• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 8

“பளிச்சுடுச்சு! பளிச்சுடுச்சு! நான் கண்ட கனவு பளிச்சுடுச்சு! மாரியாத்தா! எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ! என் பொண்ணு சும்மா ராணி மாதிரி வாழ போறா.. அதைவிட அந்த அபி, அஸ்வினி முன்னாடி சும்மா கெத்தா வாழ போறா... இதுக்கு மேல என்ன வேணும் எனக்கு.. அய்யோ எங்க போயி யார்கிட்ட போயி இந்த சந்தோசத்தை சொல்லுவேன்” தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் பேசினார் விமலா.

“என்னடி உளர்ற? நேத்து தானே பேசிட்டு வந்ததா சொன்ன?” வினோதன் கேட்க,

“அட ஆமா யா! நேத்து தான் பேசினேன்.. ஆனா குடுக்குற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு தானே குடுக்கும்.. அப்படி தான் அந்த அம்மா நேத்தே வீட்ல பேசி சீக்கிரமே பொண்ணு பார்க்க வர்றதாவும் சொல்லிட்டாங்க”

“ம்மா! என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டீங்களா? சும்மா உங்க இஷ்டத்துக்கு ஆடுறிங்க! அந்த பையன் ஏற்கனவே ஒரு பொண்ணை விரும்புறதா உங்க முன்னாடி தானே சொன்னாங்க? அதுவும்.. அதுவும் அவன் அந்த பெண்ணுக்காக உன்னை கோபமா பேசினது எல்லாம் மறந்து போச்சா? அப்பா! என்னப்பா நீங்களும் பார்த்துட்டு பேசாமல் நிக்குறீங்க?” ஸ்ரீ அதிர்ச்சியில் நின்றவள் திருமணத்தை நிறுத்தவென தடதடவென பேசினாள்.

“ஏய்! பொண்ணு மாதிரி ஒழுங்கா பெத்தவங்க பேச்சை கேளு.. உன்கிட்ட ஏன் டி நான் கேட்கனும்? ஆம்பளை பசங்க.. அதுவும் பணம் இருக்குற பசங்க அப்படி இப்படி தான் இருப்பாங்க.. ஒவ்வொருத்தனும் ரெண்டு கட்டிக்கிறான் மூணு வச்சுக்குறான்.. இவன் காதலிக்க தான செஞ்சான்.. அதெல்லாம் கல்யாணம் ஆனா மறந்து போகும்”

“விமலா! என்ன பேசுற நீ? அந்த பையன் வாழ்க்கைல நீ விளையாடிட்டு வந்திருக்க”

“என்ன விளையாடுனாங்க? என் பொண்ணு நல்லாருக்கணும் நினைக்குறது தப்பா? அந்த அபி சம்மந்தமே இல்லாமல் ஒரு ராஜ வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கா.. அந்த சொத்து முழுக்க நடராஜன் எப்படியும் பையன் பேர்ல தான் எழுதி வைப்பாரு.. இந்த கனகா குடும்பம் சும்மா ஒட்டிக்கிட்டு தான் கிடக்குது”

“அது அவங்க குடும்ப விஷயம் மா.. அதுல ஏன் என்னை மாட்டி விட்டிங்க?”

“உனக்கு அது எப்படிபட்ட வாழ்க்கைனு தெரியல டி அதான் இப்படி பேசுற.. கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கே புரியும்”

“ம்மா! எனக்குன்னு ஆசை எல்லாம் இருக்குமே! அதை எல்லாம் நினைக்கவே மாட்டிங்களா?”

“நீ நினைக்குறதுக்கு மேல ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க தான் டி நான் போராடுறேன்.. இதுல எதாவது தப்பு தண்டா பண்ணலாம்னு நினச்ச... பெத்த பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன்..”

“ப்பா! அம்மா ஏன் பா இப்படி இருக்காங்க!”

