• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
செம்பியன் மறுநாள் கல்லூரி செல்ல வேண்டும் என்று கூறி மாலையே கிளம்பியிருந்தான். மலரும் விக்ரமும் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் மிகவும் சொற்பமாகியது.

தொடர்ந்து இரண்டு நாட்கள் விக்ரமின் உபசரிப்புகள் அனைத்தையும் எந்த மறுப்பும் கூறாமல் ஏற்றுக்கொண்டாலும், வாய்திறந்து அவனிடம் பேசியதில்லை மலர்.

விக்ரமும் ஏதோ ஒன்றை கருத்தில் கொண்டு கவனமாக அவளிடம் தன் எந்த ஒரு சின்ன உணர்வையும் காண்பிக்காமல் மறைத்தான்.

மூன்றாம் நாள் 'இது சரிப்படாது.... நீ இப்படியே அமைதியா இருந்தா அவரும் இப்படியே தான் இருப்பார். நீ தான் ஏதாவது அடிதடியா செய்யனும் மலரு' என்று உள்ளிருப்பவள் மலரை கொம்பு சீவி விட, அடுத்த நாளில் இருந்தே மலர் தன் ஆட்டத்தைத் தொடங்கினாள்.

காலை விக்ரம் தேநீரோடு அறைக்குள் நுழையும் போது குளிக்கச் செல்வதாக கூறி அவனோடு இணைந்து தேநீர் பருகுவதை தவிர்த்தாள். அவனோ காலை உணவையே மொத்தாமாக தவிர்த்து அவளை திணறடித்தான்.

அவன் சாப்பிடுவது போலவே தெரியவில்லையே என்று யோசித்தவள் செண்பகத்திடம் வினவினாள்.

"செண்பா க்கா... அவர் சாப்பிட்டுட்டு போனாரா? இல்லேயா?"

"இல்லேயே.... உன் அவர் சாப்பிடலேயே!!!" என்று செண்பகமும் கிண்டலாக உரைத்தார்.

"ஏன்?"

"எனக்கு எப்படி தெரியும்!!! ஏதோ கொஞ்ச நாள் உன் கூட சேர்ந்து உக்காந்து சாப்பிடும் போது தான் காலை சாப்பாடு சாப்பிட ஆரம்பிச்சாப்ளே..... இன்னைக்கு நீ வரலே... அவர் சாப்பிடலே... இன்னைக்குனு மட்டும் இல்லே, எல்லா நாளும் அதான் நடக்கும்... நீ சாப்பிட கீழே வந்தா தம்பி சாப்பிடுவாப்ளே... இல்லேனா உண்ணாவிரதம் தான்..."

"உண்ணாவிரதமா!!! மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலேனா ஹெல்த் என்னாகுறது... மார்னிங் ஃபுட்டை ஸ்கிப் பண்றவங்களுக்கு அல்சர் கன்ஃபார்ம்... நீங்க இதெல்லாம் அவர்கிட்ட சொல்லி கண்டிக்க வேண்டியது தானே!" என்று செண்பகத்தை வினவிட,

"எல்லா உரிமையும் கொண்ட ஒருத்தி, சாப்பிட்டு போங்கனு சும்மா வார்த்தைக்கு கூட சொல்லமாட்டிங்கிறா..." என்று மலரைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி கூறியவர், அவள் தலைகுனிந்து கொள்ளவும், தாடையைப் பிடித்து நிமிர்த்தி,

"நான் சொன்னா உன் அவர், ஒரே ஒரு சிரிப்பு மட்டும் தான் பதிலா சொல்லிட்டு போயிடுறார்.... அதுக்கு மேல நான் என்ன பண்ணட்டும்..."

"இனிமே நான் சொல்லி பாக்குறேன் க்கா..." என்று செண்பகத்திற்காக பதில் கூறினாள் மலர்.

"இப்போ கொஞ்ச நாளா ரெண்டு பேருமே காலை டீயும் குடிக்கிறது இல்லே போல!!! உங்க ரெண்டு பேரோட டீ கப்பும் அப்படியே கீழே வருதே! அதை வச்சு தான் சொல்றேன்..." என்று கேள்வியும் பதிலும் சேர்த்தே கூறினார் செண்பகம்.

