• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
இன்னிசை - 17

ஜீவாத்மனுக்கு மேனகாவை பிடித்திருந்தாலும் மேனகாவிற்கு பிடிக்குமோ? பிடிக்காதோ? என்ற குழப்பத்திலேயே நாட்கள் கடந்து இருந்தது.

ஆதிரன் தான் இந்த கல்யாணத்தை நினைத்து உற்சாகத்தில் இருந்தான். ஜீவாத்மனின் சம்மதம் கிடைத்த அடுத்த நொடியே நிர்மலாவிற்கு அழைத்திருந்தார் அவருக்கும் உற்சாகம் தலைதூக்க இருவரும் சேர்ந்து திருமணத்தைப் பற்றி திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர்.

" பெண் பார்க்க போகும் போது நீ வர வேண்டாம் டா."என்று நிர்மலா கூற.

"நான் வருவேன். நான் ஏன் வரக்கூடாது." என்று எகிறினான் ஆதிரன்.

"நீ சும்மா இருக்காமல் ஏதாவது சேட்டை பண்ணுவ? உன்ன பார்த்து குடும்பமே இப்படித்தான் முடிவு பண்ணிட்டா என்ன பண்றது?அடக்க ஒடுக்கமா வருவேன்னா வா. இல்லன்னா நீ வர வேண்டாம்." இதுதான் சாக்கு என்று சின்ன மகனின் காலை வாரினார் நிர்மலா.

"நான் இல்லாமல் இந்த கல்யாணத்தில் எந்த விஷயம் நடக்காது. இந்த பொண்ணு பார்க்குற பங்ஷனுக்கு பொண்ணு வருதோ, இல்லையோ நான் கட்டாயம் வருவேன். இவங்க ரெண்டு பேரையும் ஓட்டுற ஓட்டுல இவன் கிட்ட என்னைக்கும் வம்புதும்பு வச்சுக்கூடாதுன்னு நினைக்க வைக்கணும். அப்புறம்…" என்று ஏதோ கூற வர.

" போதும் டா சாமி. என்னை ஆளை விடு. நீயாச்சு, உங்க அண்ணனாச்சு… வர புதன்கிழமை நல்ல நாளா இருக்கு. அன்னைக்கு வர்றோம் தரகர் மூலமா பொண்ணு வீட்ல சொல்லியாச்சு. அண்ணனும், தம்பியும் ஒழுங்கா வந்து சேருங்க. அதுவரைக்கும் எனக்கு ஃபோன் பண்ணாதடா." என்றவர் ஃபோனை வைத்து விட்டார்.

கல்யாண பேச்சு ஆரம்பிச்சதிலிருந்து, அடிக்கடி ஃபோன் போட்ட ஆதிரன், நிர்மலாவை பாடாய் படுத்திருந்தான்.

அம்மாவின் பேச்சை கேட்டு சிரித்தப்படியே ஃபோனை வைத்த ஆதிரனோ, மனதிற்குள் ஏகப்பட்ட திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தான்.

அங்கு மேனகாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்க தனமும், ராமனும் அவ்வளவு போராட வேண்டி இருந்தது.

" மேனகா…" என்ற தனத்தின் குரல் திடீரென்று ஒலிக்க.
"அத்தை… என்னத்த திடீர்னு வந்து இருக்கீங்க?" என்று ஆச்சரியமாக மேனகா வினவினாள்.

" நீதான் எங்களை பார்க்க வரவே மாட்டேங்குறீயே. அந்த அளவுக்கு நாங்க வேண்டாதவங்களா போயிட்டோம். ஆனால் என் மனசு கேட்கலை.அதான் உன் மாமாவை கூப்பிட்டுட்டு நானே வந்துட்டேன்." என்றவர் கண்கலங்க.

" அதெல்லாம் இல்லத்தை… லீவு கிடைக்கலை." என்ற மேனகாவின் முகம் சற்று வாடியது.

"தனம்… எதுக்கு தேவையில்லாததை பேசிட்டிருக்க? பாரு மேனகாவோட முகமே வாடி போயிருச்சு." என்று ராமன் இடைப் புக.

" ஆமாம் உங்க மருமகளை ஏதாவது சொன்னா வந்துடுங்க." என்று அவரைப் பார்த்து முறைத்த தனம், மீண்டும் மேனகாவிடம் திரும்பினார்.

"இங்கே பாரு மேனகா. உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கோம். புதன்கிழமை உன்னை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்றாங்க. இன்னைக்கே எங்க கூட வா."

