• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஆரூர் சரவணா - தீபாவளி விருந்து

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
தீபாவளி விருந்து


‘தீபாவளி அன்னைக்கு நாம அங்க போகலை...’ என்று விஷ்ணுராம் சொல்லவும் நித்தின் சார்ஜ் இறங்கிய ஸ்மார்ட் போனாகிவிட்டான். ஐந்தாம் வகுப்பு படிக்கும் நித்தின் வகுப்பில் சரிபாதிக்கும் அதிகமானோர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த இடத்திற்கு சென்று வந்திருக்கிறார்கள். முதல் நாள் சென்று விட்டு வந்தது பற்றி வகுப்பறையில் பெருமை பொங்க பேசுவதை பார்க்கும்போது நித்தினுக்கும் அந்த ஆர்வம் ஏற்பட்டு விட்டது.

தந்தையிடம், ‘நாம அங்கெல்லாம் எப்போ போகப்போறோம்’ என்று கேட்டு நச்சரிக்கத் தொடங்கினான். மத்த பசங்களைப் பார்த்து அது வேணும், இது வேணும் என்று கேட்பது தப்பு என்று தொடக்கத்திலேயே விஷ்ணுராம் கண்டித்திருப்பதை நினைவூட்டி காருண்யா பேசவும், விஷ்ணுராம் குறுக்கிட்டான்.

‘இது மாதிரி நல்ல விஷயத்தை அடுத்தவங்களை பார்த்து நாமும் செய்யணும்னு விரும்புறதோ எங்க கிட்ட சொல்றதோ தப்பில்லை. அவங்க எல்லாம் பிறந்த நாளைக்குதானே இந்த மாதிரி இடத்துக்கு போயிட்டு வர்றாங்க. நாம தீபாவளி அன்னைக்கு போகலாம். ஆனா இது பத்தி உன் பிரண்ட்சுகிட்ட எல்லாம் முன்னாடியே சொல்லிகிட்டு இருக்காத.’ என்று சுருக்கமாக பச்சைக்கொடி காட்டவும் நித்தினுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

மகன் கேட்டதுமே இந்த விஷயத்துக்கு விஷ்ணுராம் சம்மதித்தது காருண்யாவுக்கு புதிதாக இருந்தது.

காருண்யாவுக்கு முன்பாகவே அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பூஜை அறையை சுத்தம் செய்து, சுவாமி படங்களுக்கு பூக்களை சாற்றி, விளக்கேற்றி வழிபட்டுவிட்டுதான் வீட்டை விட்டு வெளியேறுவான். பிறகு பெரிய கோவில் சென்று வழிபட்டுவிட்டு திரும்ப வரும்போது தொண்டு நிறுவனத்தின் நூலகத்தில் நாளிதழ்களை புரட்டிவிட்டு வீட்டுக்கு வருவான்.

தெருவில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு மாதம் ஒரு முறை சங்கடஹர சதுர்த்தி அன்று அபிஷேகத்துக்கும், வீட்டில் உள்ள அனைவரின் ஜென்ம நட்சத்திரத்தன்றும் குலதெய்வம் கோவிலுக்கு அபிஷேகத்துக்கு பணம் அனுப்பி வைப்பான். கோடை விடுமுறையில் ஒருநாள் மட்டும் நேரில் சென்று வருவார்கள்.

மற்றபடி ஏதாவது கோவிலில் அன்னதானம் செய்யலாம் என்றால், குல தெய்வத்துக்கு செய்யுறோம். அந்த கோயில்ல செய்யுற பிரசாதத்தை நாமளா போய் சாப்பிடுறோம்... கோயிலுக்கு வர்ற பக்தர்களுக்குதானே வினியோகம் பண்றாங்க? அதுக்கு பேரும் அன்னதானம்தான். அதை விட முக்கியமான விஷயம், உன் மாமனார் மாமியாரை அதான் என் அப்பா அம்மாவை நம்மோட வச்சி நல்லபடியா பராமரிக்கிறோம். இந்த கடமையை நாம மன திருப்தியோட செய்தா போதும்... தனியா புண்ணியம் தேட அவசியமில்லை என்று கூறி வாயை அடைத்துவிடுவான்.

அப்படி பேசும் விஷ்ணுராம், அவர்கள் மகனுடன் படிக்கும் மாணவர்கள், மாணவிகளில் பலர் தங்களது பிறந்த நாளுக்கு ஏதாவது ஒரு ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் ஒரு நாள் அல்லது ஒரு வேளை உணவு செலவை ஏற்றுக் கொண்டு அவர்களுடன் சென்று விருந்து சாப்பிட்டு வந்ததைப் பற்றி பேசவும், நித்தினுக்கும் அப்படி செய்ய வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. அதை அவன் விஷ்ணுராமிடம் சொல்லவும், முதல் இரண்டு நாட்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. அதனால்தான் மூன்றாம் நாள் நித்தின் அதே விஷயத்தை மீண்டும் பேசியவுடன் மகனை திட்டிவிடப்போகிறான் என்ற அச்சத்தில் காருண்யாவே மகனை கண்டித்தாள்.

ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக தீபாவளி விருந்தை இப்படி ஒரு இல்லத்தில் தர சம்மதம் தெரிவித்தது காருண்யாவுக்கு மட்டுமல்ல, விஷ்ணுராமின் பெற்றோருக்கும் வியப்பாகத்தான் இருந்தது.

அன்று பள்ளிக்கு சென்ற நித்தின், இப்போவே உன் பிரண்ஸ்கிட்ட சொல்லிடாத என்று அறிவுறுத்தியிருந்ததை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சந்தோஷத்தில் வகுப்புத்தோழர்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டான்.

இரவு வீட்டுக்கு வந்த விஷ்ணுராம், ‘தீபாவளி அன்னைக்கு நாம அங்க போகலை...’ என்று சொல்லவும் நித்தின் கண்கள் கலங்கி விட்டது. ஆனால் காருண்யா கணவனை திட்டவே ஆரம்பித்துவிட்டாள்.

‘என் புருஷனும் திருந்திட்டாரு... கர்ண பரம்பரையா மாறிட்டாருன்னு நானும் அரை நாள் சந்தோஷப்பட்டுட்டேன். அப்புறம் ஏன் காலையில அப்படி சொன்னீங்க... எப்பவும் போல உங்க கொள்கையோடவே இருந்திருக்க வேண்டியதுதானே?’ என்று சிடுசிடுத்தாள்

‘நாம அங்க போகலைன்னு தானே சொன்னேன். அந்த இல்லத்துல விருந்துக்கு பணம் கொடுக்கலைன்னு சொன்னேனா?’ என்று விஷ்ணுராம் சொன்னதும் காருண்யா முகத்தில் கேள்விக்குறியுடன் கணவனைப் பார்த்தாள். நித்தினுக்கு எதுவும் புரியவில்லை.

மகனை அழைத்து மடியில் அமர வைத்துக் கொண்ட விஷ்ணுராம், ‘தம்பி... திடீர்னு அப்பாவுக்கு ஏதாச்சும் ஆயிடுச்சு... இல்ல தொழில்ல நஷ்ட வந்து நம்மகிட்ட காசே இல்லைன்னு வெச்சிக்கயேன், அப்போ யாராச்சும் டிரஸ், சாப்பாடு வாங்கி கொடுத்தா உனக்கு என்ன தோணும்...’ என்றான்.

‘அப்பாவே இதெல்லாம் வாங்கி கொடுத்தா நல்லாயிருக்குமேன்னு தோணும்...’ என்றான் நித்தின்.

‘அந்த ஆதரவற்றோர் இல்லத்துல இருக்குற பிள்ளைங்க எல்லாருமே ஏதோ ஒரு சூழ்நிலையால பெற்றோரை இழந்து, யாரோ கொடுக்குற நன்கொடையை நம்பி இருக்குறவங்க. அவங்களுக்கு உண்மை தெரியும், இருந்தாலும் நீ உன் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியோட அங்க போய் அவங்களுக்கு டிரஸ், சாப்பாடு இதெல்லாம் கொடுத்தா அந்த பிள்ளைங்க மனசு அவங்களை பெத்தவங்களை நினைச்சு அழுமா இல்லையா?’ என்றதும், நித்தினுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. ஆனால் அப்பாவுடன் நாம் அந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு செல்லவில்லை என்பது மட்டும் புரிந்து விட்டது.

இப்போது காருண்யா, ‘ஏங்க... தீபாவளி வேண்டாம். நித்தினோட பிறந்தநாளைக்கு போகலாமே...’ என்றாள்.

அதைக் கேட்டு சிரித்த விஷ்ணுராம்,‘அது இன்னும் அபத்தம்... தீபாவளிக்கே வேணாம்னு சொல்றேன். அங்க இருக்குற பிள்ளைங்கள்ல தொண்ணூறு சதவீதம் பேருக்கு பெற்றோர் யாருன்னும் தெரியாது. பிறந்த நாளும் தெரியாது. அந்த இடத்துல போய் நம்ம பையனுக்கு பிறந்த நாள் கொண்டாடி அந்த பிள்ளைகள் நாம அனாதைன்னு நினைச்சு வேதனைப்பட வைக்கணுமா? சொல்லு’ என்றான்.

