• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 19

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 19

இரண்டு திருமணமும் நல்லபடியாய் நடந்து முடிய, ராம் நிவியுடன், சக்தி நந்தினியையும் வீட்டிற்கு அழைத்து வந்து பாலும் பழமும் கொடுத்து கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட சிறியவர்களுக்கும் அது தேவையாய் இருந்தது.

செல்லம்மாவும் சக்தியுடன் சகுந்தலா வீட்டிற்கு தான் வந்திருந்தார். அங்கேயும் இங்கேயுமாய் ஊர்விட்டு ஊர் அலைய அதுவும் புதிதாய் கல்யாணம் ஆனவர்களை அலைய வைக்க முடியாது என்பதால் மூன்றாம் நாள் சக்தி நந்தினியை அனுப்பி வைக்க சொல்லிவிட்டு செல்லம்மா கிளம்புவதாக சொல்ல, சகுந்தலா அவரை விடவே இல்லை.

சகுந்தலாவிற்கு ஏற்கனவே செல்லம்மாவையும் அவர் குணத்தையும் பிடிக்கும். இப்போது அவர்கள் இல்லையென்றால் தன் மகளின் நிலை? என்ற நினைவில் மேலும் நன்றி கூறி இங்கேயே இரண்டு நாள் தங்க சொல்லவும், அவரும் ஒருநாள் மட்டும் தங்க சம்மதித்தார். அதன்பின் மணமக்களை வரவேற்கவும் ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் சொல்லவும் அவர் அங்கு செல்ல வேண்டும் என சொல்ல, சகுந்தலாவிற்கும் அது சரி எனப்பட்டதால் அவரும் சம்மதித்தார்.

நிவிக்கு ராம் அவனின் அறையை காட்டி சிறிது நேரம் ஓய்வெடுக்க சொல்ல அவளும் சரி என்றாள்.

ராம் நிவியை அவன் அறையில் விட்டு நேராய் கௌதம் முன் பயன்படுத்திய, இனி பயன்படுத்த போகும் அறைக்கு தான் வந்தான் ஓய்வெடுப்பதற்கு. அவனுக்கு முன்பாகவே கௌதமும் அங்கு தான் இருந்தான்.

"என்னடா புது மாப்பிள்ளை. காத்து இந்த பக்கம் அடிக்குது? உன் பொண்டாட்டி முதல் நாளே விரட்டி விட்டுட்டாளே!" கௌதம் கிண்டல் செய்ய, "டேய் அடங்கு! நான் தான் அவளை அங்க விட்டுட்டு வந்தேன்" ராம் சொல்ல,

"ஏன்டா! புதுசா கல்யாணம் ஆனவன் சொல்ற பதிலா இது? ஆமாம் அவள அங்க விட்டுட்டு நீ ஏன் இங்க வந்த?"

"ஏன்டா கேள்வியா கேட்டு கொல்ற? அவளும் பாவம் டா. இவ்வளவு நேரம் நின்னுட்டு இருந்தால்ல டையர்டா இருக்கும் அதான். அதுமட்டும் இல்ல நான் சக்திகிட்ட பேசணும் டா. நீ கொஞ்சம் சக்திய இங்க கூட்டிட்டு வர்றியா?" என ராம் கேட்க,

"ஏன்டா? எதாவது பிரச்சனை பண்ண போறியா? இப்ப என்ன பேசணும் சக்திகிட்ட" ராமை ஆராயும் பார்வையுடன் கௌதம் சொல்ல,

"டேய்! அதெல்லாம் ஒன்னும் இல்ல! ஒருவாட்டி சக்திகிட்ட பேசிட்டா நந்தினி லைஃப் பத்தி எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்" என்றதும் அவன் சொல்வதும் சரி எனப்பட்டது கௌதமிற்கு.

இருவரும் பேசிக் கொண்டிருக்க, கதவு தட்டும் சத்தத்தில் கௌதம் சென்ற போது வாசலில் சக்தியே நின்று கொண்டிருந்தான்.

