• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அந்தமான் - 14

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
அந்தமான் காதலி – 14

மாலை நேரம் புதுமணப் பெண்ணின் குங்குமக் கன்னம் போல் சிவந்திருக்க, மலர்கள் ‘அய்யோ’ என்ற வாடிய முகத்துடன், ஒற்றைக் காலில் நின்று பரிதிக் காதலனுக்கு பிரியாவிடைக் கொடுக்க, முகம் காட்டாத நாடோடிப் பட்சிகள், சிறகடித்து தங்கள் கூட்டைத் தேடிப்போய் கொண்டிருந்த ஒரு இனிமையான மாலைப் பொழுது.

மதுரையின் மத்தியில் கம்பீரமாக அமர்ந்திருந்தது சர் இராஜா மஹால். உற்றார் உறவினர்களோடு சேர்ந்து தொழில்முறை நண்பர்களாலும் நிரம்பி வழிந்தது.

சித்தார்த் அவளிடம் கூறியிருந்தது போல, அந்த மண்டபத்தின் ஓரத்தில் இளவட்டங்களின் ஆட்டம் களைக் கட்டியிருந்தது. ஆனால் அதிலெல்லாம் நிரதியின் மனம் லயிக்கவில்லை.

என்னதான் இன்றைய நாளை இனிதாக கடந்து விட வேண்டும் என்று அவள் நினைத்தாலும், அதை செயல்படுத்த உடனிருப்போர் விடுவதில்லையே.

திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த மணமக்களுக்கு அனைத்தும் முறைப்படியே நடந்தது. வானவேடிக்கைகளும், கொட்டு முரசுகளும், பெண்களின் மங்கலப் பாடல்களும் என வரவேற்க நிரதியின் மனம் சற்று இலகுவாகத்தான் இருந்தது.

கீர்த்தியும், அவளது தங்கை ப்ரீத்தியும் ஆரத்தி எடுக்க, ஐவகைத் தானியங்களைத் தாண்டி அவ்வீட்டுக்குள் சித்தார்த்தின் மனைவியாக வலது காலை எடுத்து வைத்தாள் நிரதி.

அத்தனை பேர் உடனிருந்தும் அந்நியமாகத் தோன்றியது அந்த மாளிகை. உள்ளே நுழைந்த சில நிமிடங்களிலேயே அவளால் சாதரணமாக இருக்க முடியவில்லை. அத்தைகளும், மாமாக்களும், அத்தை பிள்ளைகளூம் என எல்லோருமே அவளைத் தாங்கினாலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தள்ளாடினாள் பெண்.

மனைவியின் நிலையை நொடியில் புரிந்து கொண்டவன், “ரிலாக்சா இருடா.. கொஞ்ச நேரம் தான்..” என்றதும், தன் கலக்கத்தை மறைத்து அவனைப் பார்க்க, “உனக்குப் பிடிக்காத எதையும் செய்யமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணிருக்கேன்.. நம்புற தான..” என இரைஞ்சுதலாகாக் கேட்க,

“ம்ம்..” என்று அவளும் தலையசைக்க, ஒரு ஆசுவாசத்துடன் மனைவியின் கையைப் பிடித்து தன் கைக்குள் இறுக்கிக் கொண்டான்.

பூஜையறையில் விளக்கேற்ற அழைத்துச் செல்ல, அங்கே சாமி படங்களுக்கு கீழேத் தனியான ஒரு அலமாறி செட்டப்பில் விதுரன் ஒரு போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தார். விதுரன் மட்டும்.

பார்த்தாள்.. பார்த்துக் கொண்டே இருந்தாள். பார்த்த பெண்ணுக்கு பேரிடி தான். மனதுக்குள் பொங்கும் ஆவேசத்தை அடக்கும் வழி தெரியாமல் தன் பக்கத்தில் நின்றிருந்த பவித்ராவை முறைத்துப் பார்த்தாள். அவருக்கு என்னவென்றேப் புரியவில்லை.

