• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன் வாசமே என் சுவாசமாய் - 14

Krithika Kumar

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 1, 2023
Messages
123
அத்தியாயம் 14அங்கிருந்து திரும்பும் போதும் ஏதோ யோசனையாகவே இருந்தான் ஆராவமுதன்.சரி அவன் தானாக பேச மாட்டான் என்று உணர்ந்து ஏதாவது பேச்சை வளர்க்கலாம் என்று யோசித்தாள் ராகமித்ரா.அப்போது தான் பிள்ளைகளின் பெயர் கூட தெரியாது என்பது நினைவுக்கு வந்தது."உங்கள் குழந்தைகளின் பெயர் என்ன?" என்று கேட்டாள்.

திரும்பி அவளை ஒரு வினோத பார்வை பார்த்தவன் "தேஜஸ்வினி விசாகன்" என்று சுருக்கமாக பதில் அளித்தான்.

அப்பாடி முத்து கொட்டிவிட்டது என்று நினைத்தாள் ராகமித்ரா.

ஒரு சில நிமிடங்களில் வீடு செல்லும் பாதையில் செல்லவில்லை என்று உணர்ந்தவள் "இப்போது எங்கே போகிறோம்?" என்றாள்.

"வேறு ஒருவரை சந்திக்க. இவர் உனது தளவாடம் (furniture) தயாரிப்பு பற்றி ஏதேனும் உதவகூடும். விருந்திற்கும் அழைத்து இருந்தார்கள். அப்படியே அங்கேயே மத்திய உணவையும் முடித்துவிட்டு உன்னை பாக்டரிக்கு அழைத்து செல்கிறேன்."

"ஓ சரி. ஆனால் அத்தை நேற்று ஏதோ முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆவதால் நீங்கள் பிஸியாக இருப்பீர்கள் என்று சொன்னார்கள். உங்களுக்கு அது தொடர்பான வேலை ஏதேனும் இருந்தால் நீங்கள் அதை பாருங்கள். இந்த சந்திப்புகள் வேறு எப்போதாவது வைத்துக் கொள்ளலாம். என் தொழிற்சாலைக்கு நானே டாக்ஸி வைத்து சென்றுவிடுவேன். நாளெல்லாம் என்னோடே வீணாக்க வேண்டாம்." என்று சொன்னாள்.

மீண்டும் அவளை ஒரு வினோத பார்வை பார்த்தவன் "விசித்திரம் தான். திருமணம் ஆன மறு நாள் நாளெல்லாம் என்னோடு வீணாக்க வேண்டாம் என்று சொல்லும் மனைவி." என்று நக்கலாக சொல்லி சிரித்தான்.

அவன் மனைவி என்று சொன்னது எதோ போல இருந்தது ராகமித்ராவிற்கு. திருமணம் நடந்து இருந்தாலும், இதுவரை அவனிடம் பேசியதே இல்லை என்பதால் தன்னை அவன் மனைவியாக இன்னும் அவளுக்கு எண்ண முடியவில்லை.

"நம் திருமணம் சாதாரண திருமணம் இல்லையே." என்றாள் முணுமுணுப்பாக.

"ஆமாம் ஆமாம் நெய் முந்திரி எல்லாம் போட்ட ஸ்பெஷல் திருமணம்." என்று மீண்டும் கேலி செய்தவன் அவள் முகத்தில் என்ன கண்டானோ மீண்டும் சீரியஸாகி "எனக்கு என் நேரத்தை பார்த்துக் கொள்ள தெரியும். எது விரயம் எது தேவை என்றும். அப்படி விரயமாக யோசித்து இருந்தால் வந்தே இருக்க மாட்டேன்" என்றுவிட்டு வாகனத்தை லாவகமாக செலுத்தி அந்த வீட்டின் போர்டிகோவில் நிறுத்தினான்.

இருவரும் கீழே இறங்கி வீட்டினுள் சென்றனர்.

