• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன் வாசமே என் சுவாசமாய் - 13

Krithika Kumar

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 1, 2023
Messages
123
அத்தியாயம் 13


அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் மேல் தளத்தில் இருந்த ஒரு அறையில் தங்கி இருந்த பிரமுகரை சந்திக்க இருவரும் சென்றனர்.


"வா ஆரா. உன் தொழில் பற்று எனக்கு தெரியும். இருந்தாலும் இது அதிகப்படி. திருமணம் முடிந்து மறு நாளே தொழில் என்று கிளம்பி விட்டாய். அதுவும் புத்தம் புது மனைவியை அழைத்து கொண்டு." அவன் முதுகில் தட்டிய படி பரிகாசம் செய்தார் திரு. கோவர்தன்.

ஆராவமுதன் ஒரு அசட்டு சிரிப்புடன் அமர்ந்தான்.

"அது சரி. அவனாவது மனைவியுடன் வந்து இருக்கிறான். ஹனிமூன் என்று சொல்லிவிட்டு ஹோட்டலில் மனைவியை தனியாக விட்டுவிட்டு தொழில் விஷயம் பார்க்க போனவர் பேச கூடாது." அவரை பரிகாசம் செய்தபடி அங்கே வந்து சேர்ந்து கொண்டார் அவரது மனைவி சரிகா.

முழூ சரணாகதி என்று கை தூக்கி காண்பித்தவர் "மனைவி சொல்லே மந்திரம் என்று எப்படி இருப்பது என்று என்னை பார்த்து கற்றுக்கொள்." என்று ஆராவமுதனிடம் முணுமுணுத்தார். மேடை ரகசியமாக தான்.


செல்லமாக அவரை முறைத்துவிட்டு "இவர் விட்டால் இப்படியே பேசிக் கொண்டு இருப்பார். சொல் ஆரா. என்ன விஷயமாக வந்து இருக்கிறீர்கள்?" என்றார் சரிகா.


ராகமித்ராவை ஒரு பார்வை பார்த்து விட்டு தொடங்கினான். அவள் தொழில் பற்றி அவள் அறிந்ததை விட பல மடங்கு விவரங்கள் அவனிடம் இருந்தன. அவனை ஆச்சரியமாக பார்த்தபடி அமைதி காத்தாள் ராகா.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட சரிகா "உங்கள் தேவை எனக்கு புரிகிறது. ஆனால் இப்போது என்னால் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. இந்த ஆண்டு தான் நாங்கள் முழூ குழுமமும் ஒரு உறுதி மொழி எடுத்துள்ளோம். மறு சுழற்சி செய்யும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுடன் மட்டுமே ஒப்பந்தம் வைத்துக் கொள்வது என. இப்போது அதை மீறி என்னால் இவளது தொழிற்சாலையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாது."

"அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இவர்கள் தொழிற்சாலையிலும் மறு சுழற்சி மையம் நிறுவி விடுகிறோம்." அவளுக்காக பேசிய ஆராவமுதனை முறைத்த ராகமித்ரா "அது அவ்வளவு சுலபம் இல்லை. உங்களுக்கு உங்கள் பாட்டில்கள் மறு சுழற்சி செய்ததாக இருக்க வேண்டுமா அல்லது உங்கள் பாட்டில்களை திரும்ப பெற்று மறு சுழற்சி செய்து தர வேண்டுமா?"


புருவம் சுருக்கி அவளை பார்த்தார் சரிகா. "இது பற்றி இன்னும் பெரிதாக முடிவு எதுவும் எடுக்கவில்லை. சென்ற வாரம் நடந்த பங்குதாரர் கூட்டத்தில் ஒருவர் சுற்று சூழல் மாசு பற்றி கேள்வி எழுப்பினார். இனி இது போல் செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். இப்போது தான் அதற்கு ஒரு குழுவும் நிறுவி வருகிறோம். ஒரு நிமிடம் இரு. இந்த துறையின் பொறுப்பாளரிடம் பேசி பார்." என்று தன் கை பேசி எடுத்து யாருக்கோ அழைத்தார்.

"புகழ் நாம இப்போ மறு சுழற்ச்சி பற்றி பார்த்துகிட்டு இருக்கோம் இல்லையா? இங்க பிளாஸ்டிக் துறையை சார்ந்த ஒருத்தர் கேள்விகள் கேட்குறாங்க. கொஞ்சம் விளக்கம் தாங்களேன்." என்று சொல்லி கை பேசியில் ஒலிபெருக்கியை அழுத்தி மேஜை மேல் வைத்தார்.

"இப்போதைக்கு மறுசுழற்ச்சி செய்த பாட்டில்களில் நம்மால் நம் தயாரிப்புகளை வைத்து விற்க முடியாது. எனவே நம் பாட்டில்களை வாங்கி அதை மறுசுழற்ச்சி செய்து வேறு பொருட்கள் தயாரிப்பது பற்றி விவரம் சேகரித்துக் கொண்டு இருக்கிறோம்." என்றார் புகழ்.

