• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
,இன்னிசை - 19

மேனகா தான் எடுத்த முடிவை நினைத்து சற்றும் குழம்பவில்லை. இனி தனது வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எண்ணியவள், தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தனக்குள் யோசித்துக் கொண்டே அந்த பஸ் பிரயாணத்தை கடந்தாள்.

' ஏதோ ஒரு தப்பு அத்தான் கிட்ட இருக்கு. கண்டுப்பிடிக்கிறேன்‌. நான் அந்த காட்டுல இஷ்டப்படி சுத்துறது அவருக்கு பிடிக்கலை. அதுக்கு என்னென்னவோ காரணம் சொல்லி என்னை முட்டாளாக்கியிருக்கார்.' என்று எண்ணிக் கொண்டே ஒரு வழியாக கூடலூருக்கு வந்திறங்கினாள். நேராக பொன்னம்மாளை பார்க்கச் சென்றாள்.

உள்ளுக்குள் ஒரு தயக்கம் இருந்தது. 'லட்சுமியின் இறப்புக்கு தான் தான் காரணம் என்று தன்னை தவிர்த்து விடுவார்களோ.' என்று குழம்பிக் கொண்டே அவ்விடத்திற்கு சென்றாள்.

பொன்னம்பாளும், குழந்தைகளும் எங்கிருக்கிறார்கள் என்று விசாரித்ததற்கு கிடைத்த பதிலென்னவோ லட்சுமியின் உயிர் பிரிந்த இடம். தடுமாறிய கால்களை சமாளித்து அங்கு சென்றாள். அவள் கண் முன்னே லட்சுமி படுகாயத்துடன் உயிரை கண்ணில் தேக்கி வைத்து இவளைப் பார்த்தக் காட்சியே வந்து போனது. அந்த இடத்திற்கு சென்றதும் பழைய நினைவுகளின் தாக்கம், ரிஷிவர்மனின் மறுபக்கம் தெரிந்ததால் ஏற்பட்ட மன உலைச்சல், அதைத் தெரிந்து கொண்டதிலிருந்து சாப்பிடாமல் இருந்தது, என எல்லாம் சேர்ந்து அவளை நிலைத்தடுமாற செய்ய மயங்கி விழுந்தாள்.

இவள் கீழே விழுந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்த பொன்னம்மாளும், முருகனும் பதறி அவளருகே வந்தனர்.

" மோகினி…" என்ற பொன்னம்மாள் தனது சுருக்கம் விழுந்த கை விரல்களால் அவளது முகத்தை வாஞ்சையாக வருடினார்.

அவளோ கண் விழிக்கவில்லை. பதறிய அந்த முதியவரோ," முருகா… தண்ணிக் கொண்டு வா." என்று தனது பேரனை விரட்டினார்.

அடுத்த நொடியே அங்கிருந்து ஓடிய முருகனோ, அருகே இருந்த குட்டையிலிருந்து இலையில் தண்ணீரை எடுத்து வந்தான்.

அதை எடுத்து அவள் முகத்தை துடைத்த பொன்னாம்மாளோ, மேனகா கண் விழிப்பதற்காகவே காத்திருந்தார். அவர்களை சோதிக்காமல் விரைவிலே கண் விழித்தவளோ, " கோல்டு… என் மேல் கோபமில்லை தானே." என்று அழு குரலில் வினவினாள்.

" நான் ஏன் தாயி உன் மேல விசனப்படப் போறேன்."

" லட்சு கா…" என்று ஆரம்பித்தவளோ, மீண்டும் அழ.

"விடு தாயி.எல்லாம் எங்களோட போதாத காலம்." என்றவரின் சிந்தனையில், தங்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்திய அதிகாரிகளின் மேல் தான் வெறுப்பு ஏற்ப்பட்டது.

