• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அம்மு இளையாள் - முதியோர் காதல்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
முதியோர் காதல்

பகலும் ,இரவும் வந்து சென்றாலும் துக்கங்களையும், ஏக்கங்களையும் போட்டி போட்டு சுமந்து கொண்டிருக்கும்..வயதானவர்களின் வாழ்விடம் தான் இந்த அன்னை முதியோர் இல்லம் .

தினமும் ஒருவர் வருவதும் அவர்களின் துன்பங்களை கேட்டு பலர் அழுவதும் இங்கு வாடிக்கை . கேட்டு தங்களை தாங்களே. சமாதானம் படுத்திக்கொள்ளும் திட தைரியசாலிகளும் கூட.

இன்றும் அது போல ஒரு ஐம்பத்தி ஐந்து வயது மதிக்க தக்க பெண்மணி கண்ணில் பல துயரங்களை சுமந்து கொண்டு இந்த இல்லத்தில் இடம்பெயர்ந்தார் .

தான் பெற்ற பிள்ளைக்கே சுமையாகி போனதை ஜீரணிக்க முடியாமல் தாய் மனம் வெதும்பி ரத்தத்தில் கண்ணீரை கலக்கி கொண்டிருந்தது . இனி வாழ்வு எதற்கு என்ற எண்ணம் அவரை வதைக்க, வந்த மகனோ தன் கடமையை முடிச்து விட்டு , தாயிடம் கடைசியாக அன்பையும், தன் கடமை முடிந்து விட்டது என்று செய்தியையும் கொடுத்து விட்டு சென்றான். ஆனாலும் தாய் மனம் ஆனந்தத்தில் இருந்தது.

கணவனின் காதலையும் , அன்பையும் சுமந்து புகுந்தவீட்டில் காலடி எடுத்து வைத்த நாளில் அடைந்த சந்தோஷத்தை விட , மகன் இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டு சென்ற நாளில் அடைந்த சந்தோசமே அதிகம் . எங்கோ போய் தொலையட்டும் என்று எண்ணாமல் இங்கு கொண்டுவந்து விட்டுட்டு போனதே தாய் உள்ளத்தின் சந்தோசத்திற்கு காரணம் .

இனி இங்குதான் என்றான வாழ்க்கையையும் ஏற்க முடியாமல் , கணவனை இழந்த போதிலும் தன்னுடைய மகனுக்காக மீண்டு நின்ற துணிவும் இல்லாமல் , இந்த சமுதாயத்தில் ஒரு பெண்ணாய் சிந்திய உழைப்பும் இல்லாமல் , தளர்ந்து நிற்கும் நிலையை எண்ணி எண்ணியே .. ஒரு வார காலமாக உண்ணாமலும் , உறங்காமலும் இருந்த பாண்டியம்மாள் மயங்கி சரிந்தார் .

அங்கிருந்தவரின் உதவியால் தெம்பான பாண்டியம்மாள் அங்கு வாழவும் பழகி கொண்டார் . இங்கு வந்து இதே இன்னல்களை சந்தித்த குணசேகரும் ,பாண்டியம்மாளை பார்த்து கொண்டுதான் இருந்தார் . இது இங்கு வரும் அனைவருக்கும் பழக்கப்பட்ட ஒன்றுதான். அனைத்தையும் கடந்து சென்றவர் ஏனோ பாண்டியம்மாளை கடந்து செல்ல முடியவில்லை .
காரணமும் அவருக்கு பெரிதாக தெரியவில்லை . ஏதோ ஒன்று பாண்டியம்மாள் இடம் அவரை நிற்க சொல்லி மனது திண்டாடியது .தன்னை போன்று இவளும் எதோ பெரிய காயத்தை சுமந்து கொண்டிருக்கிறாள் என்று மட்டும் மனம் நம்பியது .

பாண்டியம்மாளை நெருங்க முடியாமல் தூரமாய் நின்றே அவருக்கு வேண்டியதை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார் குணசேகர் .
இப்படியே ஆறு மாத காலம் ஓடிய நிலையில் ஒரு நாள் இல்லத்தில் தோட்ட வேலை செய்யும் குழுவில் பாண்டியம்மாள் , குணசேகர் மாற்றப்பட்டார்கள் .

