• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அந்தமான் காதலி - 16

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
அந்தமானின் காதலி – 16

பகல் போல் காட்சியளித்த வானத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிரதி. பால் நிலா மேகங்களுக்குள் ஒழிந்து மறைந்து தன் விண்மீன் தோழிகளுடன் கண்ணாமூச்சியாடிக் கொண்டிருந்தாள். சில நட்சத்திரங்கள் பளிச் பளிச்சென மின்னி கண்சிமிட்டுவது போல இருந்தது. அது தந்தையும் தாயும் தானோ, தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற ஏக்கம் கண்களில் வழிந்தது.

தான் செய்வது சரியா தவறா என்ற குழப்பத்தில் இருந்தவளை இன்றைய ஆண்டாளின் பேச்சு சரிதான் என்ற முடிவை எடுக்க வைத்தது. ஆனால் இதனால் கஷ்டப்படப் போவது தன் கணவன் எனும் போது ஒரு பெரு மூச்சுதான் வந்தது பெண்ணுக்கு. இது அவனுக்கு மட்டும் கஷ்டமில்லையே, அவளுக்கும் தானே கஷ்டம். நினைக்கும் போதே மனம் ரணமாக வலித்தது.

சற்று முன்னர் தான் சித்தார்த்தின் வீட்டினர் எல்லோரும் கிளம்பியிருந்தார்கள். விஷாலுக்கு ஒரு எமர்ஜென்சி கேஸ் என்பதால் அன்று மாலையே கிளம்பிவிட்டான். சுனிதாவும் தன்வீரும் அதே குடியிருப்பில் மற்றொரு ஃபளாட்டில் இருந்தார்கள். அவர்கள் நாளை மணமக்களை மறுவீட்டிற்கு அழைத்துச் செல்வதாகத் திட்டம்.

கிளம்பும் நேரம் மூன்று அத்தையும் அவளிடம் வருந்தி மன்னிப்புக் கேட்டதும், அழுததும் நினைவுக்கு வந்தது. ஒரு கசப்பான புன்னகை பெண்ணவளுக்கு. ஏன் இத்தனை நாட்கள் எங்கே போனார்கள் இவர்கள், மனதை கேள்விக்கனைகள் அரித்துக் கொண்டே இருந்தது. ஆனாலும் பதில் பேசவில்லை. வழக்கம்போல அமைதி நிரதியிடம்.

அனைவரையும் வழியனுப்ப சித்தார்த் கீழே சென்றிருக்க, அப்போது பவனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. “ஹாய் பவன்.. எப்படி இருக்க, சைந்து எப்படி இருக்கா.?” என வரிசையாக கேள்விகளை இவள் கேட்க,

அவனோ “ஸ்டாப்பிட் இடியட்.. என்ன செஞ்சிட்டு இருக்க நீ.? ஏன் த்ரீ டேசா மெடிசின் அலார்ட் எனக்கு ஃபார்வேர்ட் ஆகுது. நான் சொன்னது உனக்கு ஞாபகம் இல்லைனா ஞாபகப்படுத்திக்கோ, இன்னொரு அலர்ட் எனக்கு வந்தா நான் சித்தார்த்துக்கிட்ட தான் பேச வேண்டி இருக்கும்..” எனக் கோபத்தில் படபடவெனப் பொறிந்து விட்டு, இவள் பேசும் முன்னே வைத்திருந்தான்.

நிரதியும் இதை யோசித்துக் கொண்டுதான் இருந்தாள். அந்த மெடிசின் உடனே உறக்கத்தைக் கொடுக்கக் கூடியது. இங்கிருக்கும் போது அதை உபயோகித்தால் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடும் என்பதால் தான் பயன்படுத்தவில்லை. இப்போது இன்னும் சற்று நேரத்தில் போட்டுக் கொள்ளவில்லை என்றால் அலர்ட் மீண்டும் பவனுக்கு சென்றுவிடும். அவன் சொன்னதைக் கண்டிப்பாக செய்து விடுவான் என்று தெரியும்.

