• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அந்தமான் - 8

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
அந்தமானின் காதலி – 8



வெற்றிடத்திற்கு அப்பால்

என்ன இருக்கிறது?



பார்க்கும் விழியில்

நிறையாத உன் பிம்பம்



வெற்றிடமாய் இருக்கிறது.!




“சித்து கண்ணா என்னடா பண்ற நீ… என் பொண்ணு தனியா இருந்து கஷ்டப்படுறா. உன்னை நம்பித் தானே அவளை விட்டுட்டு வந்தேன். நீயும் இப்படி தொலைச்சிட்டு நிக்குறியே, நான் யாரையும் நம்பலயே கண்ணா. ஆனா, உன்னை முழுசா நம்பினேனே, என் நம்பிக்கையை பொய்யாக்கிட்டியே, ஏண்டா…” என விதுரன் கதறுவதைக் கேட்டு அடித்துப் பிடித்து எழுந்திருந்தான் சித்தார்த்.



முகமெல்லாம் வியர்த்து மூச்செல்லாம் எகிறிக் கொண்டு, அவன் இதயம் துடிப்பது அவனுக்கே கேட்பது போலொரு சத்தம். பரபரவென தன் முகத்தை அழுந்த துடைத்தவன், அந்தக் கைகளிலேயே தன் முகத்தையும் பதித்துக் கொண்டான்…



“மாமாவோட ஆத்மா கூட என்னை மன்னிக்காது. உண்மை தான். அவர் என்னை நம்பித்தான் எல்லாத்தையும் விட்டுட்டு போனார். அந்த நம்பிக்கையை நான் கொன்னுட்டேன். நான் கொன்னுட்டேன்…” என முணுமுணுத்தவன்,



“எனக்கு தெரியலை மாமா. இனி நான் என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியலை. அவளைத் தேடி தேடி நான் நாய் மாதிரி அலையுறேன். ஓஞ்சும் போயிட்டேன். தெரியாம போனவங்களைக் கூட கண்டுப் பிடிச்சிடலாம் ஆனா, இவங்களுக்கு மட்டும் தெரியக் கூடாதுன்னு நினைச்சு ஒழிஞ்சுசிக்கிறவங்களை எப்படி கண்டுப்பிடிக்கிறது. நான் ரொம்ப டயர்டாகிட்டேன் மாமா. இந்த மூணு வருசமா நான் போகாத நாடும் இல்ல, தேடாத இடமும் இல்ல. ஆனா உங்க பொண்ணைக் கண்டுப்பிடிக்கவே முடியலை…” எனக் காற்றோடு பேசியவன், ஆனா அப்படியே விட்டுட மாட்டேன். கண்டுப்பிடிக்காம விடமாட்டேன். நிச்சயமா ஒரு நாள் கண்டுப்பிடிப்பேன். அப்படிக் கண்டுப்பிடிச்சா அடுத்த நிமிசம் அவ என்னோட மனைவி. இந்த சித்தார்த்தோட மனைவி. என்னோட பொம்மியா அவ இருப்பா… இருக்க வைப்பேன்..



அப்போ மட்டும் உங்க பொண்ணு எதாவது ஆட்டம் காட்டட்டும், அப்போ தான் இந்த சித்தார்த்தோட இன்னொரு முகத்தைப் பார்ப்பா ப்ளடி இடியட். ஓடுறாளாம், ஒழியிறாளாம். வரேன்டி வந்து உன்னைக் கவனிக்கிறேன்.” எனக் கருவியவன் மணியைப் பார்க்க, அது காலை ஐந்தெனக் காட்ட, இனி எங்கேத் தூங்க என நினைத்தவன், ட்ராக் சூட் மாறி ஜாகிங்கிற்கு ரெடியாகி இருந்தான்…



அப்போது அவனது மொபைலில் மெயில் வந்ததற்கான அறிகுறி காட்ட, எடுத்துப் பார்த்தவனின் முகம் யோசனையில் சுருங்கியது. மெயிலைப் படித்து உடனே தன் இன்வெஸ்டிகேட் ஏஜென்ட்கிற்கு பார்வேர்ட் செய்துவிட்டு, தன் ஜாகிங்கை மறந்து லேப்டாப்பை தூக்கிக் கொண்டு அமர்ந்துவிட்டான். மெயிலில் குறிப்பிட்ட சில செய்திகளை வைத்து நெட்டில் தேட ஆரம்பித்தான்…



அவன் தேடிய அனைத்தும் “அல்வா” போல வந்து விழ, சற்று முன் சுருங்கிய முகம் தவுசண்ட் வாட்ஸ் பல்பு போல பிரகாசித்து மனம் ஹூர்ரே எனச் சத்தமிட, அதிர்ச்சி அழுகை, ஆனந்தம், பயம், என அனைத்து உணர்வுகளும் ஒட்டு மொத்தமாக உருவாகி அவனைப் பேச்சிழக்க செய்தது.



