• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன் வாசமே என் சுவாசமாய் - 18

Krithika Kumar

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 1, 2023
Messages
123
அத்தியாயம் - 18"அவர்கள் அப்படி இருந்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும் ஆரா. எலிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா? அவர்களுக்காக பார்த்தால் அத்தை மனம் நோகாதா? நாம் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள் தானே? அது மட்டும் இல்லாமல் குழந்தைகளையும் வேறு எப்போது பார்ப்பது? இப்போது நீங்கள் சொல்லிவிட்டிர்கள் இல்லையா? அவர்களை நான் சமாளித்து கொள்கிறேன். நீங்கள் பயண ஏற்பாட்டை பாருங்கள். எத்தனை நாள் எப்படி பயணம் என்று சொல்லுங்கள். அதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்து கொள்கிறேன்."

"அதிக தொலைவு இல்லை. திருச்சி அருகில் தான். அது என் தந்தையின் ஊர் இல்லை. அம்மா பிறந்து வளர்ந்த இடம். இப்போதும் மாமா வீடு அங்கே தான். பொதுவாக அம்மா அப்பா சென்னையில் தான். அப்பா சொந்த ஊரும் சென்னை தான். அப்பா வீட்டு குலதெய்வம் இங்கே தாம்பரம் தாண்டி இருக்கிறது. அதற்கு தை மாதத்தில் போக வேண்டுமாம். இப்போது தான் மாமா வீட்டில் இருக்கிறார்கள். அங்கே அம்மாவின் குலதெய்வத்துக்கு ஏதோ வேண்டுதலாம்."

"ஆனால் ஏன் இப்போது மட்டும் அங்கே இருக்கிறார்கள்? உங்கள் அப்பாவிற்கு கஷ்டமாக இல்லையா? தொழிலை விட்டுவிட்டு முழுதும் அங்கே இருக்க? வீட்டில் இருக்கும் வயதும் இல்லையே."

"அத்தை நான் இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் அவர்களை என்னிடம் வளர விட முடியாது என்றார்கள். எனக்கு வருபவள் சித்தியாக கொடுமை செய்துவிடுவாளாம். எனக்கு குழந்தைகளை அவர்களிடம் முழுமையாக கொடுத்துவிட விருப்பம் இல்லை. அதனால் அம்மா இப்படி ஒரு தீர்வு கண்டார்கள். அப்பாவிற்கு கொஞ்சம் கஷ்டம் தான். இங்கே பரபரப்பாக தொழில் தொழில் என்று ஓடி விட்டு அங்கே இருப்பது சரி படவில்லை தான். ஆனால் நம் கொடைக்கானல் தோட்டங்களும் அங்கு திண்டுக்கலில் இருக்கும் பழ கூழ் ஆலையும் அருகில் இருப்பதால் அதை மேற்பார்வை பார்க்க அவ்வப்போது சென்று விடுவார்."அவன் மேலே பேசும் முன் அவனது கைபேசி ஒலித்து தடுத்தது.அழைப்பவர் பெயர் பார்த்தவன் "இது முக்கியமான வெளிநாட்டு வாடிக்கையாளர். நாம் பிறகு பேசுவோம்." என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டான்.அப்படி பிள்ளைகளை பிரிந்து இருந்தாவது தன்னை திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற ராகமித்ராவின் கேள்வி கேட்கப்படாமலே நின்றுவிட்டது.****மறுநாள் அலுவலகம் சென்றவளுக்கு பல வேலைகள் இருந்தன.மறுசுழற்சி மையம் பயன்பாட்டிற்கு வந்து இருந்தது. இந்த தீபாவளி அன்று தான் இவள் தந்த யோசனை படி பாட்டில் பெற்றுக் கொண்டு எழுது பொருட்கள் தரும் திட்டத்தை அறிவிக்க போவதாக புகழ் சொல்லி இருந்தான்.அதற்கு முன்னர் அனைத்து விநியோகிஸ்தர்களிடமும் முதல் கட்ட எழுது பொருட்கள் சென்று அடைய வேண்டும் என்பதால் இன்னும் ஒரு வாரத்தில் தேவையான பொருட்களை புகழின் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கிருந்து விநியோகம் செய்வது புகழின் பொறுப்பு.

இந்த எழுது பொருட்கள் தயார் செய்ய புகழ் அவனது தொழிற்சாலையில் இருந்த பழைய பாட்டில்களை அனுப்பி வைத்து இருந்தான். அதை வைத்து இன்று தான் உற்பத்தியை தொடங்கி இருந்தார்கள்.

மேலே அவளது அறையில் இருந்து இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்த ராகமித்ராவிற்கு ஒரு வித பெருமை தோன்றியது. ஏதோ ஒரு விதத்தில் இந்த பூமியின் நலனுக்காக சிறிய பங்களிப்பு செய்வது சந்தோஷமாக இருந்தது. இதற்கு வழி வகுத்து தந்த ஆராவமுதனுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றியது. இது நாள் வரை அவன் கொடுத்த பணம் பற்றியோ இல்லை இப்போது வரை செய்து கொண்டு இருக்கும் உதவிகளை பற்றியோ அவன் எதுவுமே சொன்னது இல்லை. இவளுக்கு தான் ஒரு வழி பாதையாக தான் மட்டும் பெற்றுக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு இருந்தது. ஆனால் எல்லாம் இருக்கும் ஒருவனுக்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்று அவளால் கண்டறிய முடியவில்லை.அவளை சந்திக்க புகழ் வந்து இருப்பதாக சிப்பந்தி வந்து சொல்லவும் யோசனையை கை விட்டு அவனை சந்திக்க தயாரானாள்.