“இவ நம்மளை பிடிச்ச சனி மா.. அது எந்த ஜென்மத்துலயும் நமக்கு போகாது.. இவளால நாம இன்னும் என்னென்ன பட போறோமோ” வினோதன் சொல்லியவர் வெளியேறிவிட,

“ம்மா! ப்ளீஸ் மா” என்றவளை முறைத்துக் கொண்டே சென்றுவிட்டார் விமலா.

இங்கே தலையில் கைவைத்து அமர்வது ஸ்ரீ முறை..

“இப்ப என்னை என்ன தான் பண்ண சொல்ற? வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்குறேன்னு சொன்னாலும் வேண்டாம் சொல்ற.. இப்படி அழுதுட்டே இருந்தா நான் என்ன தான் பண்றது?” ராம் கோபமாய் கேட்க அழுது கொண்டே இருந்தாள் ஸ்ரீ.

“ராம் நீ வீட்டுக்கு வந்தாலும் உன்னை அம்மா அசிங்கப்படுத்தி தான் அனுப்புவாங்க.. அம்மாவை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்” அழுகையோடு சொல்ல மூன்றாவதாய் தலையில் கைவைத்து அமர்ந்தான் ராம்.

“நான் ஒன்னு சொல்லவா ராம்?” ஏங்கிக் கொண்டே அவள் சொல்ல,

“சொல்லு” என்றான் அவள் முகம் பாராமல்.

“நான் அன்னைக்கே சொன்னேனே! நம்ம லவ்க்கு ஆனந்த் ஹெல்ப் பண்ண சான்ஸ் இருக்குன்னு.. நாம ஏன் அந்த ராஜ் ஆனந்த் ரெண்டு பேரோடவும் பேசி பார்க்க கூடாது”

“ஹ்ம்ம் நல்ல ஐடியா தான்.. ஆனா அவங்க எப்படினு தெரியாமல்..” ராம் இழுக்க,

“இல்ல.. அன்னைக்கு அம்மா அந்த ராஜ் லவ் பண்ற பொண்ணை பத்தி தப்பா பேசவும் என்னமா கோபப்பட்டாங்க தெரியுமா? எனக்கு என்னவோ அவங்ககிட்ட ஹெல்ப் கேட்கலாம் தோணிது.. அது மட்டும் இல்ல.. ராஜ் கூட லவ் பண்றரே.. அவரும் கல்யாணத்தை நிறுத்த வாய்ப்பு இருக்கே!”

“ஆமால்ல! சரி இப்ப எப்படி அவங்களை காண்டாக்ட் பண்றது?”

“அச்சு அண்ணிகிட்ட அபி, இல்லை ஆனந்த் நம்பர் வாங்கி பேசலாம்..அப்புறம் நாம டிசைட் பண்ணலாம்”

“சரி நீ பேசு! எங்கேயாவது காமன் ப்ளேஸ் சொல்லி வர சொல்லு.. ஓகேன்னா மீட் பண்ணி பேசலாம்” ராம் சொல்லவும் அதுவே சரி என தோன்ற உடனே அஸ்வினிக்கு அழைத்து அனைத்தையும் சொல்லி ஆனந்த் நம்பரை வாங்கினாள் ஸ்ரீ.

“ஏன் டா இவ்வளவு அப்செட்டா இருக்குற? உன்னை என்ன நாங்க அப்படியே விட்டுடுவோமா?” ஆனந்த் தன் அறையில் ராஜ் உடன் பேசிக் கொண்டிருந்தான்.

“நாம ஏதாவது செய்யலாம் அண்ணா.. பீல் பண்ணாதீங்க” என ஆறுதல் கூறினாள் அபி.

நடராஜன் தாத்தாவும் உடன் இருந்தார். பவானிக்கு மகன் ஆசை பெரிதாய் தெரிந்தாலும் கனகா அண்ணியை எதிர்த்து எதையும் செய்ய விருப்பம் இல்லை.. அதனால் இவர்கள் கூட்டத்தில் சேர மறுத்துவிட்டார்.

குமரன் எப்போதும் அக்காவிற்கு துணையாய் இருந்து பழகியவர். இப்போதும் அதே போல கனகாவிற்கு துணையாய் சென்றுவிட நால்வரும் ஆனந்த் அறையில் அமர்ந்திருந்தனர்.

