• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 22

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 22

மூன்று நாட்களுக்கு மேல் கௌதமால் வாசுவை பார்க்காமல் இருக்க முடியவில்லை. நான்காவது நாள் அவள் வீட்டு வாசலில் போய் இறங்க, அவள் விழி அகற்றாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் அருகில் அவன் வரும் வரையுமே!.

வாசு அவன் வருகையை எதிர்பார்க்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, "எப்பவும் போல ஃபார்மல் டிரஸ் தான் போட்ருக்கேன். ஏன் இப்படி வச்ச கண்ணு வாங்காம பாக்குற? அப்புறம் நான் எதாவது சொன்னா தாம்தூம்னு குதிக்க வேண்டியது!" என்றவன் அவள் பதிலை கூட கேட்காமல் அவளை தாண்டி வீட்டினுள் சென்றான்.

அன்று அவ்வளவு கோபமாக பேசிவிட்டு சென்றவன் இப்போது தான் அவளிடம் பேசுகிறான். நேரடி கோபத்தை பார்த்தபின் பயந்து தான் அவள் மூன்று நாட்களாக வெளியில் செல்லாமல் இருந்தது.

அவனும் இவளிடம் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றதும் கோபத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டவள், அவனே பேசாத போது நான் ஏன் பேச வேண்டும்? என தான் நினைத்துக் கொண்டாள்.

இப்படி திடீரென தன்முன் வந்து நிற்பான் என்றோ, அன்று எதுவுமே நடக்கவில்லை என்பதை போல பேசுவான் என்றோ இவள் எதிர்பார்க்கவில்லை.

அந்த அதிர்ச்சியில் நிற்கும் போதே அவன் உள்ளே சென்று விட்டான். சில நொடிகளில் தெளிந்தவள் ஒரு கண் அறியா சிரிப்புடன் உள்ளே சென்றாள்.

ஆம்! அன்று கௌதம் பேசிய பேச்சின் எதிரொலிப்பு தான் இந்த சன்ன சிரிப்பும். உள்ளே சென்றவள் கண்டது தன் அன்னை காலில் சாஸ்டாங்கமாய் விழுந்து கிடந்த கௌதமை தான்.

"கௌதம் என்ன பண்றீங்க? ம்மா! என்னமா பாத்துட்டு நிக்குறீங்க?" அவள் வேகமாக கேட்க, மெதுவாக எழுந்தான் கௌதம்.

"ஏண்டி இப்படி பதறுற? கௌதம் என்ன பன்றான்?" கைகளை காற்றில் துளாவிக் கொண்டே மல்லிகா கேட்க, தன் தலையிலேயே ஓங்கி கொட்டிக் கொள்ளலாம் போல இருந்தது வாசுவிற்கு.

'சாரி மா!' என கூறியவள் "உங்க காலூல தான் விழுந்து கிடக்குறாறு" என்றாள் அதே பதட்டத்துடன்.

"அய்யயோ! ஏய் என்னப்பா நீ? முதல்ல எழுந்துரு" மல்லிகா சொல்ல, "ம்மா! நான் அப்பவே எழுந்துட்டேன்" என்றான் வாசுவை பார்த்துக் கொண்டே.

"இப்ப ஏன் பா என் காலுல விழுந்த?"

"இல்லம்மா, ராம் கல்யாணத்துக்கு நானே உங்க எல்லாரையும் கூட்டிட்டு போகணும்னு நினச்சேன். ஆனால் அன்னைக்கு குடிச்சுட்டு ஏதேதோ உளறி.. சகுந்தலா அம்மா வேற பயங்கர டோஸ் குடுத்தாங்களா.. அதான் உங்க முகத்தை பார்த்து என்னால பேச முடியாதுன்னு வராமல் இருந்துட்டேன். மன்னிச்சுடுடுங்க. ஆனா நிச்சயமா நான் அடிக்கடி எல்லாம் குடிக்க மாட்டேன். யாருக்காச்சும் பர்த்டே, இல்ல ஏதாச்சும் பார்ட்டினா லைட்டா.. நிஜமா லைட்டா தான்மா குடிப்பேன்.. ஆனால் அதுவே தப்பாய்டுது! ப்ளீஸ் என்னை தப்பா நினச்சுக்காதீங்க அம்மா" அவர் கையை பிடித்து அவன் கெஞ்ச, வாசு ஏற்கனவே உருக ஆரம்பித்தவள் இப்போது கரைய ஆரம்பித்தாள்.