“என்ன நிதிம்மா..” என்றக் கேள்விக்கு அடக்கப்பட்டக் கோபத்துடன், ‘ஒன்றும் இல்லை’ எனும் விதமாகத் தலையசைத்தவள், சாமிக்கு விளக்கேற்றியவள் வணங்கக் கூட இல்லை. விதுரனின் போட்டோவை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

“நிதி.. நிதி.. நிதி..” என அத்தைகள் மூவரும் அவள் பின்னே வர, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நேராக கணவனின் அருகில் சென்றவள், “மாமா..” எனவும்,

அதற்குள் சத்தம் கேட்டு ஆண்களும் அங்கு வந்திருக்க, சுனிதா தான் “என்ன நிதிம்மா இது, எதுக்கு பூஜை ரூம்ல இருந்த அப்பா போட்டோவை எடுத்துட்டு வந்த..” எனக் கேட்க, அதையும் காதில் வாங்கவில்லை.

சித்தார்த்தைப் பார்த்தவள் “இங்க ஸ்டோர் ரூம் எங்க இருக்கு..” எனவும்,

அவள் முகத்தில் தெரிந்த கோபம், ஆற்றாமை, அதை வெளிப்படுத்த முடியாத இயலாமை என பல உணர்வுகள் வந்து வந்து போக, அதில் பதறியவன் “ஏன்டா.. என்னாச்சு..” எனத் தன் கைவளைக்குள் கொண்டு வர,

“ப்ளீஸ்.. இந்த ப்ரேமைக் கொண்டு போய் அங்க வச்சிடுங்க…” என இறுக்கமாகச் சொல்ல,

“நிதி.. என்ன பேசுற நீ.. அது யார் போட்டோன்னு உனக்குத் தெரியலையா.?” விஷால் அதட்ட,

தன் கையிலிருந்ததைக் காட்டி “எஸ்.. ஐ னோ… பட் ஐ கான்ட் டாலரட் திஸ்..” என்று விஷாலைப் பார்த்து சொன்னவள், சித்தார்த்திடம் “எனக்குப் பிடிக்காதது எதுவும் நடக்காது சொன்னீங்க, இதுவும் எனக்குப் பிடிக்கல…” எனச் சொல்லும் முன்னே கண்ணீர் வழிந்தோட, அப்போது தான் வேலையாள் கந்தன் ஆழ்வார்சாமியைத் தள்ளிக்கொண்டு வர, அவர்களின் பின்னாடியே ஆன்டாளம்மா வந்தார்.

“ஓக்கே.. ஓக்கே ரிலாக்ஸ் ரிலாக்ஸ்..” என அவளின் கண்ணீர் வழிந்த கண்னத்தைத் துடைத்தவன், தாயை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, அவளையும் அழைத்துக்கொண்டு ஸ்டோர் ரூம் பக்கமாக நடக்க,

“கண்ணா.. என்ன செஞ்சிட்டு இருக்க.? அவன் எம் மகன். யாரோ சொல்றாங்கன்னு எம் மகன் போட்டவைத் தூக்கி மூலையிலப் போடப் போறியா.? அந்த உரிமை உனக்கு மட்டுமில்ல இங்க யாருக்குமே இல்ல..?” எனத் தன் பெருந்தொண்டையைக் கிழித்துக் கொண்டு ஆன்டாளம்மா கத்த,

எங்கிருந்து தான் அத்தனை ஆவேசம் வந்ததோ நிரதிக்கு, தன் கையைப் பிடித்திருந்த சித்தார்த்தின் கையைத் தட்டிவிட்டவள், நேராக ஆன்டாளம்மாவின் முன்பு போய் நின்று, கணவனைப் பார்த்து “இதுக்கு மேல இந்தம்மா ஒரு வார்த்தைப் பேசினாலும், நான் இந்த வீட்டுல இருக்கமாட்டேன்..” எனக் கட்டளையாகச் சொல்ல, சித்தார்த் இதை எதிர்பார்த்தேன் என்பது போல நிற்க, அங்கிருந்த மற்ற அத்தனை பேரும் அதிர்ந்து போயினர்.

“நிதி..” என விஷால் அதட்ட, அதைக் கண்டு கொள்ளாமல் அத்தைகள் மூவரிடமும் வந்தவள், “உங்க அண்ணான்னா உயிர் இல்ல உங்களுக்கு, அப்படி சொல்லித்தான எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்கீங்க. அது உண்மையா..?” என்றவள் “அப்படி உண்மையா இருந்திருந்தா, எங்கப்பாவுக்கு பிடிச்ச எல்லாம் உங்களுக்கும் பிடிச்சிருக்கனும் தான, அப்படி பிடிச்சிருந்தா இந்த போட்டோல எங்கப்பா மட்டும் தனியா இருந்துருக்க மாட்டார் தான..” என கொஞ்சமும் குறையாத ஆவேசத்துடன் சொல்ல, அப்போதுதான் நிதி ஏன் போட்டோவைக் கழட்டினாள் என்பது எல்லோருக்கும் புரிய, அவர்கள் செய்த தவறும் புரிந்தது.

