• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அந்தமான் காதலி - 03

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,393
433
113
Tirupur

அந்தமான் காதலி – 3

மறக்க இயலவில்லை அதை

மறைக்கவும் முயலவில்லை

உன் விழி மயக்கத்தை

மறுக்க வழியின்றி

வலியுடன்

என்றும் நான்!

“சார்… சார்...” என்ற செக்யுரிட்டியின் சத்தத்தில் தான், எங்கு இருக்கிறோம் என்ற நினைவுக்கே வந்தான் சித்தார்த். காரை அதனது இடத்தில் விட்டுவிட்டு தன் ப்ளாட்டிற்குள் நுழைந்தவன், அப்படியே சோபாவில் விழுந்தான்.

இதுவரை அவன் எடுத்த எந்த முயற்சியும் தோல்வியை சந்தித்ததே இல்லை. ஆனால், ‘அவள்’ விஷயத்தில் தோல்வியைத் தவிர வேறெதுவும் கிட்டவில்லை. மனம் குற்ற உணர்ச்சியில் தத்தளித்தது.

எங்கு இருக்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ? இருப்பாளா? இல்லை... என்ற எண்ணம் போன போக்கில், “நோ...” என அலறி வேர்க்க விறுவிறுக்க எழுந்தவன், ‘நோ... நோ... அவள் இருப்பாள்... இருக்க வேண்டும். எங்கேனும், ஏதோ ஒரு ஊரில், ஒரு மூலையில் அவள் இருந்தாலே போதும். அவள் தனக்கு கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை. ‘இருக்கிறாள்’ என்ற நிம்மதியே போதும். மனம் சமாதானப்படும்.

ஆனால் அப்படியொரு செய்தி கூட அவனுக்கு கிடைக்கவில்லையே?! இந்த நான்கு ஆண்டுகளாக அவன் தேடாத இடமே இல்லை. விதுரன் டெல்லியில் இருந்த போது, அவர் சித்தார்த்தை தன் வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச் செல்வார். அப்போது அவன் விதுரனிடம் காட்டும் நெருக்கமும் பாசமும் பொம்மாவுக்குப் பிடிக்காது.

‘பொம்மா!’ அப்படித்தான் அவன் அழைப்பான். பார்பிடால் போல சுருள் குழலில் இருக்கும் அவளைப் பார்க்க அவனுக்கு பிடிக்கும். தன் மாமாவுடன் அமர்ந்து பேச ஆரம்பித்தாலே, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சுற்றும் அவளது செய்கையை, இப்போது நினைத்தாலும் புன்னகை தோன்றும் சித்தார்த்திற்கு.

டெல்லி, சித்தார்த் படித்து வளர்ந்த ஊர் என்பதால், அவனுக்கு அங்கு உள்ள இடங்கள் அத்துப்படி. அந்த ஊரை சல்லடையாகத் தேடியும், அவள் இருக்கும் இடம் மட்டும் தெரியவில்லை. ஓய்ந்து போய்தான் திரும்பியிருந்தான்.

பிறகு ஒருமுறை நண்பன் ஒருவன் புனேவில் பார்த்ததாக சொல்ல, அடித்துப் பிடித்து ஓடினால் அங்கும் இல்லை. முதல் நாள் தான் வீட்டை காலி செய்திருந்தாள். அனைத்து வழிகளையும் அடைத்து வைத்த உணர்வு. கணக்கிலடங்கா சொத்துக்கள் அனைத்தும் நான்கு வருடங்களுக்கு முன்புதான் விதுரன், சித்தார்த்தனின் பெயருக்கு மாற்றியிருந்தார்.

அவன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால், தன் மகளுக்கென எதையும் வைக்காமல் அவனுக்கு கொடுத்திருப்பார்? தன் மகளை அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை தானே இதற்கு காரணம். விதுரனின் இந்த செயல்தான் சித்தார்த்தனை தூங்க விடாமல், நிம்மதியை மொத்தமும் துரத்தியடிக்கச் செய்தது. இவன் மனதில் சற்றும் நிம்மதியில்லாமல் இருக்க, அந்த நிம்மதியை மொத்தமாக பறித்து சென்றவளும் அதே நிலையில் தான் இருந்தாள்.

***

அவள் நிரதி!

