பகுதி 1
அழகாய் அமைவதெல்லாம்வாழ்க்கை அல்ல
அமைவதை அழகாய் மாற்றுவதே
சிறந்த வாழ்க்கை!
“அழைச்சுட்டு வா, அழைச்சுட்டு வான்னு சொன்னா என்ன அர்த்தம், அவ எங்க இருக்கான்னே தெரியாம, எப்படி அழைச்சிட்டு வர்றது? அன்னைக்கு வீட்டைவிட்டு துரத்தும் போது தெரியலையா, அவளுக்கு யாருமே இல்லைன்னு? அவளைப் பெத்தவங்க இல்லைன்னு? இல்லை, இந்த வீட்டின் உண்மையான, உரிமையான வாரிசு அவதான் என்பது, உங்க யாருக்குமே தெரியலையா? இப்போ அவ போய் ஆறு வருசம் ஆகிடுச்சு. இனி நான் எங்க போய் தேடுறது?” என்று தன் போக்கில் பொரிந்து கொண்டிருந்தான், அந்த வீட்டின் முதல் பேரனும் செல்லப் பேரனுமான சித்தார்த்தன்.
“என்னடா கண்ணா, நீயே இப்படி பேசினால் எப்படி? தாத்தாவின் ஹெல்த்தை கொஞ்சம் யோசிச்சுப் பேசு. ஏற்கனவே அவர் நிறைய வருத்தத்தில இருக்கிறார். நீயும் அவரை வருத்தப்படுத்தாதே...” என்று, தன் மகனை சமாதானப்படுத்தினார் சித்தார்த்தனின் அம்மா பவித்ரா.
“என்ன பேசுறீங்கம்மா, என் கோபம் நியாயம் இல்லைன்னு நினைக்கிறீங்களா? நான் யாரையும் வருத்தப்படுத்த கூடாதுன்னு தான் நினைக்கிறேன், ஆனா முடியலம்மா...”
“அப்ப பதினேழு வயசு அவளுக்கு, என்ன தெரியும்? படிப்பையும் முடிக்காம, யாருமே இல்லாம, இந்த வீட்டுல தன்னுடைய அப்பாவின் சொந்தங்களைத் தேடி, தனக்கொரு அடைக்கலம் வேண்டி வந்தவளை, தயவு தாட்சண்யமே பார்க்காம துரத்தி விட்டுட்டு, இப்போ அவளை தேடிக் கொண்டு வான்னு சொன்னா, எங்க போய் தேடுறது? அவ எங்க இருக்கிறாளோ? இல்ல, பெத்தவங்க போன இடத்துக்கே அவளும் போயிட்டாளோ என்னவோ...?” என்று சித்தார்த் முடிப்பதற்குள்,
“கண்ணா! தம்பி! அய்யோ என் செல்லம்! சித்து!” என்று, அந்த வீட்டின் ஒவ்வொரு திசையில் இருந்தும் பல குரல்கள் வெளிவந்தன.
“சித்து என்னடா இது? ஏன் இப்படி பாட்டியை வருத்தப்பட வைக்கிற? பாரு, அவங்க வருந்துறது மட்டுமில்லாமல் தாத்தாவும் சேர்ந்து கவலைப்படுறார். நீ முடிஞ்சளவு தேட முயற்சி செய். பேப்பர் ஆட், டிவி நியூஸ், அப்புறம் டிடெக்டிவ் ஏஜென்சி மூலம், எப்படியாவது தேடிக் கொண்டு வா.” என்றாள் சித்தி மகளான கீர்த்தனா.
கீர்த்தனா பேசியதற்கு பதில் எதுவும் சொல்லாமல், சிறிது நேரம் அமைதி காத்தான் சித்தார்த். பின் தெளிவானக் குரலில், “அவளைக் கண்டுப்பிடிப்பேன்... கண்டிப்பா, அவளை தேடிக் கொண்டு வருவேன். இவங்க யாருக்காகவும் இல்ல, எனக்காக... எனக்காக மட்டும். நான் மாமாவிற்கு கொடுத்த வாக்கிற்காக மட்டும்!” என உறுதியாகச் சொன்னவன்,
தங்கையைப் பார்த்து, “உனக்கு இது எதுவும் புரியாது கீர்த்தி. எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து என்னோடு, என் உயிரோடு வாழ்பவள் அவள். ஏன், எதற்கு என்று தெரியாத வயதிலேயே அவளை என் கண்ணுக்குள் வைத்து காப்பாற்ற வேண்டும் என்று, நான் நினைத்தேன். பின் பருவவயதில் அது காதல் என்று தெரிந்தபின், நொடியும் கூட அவளை மறக்காமல், அவள் நினைப்பில் வாழ்ந்து வந்தவன் நான்.
கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள். இராமர் வனவாசம் சென்றது போல், அனைத்தும் நடந்து விட்டது. அவள் இங்கு வந்த நேரம், நான் மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பாக அவளை விட்டிருக்க மாட்டேன். அன்றைக்கு எல்லோரும் பார்த்து கொண்டுதானே இருந்திருப்பீங்க, இப்ப மட்டும் என்ன? உங்க தாத்தாவோட உயிர் என்றதும் அவ்வளவு பயமா?” என்று தன் கோபத்தைத் தங்கையிடம் காட்டியவன்,
“கிளம்புறேன்.” என்று பொதுவாக எல்லோரிடமும் கூறிவிட்டு, விருட்டென வெளியேறித் தன் காரை எடுத்துக் கொண்டு, தன்னுடைய ஃப்ளாட் நோக்கி விரைந்தான். கார் முன்னோக்கி பயணிக்க, அவனின் நினைவுகள் அனைத்தும் பின்னோக்கி பயணித்தன.
***
கோட்டை மங்கலம், இயற்கை எழில் கொஞ்சும் மிகவும் அழகான கிராமம். மதுரை மாநகரத்தில் இருந்து, தேனி செல்லும் வழியில் அமைந்துள்ள அழகிய கிராமம். வைகை நதியின் பாசனத்தில் அந்த ஊரின் பாதிக்கு சொந்தமான நிலபுலன்கள், ஜவுளிக்கடைகள், இரண்டு ரைஸ்மில்கள், பஞ்சாயத்து பிரசிடெண்ட் என்ற, அனைத்து தகுதிகளும் உடைய பெரியவர்கள் ஆழ்வார்சாமி ஆண்டாள் குடும்பத்தினர்.
ஆழ்வார்சாமி குடும்பத்தில் அவர் ஒருவரே வாரிசு என்பதால், சொத்துக்கள் எந்த வகையிலும் வெளியே செல்லவில்லை. மேலும் மேலும் அது அதிகரிக்கத்தான் செய்தது. இவர்களுக்கு மூன்று பெண்களும் ஒரே ஒரு ஆணும் என்று நான்கு குழந்தைகள். இதற்கு காரணம் ஆழ்வார்சாமியின் தாயார் தான். என்னைப் போல் ஒன்றோடு நிறுத்தாமல், நான்கைந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று, ஆண்டாளிடம் திட்டமாக சொல்லியிருந்தார்.
அதன்படியே மூத்த பெண், பவித்ரா. அடுத்து ஒரு ஆண், விதுரபாலன். அதற்கடுத்து இரட்டையர்களான வித்யாவும் நித்யாவும் பிறந்தனர். மூத்தப்பெண் பவித்ராவிற்கு தன்னுடைய அண்ணன் மகனையே திருமணம் செய்து, வீட்டோடு மாப்பிளையாக்கி கொண்டார் ஆண்டாளம்மாள்.
தன் மகனை மேல்நாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்து, அவர்களின் கிராமத்தில் இல்லாத மற்ற தொழில்களைத் தொடங்க வைத்தார். விதுரனும் தன்னுடைய குடும்பத் தொழிலான விவசாயம், அரிசியாலைகள், சிறுதானியங்கள் மற்றும் மலர் ஏற்றுமதி போன்றவற்றிலும் புது யுக்திகளைப் புகுத்தினார்.
அதுமட்டும் இல்லாமல் தன் சொந்த தொழிலாக கல்வித்துறையைத் தேர்ந்தெடுத்து, குறைந்த அளவில் கட்டணம் வசூலித்து காலேஜ், ஸ்கூல் என ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் ஆரம்பித்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் சமூகத்தில் நல்ல பெயரும், தொழிலில் நல்ல வருமானங்களும் கிடைத்தது. ஆண்டாளிற்கு தன் மகனை நினைத்து பெருமையிலும் பெருமை.