“என் வீட்டுல யார் போட்டோ இருக்கனும், யார் போட்டோ இருக்கக்கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணுவேன், நீ யாரு இதெல்லாம் சொல்ல, வீட்டுக்குள்ள அடியெடுத்து வச்ச முதல் நாளே இத்தனைப் பிரச்சினை. காலம் முழுக்க இங்க இருந்தா..” என ஆன்டாளாம்மா முடிக்கும் முன்னே “பாட்டி.. அம்மா.. அக்கா.. அத்தை..” என வெவ்வேறு திசைகளில் இருந்து கண்டனமாகக் குரல்கள் பறந்து வர, அதையெல்லாம் கண்டு அதிராமல் நிரதியை முறைத்துக்கொண்டு நின்றார் ஆன்டாளம்மா.

ஆனால் அவளோ இப்போது பவித்ராவப் பார்த்து “நான் உங்க மகனைத்தான் கல்யாணம் செஞ்சிருக்கேன், உங்க வீட்டுக்குத்தான் மருமக.. இவங்க வீட்டுக்கு இல்ல. இவங்க ஏன் பேசுறாங்க, இவங்க பேசுறதை எல்லாம் நான் கேட்கனும்னு எனக்கு எந்த தலையெழுத்தும் இல்ல. இதுக்கு நீங்க பதில் சொல்றீங்களா..? இல்லை என் வழியில நான் சொல்லட்டுமா.?” என நிறுத்தி நிதானமாகக் கேட்டாள்.

இங்கு சித்தார்த்தோ எதுவும் பேசவில்லை. இது அவளுக்கான நேரம், அவளூக்கான உரிமைக்கான போராட்டம். இதில் அவன் தலையிடுவது சரியல்ல, நிலைமை கைமீறும் போது தன் கையில் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்து அமைதியாக வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.

“நிதி.. திஸ் இஸ் டூ மச்.. உன்னை நாங்க இப்படி வளர்க்கல, இவங்களை எல்லாம் பழிவாங்கத்தான் இந்த கல்யாணமா? உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருந்தது தெரிஞ்சிருந்தா கண்டிப்பா இதுக்கு நான் ஓக்கே சொல்லிருக்க மாட்டேன்” என தந்தையாக அதட்டினார் தன்வீர்.

“ப்ளீஸ் டேட்.. டோன்ட் சே எனிதிங்.. என்னோட வலி உங்களுக்குப் புரியலையா.? நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு என் மனசை இறுக்கிக்கிட்டு இங்க வந்தேன் தெரியுமா..? ஆனா ஜஸ்ட் ஒரு போட்டோ.. அந்த போட்டோல கூட என் அம்மாவை இவங்க ஒதுக்கி வைக்கிறாங்கன்னா.. என்னால.. என்னால..” என்றவள் அதற்கு மேல் முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழ, சித்தார்த் சட்டென்று அவளைத் தன் பக்கம் இழுத்துக் கைகளில் அள்ளி மார்போடனைத்துக் கொண்டு தன் அறை நோக்கி வேகமாக நடந்தான்.

நிரதியின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையே. அவள் சொன்னது போல ஏன் நாம் இல்லை. இந்த போட்டோவில் கூட ஏன் வாணியை அனுமதிக்கவில்லை. அப்படியென்றால் நிதி சொல்லிச் சென்றது உண்மையோ. சுயநலவாதியாகவே இத்தனை வருடம் வாழ்ந்துவிட்டோமோ.. என்று மூவரும் மனம் கலங்கிப் போயினர். அடுத்து நிதியிடம் எப்படி பேச, என அவர்கள் யோசிக்க,

