• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 21

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 21

"கடவுளே! நான் எந்த தப்பும் பண்ணல. ராம்க்கு என்னை ரொம்ப புடிக்கும். எந்த காரணத்துக்காகவும் அவர் என்னை வெறுத்துட கூடாது" நிவி தன் வேண்டுதலுடன் கண் மூடி நிற்க, எந்த வேண்டுதலும் இல்லாமல் நன்றி கூறி நின்றான் ராம்.

வாசு தன் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் சேர்த்து கடவுளை தண்டிப்பது போல, கடவுள் முன் நின்றாலும் எதையும் வேண்டாமல் எங்கோ பார்த்துக் கொண்டு நிற்க, கௌதம் அவளருகில் நின்று அவளுக்காகவே வேண்டிக் கொண்டான்.

"என்ன நீ சாமி கும்பிடாம பராக்கு பாத்துட்டு நிக்குற?" அவள் நின்ற தோற்றமே கௌதமிற்கு அவள் எண்ணத்தை கூறினாலும், கேள்வி கேட்டான்.

"சாமி கும்பிட்டா மட்டும் என்ன நடந்திட போகுது? என் அம்மாக்கு கண்ணு வந்திடுமா? என் அக்காக்கு காலு வந்திடுமா இல்ல எனக்கு தான் என்னோட முகம் கிடைச்சிடுமா? பேசாம உங்க வேலையை பாருங்க.. நான் என் வேலையை பாக்குறேன்" என்றவள் அங்கிருந்த செடிகளை பார்க்க செல்ல, சீக்கிரமே இதெல்லாம் நடக்கும் என நினைத்து சிரித்துக் கொண்டவன் அதற்கும் கடவுள் துணையை அழைத்தான்.

சக்தி என்ன வேண்டுவது என்று கூட தெரியாமல் கடவுளையே பார்த்து நின்றான். விரும்பிய ஒருத்தியை கையில் தந்தற்காக நன்றி கூறவா? இல்லை அவளின் மனம் புரியாமல் மணம் புரிந்ததற்கு மன்னிப்பு கேட்கவா?. இல்லை இதை எதையும் கேட்கவில்லை. அவளிற்கு சந்தோசத்தை மட்டுமே கொடு. அது எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என நினைத்து தான் நின்றான்.

"நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் இப்படி ஒரு திருமணம்? பிடித்த குடும்பத்திற்காக அவர்கள் வார்த்தையை ஏற்றதுக்காகவா இந்த தண்டனை? இனி என் வாழ்க்கை?" உண்மை புரியாமலும் சக்தியின் மனதை தெரியாமலும் கடவுளை தவிர வேறு யாரிடம் சொல்வது என தெரியாமலும் கடவுளிடமே புலம்பிக் கொண்டிருந்தாள் நந்தினி.

படித்து பட்டம் பெற்றவள் தான். ஆனாலும் உலக அறிவு என்பது அவளை பொருத்தவரை தான் குடும்பம் இருக்கும் இந்த செல்வநிலை தான்.

படிக்காத ஒருவன் அவளுக்கு நாட்டுப்புறத்தான் தான். அவனால் தன் நிலையை புரிந்து கொள்ளவே முடியாது. சுதந்திரமாக வெளியே சென்று வர முடியாது. வேலைக்கு செல்ல அனுமதி கேட்க கூட முடியாது என்பதே அவளின் எண்ணம்.

அவள் இதை பற்றி தன் வீட்டில் பேசியிருந்தால் கூட அவர்கள் புரிய வைத்து இருப்பார்களோ என்னவோ! பெரியவர்கள் முன் அவள் சக்தியுடன் சேர்ந்தே நடமாட அவர்களுக்கு இவளின் எண்ணம் தெரியவே இல்லை.

"கௌதம் பீச் பக்கம் தானே? அப்படியே ஒரு ரௌண்ட்ஸ் போய்ட்டு வரலாமா?" ராம் கேட்க, "எனக்கு ஓகே! சக்திகிட்ட கேளு" என்றதும் "எனக்கும் ஓகே அத்தான்" என்றான் அவன்.