“என்ன டா செய்யுறது? எல்லாம் கையை விட்டு போன மாதிரி இருக்கு.. கனகா அத்தையை எதிர்த்து நீ பண்ணின கோபமே அவங்களுக்கு இன்னும் போகல.. இதுல நானும் எப்படி டா?” ஜாலியாய் பேசி பழக்கமான ராஜ் இன்று புலம்ப கவலையாய் பார்த்து நின்றாள் அபி.

“அவளை மட்டும் பார்த்தால் அவங்கவங்க சந்தோசம் கிடைக்காமல் போய்டும்.. உன் வாழ்க்கை சந்தோசமா இருக்கனும்னா நீ உன்னை மட்டும் தான் டா யோசிக்கணும்” என்றார் தாத்தா.

“இப்ப என்ன தான் பண்றது?” ராக் கேட்கவும் ஆனந்த் மொபைல் ஒலி எழுப்பவும் சரியாய் இருந்தது.

“ஹலோ ஆனந்த் ஸ்பீக்கிங்”

“நான் ஸ்ரீ தேவி பேசுறேன்”

“ஸ்ரீ.. அபி சிஸ்டர் இன் லா ஸ்ரீயா?” ஆனந்த் கேட்க, அனைவரின் பார்வையும் ஆனந்திடம் சென்றது.

“ஆமா! ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..”

“என்ன?”

“இல்ல அதை நேர்ல பேசினா நல்லதுன்னு தோணுது..”

“ஓஹ்” ஆனந்த் சொல்ல,

“என்னங்க?” என்றாள் அபி.

“ஸ்ரீ மீட் பண்ணனும் சொல்றாங்க”

“சரினு சொல்லுங்க” அபி சொல்ல,

“சரி எங்கே வரணும்?”

“உங்களுக்கு டிஸ்டப் இல்லைனா பவானி ஆண்ட்டி சன்னையும் கூட்டிட்டு வர முடியுமா ப்ளீஸ்”

“ஓகே நோ ப்ரோப்லேம்” என்றவன் எந்த இடம் என கேட்டுக் கொண்டு அபி, ராஜ் இருவரிடமும் விஷயத்தை கூறினான்.

“தேவ்!? மதுவையும் கூட்டிட்டு போலாம் டா” ராஜ் சொல்ல,

“அவளை ஏன் டா டென்ஷன் பண்ணனும்?” ஆனந்த் கேட்டான்.

“இல்ல டா.. அவ வந்தால் தான் சரியா இருக்கும்னு பீல் பண்றேன்.. ப்ளீஸ்”

“ராஜ் அண்ணா சொல்றது சரி தான்” என அபியும் சொல்ல, ராஜ், மதுவோடு, அபியையும் அழைத்து சென்றான் ஆனந்த்.

அங்கே இவர்களுக்கு முன் காத்திருந்தனர் ஸ்ரீயோடு ராமும்.

“ஓஹ் மை காட்! டேய் அந்த பொண்ணும் லவ் பண்ணுது போல! வாட் அ மொமெண்ட்” பெருமூச்சை விட்டு அவ்வளவு நேரம் இருந்த அழுத்தம் நீங்கி ஸ்ரீயுடன் ஒரு ஆண் இருப்பது பார்த்து
நிம்மதியாய் கூறினான் ராஜ்.

“நீங்களா முடிவு பண்ணாதீங்க.. என்னனு கேட்கலாம் வாங்க” மது கூறி சொல்ல ஒரு நம்பிக்கையுடன் பின்னே சென்றான் ராஜ்.

“ஸ்ரீ!” சென்றதும் அபி ஸ்ரீயின் கைகளை பிடித்துக் கொண்டாள்.

“சாரி அபி! என்னால எவ்வளவு பிரச்சனை?” நிஜ வருத்தத்துடன் கூறினாள் ஸ்ரீ.

