• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அந்தமான் - 2

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
863
அந்தமான் – 2





அதற்குள் செய்தி இருவீட்டாருக்கும் பறந்துவிட, எல்லோரும் கோவிலில் ஒன்று கூடி விட்டனர். வாணி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் விதுரன் எதிர்பார்த்தார். ஏனென்றால் கோவில் பூசாரியிடம் இருந்து தனக்கு திருமண ஏற்பாடுகள் செய்து கொடுத்தவர்கள் வரை எல்லோரும் தன் குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். திருமணம் முடிவதற்குள்ளே வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க திருமணம் முடிந்த பின்னே வந்தனர்.



ஊர் பெரியவர்களில் இருந்து அனைவரும் கோவிலின் முன்னே கூடிவிட்டனர். விதுரனின் குடும்பம் தான் அந்த ஊரில் பெரியத் தனக்காரர்கள் என்பதால் அவர்களை எதிர்த்துப் பேச அந்தக் கூட்டத்தில் யாருமே இல்லை. வாணியின் அண்ணன் குடும்பத்தினருமே என்ன நடந்தாலும் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் தான் இருந்தனர்.



அனைவரும் அமைதி காக்க முதலில் பேசியது ஆண்டாளம்மாள் தான். “விதுரா நீ என்ன பண்ணி வச்சிருக்க, நான் அவ்ளோ தூரம் எடுத்துச் சொல்லியும் நீ கேட்காம என்ன காரியம் செஞ்சு வச்சுருக்க, இங்க நடந்த எதையும் நான் ஒத்துக்க மாட்டேன். ஏத்துக்கவும் மாட்டேன். நீ இப்பவே அவள் கழுத்துல கட்டிருக்குற தாலியைக் கழட்டி வீசிட்டு என் கூட வா” என்று கோபமானாலும், அதை வெளியில் காட்டாமல் தன்மையாகவே ஆரம்பித்தார்.





தான் எவ்வளவு கோபமாகவோ, இல்லை தன்மையாகவோ எப்படி பேசினாலும் தன் மகன் வரமாட்டான். அந்தக் காரியத்தை செய்யமாட்டான் என்று அவருக்குத் தெரியவில்லை. அப்போதே அதை நிரூப்பித்தார் விதுரன்.





“ம்மா என்ன பேசுறீங்க, நான் அவ கழுத்துல தாலியைக் கட்டியிருக்கேன். அவ என்னோட உயிரில் பாதி, அவ்வளவு சாதரணமா தாலியைக் கழட்ட சொல்றீங்க, இப்படியெல்லாம் நடக்கும், இன்னும் ஒருநாள் நான் தாமதிச்சாலும் வாணி என்னைவிட்டு போயிருப்பா, இல்லை நீங்க போக வச்சுரூவீங்கனும் எனக்குத் தெரியும். எல்லாம் தெரிஞ்சு தான் நான் இவளைக் கல்யாணம் செய்துகிட்டேன்..” என்று தன் தாயிடம் கூறினான்.



இத்தனைப் பேர் மத்தியில் தன் மகன் யாரோ ஒருத்திக்காக அவரை உதாசீனப்படுத்தி விட்டானே என்ற கோபம் அவருக்கு. அது கொடுத்த கோபம் வார்த்தைகளை தவறாக உபயோகிக்க வைத்தது.



“என்னடா விட்டா பேசிக்கிட்டே போற, ஆமாம் நான் தான் சொன்னேன். அவளோட அண்ணன்கிட்ட சீக்கிரமா அவளுக்கு யாரையாச்சும் பார்த்துக் கட்டி வைங்கனு, இல்லைண்ணா தேவையில்லாமக் கஷ்டப்பட வேண்டி வரும்னு சொன்னேன். இந்த மேனாமினுக்கி எதுக்குடா உன்னைக் கல்யாணம் செய்துகிட்டா இந்த சொத்துக்காகத்தான, இந்த சொத்து மட்டுமே இல்லைண்ணா உன்னை திரும்பி கூட பார்த்திருக்கமாட்டா, கூலி வேலைப் பார்த்து வயித்த கழுவுரவளுக்கு இவளோ பரிஞ்சுகிட்டு வர, போடா போயி நான் சொல்றத செய், அந்தக் கயிறை கழட்டி எறிஞ்சுட்டு வா” என்று அதிலே குறியாக இருந்தார் ஆண்டாள்.



