• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ ..13

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம் ..13


ரங்கநாயகியோ தன் மகன் மகேந்திரன் சொன்ன வரனைப் பற்றி ராமசாமியிடம் பகிர்ந்தவர், ''இன்னும் இரண்டு நாளில் அவங்க சுகாசினியை பார்க்க வரேன் சொல்லிருக்காங்க'', என்று சொன்னவர், ''ஓரளவுக்கு வசதியான குடும்பம் தான் ,பையன் என் பேரனின் கம்பெனியிலே தான் வேலை பார்க்கிறான்.. ஒரே பையன்.. நம்ம சுகாசினியை அவங்க பொண்ணுப் போல நல்லா பார்த்துக்குவாங்க'', என்று சொல்ல,


அதைக் கேட்ட ராமசாமிக்குத் திருப்தியாக இருந்தது. ஆனாலும் கல்யாணம் ஆனால் பேத்தியை பிரியணும் என்று நினைக்கும்போது மனதிற்குள் சுருக்கென்று வலி ஒன்று உண்டாக, அதை மறைத்தவர், ''நீ சொன்னா சரியாக தான் இருக்கும் தாயீ, அதனால அவங்களை வரச் சொல்லு, மற்ற விசயங்களை நேரடியாக அவர்களிடமே பேசிக்கலாம்'', என்று சொல்லியவர், அப்போது தான் மில்லிருந்து வந்த சுகாசினிடம் விஷயத்தை சொல்ல அவளோ கோபத்துடன் எழுந்து விட்டாள.


''ஏன் தாத்து?, இவ்வளவு அவசரமாக இந்த முடிவை எடுக்கீறிங்க, யாருக்கோ பயந்து இந்த அவசர கல்யாண பேச்சு தேவை தானா.. அப்படி அவன் என்ன பண்ணருவான் இந்தப் பயம் பயப்பறீங்க .. நமக்கும் ஆட்கள் இருக்காங்க ,அவங்களை வச்சு நாம் பேசலாம் காளிப்பன் மாமாவிடம்'', என்று சொன்னவள் ''எனக்கு இந்தக் கல்யாணப் பேச்சு இப்ப வேண்டாம் தாத்து'', என்று சொல்லியவளின் கண்கள் கலங்கிக் கண்ணீர் வடிக்க,


என்றுமே அழுவாத பேத்தியின் அழுகை ராமசாமியை பாதித்தாலும், ''இங்கு பாரு தாயீ நா உசிரோட இருக்கும்போதே உனக்கு ஒரு நல்லது செய்து பார்க்கணும்னு ஆசைப் படுகிறேன்.. என் மகளுக்குச் செய்ய முடியாமல் போன அத்தனையும் என் பேத்திக்குச் செய்ய ஆசைடா.. அன்று நா வீம்பு பிடிச்சு உன் அம்மாவை இழந்தேன்.. இப்பவும் அப்படி இருக்க கூடாது எனக்குக் காலம் பாடம் கற்பிச்சிருச்சு'',..என்று தழுதழுத்தக் குரலில் சொல்லியவர்,


''வயசுப் பிள்ளையை எத்தனை நாள் நா காவல் காத்துக்கிட்டு இருக்க முடியும் சொல்லு, ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுனா நா உசிர விட்டுருவேன் தாயீ'', என்றவர் காளிப்பன் பேசியதை நினைத்துக் கண் கலங்கினார் ராமசாமி..


தாத்தாவின் கண்ணில் கண்ணீரைக் கண்டவளுக்கு, மனைவியை இழந்து மகள் மருமகனை இழந்து இப்பத் தனக்காக மட்டுமே வாழும் உயிரை மேலும் கஷ்டப்படுத்த விருப்பமில்லைதான் .. ஆனால் கல்யாணம் ஒன்று ஆனால் அவரை இங்கே அனாதைப் போல விட்டுட்டு தான் சென்று விட்டால் வயதான இவரை யார் பார்த்துக் கொள்ளுவார்கள் என்ற எண்ணம் மனத்தை அரிக்க, அவரின் அருகில் அமர்ந்து கண்ணீரைத் துடைத்தவள்,