"சக்தி! வாங்க.. உள்ள வாங்க. உங்களை பத்தி தான் பேசிட்டு இருந்தோம். ராம் உங்ககிட்ட பேசணும்னு சொன்னான். நானே கூப்பிட வரலாம்னு நினச்சேன்" கௌதம் அவனை உள்ளே அழைத்து வர, ராமும் அவனை வரவேற்றான்.

"என்ன பேசணும் அத்தான்? நானும் உங்ககிட்ட பேசணும்னு தான் வந்தேன்" சக்தி நேராய் கேள்விக்கு வர, அந்த அறை சில நொடிகள் அமைதியானது.

"இல்ல சக்தி.. உங்களுக்கு.." என ராம் இழுக்க, "அத்தான் நீங்க ரெண்டு பேரும் எப்பவும் போல என்னை நீ வா போ ன்னே கூப்பிடுங்க. இப்படி பேசுறது எனக்கு என்னவோ போல இருக்கு" சக்தி சொல்ல, கேட்ட இருவர் முகத்திலும் புன்னகை.

"ஓகே சக்தி! நந்தினி இப்ப தான் படிப்பையே முடிச்சா! அவசரமா பாக்கலைனாலும் நல்லா விசாரிச்சு தான் இவ்வளவு தூரம் கொண்டு வந்தோம்" எப்படி சொல்வது என ராம் தடுமாற, அதை சக்தி உடனே புரிந்து கொண்டான்.

"நானுமே நிஜமா இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கல அத்தான். அதை தான் உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன். உங்ககிட்ட இதை சொல்ல எனக்கு கஷ்டமா தான் இருக்கு. ஆனாலும் சொல்லிதான் ஆகனும். தயவுசெஞ்சு என்ன தப்பா நினைச்சுக்காதீங்க" சக்தி முகத்தில் பயமும் குழப்பமும் அவ்வளவு தேங்கி இருக்க, ராமும் கௌதமும் கூட பயந்தே விட்டார்கள். அவர்கள் கற்பனை குதிரையும் தறிகெட்டு ஓட ஆரம்பித்தது.

"சக்தி என்ன சொல்ல வர்ற? தெளிவா சொல்லு" கௌதம் படபடத்தான்.

தயங்கியும் பயந்துமாய் அவன் காதலை அவளுக்கு கூறும் முன் அவள் அண்ணன்களிடம் சொல்லியே விட்டான் சக்தி.

"நிஜமா நான் எந்த பிரச்சனையும் பண்ண நினைக்கல. இப்படி வந்து முடியும்னும் நான் எதிர்பார்க்கல. புரிஞ்சுக்கோங்க அத்தான். நான் விரும்பினேன் தான் ஆனால் அது நந்தினிக்கே தெரியாது. அம்மா தான் உங்ககிட்ட மண்டபத்தில் எனக்காக கேட்ருக்காங்க. நீங்க பின்னாடி தெரிஞ்சு எதுவும் நினைச்சுக்க கூடாதுன்னு தான் இப்ப சொல்றேன்" பயம் இருந்தாலும் முழுதாய் சொல்லிவிட்டான்.

ராம் கௌதம் இருவருக்குமே இவன் பதில் சுத்தமாய் எதிர்பாராத ஒன்று. என்ன பதில் சொல்வது என்றுகூட தெரியவில்லை. சில நிமிடங்களுக்கு தொடர்ந்தது அந்த மௌனம்.

இது தான் காதலா? உண்மையான காதலாக இருந்தால் மட்டும் தான் இது சாத்தியம் என்று தான் தோன்றியது கௌதமிற்கு.

"கிரேட் சக்தி. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில. பட் ஒரு நல்லவன் தான் எங்க நந்தினிக்கு கிடைச்சிருக்கான்னு சந்தோசமா இருக்கு. அண்ட் ராம் என்ன சொல்ல வர்றான்னா.. நந்தினி படிச்சிருக்கா, அவ வேலைக்கு போகணும்னு ஆசைபட்டா. இதுல உங்க ரெண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் பின்னாடி வர கூடாது. சோ நீங்க என்ன நினைக்கிறீங்கனு சொல்லிட்டா.. அதுக்கு ஏத்தபடி நந்தினிகிட்ட இப்பவே சொல்லலாம் அதான்.." எப்படி ஆரம்பிப்பது எப்படி முடிப்பது என தெரியாமல் விஷயத்தை மட்டும் கூறிவிட்டான் கௌதம்.