அவரை ஒரு பார்வைப் பார்த்தாவன், அவரைவிட்டு தன் தந்தையிடம் பேசினார். “அப்பா என்னால எந்தக் காரணத்துக்காகவும் வாணியை விட முடியாது. எனக்கு மனைவின்னு ஒருத்தி வந்தா அது அவள் மட்டும் தான். அவளைப் பிரிய முடியாதுப்பா. உங்களுக்கு நான் வேணும்னா அவளையும் சேர்த்துக்கோங்க, இல்லைன்னா இப்படியே இந்த விசயத்தை விட்டுடுங்க, இப்படி பேசுறதுக்காக என்னை மன்னிச்சுருங்கப்பா. நான் இதுவரைக்கும் நடந்துகிட்டது எல்லாமே நீங்க சொன்னது மாதிரி தான். வெளிநாட்டுக்குப் போய் மேற்படிப்பு படிச்சது, தொழிலில் முன்னேறியது எல்லாமே உங்க ஆசைப்படிதானே நடந்தது. எனக்கு ஒரு ஆசை, அது என் எதிர்கலம் எனும்போது அதை நீங்க எதிர்க்கலாமா ப்பா..” என்று கரகரத்த குரலில் கேட்க.



கேட்ட அவன் தந்தைக்கோ, நியாயமான தன் மகனின் ஆசையை நிறைவேற்றக் கூட முடியவில்லை என்ற துக்கம் சூழ்ந்தது. ஏன்னென்றல் விஷயத்தை கேட்டதுமே, வீட்டில் ஆண்டாள் எல்லோரையும் மிரட்டி வைத்திருந்தார். அவன் அந்தப் பெண்ணுடன் வீட்டிற்கு வந்தால் தான் உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறிவிட்டார் அதனால் குடும்பத்தார் அனைவரும் அமைதிக் காத்தனர். மீண்டும் ஆண்டாளே பேசினார்.



“நீ இனி என் வீட்டில் காலடி எடுத்து வைக்ககூடாது. இனி உனக்கும் என் வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எனக்கு இந்த நிமிசத்துல இருந்து மூனே பொண்ணுங்க தான். இப்படி ஒரு மகன் எனக்குப் பிறக்கவே இல்லைன்னு நினைச்சுக்கிறேன். இன்னையோட உன்னை தலை முழுகிடுகிறோம் குடும்பமே சேர்ந்து” என்று ஆங்காரமாய் கூற மூன்று பெண்களும் தன் அண்ணனைக் கட்டிக் கொண்டு தாயிடம் கதற ஆரம்பித்தனர்.



“ அம்மா அப்படி எல்லாம் சொல்லாதீங்க, அண்ணாக்கு நாம தானே சொந்தம். அண்ணா இல்லாம எங்களால இருக்க முடியாது. அவரோட ஆசையை ஏத்துக்கோங்க. அண்ணாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்மா” என்று கூற, எதற்குமே அசைந்து கொடுக்கவில்லை ஆண்டாளம்மாள்.



விதுரன் ஒரு முடிவோடு அங்கிருந்தப் பெரியவர்களிடம் பேசினார். “என்னால வாணியை விட முடியாது. சத்தியமாகவும், சட்டப் பூர்வமாகவும் இவளை கல்யாணம் பண்ணிருக்கேன். நீங்க இதுக்கு என்ன தண்டனை கொடுக்க விரும்புறீங்களோ அதை தாராளமா கொடுங்க..” என்றான்.



அவரது உறுதியே வாணியை விட மாட்டார் என்பது புரிய, வேறு வழி இல்லாமல் அந்த ஊர்ப் பெரியவர் பேச ஆரம்பித்தார். “தம்பி உங்க வீட்டாளுங்க தான் எல்லாருக்கும் தீர்ப்பு சொல்லுவாங்க, இப்போ அந்த இடத்துல நாங்க இருக்கோம். ஆனா அவங்களை எதிர்த்து பேச முடியாதுங்க. என்ன இருந்தாலும் நீங்க அம்மா சொல்றத ஒரு தரம் யோசிச்சு பாருங்களேன்” என்றார் ஆண்டாளம்மாவிற்குப் பயந்து பயந்து.