அதனால் சற்று யோசித்து வேகமாகக் கதவை பூட்டியவள், தன் பேகில் இருந்த மெடிசினை எடுத்து தனக்குத் தானே இஞ்செக்ட் செய்து கொண்டாள். உடனே மருந்துகளை எல்லாம் டிஸ்போஸ் செய்து ரூம் ஸ்ப்ரேவை அடித்துவிட்டு, தூக்கம் வராமல் இருக்க தண்ணீர் கலக்காமல் லெமனைப் பிழிந்து குடித்தாள்.

தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் போதே ஹாலிங்க் பெல் சத்தம் கேட்க, திறந்தவளின் முகத்தில் இருந்த படபடப்பை அவன் ஆராய்ச்சியாகப் பார்க்கவும், அதை உணர்ந்தவள் வேகமாக அவன் மேல் சய்ந்து அவன் அடுத்து யோசிக்காத வண்ணம் இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

“பார்ரா.. டாக்டர் மேடம்… உங்களுக்கு என்னாச்சு.. உங்க ப்ளான் தான் எல்லாம் சக்சஸாகிடுச்சே, அப்புறம் என்ன..” எனக் கொஞ்சம் குறும்பாகக் கேட்க,

“ம்ம்ஹ்ம்ம்.. இல்லயே. உடனே எப்படி சக்சஸ் ஆகும். அதுக்கு இன்னும் டென் மந்த்ஸ் வெயிட் பண்ணனும்” என அவளும் முணுமுணுக்க,

“ஓகோ… அப்படி.. ம்ம்ம்.. அப்போ டாக்டர் மேடம் சொன்னா சரியா தான் இருக்கும், ஆனா இங்கேயே இப்படியே நின்னா அதுக்கு வழியே இல்லையே டாக்டர்.” என நாக்கை கொடுப்புக்குள் கொடுத்து, கண்ணை சிமிட்டி சிரிக்க, அதில் உடல் மொத்தமும் சிவந்துவிட, அவனைத் தள்ளிவிட்டு பால்கனிக்குள் ஓடிவிட்டாள் நிரதி. கலகலத்த அவனது சிரிப்பு அவளைத் துரத்தியது.

கடல் பச்சை நிறப் பட்டுடுத்தி பவித்ரா வைத்து விட்ட மல்லிகைப் பூ தோளின் இருபுறமும் வழிய, அளவான நகைகள் அவள் அங்கத்தை அலங்கரிக்க, பால்கனியின் சுவற்றைப் பிடித்தபடி நின்றிருந்த நிரதியின் பின் நின்று அணைத்திருந்தான் கணவன்.

“அப்புறம்..” என்றவாறே அவள் கழுத்தில் தன் உதடுகளை உரச, திடீரென்று ஏற்பட்ட அணைப்பிலும், முத்தத்திலும் நிரதியின் உடலெங்கும் சிலிர்த்து, நாணத்திலும் தவிப்பிலுமாக குங்குமாகச் சிவந்தது.

மனைவியின் சிலிர்ப்பை உணர்ந்தவன், மேலும் அவளை சீண்டும் விதமாக “அப்புறம் என்னனு கேட்டேனே டாக்டரம்மா..” என இப்போது காது மடலை தன் நாசி கொண்டு உரச, மொத்தமாக செயலிழந்து போயிருந்தாள் நிரதி. அவளது நிலையை உணர்ந்தவன் பட்டென்று தன் பக்கம் திருப்பி இறுக்கமாக, மிக மிக இறுக்கமாக அணைத்திருந்தான். ‘நிதி.. நிதிம்மா.. நிதி’ என்ற புலம்பல்களோடு.

அவள் மனதில் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள் என்று சித்தார்த்திற்குப் புரிந்தாலும், திருமண வாழ்க்கையில் பின்வாங்க மாட்டள் என்று உறுதியாகத் தெரியவும் தான் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டான்.