அந்தமான் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு அழகிய குட்டித்தீவு. முன்னர் ராஸ் தீவு என்றழைக்கப்பட்டு, தற்போது நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தீவு என பெயர் மாற்றம் கொண்ட, ஒரு சிறு தீவுதான் நிரதியின் தற்போதைய வாசஸ்தலம். ராஸ் தீவிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தான் அந்தமான் நிக்கோபார், யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாக போர்ட்ப்ளேயர் நகரம் விளங்குகிறது.

இவ்விடத்தை முழுக்க முழுக்க இந்தியக் கடற்படைத் தளம் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, இங்குள்ள கடற்படையின் ஐஎன்ஹச்எஸ் (Indian Naval Hospital Ship) மருத்துவமனையில் தான் குழந்தைகள் மருத்துவராக நிரதி பணியில் இருக்கிறாள்.

முதலில் வைசாக்கில் இருந்தாள். பிறகு விருப்ப பணி மாற்றத்தை வாங்கிக் கொண்டு அந்தமான் வந்து விட்டாள். இங்கு வந்த இந்த மூன்றாண்டுகளில், அவள் தன்னை முற்றிலுமாக வேலையில் ஆழ்த்திக் கொண்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஓய்வே வேண்டாம் என்பது போல்தான் ஓடிக் கொண்டே இருப்பாள். இவளது சுறுசுறுப்பைப் பார்த்து பலர் பாராட்டினாலும், சிலர் பொறாமையில் வம்பு வளர்க்கத்தான் செய்வார்கள்.

அவள் பார்க்காத அவமானங்களா? ஏளனங்களா? தன் சொந்தங்களாலேயே அசிங்கப்பட்டு, அவமானப் படுத்தப்பட்டு துரத்தப்பட்டவள், அதிலிருந்தே வெளிவந்து விட்டாள். அவற்றோடு ஒப்பிடும் போது இதெல்லாம் ஒன்றுமே இல்லை. அதனால் நிரதி இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பாள்.

நிரதிக்கென்று குடியிருப்பு பகுதியை அரசு அனுமதிக்க, சில மாதங்கள் மட்டுமே அதில் இருந்தவள், பின் தனக்கென ஒரு வீட்டை அந்தத் தீவில் வாங்கி குடி பெயர்ந்தாள். அவளுக்கென்று ஒரு அழகான தனி வீடு. எந்தவித தொந்தரவும் பிரச்சனைகளும் இல்லாமல், தன் பெற்றோரின் நினைவுகளோடு அந்த வீட்டில் வாழ்வதே அவளுக்கு சுகம்தான்.

நிரதியின் பொழுதுகள் தொடங்கவும் முடியவும், அவளுக்கு தன் பெற்றோரின் நினைவுகள் மட்டும் போதுமானதாக இருந்தது. இடையிடையே கசங்கலாக ஒரு முகம் வந்து போகும். இவன்தான் உன் உலகம் என்று சொல்லும். ஆனால் அதை முற்றிலும் அப்படியே ஒதுக்கி விடுவாள்.

அந்த எண்ணத்தைப் போக்க விடுமுறை எடுத்துக் கொண்டு ட்ரெக்கிங் செல்வாள். அவனைப் பற்றிய எண்ணங்களை அழித்து விட்டோம் என்று, ஓரளவுக்கு சமாதானம் ஆனதுமே திரும்பி வருவாள். இப்படித்தான் நிரதியும் தன் நிம்மதியைத் தொலைத்து, தேடி என அலைந்து கொண்டிருந்தாள்.

அன்று அவளுக்கு மார்னிங் டியூட்டி என்பதால் ஏழு மணிக்கே வந்திருந்தாள். ஏழு மணியிலிருந்து பன்னிரண்டு மணி வரைதான் டியுட்டி நேரம் அவளுக்கு.

ரெக்கார்டில் சைன் இட்டவளை, “நிதி, உன் டியுட்டி முடிஞ்சதும் என்னை பார்த்துட்டுப் போ.” என்ற அவளின் மேலதிகாரி கிரணைப் பார்த்து, சரியென்றுவிட்டு தனது கேபினுக்குள் நுழைந்தாள் நிதி.