விதுரன் எதற்கும் அசையாமல் தன் முடிவில் உறுதியாய் இருக்க, “தம்பி இரண்டு வீட்டிலும் ஒத்துக்காததுனால உங்களை ஊரை விட்டுத்தான் தள்ளி வைக்கணும் தம்பி. ஆனால் நீங்க இந்த ஊருக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கீங்க, அதனால நீங்க எப்ப வேணும்னாலும் வரலாம். போகலாம், ஆனால் இந்த ஊரில் தங்க முடியாது தம்பி. இந்த நிமிசமே இந்த ஊரைவிட்டு போகனும்..” என்று கூற மற்றப் பெரியவர்களும் அதற்கு சம்மதித்தனர்.



ஆண்டாளம்மா தான் இருக்கிற சாபங்களை எல்லாம் அவர்கள் மேல் அள்ளித் தெளித்தார், இத்தனைக் கலவரங்களிலும் வாணி வாயைத் திறந்து எதுவுமே பேசவில்லை என்பது வேறு அவரின் கோபத்தை அதிகரித்தது. ஆனால் அவர் அறியாதது, விதுரன் அவளை வாயைத் திறக்கவே கூடாது என்று அவளிடம் சத்தியம் வாங்கியது. தான் விட்ட அத்தனை சாபங்களும் தன் மகனுக்கு பழித்து விடும் என்றுத் தெரிந்திருந்தால், அன்று அப்படி செய்திருக்க மாட்டாரோ என்னவோ..! கண்மூடித்தனமானக் கோபம் ஒரு மனிதனை எத்தனை கொடூரனாக்கி விடுகிறது.



அந்த நிமிடமே தம்பதி சகிதமாக ஊரைவிட்டு வெளியேறினர். பெற்றவர்களுக்கு தங்கள் மேல் இருக்கும் கோபம் காலப்போக்கில் மாறிவிடும் என்று நினைத்தனர். விதுரனின் தன்கைகளுமே அதையே தான் கூறினார்கள். “அம்மா சீக்கிரம் மனசு மாறிடுவாங்க, உங்களை ஏத்துக்குவாங்க” என்று சமாதானப்படுத்தி அனுப்பினர். நண்பன் தனக்கு அனுப்பிய காரில் ஏறி அமர்ந்த இருவரும் அவரவர் சிந்தனையில் லயித்தனர். வாணிக்கு எதிர்காலத்தை குறித்த பயமோ, வாழ்க்கை எப்படி நடக்கும் என்றோ எந்த பயமும் எழவில்லை. ஒரு நல்ல மனிதனை அருமையான குடும்பத்தில் இருந்து பிரிந்துவிட்ட குற்றவுணர்வு தான் மேலோங்கியது.



விதுரன் மட்டும் அவ்வாறு ஒரு வாக்கு வாங்காமல் இருந்திருந்தால் வாணி அவனை விட்டுச் சென்றிருப்பாள். பிறந்ததில் இருந்து தாயைப் பார்த்தது இல்லை. தந்தையும், தமையனும் தேவைக்கு அதிகமாகப் பேசியதில்லை, பாட்டி இருந்த வரை அவளுக்கு அது குறையாக தெரியவில்லை, ஆனால் நாட்கள் நகர்ந்து பாட்டியும் இறந்து, ஒரே பெண்ணாக தன் வீட்டு வேலைகளையும் கவனித்து, படிப்பிலும் கவனம் செலுத்த, அப்போது தாயை அதிகம் தேடினாள்.



தன் அண்ணனுக்கும், அவளுக்கும் பத்து வயது வித்தியாசம் இருந்ததால், அவள் தந்தை மகனுக்கு சொந்தத்திலேயே தெரிந்த பெண்ணையே திருமணம் செய்து வைத்தார். மருமகள் தெரிந்தவர் என்பதால் பெரியதாக எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. தன் குடும்பத்தினர் செய்த ஒரே நல்ல காரியம் தன் படிப்பை நிறுத்தாததுதான் என்று பலமுறை தனக்குள்ளே சொல்லிக் கொள்வாள்.



