• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிரின் தொடக்கம் 7

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 7

"உங்களுக்கு புண்ணியமா போகும்.. தயவு செஞ்சு இங்க இருந்து போயிருங்க.. எங்களுக்கு எதுவும் வேண்டாம்.. இன்னும் ஒரு பொண்ணு இருக்கா.. நாங்க அவ வாழ்க்கையை பாக்கணும்.. படிப்பு தான் முக்கியம்னு சந்தியா சொல்லிகிட்டே இருப்பா.. ஆனா நான் இவளை படிக்க வைக்க போறது இல்ல.. உயிரை வாங்குற அந்த படிப்பு என் இந்த பொண்ணுக்கு தேவை இல்ல" என தனது இளைய மகளைக் கட்டி அழுதார் சந்தியாவின் அன்னை.

"இல்ல ம்மா! நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க!" சத்யா எடுத்து கூற முயல,

"எங்களுக்கு நீங்க நல்லது பண்ணனும்னு நினைச்சா இங்க இருந்து போயிருங்க அது போதும்" சந்தியாவின் தந்தையும் கூறினார்.

சந்தியாவின் பெற்றோரை வைத்து ஒரு முறை.. ஒரே ஒரு முறை கமிஷனரிடம் சென்று முறையிடலாம்.. ஆடியோ ஆதாரத்தோடு சேர்த்து நேராய் இவர்கள் சென்று நின்றால் இது நிச்சயமாய் கை கொடுக்கும்.. எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என முடிவாய் எண்ணி தான் வந்திருந்தான் சத்யா.

"உங்க நிலைமை புரியுது.. ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிடுறேன்.. உங்க பொண்ணு மாதிரி இன்னும் பல பொண்ணுங்க அங்கே பாதிக்கப்பட்டிருக்காங்க.. என்ன! இன்னும் சாகல... ஏதோ வாழனும்னு வாழ்ந்துட்டு இருக்காங்க.. அவ்வளவு தான் வித்தியாசம்.. நீங்க எதிர்த்து நின்னா..." என்றதுமே!

"நின்னோமே! அவனை எதிர்த்து கேள்வி கேட்டோமே!" என்ற சந்தியாவின் அன்னை,

"அவன் என்ன பண்ணினான் தெரியுமா? என்ன பண்ணினான் தெரியுமா?" என சத்யாவின் சட்டையை பிடித்தவர் கண்கள் ரத்தமென சிவந்திருக்க,

"என் பொண்ணு படத்தை... எனக்கு.. காட்டி.. என்னை.. உயிரோட... கொன்னுட்டான்.." என்று தலையில் அடித்து அழ, அவரை தன்னோடு சாய்த்துக் கொண்ட சத்யாவின் கண்களிலும் நீர் வர தாள முடியவில்லை அவனால்.

அழுதபடியே அவர் தரையோடு அமர்ந்துவிட, பெற்ற தகப்பனாய் அதைக் கேட்க முடியாமல் நின்றிருந்தார் சந்தியாவின் தந்தை.

அப்பொழுது தான் புரிய ஆரம்பித்திருக்கும் பருவம்.. குழந்தை முகம் தான்.. அக்காவிற்கு என்ன என்று புரிந்தும் புரியாமலுமாய் அழுது நின்ற அவள் தங்கையை எண்ணிய போது சத்யாவால் அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை.

"போலாம் டா!" என வாசலில் நின்ற சங்கரிடம் கூற, கண்களை துடைத்த சங்கர் சத்யாவின் கைகளைப் பிடித்தான்.

"மச்சி!" என்ற சங்கர் குரல் கரகரத்து வர,

"அவங்க சூழ்நிலை தெரிஞ்சும் நான் இங்க வந்தது தான் தப்பு சங்கர்.. என்னால... என்னால முடியலை டா.. பாவம் டா இவங்க எல்லாம்" என்று சங்கரின் கைகளை தன் நெற்றியில் வைத்துக் கொண்ட சத்யா ஏங்கி அழ, அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டான் சங்கர்.