அதற்கு என்ன பதில் சொல்ல போகிறான் என ராமும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"இதுல என்ன இருக்கு அத்தான். நந்தினிக்கு விருப்பம்னா அதையே செய்யட்டும். இதுல நான் சொல்ல எதுவும் இல்ல. படிக்கறதே இதுக்கு தானே! நானும் ஆசைப்பட்டேன்தான்.. ப்ச் எல்லார் நினைக்குறதும் நடக்குதா என்ன?" இறுதி வரிகளில் அவன் குரலில் வலி தெளிவாய் தெரிந்தது. ஆனாலும் அவன் பதிலில் இருவரும் அசந்து தான் போனார்கள்.

கிராமத்தில் இருப்பவன், படிப்பு வாசம் இல்லாதவன், இன்னும் என்னென்னவோ ராம் நினைத்து இருக்க, அவன் தெளிவான பேச்சும், எதையும் மறைக்காமல் கூறியதுமே அவனிடம் இருவரும் விழுந்து விட்டனர்.

சக்தியை பற்றிய தன் கோணம் முழுதும் மாறியதில் எழுந்து அவனைக் கட்டிக் கொண்டான் ராம்.

"தேங்க்ஸ் சக்தி! அண்ட் சாரி டூ. நான் என்னென்னவோ நினச்சு தான்.. சொல்லபோனா மனசே இல்லாமல் தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். இப்ப முழு மனசோட சொல்றேன். நீ மாப்பிள்ளையா கிடைச்சதுக்கு ரொம்பவே சந்தோசம்" என மனதார கூறவும், சக்தியும் நிம்மதியுடன் புன்னகைத்தான்.

நந்தினியை இனி இவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருவருக்குமே வந்தது.

"நந்தினி எங்கே?" கௌதம் கேட்க, "அத்தை கூட பேசிட்டு இருந்தா அதான் நான் இந்த பக்கம் வந்தேன்" என்றான் சக்தி. அங்கே நந்தினிக்கும் சிலபல உபதேசங்களை கூறிக் கொண்டிருந்தார் சகுந்தலா.

"சக்தி அதிகம் படிக்காட்டியும் நல்லவன் தான். உன்னை நல்ல பாத்துப்பான் தான். அதுல எனக்கு சந்தேகமே இல்ல. நீயும் பொறுமையான பொண்ணு தான். ஆனாலும் நீ நினச்ச மாதிரி போற வீட்ல இருக்க முடியுமான்னு தெரில டா. நீதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்" தன் மடியில் படுத்திருக்கும் மகளின் தலைமுடியை வருடியவாறே கூறினார் சகுந்தலா.

"ம்மா! ஏன் ரொம்ப யோசிக்குறீங்க. அதான் எல்லாம் முடிஞ்சுடுச்சே! இனி என்ன நடந்தாலும் சமாளிச்சு தான் ஆகணும். பாத்துக்குறேன் மா" என்ன நினைத்து அவள் கூறினாள் என்று தெரியாவிட்டாலும் அவள் சமாளித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்கு இருந்தது.

அதை கேட்டுக் கொண்டே வந்தான் சக்தி. இப்போதும் அவள் எண்ணம் புரியவில்லை. சக்தி வந்ததும் நந்தினி எழுந்து அமர்ந்தாள்.

அதன்பின் இரவு உணவுக்காக அனைவரும் கூடி விட, ராம் தனது யோசனையை அங்கே முன் வைத்தான்.

