• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன் வாசமே என் சுவாசமாய் - 15

Krithika Kumar

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 1, 2023
Messages
123
அத்தியாயம் 15

அங்கிருந்து நேரே அவளது தொழிற்சாலைக்கு சென்றனர்.

நாளின் இறுதி பகுதி என்பதாலும் அதிகம் ஆர்டர்கள் இல்லை என்பதாலும் சில இயந்திரங்களே இயக்கத்தில் இருந்தன.

இருப்பினும் அந்த இடத்தில் நுழைந்தவுடன் ராகமித்ராவிற்குள் ஒரு சந்தோஷம் பரவியது.

அவள் விவரம் அறிந்ததில் இருந்து அந்த தொழிற்சாலைக்கும் அவளுக்கும் ஒரு பிரித்தறிய முடியா பந்தம் இருந்தது.

முதலில் பழைய கட்டிடத்திற்கு ஆராவமுதனை அழைத்து சென்றாள். அங்கிருந்த இயந்திரங்கள் முக்கியமான மனிதர்கள் அனைத்தையும் அவனுக்கு காட்டியவள் புதிதாக கட்டப்பட்டிருந்த தளவாட தொழிற்சாலைக்கு சென்று அதில் இருப்பவற்றையும் அவனுக்கு விளக்கினாள்.

நெகிழி கொண்டு பொருட்கள் உற்பத்தி என்பது ஆராவமுதனுக்கு புதிது என்பதாலும் அந்த தொழிற்சாலையை பற்றி பேசும் போது ராகாவின் முகத்தில் தோன்றிய பாவங்கள் அவனை ஈர்த்ததாலும் மிகவும் கவனமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டான்.

அவள் பேச பேச அவனக்கு ஓரளவு அவளுக்கும் இந்த தொழிலுக்கும் இருக்கும் பந்தம் புரிந்தது.

பின்னர் ராகமித்ரா இரு கட்டிடங்களுக்கு பின்னால் இருந்த இடத்தை காண்பித்தாள். "மறு சுழற்சி நிலையம் அமைக்க வேண்டும் என்றால் இங்கு தான் செய்ய வேண்டும். முற்றிலும் புதிதாக கட்டிடம் எழுப்பி தான் செய்ய வேண்டும். நாட்களும் பிடிக்கும் செலவும் இழுக்கும்." என்றாள்.

"இருக்கட்டும். விசு அங்கிள் சொன்னது போல ஒரு தொழில் திட்டம் தயார் செய். அதற்கு பிறகு முடிவு செய்யலாம். அது இல்லை என்றாலும் இப்போது இருப்பதை நிலைப்படுத்த என்ன தேவை என்று பார். எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் சொல். முடிந்த அளவு செய்கிறேன். அது பணமாக இருக்கலாம் இல்லை வேறு வகையில் அறிமுகம் இல்லை தொழில் உத்திரவாதம் தருவதாகவும் இருக்கலாம்." என்றான்.

சரி என்று தலை ஆட்டியவள் "வந்து.... இப்படி என் தொழிலில் நீங்கள் முதலீடு செய்து உதவுவது பற்றி அத்தை மாமா ஒன்றும் சொல்ல மாட்டார்களே."

"இதில் அவர்கள் சொல்வதற்கு என்ன இருக்கிறது? முதலில் இது வரை நான் போட்ட பணமும் சரி இனி தேவை என்றால் தர போவதும் சரி, என் தனிப்பட்ட பணம். தொழிலில் என் பங்கு என்று வந்த பணத்தை நான் மேலும் முதலீடு செய்து ஈட்டிய பணம். அதனால் அவர்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சொல்லப் போனால் அவர்களுக்கு அது பற்றி ஒன்றுமே தெரியாது. தெரிய வேண்டிய தேவையும் இல்லை. அடுத்து மற்ற உதவிகள் ஒரு கணவன் என்ற முறையில் செய்வது சாதாரணம் தானே." என்று சொல்லி தோள் குலுக்கிவிட்டு சென்றான்.

அவர்களுக்கு தெரியாமல் என்றால் அந்த தாமரை அம்மாள் ஏன் அப்படி பேச வேண்டும்? வழக்கம் போல இதுவும் ஒரு புதிர் தான். இருந்தாலும் நினைத்ததை விட இந்த நாள் நன்றாக தான் சென்று இருக்கிறது. தானாக பேசாவிட்டாலும் அவள் பேச்சிற்கு மரியாதை தந்து தான் பேசுகிறான். ஒரு வேளை தனிமை விரும்பியாக இருப்பானோ என்னவோ. அவனது குணமே அப்படி என்றால் அதில் தவறில்லையே என்று அவனுக்காக வக்காலத்து வாங்கியபடி அவனை தொடர்ந்தாள்.

*******

இரவு உணவு நேரத்திற்கு இருவரும் வீடு திரும்பினர்.

ஆராவமுதன் நேரே பிள்ளைகள் அறை நோக்கி நடப்பதை கவனித்த ராகமித்ரா அவனை தொடர்வதா இல்லை இங்கேயே இருப்பதா என்று குழம்பினாள்.

"அவர்கள் கிளம்பிவிட்டார்கள் ஆரா." என்ற திலோவின் குரல் ஆராவமுதனை தடுத்தது.

"எங்கே?"