அவன் புலம்பல்கள் நிற்காமல் தொடர, அதை உணர்ந்தவள் கழுத்தடியில் இருந்த அவன் முகத்தை நிமிர்த்தி, பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்த இரண்டு நட்சத்திரங்களைக் காட்டி, “இது உங்க மாமியாரும், மாமனாரும். அவங்க முன்னாடி இப்படித்தான் நடந்துப்பீங்களா..” என போதையாய் கேட்க,

அந்தக் குரலில் சொக்கிப் போனவன் மேலேப் பார்த்து “சாரி மாமா, சாரி அத்தை.. உங்க பொண்ணை என் கண்ணுக்குள்ள வச்சு நல்லா பார்த்துக்குறேன். இப்போ எனக்கு முக்கியமான வேலை இருக்கு, மீதியை இன்னொரு நாள் பேசுவோம்..” என அவன் சொல்லி முடிக்க, சடசடவென மழை, சாரலாகப் பொழியத் துவங்கியது.

பெற்றவர்கள் தங்களை ஆசிர்வதிக்கிறார்களோ என்ற எண்ணம் வரவும், கொட்டிய சாரலை ஆசையாகப் பார்த்தவள் முகத்தை மட்டும் முன் நீட்டி மழையில் நனைக்க, துளி துளியாய் மழைச் சாரல் அவள் முகத்தை முத்தமிட தொடங்கியது, அதில் ஆணவனுக்கு மோகம் கிளர்ந்தெழ அதுவரை மழைத்துளிகள் செய்த வேலையைத் தனதாக்கியிருந்தான் சித்தார்த்.

நெற்றி, கண்கள், நாசி, கன்னம் என பயணித்தவனின் இதழ்கள் அதன் இணையில் இளைப்பாற, ஓடி ஓடி களைத்துப் போனவளுக்குச் சொந்த வீடு வந்த நிம்மதி. அந்த முத்ததிலேயே தன் துக்கத்தையெல்லாம் தொலைப்பவள் போல அவனில் இருந்து விலகாமல் இருக்க, இதற்கு மேல் தாங்காது என்பது போல, அவளை அள்ளிக் கொண்டவன் அறையை நோக்கி நடந்தான்.

நிரதி அவனுடன் வாழக்கூடாது என்றெல்லாம் சபதம் எடுக்கவில்லை. அவனுடன் வாழவேண்டும் என்பதற்காகவே தான் இந்த திருமணம், அப்படி இருக்க ஏன் அவனை ஒதுக்கப் போகிறாள்

மனதில் பல குழப்பங்கள் இருந்தாலும், அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இரண்டு உள்ளங்களும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினர். முதலில் தயங்கி தடுமாறியவளை இதமாகக் கையாண்டான் கணவன்.

தன் அருகில் கண் மூடி படுத்திருக்கும் நிரதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சித்து. பெண்ணவள் களைப்பில் விரைவாகவேத் தூங்கியிருந்தாள்.

இன்றைய நிகழ்வில் நிரதியிடம் முழுக்க முழுக்க காதலை மட்டுமே உணர்ந்தான் சித்தார்த். ஏனோ அவள் பழிவாங்கத்தான் திருமணம் செய்து கொண்டாள் என்று உள்மனம் சொல்லும் உண்மையை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதையும் தாண்டி வேறெதுவும் இருக்குமோ என யோசனை வந்தது.

அப்போது தான் அவளது மொபைலில் அவன் பார்த்த மெடிசின் அலார்ம் ஞாபகம் வர, அவளை தள்ளிப் படுக்க வைத்துவிட்டு மொபைலை எடுத்து ஆராயத் தொடங்கினான்.

ஆனால் அவன் எதிர்பார்த்த போல எந்தத் தகவலும் அதில் இருக்கவில்லை. என்ன செய்ய என்று யோசித்தபடியே, கால் லிஸ்டை ஆராய, அதில் கடைசியாக பவனின் நம்பரைக் காண்பிக்க நேரத்தைப் பார்க்காமல் அழைத்துவிட்டான்.

இரண்டாவது ரிங்கிலே போன் எடுக்கப்பட்டது. சித்தார்த் ஹலோ என்பதற்கு முன்பே பவன், “நித்து என்னாச்சு… ஏன் இப்போ கால் பண்ண.. இஞ்செக்ஷன் போட்டியா இல்லையா…? என்னடி செய்யுது.. நித்து..?” என பதட்டமாகக் கேட்கவும், சித்தார்த்திற்கு தன் உலகே இருண்டு போனது போல் ஒரு தோற்றம்.

