• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன் வாசமே என் சுவாசமாய் - 16

Krithika Kumar

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 1, 2023
Messages
123
அத்தியாயம் 16

அவர்கள் திருமணம் முடிந்து கிட்ட தட்ட இரண்டு மாதங்கள் முடிந்து இருந்தன.

அவ்வப்போது தாய் வீடு சென்று வருவது தவிர ஆராவமுதனின் வீட்டு சூழலில் பொருந்தி போனாள் ராகமித்ரா.

இந்த இரண்டு மாதங்களில் இருவருக்குள்ளும் நல்ல நட்பு உருவாகி இருந்தது. காலையில் அவன் உடற்பயிற்சிக்காக அந்த குடியிருப்பின் கிளப் ஹவுஸ் சென்று விளையாடிவிட்டு வருவான். ஸ்குவாஷ், டென்னிஸ், நீச்சல், பாட்மிண்டன், பாஸ்கெட் பால் என்று ஒவ்வொரு நாளும் ஒரு விளையாட்டு. அவர்கள் வீடு எட்டே வீடுகள் அடங்கிய ஒரு குடியிருப்பில் இருந்தது. மேல் மட்ட பணக்காரர்கள் மட்டுமே இருக்கும் ஒரு தனி குடியிருப்பு. அதன் கிளப் ஹவுஸ் எல்லா வசதிகளையும் கொண்டு அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு சிறிய சிறுவர் விளையாட்டு கூடம் கூட இருந்தது. பல வருடங்களாக அங்கயே இருந்ததால் அந்த குடியிருப்பில் இருந்த மற்ற ஆண்களில் சிலருடன் பழக்கமாகி அவர்களுடன் விளையாடுவது அவனுக்கு வழக்கமாக இருந்தது.

ராகமித்ரா வீட்டிலியே அந்த மாடத்தில் கடலை பார்த்தவாறு உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்துவிடுவாள். அந்த மாடம் வீட்டில் அவளது மிக விருப்பமான இடம். விடுமுறை நாட்களில் அங்கேயே தனது மடி கணினியுடன் ஐக்கியம் ஆகி விடுவாள்.

அவளை விளையாட அவன் அழைத்து பார்த்தான் ஆராவமுதன். தனக்கும் அது போன்ற விளையாட்டுக்கும் தூரம் என்று விட்டாள் ராகமித்ரா. அவனை யோகாசனம் செய்ய இவள் அழைத்தால் ஒரே இடத்தில நின்று செய்யும் உடற்பயிற்சியில் தனக்கு தூக்கம் வருகிறது என்றுவிட்டான் அவன்.

சரி தான் அவரவர் வழி அவரவர்க்கு என்று விட்டுவிட்டனர். என்ன செய்தால் என்ன உடல் ஆரோக்கியமாக இருந்தால் போதாதா என்ற எண்ணம்.

உடற்பயிற்சி முடிந்து தயாராகி இருவரும் பொதுவாக ஒரே நேரத்தில் தான் கிளம்புவார்கள். வேறு எந்த முக்கியமான சந்திப்புகள் இல்லாத போது.

அப்படி கிளம்பும் போது அன்றைய நாள் அவர்கள் பங்கு பெற போகும் சந்திப்புகள் அதை பற்றியும் பேசிக் கொள்வார்கள். ஒருவருக்கு ஒருவர் உத்திகளும் பகிர்ந்து கொள்வார்கள். இரவு உணவு ஒன்றாக உண்டால் கண்டிப்பாக அன்றைய நாளின் சாராம்சம் அதில் இருக்கும். உடற்பயிற்சியில் எதிர் துருவங்களாக இருந்தாலும் மற்ற நிறைய விஷயங்களில் இருவரின் கோட்பாடுகளும் ஒத்து போயின. உணவு பழக்கங்கள் உட்பட.

ராகமித்ராவிற்கு தொழில் ரீதியாக நிறைய குறிப்புகள் தந்தான் ஆராவமுதன். அன்று பேசிவிட்டு வந்தது போல ஒரு மறுசுழற்சி ஆலை நிர்மாணிக்கும் பணியை தொடங்கி விட்டார்கள். அதை செய்தால் தான் இன்றைய காலகட்டத்தில் தாக்கு பிடிக்க முடியும் என்பதோடு ஆராவமுதனிடம் பெற்ற பணத்தை சீக்கிரம் திருப்ப முடியும் என்பதை ஆராய்ந்து அறிந்ததால் அதில் முழூ மூச்சில் இறங்கி இருந்தாள் ராகா. அவள் மனதில் ஏனோ அந்த பணம் ஒரு தடையாகவே இருந்தது. அவளுக்கு அது தடை என்றால் அவனுக்கு என்ன தடை என்று தெரியவில்லை. இன்னும் இருவரும் தனி தனி அறையில் தான் இருந்தனர். இவர்கள் பேச்சுகளும் முக்கால் பாகம் தொழில் ரீதியாக தான் இருந்தது. தனிபட்ட விருப்பு வெறுப்புகள் பற்றி அவ்வளவாக பேசாததோடு அது போன்ற பேச்சுகளை ஆராவமுதன் தவிர்க்கிறான் என்று உணர்ந்து இருந்தாள் ராகமித்ரா.