‘இதற்க்குத்தானா.! மாமா நீங்க எனக்கு எப்பவும் உறுதுணையா இருப்பீங்கன்னு தெரியும். இந்த விசயத்துலயும் இருந்து இருக்கீங்க. இதைக் காட்டத்தான், நான் உணரனும்னு தான் என் கனவுல வந்தீங்களா. தேங்கஸ் மாமா… தேங்க்யூ சோ மச் மாமா… நான் கண்டுப்பிடிச்சிட்டேன்… என் பொம்மியை கண்டுப்பிடிச்சிட்டேன். இனி அவளைத் தொலைக்க மாட்டேன்… என் கூடவே வச்சுப்பேன்’ என்று உணர்ச்சி ததும்பிட மீண்டும் காற்றோடு பேசினான். அந்தக் காற்றில் தன் மாமனின் மூச்சும் கலந்திருக்கும், அவரது உயிர்க்காற்று அவனைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கும் என்று அவனுக்குத் தெரியும் அதனால் தான் காற்றோடு பேசிக் கொண்டிருந்தான்.



மொபலை எடுத்து தாய்க்கு அழைத்தவன் அவர் எடுத்து “ஹலோ” என கொட்டாவி விட்டப்படியே கேட்கவும் தான் மீண்டும் மணியைப் பார்த்தான். அது ஆறாக இன்னும் பத்து நிமிடங்கள் இருப்பதைக் காட்ட, தன் தலையிலேயேக் கொட்டியவன், “சாரிமா, நான்தான். உங்க தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னா…” என்றான்…



“சித்து.. நீயாடா கண்ணா, டிஸ்டர்ப் எல்லாம் இல்லடா, ஆறு மணிக்கு எழறது தானே, என்ன பத்து நிமிசம் முன்னாடி எழுந்திருச்சிருக்கேன் அவ்வளவு தான்…” நீ சொல்லு என்ன இந்த நேரத்துல எமர்ஜென்சியா வெளிய கிளம்புறியா, இல்ல உடம்புக்கு எதுவுமா?” எனப் படபடவெனக் கேட்க,



“ம்மா… மூச்சு விட்டுப் பேசுங்க. எனக்கு உடம்புக்கு ஒன்னும் இல்ல. முக்கியமான வேலைதான். ஆனா ஆபிஸ் சம்பந்தமா இல்ல. உங்க மருமகளோட விசயமா எனக்கு ஒரு மெயில் வந்தது. அது புனேல இருந்து மாமா ப்ரண்ட் பண்ணிருந்தார். என்னை மீட் செய்யனுமாம், உடனே வரச் சொல்றார் நான் கிளம்பிட்டேன். எட்டு மணிக்கு பிளைட் அங்கே போய் பார்த்துட்டு, சிச்சுவேசன் எப்படி என்னன்னு உங்களுக்கு கூப்பிடுறேன். வீட்டுல யாருக்கும் இப்போ சொல்ல வேண்டாம். பாசிடிவா எல்லாம் நடந்தா சொல்லிக்கலாம்…” என்றான் சித்தார்த் உற்சாகக் குரலில்.



மகனின் உற்சாகம் அவரையும் தொட்டுக் கொள்ள “கண்ணா இந்த தடவை நிதிக்குட்டி நம்மக்கிட்ட வந்துடுவாடா… எனக்கு நம்பிக்கை இருக்கு, நீ போற காரியம் கண்டிப்பா நல்லபடியா முடியும். நீ மனசைத் தளரவிடாம போயிட்டுவா கண்ணா. ஆல் தி பெஸ்ட். நீ வேணும்னா பாரு, வரும் போது என் மருமக கூடத்தான் வருவ…” என்ற தாயின் குரலில் தைரியம் வர பெற்றவன்,



“எஸ் மா… எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு, தேங்க்யூ சோ மச் மா. பைமா…” என்று வைத்து விட்டான். அடுத்த ஒரு நொடியைக் கூட சித்தார்த் வீணாக்கவில்லை. தன் கப்போர்டைத் திறந்து, அதிலிருந்து ஒரு சிவப்பு நிற வெல்வெட் பாக்சை எடுத்து தன் பேகில் வைத்துக் கொண்டு, உடனுக்குடனே கிளம்பியவன், அன்று மதியம் போல புனேயில் இருந்த தன்வீரின் வீட்டில் அவர் முன் அமர்ந்திருந்தான்.



