• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 11

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 11

அடுத்த நாள் வழக்கம் போல கல்லூரி நடைபெற்றது. ஸ்ரீதர் என்ற ஒருவனைப் பற்றிய பேச்சு அங்கே எழாதபடி மேனேஜ்மென்ட் பார்த்துக் கொள்ள, அவன் நண்பர்களையும் அங்கே கேட்பார் தேடுவார் யாரும் இல்லை.

"மச்சி! இப்ப தான் என்னவோ எனக்கு பிரீடம் கிடைச்சா மாதிரி இருக்கு" சத்யா கூற,

"சும்மா இரு டா.. நானே எப்ப எவன் வந்து என்ன கேட்பானோனு பயந்து போய் இருக்கேன்.. பிரீடமாம்.." என்ற சங்கர் நிஜமாய் பயந்து தான் இருந்தான்.

அதெற்கெல்லாம் நேர் எதிராய் இருந்தது நந்தினி மட்டும் தான். உள்ளத்தின் மகிழ்ச்சி அவளை இன்னும் கொஞ்சம் அழகாய் காட்ட, அவள் வந்ததும் சங்கர், சத்யா இருவருக்கும் பொதுவாய் ஹாய் என்றபடி அமர்ந்தாள்.

"என்ன நீ மட்டும் வர்ற? தான்யா எங்க?" சங்கர் கேட்க,

"இப்ப வந்திடுவா!" என்றவளை சத்யா பார்த்தாலும் எதுவும் கேட்கவில்லை.

அடுத்தடுத்த வகுப்புகள் நடந்து கொண்டிருக்க, சத்யா அந்த வகுப்புக்களை கவனித்துக் கொண்டிருக்க, நந்தினியின் பார்வை தன்னையும் அறியாமல் சத்யாவை அடிக்கடி தழுவிச் சென்றது.

"போர்டு இந்த பக்கம் இருக்கு நந்து!" என தான்யா கிண்டல் செய்யும் அளவுக்கு அவள் பார்த்து வைக்க,

"நான் சும்மா தான் பார்த்தேன்!" என்று வேறு சப்பை கட்டினாள் நந்தினி.

நாட்கள் வேகமாய் நகர, முதலாம் அரைவருடத் தேர்வு நெருங்கி இருந்தது. அதற்காக விடுமுறை அளிக்கப்பட,

"என்ன டா பண்றது.. பத்து நாள் லீவ்.. ஊருக்கு போய்ட்டு வரலாமா?" என்றான் சங்கர் சத்யாவிடம்.

"ம்ம் நானும் அதான் நினச்சேன்.. ஊருக்கு போகவே இல்லையே!" என்றவன்,

"உங்க பிளான் என்ன?" என்றான் நந்தினி தான்யாவிடம்.

"நாங்களும் ஊருக்கு தான்.. நான் நாளைக்கு கிளம்புறேன்.. நந்து நாலு நாளைக்கு அப்புறமா கிளம்புறா?" என்றாள் தான்யா.

"ஏன்? நாலு நாளைக்கு இங்க என்ன?" என்றான் கேள்வியாய்.

பதில் கூறாமல் நந்தினி அமர்ந்திருக்க, "என்ன நந்தினி அதான் கேட்குறான் இல்ல?" என்றான் சங்கர்.

"வேற என்ன? எல்லாம் அவங்க அண்ணி தான்.." என்றது தான்யா தான்.

அவள் குடும்பத்தைப் பற்றி ஓரளவு தெரியும் என்றாலும் அவர்களுக்குள் ஆன நெருக்கம் அவ்வளவு எல்லாம் தெரியாது எனவே சத்யா கேள்வியாய் பார்க்க,

"என்ன அண்ணியார் கொடுமையா?" என்றான் சாதாரணமாய் சங்கர்.

"கொடுமைனு எல்லாம் இல்ல.. அவங்களுக்கான ஸ்பேஸ் நான் போனா இருக்காதுன்னு நினைக்குறாங்க" என்றதில் ஓரளவு புரிந்தது மற்றவர்களுக்கு.