இப்போது கூட நந்தினியின் நினைப்பு, பீச் எல்லாம் இவன் பார்த்திருக்க மாட்டான் அதனால் தான் உடனே தலையை ஆட்டுகிறான் என்பதாகவே இருந்தது.

மேலும் அவளின் தவறின் ஆரம்பமே அவன் தொழில் என்றால்? ஆம்! விவசாயம் செய்பவனுக்கு என்ன இருந்து விட போகிறது என்பதே!

அவன் வீட்டின் அளவையும் அழகையும் உள்ளே சென்று பார்த்தவளே இப்படி நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது அவளுக்கு தெரியவில்லை.

அவனுக்கு இருக்கும் சொத்தின் மதிப்பும் அவளுக்கு தெரியவில்லை. ஏதோ இல்லாதவனுக்கு தன்னை கொடுத்து விட்டதாக நினைப்பு. பார்க்க தானே போகிறாள்.

"வாவ் ரொம்ப அழகா இருக்கு ராம்" நிவி பரந்து விரிந்து கிடந்த அந்த கடலை பார்த்து விழி விரித்து சொல்ல, அந்த அலைகள் போலவே ராம் மனமும் தள்ளாடியதோ!

"ராம் நாம போய் கால் நனைக்கலாம் வாங்க" நிவி சொல்ல, "ம்ஹ்ம்! நான் வர்ல. நீ போய்ட்டு வா" என்றவன் அலைகளுக்கு சில அடி தூரத்தில் அமர,

"டூ பேட்" என்றவள் சந்தோசத்துடனே அலையை நோக்கி ஓடினாள்.

"டேய் ஆனாலும் அநியாயம் பண்றிங்க டா! இந்த வெயில்ல சாவகசமா உட்கார்ந்திருக்கியே? ஆபிஸ்ல அஞ்சு நிமிஷம் AC ஒர்க் ஆகலைனா என்ன பாடு படுத்துவ?" என்றவாறு ராம் அருகில் அமர்ந்தான் கௌதம்.

"சக்தி இங்க வா! நந்தினி எல்லாம் இப்போதைக்கு வர மாட்டா" கௌதம் அழைக்க, சக்தி புன்னகையுடன் அவர்கள் அருகில் வந்தான்.

அந்த கடற்கரைக்கு வரும்வரை விதியே என அமர்ந்திருந்த நந்தினி ஈரக்காற்று முகத்தில் பட்டதும் மொத்தமாய் மாறி குழந்தையானாள்.

நிவி பேசிக் கொண்டிருக்கும் போதே நந்தினி அலைக்கு அருகில் ஓடி விட்டாள். அவள் தண்ணீரில் விளையாடுவதை தான் ரசித்து இவ்வளவு நேரமும் பார்த்துக் கொண்டிருந்தான் சக்தி.

நந்தினியும் நிவியும் மாறிமாறி தண்ணீரை மேலே தெளித்து விளையாட, வாசு அவர்களையும் அலைகளையும் பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டே கால்களை அலை தொட்டு செல்லும் தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.

சக்தி, கௌதம், ராம் மூவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும் மூவரின் கண்களுமே தன் இணைகளின் மேல் தான் இருந்தது.

சக்திக்கு இப்போது முன்பை விட அதிகமாக வலித்தது. அவன் மனம் அவளின் இந்த சந்தோசம் தன்னை கண்டால் போய் விடுமே என பதறியது.

சில நிமிடம் அங்கேயே அமர்ந்திருந்த கௌதம் எழ, "ம்ம்ம்க்க்ம்ம்" என ராம் தொண்டையை சரி செய்து கௌதமை கிண்டல் பார்வை பார்க்க,

"உங்களுக்கு என்ன பா! ரூட் கிளீயர் ஆகிட்டு. நானும் அதுக்கு ஏற்பாடு பண்ண வேண்டாம்?" என்றவன் வாசுவை நோக்கி நகர்ந்தான்.