‘என்ன நடக்கிறது.. என்ன சொல்கிறான் இவன்.’ சற்று நேரம் ஒன்றுமே தோன்றாமல் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது. அந்தப் பக்கம் தொடர்ந்து பவனின் ‘நித்து.. நித்து’ என்ற பதட்டமானக் குரலைக் கேட்கவும், நிதானத்திற்கு வந்தவன் “எஸ்.. ஐம் சித்தார்த், நிரதி’ஸ் ஹஸ்பண்ட்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, இப்போது அதிர்வது பவன் முறையானது.

“சர்..” என்று இழுத்தவன், சித்தார்த் கேட்கும் முன்னே நிரதியைப் பற்றிய அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான் பவன். அவனுக்கும் தோழியின் உடல்நிலையும் வாழ்க்கையும் தான் முக்கியமாகப்பட்டது.

பவன் சொல்லி முடித்ததைக் கேட்டவனுக்கு அதை ஜீரனிக்கவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது. அமைதியாகக் கழிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, “இந்த விஷயம் விஷாலுக்கு தெரியுமா..?” எனக் கேட்க,

“நோ சார்.. நோ.. யாருக்கும் தெரியாது. எனக்கு அப்புறம் இங்க கிரன் எங்க சீப் அவங்களுக்கு மட்டும் தான் தெரியும் ..” எனப் படபடப்புடன் பேசியவன், “சார் நித்துக்கு ஒன்னுமில்லையே மெடிசின் எல்லாம் எடுத்துக்கிட்டாளா.. உங்களுக்குத் தெரியுமா..?” எனக் குற்ற உணர்வில் கேட்க,

“இப்போ தூங்குறா..? மெடிசின் எடுத்துக்கிட்டான்னு தான் நினைக்கிறேன்.” என்றவன், அந்த மெடிசினைப் பற்றிய விவரங்களைக் கேட்டு அறிந்து கொண்டான். அவள் சீக்கிரம் உறங்கினாள் என்பதற்கான காரணம் இப்போது புரிந்தது.

பிறகு ஒரு முடிவோடு பவனிடம், “பவன் நான் ஒரு டூ டேஸ்ல அங்க வர்ரேன். அதுக்கு முன்னாடி எனக்கு அவளோட மெடிக்கல் ஃபைலை அனுப்ப முடியுமா.? நான் எனக்குத் தெரிஞ்ச டாக்டர்ஸ்கிட்ட காட்டி ஒப்பினீயன் வாங்கிடுறேன்..” எனவும்

மறுக்கத் தோன்றவில்லை பவனால். “நீங்க வாங்க சார், ஆனா நிதி வேண்டாம். அவ வந்தா கண்டிப்பா எதையும் செய்ய விடமாட்டா.” என்றவன், “அவளுக்குத் தெரியாம வாங்க சார். நான் உடனே உங்களுக்கு மெயில் அனுப்பிடுறேன். அப்புறம் நிதிக்கிட்ட எந்த கோபமும் காட்ட வேண்டாம் சார்.. அவ ஏற்கனவே தன்னோட லைஃப் டேய்ஸ எண்ணிட்டு இருக்கா..” என்ற பவனின் குரல் கரகரத்து ஒலிக்க, அதைக் கேட்ட சித்தார்த்தின் இதயம் வெடித்துச் சிதறியது.

ஆண்மகன் அழக்கூடாதென்று எந்த முட்டாள் சொன்னான், இதோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் முகத்தைக் கையில் ஏந்தி முத்தங்களைக் கொட்டியவாறே அழுது கரைந்தான் சித்தார்த்.