" அத்தை… ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. எனக்கு கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்லை."

" நீ ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்னு எங்களுக்குத் தெரியும்.

" அத்தானை மறக்கறதுக்கு கொஞ்சம் டைம் கொடுங்கத்தை." என்ற மேனகாவின் குரலில் லேசான தடுமாற்றம் தெரிந்தது.

தனம் மருமகளை தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டே, "நாங்க சின்ன வயசுல இருந்து உங்க ரெண்டு பேருக்கும் நேர்மையா, உண்மையா இருக்கணும்னு சொல்லி கொடுத்தோம். அவன் தான் அப்படி இல்லைன்னு நிரூபிச்சுட்டு போய் சேர்ந்துட்டான். உன்னையாவது ஒழுங்கா வளர்த்திருக்கிறேன்னு நினைச்சேன். ஆனால்… இப்ப நீயும் பொய் சொல்ற பார்த்தியா?" என்றவர் அழ.

" தனம்… சும்மா இரு. அவனை நினைச்சு உடம்பை கெடுத்துக்காத…"

அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்ட மேனகா அதிர்ச்சியில் சிலையாக நின்றாள்.

" என்னடா அதிர்ச்சியாகி நிக்குற? இந்த அத்தைக்கு என்ன தெரிய போகுதுன்னு நினைச்சியா?"

" அத்தை…"

" இதோ இதைப் பாரு. நீ சொல்லாத கதையெல்லாம் இது சொல்லிடுச்சு." என்றவர், ஊரிலிருந்து
தான் கொண்டு வந்த பேக்கிலிருந்து ஒரு டைரியை எடுத்து அவள் முன்னே நீட்டினார்.

அதை பார்த்ததும் வாயடைத்து நின்றாள் மேனகா.

" அத்தை… நான் எந்த தப்பும் பண்ணலை. அத்தான் சாவுக்கு நான் காரணமில்லை. என்னை நம்புறீங்க தானே." என்று கண்கலங்க தனத்தைப் பார்த்தாள் மேனகா.

" உன்னை தப்பாவே நினைக்கலை. என் வளர்ப்பு தான் சரியில்லை. அவனுக்காக உன் வாழ்க்கையை அழிச்சிக்காத. நீ கல்யாணம் பண்ணி, புருஷனோட சந்தோஷமா இருந்தா தான், நான் என் தம்பிக்கு குடுத்த வாக்கை காப்பாத்துனதாகும். உன்னை நல்லா பார்த்துப்பேன்னு தான் என் கிட்ட ஒப்படைச்சுட்டு போனான் என் தம்பி." என்றவர் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு, திடமாகப் பார்த்தார்.

" நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் அத்தை." என்றவள், அவளது அறைக்குள் சென்று கதறி அழுதாள்.

" நான் தப்பு பண்ணிட்டேன். இந்த டைரி உங்க கண்ணுல படாமல் வைச்சிருக்கணும்." என்று முணுமுணுத்தவளது நினைவில் ரிஷிவர்மனின் அழுக்கான மறுபக்கம் வந்து போனது.

அன்று…
புலி லட்சுமி கொன்று போட்டது தெரிந்ததும், பதட்டமாக அதிகாரிகள் அங்கு சென்றனர்.

அங்கோ லட்சுமியின் மரணத்தை பார்த்து மயங்கியிருந்தாள் மேனகா.

அங்கு மேனகாவை பார்த்ததும் ரிஷிவர்மனுக்கு கோபம் வந்தது. இருந்தாலும் அடக்கிக் கொண்டு அவளை அங்கிருந்து அழைத்து செல்ல ஏற்பாடு செய்தான்.
மேலும் சில, பல விசாரணைகள் செய்து விட்டு மேனகாவை சந்திக்க சென்றான்.

அப்போது தான் கண் விழித்தவளோ, லட்சுமியின் நினைவில் கலங்கித் தவித்துக் கொண்டிருந்தாள்.

ரிஷிவர்மனோ இதை எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் வந்ததும் அவளிடம் விசாரணை நடத்தினான். " மேனகா உன்னை யார் அங்க போக சொன்னது? உனக்கு ஏதாவது ஆனா என்ன பண்றது? இவன் பேச்சை நாம ஏன் கேக்கணும்னு அவ்வளவு திமிர். " என்று பொருமினான்.