தூரத்தில் இருந்தே பார்த்த பாண்டியம்மாளுக்கும் இங்கு பக்கத்தில் பார்க்கும் பாண்டியம்மாளுக்கும் ஏக வித்தியாசத்தை உணர்ந்தார் குணசேகர் .
ஒவ்வொரு செயலும் தான் தனிப்பட்டவள் என்பதை உணர்த்தி கொண்டே இருந்தார் . முன்பை விட இப்போது இருவரும் நல்ல தோழர்களாக மாறி போயிருந்தனர் . தன்னிடம் பேசிய பாண்டியம்மாள் வாழ்வில் பட்ட துயரங்களை கேட்டவர் மனதில் 'இந்த உலகில் கடவுள் என்பவர் இல்லையோ ' என்ற எண்ணம் மட்டுமே வந்தது .

"சரி குணசேகர் என்னை பத்தி மட்டுமே கேக்குறீங்க . உங்களை பத்தி சொல்லவே மாற்றிங்க .." பாண்டியம்மாளின் விசாரனையில்
சிரித்தவர் ,

"சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை பாண்டிமா .. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கும்பகோணம் தான் . எனக்கு அம்மா மட்டும் தான் . அம்மா கல்லு உடைக்கும் வேலை செஞ்சிதா படிக்க வச்சாங்க . நான் ஒரு பொண்ண காதலிச்சேன். அவளும் தான் . வாழ்க்கை எவ்வளவு அழகுன்னு அவ வந்ததுக்கு அப்புறம் தான் உணர்ந்தேன். அந்த வாழ்க்கை கடைசி வரைக்கும் வேணும்'னு மனசு ரொம்ப எங்குச்சி பாண்டி மா. எது மேலையும் ஆச வைக்காத நான் அவள் மேல அதிகமா வச்சிட்டேன் . நான் ஆசை பட்ட எதையும் கடவுள் தரமாட்டாரு போல . அவளையும் பிரிச்சிட்டாரு . காதலிக்கும் போது சந்தோஷத்தை கொடுத்த அவள் நினைப்பே பிரிஞ்ச அப்போ ரணமா என்னை சித்ரவதை பண்ண ஆரம்பிச்சுது. வெளிய வர முடியல. ரொம்ப போராடி வெளிய வந்தேன். அதுக்கப்புறம் வாழ்க்கையில எல்லாமே மாறிடுச்சு .எனக்குன்னு இருந்த அம்மாவும் இவன் தொல்லை வேணான்'னு என்ன விட்டு போய்ட்டாங்க . அதுக்கு மேல என்ன கஷ்டம் இருக்கு..... கிடைக்கிற வேலை செஞ்சி , கைக்கு கிடைக்குறதை சாப்பிட்டு அப்படி இப்படின்னு இங்க வந்து சேர்ந்துட்டேன் பாண்டி ." குணசேகரின் வார்த்தைகள் என்னமோ தண்ணீர் பட்டும் ஒட்டாத தாமரை இலையாய் இருந்தாலும் இதை கடந்து வர பட்ட கஷ்டங்களை அவ்வளவு எளிதாக நடக்கவில்லை என்பது புரிந்தது.

"உங்களுக்கும் என்னை மாதிரி ஒரு குடும்பம் இருந்து இங்க வந்திருப்பிங்கன்னு நினைச்சேன் .குடும்பமே இல்லாம தான் இங்க வந்து சேர்ந்திருப்பிங்கன்னு நினைக்கல . என்ன விட உங்க நிலைமை மோசம் தாங்க ."

அவரோ , "அதுலாம் ஒண்ணு இல்லை பாண்டி மா ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கஷ்டம் . இந்த ஜென்மத்துல நமக்கு இதுதான் விதி போல ."

"ஆமாங்க ! அடுத்த ஜென்மத்துலயாது நம்ம நல்லா இருக்கணும் ."

மெல்ல சிரித்தவர்,
"பாண்டிமா உனக்கு அடுத்த ஜென்மத்துல பிறக்க ஆசை வேற இருக்கா என்ன ...."