வீட்டின் வாயிலுக்கே வந்து வரவேற்றார் அந்த வீட்டின் உரிமையாளர். பின் அறுபதுகளில் இருந்த அவரை நேற்றே வரவேற்பில் பார்த்து இருந்தாள். மாமனாரே உடன் வந்து அறிமுகம் செய்து வைத்து இருந்தார். அவரது மனைவியும் வந்து இருந்தார். இவர்கள் குடும்பத்தின் முக்கிய நட்பு என்பது அப்பட்டமாக தெரிந்தது.

திருமணத்திற்காக விருந்து கொடுக்க போகிறார்கள் என்று தெரிந்து இருந்தால் இன்னும் கொஞ்சம் அலங்காரம் செய்து கொண்டு வந்து இருப்பாள். குறைந்த பட்க்ஷம் சேலையாவது கட்டி இருப்பாள். இவன் தொழில் முறை சந்திப்பு என்று சொன்னதால் மிதமான அலங்காரத்தில் தான் இருந்தாள். மனதில் அவனை கரித்து கொட்டியபடி இந்த வீட்டில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசித்தபடி பார்வையை சுழல விட்டாள்.

வீடு முழுவதும் பல வண்ண சித்திரங்களும் கருப்பு வெள்ளை சித்திரங்களும் இருந்தன. ஆங்காங்கே சிறு குழந்தை வரைந்த படங்களும் சட்டமிட்டு மாட்டப் பட்டு இருந்தன.

"என்னமா பாக்குறே? எல்லாம் என் மருமக ஜெயா வரைந்தது. அவ வரையுறத மட்டும் சட்டம் போட்டு மாட்டுறோம்னு என் பேத்தி ஜோவிகா மூணு வயசு தான் அவங்க அப்பாவோட ஒரே சண்டை. சரினு அவனும் பொண்ணுக்காக சிலதை சட்டம் போட்டு மாட்டிட்டான்" கனிவான குரலில் பெருமை கலந்து விவரித்தார் அந்த வீட்டின் தலைவி.

அவரை பார்த்து புன்னகைத்தாள் ராகமித்ரா.

அப்போது அங்கே ஒரு கணவன் மனைவி ஜோடி வந்தனர். உடன் ஒரு சுட்டி பெண்ணும். அது தான் ஜோவிகா போலும்.

"சாரி ஆரா. நாங்கள் இன்னும் இவளை கூட்டமான இடங்களுக்கு அழைத்து செல்வது இல்லை. அதனால் தான் நேற்று வர முடியவில்லை. அது என்னமோ இன்னும் கொஞ்சம் பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது." என்றான் அந்த கணவன் ஜோவிகாவை சுட்டிக் காட்டி.

"அதனால் என்ன புவி அண்ணா. அது தான் நாங்கள் இன்று வந்து விட்டோமே. உங்கள் பயமும் நியாயம் தானே. எல்லோரையுமே இந்த கொரோனா ஒரு ஆட்டம் காட்டி விட்டதே." என்று அமைதியாக பதிலிறுத்தான் ஆராவமுதன்.

எல்லோருமே பேசிய படி மத்திய உணவுக்கு சென்றனர்.

ராகமித்ராவிற்கு பார்க்கும் போதே அந்த ஜோடியின் அன்னியோன்னியம் அப்பட்டமாக தெரிந்தது. அவள் இவனுக்கு பார்த்து பரிமாறுவதும் பதிலுக்கு அவன் நகர்த்துவதும் என்று பிறருடன் பேசிக் கொண்டு இருந்தாலும் இருவர் கவனமும் தனது துணையின் மீது தான் இருந்தது. இப்படி ஒரு அன்னியோனிய வாழ்க்கையை தானே எதிர்பார்த்தேன் என்று அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. (அவர்கள் இந்த நிலைக்கு வர என்ன பாடு பட்டார்கள் என்று நமக்கு தானே தெரியும். உளிக்கு பயந்த கல் சிலையாகுமா? ஆமாங்க நம்ம புவனேஷ் - ஜெய்சக்தி ஜோடி தான்.)

இதை எல்லாம் ஆராவமுதன் கவனிக்கிறானா என்று திரும்பி நோட்டம் விட்டாள். அவனோ பெரியவருடன் மும்முரமாக தொழில் பேச்சு பேசியபடி இருந்தான். சரி தான் நமக்கு வாய்த்தது அவ்வளவு தான் என்று மனதுள் அலுத்த படி உண்டாள்.