" அத்தான்… "

" வாயை மூடு. தனியா அங்க போகக் கூடாதுன்னு பலமுறை சொல்லியும், என் பேச்சை கேட்காமல் அங்க போயிருக்க."

" அத்தான்… புலி நடமாட்டம் இருக்குன்னு சொன்னதுக்கு, ஆதாரம் வேணும்னு சொன்னீங்கள்ல, அதான் போனேன்."

" லிசன் மேனகா. இங்க நான் தான் உன் மேலதிகாரி. என்னுடைய பார்வைக்கு வராமல் எதுவும் பண்ணக்கூடாது. நீ நான் சொல்லி எதுவும் கேட்க மாட்ட. முதல்ல இரு அம்மா கிட்ட சொல்லி நம்ம கல்யாணத்தை ஏற்பாடு பண்ண சொல்றேன். நீ கல்யாணம் முடிஞ்சு அங்க இருந்தா தான் நான் இங்க நிம்மதியா இருக்க முடியும் போல"

" அத்தான்… என்ன சொல்றீங்க? கல்யாணத்துக்கும், இப்போ நடக்குற பிரச்சனைக்கும் என்ன சம்மந்தம்?"

" கல்யாணம் முடிஞ்ச பிறகு நீ வேலைக்கு வரத் தேவையில்லை."

" என்ன அத்தான் சொல்றீங்க? நான் கல்யாணம் பண்ணாலும் வேலைக்கு வருவேன்."

" எனக்கு வேலைக்கு போற பொண்ணு எல்லாம் தேவையில்லை. என் பொண்டாட்டிக்கு தேவையானத சம்பாதிக்க என்னால முடியும். என்ன கல்யாணம் பண்ணிக்கணும்னா நீ வீட்ல தான் இருக்கணும்." என்று ஆணவமாக பேசியவனைப் பார்த்து அயர்ந்து நின்றாள்.

" ம்… என்ன மரம் மாதிரி நிக்குற? உன் முடிவு என்ன மேனகா?"

"அத்தான்… உங்க பேச்சு கேட்கலைன்னு இப்படி எல்லாம் விளையாடாதீங்க?"

" விளையாட்டா? என் மூஞ்சை பாரு. உன் கிட்ட விளையாடுற மாதிரி தெரியுதா? நான் சீரியஸா தான் பேசிட்டு இருக்கேன். நான் இன்னைக்கே அம்மா கிட்ட பேசுறேன்."

" அப்போ இந்த கல்யாணம் நடக்காது."

" இப்போ என்ன சொன்ன? " என்றவன், சற்று ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.

" நீங்க கேட்டது உண்மை தான் அத்தான். எனக்கு இந்த ஃபாரஸ்ட் வேலை பிடிச்சிருக்கு. இதை விட மாட்டேன்." என்று அழுத்தமாக அவனைப் பார்த்துக் கொண்டே கூறினாள்.

" ஓஹோ." என்றவன் கண்கள் பளபளக்க சிரித்துக் கொண்டிருந்தான்.

மேனகா முதல் முறையாக அவனைப் பார்த்து அச்சப்பட்டாள்.

"வாட் ஏ குட் ஜோக் மேகி டார்லிங்." என்று அவளது கன்னத்தை தட்ட.

"ப்ச்…" என்ற மேனகா, கைகளைத் தட்டி விட்டாள்.

" பார்டா… என் மாமா மகளுக்கு கோபமெல்லாம் வருது. நீ ஒன்னு யோசிச்சியா டார்லிங். இங்கே ஏன் வேலைக்கு வந்த? இந்த அத்தானை விட்டு பிரிய மனமில்லாமல் தானே. இல்லைன்னா உயிருக்கு உயிரா வளர்த்த அத்தையை விட்டுட்டு, இந்த காட்டுல இருப்பீயா நீ? உனக்கு என்ன எந்த அளவுக்கு பிடிக்கும் என்று எனக்கு நல்லாத் தெரியும். நான் என்ன சொன்னாலும் கண்ணை மூடிட்டு கேட்பேன்னு நல்லாத் தெரியும். இல்லைன்னா நான் என்ன சொன்னாலும் கேட்டுட்டு இருப்பீயா? அங்க வீட்ல ஃப்ரீயா பேச முடியலைன்னு, உன்னை பாட்டு கிளாஸ்ல சேர சொன்னேன். லூசு… பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு சேருவியா? அது மட்டுமா பாடுறேன்னு உசுர வாங்குவ… பெரிய சித்ரா, ஜானகின்னு நினைப்பு. இப்படியெல்லாம் என் பின்னாடி சுத்திட்டு கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களோ? அதையும் தான் பார்த்துடுவோம்." என்று எகத்தாளமாக கூறினான்.