" இல்லை கோல்டு. உங்களோட இந்த நிலைமைக்கு எங்க அத்தானும் ஒரு காரணம். அவர் இப்படி பட்ட கேவலத்தை செய்வாருன்னு நினைச்சு கூட பார்க்கலை. காசுக்காக நியாய, அநியாயம் பார்க்காமல் இருந்திருக்காரு. நான் உண்மையிலே புலி இருக்கிறதை அவர் நம்பவில்லை என்று தான் ஆதாரத்தோடு சொல்லுவோம்னு நினைச்சு இங்கே வந்தேன். ஆனா என்னென்னவோ நடந்துடுச்சு. அவர் இப்படி கடமையை ஒழுங்கா செய்யாமல் இருப்பார்னு நினைச்சே பார்க்கலை. இன்னும் அவர் என்னென்ன தப்பு செய்கிறார்னு எனக்கு முழுசா தெரியலை. ஆனால் இந்த காட்டுல ஏதோ அநியாயம் நடக்குது. நான் இங்கே இருக்க கூடாதுன்னு அவர் என்னை தடுக்கப் பார்க்குறாரு. ஆனால் நான் உண்மையை கண்டுப்பிடிக்காமல் விட மாட்டேன். " என்றவளை வாஞ்சையாக பார்த்தார் பொன்னம்மாள்.

" நானே உன்கிட்ட இத பத்தி பேசணும்னு நெனச்சேன் தாயி. ஆனா நீ உன் அத்தான உயர்வா நினைச்சுட்டு இருந்த. நான் சொன்னா நம்புவியோ மாட்டியோனு தயக்கமா இருந்தது. என்னைக்கா இருந்தாலும் உண்மை ஒரு நாள் உனக்கு புரியும்னு நெனச்சேன். ஆனா அதுக்கு வெலையா என் மருமக உசுரு போகும்னு நினைக்கல."

" நான் அன்னைக்கு இங்க வந்திருக்கவே கூடாது கோல்டு. என்ன காப்பாத்துறேன்னு தானே லட்சுக்கா வந்து..." என்றவள் தொடர்ந்து கூறாமல் அழ.

"கூறுகெட்டத்தனமா பேசாதே தாயி. நீ வந்ததால எங்க வீட்டு இளங்குருத்துகளை காப்பாத்திருக்க. இல்லன்னா அந்த பச்சை மண்ணு ரெண்டும் புலி வாயில போயிருக்கும். என்னோட கோவமெல்லாம் எங்களோட கோரிக்கை பெருசுப்படுத்தாத அதிகாராங்க மேல தான். கம்ப்ளைன்ட் பண்ணோம். அதை ஒரு விஷயமாவே எடுத்துக்கலையே. எங்களை இந்த இடத்தில் இருந்து கிளப்பணும்ங்றதுல மட்டும் தான் குறியா இருக்காங்க. நாங்க இங்கனேயே இருந்தா, அவங்க பண்ற காவாலித்தனத்துக்கு ஆபத்துன்னு தானே எங்க உசுர வாங்குனாங்க. எங்க வயிறெல்லாம் பத்திக்கிட்டு எரியுது. அவனுங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டாங்க." என்று அந்த முதியப்பெண்மணி சாபமிட.

அதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மேனகாவோ, ' தப்பு செஞ்சா தண்டனை உண்டு. உங்களை நான் சும்மா விட மாட்டேன் அத்தான். உங்க மேல கண்டிப்பா கம்ப்ளைண்ட் குடுப்பேன்.' என்று எண்ணியவள், " கோல்டு… எனக்கு இன்னும் கொஞ்சம் விவரம் வேணும். இந்த காட்டுல என்னென்ன அநியாயம் நடக்குது? எதுக்காக அவங்க உங்களை துரத்தணும்னு நினைக்கிறாங்க. சொல்லுங்க." என்றாள்.

