• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
இன்னிசை- 4


மேனகாவிடம் பேசி விட்டு ஃபோனை வைத்த ஆதிரனின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது.


அதே உற்சாகத்துடன் விசில் அடித்துக் கொண்டே ஹாலுக்கு வந்தான்.


அங்கு இருந்த அவனது அண்ணனோ ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே, "எப்பவோ தூக்கம் வருதுன்னு போன? இன்னும் தூங்காம யார்கிட்ட இப்படி சிரிச்சு பேசிட்டு இருக்க. அதுவும் நைட் நேரத்தில என்ன பேச்சு."


" என் கேர்ள் ஃப்ரெண்டுக் கிட்ட பேசிட்டு இருந்தேன். உன்னை யாரு ரூமுக்கு போகாமல் இங்கே இருக்க சொன்னது?" என்று அண்ணனை கேலியாக பார்த்து சிரித்தப்படியே வினவினான்.


"நீ சிரிச்சு கும்மாளம் போட்டது என் ரூம் வரைக்கும் கேட்டது. முக்கியமான வேலை பார்த்துட்டு இருந்தேன். அதை டிஸ்டர்ப் பண்ணதும் இல்லாமல் நக்கல் வேற பண்றியா? இரு அம்மாவை கூப்பிடுறேன். அவங்க கிட்ட பேசிக்கோ." என்றவன், " அம்மா… அம்மா…" என்று அழைத்தான்.


" டேய் அண்ணா… தூங்குறவங்களை எதுக்கு தொந்தரவு பண்ற?" என்று சற்று பயத்துடன் அவனை தடுக்கப் பார்த்தான் ஆதிரன்.


' பின்னே சும்மாவே அவர்கள் வீட்டில், அண்ணனை போல இரு… அவன் எப்படி புத்திசாலியாக இருக்கான் என்று எப்பொழுதும் கூறிக் கொண்டே இருப்பார்கள். இப்பொழுது இரவு நேரத்தில் ஒரு பெண்ணிடம் பேசுவது தெரிந்தால் அவ்வளவு தான்.' என்று எண்ணி பயந்தான்.


" தம்பி… அவங்க என்னைக்கு நேரத்தோடு தூங்கினாங்க. கிச்சன்ல ஏதாவது உருட்டிட்டு ‌ இருப்பாங்க. நீ அவங்கள பத்தி கவலைப்படாத." என்றவனோ மீண்டும் அம்மா என்று அழைக்க.


" டேய் அண்ணா… சும்மா இரு." என்று அவனது வாயை மூடப் பார்த்தான் ஆதிரன்.


அதற்குள், " எதுக்குடா… இப்படி ரெண்டு பேரும் கத்திட்டு இருக்கீங்க." என்று கடுப்புடன் அங்கு வந்தார் நிர்மலா.


" அது வந்து அண்ணன் தான் கூப்பிட்டான்." என்று பம்மிக் கொண்டே ஆதிரன் கூற.


" அம்மா… ஆதி…" என்று அவன் ஆரம்பிக்கும் போதே,


" டேய் என்ன இது சின்ன புள்ளையாட்டம்? இரண்டு பேரும் ஒருத்தனை, ஒருத்தன் கை காண்பிச்சுட்டு இருக்கீங்க. பொறுப்பான வேலையில் இருக்கிறவங்க மாதிரியா நடந்துட்டு இருக்கீங்க. அப்பா இப்ப தான் தூங்க போயிருக்காங்க. இப்படி சத்தம் போட்டால் எப்படி மனுஷர் தூங்குவார்."


"ஹா… ஹா…" என்று ஆதிரன் அடக்கமாட்டாமல் நகைக்க… அவனது அண்ணன் முகத்திலும் கேலி புன்னகை.


" டேய் ஆதி… இப்போ எதுக்குடா சிரிக்கிற? நீ சிரிக்கற சத்தத்தில பேய் கூட மிரண்டு ஓடிடும் போல." என்றார் நிர்மலா.