தன் தந்தையும் சில வருடங்களில் தவறிவிட, அவர் இறக்கும்போது அவளின் படிப்பை எந்தக் காரணத்திற்காகவும் தடை சொல்ல வேண்டாம் என்ற வாக்குறுதியுடன் தன் மகளின் வாழ்வைக் குறித்த எண்ணங்களுடனும், மகன் அவளை எப்படியும் கரையேற்றிவிடுவான் என்ற நம்பிக்கையுடனும் தன் இறுதி பயணத்தைத் தொடர்ந்தார்.





வாணித் தன் கல்லுரி படிப்பை முடித்ததும் தன் அண்ணன் ஆழ்வார்சாமி ஐயாவிடம் சென்று அவளின் படிப்பை பற்றிக் கூறி அந்தப் பள்ளியில் வேலை வாங்கிக் கொடுத்தான். வாணி வேலையில் சேர்ந்தாலும், தன் மேற்படிப்பை தபாலின் மூலம் தொடர்ந்தாள். வேலைக்குச் சென்று வருவதாலும், குடும்பப் பிரச்சனைகளை அவளின் பணத்தால் ஓரளவு சமாளிப்பதாலும் வாணியின் அண்ணி அவளை அதிகம் வெறுத்தது இல்லை. வெறுக்கவில்லை என்றாலும் ஒட்டவும் இல்லை. காலம் தன் வேலையை செய்தது, விதுரனைச் சந்தித்தது, காதல் கொண்டது. இப்போது திருமணம் என்று தன் கடந்த கால வாழ்க்கையில் மொத்தமும் பயணித்து முடித்தாள் வாணி.



கார் சென்னையை நோக்கிப் பறந்தது. இடையில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி சாப்பிட்டனர். வாணிக்கு எதுவும் இறங்கவில்லை. ஆனால் விதுரன் வருத்தப்படுவானே என்ற எண்ணமே அவளை உண்ண வைத்தது. காரில் ஏறியதில் இருந்து விதுரன் தேவைக்கு அதிகமாக பேசவே இல்லை. இந்த அமைதி வாணியை பயமுறுத்தியது. அவள் அறிந்த விதுரன் அவ்வாறு இருக்க மாட்டான். பயம் நெஞ்சைக் கவ்வியது. குடும்பத்தைப் பிரிந்ததினால் மிகவும் வருந்துகிறானோ, தன்னை திருமணம் செய்ததினால் தான் இப்படியெல்லாம் நடந்ததோ என்றெல்லாம் எண்ணி வேதனைப் பட்டவள், அவனிடம் ஒட்டி அமரவே அஞ்சி கதவோடு கதவாக ஒன்றி சாய்ந்து கொண்டாள்.



இதை எதையும் அறியாத விதுரன் தன்னுடைய அம்மா வாணியை பேசிய பேச்சுக்களையே மனதில் ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் மட்டும் முன்னெச்செரிக்கையாக அந்த சத்தியம் வாங்காமல் இருந்திருந்தால் இந்த தியாகச் செம்மல் நம்மளை விட்டுப் போயிருப்பாள் என்று அவளை அறிந்தவனாக என்ணினான். பின்னர் சென்னை சென்றதும் அடுத்து தான் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி முடிவு செய்தான், அதற்குப்பிறகே அவன் மனம் அமைதியடைந்தது.



இருக்கும் சூழ்நிலை அறிந்து அவன் வாணியைப் பார்க்க, அவள் பயத்தில் பல்லி போல் கதவில் ஒட்டிக் கொண்டு தூங்குவது தெரிந்தது. பின் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, அவளை தூக்கம் கலையாமல் இழுத்து தன்மேல் சாய்த்துக் கொண்டுக் காரைப் கிளப்பினான். இடையில் இரண்டு இடத்தில் நிறுத்தி அவன் டீ குடித்துவிட்டு காரை ஓட்டியது எதுவுமே தெரியாமல் தூக்கிக் கொண்டிருந்தாள் வாணி.