''இங்கே பாரு தாத்து, நா கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்லல.. ஆனால் இங்கேயே பாருங்க மாப்பிள்ளையை…வேறு எங்கும் உங்களை தனியாக விட்டுட்டு நா போக மாட்டேன்'',.. என்று சொல்லியவளுக்குத் தெரியவில்லை யாரை யாரை நம்பி விட்டுட்டு யார் போகப் போகிறார்கள் என்று…


ரங்கநாயகி, அதுவரை இருவர் பேசுவதிலும் குறுக்கிடாமல் இருந்தவர், சுகாசினியை அதட்டி, ''என்ன சுகா, உன் தாத்தாவை நாங்க எல்லாம் பார்த்துக்க மாட்டோமா… ஒரு நல்ல காரியம் செய்யும்போது பேசும்போது கண்ணீர் விடக் கூடாது என்று தெரியாதா'', என்று சொல்லியவர், ''அவர்கள் வந்து முதலில் பார்க்கட்டும் அதன்பின் மற்றதை பேசி முடிவு பண்ணலாம்'', என்று சொல்லிவிட்டு,


ராமசாமியை பார்த்து ''அவ தான் சின்னபுள்ள, சில நேரங்களில் நடக்கும் எல்லாவற்றையும் அவளிடம் காரணம் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது .. அவள் முன் கண்ணீர் விட்டால் எப்படி? என்று ராமசாமியும் அதட்டி விட்டு , ''இங்கே பாரு சுகா, இன்னும் இரண்டு நாளில் அவங்க வராங்க, வந்தபின் அவர்களிடம் மற்ற விஷயங்களை பேசிக்கலாம்..


இப்ப முதல் முறையா பொண்ணு பார்க்க வரும்போது சந்தோஷமா இருக்கணும், கண்ணைத் துடைச்சிட்டு அந்த முகத்திற்கு எதாவது போட்டு அழகு படுத்து, இல்லை வர மாப்பிளை பயந்து ஓடிவிடப் போறாரு'',.. என்று கண்டிப்பும் கேலியும் கலந்த குரலில் ரங்கநாயகி சொல்ல,


அதைக் கேட்டு ராமசாமியின் முகம் தெளிந்தது. ஆனால் சுகாசினியின் முகம் தெளியவில்லை.. மனதிற்குள் திக்கென்று ஒரு அதிர்வு உண்டாகி ஏதோ செய்ய அதை என்னவென்று வெளியே சொல்லத் தெரியாமல் அமைதியாக எழுந்து சென்றுவிட்டாள்.


பேத்தியின் அமைதியைப் பார்த்து ''இது சரி வருமா ரங்கநாயகி, புள்ள முகமே வாடிப் போய்ருச்சு'', என்று சொல்ல,


''கல்யாணம் பேச்சு எடுத்தாலே இப்படி தான் பெண் புள்ளக மனசைப் போட்டுக் குழப்பிக்குவாங்க, போகிற இடம் எப்படி இருக்கமோ பயமும் கட்டிக்குப் போகிறவன் எப்படி இருப்பான் என்று எதிர்ப்பார்ப்பும் இருக்கத் தான் செய்யும்.. நா அவளிடம் பேசுகிறேன் .. நீங்க இப்ப உடம்பை கெடுத்துக்காமல் மனசை தைரியபடுத்தி, சந்தோஷமா மகிழ்ச்சியா ஓடியாடி வேலை செய்யணும்.. அதைப் பார்த்தாலே சுகாசினி சரியாகி விடுவா'',.. என்று சொல்லி விட்டு சுகாசினியை தேடிச் சென்றார்.


அவளோ வீட்டின் பின் பக்கத்தில் இருக்கும் கிணற்று மேடையில் அமர்ந்து எங்கோ வெறித்து நோக்கியபடி இருக்க,


அதைப் பார்த்த ரங்கநாயகிக்கும் மனம் தவித்தது. தாயில்லாப் புள்ள, தன் மனசிலிருக்கும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வழியில்லாமல் உள்ளக்குள் போட்டு மருகுது ..என்றாலும் இதையெல்லாம் கடந்து சென்று தானே ஆக வேண்டும்.