"ஆனா அவர் டீ குடிக்கமாட்டார் தானே... பால் மட்டும் தான் பழக்கம்னு சொன்னார்." என்று செண்பகத்திடம் வினவிய போதும், அன்று தன் அறையில் இருந்த இரண்டு கோப்பையிலும் தேநீர் இருந்தது நினைவு வர, அன்றிருந்த மனநிலையில் அதனை கவனியாமல் விட்டதையும் சேர்த்தே நினைவு படுத்திப் பார்த்தாள்.

"இப்போ கொஞ்ச நாளா தம்பியும் டீ தான் குடிக்கிறாப்ளே... சரியா சொல்லனும்னா நீ காலைல டீ குடிக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து..." என்று குறும்புப் புன்னகை சிந்தினார். அந்த புன்னகையில் உன்னிடம் இருந்து பழகியது தான் என்ற பதிலும் மறைமுகமாக இருந்தது.

மலருக்கோ கோபமா அல்லது குழப்பமா என்று அவளுக்கே தெரியவில்லை. மேலும் இரண்டு நாட்கள் இப்படியே கடக்க, அடுத்த நாள் காலை அவனுக்கு முன்னதாகவே எழுந்து குளித்து அடுக்களை சென்றவள், அவனுக்கு சூடான பாலும், அவளுக்கு தேநீர் கலந்து எடுத்துச் சென்றாள்.

அப்போது தான் எழுந்தவன், நீள்சாய்விருக்கையில் தன்னவளைக் காணவில்லை என்றவுடன், நிலாமுற்றம் சென்று பாத்தான். அங்கும் அவள் இல்லை என்றவுடன் அவளை இப்போதே காணவேண்டும் என்று தோன்றிட, அவளைத் தேடி அறையைவிட்டு வெளியே வந்தான்.

ட்ரேயுடன் படியேறி வருபவளை சற்று வியந்தபடி பார்த்திருக்க, அதற்குள் அவன் அருகே வந்தவள் வழிவிடும்படி கண்களால் சமிக்ஞை செய்தாள். அவனும் அவளது கடைகண் கட்டளைக்கு கட்டுப்பட்டு ஒருபக்கமாகத் திரும்பி நின்று அவளுக்கு வழிவிட்டான்.

நொடிப்பொழுதில் அவள் அவனை கடந்து சென்றிருந்த போதும், அவளின் மேலிருந்து எழுந்த பிரத்தியேக வாசம் அவனை மயக்கிட, கண்ணிமைக்கவும் மறந்து அவளைப் பார்த்தபடி வாசலிலேயே சிலையாக நின்றிருந்தான்.

வெளிமாடம் சென்றவள், விக்ரம் இன்னும் அசையாமல் நிற்பதைக் கண்டு, "சீக்கிரம் ப்ரெஷ் பண்ணிட்டு வாங்க... சூடு ஆரிடும்" என்று குரல் கொடுக்க, உணர்வு வந்தவனாக குளியலறை சென்றான்.

ஒருவாரத்திற்கு பின் தன்னவளோடு இணைந்து தேநீர் அருந்தவிருக்கும் காலைப்பொழுதை தன் தாமதத்தினால் வீணடிக்க விரும்பாமல் கடகடவென முகம் கழுவிக்கொண்டு ஐந்தே நிமிடத்தில் அவளெதிரே வந்து அமர்ந்தான்.

அவனது வேகத்தைக் கண்டு அதிசயித்தாள் பெண்ணவள். 'ரெம்ப மிஸ் பண்ண வெச்சிட்டோமோ!' என்று யோசித்தபடி நொடிக்கும் குறைவான வினாடிகள் அவன் மேல் பார்வை பதித்து மீட்டெடுத்தவள், சற்றும் கெத்துக் குறையாமல் அமர்ந்திருந்த அவனது தோரணை கண்டு அவள் கடுப்படைந்தாள்.

'அதானே! இவராவது..... என்னை மிஸ் பண்றதாவது.... நான் தான் கண்டதையும் நெனச்சு என்னையே ஏமாத்திக்கிட்டேன்...' என்று தன்னையே நினைத்து நொந்து கொண்டு அவனது கோப்பையை அவன் புறம் நகர்த்தி வைத்தாள்.

விக்ரமோ தனது கோப்பையில் இருப்பதைக் கண்டு, "என்ன இது?" என்றான்.

"பால்... பாதாம் ஊறவெச்சு அரச்சு நானே பண்ணின பாதாம் பால்"

"நீயும் அதான் குடிக்கிறேயா? ஏன் டீ(tea) என்னாச்சு?"

"நான் டீ தான் குடிக்கிறேன்..."

"பின்னே எனக்கு மட்டும் ஏன் பால்?"

