• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317

இன்னிசை - 22

" மேகி… இந்த டப்பால இட்லிப்பொடி இருக்கு. இதுல புளியோதரை போடி, பருப்பு பொடி, எள்ளு பொடி, கருவேப்பிலைபொடி எல்லாம் வரிசையா வச்சுருக்கிறேன். சாதம் மட்டும் வடிச்சி மிக்ஸ் பண்ணி சாப்பிடு. சமைக்கிறேன்னு பொருளை எதுவும் வேஸ்ட் பண்ணாதே…" என்றார் தனம்.

" அத்தை… இப்பல்லாம் நான் நல்லா சமைக்கிறேன் தெரியுமா?" என்ற மேனகாவின் முகத்தில் காலையிலிருந்த வருத்தம் இல்லை.. மதிய உணவிற்கு பிறகு ரிஷிவர்மனின் பேச்சை கவனமாக தவிர்த்தார் தனம். மேனகாவும் தனது அத்தைக்காக ரிஷிவர்மனின் நினைவுகளை முயன்று ஒதுக்கினாள்.

" காலையில் செஞ்சு வச்சுருந்த கிச்சடியை சாப்பிட்டு பார்த்துட்டு தான் சொல்றேன்."

" அது வந்து அத்தை… கொஞ்சம் தண்ணி கூட போயிடுச்சு. அவ்வளவு தான்… மத்தப்படி டேஸ்ட்லாம் நல்லா தான் இருந்தது."

" ஓஹோ. அப்போ ஏன் சாப்பிடாம அப்படியே வச்சிருக்க?"என்று கிண்டலாக பார்த்தார் தனம்.

" அது வந்து அத்தை. நானே சமைச்சதாலே என்னால சாப்பிட முடியலத்தை." என்ற மேனகா, தனத்தின் கிண்டல் பார்வையில் ரோஷமுற்றவள், "மாமா நீங்க சாப்பிட்டு பார்த்தீங்களா? நல்லா தானே இருந்தது. அத்தைட்ட சொல்லுங்க" என்று தனது மாமாவிடம் போய் நின்றாள்.

அவரும், " நல்லா தான்டா இருந்தது. என்ன கொஞ்சம் வெந்துடுச்சு. அவ்வளவு தான். அதைப்போய் குறைன்னு சொல்ல வந்துட்டா.
உங்க அத்தைக்கு பெரிய சமையல்ராணின்னு நினைப்பு." என்றார்.

" ம்கூம்‌. சமைக்க ஆரம்பிச்சு எவ்வளவு நாளாகுது. இன்னும் ரவா கிச்சடிக் கூட செய்யத் தெரியலை. அவளை ஒன்னும் குத்தம் சொல்லக் கூடாது. உடனே சப்போஃர்ட்டுக்கு வந்துடுங்க. பாவம் அவளை கல்யாணம் பண்ணிக்க போற அந்த தம்பி." என்று புலம்ப.

" சரி விடு தனம். எல்லாம் கொஞ்ச நாள் தான்." என்று தனது மனைவியை சமாதானம் படுத்தினார் ராமன்.

" ஏன் அப்புறம் உங்க மருமக நல்லா சமைக்க கத்துக்கிடுவாளோ?"

" அப்புறம் தான் மாப்பிள்ளை நம்ம மேகி சமையலுக்கு பழகிடுவாரே." என்று சொல்லி முடிக்க.

" அதானே பாத்தேன்." என்ற தனம் சிரிப்பை அடக்க முயன்று, அது முடியாமல் கண்ணில் நீர் வர சிரித்தார்.

" மாமா…" என்றவள், அவரை முறைக்க முயன்றாள்.

அவரோ தனத்தை கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

'மாமாவின் எண்ணம் புரிந்தது. அத்தையை சிரிக்க வைப்பதற்காகத் தான் தன்னை கேலி செய்கிறார்.' என்று புரிந்துக் கொண்டவள், " அத்தை இந்த நாளை டையிரில குறிச்சு வச்சுக்கோங்க."

" என்ன இனிமேல் சமைச்சு ரிஸ்க் எடுக்க மாட்டேன்னு சொல்ல போறியா?" என்று கிண்டலாக வினவினார் தனம்.