"ஊருக்கு. நீங்கள் கிளம்பிய பின் அம்மா மிகவும் அடம்பிடித்து இப்போதே கிளம்ப வேண்டும் என்று வற்புறுத்தி எல்லோரையும் கூப்பிட்டுக்கொண்டு சென்றுவிட்டார்." என்றாள் சிறிது வருத்தம் தோய்ந்த குரலில்.

"ப்ச்." என்று தன் எரிச்சலை காட்டியவன் தன் கை பேசியை எடுத்துக்கொண்டே மேலே ஏறி சென்றான்.

"அவன் பின்னேயே போ ராகா. மிகுந்த கோபத்தில் இருக்கிறான். அவனுக்கு லேசில் கோபம் வராது. வந்தால் சமாளிப்பது மிகவும் கஷ்டம்." என்று அறிவுரை தந்து அனுப்பினாள் திலோ.

மேலே முதலில் தன் அறைக்குள் சென்ற ராகா அவன் அறைக்கு எப்படி செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த மாடத்தில் இருந்து உரக்க அவன் குரல் கேட்டது. சரி அங்கே தான் இருக்கிறான் என்று அனுமானித்து மாடத்திற்கு சென்றாள் ராகா.

"அவங்க என் பிள்ளைங்களும் தானே அம்மா? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம எப்படி கூட்டிட்டு போகலாம்?"

அங்கே என்ன சொன்னார்களோ "அதுக்காக? அவங்க என்ன செஞ்சாலும் சரியா? இந்த முறை பிள்ளைகள் வளர்ந்துட்டதாலே கார் சீட் வாங்கி வைத்திருந்தேன். இனி அதில் தான் அவர்கள் பயணிக்கணும்னு. இப்படி சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டீங்க?"

"கூட்டிட்டு போக வேணாம்னு சொல்லலியே? பேசியிருந்த படி திங்கள் கிழமை கிளம்பி இருக்க வேண்டியது தானே." அவன் குரலில் எரிச்சல் மண்டி இருந்தது.

அந்த பக்கத்தில் மேலும் பேசினார்கள்.

"அது சரி. நீங்கள் என்னைக்கு எனக்காக யோசித்து பேசி இருக்கீங்க. ஆளாளுக்கு அவங்க அவங்க இஷ்டத்துக்கு நடந்துக்கோங்க." அலுப்புடன் பேசிவிட்டு கைபேசியை வைத்தான்.

அவன் அருகே சென்ற ராகா "சாரி." என்றாள் மெல்லிய குரலில்.

அவளை திரும்பி பார்த்தவன் அலுப்புடன் தலை அசைத்துவிட்டு திரும்பிக் கொண்டான்.

அவள் மேலும் ஏதோ பேச தொடங்க காய் காட்டி தடுத்தவன் "ப்ளீஸ் எனக்கு இப்போது கொஞ்சம் தனிமை தேவை படுகிறது." என்று சொன்னான்.

அவன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து விலகி வந்துவிட்டாள்.

அவன் கோபம் தன் மீது இல்லை என்று புரிந்தது. இருப்பினும் அந்த நாளைய இனிமை முழுவதும் கரைந்து போனது போல இருந்தது.

அறைக்கே இரவு உணவை வரவழைத்து உண்டவன் மறு நாள் காலை வரை வெளியேவே வரவில்லை.

காலை எட்டு மணி அளவில் ராகா மெல்ல கிளம்பி கீழே இறங்கி வந்தாள். அவள் கீழே வரவும் அவன் வீட்டின் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

வெளியே எங்கோ சென்று ஸ்குவாஷ் விளையாடிவிட்டு வந்து இருந்தான்.

இவளை பார்த்ததும் மெல்லிய புன்னகை சிந்தியவன் "நேற்று உன்னிடம் நான் அப்படி பேசி இருக்க கூடாது. சாரி. எங்கேயோ காட்ட வேண்டிய கோபத்தை உன் மீது காட்டிவிட்டேன்." என்று மன்னிப்பு வேண்டினான்.

"இதில் என்ன இருக்கு? உங்களுக்கு தனிமை தேவை பட்டது சொன்னீர்கள். அவ்வளவு தானே. இதற்கு எதற்கு சாரி எல்லாம். ஒரு விதத்தில் என்னால் தானே பிள்ளைகளை அழைத்து சென்றார்கள்."

"அது அப்படி இல்லை" என்றவன் மேலும் விளக்கம் எதுவும் தராமல் "பத்து மணிக்கு உன் அம்மா வீட்டிற்கு கிளம்பலாம். தயாராக இரு" என்று சொல்லி சென்றுவிட்டான்.

இரவு முழுவதுமே ஆராவமுதனின் அலுப்பும் வலியும் நிறைந்த தோற்றம் அவளை படுத்தி எடுத்து இருந்தது. விடியற்காலையில் பிள்ளை வளர்ப்பு பற்றி தன்னால் என்னவெல்லாம் கற்றுக் கொள்ள முடியுமோ அதை எல்லாம் கற்றுத் தேற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டாள். இனி ஒரு முறை அவளால் ஆராவமுதன் இப்படி நிற்க நேர கூடாது என்றும் உறுதியாக எண்ணினாள். அவளை அறியாமலே அவனை நோக்கி பல படிகள் முன்னேறி இருந்தாள் ராகமித்ரா.
 
Top