உபசரிப்புகள் எல்லாம் முடிந்த சில நொடிகளுக்குப் பிறகு, “சாரி சித்தார்த் நீ என்னைத் தப்பா நினைச்சிடக் கூடாது. எனக்கு என் பையனை விட நிதி தான் முக்கியம். அவளுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். எனக்கு பொண்ணு இல்லைன்னு நான் பீல் பண்ணதே இல்ல. எனக்கும் பொண்ணு நிதிதான். அவ ஒன்று கேட்டு என்னால இல்லைன்னு சொல்ல முடியாது. அப்படி அவ கேட்டுத்தான், அவளைப் பத்தி நான் எதுவுமே உங்கக்கிட்ட சொல்லல. நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது…” என தன்வீர் மூச்சிரைச்சலோடு மெதுவாகப் பேச, அவருக்கு அருகில் சித்தார்த்தை முறைத்துக் கொண்டே நின்றிருந்தான் தன்வீரின் மகன் விஷால்… அவன் முறைப்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை சித்தார்த். அவனுக்குத் தெரிய வேண்டியவை ஏகப்பட்டது இருக்க, இவன் முறைப்பதற்கெல்லாம் ரியாக்ட் செய்து கொண்டிருக்க முடியாது என்று விட்டு விட்டான்…



ஆனால் தன்வீர் அப்படி விடவில்லை, “விஷாலுக்கும் நித்திக்கும் ரெண்டு வயசு தான் வித்தியாசம், அவன் இல்லாம அவ எங்கேயும் போனதே இல்ல. வால் பிடிச்சிட்டே சுத்திட்டு இருப்பா. காலேஜ் கூட அவன் படிச்ச காலேஜ்ல தான் சேர்த்து விட்டோம். வேலையும் அப்படித்தான். ஆனால் இப்போ இவன் எவ்வளவு கெஞ்சியும் அவ இங்கே வரலயா அந்தக் கோபம். அது உங்களால, உங்க வீட்டாளுங்கனாலன்னு அவன் நினைச்சிட்டு இருக்கான்.” என எடுத்துச் சொல்ல,



“நினைக்க எல்லாம் இல்ல டாடி, உண்மை. என் கண்ணால பார்த்தேன் தான இவங்க வீட்டுல நடந்ததை. அந்த வீட்டுல இருந்து என் ஸ்வீட்டியை விரட்டினதை. எந்த நிலமையில அவ போனா. அதைக் கூடப் புரிஞ்சுக்காம என்ன ஜென்மங்க…” எனக் கோபமாகப் பேசியவனை, அவனின் தாய் சுனிதா வந்து அழைத்துப் போக, “விடுங்க மம்மி, விடுங்க எல்லாம் உங்களால தான், இவனை எதுக்கு வரச் சொன்னீங்க. இவன் கூட போனா ஸ்வீட்டி நிம்மதியா இருக்க மாட்டா, அவங்க வீட்டுல யாரும் அவளை நல்லா பார்த்துக்க மாட்டாங்க. வெளியே போகச் சொல்லுங்க…” என்றவனின் குரல் தேய்ந்து ஒலிக்க, சித்தார்தின் உடல் இறுகி விரைத்தது.



கோபத்தில் துடித்தக் கைகளை அடக்கி, அமைதியாக அமர்ந்திருப்பதே வேதனையாக இருந்தது. ஆனால் இப்போது அவனால் கோபப்படக்கூட முடியாதே. அவர்கள் சொல்வது பொய்யில்லையே யாரோ ஒருவனுக்குத் துடிப்பது போலக் கூட சொந்தங்களுக்குத் துடிக்கவில்லையே. யாரையும் குற்றம் சொல்லவில்லை அவன். யாரிலும் குற்றம் காணவும் விரும்பவில்லை. இப்போது அதை யோசிக்கவும் விரும்பவில்லை. தன் உணர்வுகள் எதையும் வெளிக்காட்டமல் அமைதியாக அமர்ந்திருந்தான் ஆனால் இறுகிய முகத்தோடு….