" மா… என் சிரிப்பு சத்தத்துக்கு மட்டுமல்ல, உங்க வீட்டுக்காரரோட குறட்டை சத்தத்துக்கும் கூட பேய் மிரண்டுரும். அப்புறம் லாஸ்ட் டைம் என்ன பார்க்க வரும் போது நடந்ததெல்லாம் மறந்திருச்சா? நீங்க வந்த காரை யானை வந்து மறிச்சது. அது கூட தெரியாம அப்பா நல்லா தூங்கிட்டு இருந்தது. அதெல்லாம் மறந்துடுச்சா? ஏதோ அண்ணன் கூட இருந்ததால தப்பிச்சீங்க. யானை வருது அமைதியா இருப்போம்னு லைட் எல்லாம் ஆப் பண்ணி அமைதியா இருந்து யானையை திசை திருப்பி அனுப்பி வச்சா, அப்ப பார்த்து இவரு குறட்டை விடுறாரு. நல்ல வேலையா அண்ணன் வாய மூடுனாரு. இல்லைன்னா அவ்வளவு தான்."


" இப்போ எதுக்குடா அந்த கதையெல்லாம்?"


" தூங்க ஆரம்பிச்சா, அப்பாவுக்கு உலகமே மறந்துடும். நாங்க பேசுற சத்தத்துல அவர் முழிக்க மாட்டார்.அதை தான் சொல்ல வரேன் யுவர் ஆனர்." என்று கேலி பண்ணியபடியே நிர்மலாவின் தோளில் கை போட்டான் ஆதிரன்.


" இந்த வாய்க்கு ஒன்றும் குறைச்சலில்லை. வக்கணையாக பேசு. மத்த எதையும் உருப்படியா செய்றது கிடையாது. இந்த வீடு என்ன வீடாட்டமா இருக்கு. தெரியாமல் உன் ரூமுக்கு போயிட்டேன். ஈரத் துண்டு அப்படியே பெட்ல கெடக்குது‌. கைலி ஒரு பக்கம் கிடக்கு. துவச்ச துணியெல்லாம் சுருட்டி நாற்காலியில போட்டு வச்சுருக்க. இதுல கிச்சனை வேற விட்டு வைக்கல. உன்னை யாரு அங்க போக சொன்னது? கிச்சனை பார்த்தாலே பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. நானும் வாரா,வாரம் வந்து சுத்தம் பண்ணி கொடுத்துட்டு தான போறேன். மறுபடி வந்துப் பார்த்தால், மறுபடி கலைச்சு வச்சுருக்க. உன்னை வச்சுக்கிட்டு என்ன தான் பண்றதுன்னு தெரியலை?" என்று நிர்மலா சடசடவென பொறிய.


அங்கு நின்றிருந்த ஆதிரனின் அண்ணன் நமட்டு சிரிப்பு சிரிக்க.


அவனை பார்த்து முறைத்த ஆதிரன், நிர்மலாவிடம் திரும்பி சமாதனப்படுத்த ஆரம்பித்தான்.


" மா… எல்லாம் கொஞ்ச நாள் தான். சீக்கிரமே உனக்கு மருமகள் வந்துருவா. அப்புறம் நீ ஜாலியா இருக்கலாம்." என்று அவனது அண்ணனை ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே கூற.


" ம்… வர்றவ உன்னை மட்டுமில்லாமல், எங்க அம்மாவையும் சேர்த்து கழுவி ஊத்துவா… என்ன புள்ள வளர்த்து வச்சிருக்கீங்கன்னு. அதுவுமில்லாமல் இந்த அத்துவான காட்டுல வந்து யாரு இருப்பா?"


"டேய் பெரியவனே நீ தான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குற. கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்குற அவனையும் ஏன் தடுக்க பாக்குற?"


" அதானே… நல்லா கேளு மம்மி." என்று தனது அண்ணனைப் பார்த்துக் கொண்டே கூறினான் ஆதிரன்.


" அவன் கிடக்குறான்… பொண்ணு யார்னு நீ சொல்லு பா… எந்த ஜில்லாவுல இருந்தாலும் சரி. நானும், அப்பாவும் போய் பேசுறோம்." என்று இவ்வளவு நேரம் இருந்த டென்ஷனை மறந்து உற்சாகத்துடன் வினவினார் நிர்மலா.


" அது வா மா… நீ எங்கேயும் போக வேண்டாம். இந்த வீட்டு மருமகள், இங்கே தான் இருக்கா."