‘அப்போ பணத்தை கொடுத்துட்டு அதை அவங்க செலவழிச்சாங்களா இல்லையான்னு தெரியாம உட்கார்ந்துக்கணுமா?’ என்று சற்று காட்டமாகவே காருண்யாவின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்தது.

‘பல பேர் குடும்பத்துல அவங்க வீட்டுல உள்ள பெரியவங்களையே பார்த்துக்க முடியாம முதியோர் இல்லத்துல தள்ளிடுறாங்க. அதை வெச்சு பார்க்கும்போது, இப்படி இல்லங்கள் நடத்துறவங்களை நாம கையெடுத்து கும்பிடலாம். எங்கோ ஒரு சிலர் தப்பு பண்ணிடுறாங்கன்னு எல்லா நிர்வாகிகளையும் சந்தேகப்படக்கூடாது.

நம்ம வீட்டு வேலை செய்யுறவங்களுக்கும், பேப்பர், பால் போடுறவங்களுக்கும் பதினஞ்சுநாள் முன்னாடியே நாம அவங்களுக்கு தீபாவளிக்காக செய்ய நினைச்சதை கொடுத்துடுவோம். அதை சரியா செய்யுறதுதான் நம்மோட முதல் கடமையா இருக்கணும்.

தீபாவளி மட்டுமில்லை... பிறந்தநாள் மாதிரி நம்ம விசேசத்தன்னைக்கு ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், மாற்றுத்திறனாளிகள் இல்லம்னு நாம விருந்து குடுத்து நம்ம கையால பரிமாற நினைக்கிறது எல்லாம் சரிதான். அது மாதிரி நாம செய்யுறது உங்களுக்கு யாரும் சொந்தம் இல்லை. நாங்க கர்ணப்பரம்பரை வந்து உதவி செய்யுறோம்னு சொல்லாம சொல்லிக்காட்டுறது மாதிரிதான் இருக்கும்.

அதுக்கு பதில் இப்படி செய்யலாமே...

வீட்டுல உனக்கு பொழுது போகலைன்னு வேற வழியில்லாமத்தான் டி.வி பார்க்குறதா சொல்ற. அந்த இல்லத்துக்கு போய் அங்க இருக்குற பசங்களுக்கு உன்னால முடிஞ்சா ஆங்கிலம், கணக்கு சொல்லிக் கொடேன். தினமும் போகணும்னு அவசியம் இல்லை. வாரத்துக்கு இத்தனை நாள் அல்லது மாசம் இத்தனை நாள், இன்னின்ன கிழமைன்னு முறை வெச்சுகிட்டா நம்மளோட அவங்களுக்கு ஒரு பிணைப்பு வந்துடும். அந்த மாதிரி பழகின பிறகு நாம தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் அப்படின்னு போகலாம். அவங்களோட சாப்பிடலாம். ஏன்னா, நாம தொடர்ந்து பழகிட்டா நம்மையும் அவங்கள்ல ஒருத்தரா நினைக்கும்போது ஏதோ வேற்று நபர் வந்து உதவி செய்யுறார். நாம அனாதை அப்படின்னு எண்ணம் வராது.’ என்று சொல்லவும் காருண்யாவுக்கு விஷ்ணுராமின் நோக்கம் புரிந்தது.

நித்தினின் தலைமுடியை கோதிவிட்ட காருண்யா, ‘நித்தின்... தீபாவளி விருந்துக்கு நாம அந்த இல்லத்துக்கு பணம் கொடுத்துடுவோம். அதுக்கு அடுத்த வாரத்துல இருந்து அப்பா சொன்ன மாதிரி நான் எனக்கு நேரம் கிடைக்கிறப்ப அந்த இல்லத்துக்போய் அந்த பிள்ளைகளுக்கு ஏதாவது உபயோகமா சொல்லிக் கொடுக்குறேன். புது வருஷம் பிறக்கும்போது நாம எல்லாரும் அவங்க கூட போய் கொண்டாடலாம்...’ என்றாள்.

‘கொடுக்கும்போது நாம சந்தோஷப்படுறோம்... வாங்குற அவங்க என்ன மனநிலையில இருப்பாங்கன்னு யோசிச்சதே இல்லை. காலையில இது பத்தி நீங்க எதுவுமே பேசலை. சாயந்திரத்துக்குள்ள எப்படி இந்த ஞானோதயம்...’ என்றாள் காருண்யா.

‘நம்ம கஸ்டமர் ஒருத்தர் கிட்ட இது பத்தி பேசினேன். அவர் சொன்னதுதான் இந்த ஐடியா’ என்றான்.

***

நன்றி.
 
Top