"நீ போகலையா சக்தி?" ராம் கேட்க, "இல்ல அத்தான்! எனக்கு கடல்னா கொஞ்சம் பயம் தான். நீங்க போய்ட்டு வாங்க" என சொல்ல, ராமும் நிவியை நோக்கி நடந்தான்.

சக்தி மனதில் இருந்த பாரம் எல்லாம் மறந்து கொஞ்சம் ஆசுவாசம் அடைய, அங்கேயே இருந்து நந்தினியை பார்க்க முடியாமல் சில தூரம் நடக்கலாம் என்று மணலில் நடந்தான்.

ராம் நிவி கைகளை பிடித்துக் கொண்டு அலைகளில் நிற்க, அந்த சுகம் மனதில் எப்போதும் நீங்கா நினைவாய் அமையும் என்பதை போல இருந்தது.

"என்ன யோசனை?" கௌதம் கேட்க, அவனை திரும்பி பார்த்த வாசு எதுவும் சொல்லாமல் மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

"ப்ச்! எல்லாரும் காதலி முகத்தை பார்த்து அவங்க பீலிங்ஸ்ஸ புரிஞ்சிப்பாங்க. நீ எனக்கு அந்த பாக்கியத்தை தரவே மாட்ட போலயே" கௌதம் சொல்ல, அது எப்படி அவளை தாக்கும் என்பதை மறந்திருந்தான்.

மீண்டும் கௌதமை திரும்பி பார்த்த வாசுவின் கண்களில் இருந்த ஏதோ ஒன்று அவனை அமைதியாக்கியது.

"என்னாச்சு வாசு?"

"இதுக்கு தான் கௌதம் சார் நான் சொன்னேன். நான் சாதாரண பொண்ணு இல்ல. நீங்க எதிர்பாக்குற எதுவும் என்கிட்ட இல்ல"

"வாசு நான் தப்பா எதுவும் சொல்லலயே!. நான்.."

"போதும்! உங்க எதிர்பார்ப்பு தப்பில்ல. ஆனா அதுக்கு நான் ஆளில்ல. என்னால யாருக்குமே சந்தோசத்தை கொடுக்க முடியாது" வாசு சொல்லிக்கொண்டு இருக்க,

"வாசு உடனே எமோஷனல் ஆகாத! நான் சொன்னதுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கு. அதை யோசி! உன் முகத்துல என்ன? சொல்லு என்ன?" அவன் சீரியஸ்ஸாய் கேட்க, அவள் விழி அகலாமல் அவனை முறைத்துப் பார்த்தாள்.

"சும்மா சும்மா கோபப்படாத வாசு! முகம் மட்டும் தான் ஒரு பொண்ணுக்கு அழகுன்னு நீ நினைக்குற. நீ மட்டும் இல்ல உலகத்துல இருக்க எல்லா பொண்ணுங்களும் அப்படி தான் நினைக்குறாங்க. அதனால தான் ஒருத்தன் உன் முகத்த அழிச்சதும் நீ உனக்குள்ள சுருங்கின? இல்லைனு சொல்லு பாக்கலாம்?"

கௌதம் இவ்வளவு சீரியஸ்ஸாய் பேசி இவள் பார்ப்பது இது இரண்டாவது முறை. அவன் சொல்வது முற்றிலும் உண்மை எனும் போது அவளால் பதில் பேச முடியவில்லை.

"உனக்கு துணையா எப்பவும் நான் இருப்பேன். அது எந்த சூழ்நிலையா இருந்தாலும்.. இப்ப நான் கேட்டது உனக்கு தப்பா தெரிஞ்சதுனால தானே கோபம்? உன் முகத்துல இருந்து அந்த துப்பட்டாவ எடுத்துட்டு அதே கேள்விய என் முகத்தை பார்த்து கேளு. அப்ப ஒத்துக்குறேன் நீ சொல்ற மாதிரி நீ சாதாரண பொண்ணு இல்லன்னு" அவன் கேட்க, எப்படி முடியும் என்னால் என்பதை போல இருந்தது அவள் பார்வை.