சில கணம் யோசித்த ராகமித்ரா "உங்கள் குழுமத்தில் பேனா ஷார்ப்னர் போன்ற எழுத்து சாதனங்கள் இருக்கிறது அல்லவா. அவற்றிற்கு இதை பயன்படுத்தலாமே."

"செய்யலாம். ஆனால் சரியான முறையில் நம் பாட்டில்கள் நம் கைக்கு திரும்ப வந்தால் தான் அவற்றை பயன்படுத்தி இப்படி செய்யமுடியும். வெறும் பொது சந்தையில் மறுசுழற்சிக்கு கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களால் செய்தால் அந்த பொருட்களின் தரம் குறைய வாய்ப்பு உண்டு." என்று எதிர் விளக்கம் கொடுத்தார் புகழ்.

"ஒரு யோசனை. அது சரிப்பட்டு வருமா என்று பாருங்கள். உங்கள் பொருட்களின் காலி பாட்டில்கள் இத்தனை தந்தால் ஒரு எழுத்து சாதன பெட்டியோ பேனாவோ பெற்றுக்கொள்ளலாம் என்று விளம்பரம் செய்து பாருங்கள். உங்கள் பொருட்களை விற்கும் கடைகளே உங்களுக்கு மறுசுழற்சிக்கான பாட்டில்களையும் பெற்று குடுத்திடுவார்கள். இதன் வியாபார லாப நஷ்டங்கள் பற்றி தெரியவில்லை. ஒரு ஆய்வு செய்து பார்த்தால் தான் தெரியும்."

"யப்பா. அம்மா எங்கிருந்து பிடித்தீர்கள் இவர்களை. ஐந்து நிமிடங்களில் ஐடியா அருவியாய் இருக்கிறாரே. அப்படியே கோவை தூக்கி வந்துவிடுங்கள் இவர்களை." என்று புகழ் பாராட்டவும் சங்கடமாக ஆராவமுதனை பார்த்தாள் ராகமித்ரா. புகழ் இவர்கள் மகனா? இந்த கேலி பேச்சை அவன் எப்படி எடுத்துக் கொள்வான்? அவன் ஒரு இள நகையுடன் அமைதியாகவே இருந்தான்.

"அப்புறம் ஆராவிடம் நீ அடி வாங்கிக்கொள். நீ பேசிக் கொண்டு இருப்பது ஆராவின் மனைவியிடம்" என்று சொல்லி சிரித்தார்.

"என்னது ஆரா மனைவியா? நேற்று தானே திருமணம் முடிந்தது. இன்று தொழில் பேச்சா? அவர்கள் பேசியதை பார்த்தால் அவனை விட அவர்கள் தொழிலில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள் போல. ஜாடிக்கு ஏற்ற மூடி தான். ஆனாலும் இது தப்பு ஆரா. என்னிடம் இன்று தொழிலுக்காக நீ பேசி இருக்க கூடாது. எங்கள் அழகிய நீலகிரி மலை தொடரில் புத்தம் புது மனைவியை எங்கே அழைத்து செல்லலாம் என்று விவரம் கேட்கத்தான் அழைத்து இருக்கவேண்டும்." கண்டிப்பு குரலில் சொன்னான் புகழ்.

"ப்ச். நண்பன் திருமணத்திற்கு வராதவர்களிடம் அதுபற்றி பேச என்ன இருக்கிறது?"

"அடேய் நான் கால் உடைந்து வீட்டில் இருக்கிறேன். நீ இப்போது போய் கோபித்துக்கொள்கிறாயே."

"பெரிய உடைந்த கால். அதே காலுடன் தானே சென்ற வாரம் ஈரோடு சென்று வந்தாய்."

"அது அது..." என்று புகழ் இழுக்கவும் ஒலிபெருக்கியில் இருந்த கைபேசியை கையில் எடுத்தபடி பக்கத்து அறைக்கு சென்றான் ஆராவமுதன்.

"ஈரோட்டில் தான் அவன் வருங்கால மனைவி இருக்கிறாள். அதை வைத்து தான் இப்படி ஓட்டுகிறான். இவர்கள் எப்போதுமே இப்படி தான். இருக்கும் இடத்தில் பேச்சுக்கு பஞ்சமே இராது. ஆரா கொஞ்சம் அமைதி பிள்ளை ஆனால் என் மகனோடு சேர்ந்துவிட்டால் சுத்தம். கல்லூரி கால நட்பு அல்லவா." என்று விளக்கம் தந்தார் சரிகா.

அனைத்தையும் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருந்தாள் ராகா. இது ஆராவமுதனின் புதிய முகம். இது வரை அவளுக்கு பரிச்சயம் இல்லாதது. இவனுக்கு தான் எத்தனை முகங்கள். குழந்தைகளிடம் ஒரு விதம். இங்கே வேறு. மற்ற நேரம் எல்லாம் எதையோ சுமந்து கொண்டு இருப்பவன் போன்ற ஒரு தீவிரமான தோற்றம்.

புரியாத புதிராக இருந்தான் ஆராவமுதன்.
 
Top