அவன் இதை எல்லாம் சாதாரணமாக கடக்க இது அவனுக்கு பழக்கப்பட்ட ஒன்று என்று அவளுக்கு தோன்றவில்லை. அந்த இருவரை பார்த்து தனக்கும் இப்படி ஒரு ஜோடி வேண்டும் என்று பல முறை அவன் யோசித்தது உண்டு என்று அவளுக்கு யார் சொல்வது???

"உன் அப்பா புதிதாக தளவாடம் (furniture) செய்ய தொடங்கினாராமே? இப்போது அந்த தொழில் எப்படி போகிறது?" ராகமித்ராவின் யோசனையை விசுவநாதனின் குரல் கலைத்தது.

"இன்னும் சூடு பிடிக்க வில்லை அங்கிள். நடுவில் பல குழப்பங்கள். கோரோனோ. பிளாஸ்டிக் மீது பொதுவான ஒதுக்கம் என்று பல சரிவுகள். இதற்கு நடுவில் அப்பா தவறியது பெரிய அடி. இனி தான் மெல்ல மெல்ல வளர்க்க வேண்டும்."

அவள் தந்தையின் மறைவை மதிக்கும் விதமாக ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்த விசுவநாதன் "அப்பா இல்லையே என்று யோசிக்க வேண்டாம் ராகா. உனக்கு தொழில் முறையில் எந்த உதவி என்றாலும் என்னிடமோ புவியிடமோ வரலாம்." என்றார்.

"தேங்க்ஸ் அங்கிள்." என்று விட்டு மேல என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள் ராகா.

"இன்று காலையில் வரதன் அங்கிளை பார்க்க சென்று இருந்தோம். சரிகா ஆன்ட்டி மறுசுழற்சி பற்றி பேசினார்கள்." என்ற ஆராவமுதன் காலையில் நடந்தவற்றை பற்றி சொன்னான்.

"அவர்கள் சொல்வதும் சரி தான். அவர்கள் தேவைக்கு உன் தொழிற்சாலை சரிப்பட்டு வருமா? அதில் அதற்கான திறன் இருக்கிறதா?"

"இல்லை என்றால் என்ன அங்கிள். வளர்த்துக் கொள்ளலாமே?" என்றான் ஆராவமுதன்.

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு "தப்பாக நினைக்க வேண்டாம் அங்கிள். இப்போது தான் தளவாடம் செய்ய ஆரம்பித்து இருக்கிறோம். அதிலேயே இன்னும் நிலைத்து நிற்கவில்லை. பெரும் கடன். இதில் மேலும் விரிவாக்கம் என்றால் எனக்கு சரியாக படவில்லை." என்றாள் ராகமித்ரா. அவள் கடன் என்று சொன்ன போது அருகில் ஆராவமுதன் இறுகி பின் தளர்வதை உணர்ந்தாள். ஏன்? தவறாக என்ன சொல்லிவிட்டாள்?

இவர்கள் பேச்சை இடையிட்ட புவனேஷ் "அது அப்படி இல்லை ராகா. சில நேரம் தொழிலில் இறங்கினால் மேலும் முதலீடு செய்தால் தான் முதலில் செய்த முதலீட்டை வெளியில் எடுக்க முடியும் என்ற நிலையும் இருக்கும். நீ சொன்ன அந்த பிளாஸ்டிக் மீதான ஒதுக்கத்தை இந்த மறுசுழற்சி மாற்றும் இல்லையா? இதை நிறுவி அதில் வரும் மூல பொருட்களையே உன் தளவாடத்திலும் உபயோகிக்கலாமே?" என்றான்.

"யோசனை நன்றாக தான் இருக்கிறது. ஆனாலும்...." என்று இழுத்தாள் ராகமித்ரா. அவளுக்கு மேலும் ஆராவமுதனிடம் பணம் பெறுவதா என்று இருந்தது.

"கடன் எவ்வளவு? யாரிடமிருந்து?" என்று சரியாக கேட்டார் விசுவநாதன்.