“அதை விடு! இது மது! ராஜ் அண்ணாவோட... “ அபி அறிமுகம் செய்ய,

“எனக்கு புரியுது அபி.. இவங்க ராம்.. நாங்க ரெண்டு பேரும் ரெண்டு வருஷமா விரும்புறோம்” என்றாள் ஸ்ரீ.

ராஜ் மனதிற்குள்ளே குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.

“ஸ்ரீ நீங்க எவ்வளவு பெரிய பிரச்சனையை ஈஸியா சால்வ் பண்ணியிருக்கிங்க தெரியுமா?” ஆனந்த் சிரிப்போடு சொல்ல,

“இல்ல இப்ப தான் பிரச்சனையே” என்றாள்.

“என்ன சொல்றிங்க நீங்க?”

“நிச்சயம் என் அம்மா இந்த கல்யாணம் நடக்கலைனா சும்மா இருக்காது.. ரொம்ப தெளிவா திட்டம் போட்டு நீங்க லவ் பண்றிங்கனு தெரிஞ்சும் இப்படி பண்ணிருக்காங்க”

“இப்ப நீங்களே சொல்லலாம் இல்ல? இன்னும் என்ன? அதான் ராம் இருக்காரே!” ஆனந்த் கேட்க,

“என் அம்மா முன்னாடி நான் இவரோட நின்னாலோ இல்ல இவரே பொண்ணு கேட்டு வந்தாலும் என் அம்மா எந்த எல்லைக்கும் போவாங்க...”

“இப்ப என்னங்க பண்றது சிஸ்டர்?” ஸ்ரீயிடம் மது கேட்டாள்”

“எனக்கு வேற வழியே தெரியல.. அதுனால... நான் இவரை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” ஸ்ரீ சொல்ல,

“ஸ்ரீ அப்படி எதுவும் செஞ்சிடாதே!” என்றாள் அபி.

“இல்ல அண்ணி! எனக்கு வேற வழி இல்ல.. எங்க அம்மா பத்தி எனக்கு நல்லா தெரியும்...”

“சூப்பர்ங்க! சூப்பர்ங்க! எப்படியோ கல்யாணம் நின்னா சரி! அதுக்கு அப்புறம் நானும் வீட்ல பேச டைம் கிடைக்கும்” ராஜ் வேகமாய் சொல்ல,

“ராஜ் பேசாமல் இரு.. அதுக்காக வீட்டுக்கு தெரியாம கல்யாணமா? நோ வே!” என்றான் ஆனந்த் வேகமாய்.

“வேற என்ன செய்ய முடியும்? எதுவும் முடியாது. எங்களை இப்படியே விட்ருங்க” ஸ்ரீ மீண்டும் சொல்ல,

“ராம் நீங்க என்ன சொல்றிங்க?” என்றான் ஆனந்த்.

“எங்க வீட்ல எந்த பிரச்சனையும் இல்லை.. எப்படியும் நான் அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.. அது இப்படி தான் நடக்கும்னு விதி இருந்தால் யாரால மாத்த முடியும்?”

“ஆமா ஆமா! யாரால மாத்த முடியும்? நான் வேணா மாலை வாங்கிட்டு வரவா?” உடனே கேட்டான் ராஜ். ஸ்ரீ – ராம் திருமணம் நடந்துவிட்டால் பிரச்சனை முடியுமே எனும் எண்ணம் அவனுக்கு.

“ஷட்டப் ராஜ்! என்ன பேசிட்டு இருக்கீங்க நீங்க? வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் பண்றது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா? ராம்! ஸ்ரீ அவங்க அம்மா மேலே இருக்குற பயத்துல இப்படி பேசுறாங்க.. ப்ளீஸ் நீங்க கொஞ்சம் யோசிங்க.. ஏதாவது வழி தேடுவோம்.. கண்டிப்பா கிடைக்கும்” ஆனந்த் சொல்ல,

“ஆமா எனக்கும் ஸ்ரீ சொல்றது தப்புன்னு தான் தோணுது” என்றாள் அபி.