"அம்மா, அடுத்த வாரம் சின்னதா ஒரு ரிசப்ஷன் வைக்கலாம். நிவிய பிசினஸ்ல எல்லாருக்கும் இன்ட்ரோடியூஸ் பண்ணனும். அப்படியே நந்தினி சக்தியையும் இன்ட்ரோ பண்ணிடலாம்"

ராம் சொல்லவும் தான் அந்த யோசனை கௌதமிற்கும் சரியாய்ப்பட்டது. சகுந்தலாவும் நிவி அம்மா பேச்சை கேட்டு ரிசப்ஷன் வேண்டாம் என்று சொல்லி இருந்ததால் இப்போது ராம் சொல்வதை செய்ய தயாரானார்.

சக்தியிடம் கௌதம் கேட்க, அவனும் சம்மதம் சொல்லவும் செல்லம்மாவும் சந்தோஷமாய் தலையாட்டினார். அன்று இரவே இரண்டு ஜோடிகளுக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"நிவி இப்ப தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்குடா. ப்பா நினச்சு பார்க்கவே முடில" ராம் சொல்ல, நிவிக்கு தான் இப்போது குற்ற உணர்ச்சியாய் இருந்தது, தன் அண்ணனை பற்றிய செய்தி சொல்லாமல்.

"ராம், நான் கொஞ்சம் பேசணும்" நிவி சொல்ல, அவளை வாகாய் தன் மேல் சாய்த்துக் கொண்டான்.

"ம்ம் பேசு டா".

"இல்ல! என்னோட அண்ணா!.." என்று இழுக்கவும், நிவியின் தலை கோதி கொண்டிருந்த அவன் விரல்கள் தானாய் அதன் வேலையை நிறுத்தியது. இவ்வளவு நாளும் அவள் அண்ணா என்று பேசும் போதும் எல்லாம் அவன் கௌதமை சொல்கிறாள் என நினைத்தவனுக்கு இப்போது தான் அது ராஜ் குமார் என புரிந்தது.

"நிவி ப்ளீஸ்! நான் மனசளவுல இன்னைக்கு ரொம்பவே நொந்து போய்ட்டேன். உன்கூட இருக்கும் போதுதான் மைண்ட் ரிலாக்ஸ்சா இருக்கு. இப்ப எதுவும் பேச வேண்டாமே!" விரல்கள் தன் வேலையை தொடர, ராம் கஷ்டப்பட்டுத் தான் அமைதியாக பேசினான்.

"சாரி சாரி ராம்! நான் தான் கஷ்டப்படுத்திட்டேன்" அவன் முகம் பார்த்து அவள் கெஞ்ச, அவன் முகத்திலும் புன்னகை.

"சாரி கேட்குற நேரமா இது?" அவள் கண்களை பார்த்து அவன் கேட்க, புதிதாய் ஒரு உணர்வுக்குள் சிக்கினாள் அவள்.

"இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா?" தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் காதருகில் குனிந்து, ஹஸ்கி வாய்ஸில் அவன் கேட்க, முதுகுத்தண்டு ஜில்லிட்டது நிவிக்கு.

"நிவி! ஐ லவ் யூ சோ மச்!" மெலிதாய் அணைத்திருந்த கைகள் அவளை இறுக்க அவளுக்கோ இதயத்தில் ரயில் ஓடும் சத்தம் சத்தமாய் கேட்டது.

"ரா..ராம்.." கழுத்தில் முகத்தை புதைத்தவனோ மோகத்தில் இருக்க இவளின் சத்தம் அவனுக்கு கேட்டால் தானே!

"ராம் ப்ளீஸ்.." முயன்று குரலை வரவழைத்து அவள் அழைக்க, அவனும் உடனே விலகி விட்டான் அவளின் ஏதோ ஒருமாதிரியான குரலில்.

"சாரி நிவி.. சாரி.. ஏதோ ஒரு... " அவளின் அனுமதி இல்லாமல் அவன் முன்னேறி இருக்க, அவளின் தடை அவனை பெரிதும் பாதித்தது.

"இல்ல.. நீங்க தப்பா நினச்சுக்கலைனா இப்ப நமக்கு இது வேண்டாமே!" ஏனோ ராஜ்குமார் பற்றிய உண்மையை அவனிடம் சொல்லாமல் அவள் வாழ்வை ஆரம்பிக்க பிடிக்கவில்லை.

