• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
,இன்னிசை-13

" அத்தை ஈவினிங் ரோஸ் கார்டனுக்கு போகலாமா?" என்று தன் அத்தையின் முக வாட்டத்தை மாற்றுவதற்காக, அவருக்கு மிகவும் பிடித்த ரோஸ் கார்டனுக்கு போகலாமா என்று வினவினாள் மேனகா.

"நீ வேணும்னா ரிஷி கூட போயிட்டு வா. எனக்கு முடியலை."

" என்னத்தை ரிவென்ஞ்சா?"

" நீ என்ன சொல்ற பாப்பா? எனக்கு ஒன்னும் புரியலை. " என்று பதிலளித்த தனம், தன் போக்கில் கிச்சனை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்.

" அத்தை… எப்பவும் நான் மூட் அவுட்டாக இருக்கும் போது நீங்க அவுட்டிங் கூப்பிடுவீங்க. நான் வரலைன்னு மாமாவோட போக சொல்லுவேன். இன்னைக்கு உங்க டர்ன். நீங்க அதையே சொல்றீங்க." என்ற மேனகா, தனத்தின் முதுகை முறைத்துக் கொண்டிருந்தாள்.

" ப்ச்… எனக்கு கொஞ்சம் முடியலை மேகி… "

"நானும் வந்ததிலிருந்து பார்த்துட்டு தான் இருக்கேன். உடம்பு சரியில்லைன்னா ரெஸ்ட் எடுக்கணும். ஆனா நீங்க ஏதாவது வேலை பார்த்துக்கிட்டே தான் இருக்கீங்க."

" சரி மா. அத்தைக்கு மனசு சரியில்லை. கொஞ்சம் நேரம் ஆனால் சரியாகிடும். நீ போய் ரெஸ்ட் எடு. இல்லை உங்க மாமாவோட பேசிட்டு இரு." என்று மேனகாவை அங்கிருந்து அனுப்பப் பார்த்தார்.

" அத்தை… வேணும்னா நாங்க லேட்டா வந்தோம். நீங்க அபிஷேகத்துக்கு கொடுத்து இருக்கேன்னு சொல்லி இருந்தா, வேற பிளான் பண்ணி இருக்க மாட்டோம். எனக்கு பிடிச்ச இடத்துக்கு திடீர்னு அத்தான் கூட்டிட்டு போயிட்டாங்க. நானே எதிர்ப்பார்க்கலை. ஸ்வீட் சர்ப்ரைஸ்." என்று லேசான வெட்க சிவப்புடன் கூற.

தனத்தின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. " அப்படி என்ன சர்ப்ரைஸ்? இந்த அத்தைக்கும் சொல்லேன்." என்று வினவ.

அதுவா என்ற மேனகா, பழங்குடி மக்களை சந்தித்ததையும், தான் ரசித்த அனுபவங்களையும் விவரிக்க, தன் மருமகளின் சந்தோஷத்தில் சற்று கவலைகளை மறந்தார்.

" ரிஷி மாதிரியே நீயும் வேலைக்கு போயிட்டா என்ன மறந்துடுவ போல இருக்கு. காட்டை பத்தி பேசும் போது அப்படி ஒரு ஜொலிப்பு உன் முகத்துல வந்து போகுது. இனி நீ இந்த அத்தையை கண்டுக்க மாட்ட‌. அப்படித் தானே." என்று மேனகாவின் கன்னத்தை கிள்ள.

" ஸ்ஆ… அத்தை வலிக்குது. நான் அப்படி இல்ல அத்தை. ஆனால் அதிகம் லீவு போட முடியாது. நான் வரலைன்னா என்ன, நீங்க வாங்கத்தை."

" அது சரி விவரம் தான் நீ. "

" நான் உங்க மருமகளாச்சே. " என்ற மேனகா, அவரைப் பார்த்துக் கண்ணடித்தாள்.

" அப்படியா செல்லம். அப்போ என் கேள்விக்கு பதில் சொல்லு. நான் உனக்கு முக்கியமா? இல்லை இந்த வேலை முக்கியமா?" என்று கேலியாக வினவினார் தனம்.

" அத்தை நீங்க தான் எனக்கு முக்கியம். அதே போல இந்த வேலையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு‌. அங்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புது விதமான அனுபவம் கிடைக்குது. அதுவும் அங்குள்ள பழங்குடி மக்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னு என் மனசுக்குள்ள ஒரு குரல் ஒலிச்சுக்கிட்டே இருக்குத்தை. அதை மட்டும் என்னைக்கும் விட சொல்லாதீங்க அத்தை. நீங்க சொல்லி நான் மறுக்க மாட்டேன். அதுக்கப்புறம்…" என்று ஏதோ கூற வருவதற்குள்,

" ஹேய் லூசு… சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன். நான் ஏன் வேலையை விட சொல்ல போறேன். உன் கூட ஃபாரஸ்ட்ல வேலைப் பார்க்குறவங்களா பார்த்து தான் கல்யாணமே பண்ணி வைப்பேன் போதுமா?" என்றவர், தனது மருமகளை குறுகுறுவென பார்க்க.