இங்கே பேரனின் தலை மறையும் மட்டும் அமைதியாக இருந்த ஆன்டாளம்மா, அவன் அறைக்குள் நுழைந்ததுமே “என்ன பவித்ரா.. நான் சொன்னேனே அப்பவே கேட்டீங்களா.. இப்ப நிக்க வச்சு கேள்வி கேட்குறா அவ.. பதில் சொல்ல முடியலதான உங்களால, இதுக்குத்தான் அவ்வளவு தூரம் படிச்சி படிச்சி சொன்னேன், அவ இந்த வீட்டுக்கு வேண்டாம்னு, யார் கேட்டீங்க. வந்த முதல்நாளே என்ன ஆட்டம் போட்டுட்டுப் போறா பார்த்தீங்கள்ல, என் பேரன் ஒரு வார்த்தை எனக்கு ஏந்துட்டு பேசல, அவனக் கைக்குள்ள போட்டுக்கிட்டு நாளைக்கே இந்த வீட்டை விட்டு நம்மல துரத்தினாலும் ஆச்சரியப்பட ஒன்னும் இல்ல.” என விசமாக பேச,

“ம்மா..” என பவித்ரா அதட்டுவதற்குள், “இதுக்கு மேல என் தங்கையைப் பத்தி ஒரு வார்த்தை நீங்க பேசனீங்க, நடக்குறதே வேற. நானும் பார்த்துட்டே இருக்கேன், உங்களுக்குத்தான் பேசத் தெரியும்னு சும்மா பேசிட்டே இருக்கீங்க, ஏன் அவளுக்கு கேட்க ஆளு இல்லன்னு நினைச்சீங்களா.? நான் இருக்கேன். அவளுக்கு அண்ணன் நான் இருக்கேன். என்னை மீறி என்ன செஞ்சிடுவீங்க நீங்க..” என ஆன்டாளம்மாவை எதிர்த்துக் கொண்டு போக,

தன்வீரும், சுனிதாவும் மகனை அடக்க முயல, அங்கிருந்த ரத்தினவேலுவோ ஒரு முடிவுடன் நடப்பதைத் தடுக்க முடியாமல் இயலாமையில் வெந்து கொண்டிருந்த ஆழ்வார்சாமியிடம் வந்து, “மாமா இத்தன நாள் பாலா எங்கிட்ட உங்க கூடவே இருக்கனும்னு கேட்டுக்கிட்ட ஒரே காரணத்துக்காக மட்டும் தான் இந்த வீட்டுல என் குடும்பம் தங்குச்சு. இப்ப இங்க எனக்கும் என் குடும்பத்துக்கும் மரியாதை இல்லன்னும் போது, நாங்க தங்குறதுல அர்த்தமே இல்ல. விஷேஷம் முடிஞ்சதும் நாங்க எங்க வீட்டுக்குப் போயிடுறோம்..” என சொல்ல,

பவித்ராவும் வேகமாக “ஆமாப்பா… இதுக்கு மேல எங்களைத் தடுக்காதீங்க.. ஏற்கனவே இப்படி பேசி பேசித்தான் எனக்கு கூடப்பிறந்தவன் இல்லாம பண்ணாங்க. இப்போ என் மகனையும் எங்கிட்ட இருந்து பிரிச்சிருவாங்க போல..” என அழுதுகொண்டே ஆற்றாமையில் பேச,

“பவி என்னடீ சொல்ற, வீட்டை விட்டு போறியா.. என்ன வார்த்த சொல்றடி, அப்படி என்னடி பேசிட்டேன். வந்த அன்னைக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் பன்றாளே கொஞ்சம் அடக்கி வைக்கனும்னு பேசினேன், அது ஒரு குத்தமா.? அதுக்காக வீட்டைவிட்டு போவியா..” என வழக்கம்போலத் தன் நடிப்பைக் கையில் எடுக்க,

“ம்மா.. போதும் விடுங்க.. இதுக்கு மேல இங்க யாரும் எதுவும் பேசக்கூடாது. யாரும் எங்கேயும் போகவேண்டாம். நான் ஏற்கனவே முடிவு பண்ணதுதான் நானும் நிதியும் என்னோட ஃப்ளாட்லதான் இருக்கப் போறோம்..” என அமர்த்தலாகச் சொன்னபடி வந்து நின்றான் சித்தார்த்.