நிவி எவ்வளவு தைரியமான பெண் என்பதை இத்தனை நாட்களில் கூடவே இருந்து பார்த்தவன் அல்லவா! அவளின் ஒரு தயக்கத்தை புரிந்து கொண்டான்.

"இட்ஸ் ஓகே டா. நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். ஃபர்ஸ்ட் உனக்கு இங்க எல்லாம் செட் ஆகட்டும்" தலையை கோதிக் கொண்டவன் எழுந்து விட்டான்.

இதற்குமேல் அவள் அருகில் இவனால் பார்த்து கொண்டு மட்டும் இருக்க முடியாது. சில நொடிகள் ஆனாலும் அவள் கூந்தல் வாசம் இன்னும் அவனுள் இருக்க, மூச்சு முட்டியதில் எழுந்து கொண்டான்.

"சாரி ராம். நான் உங்களை ஹர்ட் பண்ணிட்டேனா?"

"ச்சச்ச! நமக்குள்ள சாரி தேங்க்ஸ் எல்லாம் இனி தேவை இல்ல. ஓகே! நீ தூங்கு நிவி. இதோ வந்துடுறேன்" என்றவன் பால்கனி சென்று அங்கிருந்த கம்பிகளை கெட்டியாக பிடித்து கொண்டான்.

எவ்வளவு நேரம் நின்றான் என்பதே தெரியவில்லை. திரும்பி வந்து பார்த்தபோது நல்ல உறக்கத்தில் இருந்தாள் அவள். அவள் நெற்றியில் முத்தமிட்டு கைகளை பிணைத்து, அவள் முகத்தை பார்த்துகொண்டு இருந்தவனும் அப்படியே தூங்கிப் போனான்.

அதேநேரம் சக்தி நந்தினி அறையில் நந்தினியின் வார்த்தைகளில் பேயறைந்தது போல நின்றான் சக்தி.

பால் டம்ளருடன் உள்ளே வந்தவள் அதை சக்தியிடம் கொடுத்துவிட்டு சாதாரணமாய் கட்டிலில் அமர, சக்திக்கு தான் தொண்டைத் தண்ணீர் வற்றிப் போனது.

"நந்தினி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்ன தயக்கம்? ஏன் தயக்கம்? தான் காதலித்த பெண் தன் அருகில் தன் மனைவியாய் உரிமையாய் இருக்க, அவனோ அப்படி தயங்கினான்.

"ம்ம்ம்ம்" என்று மட்டும் அவள் உதடுகள் முணுமுணுக்க, இப்போது சுத்தமாய் அவனுக்கு பேச்சு வரவில்லை. காலையில் இருந்து எதுவும் பேசவில்லை சரி. இப்போதாவது எதாவது பேசினால் தானே இவன் மனதில் இருப்பதை சொல்ல முடியும்?.

"திடிர்னு நம்ம கல்யாணம் நடந்ததால உனக்கும் என்னை ஏத்துக்க கஷ்டமா தான் இருக்கும்.. நீ என்ன நினைக்குறன்னு சொன்னா தானே தெரியும்" முதலில் அவள் மனதில் இருப்பதை சொல்லட்டும் என்று தான் கேட்டான்.

"இனி சொல்லி?" சட்டென அவள் பதில் இவ்வாறு வர, குழம்பி விட்டான் சக்தி.

"என்ன சொல்ற?" சக்தி கேட்க,

"இப்ப கேட்டத ஏன் மேடையில தாலி கட்டுறதுக்கு முன்னாடி கேட்கலனு கேட்குறேன்?"

சத்தியமாய் இப்படி ஒரு கோணத்திலும், இப்படி ஒரு கேள்வியையும் அவன் எதிர்பார்க்கவில்லை.

"நந்தினி கௌதம் அத்தான்கிட்ட கேட்டேன். அவங்க உன்கிட்ட பேசிட்டதா தான் சொன்னங்க..." கொஞ்சம் இல்லை ரொம்பவே பதறிவிட்டான் சக்தி.

