• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன் வாசமே என் சுவாசமாய் - 17

Krithika Kumar

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 1, 2023
Messages
123
அத்தியாயம் 17"என்ன ஆச்சரியம்?" என்று அதற்கும் ஒரு கேள்வி கேட்டாள் ராகா.

தலையை ஒன்றும் இல்லை என்று ஆட்டியவன் மீண்டும் யோசனையாக கடலை வெறித்தான்.

அவனுக்கான தனிமையை தர எண்ணி எழுந்தாள் ராகா.

கை நீட்டி அவளை தடுத்தான் ஆராவமுதன்.

"என்ன விஷயம் என்றாலும் சொல்லுங்கள் ஆரா. பெரிய பிரச்சனை என்றாலும் பரவாயில்லை. ஒருவருக்கு இருவராக யோசித்தால் தீர்வு கிடைக்கும் இல்லையா?" என்று அவனை ஊக்கினாள் ராகா.

"பிரச்சனை என்று இல்லை. இன்று காலை அம்மா அழைத்து இருந்தார்கள்." என்று ஆரம்பித்தான்.

அவன் யோசனையும் தயக்கமும் சட்டென்று ராகாவிற்கு ஒரு பதட்டத்தை கொடுத்தது. "பிள்ளைகளுக்கு ஒன்றும் இல்லையே? இரண்டு நாட்களுக்கு முன் நாம் பேசிய போது கூட நன்றாக தானே விளையாடிக் கொண்டு இருந்தார்கள்?" சற்று படபடப்பாக கேட்டாள் ராகமித்ரா.

"பதறாதே. அவர்களுக்கு ஒன்றும் இல்லை. இது வேறு. அடுத்த மாதம் தீபாவளி வருகிறது இல்லையா? அப்போது ஊருக்கு வர சொல்கிறார்கள் அம்மா."

"ஓ. ஆனால்...." என்று இழுத்தவள் யோசனையில் வாயை மூடிக் கொண்டாள். இது அவளுக்கு தான் தலை தீபாவளி. அவனுக்கு????

"என்ன ஆனால்?" என்று கேட்டான் அவன்.

"வந்து... இந்த ஆண்டு அம்மாவுடன் இருக்கலாம் என்று நினைத்தேன்." என்று மொட்டையாக சொன்னாள் தலை தீபாவளி என்று சொல்லாமலே. அது போன்ற விஷயத்தை பேசுவானேன் அவளுக்கு அப்படி ஆசைகள் இருப்பதாக காட்டிக் கொள்வானேன்?

"ம்ம்ம்... அவர்களையும் அழைத்து செல்லலாம். அம்மா அவர்களையும் அழைக்க போவதாக தான் சொன்னார்கள். தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு பின்ஏதோ நல்ல நாளாம். அன்று ஊர் கோவிலில் பொங்கல் வைத்து ஏதோ வேண்டுதலையும் நிறைவேற்ற வேண்டுமாம். அது மட்டும் இல்லாமல் இது பிள்ளைகளின் முதல் தீபாவளி இல்லையா? அவர்களுடன் இருக்க வேண்டும் என்று எனக்கும் இருக்கிறது. ஆனால்..." என்று தயங்கினான்.

பிள்ளைகள் மீதான அவனது அன்பு குறித்தும் அவர்களுடன் இருக்க விருப்பம் என்றும் முதல் முறையாக வெளிப்படையாக பேசி உள்ளான். யோசனையுடன் ராகமித்ரா அவனை பார்த்தாள். இப்போதும் அவன் எதை சொல்ல தயங்குகிறான் என்று அவளுக்கு புரியவில்லை.

"உனக்கு..." என்று மீண்டும் தொடங்கி நிறுத்தினான்.

சட்டென்று புரிந்துவிட்டது ராகமித்ராவிற்கு. அவன் மீண்டும் அவள் பிள்ளையை கையாள தெரியாமல் ஏதேனும் செய்து விடுவாளோ என்று அஞ்சுகிறான். அவன் அச்சத்தை உடனே போக்கும் எண்ணத்துடன் "கவலை படாதீர்கள் ஆரா. நான் இனி ஒரு முறை அப்படி தவற விடமாட்டேன். நிறைய படித்து இருக்கிறேன். பிள்ளை வளர்ப்பு பற்றி. அவர்களை பார்த்துக் கொள்வது பற்றி என்றெல்லாம். அது நிஜமான பிள்ளை வளர்ப்புக்கு ஈடில்லை தான். இருந்தாலும் இந்த முறை எந்த தவறும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்." பரபரப்பாக அவள் பேசவும் சட்டென்று சிரித்துவிட்டான் ஆராவமுதன்.