"லீவு விட்டா உடனே ஓடி வரணுமா? வந்தோமா ரெண்டு நாளுல கிளம்புனோமானு இரு" என்ற அண்ணியின் குரல் காதில்.

"அதுக்காக தனியா இங்க இருக்க போறியா?" என்றான் சத்யா.

"ரூம்மேட் இருப்பாங்க.. நான் பார்த்துக்குறேன்" என்று சிரித்தவளை அப்படியே விட மனதில்லை.

அடுத்தநாள் சத்யா, சங்கர் இருவரும் கிளம்பிவிட, விடுதியில் தான்யா கிளம்பிக் கொண்டு இருக்கும் நேரம் நந்தினியை தேடி யாரோ வந்திருப்பதாய் கூறி சென்றாள் ஒரு பெண்.

யாராக இருக்கும் என்ற யோசனையோடு நந்தினி செல்ல, அங்கே நின்ற ஜீவனைப் பார்த்து விழி விரித்தாள் நந்தினி.

"அண்ணா!" என்று அருகே செல்ல,

"நந்து!" என சிரித்தபடி அழைத்தவன்,

"கிளம்பிட்டியா நந்து? போலாமா?" என்றவனைப் புரியாமல் பார்த்தாள்.

"ஹாய் ண்ணா!" என தான்யா வர,

"நல்லவேளை நீ கால் பண்ணின தான்யா.. சாயந்திரமே மதுரை வர போக வேண்டி இருக்கு!" என்று ஜீவன் கூற, நந்தினி தான்யாவை முறைத்தாள்.

"சரி நாங்க போய் பேக் எடுத்துட்டு வர்றோம் ண்ணா!" என்று தான்யா கூறவும்,

"சீக்கிரம் வா நந்து!" என அனுப்பி வைத்தான் ஜீவன்.

"இப்ப எதுக்கு டி அண்ணனுக்கு கால் பண்ணின.. அண்ணி போய் என்ன பேச போறாங்களோ.. தேவையா எனக்கு? எனக்கு போகணும்னா பஸ்ல போக தெரியாதா?" நந்தினி கோபமாய் கேட்க,

"அதையே தான் நானும் சொன்னேன்.. சத்யா தான் கேட்காம இப்படி பண்ண வச்சுட்டான்.. சாரி டி.. எனக்கும் உன்னை இப்படி இங்க விட்டுட்டு போக இஷ்டம் இல்ல.. அதான் கால் பண்ணிட்டேன்" என்று கூற, சத்யா பெயரை கூறியதிலேயே அமைதியாகிவிட்டாள் நந்தினி.

"நீயும் வாயேன் தான்யா! போற வழி தானே? நானே ட்ரோப் பண்ணிடுறேன்!" ஜீவன் தான்யாவை அழைக்க,

"அப்பா வந்துட்டு இருக்காங்க ண்ணா.. நீங்க போய்ட்டு வாங்க.. நான் பார்த்துக்குறேன்" என்றுவிட்டாள்.

வழியில் ஜீவனிடம் கதை பேசி, இறங்கி ஓரிடத்தில் காபியும் எடுத்துக் கொண்டு என நேரம் அழகாய் கடந்தது நந்தினிக்கு.

"இங்க இருக்குற காலேஜ்ல கூட்டிட்டு வர இவ்வளவு நேரமாங்க?" என சிரித்தபடி கேட்ட ஜெயாவை பார்த்தால் யாரும் நம்ப தான் செய்வார்.

"டிராபிக்ல மெதுவா தான் வந்தோம்"" என்று முடித்துக் கொண்டான் ஜீவன்.

"எப்படி இருக்க நந்து? காலேஜ் எல்லாம் எப்படி போகுது.. எக்ஸாம் எப்ப?" என அவளுடன் பேசியபடி உள்ளே செல்ல,

"காபி குடிக்கிறியா டா?" என்றார் விஜயலக்ஷ்மி மகளிடம்.

