• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உன் வாசமே என் சுவாசமாய் - 20

Krithika Kumar

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 1, 2023
Messages
123
காரில் இருந்து இறங்கிய ஆராவமுதன் நேரே உள்ளே செல்ல போனான்.அவனை தடுத்து நிறுத்திய தேவிகா "நில்லு ஆரா. ஆலம் சுற்றணும். அவளும் வரட்டும்." என்றார்.

அவன் அருகே ராகமித்ரா சென்று நின்றதும் ஆலம் சுற்றி உள்ளே அழைத்துக் கொண்டார்.

"வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா மா."

ஆரா நேரே பிள்ளைகளை தேடி உள்ளே சென்றான். அவர்கள் உள் அறையில் விளையாடிக் கொண்டு இருந்தனர். அதை கவனித்த ஆரா சீட்டி அடித்தான். இது எப்போதுமே அவர்களுக்குள் ஒரு விளையாட்டு. அவன் வீடியோ கால் செய்யும் போது கூட அதே போன்று சீட்டி அடிப்பான். சத்தம் வரும் பக்கம் இருவரும் திரும்பி பார்த்து சிரிப்பார்கள்.அந்த குரலை கேட்டதும் குட்டிகள் இருவரும் சட்டென்று திரும்பி பார்த்து சத்தம் வந்த பக்கம் முட்டி போட்டு வேக வேகமாக வந்தனர்.அவர்கள் உயரத்திற்கு தன்னை இறக்கியவன் ஒரே நேரத்தில் இருவரையும் அள்ளி அணைத்தான்.

அந்த மூவருக்கும் நடந்த சந்திப்பில் இருந்த ஏக்கத்தையும் பாசத்தையும் பார்த்த ராகமித்ராவிற்கு கண்கள் கலங்கின. அந்த கூட்டில் தானும் இணைய மாட்டோமா என்ற ஏக்கமும் தோன்றியது. கண்ணோரம் இருந்த நீரை துடைத்துவிட்டு திரும்பி பார்த்தால் தேவிகாவும் அதே போல கண்களை துடைத்துக் கொண்டு இருந்தார்.

இது எதையும் ரசிக்காத ஒரே ஜீவன் தாமரை. அவர் முகத்தில் இருந்த கடுப்பை பார்த்த ராகமித்ராவிற்கு கோபம் வந்தது. அப்பா பிள்ளை சந்திப்பில் கடுப்பாக இவர் யார்?

ஏற்கனவே அவர்களை பிரித்து வைத்து இருப்பதே பாவம். அதுவும் ஆரா இரண்டாவது திருமணம் செய்வது என்றால் பிள்ளைகள் இல்லை என்பது போல தானே மிரட்டி அழைத்து வந்து இருக்கிறார்? நிருபமா இறந்த போது ஆராவமுதனிற்கு இருபத்தி ஒன்பது வயது தான். அவன் காலம் முழுக்க தனியாக இருக்க வேண்டும் என்று எண்ணினாரா இந்த அம்மாள்? என்ன ஒரு துஷ்ட எண்ணம்? என்ன இருந்தாலும் அவர் தூக்கி வளர்த்த பிள்ளை தானே? அந்த பாசம் கூட இருக்காதா? சே சே. என்ன மாதிரி மனிதர்கள்.

மனதில் இருக்கும் கோபத்தை முகத்தில் காட்டாமல் இருக்க ராகமித்ரா மிகவும் சிரமப்பட்டாள்.

பிள்ளைகளை சில நிமிடங்கள் கொஞ்சிய ஆராவமுதன் என்ன நினைத்தானோ திரும்பி ராகமித்ராவை தேடினான்.

"வா ராகா. இவனை பிடி." என்று மகனை நீட்டினான். அன்று நடந்தது அவனுக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை என்பதை காண்பிப்பது போல.

அவர்களை நோக்கி சில எட்டுகள் எடுத்து வைத்தாள் ராகா.

"அதெல்லாம் ஒன்றும் தேவை இல்லை. செண்பா பிள்ளைகள் தூங்கும் நேரம் ஆகிறது அவர்களை உள்ளே கொண்டு போ." என்று இடையிட்டு கட்டளை இட்டார் தாமரை.

அவரை ஆழந்த பார்வை பார்த்த ஆராவமுதன் "இந்த ஒரு நிமிடத்தில் ஒன்றும் ஆகாது."என்றுவிட்டு பிள்ளையை ராகமித்ராவின் கைகளில் தந்தான்.

அந்த பூக்குவியலை வாங்கியவளுக்கு அப்படி ஒரு ஆனந்தம். இதுவரை வாழ்வில் தான் அனுபவித்திராத ஒரு சுகம். இறுக்கி அணைத்து கன்னத்தோடு கன்னம் ஒட்டி எடுத்தாள். பிள்ளைகளுக்கு முத்தம் கொடுத்தால் ஆகாது என்று தான் படித்து இருந்தாளே! ராகா விசாகனை கொஞ்சுவதை பார்த்த தேஜு தானும் அவளிடம் செல்ல வேண்டும் என்று எக்கினாள்.

ராகமித்ராவிடம் இருந்து விசாகனை வாங்கி கொண்டு தேஜஸ்வினியை தந்தான் ஆராவமுதன். குழந்தை அவள் கையில் வந்து ஒரு நிமிடம் கூட இருக்காது.