"என்ன சொன்ன? நான் எதிர்பார்க்குற மாதிரி பொண்ணு நீ இல்லையா? நான் என்ன எதிர்பார்த்தேன் சொல்லு? சொல்லு நான் என்ன எதிர்பார்த்தேன்?"

'இப்போது ஏன் இவ்வளவு கோபப்படுகிறான்? அவனே தப்பு செய்து அவனே கோபப்படுவானா?' மீண்டும் அவன் சொல்ல வருவது தெரியாமல் கோபம் தான் வந்தது அவளுக்கு.

"ஆமா! நீங்க சொல்றதுலயே தெரிலையா? அழகான பொண்ணா இருந்தா அவ முகத்தை பார்த்தே எல்லாம் கண்டுபுடிச்சு சேவை செய்விங்க" அவள் சொல்லி முடிக்கும் முன் கை நீட்டி தடுத்தான் கௌதம்.

"லூசா நீ? நான் இவ்வளவு நேரம் சொன்னது உன் காதுலயே விழலையா? பசங்கன்னாலே இப்படி தான்னு முடிவே பண்ணிட்ட? நான் உன் முகத்தை பார்த்து உன் பீலிங்ஸ் புரிஞ்சுக்கனும்னு சொன்னேன். இந்த கடலை நீ ரசிக்குறத என் கண்ணால பாக்கணும்னு சொன்னேன். அதுக்கும் நீ பேசுறதுக்கும் என்ன சம்மந்தம்? இந்த துப்பட்டாகுள்ள நீ ஒளிஞ்சிட்டு இருக்க வாசு. அதுல இருந்து வெளில வா. அடுத்தவங்க பார்த்தா பாக்கட்டும். நினைச்சா நினைக்கட்டும். அதுக்கு நீ வெட்கப்பட கூடாது. உன் முகத்துல ஆசிட் அடிச்சா நீ சமூகத்துல இருந்து விலகி போய்டுவனு நினச்சானே அவன் வெட்கப்படனும். ஆனா நீ அவன் ஆசப்பட்ட மாதிரியே ஒதுங்கி போயிட்ட. நீ யாருன்னு நீ தான் நிரூபிக்கனும் வாசு. இப்பவும் நான் சொல்றேன், உன் முகத்தை பார்க்க தான் நான் ஆசைப்படுறேன். அது எப்படி இருந்தாலும் காலம் முழுக்க அந்த முகத்தை மட்டும் பார்க்க தான் ஆசைபடுறேன். திரும்ப இந்த மாதிரி பேசி என்னை கோபப்பட வைக்காத. உன்னை விட்டு விலகிடுவேன்னும் நினைக்காத" என்றவன் வேகமாக காருக்கு செல்ல, விழிகளில் நீருடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் வாசு.

ராம் கூப்பிட கூப்பிட நிற்காமல் போகும் கௌதமை பார்த்துவிட்டு வாசுவை பார்க்க, அவள் நின்ற கோலத்தில் எதுவோ சரி இல்லை என உணர்ந்து நிவியை அவளிடம் அனுப்பிவிட்டு கௌதம் போகும் திசையில் சென்றான்.

நந்தினியும் அப்போது தான் விளையாட்டில் இருந்து வெளிவந்தவள் சுற்றி பார்க்க, நிவி வாசுவுடனும் கௌதம் பின் ராமும் செல்ல சக்தியை தேடி கண்களை சுழற்றினாள்.

எங்கோ வெறித்து பார்த்து கொண்டு கைகளை கட்டியவாறு நின்ற சக்தியை ஒரு நிமிடம் இமைக்க மறந்து தான் பார்த்தாள். அந்த இடமும் அவன் நின்ற விதமும் அவளையும் அறியாமல் அவளுள் பதிந்து போனது.