"அப்படியெல்லாம் இல்லைத்தை. நான் கல்யாணம் ஆகி என் புருஷனுக்கு விதவிதமா சமைச்சு போட்டு, சமையல்ல பெரிய ஆளா வரல என் பேரு…" என்று முடிப்பதற்குள், " சபதம்லாம் போடாதே. பாவம் மாப்பிள்ளை. இதுல வந்து அவரோட தம்பி வேற, இங்கே நல்ல சாப்பாடே கிடைக்காது ஆன்ட்டி. அண்ணி வரவும் அவங்க கைவண்ணத்தை ஒரு பிடி பிடிக்கணும்னு சொல்லியிருந்தாரு." என்று வரப்போகிற புது உறவுகளுக்காக கவலைப்பட்டார் தனம்.

'இந்த காட்டுல மாப்பிள்ளையோட தம்பிக்கு என்ன வேலை? ஒரு வேளை அண்ணனைப் பார்க்க வருவாரோ. இருக்கலாம். மாப்பிள்ளையே யாருன்னு தெரியாது. இதுல மாப்பிள்ளையோட தம்பியைப் பத்தி நமக்கென்ன. எல்லாம் கல்யாணம்னு முடிவாகட்டும் அப்புறம் பார்த்துக்கலாம். எதுவா இருந்தாலும் மாப்பிள்ளைக் கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடி தெளிவா பேசிடணும்.' மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்தாள்.

மருமகள் அமைதியாக இருக்கவும்,"ஏன்டா உன் அத்தை சொன்னதை நினைச்சு கோவமா இருக்கீயா?" என்று ராமன் வினவ.

" அதெல்லாம் இல்ல மாமா. பாவம். யாரு பெத்த பிள்ளைகளோ! என்கிட்ட வந்து மாட்டபோவதை நினைச்சேன்."என்றவள் சிரிக்க.

ராமனும், தனமும் சேர்ந்து சிரித்தனர்.

தன் மருமகள் திருமணத்திற்கு தயாராகிவிட்டதை உணர்ந்த தனத்திற்கு இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது.

"சரி மேனகா. நாங்க கிளம்புறோம்."

"அத்தை. நாளைக்கு போகலாம்ல. இந்த நைட் நேரத்துல ஏன் கிளம்புறீங்க."

" வேலை இருக்குடா. வீட்ட எல்லாம் சுத்தம் பண்ணனும். பொண்ணு பார்க்க வரும் போது வீடெல்லாம் நீட்டா இருக்க வேண்டாமா? இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு."

"அத்தை எல்லா வேலையும் இழுத்து போட்டுட்டு செய்யாதீங்க. வேலைக்கு ஆள் வைக்கிறேன்னு சொன்னா கேட்டால் தானே." என்று ஆதங்கமாக புலம்பினாள் மேனகா.

" மேகி… அவ எங்கடா எல்லா வேலையும் செய்யுற. பாதி வேலை நான் தானே செய்றேன்." என்ற ராமனைப் பார்த்து முறைத்தார் தனம்.

" எதுக்கு தனம் முறைக்குற. நான் உண்மையைத் தானே சொன்னேன்." என்று அவர் முணுமுணுக்க.

"ஆமா. நல்லா வேலை செஞ்சுங்கீங்க போங்க. உங்க கிட்ட ஒரு வேலை வாங்குறதுக்குள்ள என் உயிர் போய் உயிர் வந்துடும்." என்று தனம் சலித்துக் கொண்டாலும், தன் கணவரை நினைத்து சற்று பெருமைதான். அது அவரையும் மீறி அவரது கண்களில் தெரிந்தது.

இருவர் பேசுவதையும் கன்னத்தில் கைவைத்து ரசித்துக் கொண்டிருந்தாள் மேனகா.

" சரி. நேரமாயிடுச்சு கிளம்புவோமா?" என்று ராமன் பேச்சை மாற்ற.

" ரொம்ப உங்களை வருத்திக்காதீங்கத்தை. சாப்பாடு வேணும்னா ஹோட்டல்ல வாங்கிக்கலாம்."

" ஈவினிங் தானே வர்றாங்க. லைட்டா டிஃபன் செய்தா போதும். நான் பார்த்துக்கிறேன்.நீ முதல் நாளே வந்துடு மேகி."