கார் சென்னையைத் தொட்டதும் அவள் கண்ணத்தில் தட்டி எழுப்பினான். கண்களை மட்டும் திறந்து அவனைப் பார்க்க, அவனோ சிரித்துக்கொண்டே, “மதி இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு போய் விடலாம், எழுந்து முகத்தை கழுவு” என காரை ஒரு டீக்கடையின் முன்னால் நிறுத்தியிருந்தான். வாணியோ மலங்க மலங்க விழித்தாள். இதுநாள் வரை யாருமே தன்னை மதி என்று அழைத்ததே இல்லை. அவன் மதி என்ற வார்த்தையில் அவள் மனம் சிக்குண்டது. அடுத்து என்ன சொன்னான் என்பதும் தெரியவில்லை.



அவள் விளிப்பதைப் பார்த்து அவன் வாய்விட்டுச் சிரிக்க வாணி நினைவுலகுக்கு மீண்டாள். அப்போது தான் அவன் மேல் சாய்ந்து இருப்பது தெரிய அவசரமாக அவனிடமிருந்து விலகினாள். அவனும் தடுக்கவில்லை. ஆனால் முன்னர் கூறியதை மறுபடியும் கூறிவிட்டு, காரை விட்டிறங்கி நேராக டீக்கடைக்கு சென்றான். காரில் இருந்த தண்ணீர் பாட்டிலில் முகத்தை கழுவி முந்தனையால் முகத்தைத் துடைத்து விட்டு காரில் ஏறி அமர்ந்தாள். சில்லென்ற பனிக் காற்று உடலை ஊடுருவி செல்ல, இது எதையும் அனுபவிக்கத் தோன்றாமல் அவனுக்காகக் காத்திருந்தாள்.



அதிகம் அவளைக் காக்க வைக்காமல் பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் டீயையும் வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான் விதுரன். அவளிடம் டீ கப் ஒன்றைக் கொடுத்துவிட்டு தனக்கானதை எடுத்துக்கொண்டு மறுபக்கம் ஏறி அமர்ந்தான். பிஸ்கெட் பாக்கெட்டுகளை அவளிடம் கொடுக்க, ‘வேண்டாம்’ என்று அவள் தலையசைத்து மறுத்தாள்.



“ஏன்” என்பது போல் அவன் பார்க்க, “இல்ல பிரஷ் பண்ணாம சாப்பிட மாட்டேன்” என்று திக்க அவன் சிரித்தான். பிறகு,“பரவாயில்ல, சாப்பிடு ஒரு நாள் தானே, அப்புறம் நைட்டும் சரியா சாப்பிடல, உனக்கு தூக்கத்தோட சேர்ந்து பசி மயக்கமும் வந்துருக்கும் போல, அதான் இப்படி தூங்கிருக்க, இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்குப் போயிடுவோம். அப்பப் போயி ப்ரஷ் பண்ணிக்கோ, இப்போ சாப்பிடு” என்றான்.





“ம்ம் சரி” என்று டீயில் முக்கி பிஸ்கட்களை சாப்பிட்டு டீயையும் முடித்துவிட்டு நிமிர, அவன் அவளையே பார்ப்பது தெரிந்தது. அவள் அவனைப் பார்த்துவிட்டு குனிய, விதுரன் பேச ஆரம்பித்தான்.



“மதி என்றழைக்க அவள் நிமிரிந்து மறுபடியும் தலைகுனிய, இப்போது விதுரன் வாணியின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான். மீண்டும் அழுத்தமாக “மதி” என்றழைத்தான்.



“மதி நீ என் கண்ணைப் பார்த்து நான் சொல்லப் போவதைக் கேட்க வேண்டும் என அவள் சரியென்று தலையசைத்து அவனைப் பார்த்தாள். நம் எதிர்காலத்தைப் பற்றின பயம் இப்போது உனக்கு இருக்கும்.” அவன் சிறு புன்னகையுடன் மீண்டும் பேச ஆரம்பித்தான். “அதை நான் போக்க வேண்டும். அது என் கடமை திடீரென்று நடந்து விட்டது திருமணம், அதனால் நம் அன்பில் எதுவும் மாறப்போவதில்லை அது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் போகும்.”