வழக்கம் போல வேலைகள் ஓட, அங்கு வரும் குழந்தைகளைப் பார்த்தாலே அவள் மனம் சற்று இலகுவாகிவிடும். அவர்களோடு பேசி, அவர்களாகவே மாறி, அக்குழந்தைகளின் உலகத்திற்குள் சென்று என அப்படித்தான் அவளது ட்ரீட்மெண்ட் இருக்கும். மதிய உணவைத் தாண்டியும் நிரதி நோயாளிகளைப் பாத்துக் கொண்டிருக்க, கிரண் அவளைத் தேடியே வந்து விட்டார்.

பேஷண்ட் இருந்ததால் வந்தவர் அமைதியாக அவளது சேரில் அமர்ந்து கொள்ள, நிரதி பேஷண்ட் பார்த்து முடித்து, அவர்களை அனுப்பிவிட்டு உதவியாளரையும் போகச் சொல்லிவிட்டு, கிரணுக்கு எதிரில் அமர்ந்தாள். “சாரி சீஃப்!” என்ற வார்த்தையோடு.

“ஹவ் மெனி டைம்ஸ்...” என்று கோபமாகக் கத்தியவர், பிறகு அவள் அமைதியாக இருக்கவும், “எத்தனை தடவை சொல்லியிருக்கேன், நின்னுட்டே பேஷண்ட் பார்க்காதன்னு... என்ன சொன்னாலும் கேட்குறது இல்லை. உன்னை என்ன பண்ணலாம்?” என்றதும் மீண்டும் ஒரு, “சாரி சீஃப்!” என நிரதி சொல்ல,

“இட்ஸ் ஓகே! டியுட்டி ஹேண்ட் ஓவர் வாங்க பவன் தானே வரணும். எங்கே இன்னும் வரல? அவனுக்காகத்தான் நீ எக்ஸ்ட்ரா டைமிங் மேனேஜ் பண்றியா?” என மீண்டும் கோபமாகக் கேட்க,

“நோ சீஃப்... நோ... அவன் வொய்ஃப்க்கு இன்னைக்கு ரொம்ப முடியல. சோ ஒன் ஹவர் மட்டும் பார்க்க சொன்னான்.” எனவும்,

“ம்ச்…” என்றவர், “என்ன முடிவு பண்ணிருக்கீங்க ரெண்டு பேரும்? நான் யாருக்கு ஃபேவரா ஆர்கியு பண்ண? சொல்லுங்க... எனக்கு நீயும் அவனும் ஒன்னுதான். மோஸ்ட்லி பவனை தான் இந்தியாக்கு மாத்த ஹையர்ல கேட்டுட்டே இருக்காங்க. சென்னை ஆர் கொச்சின் தான் போஸ்ட் பண்ணுவாங்க. நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன். அவனோட சிச்சுவேஷன் எடுத்து சொல்றேன். பட் நோ யூஸ். என்னாலயும் ரொம்ப ஃபோர்ஸ் பண்ண முடியாத சூழல்.” எனத் தன் இயலாமையைக் கூறினார்.

“ஐ கேன் அண்டர்ஸ்டேன்ட் சார், பட் பவன்...” என இழுக்க,

“எஸ்! அவன் வேண்டாம், முடியாதுன்னு சொல்றான். இல்லைன்னா விஆர்எஸ் வாங்கிக்கிறேன் சொல்றான். என்ன செய்யலாம்னு உனக்கு எனி ஐடியா?” என்றதும், “ம்கூம்...” என உதட்டைப் பிதுக்கினாள்.

“உங்க ரெண்டு பேர்ல ஒருத்தரைத்தான் ட்ரான்ஸ்ஃபர் செய்யணும். உனக்கு சான்சஸ் குறைவு தான். நீ இங்கையே வேணும்னு ஹையர்ல ரெகமென்டேஷனோட வந்துருக்க. சோ, பவன் மட்டும் தான். ஹையர்ல இருந்து எனக்கு ப்ரஷர், நான் என்ன செய்ய?” எனவும் நிரதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

வேறு எந்த உதவியென்றாலும் பவனுக்காக நிச்சயம் செய்வாள் தான். ஆனால் இந்தியாவுக்கு...? அதிலும் சென்னைக்கு செல்வதென்பது நிச்சயம் முடியாது. அவளால் எப்போதும் முடியாது. ஆனால் பவன்... உடனே பவனைப் பற்றிய எண்ணங்களில் மூழ்க ஆரம்பித்தாள் நிரதி.