"எதற்கு சிரிக்கிறீர்கள்?" என்று சற்றே சிணுங்கலாக கேட்டால் ராகா. எதற்கு என்று புரியாவிட்டாலும் அவன் கேலி செய்து சிரித்தது அவளுக்கு கடுப்பாக இருந்தது. எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து வைத்து இருக்கிறாள். அதை கேலி செய்கிறானே.

ஒன்றும் இல்லை என்பது போல தலை அசைத்தவன் "நான் அப்படி ஏதும் யோசிக்கவில்லை. அன்று நடந்தது தற்செயலாக நடந்தது. பல பிள்ளை வளர்த்தவர்களுக்கும் நடக்க கூடியது. அதனால் நீ இப்படி பதற தேவை இல்லை. இன்னும் சொல்ல போனால் நான் அதை மறந்தே போனேன்."

"அப்புறம் என்ன?"

"அங்கே அத்தையும் இருப்பார்கள்." என்று மொட்டையாக சொன்னான்.

"அதனால்?"

"அதனால் என்றால்? அவர்களை நீ பார்த்து இருக்கிறாய் தானே? அவர்கள் பேசி கேட்டு இருக்கிறாய் தானே?"

"அது... அன்று இது பற்றி நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே?"

"சொல்லவில்லை என்று உனக்கு தெரியுமா??" திருப்பி கேட்டான் ஆராவமுதன்.

அன்று அவன் தாயோடு பேசியது நினைவு வந்தது. அவள் முன் இல்லை என்றாலும் அப்புறம் கண்டித்து பேசி இருக்கலாம். அவள் இந்த வீட்டிற்கு புதிது என்பதால் அதில் தவறும் இல்லை.

"அங்கே போனால் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். எதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நீ அதை பொறுத்து தான் போக வேண்டி இருக்கும். அதனால் தான் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்."

"அவர்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள்?" என்று கேட்டாள் ராகமித்ரா. அதில் அதை ஏன் நீங்கள் பொறுத்து போகிறீர்கள் என்ற கேள்வியும் இருந்தது.

"அது அம்மாவிற்காக. அம்மாவிற்கு அவர்கள் மீது அபார பிரியம். அவர்கள் எனக்கு மாமா மனைவி மட்டும் இல்லை. அப்பாவிற்கு ஒன்று விட்ட தங்கையும் கூட. அம்மா இந்த வீட்டிற்கு திருமணம் ஆகி வந்த போது அவர்கள் பெற்றோர் இல்லாத காரணத்தினால் அத்தையும் இங்கே தான் இருந்தார்கள். அம்மா என்னை பெற்ற போதும் சரி அதற்கு பின்னும் சரி மிகவும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்களாம். பேறு காலத்தில் அம்மாவை அப்படி தாங்கினார்களாம். அம்மா தாய் இல்லாமல் வளர்ந்தவர்கள். அத்தையிடம் தான் தாயன்பை பார்த்தேன் என்று எப்போதும் சொல்லிக் கொள்வார்கள்."

அந்த அம்மாள் அன்பாக இருந்தார்களா? நம்பவே முடியவில்லை ராகமித்ராவால். ஒரு வேளை நாடகமாக இருந்திருக்குமோ? எதற்காக?


"அவர்கள் மீது இருந்த பிரியத்தில் அவர்களை என் மாமாவிற்கு திருமணம் செய்து வைத்து மேலும் நெருங்கிய உறவு ஆக்கிக் கொண்டார்கள். இப்போது வரை அம்மாவிற்கு அவர்கள் சொல் வேதம். அவர்கள் மனம் வருந்தும் படி எதுவுமே செய்ய மாட்டார்கள். நானும் சரி அப்பாவும் சரி அம்மா சொல் மீறி எதுவும் செய்தது இல்லை. எங்களுக்கு அவர்கள் சந்தோஷம் மிக முக்கியம். அதனா அப்படியே பழகிவிட்டது."

அந்த வீட்டில் தாமரையின் பிடியை பற்றி நீண்டதொரு விளக்கம் தந்தான் ஆராவமுதன். முதல் நாள் திலோத்தமா மாற்ற வேண்டியது என்று சொன்னது இதை தான் போல. ஆனால் சம்பந்தப்பட்டவர்களே அதை ஏற்றுக் கொண்டு இருக்கும் போது அவள் என்ன செய்ய முடியும்?
 
Top