" போங்க அத்தை." என்றவளது முகமோ சிவந்தது.

" எங்க போக சொல்ற மேகி? மாப்பிள்ளை பார்க்கவா?" என்று வம்பிழுக்க.

" ஐயோ! அத்தை… எங்கேயும் போக சொல்லல. இப்போ நீங்க நல்லா இருக்கீங்கன்னு தெரியுது. சரி வாங்க அவுட்டிங் போகலாம்."

" அடியே… எனக்கு வயசாயிடுச்சு. உன் அத்தானை கூட்டிட்டு எங்க வேணும்னாலும் போ. என்னை ஆளை விடு."

" அப்போ கோவிலுக்கு கூட வரமாட்டீங்களா அத்தை." என்று மேனகா ராகம் பாட.

" கோவிலுக்கா… அப்போ நான் வர்றேன்." என்ற தனம், பாவமாக மருமகளை பார்த்தார்.

" இப்போ மட்டும் வயசாகலையாக்கும். சரி… சரி… கிளம்புங்க. நான் போய் அத்தானை கிளப்புறேன்." என்றவள் சிட்டாக, ரிஷிவர்மனின் அறைக்கு ஓடினாள்.

'கோவிலுக்கு போனாலாவது மனதிற்கு அமைதிக் கிடைக்குமோ!' என்று எண்ணிய தனம், உற்சாகமாகவே கிளம்பினார்.

"அத்தான்… அத்தான்…" என்று மேனகா அவனை உலுக்க.

" என்ன மேகி? கொஞ்ச நேரம் என்னை தூங்க விடு."

" அத்தான்… இப்போ எழுந்திருக்கிறீங்களா? இல்லையா?"

" லூசு… இப்ப எதுக்கு என்னை போட்டு படுத்துற? தூங்குறேன்னு தெரியுதுல்ல… முதல்ல இங்க இருந்து கிளம்பு." என்று கண்ணை திறவாமல் ரிஷிவர்மன் கடுப்படிக்க…

"அதான் இப்போ முழிச்சிட்டீங்கள்ல." என்று மேனகா முணுமுணுக்க.

வேகமாக கண்களைத் திறந்தவன், கைக்கு அடியில் வைத்திருந்த தலைகாணியைத் தூக்கி அவளை அடிக்க முயன்றான்.

" அத்தான் நோ வன்முறை… அத்தை கோவிலுக்கு கூப்பிடுறாங்க. அதான் எழுப்ப வந்தேன்." என்றவள், வேகமாக அவனது தாக்குதலில் இருந்து நகர்ந்தாள்.

" ப்ச்… எனக்கு தூக்கமா வருது பிசாசே. நீயும், அம்மாவுமா போயிட்டு வாங்க. அதான் அப்பா இருக்காங்கள்ல. அப்புறம் என்ன?"

" ப்ளீஸ் அத்தான். எனக்காக." என்று பாவமாக வினவ.

அதற்கு மேல் ரிஷிவர்மனால் மறுக்க முடியவில்லை.

" சரி… வர்றேன் இம்சை… இப்போவது என்னை தூங்க விடு." என்றவன், ப்ளான்ங்கட்டை இழுத்து தலை வரைப் போத்திக் கொண்டான்.

மேனகா அவனை முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

ரிஷிவர்மனோ அதைக் கவனித்தானில்லை. மீண்டும் சொர்க்கத்திற்கு சென்றுக் கொண்டிருந்தான்.
********************

தனம் சுறுசுறுப்பாக கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். அவரது சுறுசுறுப்பு குரலிலும் தெரிந்தது‌.

" என்னங்க… நீங்க கிளம்பிட்டா, ரிஷி என்ன பண்றான்னு போய் பாருங்க. இதோ ஐந்து நிமிஷத்துல ரெடியாயிட்டு வரேன்னு போன மேகிய வேற இன்னும் காணோம். குளிக்க வேணாம். முகம் மட்டும் கழுவிட்டு வான்னு சொன்னேன். இந்த பொண்ணு என்ன பண்றான்னு தெரியலை. நான் போய் அவளைப் பார்க்குறேன்." என்று ராமனிடம் சொன்னவர், மேனகாவை தேடிக் கொண்டு சென்றார்.

அங்கோ தலை முடி ஈரம் சொட்ட மெத்தையில் அமர்ந்திருந்தாள் மேனகா.