"உங்களுக்கு தான் டீ, காஃபி பழக்கம் இல்லேனு சொன்னிங்களே... நீங்க பால் அல்லது ஜூஸ் தானே குடிப்பிங்க... அதான்"

"எனக்காக எதுவும் தனியா செய்ய வேண்டாம்... நானும் டீ குடிச்சி பழகிட்டேன்... நாளைல இருந்து நீ டீ போடுறதா இருந்தா எனக்கும் அதுவே ஓகே தான்... இல்லேனா ரெண்டு பேருக்கும் சேர்த்து நானே போட்டு எடுத்துட்டு வரேன்." என்று மீண்டும் அந்த பழக்கை ஆரம்பித்து வைக்க நினைத்தான்.

"யாரும் யாருக்காகவும் மாற வேண்டாம்... அவங்கவங்க எப்படி இருக்கோமோ அப்படியே இருப்போம்..." என்று சட்டென வந்து விழுந்த அவள் வார்த்தைகளில் அவள் மேல் கூர் பார்வையைச் செலுத்தியவன்,

"குட்... யாரும் யாருக்காவும் மாற வேண்டாம்... ஃபைன், பட் எனக்கு பாதாம் பால் பிடிக்காது..." என்று கூறி தனது குவளையை மூடி ட்ரேவில் வைத்துவிட்டு, சிட்டுக்குருவிகளைக் காணச் சென்றான்.

'சரியான வீம்பு.... இருக்கட்டும்... அப்படியே இருக்கட்டும்.....' என்று தனக்குள்ளாகவே கடுகடுத்தவள், தனது தேநீரையும் குடிக்காமல் அப்படியே எடுத்துச் சென்றுவிட்டாள்.

மீண்டும் இருவருக்குள்ளும் 'நீயா? நானா?' மௌனப்போராட்டம் தொடர்ந்தது. ஆனாலும் விக்ரமை அப்படியே விட்டுவிடவும் மனமில்லை அவளுக்கு.

தன் அடுத்தகட்ட நடவடிக்கையாக செம்பியனை அழைத்து வினோத்தின் அலைபேசி எண்ணைப் பெற்றாள்.

அந்த வார இறுதியில் ஸ்டூடியோவில் தன் தந்தையின் அலுவலக அறையில் அமர்ந்திருந்த விக்ரமை சந்திக்க உதி உள்ளே நுழைந்தான்.

உண்மையில் உதி சந்திக்க வந்தது விக்ரமின் தந்தை ரத்தினத்தை தான். அவனது விதி அங்கே ரத்தினத்திற்கு பதிலாக விக்ரம் இருந்தான். மாலை தான் ஒருமணி நேரம் முன்னதாகவே புறப்பட உள்ளதாக ரத்தினத்திடம் கூறியிருந்தான். ஆனால் அதற்கும் அரைமணி நேரத்திற்கு முன்னதாக புறப்பட இருப்பதால் ரத்தினத்திடம் தெரிவிக்க வந்திருந்தான்.

"அங்கிள்..." என்று அழைத்தபடி உள்ளே நுழைந்த உதி விக்ரமைக் கண்டதும், வாயடைத்து சிலையென நின்றான்.

'இவன் இங்கே என்ன பண்றான்!!! அச்சச்சோ இப்போ என்ன பண்றது... அப்படியே சைலண்டா ஓடிட வேண்டியது தான்...' என்று நினைத்தபடி திரும்பிட,

"நில்லுங்க உதயன்... ஏன் வந்துட்டு எதுவும் பேசாம போறிங்க?" என்றான் விக்ரம்.

"நா.... நான் அங்கிள பாக்க வந்தேன்... அ... அவர் வரவும்..... அவர்கிட்டயே பேசிக்கிறேன்."

'என்ன இவன் வாய் கொலறுது!!! பையன் என்னை கண்டா திமிரா பேசுறவன் ஆச்சே! இன்னைக்கு என்ன பம்முறான்... அப்போ ஏதோ விஷயம் இருக்கு.' என்று யோசித்தபடி எடிட்டர் எடிட் செய்து அனுப்பியிருந்த ஒரு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவன் தன் கணினித் திரையிலிருந்து பார்வையை எடுத்து உதியை பார்த்தபடி இருக்கையில் வசதியாக சாய்ந்து அமர்ந்தான்.

