்ணுங்க நானே வரேன்” என்று ஒன்றுக்கு பலமுறை அவனை கவனமாக இருக்கச் சொல்ல அவனோ அந்த வலியோடு முகத்தில் புன்னகையை மனதில் சொல்ல முடியாத மகிழ்ச்சியை சுமந்தவாறு அவளைப் பார்க்க அவனிடம் சொல்லி விட்டு கிளம்பினாள் பாவை.


இங்கே வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் பாவை இப்படி அவள் ரொம்ப நேரம் எங்கும் சென்றதாக இல்லை.அதனால் அவள் வந்ததும் விமலாவின் கைப்பேசி எண்ணை வாங்கி செல்வி விசாரித்தார்.அவளும் இவள் செய்யும் வேலைகளுக்கு உடந்தையாக இருப்பதால் அங்கே வந்து இருந்ததாக ஒத்துக் கொண்டாள்.


வாணி தன் கணவன் தினகரனோடு வீட்டில் தங்கி இருந்தான்.சென்னையில் அவனுக்கு ஒரு வாரத்திற்கு மேலாக வேலை இருப்பதால் இங்கே தங்கி இருந்தான்.


வாணியுடன் சிறிது நேரம் பேசியவள் திரும்ப போய் தன் அறையில் அடைந்துக் கொண்டாள்.மறுநாள் எப்போதும் செல்லும் நேரத்தை விட முன்கூட்டியே அலுவலகத்திற்கு கிளம்பியவள் கிம்மிற்கு அம்மாவிடம் சமைக்கச் சொல்லி விமலாவிற்கு என்று அதையும் எடுத்துக் கொண்டு அவனைப் பார்க்க வீட்டிற்கு சென்றாள்.


கிம் கதவை திறந்ததும் பாவை கிம்மின் முகத்தை பார்க்க அவனோ ஒரு துணியால் மூடி இருந்தான்.இம்முறை பாவை “சார் எதுக்கு இப்படி முகத்தை மூடி வைச்சு இருக்கீங்க? எப்படி இருக்குன்னு நான் பார்க்க வேண்டாமா?” என்றதற்கு அவனோ “முதல்ல சார் சொல்லுறதை நிறுத்து அப்புறம் நான் துணியை எடுக்கிறேன்”


“ப்ச் அதெல்லாம் எதுக்கு?”


“அப்போ முடியாது”


“சரி மிஸ்டர் கிம் ஓகேவா”


“வேண்டாம் வேற எதாவது சொல்லி கூப்பிடு”


இம்முறை அவன் உரிமையாக கேட்கவும் திரும்பி நின்று யோசித்தவாறு “ஒப்பா” என்று மெதுவாக சொல்லவும் அவனோ நம்ப முடியாமல் அவள் பக்கமாக குனிந்து “எனக்கு கேட்கலை சத்தமாகச் சொல்லு ஜாகியா -அன்பே” என்றான்.


சட்டென்று அவனை திரும்பிப் பார்க்க அவன் தன் முகத்தில் இருந்த துணியை விலக்கி இருக்க அவனுக்கு ஏற்கனவே வீங்கி இருந்த இடங்களில் இப்போ வீக்கம் சரியாக இருக்க அதோடு சில சிவந்த இடங்களிலும் மெதுவாக தொட்டுப் பார்த்தவள் தட்டுத் தடுமாறி “இப்போ வலி பரவாயில்லை ஒப்பா” என்றதும் அவன் முகத்தினில் அப்படி ஒரு புன்னகை பரவியிருந்தது.


கொரியன் மொழியில் ஒப்பா என்றால் அண்ணன் என்று அர்த்தம்.ஆனால் தற்போதைய இளைய தலைமுறையினர் தன்னை விட பெரிய வயதுடைய நபரை பெண்கள் விரும்ப ஆரம்பித்தால் செல்லமாக அவர்களை ஒப்பா என்று அழைப்பார்கள்.
அவளும் அப்படி அழைத்ததும் அவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.