வாசலைத் தாண்டவும் பின்னோடே வந்திருந்தார் சந்தியாவின் தந்தை.

"ஒரு நிமிஷம் தம்பி!" என நிறுத்தியவர், சத்யா கண்களை அழுத்தமாய் துடைத்து தன்னை தானே சமாளித்து திரும்பி நிற்கவும்,

"என்னால எங்கேயும் வர முடியாது.. எங்களை கோழையா கூட நினைச்சுக்கோங்க.. இருக்கறதை காப்பாத்திக்க நினைக்குறோம் சாமி.." என்று கூற,

"என்னால புரிஞ்சிக்க முடியுது ப்பா.. நிச்சயமா நான் இனி உங்களை வற்புறுத்த மாட்டேன்" என்றான் சத்யா.

"படிக்குற பையன்.. அவனுங்களுக்கு தண்டனை வாங்கி தரனுமுன்னு நீங்க தவிக்கது எனக்கு புரியுது.. என்னால உதவ முடியலைன்னாலும் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சத சொல்லுறேன்.. உங்களால முடிஞ்சா அவனுங்களுக்கு தண்டனைய வாங்கி குடுங்க.." என்று கூறவும்,

"வேண்டாம் ப்பா! அந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்.. அதை கேட்குற தெம்பும் தைரியமும் நிச்சயமா எனக்கும் இல்ல.. கடவுள்னு ஒருத்தன் இருந்தா தீர்வு கண்டிப்பா கிடைக்கும்" என்றவன் கையெடுத்து கும்பிட்டு கிளம்பினான்.

ஸ்ரீதர் வாயால் கேட்டதோடு, சந்தியாவின் தாய் கூறிய சொற்களுமே சத்யாவை நொறுங்க செய்திருக்க, தெளிவாய் கேட்டு தன்னால் உடையாமல் இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

அதனாலேயே தவிர்த்தவன் விடுதிக்கு வந்து சேர்ந்த போது மணி மூன்றை நெருங்கி இருந்தது.

"அவனுங்கள சும்மா விட கூடாது டா சத்யா! ஏதாவது செய்யணும் டா.. கொன்னுடலாம் டா.. கொன்னுடலாம்.. இவனுங்க எல்லாம் மனுஷனே இல்லை.." என்ற சங்கர் மனம் முழுதும் துடித்துக் கொண்டிருந்தது ஒவ்வொன்றாய் கேட்க கேட்க.

அடுத்து என்ன என்று யோசிக்க யோசிக்க தலை வெடிப்பதை போல ஒரு வலி சத்யாவிற்கு.

அடுத்த நாள் நந்தினி வெகு சீக்கிரமே வகுப்பிற்கு வந்தவள் வாசலைப் பார்த்த வண்ணம் இருக்க, தான்யா வந்து சேர்ந்தாள்.

"சங்கர், சத்யா போன் பண்ணினாங்களா?" தான்யா கேட்க,

"இல்ல.. போன் பண்ணினாலும் எடுக்கல.. நானும் அவங்களுக்காக தான் வெயிட் பண்றேன்.. சத்யா ரொம்ப அப்செட்டா போனான்.. நேத்து கால் பண்ணப்பவும் சங்கர் தான் பேசினான்.. இவன் பேசவே இல்லை" நந்தினி வருத்தமாய் கூற,

"சரி சரி வரட்டும் கேட்கலாம்.. கவலைப் படாதே!" என சமாதானம் செய்தாள் தான்யா.

நீண்ட நேரம் காத்திருந்து வகுப்பும் ஆரம்பித்து விட சத்யா, சங்கர் இருவருமே வந்து சேரவில்லை. நந்தினி அதில் சோர்ந்து தான் போனாள். சத்யாவை அதிகமாய் தேடினாள் என்பதும் உண்மை.