" அத்தை அதுக்கு நான் இன்னைக்கே உங்களுடைய கிளம்பி இருக்க மாட்டேனா. எனக்கு லீவ் அதிகம் கிடைக்காது. நான் புதன்கிழமை காலையிலே கிளம்பி வர்றேன். நீங்க சும்மா சும்மா ஃபோன் பண்ண வேண்டாம். இங்கே டவர் கிடைக்காது தெரியும் தானே. பஸ் ஏறிட்டு ஃபோன் பண்றேன்."

" சரி டா. நேரத்தோட கிளம்பி வா." என்ற தனமும், ராமனும் கிளம்பி சென்றனர்.
**********************

தனமும், ராமனும் வந்து சென்றது மேனகாவிற்கு கொஞ்சம் மனதிற்கு இதத்தை தர, மறுநாள் உற்சாகமாகவே வேலைக்குச் சென்றாள்.

அவளது உற்சாகத்தைப் பார்த்த ஆதிரன் அவளை ஆராய்ச்சியாக பார்த்தான்.

தன்னையே தொடர்ந்த அவனது பார்வையில் திரும்பிப் பார்த்த மேனகா, புருவத்தை உயர்த்த…

" யூ லுக் கார்ஜியஸ் அ… " என்றவன் தொண்டையை செறுமி, " மேனகா." என்று முடித்தான்.

"...."

மேனகாவோ பதிலெதும் கூறாமல் முறைத்துப் பார்த்தாள்.

" இல்லை மேனகா. இன்னைக்கு உங்க கிட்ட ஏதோ ஒரு மாற்றம் தெரியுது. என்ன மாப்பிள்ளை எதுவும் பார்த்துட்டாங்களா? உங்க முக மலர்ச்சியை பார்த்தா அப்படி தான் தோணுது. கூடிய சீக்கிரம் கல்யாண சாப்பாட்டை போடுவீங்கன்னு நினைக்கிறேன்." என்று கேலி செய்தான்.

"சார். கோடை காலம் வந்துடுச்சே. காட்டு தீ உருவாகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கணும் தானே சார்.எப்போ ஆரம்பிக்கணும்." என்று பேச்சை மாற்றினாள்.

" ஓகே மேனகா. சும்மா தான் கிண்டல் பண்ணேன். அதுக்காகவெல்லாம் பேச்சை மாற்ற வேண்டாம்." என்ற ஆதிரன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

இந்த முறை அவனது கூற்றை ஒப்புக் கொள்வது போல் அமைதியாக நின்றாள்.

" கூடிய சீக்கிரம் மீட்டிங் அரேஞ்ச் பண்ணுவாங்க. அப்போ அதை பத்தி டிஸ்கஸ் பண்ணுவாங்க. சரி நீங்க போய் உங்க வொர்க்கை பாருங்க மேனகா." என்றவன், 'அண்ணா. உன்னை நினைச்சா கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு. அண்ணி ரொம்ப அழுத்தம்.' என்று எண்ணிக் கொண்டிருக்க. அவனது எண்ணத்தை தடை செய்வது போல ஜீவாத்மன் வந்தான்.

" ஹலோ மிஸ்டர் ஆதிரன்." என்று அவன் முன்னே சொடக்கிட்டான்.

"சொல்லுங்க சார். என்ன விஷயம் சார். காரணமில்லாமல் வர மாட்டீங்களே!" என்று அவன் மிஸ்டர் ஆதிரன் என்று அழைத்த கோபத்தில், வார்த்தைக்கு வார்த்தை சார் என்று அழைத்தான். பொதுவாக யாருமில்லாத போது உரிமையாக பேசும் ஜீவாத்மன், இன்று மரியாதையாக அழைக்க கடுப்புடன் இருந்தான் ஆதிரன்.


" முக்கியமான விஷயம் தான் மிஸ்டர் ஆதிரன்.உங்களுக்கு நாளையிலிருந்து இரண்டு நாள் லீவு." என்று கூறியவன் புன்னகைத்தான்.

மெதுவாக அவனது புறம் சாய்ந்த ஆதிரன், " டேய் அண்ணா உனக்குத் தானே பொண்ணு பார்க்க வர்றாங்க. ஆனால் என்னை போக சொல்ற."

"ப்ச்… நாளைக்கு முக்கியமான மீட்டிங். கோடை காலம் தொடங்குதில்ல‌.அதுக்கான முன்னேற்பாடுகள் பத்தி பேசணும். எப்ப வேணாலும் காடுகள்ல தீப்பிடிக்கலாம். அதை தடுக்கறதுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி டிஸ்கஸ் பண்ணனும். அவசியம் நான் இருக்கணும். அம்மாவும், அப்பாவும் நாளைக்கே ஊட்டிக்கு வந்துடுவாங்க‌. நீ அவங்களுக்கு ஹெல்ப் பண்ணு."