"அப்படி யாரு பர்த்டேக்கு மாமா குடிப்பிங்க?" சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டே வந்த அனாமிதா தான் கேட்டாள்.

அவள் மாமா என்ற அழைப்பை கௌதம் ஒரு சந்தோசத்துடன் அனுபவிக்க, வாசு அதை எல்லாம் கவனிக்கவேயில்லை.

"காஜல் அகர்வால் பர்த்டே அப்புறம் இலியானா பர்த்டே. இது மாதிரி எனக்கு புடிச்ச பொண்ணுங்களோட பர்த்டேக்கு தான் குடிப்பேன்" என்று சொல்ல, அனாமிதாவுடன் மல்லிகாவும் சிரித்து விட்டார்.

வாசு மட்டும் காதில் புகை வர அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நின்றாள். மல்லிகா அனுவுடன் கௌதம் பேசி சிரித்துக் கொண்டிருக்க, தன் அறையில் இருந்து வெளி வரவே இல்லை வாசு.

"ஓகே அனு! இப்ப கிளம்பினா சரியா இருக்கும் போகலாமா?" கௌதம் கேட்க, அனுவும் சம்மதமாய் தலை அசைக்கவும் இருவரும் எழுந்து கொண்டனர்.

தன் அறையில் இருந்தாலும் வாசுவின் கவனம் முழுக்க இவர்களிடம் தான் இருந்தது. "எங்கே போறாங்க?" தனக்குள் கேட்டுக் கொண்டவளுக்கு அப்போது தான் கௌதம் எதற்கு வந்தான் என்ற எண்ணமே வந்தது.

வேகமாக அவள் வெளியே வர கௌதம் அவளை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டான் வேண்டும் என்றே!.

"எங்க அக்கா போறீங்க?" அனுவிடம் வாசு கேட்க,

"உன்கிட்ட கௌதம் சொல்லலயா?" என்றாள்.

இருவருக்குள்ளும் இருக்கும் அந்த சிறு பிரச்சனையை அவள் சொல்லவில்லையே.

"இல்ல அனு! நான் தான் சொல்ல மறந்துட்டேன்" தன் மேலேயே பழியை போட்டுக் கொண்டவன், "இன்னும் ஒன் ஆர் டூ டேஸ்ல அனுக்கு எல்லாம்.. எல்லாமே சரி ஆகிடும். இன்னைக்கு டாக்டர் செக்கப்க்கு கூட்டிட்டு வர சொன்னாங்க" என்ற கௌதம் 'எல்லாம்' என்பதில் அழுத்தம் கொடுத்து கூறினான்.

"அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு தூரம் வரணும்? என்கிட்ட சொல்லி இருந்தா நானே கூட்டிட்டு வந்திருப்பேனே!" சமாதானமாக வாசுவே அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

அவள் சொல்வதை ஏற்றுக் கொண்டால் அவள் வழியில் செல்வது போல ஆகாதா? "சரி தான்! ஆனால் நான் முகம் தெரியாதவங்ககிட்ட பேசுறது இல்லையே!" என்றான்.

அவன் சொல்வதை கேட்ட அனுவும் மல்லிகாவும் இன்று வானத்துக்கும் பூமிக்கும் அவள் குதிப்பாள் என நினைத்திருக்க, மௌனமாக தலை குனிந்து கொண்டாள் அவள்.