“சாரி சித்தார்த் அவன் அப்படித்தான், நீங்க மனசுல ஒன்னும் வச்சுக்காதீங்க, ஆனால் அதுதான் உண்மை இல்லையா.? நான் இத்தனை நாள் உங்கக்கிட்ட சொல்லாம இருந்ததுக்கு இதுவும் ஒரு காரணம்..” என்ற தன்வீர், சித்தார்த்தின் முகம் கசங்குவதைக் கண்டு, “போனது போகட்டும், இனி இப்படி ஆகாம பார்த்துக்கலாம்.” என்று அவனைப் பார்க்க,



“ஸுயர் அங்கிள். நான் உங்களுக்கு ப்ராமிஸ் பன்றேன். இனி எப்பவும் இப்படி நடக்க விடமாட்டேன். எந்த கஸ்டமும் அவளை நெருங்காம பார்த்துக்குறேன். என்னை நம்புங்கன்னு சொல்ல மாட்டேன். அந்த நம்பிக்கை என் நடவடிக்கையில உங்களுக்கு வரும்..” என்று உறுதியாக, தெளிவாக சொன்னவனைப் பார்த்து அர்த்தமாகச் சிரித்தார் தன்வீர்.



“சித்.. உங்களுக்கு எல்லாம் தெரியும், இருந்தும் சொல்றேன். நிதிக்கும் உங்களுக்கும் மேரேஜ் நடந்தாதான் அந்த ப்ராப்பர்டிசை நீங்க லீகலா லீட் பண்ண முடியும். அதுக்கு விதுரன் கொடுத்த டைம் த்ரீ யேர்ஸ். அதுக்குள்ள நீங்க மேரேஜ் பண்ணிடுவீங்கன்னு நினைச்சிருப்பான் போல, ஆனா இப்போ நடந்த பிரச்சினைகளை அவன் யோசிச்சிருக்கல, ஒருவேளை தன்னோட பொண்ணுன்னா உங்க பாட்டி ஏத்துப்பாங்கன்னு நினைச்சிருப்பானோ என்னவோ..” என்றதும் சித்தார்த்தின் உடல் மேலும் இறுகியது.



“உங்களைக் கஷ்டப்படுத்த இதை சொல்லல..”



“எஸ்.. ஐ நோ அங்கிள். உண்மையும் அதுதான.. எனக்கு வருத்தமில்ல அங்கிள் லீவிட்.. அடுத்து சொல்லுங்க”



“விது என்கிட்ட ஒரு ஃபைல் கொடுத்துருக்கான். அதுல அவன் சொன்ன டைமுக்குள்ள உங்க மேரேஜ் நடக்கலன்னா, என்னை உங்க கல்யாணத்தை நடத்த சொல்லிருக்கான். அதுல உனக்கு விருப்பம் இருந்தால் மட்டும்தான். நிதியைப் பத்தி பிரச்சினை இல்லை. அவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லைன்னாலும் பிரச்சினை இல்லை. நாங்க சொல்றதைக் கேட்பா. உன்னோட விருப்பம் தான் எனக்கு வேனும். சொல்லு உனக்கு ஓகேன்னா நாம அடுத்து என்னன்னு ப்ரசீட் பண்ணலாம்..” என்று ஒருமைக்கு வந்திருந்தார் தன்வீர்.



“அங்கிள் இந்த கேள்வியே தப்பு. என்னால அவளைவிட்டு இருக்க முடியாது. அது உங்க எல்லாருக்கும் தெரியும். நீங்க சொன்னது தான் அவளுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லைன்னாலும் என் கூட மேரேஜ் நடக்கும், நடந்தே ஆகனும். உங்களுக்கு ஒரே ஒரு கவலைதான். அது எங்க வீட்டு ஆளுங்களாய்ப்பத்தி, இனி அந்தக் கவலையும் உங்களுக்கு வேனாம். ஒரு தடவை எனக்குத் தெரியாம ஒரு தப்பு நடந்துருச்சு. மறுபடியும் அதே தப்பு நடக்காது. நடக்க விடமாட்டேன். இதெல்லாம் இல்லாம உங்களுக்கு நம்பிக்கை வரமாதிரி, நான் என்ன செய்யனும் சொல்லுங்க..” என நிதானமாகக் கேட்டான் சித்தார்த்.