***

பவன் சென்னையில் இருந்த ஐஎன்ஹச்எஸ்ஸில் தான் முதலில் பணியில் இருந்தான். அவனுக்கு தாய் மற்றும் இரண்டு தங்கைகள் மட்டுமே. இரண்டு தங்கைகளுக்கும் திருமணமாகி விட்டது. அவனது தாய் சுவிதா மட்டுமே அவனோடு இருந்தார். அப்போது ஒரு நாள் தன் டியுட்டி முடிந்து வரும் நேரம், சாலையோரத்தில் உடலில் கிஞ்சித்தும் ஆடைகளற்று ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் கிடக்க, பதறியடித்து உடனே சுவாசம் இருக்கிறதா எனப் பார்த்து, அது இருப்பதை உணர்ந்தவன் உடனே முதலுதவி கொடுத்து, யாருக்கும் சொல்லாமல் தன் வீட்டிற்கே கொண்டு வந்து விட்டான்.

இதுபற்றி வெளியில் தெரிந்தால் அந்தப் பெண்ணின் நிலை, அவளின் பெற்றோரின் நிலை என்னவாகும் என்ற நல்ல எண்ணத்தில் தான் அப்படி செய்தான். அவள் கொஞ்சம் சரியாகவும் அவளைப் பற்றி விசாரித்து, பெற்றோருக்கு தகவல் கொடுக்கலாம் என்று நினைத்தான்.

வீட்டில் வைத்தே ட்ரீட்மெண்ட் கொடுக்க, முதலில் சுவிதா எதுவும் சொல்லவில்லை. சொல்லப் போனால் அவர்தான் வெளியே சொல்ல வேண்டாம் என்று சொன்னார். இரண்டு பெண்களைப் பெற்றவராயிற்றே?! அதனால் மகனின் செயலுக்கு ஆதரவு கொடுத்தார். அந்தப் பெண் ஓரளவிற்கு சரியாகும் வரை அமைதியாகவும் இருந்தார்.

ஆனால் அந்த பெண், உடலளவில் நோய் குணமாகி, மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாள். அவளுடைய வீட்டிற்கு சொல்லலாம் என்றால், அந்த பெண்ணிடமிருந்து ஒரு தகவலையும் சேகரிக்க முடியவில்லை அவர்களால்.

மெல்ல மெல்ல பவனின் ஆர்வம் அப்பெண்ணின் மேல் விழுவதை உணர்ந்த சுவிதா சுதாரிக்க ஆரம்பித்தார். ஒரு பெண்ணாக, தாயாக அந்த பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வருந்தினார் தான். ஆனால், மகனின் பார்வை அவளிடம் ஆர்வமாகவும் காதலாகவும் விழுவதை, அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு பெண்ணை எப்படி தனக்கு மருமகளாக கொண்டு வருவது என பவனிற்கு அம்மாவாக யோசித்தார் அவர்.

அதனால் மகனின் மனதில் தோன்றிய ஆசையைக் கிளையிலேயேக் கிள்ளி எறியும் பொருட்டு, ஒரு நாள் அவனிடம் பேசினார். “பவன், இந்தப் பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்து அஞ்சு மாசம் ஆச்சு. இன்னும் எத்தனை நாள் இப்படியே வச்சிருக்க முடியும்? போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்போம். வெளிய விசாரிப்போம். உனக்கு கல்யாணம் காட்சின்னு செய்யும் போது இது ஒரு பிரச்சனையா வந்து நிக்கும்.

அதுல எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்ல. இப்பவே உன் தங்கச்சி வீட்ல கேட்குறாங்க. அவளோட நாத்தனாருக்கு உன்னைப் பேசலாமான்னு. நான்தான் உன்கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன். என்ன செய்யலாம்ன்னு சொல்லு?” என்றவரைப் புரியாமல் பார்த்தான் பவன். இப்போது எதற்கு இந்த பேச்சு என்பது போல.