ராம் கேட்க கேட்க பதில் இல்லாமல் காரில் ஏறி அமர்ந்து கொண்டான் கௌதம். நிவியும் வாசுவிடம் எதுவும் கேட்காமல் அழைத்து வர, நந்தினி அவர்கள் பின்னாலேயே சென்றாள்.

சக்தியும் வந்து சேர, அமர்க்களமாய் ஆரம்பித்த பயணம் அமைதியாய் வீடு வந்து சேர்ந்தது.

காரில் இருந்து இறங்கும் முன் கௌதம் "சாரி டா! என்னால எல்லாம் சொதப்பிடுச்சு. ச்ச!".

"என்ன சொதப்பிச்சு? அதெல்லாம் ஜாலியா தான் போச்சு. அங்கே நடந்தத அப்படியே விட்டுட்டு பிரீயா உள்ள வா. வாசு நீயும் தான்" ராம் சொல்ல,

"சாரி அண்ணா!" என ராமிடம் கூறியவள் "இது மாதிரி இனி என்னை வெளில கூப்பிடாத டி" என நிவியிடம் சொல்ல, கோபத்தில் டேஷ்போர்டை ஓங்கி குத்தினான் கௌதம்.

"டேய்.. அண்ணா.." ராம், நிவி இருவரும் கௌதமை பார்த்து கத்த, வாசு அவனை மிரட்சியுடன் பார்த்தாள். சக்தி நந்தினி இருவரும் இதில் தலையிடாவிட்டாலும் ஏதோ பிரச்சனை என புரிந்து அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"பாரு டா! இவ்வளவு நேரம் நான் சொன்னது எதையுமே காதுல வாங்காம என்ன சொல்றா பாரு" கௌதம் ராமிடம் எகிற,

"அண்ணா! வாசு இப்ப வரையும் என்னோட பிரண்ட் மட்டும் தான். நீங்க கோபப்படுற அளவுக்கு என்ன நடந்துச்சுனு எனக்கு தெரில. ஆனால் ப்ளீஸ் இனிமேல் இப்படி அவகிட்ட கோபப்படாதீங்க. அவளுக்கும் கொஞ்சம் டைம் கொடுங்க" என்றவள் இறங்கிக் கொள்ள, ராம், நந்தினி, சக்தி அனைவருமே இறங்கினர்.

வாசு இருக்கும் நிலைக்கு அவள் உள்ளே செல்ல மாட்டாள் என்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்ததால் அவள் இறங்கும் முன் "நானே ட்ராப் பண்ணிடுறேன்" என்ற கௌதமை யாருமே தடுக்கவில்லை, வாசுவும் தான்.

வழி முழுதும் அவள் அமைதியாகவே வர, அவனும் எதுவும் பேசவில்லை. கண்ணாடி வழி அவளை பார்க்கவும் மறக்கவில்லை. வீடு வந்ததும் அவள் இறங்கி வீட்டினுள் செல்லும் முன் "வாசு" என அவன் அழைக்க, திரும்பாமல் நின்றாள்.

"சாரி" என்றவன் அவள் பதிலை எதிர்பாராமல் கிளம்பிவிட்டான். இந்த சாரி இறுதியில் நடந்ததிற்கு மட்டும் தான் என அவளிற்கு சொல்லி புரிய வைக்க வேண்டியது இல்லை.

"என்னை தான் கோபக்காரன்னு சொல்லுவான். இவன் எப்ப இருந்து இப்படி கோபப்பட ஆரம்பிச்சானோ?" ராம் நிவியிடம் வந்து புலம்பினான்.

"கௌதம் அண்ணா பண்ணினது சரி தான் ராம். எவ்வளவு நாள் தான் வாசுவை விட்டு புடிக்குறது? கொஞ்சம் ஷாக் டிரீட்மென்ட் தேவை தான். அண்ணா அவ்வளவு கோபப்பட்டாங்க அப்படினா அந்த அளவுக்கு வாசுவும் ஏதோ பேசியிருக்கானு அர்த்தம்" நிவி சொல்ல, ராமும் புரிந்தும் புரியாமலும் தலையை உலுக்கிக் கொண்டான்.