தன் மகளை எப்படியும் விடமாட்டான் என்ற விதுரனின் நம்பிக்கை, இப்போது தன்வீருக்கும் தோன்ற, அவனது பேச்சில் சிறுபுன்னகைக் கூட அரும்பியது அந்த பெரியவருக்கு.



“ஓகே சித்.. இன்னைக்கு நைட் நிதி இங்க வர்ரா.. அஃப்டர் லாங்க் டைம். மூனு வருஷம் ஆகிடுச்சு அவ இங்க இருந்து போய். அதுக்குப்பிறகு இங்க வரவே இல்ல. நாங்க தான் போய் பார்த்துட்டு வருவோம். விஷால் எவ்வளவோ கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி கூட அவ வரல. அதுதான் அவனோட கோபம். நீங்க அவனைத் தப்பா எடுத்துக்கக்கூடாது.”

“நோ அங்கிள்.. ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட், தப்பு எல்லாம் எங்க பேர்லதானே இருக்கு. விடுங்க அங்கிள்.”



“இவ்ளோ நாள் முரண்டு பிடிச்சவளை என் ஹெல்த்தக் காட்டி இப்போ வர வச்சுருக்கேன். நீங்க என்ன வேனும்னாலும் செஞ்சுக்கோங்க, நான் கேட்க மாட்டேன். ஆனா இங்க இருந்து போகும்போது ரெண்டு பேரும் ஜோடியா தான் போகனும், அது தான் எனக்கும் வேணும் என் விதுரனுக்கும் வேணும்.” என்று முடித்துவிட்டார்.



“தேங்க் யூ அங்கிள். நீங்க எவ்வளவு பெரிய உதவு செய்துருக்கீங்க தெரியுமா..? என் வாழ்க்கையை, என் உயிரைத் திருப்பி தந்துருக்கீங்க. மறுபடியும் தவறவிடமாட்டேன். ஐ கேன் மானேஜ் அவர் ப்ராப்ளம்ஸ்.. ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் அங்கிள்..” என்றவனின் குரலில் தெரிந்த உறுதியில் முடித்து விடுவான் என்ற நம்பிக்கை வர, தன்வீரின் முகத்தில் கூட புன்னகை மலர்ந்தது.



“ஓக்கே அங்கிள் நான் இப்போ கிளம்புறேன், அவ வந்ததும் சொல்லுங்க வர்ரேன். நான் இருக்குறதை பார்த்தா இன்னும் இன்னும் கோபம் தான் வரும் அவளுக்கு. அதோட எனக்கும் முக்கியமான வேலை இருக்கு. நீங்க அவக்கிட்ட என்ன பேசனுமோ, எல்லாம் பேசி முடிங்க. நான் வந்ததும் அதுக்கு உங்களுக்கு நேரம் இருக்குமோ இருக்காதோ.? என்று புன்னகைக்க, அது அப்போது தான் உள்ளே வந்த விசாலுக்கு கடுப்பைக் கொடுக்க, சித்தார்த்தைப் பார்த்து முறைத்துக் கொண்டே மீண்டும் வெளியேறிவிட்டான்.



அந்த செய்கை சித்தார்த்திற்கு சிரிப்பைக் கொடுக்க, ‘மச்சானுக்கு மூக்குக்கு மேல கோபம் வரும்போல, இனி இவனையும் சமாளிக்கனுமா.? சமாளிக்கத்தான் வேணும். என் பொம்மியை சமாளிச்சாலே போதும், மத்தவங்களை அவ சமாளிச்சிடுவா.” என நினைத்தபடியே வெளியேறி இருந்தான்.



சட்டென ஒரு மந்திரக்கோல் கையில் கிடைத்து அதைச் சுழற்றியதும், தன் வாழ்க்கை அழகாகிவிட்டது போலொரு பிம்பம் சித்தார்த்திற்கு. அதுவரைப் பட்டக் கஷ்டங்கள் எங்கோ காணாமல் போயிருந்தது. மூன்றாண்டுகளுக்கு முன் காணாமல் போன அவனது அந்த வசீகர புன்னகை அழகாய் பூத்திருந்தது அவனது முகத்தில்.



இவர்கள் எல்லாம் இப்படியான திட்டத்தில் இருக்க, இவர்களின் எண்ணத்தின் நாயகி ஒரு புது திட்டத்தோடு அன்றிரவு வந்து சேர்ந்தாள் தன்வீரின் வீட்டுக்கு.
 
Top