ஆனால் சுவிதா முகத்தில் தெரிந்த அழுத்தத்தில் அவர் இதில் உறுதியாக இருக்கிறார் என்று புரிய, தன் பதிலை அமைதியாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் அவன் கூற, அதிர்ந்து போய் விட்டார் சுவிதா.

“என்ன சொல்ற பவன்?” என அதிர்ச்சி விலகாமலே கேட்க,

“ம்ம்… ஆமாம்மா... கொஞ்ச நாளா இதே யோசனைதான். நானும் எனக்குத் தெரிஞ்ச ஃப்ரண்ட் மூலமா இவளைப் பத்தி விசாரிக்க சொன்னேன். விசாரிச்சதுல கிடைச்ச தகவல் என்னால தாங்கிக்க முடியலம்மா. இந்தப் பொண்ணு... ம்ம்... இனி இந்த பொண்ணு அந்த பொண்ணுனு சொல்ல வேண்டாம். இவளுக்கு ஒரு பேர் வைக்கலாம் முதல்ல. சைந்தரி! சைந்தரி இந்த பேர் நல்லா இருக்கு தானம்மா? இன்னைக்கு ஓபிக்கு அமுல்பேபி போல ஒரு பாப்பா வந்தா அவ பேரும் சைந்தரி.

நாம இவளுக்கு சைந்தரின்னே வைப்போம். என்ன சொல்ல வந்தேன்? ம்ம்... சைந்தரியோட பேரண்ட்ஸ் இவளைக் காணோம்னு தேடவே இல்லையாம். டூ டேஸ் பார்த்திருக்காங்க. இவளைக் காணோம் என்றதும், உடனே இந்த ஊரை விட்டே போயிருக்காங்க. எங்க, என்னன்னு யாருக்கும் தெரியல. அதோட சைந்தரி மூத்த மனைவியோட பொண்ணு போல. ரெண்டாவது மனைவியால தான் எதுவும் பிரச்சனையாகிருக்குமோனு தோனுது.

இவளைப் பார்த்தாலும் படிச்ச பொண்ணு போல தான் இருக்கா. இப்போ சைந்தரி ஃபேமிலியை தேடிட்டு இருக்கோம். அவங்க கிடைச்சதும் இவளை அனுப்புறதைப் பத்தி யோசிக்கலாம். இப்போதைக்கு இந்த பேச்சு வேண்டாம். என்னோட வெட்டிங்கையும் சேர்த்து தான் சொல்றேன். அவங்க வீட்ல வேற இடம் பார்க்க சொல்லுங்க. எனக்கு இப்போ மேரேஜ் பத்தின எந்த ஐடியாவும் இல்ல.” எனப் பேச்சை முடிக்க, சுவிதாவிற்கு மனஅழுத்தம் அதிகமாக, அது பவனின் மேல் கோபமாகத் திரும்பியது.

கோபத்தில் வெளிப்படும் வார்த்தைகளில், எதிரில் இருப்பவர்கள் ஆயிரம் அர்த்தங்களை உருவகப்படுத்திக் கொள்வதோடு, மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு விடுவார்கள். இங்கும் அப்படித்தான்.

மகன் தன் பேச்சைக் கேட்கவில்லை என்ற கோபம், அந்தப் பெண்ணை மணந்து கொள்வானோ என்ற பயமெல்லாம் சேர்ந்து வார்த்தைகளை விட வைத்தது.

“பவன், நீ என்ன அர்த்தத்துல இதை சொல்றன்னு எனக்குப் புரியல. அவ இங்க இருக்குறதுக்கும் உன்னோட மேரேஜ் தள்ளிப் போறதுக்கும் என்ன சம்பந்தம்? நீ சொன்னது போல அவ இங்கயே இருக்கட்டும். ஆனா எனக்கு உன்னோட கல்யாணம் உடனே முடியணும். அந்தப் பொண்ணு வேண்டாம்னா பரவாயில்லை. வேற பொண்ணு பார்ப்போம். என் முடிவு இதுதான், நீ இதுக்கு ஓகே சொல்லியே ஆகணும்.” என சொல்ல,