" ஹேய் மேகி… இப்போ எதுக்கு குளிச்ச. நான் தான் வேண்டாம்னு சொன்னேன்ல" என்றவாறு வந்த தனம், மருமகளின் சோர்ந்த முகத்தைப் பார்த்து புரிந்துக் கொண்டாள்.

" என்னமா… வயிறு ரொம்ப வலிக்குதா." என்று பரிவாக வினவினார்.

" அதெல்லாம் இல்லத்தை‌. எப்பவும் உள்ளது தானே. உங்களை வேற கோவிலுக்கு கிளப்பி விட்டேன். இப்போ என்னால வர முடியலை. நீங்க, மாமா, அத்தான் மூனு பேரும் போயிட்டு வாங்கத்தை."

"அதெல்லாம் வேண்டாம். உன்னை தனியா விட்டுட்டு போக முடியாது." என்று தனம் மறுத்துக் கொண்டிருக்க.

" என்ன எல்லோரும் கிளம்பியாச்சா?" என்று கேட்டப்படி அங்கு வந்தான் ரிஷிவர்மன்.

" அது வந்து ரிஷி… மேகி கோவிலுக்கு வரக்கூடாது. நீ அப்பாவோட போயிட்டு வந்துடுப்பா." என்று தயக்கமாக, அவனைப் பார்த்துக் கூறினார் தனம்.

" ப்ச்… அவரோட போறதுக்கா கிளம்பி வந்தேன். "என்று முணுமுணுத்தவன் மேகியிடம், "நீ சொன்னேன்னு தான் கிளம்பினேன். இதுக்கு நான் நல்லா தூங்கி ரெஸ்ட்டாவது எடுத்திருப்பேன்." என்று விட்டு வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

அவனது கோபத்தை பார்த்து விக்கித்து நின்றாள் மேனகா.

"விடு மேகி. உன்னோட வெளியில் போக முடியாத கோவத்த காண்பிச்சிட்டு போறான். கொஞ்ச நேரத்துல சரியாயிடுவான்." என்று மருமகளை சமாதானம் செய்த தனமோ உள்ளுக்குள் கலங்கித்தான் போனார்.

' என்ன இது குடும்பத்தோட கோவிலுக்கு போகும்னு நினைச்சாலே தடை வந்துக் கிட்டு இருக்கு‌. ஏதோ தப்பா நடக்கப் போகுது.'என்று எண்ணியவர், வெளியே காட்டிக் கொள்ளாமல் இரவு உணவு தயார் செய்ய முயற்சி செய்தார்.
அவர் எண்ணியது போலவே நடந்தது.

**************************
" ஹலோ… மிஸ்டர் ரிஷிவர்மன் இருக்காங்களா?" என்று கார்த்திக்கின் கேலியான வினாவிற்கு, " ப்ச்… இருக்குற டென்ஷன்ல நீ வேற ஏன் டா இப்படி படுத்துற." என்றான் ரிஷிவர்மன்.

" டேய் ரிஷி. நான் தான் டென்ஷனாகனும். நீ ஏன் டா சலிச்சுக்குற? "

"அது வேற டென்ஷன்ல இருந்தேன். சரி விடு. இப்போ எதுக்கு கால் பண்ண?"

" கேட்க மாட்ட பின்ன… என்னை ஒரு மேலதிகாரியா மதிச்சா தானடா. அட்லீஸ்ட் ஃப்ரெண்டுனாவது நினைச்சியா? அதுவும் கிடையாது. ரெண்டு நாள்னு லீவ் கேட்டு, ஊருக்கு போன? இப்போ ஒரு வாரம் ஆகிடுச்சு. இன்னும் ஒரு தகவலும் காணோம். லீவ் எக்ஸ்டண்ட் பண்ணியா, அதுவும் கிடையாது. என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு ஃபோன் பண்ணா சலிச்சுக்குற?"என்று படபடவென வினவினான் கார்த்திக்.

"அது வந்து கால்கட்டு…" என்று ரிஷிவர்மன் ஆரம்பிக்க…

" என்னடா… சொன்ன மாதிரி கால்கட்டு போட்டுட்டியா" என்று முடித்தான் கார்த்திக்.

" ஆமாம் டா. உன் கிட்ட சொன்ன முகூர்த்தம் பலிச்சிடுச்சு."

" டேய்… நான் உன் நண்பன்டா. என் கிட்ட கூட சொல்லல பார்த்தியா? நீ துரோகிடா."

" டேய் கார்த்தி ஏன் டா இப்படி அவசரப்படுற. கொஞ்சம் மனுஷன பேச விடுடா."

" சரி. சொல்லு."

" ஒரு ஆக்சிடென்ட். கால்லகட்டு போட்டு விட்டிருக்காங்க. " என்று பெருமூச்சு விட்டான் ரிஷிவர்மன்.