"நீங்க இருங்க த்தை.. நான் காபி போடுறேன்" என ஜெயா எழுந்து கொள்ளப் பார்க்க,

"அதெல்லாம் வேண்டாம்.. கொஞ்ச நேரத்துல சாப்பிடலாம்.. வரும் போது தான் காபி குடிச்சோம்" என்றான் ஜீவன்.

திக்கென்று ஆனது நந்தினிக்கு. ஜெயா முகத்தில் எதுவும் காட்டிக் கொள்ளாமல் இருக்க, அதுவே இன்னும் பயம். விஜயலக்ஷ்மி கூட மகன் எதுவும் பேசாமல் இருக்கலாம் என்று தோன்ற, அவன் சென்றதும் மருமகள் என்ன பேச போகிறாளோ என்றபடி நின்றார்.

*************************

"என்ன டா வீட்டுப் பக்கம் வந்திருக்க அதிசயமா?" என்று வைதேகி கேட்க,

"இது தான் நீங்க வரவேற்குற லட்சணமா?" என்றான் சத்யா.

"ஊரை விட்டு போற கழுதை பத்து பைசா வேண்டாம்னு சொல்லிட்டு போணுது.. அப்படியே போயிரும்னு பாத்தா வேலை கிடைக்கல.. நான் உருப்படலனு மாச மாசம் ரூவா கேட்டு போனப் போடுது.. அதை கூப்பிட்டு நடுவீட்டுல வச்சு நான் என்னத்த செய்ய?" என்று அன்னை அவனை மொத்தமாய் வைத்து செய்ய,

"நிஜமா வேலை கிடைக்கல ம்மா.. இப்ப என்ன? பணம் அனுப்புனா பின்னாடி நான் தர மாட்டேனா? இன்னும் ரெண்டு வருஷம் தான்.. காலேஜ் முடிக்கவும் என் கைக்கு காக்கி சட்டை வரவும் சரியா இருக்கா இல்லையா பாருங்க.. அப்ப சும்மா அள்ளி அள்ளி தரேன் உங்களுக்கு" என அன்னையிடம் வசனம் பேச,

"ஏன் காக்கி சட்டை? கூர்கா வேலைக்கு போக போறியா இல்லை..." என்று கூறும் முன்,

"ம்மா!" என்று அவரை நிறுத்தியவன்,

"ஒரு நல்ல வார்த்தை வருதா வாயில.. போலீஸ் ஆக போறேன்னு சொன்னேன்!" என்றான்.

"அதான! எதாவது நடக்குறதை பேசினா தானே? அதுக்கு கூர்காவே மேல! எண்ணத்தையாச்சும் உளறிட்டே இரு!" என்றவர் அடுப்பில் இருப்பதை கிளற,

"நான் வர்றேன்னு தெரிஞ்சி தானே ஆடு குழம்பாகி இருக்கு!" என்று சிரித்தான் சத்யா.

உண்மை தான் என்றாலும் சொல்லி விடுவாரா?

"நினைச்சுக்க! ஊருல இருந்து பெட்டி பெட்டியா கொண்டாந்த உனக்கு தான் கறி அவியுதுன்னு.." என்று பேசியபடி இருக்க,

"தெரியும் ம்மா! எவ்வளவு தூரம் தான் இப்படி பேசுறீங்கன்னு பார்ப்போம்!" என்றவன், நிஜமாகவே போலீஸ் ஆக விரும்புவதாய் கூற,

"உருப்பட்டன்னா சரி தான்!" என்றவர்,

"ஆமா அந்த புள்ள என்ன சொல்லுது?" என்றார் ஹஸ்கி வாய்ஸில். அதில் சத்தமாய் சிரித்துவிட்டான் சத்யா.

"உங்கப்பா வந்துர போறாரு கொஞ்சம் மெல்லத் தான் சிரி!" என்றவர் எட்டி வெளியே பார்க்கவும் மறக்கவில்லை.

"மருமக எப்படி இருக்கான்னு கேட்குறீங்க.. அதை சத்தமா தான் கேட்குறது!" என்று இன்னும் அவன் சிரிக்க,

"நீ பேசுறது எல்லாம் கேட்க வெல்லமாட்டம் இனிக்க இனிக்க தான் இருக்கு.. ஒன்னும் ஆவுற கதையானு தான் தெரியல" என்றார் பெருமூச்சுடன்.