அதுவே அவர்களுக்கு பெரிய ஆச்சர்யம் தான். முகத்தை பற்றி யாராவது பேசினால் மேலே விழுந்து கடிப்பவள் இன்று அமைதியாய் அதுவும் தலை குனிந்து..

"சரிம்மா நாங்க கிளம்புறோம்! நானே அனுவை ட்ராப் பண்ணிடுறேன். வர்றேன் வாசு" அம்மாவிடம் சொல்லியவன் வாசுவிடமும் சொல்லிவிட்டே கிளம்பினான்.

கௌதமிற்கு வாசுவினை பார்க்க பாவமாக இருந்தது. இப்போது கூப்பிட்டால் கண்டிப்பா தன்னுடன் வருவாள் தான். அவனுக்கும் அது ஆசை தான். ஆனால் அவள் முதலில் அவளுள் இருந்து வெளிவர வேண்டும் அதற்கு தான் இப்படி அவன் பேசுவதே. அதனால் சமாதானம் செய்யாமல், அதே நேரம் அவளின் மௌனமும் பிடிக்காமல் அவளிடமும் சொல்லிவிட்டு விடைபெற்றான்.

அனுவை அழைத்து சென்று ஹாஸ்பிடல் செக்கப் முடித்து அவனே கூட்டியும் வந்து சொல்லிவிட்டு தான் வீட்டிற்கு கிளம்பினான்.

இதில் வாசுவிற்கு தெரியாத இன்னொன்று அன்று முதல்நாள் அனுவை செக்கப் செய்த போதே, அங்கு பிரபல கண் மருத்துவரையும் வர வைத்து மல்லிகாவிற்கு எல்லா விதமான டெஸ்ட்டையும் எடுத்துவிட்டான்.

மல்லிகாவிற்கு பொருத்தமான கண் கிடைத்ததும் தானே சொல்வதாக டாக்டர் கூறியிருக்கிறார்.

இதை அவளிடம் மறைக்க வேண்டும் என நினைக்கவில்லை. அன்று அவள் பேசிய விதத்தில் இவன் மறந்து போயிருக்க, மல்லிகாவிற்கு பெரிதாக இது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் தான் வாசுவிடம் அவரும் சொல்லவில்லை.

"நந்தினி உனக்கு வீடு எல்லாம் ஓகேவா? எதாவது மாத்தணும்னா சொல்லு மாத்திடலாம்" தனது அறைக்கு வந்த சக்தி, கையில் புத்தகத்துடன் கட்டிலில் இருந்த நந்தினியிடம் கேட்டான்.

அன்று வயலில் இருந்து நந்தினியிடம் பேசவென்று அவன் வரும் பொழுது வீட்டில் யாராவது அவள் அருகே இருந்தனர். தனியாக அழைத்து சென்று பேசவும் முடியாது. இரவே பேச நினைத்த போதும் அறைக்கு வந்ததும் அவள் படுத்து கொள்ள, அசதி என்று நினைத்து விட்டுவிட்டான்.

தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களும் இப்படியே நடக்க, அப்போது தான் அவள் அவனை புறக்கணிக்கிறாள் என்பதே அவனுக்கு புரிந்தது.

அதன்பின் இன்று தான் அவள் இவன் கண்ணில் படும்படி அமர்ந்திருக்கிறாள். அதனால் சாதாரணமாகவே பேச்சு கொடுத்தான் சக்தி.

புத்தகத்தில் இருந்து கண்களை விலக்கி அவனை பார்த்தவள் "உயிருள்ள பொருளுக்கே மதிப்பு இல்ல. வீடு தானே!" என்றாள்.

எதிர்பார்த்தானோ? இந்த பதில்தான் எதிர்பார்த்தானோ? முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை சக்தி.