" இந்த காட்டு உள்ளாற யாரும் போகக்கூடாது. ஆனால் இங்கே உள்ள அதிகாரிங்க காசுக்கு ஆசைப்பட்டு எல்லோரையும் அனுப்புறாங்க. அதுவும் கவர்மெண்ட் வண்டியிலே கூட்டிட்டு வர்றாங்க. சனி, ஞாயிறு ஆனா போதும், நாலஞ்சு பசங்க வந்து கூத்தடிச்சிட்டு போறாங்க. அது மட்டும் இல்லாம விலங்குகளை வேட்டையாடிட்டு இருக்காங்க. தேவையில்லாமல் மரத்தை வெட்டுறாங்க. அத பாத்துட்டு நாங்க போயி புகார் கொடுக்க போனா, யாரும் இங்கே வர்றதில்ல. நீங்களே விறகுக்காக மரத்தை வெட்டிட்டு தப்பிக்க பார்க்குறீகங்களான்னு அப்படியே எங்க மேலயே திருப்பி விட்டுட்டாங்க. நாங்க இங்க இருந்தா என்னைக்காவது அவங்க மாட்டிப்பாங்கன்னு எங்களை கிளப்பி விடணும்னு பார்க்கிறாங்க. முதல்ல ரெண்டு பேரு வந்தாங்க. இங்கே இருந்தால் விலங்குகளால் ஆபத்து வரும். கிளம்புங்கன்னு சொன்னாங்க. நாங்க இங்க இருந்து கிளம்ப ஒத்துக்கலை. அப்புறம் இன்னொருத்தர் வந்தாரு. அதுக்கும் நாங்க மசியலை. அதுக்கப்புறம் நீயும், உங்க அத்தானும் வந்தீங்க. நீ லட்சுமியோட காட்டை சுத்திப் பாக்கப் போனப்ப, அந்தப்பையனும் எங்களுக்கு நல்லது சொல்றாப்ல அங்க இருந்து கிளம்ப சொன்னார். நாங்க கிளம்ப மாட்டோம்னு சொன்னதும் அவரோட மூஞ்சியும் மாறிடுச்சு. அப்ப தான் அவரும் காவாலிபயன்னு கண்டுபிடித்தோம். ஆனா புலி நடமாட்டம் இருக்குன்னு நாங்க எத்தனை முறை சொன்னோம். இதை சாக்கா வச்சுக்கிட்டு எங்கள வெளியேத்தணும்னு கண்டும் காணாமலும் இருந்தாங்க." என்ற பொன்னம்மாளின் கண்கள் கலங்க.

" கோல்ட் நீங்க அழாதீங்க. நான் லட்சுக்கா உயிர் போக காரணமா இருந்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காமல் விட மாட்டேன். ஆனால் அதுக்கு சட்டத்துல பெருசா தண்டனை கிடைக்காது.ஆனால் காட்டில் உள்ள மரத்தை வெட்டி, இல்லீகல் ஆக்டிவிட்டிஸ் பண்றவங்களுக்கு கண்டிப்பா தண்டனை உண்டு. தப்பு செஞ்சவங்களுக்கு கட்டாயம் தண்டனை வாங்கிக் கொடுப்பேன்."

" நீ ஒரு ஆளா என்ன தாயி பண்ண முடியும்."

" முதல்ல என் அத்தான் மேல கேஸ் கொடுக்கப் போறேன் கோல்டு.இதை சும்மா விட மாட்டேன் மேல் அதிகாரியோட கவனத்திற்கு எடுத்துட்டு போவேன் "

"புரியாம பேசாத தாயி. எல்லாம் கூட்டு களவாணிங்க."

" ஓ…"என்ற மேனகாவிற்கு, அன்று ஊருக்கு செல்லும் போது ஃப்ரெண்ட் என்று வந்து நின்ற கார்த்திக்கும், ரிஷிவர்மனும் பழகிய விதம், பொன்னம்மாள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி என்று உணர்த்தியது.

சிறிது நேரம் யோசனையாக இருந்த மேனகா, " யார் கிட்ட எப்படி கேஸ் கொடுக்கணும்னு எனக்குத் தெரியும். எனக்குத் தெரிஞ்ச நம்பிக்கையான கலெக்டர் ஒருத்தர் இருக்கார். அவர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்றேன்.முதல்ல இங்க வர்றவங்களைப் பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டு, நான் கேஸ் ஃபைல் பண்றேன். நீங்க எதற்கும் கவலைப்படாதீங்க கோல்டு. அப்புறம் லட்சுக்கா ஆசையை நான் நிறைவேத்துவேன். புள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்க தினமும் வர்றேன்."