"என்னடா சொல்ற? ரொம்ப அடியா… டூவீலர்ல போனீயா. மலைப்பகுதி வேற. எதோ சின்ன அடியோட போனதே. எல்லாம் நல்லதுக்கு நினைச்சுக்கோ. அப்புறம் என்ன? மாமா பொண்ணு வேற பக்கத்துல இருக்கா. அவளோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியலன்னு கவலைப்படுவ தானே. இந்த டைமை யூஸ் பண்ணிக்கோ. நல்லா என்ஜாய் பண்ணு."

"ம்கூம்… அதுக்கும் தான் நீ வெட்டு வெச்சிட்ட."

" டேய் நான் என்னடா பண்ணேன்."

" அன்னைக்கு என்ன சொன்ன… நியூ ஜாய்னி அதிகம் லீவு போடக் கூடாதுன்னு சொன்னல்ல. அதனால என் கூட இருக்காமல் அவ கிளம்பி வேலைக்கு கிளம்பிட்டா."

" டேய்… நான் சும்மா ஏதாவது பேசணும்னு சொன்னேன்."

" உன் மேலயும் தப்பு இல்லை. எல்லாம் என் நேரம். நான் இப்படி படுத்து கிடக்கும் போது, அவ அங்க போய் ஏதாவது தெரிஞ்சுக்கிட்டா என்ன பண்றதுன்னு அது வேற டென்ஷனா இருக்குடா."

" நீ ஏன் டா பயப்படுற? பழங்குடி மக்களோட பழக்கம் வச்சுப்பான்னு நினைக்கிறீயா? நான் வேணும்னா அவளை ஃபாலோ பண்ண ஆள் ஏற்பாடு பண்ணவா?"

" ஐயோ! ஆள் எல்லாம் வேண்டாம்.அவ கண்டுபிடிச்சிடுவா. என் வார்த்தையை மீற மாட்டா. தனியா அங்க போக மாட்டா. பார்த்துக்கலாம்." என்று உறுதியாக கூறினான் ரிஷிவர்மன்.

" அப்போ எதுக்கு குழம்பிக்குற? நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு, சீக்கிரம் வேலைக்கு வரப்பாரு."

" இன்னும் ஒரு வாரத்துல வந்துடுவேன்." என்று ஃபோனை வைத்த ரிஷிவர்மனின் சிந்தையில் மேனகா வந்து போனாள்.

அவளை நினைத்ததும் அவனது முகத்தில் பெருமிதம் வந்தது.

**********************************

மேனகாவோ மூச்சு வாங்கிக் கொண்டே எதிரே இருந்த சிறுவர்களைப் பார்த்து விழிகளை உருட்டினாள்.

" இந்தா மோகினி…" என்று பொன்னாம்மாள் டீத்தண்ணி குடுக்க.

அதை வாங்கி, வேகமாக குடித்து முடித்தவள், அந்த முதியவரிடம் முறையிட்டாள்.

"கோல்ட் … இவனுங்க என்ன கிண்டல் பண்ணிட்டே இருக்காங்க? என்னன்னு கேளுங்க?"

" டேய்… எதுக்குடா மோகினி பாப்பா கிட்ட வம்பளக்குறீங்க."

" அது வந்து பாட்டி. வெரசா வர சொன்னா அக்காவால நடக்க முடியல. திடுதிடுப்னு ஒரு காட்டு யானை வந்துச்சா, அக்காவோட ஓட்டத்தை பார்க்கணுமே. " என்ற இரு பசங்களும் விழுந்து, விழுந்து சிரிக்க.

" டேய்… பாவம்டா புள்ளை. பயந்திருக்கும். பத்திரமா கூட்டிட்டு வராம கேலி பண்ணுதீக."

" பாட்டி… நாங்க தான் யானை தொரத்துனா நேரா ஓடக்கூடாது, வளைஞ்சு, வளைஞ்சு ஓடணும்னு, அவங்களுக்கு சொல்லிக் கொடுத்து கூட்டிட்டு வந்தோம்." என்ற சிறுவனோ மேனகாவைப் பார்த்து மீண்டும் சிரிக்க.

" எதுக்குடா பல்லு சுளுச்சிக்குற போல ரெண்டு பேரும் சிரிச்சிட்டு இருக்கீங்க." என்று பேரன்களை பொன்னாம்மாள் திட்ட.

" அதுவா பாட்டி… அக்கா என்ன கேட்டாங்கத் தெரியுமா?"

" டேய் முருகா… வேண்டாம்." என்று மேனகா தடுத்தாள்.

"நம்மளை மாதிரி யானையும் வளைஞ்சு, வளைஞ்சு வந்து புடிக்காதான்னு கேட்டாங்க பாட்டி." என்ற செந்தில் சிரிக்க.

பொன்னாம்மாளும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தார்.

முறைக்க முயன்ற மேனகாவின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.


 
Top