• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 25

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 25

"நிஜமாவே திரும்பி வரும்போது நடந்து தான் வருவேனா?.. ஒருவேளை அது எனக்கு செட் ஆகலைனா?... நான் நிறைய யூட்யூப் பார்த்தேன் மாமா இந்த மாதிரி செயற்கை கால் பொருத்தின அப்புறமா கூட சிலர் பழக்கம் மாறாமல் காலை சரிச்சு நடப்பாங்களாம்... எனக்கு என்னவோ பயமா இருக்கு மாமா. இந்த வாசுவையாச்சும் கூட்டிட்டு வந்திருக்கலாம். ப்ச்!"

சந்தோசம், பதட்டம், பயம் அனைத்தும் கண்களிலும் முகத்திலும் தெரிய, மாறி மாறி கேள்வியும் நானே பதிலும் நானே என பேசிக் கொண்டு வந்தாள் அனு கௌதம் உடன்.

"ம்ம் ஆமா ஆமா அவ ஒருத்தி போதும் அனு. இந்நேரம் உனக்கு மேல பயந்து யூடர்ன் போட்டு உன்னை வீட்டுக்கே கூட்டிட்டு போயிருப்பா" கௌதம் தான் வாசுவை உரிமையாய் கலாய்த்தான்.

"ம்ம் நான் இவ்வளவு நேரம் பேசினத எல்லாம் விட்டுட்டு கரெக்ட்டா உங்க ஆளை பத்தி பேசினதுக்கு மட்டும் பதில் சொல்றிங்களா?" கிண்டலுடன் அனு கேட்க,

"பொதுவா அப்படி சொல்ல முடியாது. ஒரு யூகமா சொல்லலாம்" என்றவனுடன் சேர்ந்து அனுவும் சிரித்தாள்.

"ம்ம் அனு! நான் உனக்கு ஒன்னு சொல்றேன். அதுல இருந்து உனக்கு என்ன தோணுதோ அதை நீ சொல்லு. ஓகே" கௌதம் சொல்ல,

"ம்ம் சரி மாமா" என்றாள் அவள்.

"அடையார்ல ஒரு ஆசிரமம் இருக்கு தெரியுமா?" என்று அவன் சொல்ல தொடங்கவும்,

"ம்ம் தெரியுமே! நீங்க தானே அங்க ஸ்பான்சர் பண்றீங்க. படிக்க வைக்குறதுல இருந்து ஹாண்டிகேப்டு குழந்தைங்க ஆபரேஷனுக்கும் ஹெல்ப் பண்றீங்களாமே!"

"பார்றா! உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?"

"வேற யாரு? எல்லாம் வாசு தான் சொன்னா"

"வாசுவா? அவளுக்கு எப்படி?... " என்றவனுக்கு பாதியில் ஞாபகம் வந்தது அன்று பார்ட்டியில் வாசுவும் ராமும் வெளியில் சென்றது.

'எல்லாம் உன் வேலை தானா?' என ராமை நினைத்து கொண்டவன், அனுவிடம் திரும்பினான்.

"அங்க ஒரு குழந்தை இருக்காங்க. அவங்க பேரு சுமிதா. ரொம்ப அழகான பொண்ணு, டலென்டும் கூட. ஆனால் பாரு அவளுக்கு பேச்சு வராது" கௌதம் சொல்லிக்கொண்டு இருக்க அமைதியாய் கேட்டுக் கொண்டு வந்தாள் அனு.

"சுமிய நிறைய டாக்டர்ஸ் கிட்ட கூட்டிட்டு போனோம். எப்படியாவது அவளை சரி பண்ணிடனும்னு எப்படிலாமோ ட்ரை பண்ணினோம். ஆனால் அவளா முயற்சி செஞ்சு அவளுக்கு பேச்சு வந்தா தான் உண்டுனு எல்லா ஸ்பெஷலிஸ்ட்டும் சொல்லிட்டாங்க"

"பாவம் மாமா. அப்புறம் என்னாச்சு? சுமி இப்ப எப்படி இருக்காங்க?" அனு கேட்க, சிரித்த கௌதம்

"சுமிக்காக நான் டெய்லி ஆசிரமம் போக ஆரம்பிச்சேன். வெளில கூட்டிட்டு போவேன். அவகிட்ட நிறைய பேசுவேன். எல்லார்கிட்டயும் அவ கை ஆக்ஷன்ல தான் பேசுவா. அதை ஃப்ர்ஸ்ட் மாத்தனும்னு நான் கேட்குறதுக்கு எல்லாம் அவளை வாய திறந்து பதில் சொல்ல வச்சேன்.