அனைவரும் வந்ததும் செல்லம்மா அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, அடுத்த நாள் சக்தி நந்தினியை அனுப்பி வைக்க சொல்லி ஊருக்கு கிளம்பிவிட்டார்.

அதேபோலவே அடுத்த நாள் இருவரும் கிளம்பினர். நேற்று இருந்த மனநிலை முற்றிலும் மாறி அழுகை தான் வந்தது நந்தினிக்கு. சக்தி முன் அழக் கூடாது என அவள் வீம்புடன் இருக்க, அவனும் காலை 5 மணிக்கு அறையை விட்டு வெளியே சென்றவன் அந்த அறை பக்கம் வரவே இல்லை.

"அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ரேசெப்ஷன். ஒரு நாள் முன்னாடியே எல்லாரும் வந்துடுங்க சக்தி. அம்மாகிட்டயும் சொல்லிடு!" சகுந்தலா சொல்ல, "கண்டிப்பா வந்துடுறோம் அத்தை" என்றான்.

எட்டு மணிக்கெல்லாம் தயாராய் இருக்க, சகுந்தலாவிடம் நந்தினி ஆசிர்வாதம் வாங்கியவள் அன்னையை கட்டிக்கொண்டு அழுதாள். சக்தி எதுவும் செய்ய இயலா கையாளாகாதத் தனத்துடன் அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு நின்றான்.

தன் கண்ணீரை மறைத்து சகுந்தலா அறிவுரை கூறி அவளுக்கு கண்ணை துடைத்து விட ராம், நிவியிடம் விடைபெற்றவள் கௌதம் அருகே வந்தாள்.

"நான் வர்றேன் அண்ணா"

"போய்ட்டு வா டா" என்றவன் அவள் தலையை வருடிக் கொடுத்து,

"சக்தி ரொம்ப நல்லவன் நந்துமா. நம்மகிட்ட கூட இல்லாத நல்ல மனசு அவன்கிட்ட இருக்கு. சீக்கிரமே புரிஞ்சுப்ப. சொல்லணும்னு தோணுச்சு" என்றவன் கன்னத்தை தட்டி விடை கொடுக்க, 'அண்ணன் ஏன் இப்படி சொல்கிறான்? சக்தி எதுவும் சொல்லியிருப்பானோ?' என புரியாமல் குழப்பத்துடன் மதுரை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தாள்.

கௌதம் முதலில் கவனிக்காவிட்டாலும் நேற்று வெளியில் சென்றது முதல் ஒரு கண்ணால் அவர்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

நந்தினியின் விலகலும் சக்தியின் குழப்பமான முகமும் அவன் கண்களில் பட்டு எதையோ உணர்த்த, அதை நேரில் கேட்காமல் அவளே அவனை தெரிந்து கொள்ளட்டும் என விட்டுப்பிடித்தான்.

அடுத்து வந்த நாட்கள் ராம் நிவி தம்பதிகளுக்கு ஒவ்வொரு நாளும் அழகாய் விடிய, கௌதமிற்கு எப்போதும் போல தான் விடிந்தது.

வாசு மேல் கோபம் என்று இல்லை ஆனால் வருத்தம் இருந்தது. அவளை சாதாரண பெண்ணாக மாற்ற தான் அவன் அன்று அவ்வாறும் அவ்வளவும் பேசியது.

அதன்பின் ஒவ்வொரு முறையும் அவள் வேண்டுமென்றே இவனை பார்க்காமல் தவிர்க்க, இவனும் கண்டு கொள்ளாமல் விட்டான் இல்லை இல்லை விட்டுப் பிடித்தான்.