"நந்தினி உனக்கு என்னை புடிக்கலனு தெரியுது. நானும் எவ்வளவோ யோசிச்சு பார்த்துட்டேன். ஆனால் இதுக்கு ஒரு முடிவு தான் என்னால கொண்டு வர முடியலை. நீயே சொல்லு! என்ன பண்ணலாம்? இல்லை நான் என்ன பண்ணனும் சொல்லு. எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. நான் உன்னை எந்த விதத்திலும் தொல்லை பண்ண மாட்டேன். நீ என்ன செய்ய சொல்றியோ செய்யுறேன்" போர்க்களத்தில் நின்று உயிர் போனாலும் வலி இருக்காதோ எனும் அளவுக்கு வலித்தது சக்திக்கு.

உயிராய் காதலித்தவள் புரிந்து கொள்ளாததை விட, அலட்சியப்படுத்தி கொண்டு அடுத்து என்ன என்ற கேள்வியுடன் நிற்பதும் வேதனை தானே? அந்த வேதனையை நெஞ்சில் மட்டும் வைத்து, அவளுக்காக எதையும் செய்ய தயாராய் காத்துக் கொண்டு நிற்கிறான் அவள் முன்.

"ஓஹ்! என்ன சொன்னாலும் செய்வியா?" குத்தலான அவள் கேள்வி, முள்ளாய் அவனை குத்தியது.

"சொல்லு நந்தினி என்னால முடியும்னா செய்வேன்" அவன் சொல்ல,

"எனக்கு இந்த ஊர் புடிக்கல. இங்க யாரையுமே பிடிக்கல. ஏன்! உன்னையும் தான் புடிக்கல. இதையெல்லாம் பார்க்காமல் இருக்கணும். நான் நிம்மதியா இருக்கணும். முடியுமா உன்னால?" கோபத்தை வார்த்தைகளில் அடக்கி அழுத்தமாய் மட்டும் அவள் சொல்லி, என்ன பதில் சொல்லிவிடுவான் அவன் என்பதை போல நின்றாள் நந்தினி.

கண்களை மூடி அதே இடத்தில் நின்றவன் மறந்தும் தன் உணர்வுகளை வெளிக் காட்டவில்லை. அவள் கேள்விகளை அப்படியே உள்வாங்கினான்.

எந்த பதில் தெரியா கேள்விக்கு பயந்து அவளிடம் அவன் கேட்டானோ, அதே கேள்வி. அவள் தனிதனியாய் கேட்டதும், அவள் மொத்த பிரச்சனையும் இப்போது நான் மட்டுமே! ஏற்கனவே தெரிந்ததை வலிக்கும்படி அவள் வாயாலும் கேட்டுவிட்டான்.

"இப்போ எதுவும் என்னால... பண்ண முடியாது நந்தினி. கொஞ்சம் நேரம் குடு. ஒருவேள நமக்குள்ள எப்பவும்... ஒத்து வராது..ன்னா அடுத்து என்ன செய்யணுமோ அதை நானே செய்யுறேன். அதுவரை நீ இங்கே தான் இருக்கனும். அதுவும் என் அம்மாக்காகவும் உன் அம்மாக்காகவும்" என்று திக்கி திணறி சொல்லி வெளியில் செல்ல திரும்பியவன் காதுகளில்

'சொல்லணுமேன்னு என்ன வேணா செய்யுறேன்னு சொல்ல வேண்டியது. கேட்டா மழுப்ப வேண்டியது' என முணுமுணுத்த அவள் வார்த்தைகள் விழுந்தது.

மீண்டும் அவள்புறம் வந்தவன், "கௌதம் அத்தான் உன்கிட்ட சொல்லியிருப்பாங்க, இருந்தாலும் சொல்றேன். உனக்கு விருப்பம்னா நீ இங்கேயே வேலைக்கு போகலாம். பக்கத்துல ஸ்கூல்ல டீச்சர் குறையுறதா சொன்னாங்க. இல்ல டவுன்னுக்கு தான் போகணும்னு ஆசபட்டா சொல்லு நானே கூட்டிட்டு போறேன். அதுவும் உன் விருப்பம் தான். இதுனால நிரந்தரமா இங்க இருக்கனுமேன்னு எல்லாம் நினைக்காத! இன்னும் ரெண்டு நாள்ல ரேசெப்ஷன்க்கு சென்னை போகணும். உனக்காக வேணும்னா அத்தைகிட்ட பேசி நீ அங்கே ஒரு வாரமோ ஒரு மாசமோ தங்குற ஏற்பாடு பண்றேன். யோசிச்சு சொல்லு" என்றவன் விருட்டென்று வெளியே சென்றுவிட்டான்.