நட்ட நாற்றை பிடுங்கி வேறு பக்கம் நட்டால் தான் அது செழித்து ஓங்கி வளர்ந்து பல கிளைகளை பரப்பி ஆலம் விருட்சமாக வளரும்.. அதைப் போல பிறந்த இடத்திலிருந்து வேறு பக்கம் முழுமையாக தன் வாழ்க்கையை ஒப்படைக்கும் பெண்ணிற்குள் எத்தனையோ எதிர்ப்பார்ப்புகள் கவலைகள் எல்லாம் இருக்க தானே செய்யும் என்று நினைத்த ரங்கநாயகிக்கு…


அவள் அருகில் போய் ''சுகா'', என்று அழைக்க… உணர்வுகளற்று சிலையாக அமர்ந்திருவளுக்கு ரங்கநாயகியின் அழைப்பு காதில் விழவில்லை.


அவள் எண்ணங்களோ எங்கோ இருக்க, அவளை உலுக்கி நிகழ்வுலகத்திற்கு திருப்பியவர், ''என்னாச்சு டா'', என்று தலைக் கோத,


அவரைக் கட்டிக் கொண்டு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள், ''ஆச்சி எனக்குக் கல்யாணம் செய்துக்க விருப்பமில்லை ஆச்சி.. என் அம்மா காதல் என்ற பெயரில் தனக்காக வாழ்ந்த அப்பாவின் மனசை புரிஞ்சுக்காம போய் என்னை பெற்றுக் கொடுத்து உயிரை விட்டாங்க, அப்படி என்னால் தாத்தாவை விட முடியாது'', என்று சொல்வதில் அவளுடைய அன்பைக் கண்டு மலைத்தார்.


''இங்கே பாரு சுகா, கல்யாணம் ஒவ்வொரு பெண்ணின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது, உன் அம்மா தாத்தாவிற்குப் பிடிக்காத கல்யாணத்தால் தான் உன் அம்மாவுக்கும் மனசில் அது குறையாக இருக்க, உங்க தாத்தாவிற்குத் இத்தனை வருடங்கள் வாழ் நாள் தண்டனையாக மாறி விட்டது. ஆனாலும் அந்தத் தண்டனையில் கிடைத்த பொக்கிஷம் நீ, மகளுக்குச் செய்யாத எல்லாமே உனக்குச் செய்யணும் ஆசைப்படுவது தப்பில்லேயே.. அதுவுமில்லாமல் இன்றைய சூழல் உனக்கு அவகாசத்தைக் கொடுக்காமல் கல்யாணம் நடந்தே ஆகணும் நினைக்கும் மனத்தை வருத்தப்பட வைக்காதே..


வருகிற மாப்பிள்ளையிடம் பேசலாம், உன் ஆசைப்படி உன் தாத்தாவை உன் கூட அடிஷனல் லக்கேஜ்ஜா கூட்டிப் போக முடியமா என்று கேட்போம்'', என்று தனக்குரிய குசும்பு வார்த்தைகளால் பேச,


அவரை முறைத்தவளோ, ''என் தாத்தா லக்கேஜ்ஜா'',.. என்று கேட்க,


''நீ ஒரு லக்கேஜ், கூட அவர் ஒருத்தர் அதுதான் என்றவர், சிரித்துவிட்டு அதைவிடு'', என்று சொல்லி ''நாளனைக்கு வருகிறவர்கள் முன் நீ அழகாக நிற்கணும், அதற்கு என்ன தேவையோ அதைப் பார்க்கலாம் வா'', என்று அழைத்தவர், தன் வயதிற்கு மீறிய சந்தோஷத்தை ரங்கநாயகி அவளிடம் காமித்தபடி எதையோ சொல்லிச் சிரிக்க வைக்க நேரமும் நாளும் பறந்தது.


அன்று காலையிலிருந்தே ராமசாமி வீடு பரபரப்பாக இருக்க, மில்லில் வேலை செய்தவர்கள், வாண்டுகள் கூட்டம் என்று அங்கே சுகாசினியை சுற்றி ஆட்கள் தான், எல்லோரு முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. ஆனால் உண்மையான மகிழ்ச்சி அடைய வேண்டுவளோ மனதிற்குள் குமைந்துக் கொண்டிருந்தாள்.