“அப்ப என்ன தான் செய்யுறது?” ஸ்ரீ கேட்க,

“கல்யாணத்தை நடத்த அவங்க எந்த இல்லைக்கும் போவாங்கன்னா கல்யாணத்தை நிறுத்த நாம எந்த எல்லைக்கும் போகலாம்.. அதை விட்டுட்டு ஓடி போறது எல்லாம் புத்திசாலித்தனம் இல்ல” ஆனந்த் சொல்ல,

“அவங்க விருப்பம் என்னவோ அப்படியே விட வேண்டியது தானே டா” ஆனந்த் காதுக்குள் ராஜ் சொல்ல,

“ராஜ் இது சாதாரண விஷயம் இல்லை டா.. இவங்க இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டா நமக்கு எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும். ஓகே! ஆனா கொஞ்சம் நினச்சு பாரேன்! இவங்க எவ்வளவு சந்தோஷத்தை மிஸ் பண்ணுவாங்க தெரியுமா? கல்யாணம்ன்றது வாழ்க்கைல ஒரே ஒரு முறை ஊரை கூட்டி சந்தோஷமா ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து பூரிச்சு அனுபவிச்சு பண்ணிக்கிறது. இப்ப அதை அவங்க மிஸ் பண்ணிட்டா நாளைக்கு ஏதோ ஒரு கல்யாணத்தை பார்க்கும் போது கூட யார்கிட்டயும் சொல்லலைனாலும் மனசுல ஒரு சின்ன வருத்தம் ஒரு மூலைல இருக்க தான் செய்யும்.. அந்த பாவம் நம்ம யாருக்கும் வேணாம்” ஆனந்த் விளக்கம் போட்டு சொல்ல,

“அடப்பாவி! கல்யாணம் முடிஞ்சா போதாதா? இப்ப அவ முடிவை மாத்தி இருப்பாளே!” ராஜ் முணுமுணுக்க,

“ஓகே! இந்த கல்யாணத்துக்கான ப்ரோஸஸ் பெரியவங்க பண்ணட்டும்.. அது எப்படி போனாலும் மேடைல லாஸ்ட்டா நடக்குறது ரெண்டு கல்யாணமா இருக்கணும்.. இது தான் ஒரே வழி ஓகேவா?” ஆனந்த் சொல்ல,

“ஆனா அம்மா ஒத்துக்க மாட்டாங்களே!” – ஸ்ரீ.

“எங்க கனகா அத்தையும் தான் ஒத்துக்க மாட்டாங்க” – ராஜ்.

“இது உங்க நாலு பேரோட வாழ்க்கை சம்மந்தப்பட்டது. அம்மா, அத்தைனு ஒவ்வொருத்தருக்காகவா பார்த்துட்டு இருந்தா உங்க லைஃப்பை நீங்க வாழ முடியாது..”

“அது புரியுது சீனியர்! ஆனா எப்படி இவங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணின மேடையில நாலு பேர் கல்யாணத்தை பண்ண முடியும்?” என்றாள் மது.

“மொத்தமா பெரியவங்கள ஏமாத்திட்டு போறதுக்கு பதிலா மேடையில நம்ம விருப்பப்படி கல்யாணம் நடக்குறது அதுவும் பெரியவங்க முன்னாடி நடக்குறது பெட்டர்னு நான் சொல்றேன்” என்றான் ஆனந்த்.

“எனக்கும் அது தான் சரினு தோணுது.. என்னோட பாரேன்ட்ஸ கூட நான் சம்மதிக்க வச்சு கூட்டிட்டு வர முடியும்” ராம்.

“குட் ராம். மது நீ என்ன சொல்ற?”

“என் அப்பாகிட்ட சும்மா பேசவே கை உதறும் சீனியர்.. நான் எப்படி அவங்களை மண்டபத்துக்கு எல்லாம் கூட்டிட்டு வர்றது?”

“சரி உன் அப்பாகிட்ட பேசுறது என்னோட அண்ட் ராஜ் பொறுப்பு.. நாங்க பார்த்துக்குறோம்” ஆனந்த்.