நாட்கள் மகிழ்வாக கடக்க, பவித்ராவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குடும்பத்தின் முதல் பேரனான அவனுக்கு, சித்தார்த்தன் என்று பெயர் வைத்தார் விதுரன். குடும்பத்தின் முதல் வாரிசாக, செல்லமாக வளைய வந்தான் சித்தார்த்தன். அவனுக்குத் தன் மாமன் என்றாலே கொள்ளைப் பிரியம். சாப்பிடுவது, தூங்குவது என்று எல்லாமே அவரிடம்தான், விதுரனுக்கும் அப்படியே.
காலச்சக்கரம் சுழன்ற நிலையில் தன் பள்ளியை சுற்றிப் பார்க்க சென்ற நேரத்தில், ஒரு ஆசிரியை கேட் வாசலில் ஒரு ஆளைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தாள். கூட்டத்தைப் பார்த்து என்னவென்று விசாரித்தபடியே விதுரன் வர, அவனைப் பார்த்ததும் வேகமாக சென்ற வாட்ச்மேன், மற்ற எல்லோரும் சேர்ந்து விலக்கிவிட, அவளைப் பார்த்துக் கொண்டே விசாரித்தார் விதுரன்.
அதற்கு அந்தப் பெண், “நீங்க யாரு, உங்ககிட்ட ஏன் சொல்லணும்?” என்று கோபமாக கேட்க, உடனே வாட்ச்மேன் பதறியடித்து, “பாப்பா, இவர்தான் நம் ஸ்கூல் கரஸ்பாண்டண்ட்.” என்று சொல்ல,
“ஓ...” என்று சொல்லிவிட்டு அமைதியானாள் பெண். ஆனால் கோபம் மட்டும் குறையவே இல்லை. பின்னர் அவளை அழைத்து ஆபீஸ் ரூமில் வைத்து விசாரிக்க, அந்த ஆள் தன் வகுப்பு மாணவிக்கு போகும், வரும் வழியிலெல்லாம் தொல்லை தருவதாகவும், கூப்பிட்டு வார்ன் செய்தும் கேட்காமல், மேலும் மேலும் தொல்லை தருவதாகவும் கூறி, இன்று தன்னிடமே மிகவும் திமிராகப் பேசியதால், தான் கோபமாக அவனை அடித்து விட்டதாக கூறினாள் அந்தப் பெண்.
விதுரன், “உங்கப் பெயர் என்ன மிஸ்?” என்றதும்,
“வான்மதி!” என்று விறைப்பான பதில் பட்டென்று வந்து விழுந்தது.
“ம்ம்ம்... வான்மதி! நைஸ் நேம். மிஸ் வான்மதி, நீங்க ஏன் காவல்துறையையோ இல்ல, பள்ளி தலைமையிடத்திலையோ புகார் கொடுக்கல? எப்படி நீங்களே அவரைத் தண்டிப்பீங்க? இது சட்டப்படி தப்பு இல்லையா? இப்போதான் கூப்பிட்டதும் உடனுக்குடனே போலீஸ் வந்துடுதே, அப்புறமென்ன? இனி இந்த மாதிரி என்னோட ஸ்கூல் காம்பவுண்ட்ல நடந்துக்காதிங்க. இது உங்களுக்கு நான் கொடுக்கிற லாஸ்ட் வார்னிங், நீங்க போகலாம்.” என்று கண்டிப்பானக் குரலில் சொல்லிவிட்டு, தன்னுடைய போனை எடுத்து காவல்துறையை அழைத்தார் விதுரன்.
ஆனாலும் அவர் பேசிய வார்த்தைகளில் இருந்து வெளிவராமல், அங்கேயே நின்று அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் வான்மதி.
பேசி முடித்து திரும்பி பார்த்தவர் சைகையால், ‘என்ன?’ என்று கேட்க, ஒன்றுமே இல்லை என்று தலையை அசைத்துவிட்டு கோபமாக வெளியே வந்தாள் வாணி.