"ஹாய் ராகா. தயாரிப்பு எல்லாம் எப்படி போகுது?" என்று கேட்டபடி உள்ளே வந்தான் புகழ்.

"நல்லா போகுது அண்ணா. நீங்க உட்காருங்க. உங்க கால் இப்போ எப்படி இருக்கு?" என்று உபசரித்தாள்.

"அதுக்கு என்ன? கட்டு அவிழ்த்தே ஒரு மாசம் ஆகுதே. எல்லா வேலையும் செய்ய ஆரம்பித்து விட்டேன்."

"சூப்பர். உங்க ஆர்த்தி எப்படி இருக்காங்க?"

"நல்லஆஆ இருக்கா. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை அட்டெண்டன்ஸ் எடுத்துக்கிட்டு." என்று அலுப்பாக சொன்னான்.

"ஏன் அண்ணா எதாவது பிரெச்சனையா?" கவலையுடன் விசாரித்தாள் ராகமித்ரா. சென்ற முறை பேசியபோது இப்படி இல்லையே.

"பிரெச்சனை என்று சொல்ல முடியாது. ஆனால்... அவள் என் கவனம் முழுவதும் அவளிடமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். ஒரு முறை தவறினாலும் கோபம் தான் சண்டை தான். சமாதானமும் சீக்கிரம் ஆகி விடுகிறாள் என்று வைத்துக் கொள். எனக்கு தான் தொழிலையும் பார்த்து இவளையும் பார்க்க முடியவில்லை. இப்போதே இப்படி என்றால் திருமணத்திற்கு பின் நினைத்துப் பார்த்தாலே கண்ணை கட்டுகிறது." ரொம்பவும் நொந்து இருப்பான் போல. அதிகம் பழக்கம் இல்லாத அவளிடமே இவ்வளவு புலம்புகிறானே.

"அவர்கள் வேலைக்கு போகவில்லையா?"

"ப்ச் அவர்கள் வீட்டில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதால் வீட்டில் தான் இருக்கிறாள். அவள் அப்பாவிற்கு பெண்கள் என்றால் வீட்டுப் பறவைகளாக தான் இருக்க வேண்டும்."

ராகமித்ராவிற்கு பிரச்சனையின் அடி நாதம் புரிந்தது. அவளுக்கு என்று பொறுப்புகள் இல்லாததால் ஆர்த்தி இவனை தேடுகிறாள். தாய் தந்தை இருவருமே பரபரப்பான தொழில் அதிபர்களாக ஒருவரை விட்டு மற்றொருவர் சுயமாக செயல்பட்டு பார்த்திருந்த புகழுக்கு இது புதிதாக இருக்கிறது.

"அவங்களுக்கு அப்படினு ஒரு பொறுப்பை கொடுத்து பாருங்க அண்ணா."

"அவளுக்கு இப்போ நான் என்ன பொறுப்பு கொடுக்க முடியும்? கல்யாணத்துக்கு பிறகாவது நம் தொழில் ஏதேனும் ஒன்றை அவளிடம் ஒப்படைத்து பார்த்துக் கொள்ள சொல்லலாம்."

"இல்லை அண்ணா அது சரி வராது. நீங்கள் சொல்வதை பார்த்தால் அவர்களுக்கு தொழில் பயிற்சியோ இல்லை வெளி உலக அனுபவமோ அதிகம் இருக்காது. அப்படி பட்ட ஒருவரை திடீரென்று ஏற்கனவே நடந்து கொண்டு இருக்கும் தொழிலின் முழூ பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள சொன்னால் திணறிவிடுவார்கள். நீங்கள் அவர்களிடம் பேசிப் பாருங்களேன். அவர்கள் படிப்பு சம்பந்தமாகவோ இல்லை வேறு எதிலுமோ அவர்களுக்கு தொழில் செய்ய ஆர்வம் இருக்கிறதா என்று. அப்படி எதாவது இருந்தால் திருமணத்திற்கு பின்னர் அதை தொடங்க இப்போதிலிருந்தே என்னவெல்லாம் செய்ய முடியும் என்று பார்க்க சொல்லுங்கள். இன்னும் மூன்று மாதங்களில் திருமணம். அது வரை அவர்களுக்கு பொழுதாவது போகும்."

"நீ சொல்வதும் சரி தான். நிச்சயம் ஆன பெண் என்று அவர்கள் வீட்டில் அவளை வெளியேவும் தனியாக எங்கேயும் அனுப்ப மாட்டேன் என்கிறார்கள். பாவம் அவள் பொழுது போகாமல் தான் என்னை தேடுகிறாள் போல. நீ சொன்னது போல பேசிப் பார்க்கிறேன்." என்று ஒப்புக் கொண்டான் புகழ்.

தொழிற்சாலையை பார்வையிட்டுவிட்டு கிளம்பியவன் கிளம்பும் போது "ஆரா கொடுத்துவைத்தவன்" என்று புன்னகையுடன் சொல்லி சென்றான். ஆராவமுதன் அப்படி நினைக்க வேண்டுமே!
 
Top