அப்போது அவள் அருகே வந்த ராமசாமி அவளின் அலங்காரத்தைக் கண்டவர்க்கு தன் மகளே முன் நிற்பதுப் போல தோன்ற அவளின் கன்னத்தை வருடிவிட்டு ''என் ராசாத்தி எவ்வளவு அழகா இருக்க'', என்று சொல்ல,


பச்சை கலர் பட்டில் அவளின் அழகை எடுத்துக் காட்ட கழுத்தில் அணிந்திருந்த மரகதசெட் ஜொலிக்க கைகளில் பச்சை கலர் கண்ணாடி வளையலும் கூடவே தங்க வளையலும், நீண்ட கூந்தலில் மல்லிகை கோர்த்து வைத்திருப்பதைப் பார்த்தவர்க்கு கண்கள் மேலும் கலங்கியது.


இவளை மனம் கோணாமல் பார்த்துக்கிற மாப்பிள்ளை அமைந்தது நினைத்து மனதிற்குள் சிறு நிம்மதியும் தோன்றியது ராமசாமிக்கு.


அவளோ எதுவும் பேசாமல் உம்னு இருப்பதைக் கண்டு, அவளின் கையைப் பிடித்தவர், ''என்னடா தாத்தா மேலே கோபமா இருக்கீயா , தாத்தா மேலே உனக்கு நம்பிக்கை இல்லையா.. எது செய்தாலும் உன் சந்தோஷத்திற்காக தானே செய்வேன்'', என்று சொல்லி வருந்தியவர், அப்போது முகம் மாறாமல் இருக்கும் சுகாசினியைக் கண்டு அவளைத் தனியாகப் பின் பக்கம் அழைத்துப் போனார்.


அங்கே இருக்கும் திட்டில் தானும் அமர்ந்து அவளையும் அமரவைத்தவர், ''கண்ணு, இங்கே பாரு'', என்று சொல்ல அவளோ முகத்தைத் திருப்பியபடி அமர்ந்திருக்க, ''உனக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தைச் சொல்ல தான் அழைத்து வந்தேன்.. உனக்கு அது தெரிஞ்சுக்க வேண்டாம் என்றால் நானும் சொல்லல'' என்று அவரும் மறுபக்கம் திரும்பி அமர,


அதைப் பார்த்தவளுக்கு, "தாத்து என்ன விஷயம் சொல்லுங்க", என்று கறரான குரலில் கேட்டாள்.. அவள் குரலிலும் தெளிவு இல்லை மனதிலும் குழப்பம் சூழ்ந்து இருந்தது. அதனால் அவளால் எதிலும் ஒன்ற முடியாமல் தவித்தவளுக்குத் தாத்தா என்ன சொல்ல வந்தார் என்று கேட்க விருப்பமின்றியே கேட்க,


"ம்க்கூம் இப்படி வேண்டா வெறுப்பாக கேட்க வேண்டாம்", என்று பிகு பண்ணியவரைக் கண்டவளுக்கு சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.


அவரின் முகமும் பொய் கோபமும் கண்டு சிரித்தவள், "சொல்லுங்க என்ன விசயம்", என்று கேட்க,


அவரோ "உனக்குத் தான் என்னை உன்னோட கூட்டிப் போக இஷ்டமில்லை போல, மாப்பிள்ளையே சரி சொல்லியிட்டார், ஆனால் என் பேத்திக்குக்குத் தான்",... என்று வார்த்தையை இழுக்க…


அவளோ "என்ன தாத்து சொல்லறீங்க, வருகிறவர் தான் மாப்பிள்ளையேனு முடிவே பண்ணிட்டிங்களா, அவக உங்களை கூட்டிப் போக சரி சொன்னாங்களா'', என்று கேட்க, என்று சிறு ஆர்வமும் அவசரமான குரலில் கேட்க..


''ம்ம்.. உனக்குத் தான் இஷ்டமில்லையே அப்பறம் என்ன?.. என்று சொல்லிய ராமசாமியை பார்த்து ''நிஜமாகத் தான் சொல்லறீங்களா'', என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாகக் கேட்க, ''ஆமாம்'', என்று சொல்லியவரைக் கட்டிக் கொண்டவள், ''எங்கே உன்னை விட்டுத்தான் போகணுமா என் மனசு ரொம்ப துடிச்சது தெரியுமா? உனக்குக்காகத் தான் இந்தக் கல்யாணத்திற்குச் சரினு சொன்னேன்.. ஆனாலும் எனக்கு இன்னும் உள்ளுக்குள் படபடவென்று தான் இருக்குது'', என்று சொல்லியவளைக் கண்ட ராமசாமிக்கு உள்ளம் உருகியது..