“இனி நாம் செய்யபோவது, அவர்களிடம் இருந்து கொஞ்ச நாட்கள் விலகி இருப்பது தான் நல்லது, அதனால் என் நண்பன் டெல்லியில் இருக்கிறான். அவன் லண்டன் செல்வதால் அவன் தொழிலைப் பார்த்துக் கொள்ள நம்பிக்கையான ஆட்கள் இருந்தால் சொல்ல சொன்னான். நேற்று நம் விஷயத்தை சொல்லி, தானே அதைப் பார்த்துக் கொள்வதாகக் கூறினேன். அவனுக்கு மிகவும் சந்தோசம் உடனை வரச் சொல்லி விட்டான். ஒரு வாரத்தில் டெல்லி வருவதாக நானும் ஒப்புதல் தந்துவிட்டேன்.”





“நாம் சென்னை சென்று இரண்டு மூன்று நாட்கள் இருக்க வேண்டியிருக்கும், ஊரில் இருந்து மாமாவை வரச் சொல்லி இருக்கிறேன். பிசினஸ் பத்தி எல்லாத்தையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு நாம் கிளம்புவோம். பின்னாடி பிரச்சனை வந்து விடக் கூடாதில்லையா, அப்புறம் அங்கு வந்து உனக்கு ஊர் பழகிய பின்பு வேலைக்குப் போவதைப் பற்றி யோசிக்கலாம். படித்த படிப்பு வீண் போக வேண்டாம். அங்கு அவனோட வீட்டுக்கருகிலே ஒரு வீடு காலியாகி இருக்கிறதாம், தன் அத்தை வீடுதான், சாமான் எதுவும் வாங்க வேண்டியதில்லை அப்படியே உபயோகித்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி விட்டான். அங்கு நமக்கு ஒருப் பிரச்சனையும் இருக்காது.”





“சென்னையில் இருப்பது வரை எனக்கு கொஞ்சம் டென்சன் இருக்கும். நீ பயப்படக்கூடாது. என் நண்பனின் மனைவி நல்ல மாதிரி, அவர்களும் காதல் திருமணம் தான். நீ பயப்படவோ, கூச்சப்படவோ எதுவும் கிடையாது. இயல்பாக இரு, அதில் என்னிடம் என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். அதற்கு உனக்கு முழு உரிமை இருக்கிறது. எனக்கும் சில கடமைகள் இருக்கிறது. வீட்டில் நான் தான் ஆண் பிள்ளை. அவர்கள் என்னை ஒதுக்கினாலும் என்னால் அவர்களை ஒதுக்க முடியாது. அதுவும் என் சகோதரிகள் முவருமே என்மேல் அதிகப்பாசம், என் தங்கைகளுக்கு நான் தான் ஹீரோ. அக்காவிற்கு என் சிறு அசைவு கூட அத்துப்படி, அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்பது வரை தெரிந்துவிடும் அவர்களுக்கு, அதனால் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை யார் தடுத்தாலும் நான் செய்து தான் ஆக வேண்டும்.”





“அதனால் நீ இதையெல்லாம் என்னிடம் ஏன் எதற்கு என்று கேட்காதே எனக்காக அப்புறம் நான் டெல்லி செல்வதற்கு முக்கிய காரணம் இன்னும் ஒன்று இருக்கு. அது சுமி அக்காவின் மகன் சித்தார்த் அவனை நான் தான் டெல்லியில் போர்டிங் ஸ்கூலில் சேர்த்தேன். அவனுக்கு நான் தான் ரோல் மாடல். அவனை நல்ல முறையில் கைடு பண்ண வேண்டும். ஊரில் இருக்கும் போது அவனைப் பார்க்க மாதமொரு முறை தான் வருவேன்.”





“அவனுடைய அப்பா, அம்மாவைக் கூட தேடமாட்டான் என்னை அதிகம் தேடுவான். இந்த வயதில் விட்டுவிட்டால் அப்புறம் படிப்பில் கவனம் சிதறி விடும். அதனால் அவனுக்கு விவரம் புரியும் வரை நாம் இங்கே இருக்கலாம், அப்புறம் வேண்டுமானால் சென்னை வந்துவிடலாம் என்று கூறி முடித்தான். அவள் விழிகள் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவளுக்கு இஷ்டம் இல்லையோ என்ற எண்ணம் வந்து உடனே மறைந்தது. உதட்டில் புன் முறுவல் தோன்றி அவளைப் பார்த்து கண்சிமிட்ட வைத்தது.