" நீ இங்கன வராதே."

" கோல்டு!" என்ற மேனகா அதிர்ச்சியாக பொன்னம்மாளைப் பார்க்க.

" நீ இங்க வந்தா லட்சுமியோட ஞாபகத்துல மயங்கி விழுற.நீ கொஞ்ச நாளைக்கு இங்கன வர வேணாம். பிள்ளைங்களை அங்க வர சொல்றேன். நானும் நேரம் கிடைக்கும் போது வர்றேன் தாயி."

" சரி கோல்டு."என்றவளின் முகமும் கொஞ்சம் மலர்ந்தது

மேனகா காலதாமதம் செய்யாமல் பொன்னம்மாள் கூறிய இடத்தை ஆய்வு செய்தவள், வேதனையடைந்தாள். பல மரங்கள் சிதைந்திருந்தது. அதை ஃபோட்டோ எடுத்தவள், மாவட்ட கலெக்டரின் தனிப்பட்ட எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு, ரிஷிவர்மன் மற்றும் கார்த்திக் மேல் ஆக்ஷன் எடுக்குமாறு மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

உள்ளுக்குள் ஒரு உதறல் எடுத்தது. " சார்… மெசேஜ்ஜை பார்ப்பாரா? ஏதாவது ஹெல்ப் செய்வாரா?" என்று குழப்பத்துடன் இருக்க.

அவளது ஃபோன் இசைத்தது.

பரபரப்புடன் எடுத்துப் பார்க்க.

கலெக்டர் அழைத்திருந்தார்.

" ஹேய்… நீ அந்த அத்தான்கோண்டு. தானே." என்று அந்த இளம் கலெக்டர் வினவ.

" ஆமாம் சார். என் நம்பர் எப்படித் தெரியும்." என்றவளது குரல் தடுமாற்றத்துடன் ஒலித்தது.

" என் கார்டு உன் கிட்ட கொடுத்தேனே. அப்பவே உங்க காலேஜ்ல இருந்து உன் நம்பர் வாங்கிட்டேன். பட் இன்னைக்கு தான் மேடம் என்னை காண்டாக்ட் பண்ணியிருக்க. சரி அதை விடு. நீ அனுப்பியிருந்த போட்டோஸ்ஸெல்லாம் பார்த்தேன். ஏற்கனவே அங்க வச்ச கேமராவுல ரெகார்ட்ஸெல்லாம் டெலிட் ஆகி வருதுன்னு தகவல் கிடைச்சிருக்கு. ஏதோ அங்க தப்பு நடக்குதுன்னு எங்களுக்கு சந்தேகம் தான். நாங்களே ஆக்ஷன் எடுக்கணும்னு இருந்தோம் சரி சொல்லு. யார் அந்த ரிஸ்டிக்ஷன் ஏரியாவுக்கு வர்றாங்க. அவங்களைப் பத்தின தகவல் எதுவும் தெரியுமா? இன்னும் கொஞ்சம் டீடெயில்ஸ் கிடைச்சா நல்லா இருக்கும். உங்க அத்தானும் இங்கே தானே வொர்க் பண்றாரு. அவர் கிட்ட பேசணும். அவரோட நம்பரை அனுப்பு." என.

" அது வந்து… நான் கம்ப்ளைண்ட் கொடுத்ததே எங்க அத்தான் மேல தான் சார்."

" ஹே… ரியலி… நீ சொல்றது உண்மையா? " என்ற கலெக்டரால் மேனகா கூறியதை நம்பவே இயலவில்லை.