அதன்பின் பேத்தியைக் கொஞ்சிச் சிரிக்க வைத்து உள்ளே அழைத்து வந்தவர் அவளை அறையினுள் அனுப்பிவிட்டு முன் வாசலை நோக்கி வரவும் .. வீட்டின் முன் இருசக்கர வண்டி வந்து நிற்க அதிலிருந்து தடலடியாகக் காளிப்பன் இறங்கவும் ராமசாமிக்கு என்ன செய்வது தெரியாமல் நிற்க, வெளியே நின்ற வேலப்பன், அவனை உள்ளே வர முடியாமல் தடுக்க முயன்று கொண்டிருந்தான் .


ரங்கநாயகியோ ராமசாமி வீட்டிலிருந்து அப்பத் தான் தன் வீட்டிற்குப் போய்ருந்தவர் ராமசாமி வீட்டு பக்கம் சத்தம் அதிகமாகக் கேட்க அந்தச் சத்தத்தில் வெளியே வந்தவர்.. தன் வீட்டின் வாசலின் முன் வேகமாக வந்த நின்ற ஸ்கார்பியோவை பார்த்து அதிர்ந்து ஆச்சரியமாக நோக்க அதிலிருந்து இறங்கினான் நிஷாந்தன்…


நிஷாந்தனைக் கண்ட ரங்கநாயகிக்கு மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது.. ஆறடி உருவத்தில் படிப்புக் கொடுத்தக் கம்பீரமான தோற்றத்திலும், தொழில் செய்த நேர்த்தியில் அதற்குண்டான முகத்தில் தெரியும் இலகு தன்மையற்ற இறுக்கமும் கண்டவர்க்குத் தன் கண்ணே நம்ப முடியவில்லை. தன் கைகளைக் கிள்ளிப் பார்க்க அது வலிக் கொடுக்கவும், உண்மை தான் போல என்று நிற்க,


அவனோ தன் ஆச்சியின் செய்கை கண்டவனுக்கு சிரிக்கக் கூடத் தோன்றாமல்'' என்ன ஆச்சி அப்படியே பார்த்துட்டு நிற்கிறீங்க'', என்று அழுத்தமான குரலில் வினாவினான்.


''அ.. அது.. இது நிஜமா தானா நீ தான் வந்துருக்கீயா ராசா'', என்று வார்த்தைகள் தடுமாற நின்றவர் ''வா ராசா, எப்படி இருக்கே, ஆச்சி கூடப் பேசக் கூட நேரமில்லை, உன்னைப் பார்த்து எத்தனை வருஷமாச்சு '',என்று கேட்டவர் பேரன் அருகே வந்து அவன் கன்னத்தை வருடி விட,


அவனுக்கு ஆச்சி பேசுவது எல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை .. தன்னைப் பார்த்தநாலே பார்மாலீட்டீஸ் கேட்கிற கேள்விகள் தான் என்று நினைத்தபடி, ''வேலை ஆச்சி'', ஒற்றை வார்த்தையில் முடிக்க,


அதற்குள் ராமசாமி வீட்டில் சத்தம் அதிகமாக ஆகவும், உடனே தன் பேரனிடம் ''உள்ளே போய் உட்காரு ராசா இதோ வந்து விடுகிறேன்'', என்று ராமசாமியின் வீட்டை நோக்கி விரைந்தார்.


ஆச்சியின் பேச்சு அப்பதான் வந்த தன்னை தவிர்த்துச் செல்வது கூட உதாசீனமாக பட, அவனின் மனம் காயம் பட்டது.


எந்த நேரத்திலும் நம்மை அடுத்தவர் எதாவது ஒரு வகையில் ஒதுக்கி வைத்து விடும் சூழ்நிலையை தான் என்று நினைத்தவன், இது ஒன்றும் புதியதில்லை போலத் தோளைக் குலுக்கியபடி உள்ளே போனான்.


ராமசாமி வீட்டை நெருங்கிய ரங்கநாயகிக்குக் அங்கே கண்ட காட்சியில் உறைந்து போய் செயவதறியாமல் நின்று விட்டார்.


தொடரும்..

ஹாய் ஹாய் மக்கா கதையின் அடுத்த அத்தியாயம் போட்டு விட்டேன் படித்துப் பாருங்கள் .. 😍 😍 😍 😍 😍
20221216_155104.jpg
 
Last edited:
Top