"ஓகே உதயன்..." என்று அவனுக்கு விடை கொடுக்க, 'அப்பாடா என்ன ஏதுனு கேட்காம அப்படியே விட்டுட்டான்' என்று நினைத்தபடி உதி வெளியேற,

"எங்கடா போற?" என்றது விக்ரமின் உருமல்...

'ம்கூம்.... இது சரிப்படாது... நம்ம திருட்டு முழியிலேயே இந்த கேடி கண்டுபிடிச்சிடும்.... சவுண்டு ரெய்ஸ் பண்ணிட வேண்டியது தான்' என்று நினைத்துக் கொண்டு,

"நான் எங்கே போனா உங்களுக்கு என்ன? அங்கில் கிட்ட ஒன் ஆர் பெர்மிஷன் கேட்டிருந்தேன்... என் வேலை எல்லாம் சீக்கிரமே முடிஞ்சிடுச்சு... அதான் ஹாஃப் ஆன் ஆர் முன்னாடியே கெளம்புறேனு சொல்ல வந்தேன்... பரவாயில்லே... நான் ஹாஃப் ஆன் ஆர் கழிச்சே கிளம்பிக்கிறேன்..." என்று எவருக்கோ பதில் சொல்வது போல் சிடுசிடுவென முகத்தை வைத்துக்கொண்டு கூறினான்.

விக்ரமோ சற்று யோசித்து, அவன் கூறிய அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, "அப்பா அல்ரெடி நீங்க பெர்மிஷன் கேட்டிருக்கதா சொல்லிட்டு தான் போனார்... உங்க வேலை முடிஞ்சா நீங்க கெளம்பலாம்..." என்று கூறி மீண்டும் கணினியில் முகம் பதித்துக்கொண்டான் விக்ரம்.

'அப்பாடா ரெம்ப துருவாம இத்தோட விட்டான்...' என்று நினைத்துக் கொண்டு உதி வெளியேறிச் சென்றான்.

மாலை உதியும் அலுவலகத்தில் இல்லாததால் விக்ரமிற்கு சற்று வேலை அதிகமாகத் தான் இருந்தது. வழக்கத்தைவிட தாமதமாக இல்லம் திரும்பினான் விக்ரம்.

உள்ளே நுழையும் போதே நாவில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு சமையல் வாசம் நாசியைத் துழைக்க, 'இன்னைக்கு என்ன ஸ்பெஷல்னு தெரியலேயே?' என்று யோசித்தபடி உடை மாற்றக்கொள்ள தனதறைக்குச் சென்றான்.

ஏதோ பேச்சு சத்தம் கேட்பது போல் தோன்றிட, 'யாரா இருக்கும்!!! யாரும் வரப்போறதா சொல்லவே இல்லேயே? அது சரி அவ தான் பேசுறதே இல்லேயே...' என்று சலிப்பாக நினைத்துக்கொண்டு அடுக்களை சென்று பார்த்தான்.

அங்கே தன் நண்பர்கள் இருவரோடு செம்பியனும் இருக்க, விக்ரம் முதலில் முறைத்தது உதியைத் தான். உதியோ அவனின் பார்வையை அறிந்து, அதனை தவிர்க்க நினைத்து, கோழி வறுவலை ருசி பார்த்தபடி, "பாப்பா... செம்ம டேஸ்ட் டா... நீ சூப்பரா சமைக்கிறே" என்று மலரிடம் கூறினான்.

'இதுக்கு தான் பெர்மிஷன் போட்டானா!!! நாளைக்கு ஸ்டூடியோ வந்து தானே ஆகனும்...' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, "அளவா சாப்பிடுங்க உதி சார்... நாளைக்கு ஆபிஸ்லேயும் விருந்து காத்திருக்கு" என்றிட, உதியோ திருதிருவென முழித்தபடி மலரைப் பார்த்தான்.

அவளோ ஒரு பக்கமாக உதடுகளை இழுத்து அசால்ட்டாக "க்ளிச்... பாத்துக்கலாம் விடுங்க ண்ணா..." என்றிட, உதியும் அதே போல் "க்ளிச்" என்றுவிட்டு தன் வாய்க்கு வேலை கொடுத்தான்... சந்தேகமே வேண்டாம் சாப்பிடும் பணி தான்.

நண்பர்கள் மூவரும் பேசிக்கொள்ளவில்லை. செம்பியனும், உதியும் தான் வாய் ஓயாது வம்பு வளர்த்துக் கொண்டிருந்தனர்.