அவரின் முகமாறுதல்களைப் பார்த்துவிட்டு தனக்குள்ளே சிரித்தவர், இவளைப் பார்த்தார். கவிபாரதியின், ‘புதுமைப்பெண்’ தான் உடனே மனதில் தோன்றியது. என்ன மாதிரியானப் பெண் இவள்? ‘பின்னாளில் எப்படி அந்த ரவுடியினால் பிரச்சனை வருமா, வராதா என்றெல்லாம் யோசிக்காமல், அவனைப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறாள்? தைரியம் தான்!’ என்று தனக்குத்தானே சிரித்துக் கொண்டார் விதுரன்.
ஆனால் அதற்கு எதிர்மறையாக, வாணியின் மனம் விதுரனை வசைபாடிக் கொண்டிருந்தது. ‘என்ன கரஸ்பாண்டட்னா பெரிய இவனா? அறிவில்ல? இவன் மட்டும் வராம இருந்திருந்தால், இந்நேரம் அவன் கதி அவ்வளவு தான். கொஞ்சம் கூட யோசிக்காமல் எப்படி பேசுறான்? ச்சே! பேசாமல் வேலையை விட்டு நின்று விடலாம். இங்க ஒரு பிரச்சனையும் இல்ல. பெண்களுக்கு நல்ல பாதுகாப்பான இடம் என்றெல்லாம் கேள்விப்பட்டதால் தான் வேலைக்கு சேர்ந்தாள். ஆனால், இப்போது ஒரு பாதுகாப்பும் இல்ல இங்கே’ என்று திட்டிக்கொண்டே ஆசிரியர்களின் ஓய்வறைக்குச் சென்றாள்.
அங்கு உள்ள ஆசிரியர்கள் எல்லோரும் அவளை வாழ்த்த, அவர்களுக்காக இழுத்து வைத்த புன்னகையுடன் இருந்தாள். எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எப்போதடா பள்ளி முடியும், வீட்டிற்கு போகலாம் என்று யோசிக்க தொடங்கிவிட்டாள்.
ஒரு வழியாக மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு கிளம்பியவள், சிறிது தூரத்திலேயே தன்னை யாரோ பின்தொடருவது தெரிந்து திரும்பி பார்க்க, பள்ளி வாட்ச்மேன் நின்றிருந்தார். என்னவென்று விசாரிக்க, விதுரன்தான் அவளின் வீடு வரை சென்று விட்டுவர வேண்டும் என்று கூறியதாக கூறினார்.
வாணிக்கோ கண்மண் தெரியாத கோபம். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? அவன் இஷ்டத்துக்கு ஏதோ பண்றான் என்று பொருமியவள், வாட்ச்மேனிடம் எதற்கு என்று கேட்க,
“நீங்க இன்னைக்கு அடிச்சிங்களே பாப்பா, அவன் ஜெயில்ல இருந்து வந்துட்டான். அவனால உங்களுக்கு ஏதும் ஆபத்து வந்துடக் கூடாதுனுதான், ஐயா உங்களை வீடு வரைக்கும் விட்டுட்டு வர சொன்னார். நீங்க வீட்டுக்குப் போனதும் அவருக்கு கூப்பிட்டு சொல்ல சொன்னாரும்மா.” என்று விளக்க,
“ஓ...” என்றுக் கேட்டுக் கொண்டவள், “ம்ம்... சரி அண்ணா, நான் போயிடுறேன். பக்கத்துல தான் வீடு, நீங்க போங்க.” என்றுவிட்டு தன் வீடு நோக்கி போனாள்.
வாணி தன் வீடு சென்று நுழையும் வரை வாட்ச்மேன் நின்று பார்த்துவிட்டு, விதுரனுக்கும் அழைத்து சொல்லி விட்டுத்தான் சென்றார். அவளுக்கோ குழப்பம். ‘என்னடா நடக்குது? காலையில முகத்தைக் கூடப் பார்க்காம அப்படி பேசினான். இப்போ வீடுவரைக்கும் செக்கியூரிட்டிய அனுப்பி வச்சிருக்கான்? இந்த மனுசனை புரிஞ்சுக்கவே முடியலையே... என்னதான் நடக்குது? ம்ம்... எது நடந்தாலும் இன்னும் கொஞ்ச நாளில் தெரியபோகுது, அப்புறமென்ன?’ என்ற யோசனை வந்த பிறகே அவள் முகம் தெளிவடைய ஆரம்பித்தது.