தலமையாளர் அறையில் தனியாய் நின்றிருந்தான் சத்யா. இரவு முழுதும் உறங்காததில் சங்கர் அதிகாலையில் லேசாய் கண்ணயர்ந்து உறங்கிவிட, அவனிடம் சொல்லிக் கொள்ளாமல் அறையில் இருந்து வெளிவந்து விடுதிக்கும் வெளியில் வந்திருந்த சத்யாவைக் காணாமல் அவனை தேடி தேடி அலைந்து கொண்டிருக்கிறான் சங்கர்.

எந்த பிரச்சனை என்றாலும் தன்னோடு போகட்டும் என்று நினைத்த சத்யா சங்கரிடம் சொல்லிக் கொள்ளாமல் அவனுக்கு தெரியாமல் தான் கடைசி முயற்சியாய் கல்லூரி முதல்வரைக் காண வந்திருந்தான்.

"என்ன நந்தினி! எதுக்காக சத்யா பிரின்சிபால் ரூம் முன்னாடி நிக்கிறான்?" என ஒரு பெண் சொல்லிவிட்டு அமர்ந்த பின் தான் அவன் கல்லூரி வந்ததே நந்தினிக்கு தெரியும். ஆனாலும் உடனே சென்று பார்க்க முடியாதே!

வகுப்பு நடைபெறும் நேரம் வேற! என்ன சொல்லி செல்ல? என அவள் யோசனையில் இருக்க, அங்கே சத்யாவை உள்ளே அழைத்திருந்தார் அவர்.

நடந்ததில் தனக்கு தெரிந்ததுடன் ஆதரமாய் நேற்று இரவு ஸ்ரீதர் நண்பர்களுடன் குடித்து விட்டு பேசியதையும் அவரிடம் காட்ட, அவர் முகத்தில் வேதனையான புன்னகை.

"இதுக்கு என்ன சார் மீனிங்? எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சு தான் நடக்குதுன்னு எடுத்துக்கலாமா?" கொஞ்சமும் பயம் இல்லை அவன் குரலில். மாறாய் அத்தனை ஆதங்கம்.

"போலீஸ் சொல்றாங்க சார்! இந்த காலேஜ்க்கு பொண்ணுங்களை அனுப்ப நான் ரெக்கமன்ட் பண்றது இல்லைன்னு.. அப்ப காலேஜ்க்கு சம்மந்தம் இல்லாமல் இல்லையே?" என்று கேட்க,

"அந்த போலீஸ் நாலு வருஷத்துக்கு முன்ன இந்த காலேஜ் எப்படி இருந்துச்சுன்னு உன்கிட்ட சொல்லலயா பா?" என்றார் மிக அமைதியாய்.

"ஒழுக்கத்துக்கு பெயர் வாங்கின காலேஜ்.. இந்த காலேஜ்ல பசங்கள படிக்க வைக்கணும்னு பேரண்ட்ஸ் ஆசைப்படுற காலேஜ்.. அந்த பெயர் இருக்குறதால தான் இப்ப வரைக்கும் பெஸ்ட் காலேஜ்ஜா இருக்கு.. எல்லாம் இந்த ரவுடி வந்த பின்னால தான்" என்று டேபிளில் குத்த,

"அப்புறம் ஏன் சார்? எல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்படி விட்டு வச்சு இருக்கீங்க? நாலு வருஷம்னு சொல்றிங்க.. இந்த நாலு வருஷத்துல எத்தனை பொண்ணுங்க என்ன ஆனாங்கனு எதாவது தெரியுமா? கொஞ்சமாவது அவங்களை நினச்சுப் பார்த்திருப்பிங்களா?"

"உன் பேர் என்ன ப்பா?" அவர் கேட்க,

"சத்ய பிரியன்.. எம்சிஏ ஃபர்ஸ்ட் இயர்" என்றதே, 'என்ன செய்வீர்கள்?' என்பதை போல இருந்தது.