"போதும் கொடு அவர்கள் தூங்க வேண்டும்." என்று பிடுங்கி வேலை செய்யும் செண்பாவிடம் கொடுத்தார் தாமரை.

சுறு சுறு என்று கோபம் வந்தாலும் பேசாமல் இருந்தாள் ராகா. ஆராவமுதன் அவன் தாயை முறைப்பதையும் அவர் கண்களால் அமைதியாக இருக்கும்படி சொல்வதையும் கவனிக்க தவறவில்லை.

"நீங்கள் இருவரும் மாடிக்கு சென்று இளைப்பாறிவிட்டு மத்திய உணவுக்கு வாங்க." என்று அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் தேவிகா. மேலும் யாரும் எதுவும் பேசிவிடும் முன்.

******

மாடி அறைக்கு சென்ற ராகமித்ரா எதிர் பார்த்த மாதிரி அங்கே ஒரு அறை தான் இருந்தது. அதிலும் ஒரு பெரிய கட்டில் தான் இருந்தது.

இதை எப்படி சமாளிப்பது என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அந்த அறையில் எதிர் புறம் இருந்த கதவை திறந்தான் ஆராவமுதன். சென்னையில் இருப்பது போன்ற ஒரு மாடம் இருந்தது அங்கே. ஒரே வித்தியாசம் அங்கே ஊஞ்சல் இருந்தது. இங்கே ஒரு கயிற்றுக் கட்டில் இருந்தது.

ராகமித்ரா யோசனையாக பார்க்கவும் "இங்கே வந்தால் எனக்கு இந்த மாடத்தில் தூங்க மிகவும் பிடிக்கும். இன்று இரவு பார். இந்த கட்டிலில் படுத்து மேலே பார்த்தால் எத்தனை நட்சத்திரங்கள் தெரிகிறது என்று. சென்னையில் இருக்கும் புகைக்கு ஒன்று இரண்டு பார்ப்பதே அரிது. இரு வருகிறேன்." என்று சொல்லி உள்ளே சென்றவன் அறையில் இருந்து ஒரு டெலஸ்கோப் எடுத்து வந்து அதை பிரித்து வைத்தான்.

சில நிமிடங்களில் அதில் தன் மடி கணினியை இணைத்தவன் கண் பொருத்தி எதையோ தேடினான்.

பின்னர் விலகி நின்று மடி கணினியை பார்க்குமாறு ராகமித்ராவை அழைத்தான்.

"என்ன ராகா பகல்ல என்ன தெரியும்னு யோசிக்கிறியா? வந்து பார் தெரியும்."

மடி கணினியை பார்த்த ராகா அசந்துவிட்டாள்.

"அது நிலவு தானே? பகலில் அதுவும் உச்சி வெயில் நேரத்தில் எப்படி?" என்று ஆச்சரியமாக கேட்டாள்.

"பகல் என்றாலும் நிலவு நம்மை சுற்றி தானே வலம் வருகிறது. சரியான நேரத்தில் சரியான சக்தி வாய்ந்த டெலெஸ்கோப் பயன்படுத்தினால் நிறைய விஷயங்கள் பார்க்கலாம். சரி உள்ளே வா. இன்று இரவு ஜூபிடர் பார்க்க முடிகிறதா என்று முயன்று பார்போம்." என்று சொல்லி அறையின் உள்ளே திரும்பி வந்தான்.

"இருந்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது ஆரா. பகலில் டெலஸ்கோப் பயன் படுத்த முடியும் என்றே எனக்கு தெரியாது."

"எல்லா டெலெஸ்கோப்பும் பயன் படாது. பகலில் பார்க்க வேண்டும் என்றால் கொஞ்சம் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் அதிலும் எங்கே எப்படி பார்க்க வேண்டும் என்று தெரிந்தும் இருக்க வேண்டும். பகலில் நிலவு தவிர மற்ற நட்சத்திரங்கள் கிரகங்கள் கூட பார்க்கலாம். இப்போது வெயில் மிகவும் அதிகம் இருப்பதால் விட்டுவிட்டேன். நம் கோடைகானல் விடுதியில் தங்கும் போது காண்பிக்கிறேன். அங்கே இருக்கும் டெலஸ்கோப் இதை விட சக்தி வாய்ந்தது."

"இங்கே ஒன்று அங்கே ஒன்றா?"

"ஆமாம் ஆமாம். நான் போகும் இடமெல்லாம் ஒரு டெலஸ்கோப் வாங்கி வைத்து விடுவேன். அதில் விதவிதமான சக்திகளுடன். எனக்கு விண்ணியல் (ஸ்டார் கேசிங்) ஒரு பிரியமான பொழுது போக்கு."

"ஆனால் சென்னையில் நீங்கள் இது போல செய்தது இல்லையே. நான் பார்த்ததும் இல்லையே."

"அது... அங்கே இப்படி ஓய்வாக நேரம் கிடைக்காது இல்லையா?" என்று அவள் கண்களை சந்திக்காமல் மழுப்பலாக சொன்னவன் "சரி நீ போய் ரிஃப்ரெஷ் ஆகி வா. நான் பின்னர் போகிறேன்." என்று பேச்சை மாற்றிவிட்டான்.
 
Top