என்ன சொன்னாலும் எதையும் முகத்தில் காட்டாதவன் மேல் கோபம் தலைக்கேற, எதுவும் செய்ய முடியாமல் இருந்தவளுக்கு அவன் இறுதியில் சொன்ன வார்த்தைகளில் கோபம் கொஞ்சம் குறைந்தது.

கௌதம் அண்ணாகிட்ட எப்ப, என்ன சொல்லியிருப்பான் என நினைத்தவள், ரேசெப்ஷன் இப்ப ரொம்ப முக்கியம் என்று நினைத்து அதன்பின் வேலைக்கு செல்லலாம் என்ற நினைப்பில் அதை பற்றிய யோசனைக்கு சென்றாள்.

ரேசெப்ஷனிற்கு எல்லோரையும் அழைக்காமல் மிக வேண்டியவர்கள் விஐபி என்று மட்டும் வைத்து கொள்ளலாம் என ராம் சொல்லியிருக்க, அதுபடி அனைவரையும் அழைக்கும் பொறுப்பு கௌதம் உடையது.

அதற்கு முந்தைய நாள் மாலை ஆஃபிஸில் ராம் வேலையில் இருக்க, அவனை பார்க்க இருவர் வந்திருப்பதாக பிஏ கூறவும், யார் என ராம் கேட்க அதை சொல்லாவில்லை என்றதுடன் "பர்சனலா பேசனும்னு சொன்னாங்க சார்" என்றாள் பிஏ.


'பர்சனலா?' என யோசித்தவன் "சரி அவங்களை கெஸ்ட் ரூம்ல இருக்க சொல்லுங்க" என்றவன் சில பைல்களை முடித்துக் கொண்டு 'யாராக இருக்கும்?' என்று எண்ணிக் கொண்டே அந்த அறைக்கு சென்றான்.

அங்கு அவன் வயதை ஒத்த ஒருவனும் கூடவே ஒரு பெண்ணும் இருந்தது கண்ணாடி தடுப்பின் வழியே தெரிய, கதவை திறந்தவன் பார்த்தது ராஜ் குமாரை தான்.

முதல்முறை நந்தினிக்கு பார்த்த மாப்பிள்ளை என அன்னை கொடுத்த போட்டோவில் பார்த்திருக்கிறானே! ஒருமுறை பார்த்தவனை பிசினஸ் மூளை ஞாபகத்தில் எப்படி மறக்கும்?.

அவனை பார்த்ததும் கண்மண் தெரியாத கோபம் வரத்தான் செய்தது. கோபத்தில் ராம் என்றுமே நிதானித்தது இல்லை.

இன்றும் அதே போல தான் அவன் சட்டையை பிடிக்கும் வேகத்தில் வந்தவன் கண்களுக்குள் நிவி கண் இமைக்கும் நொடிக்குள் வந்து செல்ல அப்படியே நின்றுவிட்டான்.

அது நிவி அண்ணன் என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே! அவன் வந்த வேகத்தில் அமர்ந்திருந்த இருவரும் வேகமாக எழுந்துவிட்டனர்.

"ரா.. சார்.. நான் ராஜ் குமார். அன்னைக்கு.." ராம் என்று சொல்ல வந்து பின் அவன் முகத்தில் தெரிந்த கோபத்தில் அதை சார் என மாற்றி ராஜ் எதுவோ சொல்ல வர, அதை கேட்கும் பொறுமை இல்லவே இல்லை ராமிற்கு.