அவள் சட்டென்று குனிய, ஆனாலும் கன்னங்கள் சூடாகி சிவந்ததை மறைக்க முடியவில்லை அவளால். அவன் ரசனையாக கன்னத்தை வருடி, இரண்டு கைகளாலும் அவள் முகத்தை ஏந்தி கண்களினால் “என்ன” என்று வினவினான்.





வாணியோ அவன் கைகளை விலக்கி அவள் மார்பில் முகத்தை சாய்த்துக் கொண்டாள். பாலன் அவளை இறுக அனைத்துக் கொண்டான். முதுகு குலுங்குவதைப் பார்த்து தான் அவள் அழுகிறாள் என்பது தெரிந்தது. அழட்டும் சிறிது நேரம் என்று அவளை அழவிட்டான்.





சில நிமிடங்களிலே தன்னை சுதாரித்தவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள் பாலனுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனாலும் அவள் சிரித்து அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பாலன் வாணியையே பார்க்க, அவள் ஒரு முடிவுடன் பேச ஆரம்பித்தாள், அவன் மேலே சாய்ந்துக் கொண்டு,





“அம்மாவைப் பார்த்ததே இல்லை, அப்பா, அண்ணன் இருந்தும் அவர்களிடம் அதிகம் பேசியதில்லை. பாட்டி இருந்த வரை எனக்கு அது பெரியதாகத் தெரியவில்லை. அப்புறம் ரொம்ப பயம் இருந்தது, நமக்கென்று யாருமே இல்லையேனு அப்பா பாசமா பேசினதே இல்லை. அண்ணாவுக்கும் எனக்கும் அதிக வயது வித்தியாசம், அதனால அவரும் என்னோட சரியா பேசமாட்டாரு, அண்ணி வந்தாங்க, பேசுவாங்க, பாத்துக்குவாங்க, ஆனால் அது கடமையா இருக்கும், அதுல பாசமே இருக்காது, திடீரென்று அப்பா இறந்துட்டாரு, எனக்கு பெருசா வருத்தம் இல்லை. “





“ஆனால் பயம் அதிகமாயிருச்சு. அண்ணனோட பசங்க பிறந்ததுக்கு அப்புறம் தான் நான் வீட்டில் சிரித்ததே. அப்புறம் உங்களைப் பார்த்து பேசி இந்த கொஞ்ச நாட்கள் தான் சந்தோசமா இருந்துருக்கேன். நேத்து நடந்த பிரச்சனையில. அதுவும் நிலைக்காதோனு தோணிச்சு, அந்தப் பயம் இன்னும் அத்கமாயிருச்சு இப்போதுதான் மனசு ரொம்ப லேசாகி பஞ்சு போல இருக்கு நீங்க என் மேல் வைச்ச அன்புமேல எப்பவுமே துளி கூட சந்தேகம் வராது, இது என் உயிருக்கும் மேலா நினைக்கிற உங்க மேல சத்தியம்..” என்றதும் அவளை இறுக்கி அனைத்துக் கொண்டான்.





அவள் மேலும் பேசினாள், “நீங்க நம்ம வீட்டாளுங்க மேல வைச்சுருக்குற பாசமும் நம்பிக்கையும் தான் உங்க மேல என்னோட அன்பை கூட்டுது. இந்த விசயத்தில் உங்களுக்கு எந்த விதத்திலும் நான் தடங்கல் தர மாட்டேன். நீங்கள் என்ன செய்தாலும், அதை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கேன் அதனால் வருத்தப்படாதீங்க, இப்பப் போலாமா, நல்லா வெயிலே வந்துடிச்சு, அந்த கடைக்காரர் நம்மளையே பார்க்கிறார்..” என்று அவனை உலுக்க





விதுரன் அவளை இன்னும் இறுக்கி அழுத்தமாகத் தன் முதல் முத்திரையை மனைவியின் செம்பவளக் கன்னத்தில் பதித்தார், வாணி திடுக்கிட்டு விலகி சுற்று முற்றிலும், பார்த்து அவனை முறைக்க, அவர் சிரித்துக் கொண்டே “தேங்க்ஸ் கண்ணமா” என்று கண்ணைச் சிமிட்டி காரைக் கிளப்பினார்.




 

Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
261
அந்தஸ்து பேதம் ஆண்டாள் அம்மாவை அராஜகம் பண்ண வச்சுருக்கு😠.
 
Top