"அதெல்லாம் நடக்கும் போதும் தெரியும்!" என்றவன் அன்னையுடன் கதை பேசி அங்கேயே நின்று குழம்பையும் ருசி பார்க்க,

"எல்லாம் நல்லா தானே போவுது? அங்கேயே உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லல?" என்றார் வைதேகி.

"எனக்கு என்னம்மா பிரச்சனை வர போது?" என்றான் அவனும் இலகுவாய்.

"ஊரு பக்கமே வர்ல.. ரெண்டு மாசம் முன்ன திடீர்னு போனப் போட்டு ரொம்ப பாசமா பேசிட்டு நான் எங்கேயும் போய்ட்டா என்னை மறந்துராதீங்கன்னு சொன்ன.. என்னவோ உங்கப்பா தான் ரொம்ப பயந்துட்டார் நீ அப்படி சொல்லவும்" என்று கூற,

"அப்ப கூட நீங்க பயப்படல.. அப்படித்தானே?" என்றான் அந்த நாளின் நினைவை மனதில் கொண்டு வந்து.

"கொஞ்சம் வெறுக்குன்னு தான் இருந்துது.. கழுத எங்க போயிற போறன்னு ஒரு எண்ணம்.. அதான் சரினு உங்கப்பாவையும் வாய மூடிட்டு இருக்க சொன்னேன்" என்ற பதிலில் கொஞ்சமாய் சிரித்தான்.

சந்தியா பற்றிய எந்தவொரு செய்தியும் இங்கே சேர்த்துவிடவில்லை அவன். எதற்கு தேவை இல்லாமல் அவர்கள் மனதில் கலக்கத்தை கொடுக்க என விட்டுவிட்டான்.

"உங்க அப்பா வர்ற நேரம் தான்.. போய் உட்காரு. ம் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்!" என்று கூற, சரி என்று சென்றான் அவன்.

"துரை எப்போ வந்தாரு?" என்று வீரபாகுவும் அப்போது தான் உள்ளே நுழைய,

"காலையில தான் வந்தான்.. உட்காருங்க சாப்பிடலாம்.. அப்போ அவன் வாரது தெரிஞ்சி தான் நீ கறி எடுக்க போக சொல்லி இருக்க.. ஏன் டி என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?" என்று அன்னையிடம் தந்தை கேட்க,

"ம்மா! இளம் கறியா இருக்குதா இல்ல இவருக்கு தானன்னு கொழுப்பை அள்ளி போட்ருக்கானா கடைக்காரன்?" என்று வேறு சத்யா கேட்டு வைக்க, வீரபாகு முறைக்கவும்,

"உன் வாய வச்சுட்டு கொஞ்ச நேர் சும்மா இரேன் டா.. சாப்பிடாம படுத்துற போறாரு!" என எவ்வளவு மெல்ல கூற முடியுமோ அவ்வளவு மெல்ல கூறினார் வைதேகி.

"அவன் கூட சேர்ந்து உனக்கும் ஏத்தம் கூடி போச்சு டி.. " என்றவர் சாப்பிட அமர,

"அவர் சாப்பிட்டு போனதும் கூப்பிடுங்க!" என்று கூறி அறைக்குள் சென்றுவிட்டான் சத்யா.

"என்னவாம்? ரோஷத்துல சாப்பிட மாட்டானாமா?" வீரபாகு கேட்க,

"அதெல்லாம் நீங்க சாப்பிட்டப்புறமா கொட்டிக்குவான்.. நீங்க சீக்கிரம் சாப்பிட்டு போய் தூங்குங்க.." என்று இருவரையும் வைதேகி தான் கட்டி வைத்து பேசினார்.

தொடரும்..
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
நந்தினி அண்ணி நடந்துகிறது ஆச்சர்யம் தான் எப்போ எரிமலை வெடிக்குமோ 🙄🙄🙄🙄🙄
 
Top