"ஷட் அப்! இப்ப எதுக்கு இங்க வந்த? உன்னை பார்த்ததும் கொல்லுற அளவுக்கு கோபம் இருக்கு. நிவிக்காக நின்னு பேசிட்டு இருக்கேன். கெட்அவுட் ஒப் மை ப்ளேஸ்" ராம் கோபத்தை அடக்கி குரலில் அழுத்தத்துடன் சொல்ல, ராஜ் அருகே நின்ற அவனின் மனைவி பூஜா பயத்தில் அவன் கைகளை இறுக பற்றினாள்.

அதில் ராம் நிதானிக்க, அவள் கைகளைப் பற்றிக் கொண்ட ராஜ் "சார் ப்ளீஸ்! உங்க கோபம் புரியுது. ஆனால் எனக்கும் வேற வழி தெரியல சார். அன்னைக்கு நான் வரலைனா நிவி ரெண்டு கல்யாணத்தையும் நிறுத்தி இருப்பா.. அது மட்டும் இல்ல நான் ஒரு நிமிஷம் லேட்டா போயிருந்தேன்னா கூட இவள நான் உயிரோடவே பாத்திருக்க முடியாது சார். எல்லாத்துக்கும் எங்க அம்மா.." என சொல்லிக்கொண்டு இருந்தவனை மீண்டும் தடுத்தவன்,

"ச்சி நீயெல்லாம்!... எப்ப கல்யாண மேடையில ஒரு பொண்ண இருக்க வச்சுட்டு ஒடுனியோ அப்பவே நீ மனுஷன்ற தகுதிய இழந்துட்ட... உன்னை நான் இப்ப உயிரோட விட காரணமே நிவி தான். ஆனால் அவளை வச்சிட்டு என் முன்னாடி வரணும்னு நினைக்காத! இது தான் நான் உன்னை பாக்குறது லாஸ்ட்டா இருக்கனும். என்ன சொன்ன? நிவி ஏன் கல்யாணத்தை நிறுத்தணும்? உன்மேல பழி விழாமல் இருக்க தங்கச்சி மேலேயே பழி போடுறியா? போய்டு! நான் எதாவது பண்றதுக்கு முன்ன போய்டு" நிஜமாகவே கோபத்தை பெரும்பாடு பட்டு அடக்கிக் கொண்டிருந்தான் ராம்.

"சார் ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க. நிவி மேல நான் பழி போடல. அவ இல்லைனா எனக்கு பூஜாவும் கிடைச்சிருக்க மாட்டா. நிவி உங்களை கல்யாணம் பண்ணியிருக்கவும் மாட்டா. உங்க சிஸ்டர் நந்தினிக்கு கூட கல்யாணம் ஆகிடுச்சுனு கேள்வி பட்டேன். என்ன இருந்தாலும் நான் சொல்லாம போயிருக்க கூடாது தான். அது மன்னிக்க முடியாத தப்பு தான். நிவி என்னை அனுப்பி வைக்கும் போது நானும் சுயநலமா என்னோட வாழ்க்கையை பத்தி மட்டும் யோசிச்சு வந்திருக்க கூடாது. ஆனால் நான் அங்க இருந்திருந்தா ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் போயிருக்கும்" என்னென்னவோ அவன் பேசிக் கொண்டு இருக்க, அரக்கபறக்க அந்த கெஸ்ட் ரூமினுள் நுழைந்தான் கௌதம்.

ராஜ்குமார் ஏற்கனவே அவன் அன்னையிடம் இன்று ராமிடம் மன்னிப்பு கேட்க செல்வதாக சொல்லி தான் இங்கே வந்திருந்தான். அதனால் நிவிக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது என நிவி அன்னை தான் கௌதமிற்கு போனில் அழைத்து கூறியிருந்தார். கௌதமும் ஓடி வந்தான்.

ஆனால் கௌதம் வந்தவன் பார்த்தது சிலை போல நின்ற ராமை தான்.

தொடரும்..
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
628
ராம் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்.
 
Top