" உங்களை பிடிக்கும் அத்தான். நானும் உங்களைப் பிடிக்காதுன்னு சொல்லலையே. கல்யாணமும் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலை. ஆனால் அதுக்காக இந்த வேலையை விட முடியாது. "என்று விரக்தியாக கூறினாள் மேனகா.

" உங்க அத்தை சொன்னாலும், என் கண்டிஷனுக்கு ஓத்துக்கிட்டு நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்ல மாட்டியா?" என்று வார்த்தைக்கு, வார்த்தை அழுத்தத்தை அதிகரித்தான்.

மேனகாவோ, " இல்லை." என்று தலையசைத்தாள்.

" நன்றி கெட்ட ஜென்மம்."

" அத்தான்…"

" என்ன அத்தான்? அப்பா, அம்மா இல்லாத அநாதை நீ. உன்னை அந்த குறை தெரியாமல் பார்த்துக் கிட்ட எங்க அப்பா, அம்மாவுக்கு நல்ல கைமாறு செய்வேன்னு தைரியமா நிக்குற? இது சம்பாதிக்கிற திமிர். உன் படிப்புக்கும் எங்க அப்பா, அம்மா செலவு பண்ணது தான். " என்று அவளை சொல்லால் குறி வைத்து தாக்கினான்.

அவனது குறி தப்பாமல் அவளது இதயத்தை தாக்கியது.

அடிப்பட்ட பார்வையுடன் அவளிருக்க, வெற்றிப் புன்னகையுடன் ஃபோனை எடுத்து தனத்திற்கு அழைத்தான்.

" மா… எப்படி இருக்க."

" எனக்கென்ன நல்லா இருக்கேன் பா."

" என்ன மா ரொம்ப சலிச்சுக்குற? உனக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்றேன்."

" என்னடா தம்பி?"

" அது வந்து நீ ரொம்ப தனிமையில் இருக்குற. உனக்கு துணைக்கு ஆள் கொண்டு வர்றேன்."

" என்னடா உளறுற?" என்றவரோ, ' இவன் ஒரு வேளை வேற யாரையும் லவ் பண்றானோ.' என்று உள்ளுக்குள் பயந்து போனார்.

" உளறலாம் இல்லைம்மா… எனக்கும், மேகிக்கும் சீக்கிரம் கல்யாண ஏற்பாடு பண்ணுங்க. உடனே உங்களோட விளையாட பேரன், பேத்தி ரெடி பண்ணுறேன்." என்றவன் உற்சாகமாக சிரிக்க.

" போடா… கொஞ்ச நேரத்துல என்னை பயமுறுத்தி விட்டுட்ட… வேற யாரையோ மருமகளா கூட்டிட்டு வந்துடுவியோன்னு பயந்துட்டேன். கொஞ்ச நேரத்துல பதற வச்சுட்ட.நானே உங்க கல்யாண பேச்சை ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். அதுக்குள்ள நீயே கேட்டுட்ட. ரொம்ப சந்தோஷம் டா தம்பி. நான் அப்பா கிட்ட சொல்றேன். லீவு கிடைச்சா ஒரு முறை ரெண்டு பேரும் வந்துட்டு போங்க. எங்க மேகி பாப்பா. அவ கிட்ட குடு பேசலாம்." என்று ஆர்ப்பாட்டமாக தனம் கூற.

" மா… உங்க மருமக வெட்கப்பட்டுட்டு இருக்கா. எதுவாக இருந்தாலும் நேர்ல பேசிக்கோங்க." என்று ஃபோனை வைத்த ரிஷிவர்மன், வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மேனகாவிடம்," ஃபோன்ல பேசுனதெல்லாம் கேட்டுட்டு தானே இருந்த? உன் அத்தையோட சந்தோஷத்தை குழி தோண்டி புதைக்காத… கொஞ்சமாவது நன்றி விசுவாசமா இரு. நாளைக்கு கிளம்பணும். ரெடியா இரு." என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

தனத்தின் உற்சாகமான குரல், இவள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதற்காகத் தானே ஸ்பீக்கரில் போட்டு பேசினான். அவன் நினைத்தது போலவே மேனகா குழம்பி நின்றாள்.

 
Top