மதுரை சோழவந்தான் வந்தடைந்த சக்தி நந்தினி இருவரும் அது வரையுமே ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை. அவளுக்கு தேவையான அனைத்தும் பார்த்து பார்த்து செய்திருந்தாலும் தள்ளியே நின்றான்.

பேசக் கூடாது என்றும் நினைக்கவில்லை, பேச ஆசை இருந்தும் பேசவில்லை. அவளின் ஒவ்வொரு சொல்லும் கூர்வாழாய் தாக்க, தாங்க முடியாமல் தான் அவன் வாயை திறக்கவே இல்லை.

ஆரத்தி எடுத்து அவர்களை செல்லம்மா உள்ளே அழைத்து செல்ல, புது மண ஜோடிகளை காண என அங்கு கூடி இருந்தவர்களில் முக்கால்வாசிக்கும் மேல் பழைய பல்லு போன கிழவிகளே!

நந்தினியை அவர்கள் பிடித்து வைத்து கொண்டும் அவர்களிடம் நந்தினி படாதபாடு பட்டுக்கொண்டும் இருக்க, சக்திக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் இதற்கும் சேர்த்து தன்னிடம் தான் தனியாய் வந்து கத்துவாள் என்பதில் அவனுக்கு சந்தேகமே இல்லை.

அதை நினைத்து ஒரு பெருமூச்சு விட்டவன், "அப்பத்தா! நந்தினி இங்கன தான் இருக்க போறாங்க. போய் வேலைய பாருங்க. அவ்வளவு தூரத்துல இருந்து வந்தது அலுப்பா இருக்கும். கொஞ்சம் தூங்கிக்கட்டும்" என சொல்ல,

"மூணு நாளுல பொண்டாட்டிக்கு கொடி பிடிக்க ஆரம்பிச்சிட்டியாக்கும்" என நொடித்துக் கொண்டே சென்றனர் அனைவரும்.

"நீங்க அந்த ரூம்ல போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க! நான் வயல்வரை போய்ட்டு வந்துர்றேன்" என்றவனை பார்க்காமல் அவன் கைக்காட்டிய திசையில் சென்றவள், அவனின் அந்த மரியாதை விளிப்பையும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

உள்ளே சென்றவள் அறையை நோட்டமிட்டாள். அவள் அறையை விட பெரிதும் இல்லை சிறிதும் இல்லை. அளவாய் இருந்தாலும் சுத்தமாய் இருந்தது.

குறை சொல்ல எதுவும் இல்லை என்றதாலோ என்னவோ சக்தியை அந்த நேரம் மனதில் ஒதுக்கி வைத்துவிட்டு படுக்கையில் விழுந்தாள்.

'அடுத்து என்ன?' என்ற கேள்விக்கு விடை தெரியாமலே சக்தியும் அந்த வயல்வரப்பில் நடந்து கொண்டிருந்தான்.

நந்தினிக்கு திருமணம் என்ற கவலையில் ஒரு மாதமாக சுற்றிக் கொண்டிருந்தவன், அவளை மணந்தும் கூட இப்படி அதே முகத்துடன் என்பதைவிட அதை விடவும் வாடிய முகத்துடன் தான் சுற்றி வருகிறான்.

எவ்வளவு யோசித்தாலும் இந்த பிரச்சனைக்கு அவனுக்கும் விடை கிடைக்கவில்லை. கிடைத்த விடையை செயல்படுத்த கொஞ்சமும் துணிவில்லை.

பிடித்தவளுக்கு பிடித்தது தன்னை பிரிவது! அந்த பிரிவை பிடித்து கொடுக்க தன்னால் முடியும் என்று தோன்றவில்லை. அதற்கு மேல் வேறு வழியும் தோன்றவில்லை.

நந்தினியிடமே கேட்பது தான் இப்போது தனக்கு இருக்கும் அடுத்த வழி என நினைத்தவன் அதையே செயல்படுத்தும் முடிவுடன் வயல் வேலை எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்த்துவிட்டு வீடு திரும்பினான்.

தொடரும்..
 
Top