இத்தனை நாள் பழக்கத்தில் அவள் சிலதை உணர்ந்து இருந்தாள். ஆராவமுதன் மிகவும் நல்லவன். அமைதியானவன். அவனுக்கு வெகு அபூர்வமாகவே கோவம் வந்தது. எந்த ஒரு பிரச்சனையையோ இல்லை அவனிடம் வேலை செய்பவர்களின் தவறையோ அமைதியாகவே கையாண்டான். ஏதோ தவறு நடந்துவிட்டால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காமல் அதை எப்படி சரி செய்வது என்பதில் தான் தன் கவனத்தை செலுத்தினான். தன்னிடம் வேலை செய்பவர்களையும் அப்படியே பழக்கி வைத்து இருந்தான்.

அதற்காக யார் என்ன செய்தாலும் அமைதியாகவே இருந்தான் என்று இல்லை. ஒரு தவறை ஒரு முறை மன்னித்தவன் அடுத்த முறை அதே தவறை செய்பவர்களை தயவு தாட்சணியம் இன்றி வேலையை விட்டு நிறுத்திவிடுவான். அதற்கு மேல் பேச்சே இல்லை.

அவனிடம் பணி புரிபவர்களும் அவனது இந்த குணத்தை அறிந்து இருந்ததால் தெரியாமல் தவறினாலும் மறுமுறை இரட்டிப்பு கவனத்தோடு செய்து விடுவார்கள்.

இப்படி எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தியுடன் குறிக்கோளுடன் இருப்பவன் தங்களது தனிப்பட்ட வாழ்வில் நடந்து கொள்ளும் முறை அவளுக்கு புதிராகவே இருந்தது. முதல் மனைவியின் நினைவில் வாடுவது போலவும் தெரியவில்லை. இவளிடம் நட்பை தாண்டி வேறு எந்த உறவையும் நாடுவது போலவும் தெரியவில்லை. ஆனால் இந்த திருமணத்திற்காக பிள்ளைகளை பிரிந்து இருக்க சம்மதித்து அவர்களை ஊருக்கும் அனுப்பி வைத்து இருக்கிறான். பிள்ளைகள் மீதான அவனது பாசம் அவள் கண்கூடாக பார்த்தது. இருப்பினும் பிரிந்து இருக்கிறான். ஏன்?

தனிப்பட்ட பேச்சு என்றால் பிள்ளைகள் பற்றிய அவளது கேள்விகளுக்கு மட்டுமே தடையின்றி பதில் வரும். அவன் தினமும் அவர்களை காணொளியில் பார்க்கிறான் என்று தெரிந்து சில நாட்களில் இவளும் அவர்களை பார்த்து இருக்கிறாள். மிகவும் சிறிய குழந்தைகள் என்பதால் அவர்கள் விளையாடும் போது பார்ப்பதோடு சரி. அவர்கள் இவர்களை கவனிக்க கூட மாட்டார்கள். ஆராவமுதன் அதிலேயே திருப்தியாக இருப்பது போல இருந்தது.

அன்று ஒரு முறை ஏந்திய ராகமித்ராவிற்கே அவர்களை பார்க்கும் போது எல்லாம் உடனே அங்கே சென்று அவர்களை தூக்கி கொஞ்ச மாட்டோமா என்று கைகள் பரபரக்கும். அப்படி இருக்கும் போது இவனால் எப்படி இப்படி இருக்க முடிகிறது? இன்னும் அவனிடம் அந்த அளவு மனம் விட்டு பேசும் நெருக்கம் ஏற்படாததால் வாளாவிருந்தாள் ராகா.

அன்று இரவு உணவு முடிந்து இருவரும் மேல் மாடத்தில் பேசிய படி அமர்ந்து இருந்தனர். ராகா ஒற்றை ஊஞ்சலிலும் ஆரா மற்றோரு ஊஞ்சலிலும் அமர்ந்து இருந்தனர்.

தொழில் பற்றிய அன்றைய நடப்புகளை அவள் பேச பேச பொறுமையாக கேட்டவன் முகம் வேறு ஏதோ யோசனையாக இருப்பதை உணர்ந்து "என்ன ஆரா?" என்று கேட்டாள் ராகமித்ரா.

இந்த இரண்டு மாதத்தில் இருவரும் ஆரா ராகா என்று அழைக்க பழகி இருந்தனர்.

ஆச்சரியமாக அவளை பார்த்தான் ஆராவமுதன்.
 
Top