"நீங்க என்கிட்ட கேட்டீங்களா? இல்லையே! என் வீட்ல சொல்றதுக்கு நான் சம்மதிப்பேன்னு தெரிஞ்சு தானே அவங்ககிட்ட மட்டும் பேசினீங்க? எப்படி.. அந்த மாப்பிள்ளை ஓடி போவான்னு முன்னாடியே தெரியுமா? அதனால தான் லவ் பண்ற பொண்ணு கல்யாணத்துக்கு அட்சதை தூவ தைரியமா ஊர்ல இருந்து வந்தீங்களா?"

அடுத்தடுத்த அதிர்ச்சி அவனை மொத்தமாய் தாக்கியது. என்ன சொல்கிறாள்? அவன் ஓடிப் போனது எனக்கு எப்படி தெரியும்? என யோசித்து கொண்டிருந்தவனுக்கு அவளின் அடுத்த கேள்வி பேரதிர்ச்சி. நான் காதலித்தது இவளுக்கு எப்படி? கௌதம் அத்தான் சொல்லியிருப்பாரோ? அவன் பல யோசனைகளில் இருக்க அவளே தொடர்ந்து பேசினாள்.

"எப்படியோ! உங்களுக்கு நீங்க நினச்சது நடந்துடுச்சு. ரொம்ப சந்தோசமா இருப்பிங்களே?"

"நந்தினி நீ வீணா என்னை சந்தேகப்படுற. கல்யாணம் நின்னதே எனக்கு தெரியாது. கௌதம் அத்தான் தான் போன்..." அவன் பேசிக் கொண்டு இருக்க, வெடித்து அழுதாள் அவள்.

"போதும் நிறுத்துங்க.. கௌதம் அண்ணா, ராம் அண்ணா, அம்மா ஏன் அவ்வளவு பேரையும் சொல்லுறீங்களே என்கிட்ட ஏன் நீங்க கேட்கல? நான் என்ன பாவம் பண்ணினேன்? நானும் எல்லாரையும் மாதிரி சாதாரண வாழ்க்கை தான் கேட்டேன். கடவுள் எனக்கு மட்டும் ஏன் இப்படி என் தலையில எழுதினான்னு தெரியலையே" அவள் புலம்பி அழ, இவன் இதயம் நின்று துடித்தது.

இந்த திருமணத்தை ஏற்று கொள்ள மிஞ்சி மிஞ்சி போனால் காலஅவகாசம் கேட்பாள் என்று தான் அவன் நினைத்தான். அவள் இப்படி அழுவதற்கு காரணம் புரியவில்லை. அவன் கண்ணிலும் அவனை அறியாமல் கண்ணீர் வர, உள்ளுக்குள் இறுகினான்.

"என்னன்னு சொல்லு நந்தினி. என்னால முடிஞ்சா உனக்கு உதவி செய்யுறேன்" அவன் முயன்று குரலை சாதாரணமாக்கி கேட்டான்.

அந்த திருமண மண்டபத்தில் வைத்து மாப்பிள்ளையாய் வந்தவன் ஓடிப்போக, யார் பேச்சையும் எதிர்த்து பேசும் எண்ணம் துளியும் இல்லாமல் தான் இந்த திருமணத்திற்கு அவள் அமைதியாய் இருந்தது.

இதில் செல்லம்மா தான் சக்தி பற்றி சகுந்தலாவிடம் பேசினார் என்பதைத் தெரியாமல், சக்தி கௌதம் மூலம் அவன் ஆசையை நிறைவேற்றி கொண்டதாக நினைத்து கொண்டாள் நந்தினி.

ஆம்! சில நாட்களுக்கு முன்பே நந்தினிக்கு சக்தியின் காதல் தெரியும். அதை அவள் கொஞ்சமும் பொருட்படுத்தவே இல்லை. இப்போது அவனே கணவனாய்!.