அதன்பின்னர் வீட்டு வேலைகளும் தன் அண்ணன் குழந்தைகளும் அவளை அழைக்க, சூழ்நிலை மாறி தெளிவு பிறந்தது. நாட்கள் தன் போக்கில் கடக்க, வழக்கம் போல வாணி பள்ளிக்கு செல்ல, எப்போதேனும் பள்ளியைச் சுற்றிப் பார்க்க வரும் விதுரன், இப்போதெல்லாம் அடிக்கடி வர ஆரம்பித்தார்.
காலப்போக்கில், தான் அவள் மேல் காதல் கொண்டுள்ளதை உறுதி செய்து அவளிடம் அதைத் தெரிவிக்க, அவளோ இது சரிவராது, ஜாதி வித்தியாசம், பணக்கார ஏற்றத் தாழ்வு என சில பல காரணங்கள் கூறி, இதற்கு யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்று மறுக்க, அவனோ விடாக் கொண்டனாக,
“அப்படியென்றால் என்னைப் பிடித்திருக்கிறது, அப்படித்தானே?” என்று அவளிடம், ‘ஆம்’ என்ற பதிலை வாங்கிய பிறகே விட்டார்.
‘மற்றதையெல்லாம் வரும் போது பார்த்துக்கொள்ளலாம், தன் வீட்டில் தன்னை எதிர்க்க மாட்டார்கள்.’ என்று உறுதி அளித்தார். காதல் கிளிகளின் காதல், செவ்வனே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர ஆரம்பித்தது.
அந்தோ பரிதாபம், யார் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தானோ, அவர்கள்தான் முதல் எதிர்ப்பைக் கொடுத்தார்கள். அவன் எதிர்பார்த்தது நடக்கவே இல்லை. தன் தாய் இந்தளவிற்கு, தன் காதலுக்கு எதிர்ப்பை அளிப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை விதுரன். எந்தவிதமான சமாதானமும் எடுபடவில்லை அவரிடம்.
தாயின் பேச்சுக்கு மறுபேச்சு பேச அந்த வீட்டில் யாருமே இல்லை என்பதால், அவரால் அங்கு வாதாட முடியவில்லை. எல்லோருமே ஒரேப் பேச்சாக, வாணியை விட்டு வந்துவிடு என்று சொல்ல, பேசிப் பலனில்லை என்று அமைதியாக அங்கிருந்து வெளியேறினார். ஆனால் மனதுக்குள் தங்கள் வாழ்க்கைக்கான முக்கிய முடிவை, தான் எடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று அவருக்கு புரிந்தது. அதற்குமுன், வாணியிடம் பேச வேண்டும் என்ற முடிவுடன் வெளியே சென்றார்.
வாணியின் வீட்டிலும் மிகப்பெரிய பிரளயமே உருவாகி இருந்தது. வாணியின் அண்ணனும் அண்ணியும், அவளை அண்ணியின் தம்பிக்கு அவசரம் அவசரமாக திருமணம் முடிக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். இதனால் வாணியின் வீட்டில் பேச்சுக்கே இடமில்லை என்பதைப் புரிந்து கொண்டார் விதுரன்.
அவர் வாணியிடம் பேச, அவள் தன் மனக் குமுறல்களை எல்லாம் அவர் தோளில் சாய்ந்து அழுது தீர்க்க, தன் முடிவை உடனே எடுத்தார் விதுரன். எந்த சூழ்நிலையிலும் தன்னால் வாணியை விட முடியாது என்ற உறுதியை எடுத்தார். அந்த நிமிடமே தனக்குத் தெரிந்தவர் மூலம், ஒரு மணி நேரத்தில் திருமண ஏற்பாடுகளை செய்தார். இரவில் திருமணமா? என்ற கேள்வி எழுந்தாலும் வேறு வழியிருக்கவில்லை அவருக்கு. நடந்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தார் விதுரன்.
***