கிம் அவள் தொட்டுப் பார்த்த கரங்களைப் பற்றி “பாவை உனக்கு என்னை பிடிச்சிருக்கா? ப்ளீஸ் இதுக்கு
மேல” என்று அவன் நிறுத்தவும் “ஜோஹாயோ - பிடிச்சிருக்கு” என்று தன் கரங்களால் முகத்தை மூடிக் கொண்டாள்.


அதைக் கேட்டு அப்படியே மகிழ்ச்சியில் மெதுவாக கட்டியணைத்தான்.அதில் கூச்சத்தை உணர்ந்தவள் அவனை விட்டு விலகி நின்றாள் பாவை.


அதைப் பார்த்து பதறிய கிம் “சாரி பாவை என்னை மன்னிச்சிடு உன்கிட்ட நான் அதிகமா உரிமை எடுத்துக்கிட்டேனா?” என்ற போது கொஞ்சம் பயந்து விழித்தவள் “கிம் என்னால உடனே இந்த மாதிரி பழக முடியாது எ…எனக்கு பயமா இருக்கு நான் இப்போ கிளம்புறேன்” என்றாள்.


அவனோ தன் தலைமுடியை அழுத்தி கோதி விட்டவன் “சாரி பாவை என்னை தப்பா நினைச்சுக்காதே!” என்றான் அவசரமாக…


பாவை “கிம் உங்களை மாதிரி” என்று அவள் பேசி முடிக்கும் முன் “பாவை நான் தான் அவசரப்பட்டுட்டேன் எனக்கு தெரியும் நான் ரொம்ப கவனமாகத் தான் இருந்தேன் ஆனால் கொஞ்சம் ஆர்வத்துல” என்றான்.


உடனே பாவை “பரவாயில்லை கிம் நீங்க ரெஸ்ட் எடுங்க நான் ஈவ்னிங் வரேன்” என்று சென்று விட்டாள்.கிம் ஏதோ தவறு செய்து விட்டதை போல் உணர்ந்தவன் அவளுக்கு பலமுறை மன்னிப்பு கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினான்.



அவள் பலமுறை பரவாயில்லை என்று அனுப்பியும் அவன் விடாமல் சொல்லிக் கொள்ள கடைசியாக அவனிடம் “நான் எதுவும் தப்பாக நினைக்கலை கிம் உங்க வாழ்க்கை முறை அப்படி இருப்பதால் தானே” என்று ஓரளவு சமாதானம் ஆன பிறகே அவன் அதைப் பற்றி பேசுவதை விட்டான்.


திரும்பவும் அவனைப் பார்க்க சென்றாள் பாவை.இம்முறை அவளுக்கு அருகில் உட்காராமல் இரண்டு அடி தள்ளி அமர்ந்தான்.அதைப் பார்த்து பாவை “கிம் என்னாச்சு?”


அவனோ “நான் உன்கிட்ட கொஞ்சம் தள்ளியே பழகிக்கிறேன்” என்றான்.


வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவள் “கிம் ஏன் இப்படி எல்லாத்துக்கும் ரியாக்ஷன் காட்டுறீங்க? ப்ச் எல்லாம் போகப் போக சரியாகும்” என்று அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.


அவள் காயப்படக் கூடாது என்று அவன் பார்த்து கவனமாக இருக்க இவளுக்குத் தான் சிரிப்பாக வந்தது.இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துக் கொள்ள ஆரம்பித்தனர்.


வீட்டில் எல்லோருடன் இருந்தாலும் கிம் அனுப்பும் குறுஞ்செய்திகளைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பாள்.இதற்கு முன்னால் ரொம்ப நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவள் இப்போது எதாவது வேலை இருக்கிறது என்று தன் அறையில் போய் அடைந்துக் கிடந்தாள்.


அவளின் இந்த மாற்றம் பாவையின் பெற்றோரும் வாணியும் தினகரனும் கண்டுக் கொண்டனர்.