" யெஸ் சார். அப்புறம் நீங்க கேட்ட டீடெயில்ஸும், அவங்க அடுத்த முறை இங்கே வரும் போது கலெக்ட் பண்ணி அனுப்புறேன். இப்போ ஃபோனை வைக்குறேன் சார்." என்ற மேனகாவோ, கலெக்டரை சந்தித்த நிகழ்வை மனதில் மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்தாள்.

' துள்ளித் திரியும் கல்லுரி பருவம்…
ஒரு விழாவிற்கு தலைமைத் தாங்க வந்த கலெக்டரைப் பார்த்து அந்த கல்லூரியில் உள்ள பெண்கள் எல்லாம் ஜொள்ளு வடிக்க. இவளோ கண்டுக்கொள்ளவில்லை. அது அந்த கலெக்டரின் மனதில் அவளின் மேல் மரியாதையை உண்டு பண்ணியது. எல்லோரும் அவரிடம் ஏதாவது கேள்வி பதில் கேட்டுக் கொண்டிருக்க. மேனகாவோ அமைதியாக இருந்தாள். எல்லோருக்கும் இயல்பாக ஏற்படும் அந்த கியூரியாசிட்டியால் அந்த கலெக்டரே அவளிடம் பேச்சுக் கொடுத்தார்.

" ஹலோ வொயிட் சூடி… நீங்க ஏன் சைலண்ட்டா இருக்கீங்க? எல்லோரும் எவ்வளவு டவுட்ஸ் கேட்குறாங்க? உங்களுக்கு எந்த கேள்வியும் இல்லையா? உங்க ப்யூச்சர் கோல் என்ன?"

" நான் எங்க அத்தான் மாதிரி ஃபாரெஸ்ட்ல வொர்க் பண்ண போறேன் சார்."

" வாவ் சூப்பர். நல்ல ஆம்பிஷன். நீங்க ஏன் இந்த துறையை தேர்ந்தெடுத்தீங்க?"

" அதான் சொன்னேனே. எங்க அத்தானுக்காக வொர்க் பண்ண போறேன்."

" இங்கே பாருங்க. இந்த துறை ரொம்ப உன்னதமானது. நீங்க இந்த காட்டை நல்லா பார்த்துக்கிட்டா, நாட்டையே நல்லா பார்த்துக்கிட்ட மாதிரி. நீங்க தேர்ந்தெடுத்த துறை நல்லாயிருக்கு. ஆனால் காரணம் மொக்கையா இருக்கு."

" சார்… எங்க அத்தான் எது செய்தாலும் கரெக்டா தான் இருக்கும்." என்று முறுக்கிக் கொண்டாள் மேனகா‌.

" ஓகே ஓகே அத்தான் கோண்டு… உங்களுக்கு எப்போ என்ன உதவி வேணும்னாலும் கேளுங்க. இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு." என்று கொடுத்திருந்தார். அந்த நம்பரை ஃபோனில் பதிவு செய்து வைத்திருந்தாள்.' அவளுக்கு கலெக்டர் ஞாபகம் வரவும், அவள் வாட்ஸ்அப்பில் கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

கலெக்டரும் பழைய நினைவில் இருந்தவர், 'பரவாயில்லை… இந்த சின்னப்பொண்ணு… தன்னுடைய ஆசை, காதல்னு பார்க்காமல் நாட்டுக்காக பார்க்க ஆரம்பிச்சுட்டா. குட் கேர்ள். நல்ல லைஃப் அவளுக்கு அமைய கடவுள் அருள் புரியட்டும்.' என்று மனதிற்குள் அவசர வேண்டுதல் வைத்தார்.

**************

மேனகாவும் தலையை உலுக்கிக் கொண்டு பழைய நினைவுகளை புறந்தள்ளியவள், ' அவனுங்க எப்ப வர்றது, நாம எப்போ ஆதாரத்தை கலெக்ட் பண்றது.' என்று அடுத்து என்ன செய்வது என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள்.


அவளது நல்ல நேரமோ, இல்லை ரிஷிவர்மனது கெட்ட நேரமோ அந்த கேங் அன்றே புறப்பட்டு வனத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.


 
Top