எல்லோரும் அதிர்வாக அவனைப் பார்க்க, அவனோ விஷாலிடம் சென்று “என் மேல இருக்குற நம்பிக்கையை எப்பவும் குறைச்சிக்க மட்டேன் விஷால். உன் தங்கச்சி என் பொறுப்பு. இனி உனக்கு அந்தக் கவலை வேண்டாம். நீங்க அங்க ஃப்ளாட்டுக்கு கிளம்புங்க. லன்ச் அங்க வந்துடும், அங்க இருந்தே ஈவ்னிங் ஃபங்க்ஷனுக்கு வந்துடுங்க, அங்கிள் ரொம்ப டயர்டா இருக்கார், சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும்..” என்றதும், மறுக்க முடியவில்லை விஷாலால். தன்வீரின் உடல்நிலையும் அப்படித்தான் இருந்தது.

“நிதி..” என இழுக்க, “அவ தூங்குறா.. நான் பார்த்துக்குறேன்..” எனவும் தலையை மட்டும் அசைத்துவிட்டுப் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான் விஷால்.

ஒரு பெருமூச்செடுத்துவிட்டு அங்கிருந்த சோஃபாவில் அமர, “கண்ணா..” என பவித்ரா வர, அப்போது வெளியே ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்க,

“ம்மா.. இந்தப் பிரச்சினையை இப்படியே விடுங்க. நம்ம நல்ல நேரம், வீட்டு ஆளுங்க தவிர வேற யாரும் இல்ல, சொந்தக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க பாருங்க, அவங்களைக் கவனிங்க, அப்புறம் பொறுமையா நிதியைப் பத்தி பேசலாம்..” என அத்தோடு அந்தப் பிரச்சினையை முடித்துவிட்டான்.

அவன் சொல்லி முடிக்க, பஸ்ஸில் வந்த சொந்தங்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குள் வர ஆரம்பிக்க, அந்தப் பேச்சை அப்படியே விட்டுவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.

வந்த சொந்தங்களை எல்லாம் வரவேற்று, அவர்களுக்குத் தேவையானதைச் சொல்லி, என அனைத்தும் செய்து சற்று மூச்சு வாங்கியவன் இருவருக்குமான உணவை தங்கையிடம் கொண்டுவரச் சொல்லிவிட்டு அறைக்கு வந்தான்.

உள்ளே நுழையவும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் பெண். மனையாளை எழுப்பவே மனம் இல்லை மன்னவனுக்கு, ஆனால் அவளோ சாப்பிடாமல் படுத்திருக்க, அப்படியே விட மனமின்றி பெருமூச்சுடன் அருகில் அமர்ந்து மெல்லத் தலைக் கோதினான். ம்ஹ்ஹ்ம்ம் எந்த அசைவும் இல்லை மனைவியிடம்.

பக்கத்தில் இருந்த அவளது மொபைலில் அலர்ட் ரிங்க் அடிக்க ஆரம்பிக்க, என்ன இது புதுவிதமாக என யோசித்தவன், மனைவியின் உறக்கம் கலையும் முன்னே அதை எடுத்து அனைத்துவிட்டுப் பார்க்க, ‘டேப்லட் அலார்ட்’ என இருக்க, புருவம் சுருக்கி யோசித்தவன், தன் பேசன்ட் யாருக்கேனும் மெசேஜ் செய்வதற்காக் இருக்கும் என நினைத்து, அதை அப்படியே விட்டவன் கீர்த்தி உணவுடன் வர, அதை வாங்கிவிட்டு தங்கையை அனுப்பி கதவை அடைத்துவிட்டு உறங்கும் மனைவியையே யோசனையாகப் பார்த்தான்.

‘ஏன் இப்படி உறங்குகிறாள்’ கேள்வி மனதைக் குடைந்தாலும், அதை ஒதுக்கிவிட்டு மெல்ல மெல்ல அவளை எழுப்பி, மிரட்டி, உருட்டி, கெஞ்சி, கொஞ்சி ஒருவழியாக அவளைச் சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டு முடிக்க, ஒரு மலையைப் புரட்டிய ஊனர்வு.