"அக்கா உனக்கு ஒன்னு தெரியுமா!!! உதி ண்ணா புகைக்கும்..." என்றிட, "நல்ல மரியாதை டா" என்று அடுத்த சிக்கன் பீஸை வாயில் திணித்தான் உதி.

விட்டால் ருசிக்கிறேன் என்றே அனைத்தையும் காலி செய்துவிடுவான் என்று நினைத்து, அவன் கையில் இருந்த தட்டை வாங்கிக் கொண்டு "அப்படியா உதி ண்ணா!!" என்று தன்னவனைப் பார்த்தபடி வினவினாள் மலர்.

விக்ரமும் அவளது பார்வையை கண்டவன், என்னை கேட்கனும்னு நெனச்சா நேரா என்கிட்டேயே கேட்க வேண்டிதானே... அது என்ன கேள்வி அவன்கிட்ட கேட்டுட்டு பதில் என்கிட்ட எதிர்பார்க்குறது என்று நினைத்து பார்வை மாற்றாமல் அவளையே பார்த்திருந்தான்.

அதற்குள் உதியோ "சில தீய சக்திகள் ஒரே நாள் நைட்லயே என் காதை பன்ஞ்சர் ஆக்கிடுச்சு பாப்பா... அதனால அந்த பழக்கத்தையே விட்டுடேன்..." என்று விக்ரமை பார்த்தபடியே கூறினான்.

"டேய் செம்பியா... உங்க உதி அண்ணா ஓவரா பேசுறார்... அப்பறம் அன்னைக்காவது காது பன்ஞ்சர் தான் ஆச்சு... இன்னைக்கு காதே இருக்காதுனு சொல்லி வை..." என்று உதியை முறைத்தபடி மிரட்டினான் விக்ரம்.

உதியோ தலை கவிழ்ந்தபடி இடவலமாக கண்களை உருட்டி, சரியாக சொல்ல வேண்டும் என்றால் திருட்டுமுழி முழித்தபடி, மலர் உதவிக்கு வருவாளா என்று பார்த்திருந்தான்.

மலரோ சமையலை முடித்துக்கொண்டு, பதார்த்தங்களை உணவு மேசையில் அடுக்கிட, அவளுக்கு உதவச் செல்வது போல் விக்ரமின் கனல் பார்வையிலிருந்து தப்பிச் சென்றான் உதி. உதியைத் தொடர்ந்து ஆளுக்கு ஒன்றாக பதார்த்தங்களை கையில் எடுத்துக்கொள்ள, அனைவரையும் உண்ண அமரும்படி கூறினாள் மலர்.

நால்வரும் உணவுன்ன அமர்ந்திட, செண்பகமும், மலரும் பரிமாறத் தொடங்கினர். விக்ரம் வருவதற்கு முன்பு வரை மலருடன் பேசிக் கொண்டிருந்த வினோத், அவன் வந்த பின் யாரிடமும் பேசவில்லை.

உதி, வினோ, செம்பியன் மூவரும் உண்ண ஆரம்பிக்க, விக்ரம் மட்டும் உணவில் கை கூட வைத்திடவில்லை. அதனைக் கண்ட வினோ,

"மலர் அவனை சாப்பிட சொல்" என்று மலர் தன் அருகே வந்து பரிமாறிய போது கூறினான்.

விக்ரமைக் கண்டவள் கண்களால் இறைஞ்ச, அவனோ அதனை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. நண்பர்களுடன் அமர்ந்து உண்ணும் போது விக்ரம் தனக்காக காத்திருப்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திடவில்லை. இப்போது தான் உண்ண அமராமல் அவன் உண்ணப் போவதில்லை என்று நன்கு அறிந்து கொண்டவள்,

"செண்பா க்கா... எனக்கும் பசிக்குது... வாங்க நாமலும் சாப்பிடலாம்" என்று அவரை எப்படி தனியே விடுவது என்ற எண்ணத்தில் அழைத்தாள்.
"பரவாயில்லை டா... நீ சாப்பிட உட்கார், எனக்கு பசியில்லே... நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்." என்று மறுத்திட, "சரி நானும் அப்பறம் சாப்பிடுறேன்" என்று அவளும் மறுத்தாள்.

அதனைக்கேட்டு விக்ரம் எழுந்து செல்லப்பார்க்க, செம்பியனோ "மச்சா... எங்கே போறிங்க... சாப்பிடுங்க" என்றான்.