பாண்டிமாவோ , " ஆமாங்க . ஆனால் இது ஆசை மட்டும் இல்லை. வாய்ப்பு கிடைச்சா ஆசைப்பட்ட மாதிரி திரும்ப வாழ்க்கையை அமையும்'னு நம்பிக்கை . பெண் பிள்ளை வேணும்'னு ஆசைப்படுற அம்மா ,அப்பாக்கு மகளா பிறக்கணும் . என்னோட திறமையை ஆதரிக்க தோள் வேணும். ஆசைப்பட்ட நபரே புருஷனா வரனும். கஷ்டங்களை தாண்டி வர பாதுகாப்பா ஒரு குடும்பம் வேணும் . முதுமையிலும் விட்டு பிரியாத துணை வேணும் . அம்மா மேல உசுரையே வச்சிருக்க குழந்தைகள் வேணும்" என பேசிக்கொண்டே குணசேகரை பார்க்க அவரோ , தன்னை கண் சிமிட்டாமல் பார்ப்பதை பார்த்து ..."என்ன குணசேகர் என்னையே பார்த்துட்டு இருக்கிங்க" என்பவளிடம் ..,

"ஒண்ணும் இல்லை பாண்டி. இவ்ளோ நடந்தும் உன்கிட்ட ஒரு நம்பிக்கை இருக்கு ல அதை பார்த்துதான் பிரம்மிச்சு போய் நிக்கிற ."

பாண்டியம்மாள் , "இது மட்டும் தான கடவுள் எனக்கு கொடுத்த துணை . சரி வாங்க போகலாம் ."

நாட்கள் வேகமாய் ஓடியதை போல இவர்களின் நட்பும்,புரிதலும் வளர்ந்து கொண்டே சென்றது . இருவருக்கு தன்னை நினைத்து கவலைப்பட ஒரு ஜீவன் உள்ளது என்ற எண்ணமே உற்சாகத்தை கொடுத்தது .

குணசேகருக்கோ , பாண்டியம்மாளை இனி சந்தோசமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையே நாளுக்கு நாள் வளர்ந்து ...பாண்டியிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கும் அளவுக்கு வந்து நின்றது .

இதை கேட்ட பாண்டியோ முதலில் 'கோவம் ... நிதானம் , அன்பு , ஏக்கம், எதிர்பார்ப்பு என மாறி மாறி சென்று கடைசியில் இந்த சமூகத்தில் வந்து நின்றது . எந்த உலகம் என்னை என்ன சொல்லும். தன் மகன் என்னை ஒரு புழுவை விட கேவலமாக நினைப்பான் . தன்னால் தன் மீது சுமத்தப்படும் சாயங்களுக்கு பதில் சொல்ல முடியுமா ?' என பலவாறு யோசித்து பார்த்து குழம்பி போனார் .


இந்த உறவுக்கு என்ன பேர் தரும் இந்த சமூகம். எங்கள் மனதை மட்டும் பார்க்குமா.... தேவைக்கு கல்யாணம் என்ற சொல்லை அடையாளமாக தந்திடுமே.
எல்லாம் முடிந்த இந்த வயதில் தானே துணையை அதிகம் தேடுகிறது மனது.

இதை குணசேகரிடம் தெரிவிக்க,
குணசேகரும் தன் நிலையில் தெளிவாக இருந்தார். அவரின் உறுதி கொஞ்சம் கொஞ்சமாக பாண்டியம்மாளை அசைத்து பார்க்க ஆரம்பித்தது. வாரங்கள் சில கடக்க, தினமும் தன்னிடம் அன்பை அள்ளி அள்ளி தரும் குணசேகரின் பண்பில் கலக்க ஆரம்பித்தார்.

இதற்கிடையில் குணசேகருக்கு உடம்பு முடியாமல் போக பக்கத்தில் இருந்து உரிமையாக பார்க்க மனம் விரும்பியது. இனி அன்பையே பார்க்காத இவருக்கு காலம் முழுக்க அன்பை மட்டுமே தர வேண்டும் என்ற உறுதியோடு பல பேர் வீசிய சொற்களை அட்சதையாக மாற்றி .., மகனிடம் கிடைக்காத அன்பையும், வாழ்வில் பார்க்காத அன்பையும் அடித்தளமாக அமைத்து அழகாக இந்த முதியோர் திருமணம் நடந்தேறியது .