மருத்துவமனையில் கணவரைப் பார்க்க அவரது அறைக்குள் ஆன்டாளம்மா செல்ல, அவரோ மனைவியைப் பார்க்கவும் இல்லை, அவரிடம் பேசத் துளியும் யோசிக்கவில்லை. அவருக்கு மறுபக்கம் முகத்தைத் திருப்பியவர் தான் திருப்பவே இல்லை. அதுவே அவருக்கு பேரிடியென்றால் ரிசப்சனுக்கு சென்ற யாரும் ஒரு மரியாதைக்கு கூட அவரை ‘வாங்க’ அழைக்கவில்லை. இதெல்லாம் சேர்ந்து அவரது கோபத்தை பல மடங்காக்கியது.

ஃபங்கசன் முடிந்து புதுமணத் தம்பதிகளை அவர்கள் வீட்டில் விட்டு, அடுத்தடுத்து நடக்கும் சம்பிரதாயங்களயும் செய்துவிட்டு, வீட்டிற்கு வந்தவர்களை கோபத்துடன் எதிர்கொண்டது ஹாலில் அமர்ந்திருந்த ஆன்டாளம்மாள் தான். “என்ன எல்லாரும் விருந்து முடிச்சிட்டு வந்தாச்சா..?” என அவர் நக்கலாகக் கேட்க,

அதுவரை மதிப்பாக பார்த்த பேரன் பேத்திகள் எல்லாம் இப்போது சலிப்பாக பார்க்க, அதை உணர்ந்த வித்யா “இங்க என்ன வேடிக்கை, உள்ளே போங்க..” என பிள்ளைகளை அதட்டி அனுப்பிவிட்டு அம்மாவின் முன் வந்து நின்றார்.

“சொல்லுங்கம்மா என்ன பிரச்சினை உங்களுக்கு.. ஏன் இப்படி நடந்துக்குறீங்க, இப்படி பேசி உங்க தரத்தை ஏன் குறைச்சுக்குறீங்க..” என சலிப்பாகக் கேட்க,

“ஓ.. நேத்து வந்தவளுக்காக நீ என்னையவே கேள்வி கேட்பியா, ம்ம் உங்களையும் மயக்கிட்டாளா.? அந்த மாயக்காரி. இதுக்குத்தான் வீட்டுக்குள்ளவே சேர்க்க வேண்டாம்னு சொன்னேன். யாருக் கேட்டா.? இன்னைக்கு என்னை என் குடும்பத்துல இருந்து பிரிச்சிட்டா..” என வன்மமாகச் சொல்ல,

“அம்மா..” என அதட்டிய நித்யா, “அவ என்ன கேட்குறா, நீங்க என்ன பேசுறீங்க. இனி நிதியைப் பத்தி நீங்க மட்டுமில்ல இந்த வீட்டுல வேற யாரும் பேசக்கூடாது. அவளைப் பத்தி பேசவோ செய்யவோ நம்ம யாருக்கும் எந்த தகுதியும் கிடையாது. இல்ல அப்படித்தான் செய்வேன்னு நீங்க நினைச்சா நாங்க யாரும் உங்க கூட இருக்க மாட்டோம். பார்த்துக்கோங்க..” அதிர்ந்தவரைக் கண்டு கொள்ளாமல் உள்ளே நகர்ந்துவிட, அனைவரும் அவரை ஒதுக்குவதையும், நிரதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் கண்டு, மீண்டும் கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

எந்தக் குடும்பத்தைக் காட்டி தன் மகனின் ரத்தம் என்றும் பாராமல் ஒதுக்கி வைத்தாரோ, அந்த பெண்ணாலேத் தான் தனியாக்கப்படுவோம் என்று அறியவில்லை. இந்தக் கோபங்கள் எல்லாம் தனக்கே வினையாக வந்து சேரும் நாட்கள் வெகு தொலைவில் இருக்கவில்லை என்று அவருக்கு காலம் பதில் கொடுக்க காத்திருந்தது.

வினை விதித்தவன் வினை அறுப்பான்.!
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️
நிரதி நாட்களை எண்ணுகிற அளவுக்கு ஹெல்த் போய்டுச்சா, 😔😔😔😔😔😔என்ன பிரச்சனையா இருக்கும் 🤔🤔🤔🤔🤔🤔🤔
இந்த ஆண்டாள் பாட்டி சாகுற வரை அவர் குணம் மாறாது 😡😡😡😡😡
 
Top