"ஸ்ரீதர் மேல இதுவரை எந்த பொண்ணும் காலேஜ்ல கம்பளைண்ட் பண்ணல.. அத்தோட நான் ஒரு மனுஷனா இந்த காலேஜ்ஜை விட்டு வெளில இருக்கும் பொழுது எனக்கு சில தகவல் வந்திருக்கு.. அதை நான் இந்த காலேஜ் சேர்மன்கிட்டயும் சொல்லி இருக்கேன்.. கம்பளைண்ட்னு வந்தா மட்டும் ஆக்ஷன் எடுத்தா போதும்னு சொல்லிட்டார்.. இதுநாள் வரை இப்படி ஒரு நியூஸ் வெளில ரகசியமா ஸ்பிரேட் ஆனது... இப்ப இந்த சந்தியானால வெளிப்படையா ஸ்பிரேட் ஆகியிருக்கு.. ஆனா என்ன யூஸ்?" என்று அவர் கேட்க,

"அப்ப நான் கொண்டு வந்த ஆதாரம் எல்லாம் ஒன்னும் இல்ல இல்ல உங்களுக்கு? அக்ஷன் எடுக்க மாட்டிங்க? அப்படிதானே?" என்றான்.

"நான் வெறும் இந்த காலேஜ்ல ஒரு எம்ப்லாயீ தான் சத்யா.. சேர்மன் அந்த ஸ்ரீதர் அப்பா என்ன சொல்றரோ அதை தான் கேட்பாரு.. அவருக்கும் வேற வழி இல்ல.. இந்த காலேஜ் முக்கியம் அவருக்கு"

"நான் சொல்றது உங்களுக்கு புரியலையா? பொண்ணுங்க வாழ்க்கை நாசமா போய்ட்டு இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன்.. சேர்மன், அவன் அப்பன்னு கதை சொல்லிட்டு இருக்கீங்க?" என்றவன் திரும்பி நின்று நெற்றியை நீவிக் கொண்டான்.

"ரெண்டு நாள் சுத்தி சுத்தி நியாயம்னு ஒன்னு கிடைக்கும்னு தான் எல்லா பக்கமும் போனேன்.." என்றவன் கைகளை விரித்தான்..

"அதெல்லாம் செத்து நாலு வருஷம் ஆச்சு போல.." என்றவன்,

"இந்த காலேஜ் எனக்கு தேவை இல்லை" என்று கூற அவனை ஆச்சர்யமாய் பார்த்தார்.

"சந்தியா உனக்கு யாரு பா?" அவர் கேட்க,

"எனக்கு ஒரு தங்கச்சியோ இல்ல எனக்கு வேண்டப்பட்ட பொண்ணாவோ இருந்தா தான் நான் கேட்கணும்னு நினைக்குறிங்க இல்ல.. அப்போ சந்தியா இடத்துல உங்க பொண்..." என கூற வந்தவன்,

"வேண்டாம்! இனி எந்த பொண்ணும் சந்தியா ஆக வேண்டாம்" என்று திரும்பி நடக்கத் தொடங்கி விட,

"ஸ்ரீதர் அப்பா பதவில இருக்க ஆளு சத்யா.. நீ என்ன செய்றதா இருந்தாலும் அது உனக்கு வெற்றியா இருக்கணும்னு என்னால மனசளவுல வேண்டிக்க மட்டும் தான் முடியும்.. நீ சொன்ன மாதிரி எனக்கு பொண்ணு இருக்கு.. அந்த பொண்ணுக்கு அப்பனா யோசிச்சா ஸ்ரீதர் வாழவே தகுதி இல்லாதவன்னு புரியுது.. ஆனா தனி ஒருவனா அவங்களை பகச்சுக்க..." என்றவர் முகத்தில் வெறுமையாய் ஒரு புன்னகை. அது நான் கையாலாகாதவன் என்று காட்டியது.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
சந்தியாவின் குடும்பத்தை
சந்தித்த பிறகு தாங்காத பாரமாக
சத்யா துடித்திட
சங்கரை விட்டு விட்டு
சத்யா தனியாக போராட
சாதகமாய் ஆதாரம் இருந்தும்
சரியாக எங்கு போனாலும்
சதியாக செய்கிறது விதி..
 
Top