ஆயிற்று இன்றோடு திருமணம் முடிந்து ஓராண்டு . காலையில் தொடங்கி மாலை வரை கணவன் மனைவிக்குள் நிகழும் தீண்டல்கள் இல்லை. சண்டைகள் இல்லை. ஓடி ஓடி எதிர் காலத்துக்காக சம்பாதிக்கும் நிலை இல்லை . குழந்தைகள் என்ற உறவு இல்லை. மொத்தத்தில் அன்பை பெற்று அதை அதிகமாக கொடுக்கும் இனிமையான தாம்பத்யம் மட்டுமே இருவரிடத்திலும் . இருவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போக மீண்டும் தனிமையில் தவிக்கும் நாளுக்காக மனதில் தைரியத்தோடு காத்தும் இருந்தனர்.

காலையில் எழுந்ததும் சேர்ந்து நடைப்பயிற்சி செல்வார்கள். மூன்று வேளை உணவும் சேர்ந்து சமைத்து சேர்ந்து உண்ணும் அட்டவணை . இரவில் தூக்கம் இல்லாமல் எழுந்து விட்டால் என்ன வேண்டும் என்று கேட்க பக்கத்தில் ஒரு ஆள் . மாலை வேளை சிறு சிறு கோயில் பயணம். விடுமுறை நாட்களில் தங்களை சேர்த்த இல்லத்தில் பொழுது என்று தன் துணையோடு பாதுகாப்பை உணரும் பந்தம் உண்ணதமான பந்தத்தில் மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
வாழ்க்கையை விருப்பம் போல் வாழ்ந்தாலும் சிலரின் பேச்சுக்களை கேட்கவும் தவறவில்லை இத்தம்பதிகள். ஒவ்வொரு தடவையும் அதை புன்னகையோடு கடக்கவும் பழகி இருந்தனர்.

வயதான காலத்தில் இது எல்லாம் தேவையா என்ற அற்ப மனிதர்களுக்கு எங்கு தெரியும் .. ஒரு மனிதனுக்கு சாவு நெருங்கிக்கொண்டு இருக்கும் தருணத்தில் தன்னை தாங்க ஒரு துணை இல்லை என்ற பயமே கொடிய தண்டனை என்று . பல மரணங்கள் வழி இல்லாமல் கட்டாயமாக நடந்து கொண்டிருக்கிறது.

அன்பை அனுபவிக்க வயது தேவை இல்லை . காதலுக்கும் அது அவசியம் இல்லை .

இது போன்ற அன்பையும் , காதலையும் சிலருக்கு புரிந்து கொள்ள முடியாது ........ பலருக்கு புரிய வைக்கவும் முடியாது .

***

நன்றி.
 

கௌசல்யா முத்துவேல்

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
11
இது சரியா??!!.. தவறா??!!.. தேவையா இல்லையா அப்படிங்குறதை தாண்டி தனிமைக்கு துணையை நாடி புரிதலோட உள்ள இந்த தாம்பத்தியம் ரொம்பவே அழகா இருந்தது!!!... வாழ்த்துகள்💖
 

Fa. Shafana

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
38
செம்ம... அன்புக்கு உண்டோ அடைக்கும் தாள்...
அன்பை மட்டும் எதிர்பார்க்கும் மனம் வயதையெல்லாம் பார்க்காது...
❤️❤️❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
651
இளமைக்காதலை விட முதுமை காதல் தான் எத்தனை அழகானது பக்குவமானது..! சூப்பர் ஸ்டோரி. வாழ்த்துகள் அம்மு மா..❤️
 

மேக வாணி

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
2
ரொம்ப அழகான கதைடா... முதுமை காதல் தான் எத்தனை அழகானது. அவங்களோட பாசம் அப்படியே கண்ணு முன்னாடி தெரியுது... ஆல் த பெஸ்ட் டா... செம்ம செம்ம ஸ்டோரி
 

Dharsini

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
20
பாண்டியம்மா குணசேகரின் முதுமைக் காதல் அழகு..வயதான காலத்தில் தனக்கென ஒரு ஜீவன் இருப்பதே பெரிய தைரியம்.அங்கு அன்பு என்ற தேடலே முதலும் முடிவும்..வாழ்த்துக்கள் சிஸ்
 
Top