“டேய் அப்ப அத்தை!” ராஜ் கேட்க,

“அம்மா கோபப்படுவாங்க.. கொஞ்ச நாள்ல சரி ஆகிடுவாங்க.. இல்லையா நாம அவங்ககிட்ட கூட பேசுவோம்.. அண்ட் விமலா சித்தி.. சாரி ஸ்ரீ! ராஜ் லவ் பன்றான்னு தெரிஞ்சும் உங்க கல்யாணத்தை பத்தி பேசினவங்ககிட்ட சொல்லி எல்லாம் புரிய வைக்க முடியும்னு எனக்கு தோணல.. சோ எல்லாருக்கும் தெரியும் போதே அவங்களுக்கும் தெரியட்டும்” ஆனந்த் முடிவாய் சொல்ல,

கொஞ்சம் உறுத்தல் தான் என்றாலும் வேறு வழி இன்றி அனைவரும் சம்மதித்தனர்.

“ராம்! நீங்க வீட்ல பேசி சம்மதிக்க வைங்க.. மேரேஜ்க்கு முன்னாடியே கூட
இதை சால்வ் பண்ண முடியுமான்னு பார்ப்போம்.. அப்படி முடியலைன்னா இது தான் பைனல்.. எல்லாருக்கும் ஓகே தானே?” ஆனந்த் கேட்கவும் இப்போது அனைவருமே சம்மதித்தனர்.

“சீனியர்! எங்க அப்பா கூட கொஞ்சம் டெர்ரர் தான்” காரில் சென்று கொண்டிருக்கும் போது மது சொல்ல,

“அப்ப ராஜ் மட்டும் போதும். பேசி சம்மதம் வாங்கிடுவான்.. இல்ல டா” ஆனந்த் கிண்டல் செய்ய,

“டேய்! காப்பாத்த சொல்லி உன்கிட்ட வந்தா காட்டிக் கொடுக்க பாக்குற.. ப்ளடி” என்றான் ராஜ்.

“நீங்க கவலைப்படாதீங்க மது! அதெல்லாம் ராஜ் அண்ணாவும் இவங்களும் பார்த்துப்பாங்க” ஆறுதல் பேசினாள் அபி.

“சிஸ்டர்! தைரியமா சொல்லிட்டீங்க.. அவங்க அப்பா எக்ஸ் மிலிட்டரி.. பார்த்தாலே கண்ல ஃபையர் வரும்..” ராஜ்.

“அப்படி நினச்சேன்னா மதுவை நீ மறந்துட வேண்டியது தான்” ஆனந்த் சொல்ல,

“இது ஈஸியா இருக்கு டா.. நான் வேணா இதையே ட்ரை பன்றேனே!” என்றவனை மது முறைக்க,

“அடப்பாவி இதுக்காகவா அன்னைக்கு ஸ்ரீ அம்மாகிட்ட டயலாக் எல்லாம் பேசின..” என எடுத்து கொடுத்தான் ஆனந்த்.

“இந்த வாய் மட்டும் இல்லைனா இவனை எல்லாம் நாய் தூக்கிட்டு போய்டும் சீனியர்..” என மது சொல்ல, கொஞ்சம் கவலை மறந்து சிரிப்போடு சென்றது அவர்களது பயணம்.

“என்ன மேடம் நானும் அங்கேர்ந்து பார்த்துட்டு இருக்கேன்.. உங்க பார்வையே சரி இல்லையே!” வீட்டிற்கு வந்து ஆனந்த் தன் அறைக்கு வந்ததும் அபியிடம் கேட்டான்.

“எங்கேர்ந்து?”

“அதான்! சமாதானம் பேசப் போன இடத்துலயும் யாரோ என்னை சைட் அடிச்சா மாதிரி இருந்துச்சு.. அப்புறம் கார்ல வரும்போது கூட ஒரு புயல் அப்பப்ப என்னை கிராஸ் பண்ணி போச்சு.. இப்ப ரூம்க்கு வந்த அப்புறம் ஒரு தென்றல் வேற வீசுது.. அதான் என்ன மேட்டர்னு கேட்குறேன்” என்றான் முகத்தில் அவ்வளவு பிரகாசம் மின்ன..

தொடரும்..
 
Top