எல்லாப் படித்த பெண்களுக்கும் இருக்கும் சாதாரண கனவு தான் நந்தினி உடையதும். அவளின் வசதிக்கு அவள் அன்னை எப்படி இடத்தில் பார்ப்பார் என்பதில் இருந்து தனது குடும்பம் என்ற ஒன்றை அவள் கிராமத்தில் நினைத்து பார்த்ததே இல்லை. கணவன், குழந்தை, தனக்கென ஒரு வேலை. அவ்வளவு தான் அவளின் ஆசையும்.

சக்தியை கோவில் திருவிழா, திருமண விழா போன்ற விஷேசங்களுக்கு செல்லும் போதும் பார்த்திருக்கிறாள். வேஷ்டி சட்டையிலும், மாட்டுத் தொழுவிலும், வயலில் உழுகையிலும் தோட்டத்திலுமாய்.

ராம் அண்ணனின் மடிப்பு கலையாத சட்டை, கம்பீரம், அவன் பேசும் விதம், ஆஃபீஸ்ன் ஆளுமை இப்படியே இருந்து பழகிய நந்தினிக்கு கணவன் என்று வரும்போதும் அப்படி எதிர்பார்ப்பதில் தவறில்லை தானே?

இப்போது உதவுகிறேன் என சக்தி சாதாரணமாய் சொல்ல, சிவந்த கண்களில் கோபத்தை தேக்கி அவனைப் பார்த்தாள்.

"என்ன உதவி செய்வ? இந்த கல்யாணத்தை இல்லைனு ஆக்கிடுவியா?" நந்தினி கேட்க, மொத்தமாய் மறித்து விட்டான் சக்தி.

இந்தளவுக்கு அவள் இந்த திருமணத்தை வெறுப்பாள் என தெரிந்து இருந்தால், எப்பாடு பட்டாவது அவன் இதை நிறுத்தி இருப்பானே! தான் சுயநலமாய் நடந்து கொண்டதாகவே தோன்றியது அவனுக்கு.

இவ்வளவு அவள் பேசிக் கேட்டதே முள் மேல் நிற்பது போல வலிக்க, அதற்கு மேல் அவனால் அங்கு நிற்கவோ அவளிடம் சமாதானம் பேசவோ முடியவில்லை.

அந்த அறையை விட்டுப் போனாலும் கேள்வி அதிகம் வரும் என்பதால், அங்கேயே இருந்த ஒற்றை சோஃபாவில் விழுந்தான்.

மனம் முழுதும் ரணமாய் வலிக்க, கண்களில் கண்ணீர் வர தயாராய் இருந்தது. அதை எல்லாம் தாண்டி நந்தினிக்கு நல்லது செய்ய வேண்டிய கட்டாயம். அதை எப்படி செய்வது என்ற யோசனை மட்டுமே அவனிடம். கண்களை திறந்தால் அவள் துடிப்பதை பார்த்து மீண்டும் தானே வலித்து கொள்ள வேண்டும் என நினைத்தவன் இறுக மூடிக் கொண்டான்.

முகத்தை மூடி அழுதவளோ, அவனின் இந்த செய்கையில் மேலும் கோபம் வர, எதுவுமே செய்ய இயலாமல் அழுது கொண்டே இருந்தாள். கண் மூடி இருந்தாலும் அவன் தூங்கி இருக்க வாய்ப்பில்லை. கண் திறந்து இருந்தவளுக்கு தூக்கம் அருகில் இல்லவே இல்லை.

இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ இந்த விதி?

தொடரும்..
 

MEGALAVEERA

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 10, 2021
Messages
542
Nice epi
So rendu jodium சந்தோசமா இல்ல
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
606
சக்தி வீட்டில் வைத்து அவன் புத்தகங்களை பார்த்து கொண்டு இருந்தாளே அன்று தெரிந்து கொண்டு இருப்பாளோ சக்தியின் காதலைப் பற்றி
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
சக்தி வீட்டில் வைத்து அவன் புத்தகங்களை பார்த்து கொண்டு இருந்தாளே அன்று தெரிந்து கொண்டு இருப்பாளோ சக்தியின் காதலைப் பற்றி
Brilliant pa nenga
 
Top