செண்பகமோ மலரைப் பார்த்து சிரித்தபடி, அவளை விக்ரமின் அருகே அமர்த்தி அவளுக்கும் பரிமாறினார். மலர் உண்ணத் தொடங்கவும் தான் விக்ரம் உண்ண ஆரம்பித்தான்.

வினோ மற்றும் உதியும் கூட இதனை கவனிக்கத் தான் செய்தனர். அனைவரும் உண்டு முடித்திட, மலர் செண்பகத்தையும் உண்ணச் சொல்லிவிட்டு, அனைவருக்கும் பாதாம்கீர் எடுத்து வந்தாள்.

'சதிகாரி பாதாம் பால் பிடிக்காதுனு சொன்னதுக்காகவே கீர் செய்து வெச்சிருக்கா பார்...' என்று மனதிற்குள் வசைபாடியபடி அதனை உண்டான் விக்ரம்.

வினோ தன் திறன்பேசியே எடுத்து மணி பார்த்தவன், "மலர்... நாங்க கிளம்புறோம்... டைம் ஆகிடுச்சி" என்றான்.

அந்த நேரம் "இன்னு ரெண்டு நாள்ல அக்ஸரா யூரோப் போறா..." என்றான் விக்ரம். அனைவரின் பார்வையும் விக்ரமின் மீது தான் இருந்தது.

அக்ஸரா மலரிடம் நடந்துகொண்ட முறை யாருக்கும் தெரியாததால், சமூக வலைதளத்தில் வந்த வீடியோவைக் கண்டு ஏற்கனவே கோபத்தில் இருந்த வினோ 'இன்னும் அவளை விடவில்லையா?' என்பது போல் பார்க்க,

வினோவின் பார்வையைத் தாங்கியபடியே, விக்ரம் அடுத்த நெருப்புக் கங்கை வீசினான். "நான் அவளை சென்ட் ஆஃப் பண்ண ஏர்போர்ட் போறேன்..." என்று கூறிக் கொண்டிருக்கும் போதே செயற்கை பூக்கள் சொருகி வைக்கப்பட்டிருந்த இடை உயர பூந்தொட்டி வினோத்தின் கோபத்திற்கு ஆளாகி கீழே விழுந்து உடைந்திருந்தது.

வினோத்தின் கோபம் கண்டுபோதும் நிறுத்தாமல் மேலும் கூறினான் விக்ரம். "நீயும் என் கூட வரனும் பனிமலர்..." என்று கட்டளையாக உரைத்தான்.

"என்னடா நெனச்சுட்டு இருக்கே உன் மனசுல? நீ எவளோ ஒருத்தியை தேடிப் போவே... உன் கூட இந்த பொண்ணும் வரனுமா!" என்று ஆக்ரோஷமாக கத்த ஆரம்பித்தான் வினோத்.

மலரின் கழுத்தில் இருக்கும் தாலி சங்கிலியைக் காண்பித்து "இது உண்மையா பொய்யானு கூட தெரியாம நீ கட்டிட்டேன்றதுக்காக உன் கூட இருக்குற பொண்ண உன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறே!"

விக்ரம் சற்றும் அசையாமல் பார்வையைக் கூட தாழ்த்திக்கொள்ளாமல் தலை நிமிர்ந்து நிற்க,

"நீ எப்படி ஏர்போர்ட் போறேனு பாக்குறேன்!" என்று சவால் போல் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறிச் சென்றான் வினோத்.

உதியோ விக்ரமை துரும்பைப் போல் பார்த்துவிட்டு வினோத்தை பின் தொடர்ந்து வெளியேறினான்.

என்ன பேசுவது யாரிடம் பேசுவது என்று தெரியாமல் நின்றிருந்த செம்பியனை அவனது அறைக்குச் சென்று உறங்கும்படிக் கூறிவிட்டு விக்ரம் தனதறைக்குச் சென்றுவிட்டான்.

இருவருக்கும் பால் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்த மலரின் முகத்தில், விக்ரமால் எந்த உணர்வையும் கண்டறிந்திட முடியவில்லை. ஏதோ அமைதியின் மறு உருவமாய் வந்து நின்றாள். ஆழியின் கொந்தளிப்பை எதிர்நோக்கி இருந்தவனுக்கு அவளின் அமைதி புயலுக்கு முன் நிகழும் அமைதியோ என்று எண்ணத்தைத் தோற்றுவித்தது.



-தொடரும்.​



விக்ரம் எதிர்பார்த்தது போல் ஆழிப்பேரலையாக கொந்தளிப்பாளா மலர்?
 
Top