" என்னடா சொல்ற ஆதி? பொண்ணோட அப்பா இங்க ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட்ல இருக்காங்களா?"


"பொண்ணோட அப்பா இல்லை, பொண்ணே இங்கே தான் வேலை பார்க்குது‌." என்று ஆதிரன் ஒவ்வொரு வார்த்தையாக உச்சரிக்க.


அவனது அண்ணனோ கோபமாக, அங்கிருந்து எழுந்து சென்று அவனது அறைக் கதவை வேகமாக மூடினான்.


" ஏன் டா பெரியவன் கோபமா போறான்?"


" அவன் கிடக்குறான் விடுமா"


" டேய் அவன் உன் அண்ணன் மரியாதையா பேசு."


" போ மா… உனக்கு வேற வேலையே கிடையாது. எப்ப பாரு என்னை திட்டிட்டே இரு."


" வேற வேலை இல்லாம தான் உன்கிட்ட வந்து பேசிட்டு இருக்கேன் பாரு. எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு. அதான் தூங்காம வேலைப் பாத்துட்டு இருக்கேன். பொண்ணு யாருன்னு முதல்ல சொல்லுடா."


" அவசரப்படாதீங்கம்மா… முதல்ல அந்த பொண்ணுக்கு பிடிக்கணும்."


" அடப்பாவி! அப்ப பொண்ணு கிட்ட சொல்லலையா? இல்லை… அந்த பொண்ணு வேணாம்னு சொல்லிடுச்சா. அப்படி அந்த பொண்ணு வேணாம்னு சொல்லிடுச்சுன்னா, ஒழுங்கு மரியாதையா அந்த பொண்ணை தொந்தரவு பண்ணாம ஒதுங்கிடு. நான் என்ன சொல்றேன்னு புரியுதா? திரும்ப, திரும்ப காதலை சொல்றேன்னு டார்ச்சர் பண்ணிட்டு இருக்காத? அப்படி எதாவது பண்ணேன்னு எனக்குத் தெரிஞ்சது நான் சும்மா இருக்க மாட்டேன்." என்று அவர் இப்பொழுது நாட்டில் நடக்கும் அவலங்களை பார்த்து படபடக்க.


" அம்மா கூல். நாங்க உங்க பசங்க. அப்படி எல்லாம் நடக்க மாட்டோம். சின்ன வயசுல இருந்து பொண்ணுங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்லித் தந்திருக்கிங்களே." என்று சமாதானப் படுத்தினான் ஆதிரன்.


" அப்புறம் ஏன் டா அப்படி சொன்ன?"


" அது… இன்னும் அந்த பொண்ணுக் கிட்ட சொல்லைன்னு தான் நினைக்கிறேன்."


" என்னடா உளற?"


" ஒன்னும் இல்லம்மா… கொஞ்சம் பொறுமையா தான் இரேன். உனக்கு வேலை செய்றதுக்காக உடனே எல்லாம் கூட்டிட்டு வர முடியாது." என்று சொல்ல.


"அடிங்க… சும்மா இருந்தவளை உசுப்பேத்தி விட்டுட்டு…" என்ற நிர்மலா அவனை துரத்த.


அவர் அடிக்க வருவதற்குள் தனது அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான் ஆதிரன்.


************************************

அறைக்குள் சென்ற ஜீவாத்மனோ, தம்பியை நினைத்து கவலையில் ஆழ்ந்தான். ஆம் ஆதிரன் ஜீவாத்மனின் தம்பி. அவர்கள் இருவரும் அண்ணன், தம்பி என்பது அங்கிருப்பவர்களுக்கு தெரியாது. ஜீவாத்மன் இப்போது தானே வந்து வேலையில் சேர்ந்து இருக்கிறான்.


ஆதிரன் நினைப்பது போல, அவன்

மேனகாவுடன் பேசுவதால் பொறாமை படவில்லை. அவனுக்கு ஒரு குழப்பம். அதைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று முகம் பளீரிட," நேரடியா களத்துல இறங்கிடுவோம். அப்போ தான் நம்ம சந்தேகம் தீர்ந்துடும்." என்று எண்ணினான்.


ஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் கடவுள் எதற்கு?

 
Top