“ம்மா, ஏன் மாத்தி மாத்தி பேசுறீங்க? நீங்கதான் சைந்தரி இங்க இருக்குறது பிரச்சனைன்னு சொன்னீங்க. இப்போ இல்லைன்னு சொல்றீங்க. உங்க பிரச்சனை என்ன? எதுக்கு சுத்தி வளைச்சு பேசுறீங்க? நேரடியா பேசுங்க...” என அவன் நிதானமாகக் கேட்க,

“இந்த பொண்ணு இங்க இருக்குறது தான் பிரச்சனை. நீ அவக்கிட்ட நடந்துக்குறது தான் எனக்குப் பிரச்சனை. அது எனக்கு சுத்தமா பிடிக்கல. உன் மனசு அவளை விரும்ப ஆரம்பிச்சிருச்சோனு எனக்கு சந்தேகமா இருக்கு. அதை வளர விடுறதுல எனக்கு விருப்பம் இல்ல.” என கண்டிப்பாக பேச,

பவனுக்கும் அதற்குமேல் அமைதி காக்க பொறுமை இல்லை. “ம்மா இதுவரைக்கும் என் மனசுல அந்த மாதிரி எண்ணம் வரல. ஆனா இப்போ, இந்த செகண்ட் நீங்க பேசினதும் தோனுது. ரெண்டு பொண்ணுங்களுக்கு அண்ணனா யோசிக்குறேன். என் தங்கைகளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்துருந்தா, நான் என்ன செய்வேனோ அதைத் தான் சைந்தரி விஷயத்துல செஞ்சேன். ஆனா உங்க மனசுல அது தப்பா பட்டிருக்கு. இனியும் இதை வளர விடுறதுல எனக்கு விருப்பம் இல்ல. இப்போ உங்க முடிவு என்ன?” என அவனும் கேட்க,

சுவிதாவிற்கு மகனின் பேச்சு திக்கென்றது. தேவையில்லாமல் நாம்தான் வாயை விட்டு விட்டோமோ என்று யோசித்தார். ஆனாலும் முன் வைத்த காலை பின் வைக்க அவர் தயாராக இல்லை. அதனால் மகனின் முகத்தில் தெரிந்த இறுக்கத்தையும் பொருட்படுத்தாமல்,

“இந்தப் பொண்ணு இங்க இருக்கக் கூடாது. அவளை எதாவது ஒரு ஆசிரமத்துல சேர்த்து விட்டுடலாம்.” என்றார்.

பட்டென்று, “வாய்ப்பு இல்லம்மா... அவளை எங்கையும் விட முடியாது, பாதுகாப்பு இல்ல.” எனச் சொல்ல,

“அப்போ நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன். எப்போ அவ இங்க இருந்து போறாளோ, அப்பதான் நான் வருவேன்.” என அவரும் கோபமாகப் பேச,

“உங்க இஷ்டம்.” என பவனும் சட்டென்று சொல்லிவிட, எங்கோ ஆரம்பித்த பேச்சு வார்த்தை எங்கோ முடிந்து விட, சுவிதாவிற்கு மகன் தன்னை வீட்டை விட்டு போ என்று விட்டானே என, கோபமும் ஆற்றாமையும் சேர்ந்துகொள்ள, இதுவரை எதிர்த்துப் பேசாத மகன் இன்று எதிர்த்துப் பேசியதும் இல்லாமல், வீட்டை விட்டுப் போகிறேன் என்று சொல்லியும் சரியென்பது போல் இருக்க, இவையனைத்தும் கண்மண் தெரியாதக் கோபத்தைக் கொடுத்தது.

நேராக சைந்தரியின் அறைக்கு சென்றவர், அவளின் முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தார். சைந்தரியின் அலறலில் ஓடி வந்த பவன், தாயின் செயலில் அதிர்ந்து அப்படியே நின்று விட்டான்.

***
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
5
18
Ullagaram
அச்சோ.. பாவம் சைந்தரி...! பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்கிற மாதிரி
யாரோ செய்த தப்புக்கு அவ அசிங்கப்பட்டதோட இல்லாம, இப்ப சுவிதா அம்மாவோட கோபத்தை வேற சம்பாதிச்சிட்டாளோ...???
😢😢😢
CRVS (or) CRVS 2797
 
  • Like
Reactions: Sampavi

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
105
43
Theni
Sainthari romba pavam.. avaloda unmaiyana peyar kooda ennanu therila. eppadi yar kandupidippa.