“கையைக் கழுவி வருவதற்காகவே காத்திருந்தது போல, அவன் கைக்குள் சுருண்டு கொண்டவளின் தலையை வருட “சாரி மாமா.. நான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.. சாரி.” எனவும்,

“எனக்கு உன்னைப் புரியாதா.? இதுக்கெல்லாம் சாரி கேட்பியா.? ம்ம்.. இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்கப்போறோம். அப்புறம் நம்ம வீட்டுக்கு போயிடலாம். இங்க இருக்குற வரை நீ கீழக் கூட வரவேண்டாம். நான் மேனேஜ் செய்துக்குறேன்.. நீ கண்டதையும் யோசிக்காம ரெஸ்ட் எடு..” என பதிலுக்குச் சொல்ல, நிரதிக்கு பெரும் குற்ற உணர்வு.

தான் நடந்து கொண்டது நிச்சயம் தந்தைக்குப் பிடிக்காது. அவருக்குப் பிடிக்காததை செய்ய எப்படி எனக்கு மனது வந்தது. அவருக்கு உயிரான தங்கைகள் அவர்களை வருத்தப்பட வைத்துவிட்டேனே என மேலும் குறுகியவள், சித்தார்த்திடம் “மாமா நான் அத்தைங்ககிட்ட சாரி கேட்கனும், கீழ போலாமா..” என்று அதே குற்ற உணர்வில் கேட்க,

“ஹேய் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ என்ன தப்பு செய்த சாரி கேட்க, இந்த கஷ்டம் அவங்களுக்குத் தேவைதான் விடு..” என அமைதியாக சொல்ல

“ம்ஹ்ம்ம் இல்ல.. நான் செய்தது தப்பு.. ப்ளீஸ் என்னைக் கூப்பிட்டு போங்க, இல்ல என்னை விடுங்க நான் போறேன். ஆனா கண்டிப்பா சாரி கேட்கனும்.. இல்லாட்டி அப்பா எங்கிட்ட கோச்சுப்பார்..” எனப் பாவமாகச் சொல்ல, அள்ளி அணைக்கத் துடித்த கரங்களை அடக்கி, ஒரு புண்சிரிப்புடன் அவளை அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.

இப்போது வீடு முழுவதும் உறவினர்கள். ஒவ்வொருவரும் வந்து நிரதியிடம் பேசிவிட்டு, பெற்றோர்களைப் பற்றி விசாரித்துச் செல்ல, அது சற்று இதமாக இருந்தது. அவர்களிடம் பேசினாலும் பார்வை முழுக்க வீட்டைச் சுற்றியே ஓட, அதைக் கவனித்த ஒரு வயதான பெண்மனி, அவளுக்கு பாட்டி முறையில் வருவார்.

அவே “என்னத்தா யாரத் தேடுற..” என பாசமாக வினவ, “அத்தைங்க.. அத்தைங்க யாரையும் காணோம்.. அதான்..” எனத் தினற,

“எதுக்குத்தா எங்கிட்ட பயம், நான் உனக்கு அப்பத்தா முறை. உங்கப்பனுக்கு சின்னாத்தா. என் கைலத் தூக்கி வளர்த்த மவன். இன்னைக்கு எமனுக்கு தூக்கிக் கொடுத்துட்டு உக்காந்துருக்கோம். இங்க வர போக இருந்திருந்தா இதெல்லாம் தெரிஞ்சிருக்கும், அதுக்குத்தான் வாய்ப்பு இல்லாம போச்சே, சரி போனது போகட்டும் ராசாத்தி. நீ எப்படி இருக்க..” என அவர் அன்பாகப் பேச, இப்போது மேலும் சற்று இறுக்கம் தளர்ந்தது.

தன் அத்தைகளிடம் கூட சாதரணமாக அவளால் பேச முடிந்தது. தன் செயலுக்கு மன்னிப்பு கேட்க முடிந்தது. தன் மாமன்களிடமும் கூட சிரித்த முகமாய் இரண்டு வார்த்தைகள் பேச வைத்தது. இதெல்லாம் ரிசப்சனுக்கு கிளம்பி பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் வரை மட்டுமே. அப்படி அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் போது நிரதி மீண்டும் தன் வேதாள நிலைக்கு வந்துவிட்டாள்.
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
ச்சே.. இந்த ஆண்டாளம்மா அடங்கவே அடங்காது போல என்ன ஜென்மமோ..
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
ஆத்தாடி நிறைய தடவை வேதாள நிரதி முருங்கை மரம் ஏறும் போல 😳😳😳😳😳😳
 
Top