அவனிடம் இருந்து பணம் பெற்று இருப்பதை சொல்ல சங்கடப்பட்டு அமைதியாக அவன் முகம் பார்த்தாள். இறுகி போய் இருந்த அவன் முகம் அவள் குழப்பத்தை கூட்டியது. அவள் கடன் பற்றி பேசி இருக்க கூடாதோ? அவனுக்கு நண்பர்கள் முன் தலை இறக்கம் ஆகிவிட்டதோ? இவன் தானே தொழில் பற்றி பேசலாம் என்றான். தொழில் என்றால் எல்லாம் சேர்ந்தது தானே.

"நான் தான் அங்கிள் இது வரை மூன்று கோடி கொடுத்து இருக்கிறேன்." என்றான் ஆராவமுதன் இறுகிய குரலில்.

விசுவநாதனுக்கும் புவனேஷுக்கும் நடந்த ஆச்சரிய பார்வை பரிமாற்றம் இவள் கண்களை தப்பவில்லை. அவளை பற்றி என்ன நினைப்பார்கள்? ஏனோ மிகவும் அவமானமாக உணர்ந்தாள் ராகமித்ரா.

"நீ தானே. உன் பொண்டாட்டிக்கு தானே செய்கிறாய். இன்னும் சில கொடிகள் ஆனாலும் அவளுக்கு தேவையானதை செய்ய வேண்டியது தானே?" என்று விளையாட்டு போல கேட்டார் ஜானகி.

"அது தானே ஆரா? உங்கள் புவி அண்ணன் எனக்காக இவள் பிறந்த போது செய்த ரூபி செட்டின் மதிப்பே ஐம்பது லட்சம். நீங்கள் என்னவென்றால் தொழிலில் முதலீடு செய்ய யோசிக்கிறீர்கள்?" என்று ஏற்றிவிட்டாள் ஜெயசக்தி.

ஏனோ அதுவும் இதுவும் ஒன்று என்று ராகமித்ராவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது புவனேஷ் அவர்கள் மீது இருந்த அன்பில் காதலில் தந்த பரிசு. இது அப்படி கிடையாதே.

"அவள் ஏற்றுக் கொண்டால் சில கோடி என்ன என் சொத்து முழுவதுமே அவளுக்கு கொடுத்துவிடுவேன் அண்ணி. அவள் தான் தயங்குகிறாள்." என்று அவளை கோர்த்துவிட்டான் ஆராவமுதன்.

பெரிய காதல் மன்னன். மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்க என்னமா நடிக்கிறான்? ஆனால் ஒரு நல்ல விஷயமாக அவன் பேச்சு அவளையும் உயர்த்திக்காட்டியது. அவனை உறிஞ்சும் நத்தை இல்லை அவள் என்று அவர்களுக்கு உணர்த்தி விட்டான். அந்த விதத்தில் நிம்மதியாக உணர்ந்தாள் ராகமித்ரா.

"இப்போதைக்கு இது வட்டியில்லா கடன். அவ்வளவு தான் நீ பார்க்க வேண்டியது ராகா. நன்றாக யோசி. விரிவாக்கத்திற்கு மேலும் எத்தனை கோடிகள் வேண்டும் என்று கணக்கீடு செய். தொழில் திட்டம் வகுத்து உன்னால் அந்த கடனை திருப்ப முடியுமா அப்படி என்றால் எத்தனை ஆண்டுகளில் அதை விரைவு படுத்த என்ன செய்ய வேண்டும் இதை எல்லாம் ஆய்வு செய்து பின்னர் முடிவு செய்." என்று அறிவுரை தந்தார் விசுவநாதன்.

"என்னப்பா?" என்று ஆட்சேபித்த புவனேஷை கை காட்டி தடுத்தார். "தொழில் வேறு உறவு வேறு பா. அவள் தனித்துவத்தில் இடையூறு இருக்க கூடாது." என்றார். அவர் அவள் மனநிலை புரிந்து கொண்டது ஏனோ ஆறுதலாக இருந்தது ராகமித்ராவிற்கு.

யோசனையில் ஆராவமுதனின் புருவத்தில் முடிச்சுகள் விழுந்தன.
 
Top