" ஓஹோ. இதை சொல்றதுக்கு தான் இவ்வளவு தூரம் வந்தியா? இதை நீ வீட்லயே சொல்லியிருக்கலாமே. நான் நைட் அங்கே தானே வருவேன்."என்று சந்தேகத்துடன் ஜீவாத்மனை பார்க்க.

" அது வந்து உன் கிட்ட சொல்லிட்டு அப்படியே மேனகாவை பார்க்கலாம் தான் வந்தேன்." என்று தலைமுடியை கோதி கொண்டு கூறினான் ஜீவாத்மன்.

" ஓஹோ! பொண்ணு பார்க்கறதுக்கு முன்னாடி பொண்ணு கிட்ட பேசுற அளவுக்கு வந்தாச்சா? பட் அண்ணி ரொம்ப அழுத்தம். அவங்க பொண்ணு பார்க்குறதைப் பத்தி மூச்சே விடலை. நானும் கிண்டல் பண்ற மாதிரி போட்டு வாங்கலாம்னு பார்த்தால் அவங்க பிடியே கொடுக்கலை. மாப்பிள்ளை இங்கே தான் வேலைப் பார்க்குறாங்கன்னு சொல்லியிருக்காங்க. அப்புறம் ஃபோட்டோலாம் அனுப்புனாங்க." என்றான் ஆதிரன்.

" டேய் மாப்பிள்ளை நான்தான்னு தெரிஞ்சாலும், என் தம்பி நீ தான்றது அவளுக்குத் தெரியாது தானே."

" டேய் அண்ணா உன் ஃபோட்டோவோட, நம்ம ஃபேமிலி போட்டோவும் சேர்ந்து தான் அனுப்புனாங்க."

"ஓ அப்போ ஃபோட்டோவையெல்லாம் நிச்சயம் மேனகா பார்த்திருக்க மாட்டா.அப்ப கட்டாயம் அவளை நான் பார்க்கணும். அவளுக்கு என்னை பிடிக்குமா? பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்கணும். அது வேற ஒரே டென்ஷனா இருக்குடா. என்னால ரெண்டு நாள்லாம் தாக்கு பிடிக்க முடியாது. நான் அவளை பார்த்து பேசுறேன்." என்று தவிப்பாக ஜீவாத்மன் கூற.

" அதெல்லாம் ஒன்னும் வேணாம். பொண்ணு பார்க்கும்போதே பாத்துக்கலாம். அன்னைக்கு அண்ணியோட முகத்தை பார்க்கணுமே!" என்று கற்பனை பண்ணி பார்த்த ஆதிரன் வாய் விட்டு நகைத்தான்.

அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான் ஜீவாத்மன்.

" ஹலோ! என்ன லுக்? எனக்கும், என் அண்ணிக்கும் நடுவுல நீ வராதே." என்றான் ஆதிரன்.

" என் கிட்ட எந்த பஞ்சாயத்துக்கும் நீ வராமல் இருந்தா சரி தான். அப்புறம் சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு ஊருக்கு கிளம்பு. லேட் பண்ணிடாதே. " என்றான் ஜீவாத்மன்.

" அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். அதை மாதிரி நீ புதன்கிழமை சீக்கிரமா வந்துடு. நான் வேற இங்கே இருக்க மாட்டேன். நீ பாட்டுக்கு வேலையிலே மூழ்கிடப்போறே. கடைசி நேரத்துல எதுவும் சொதப்பிடாதே. அப்புறம் அம்மா, அப்பா என்னதான் போட்டு படுத்துவாங்க. ஒழுங்கா வந்துடு." என்று அண்ணனுக்கு அட்வைஸ் செய்துக் கொண்டிருந்தான் ஆதிரன்.

" டேய் அடங்குடா. அதெல்லாம் நான் கரெக்ட் டைமுக்கு வந்துடுவேன்." என்றான் ஜீவாத்மன்.

ஜீவாத்மன் சரியான நேரத்திற்கு பொண்ணு பார்க்க சென்றான். ஆனால் பொண்ணு தான் அங்கு வரவில்லை.




 
Top