முதல்ல ரொம்ப கஷ்டப்பட்டா, முடியாதுனு சொன்னா, பேச முடிலனு அழுதா, எதையும் நாம எடுத்துக்குறது தான்னு தொடர்ந்து 3 மாசம் பேசிட்டே இருந்தோம். நான் மட்டும் இல்ல, அங்கே சுந்தரம்னு இன்ச்சார்ஜ் இருக்காரு. ரொம்ப நல்ல மனுஷன். அவரும் நான் சொன்னதுக்காக அவகிட்ட பேசிப் பேசி... இப்ப அவ வாய திறந்தால் நம்ம எல்லாம் தெறிச்சு ஓட விட்டுடுவா" முகத்தில் மென்மை குடியிருக்க, அந்த குட்டியை மனதில் நினைத்துக் கொண்டே அனுவிடம் சொல்லி முடித்தான்.

"வாவ் எனக்கும் அந்த குட்டிய பாக்கணும்னு இருக்கு மாமா. கூட்டிட்டு போறீங்களா?" ஆசையாய் அவள் கேட்க,

"கண்டிப்பா! இப்ப சொல்லு சுமி பத்தி என்ன நினைக்குற?"

"என்ன சொல்ல? ரொம்ப கஷ்டப்பட்டுருக்காங்க. இனிமேல் சந்தோசமா இருக்கனும்"

"ம்ம் அது சரி தான். ஆனால் அவ அவளையே பிரஷர் பண்ணிட்டு இருந்தா இப்ப பேசியிருக்க முடியாது. நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா?" என கேட்க புரிந்தது, புரியவில்லை என எல்லா பக்கமும் தலையை ஆட்டினாள் அனு.

"அனு, எதையும் தைரியமா ஃபேஸ் பண்ணுனு அந்த குட்டி நமக்கு சொல்லி தர்றாங்க" என்றதும் அவளுக்கும் கொஞ்சம் மனநிலை மாறி என்னாலும் முடியும் என தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

"அப்புறம் மாமா. வாசுவை நிஜமாவே கல்யாணம் பண்ற முடிவுல உறுதியா இருக்கீங்களா?" இவ்வளவு நேரமும் அவனுடன் பேசிக் கொண்டிருந்தவள், ஒரு தமக்கையாய் தங்கைக்காக பேசினாள்.

"ஹ்ம்ம் உன் தங்கையே மேல். அவளாவது நான் லவ் பண்றது தெரிஞ்சி தான் தள்ளி போறா. உனக்கு அதுவே டவுட்டா?" கௌதம் கேட்க,

"இல்ல மாமா, நான் ஏன் சொல்றேன்னா வாசுவை இப்படியே ஏத்துகிட்டு கடைசி வரை உங்களால.." எப்படி சொல்வது, என்னவென்று சொல்வது என தெரியாமல் நிறுத்தினாள்.

"உனக்கு ஒன்னு தெரியுமா அனு? வாசுவுக்கு பிளாஸ்டிக் ஸர்ஜெரி பண்றது உனக்கு டிரீட்மென்ட் பண்றதை விட ஈசி. அண்ட் ஒப்கோர்ஸ் என்னால அதுவும் முடியும். ஆனால் இந்த ஜென்மத்துல வாசு இப்படியே எனக்கு போதும். என்ன! அவ தைரியமா இந்த உலகத்தை சுமி குட்டி மாதிரி ஃபேஸ் பண்ணணும்னு ஆசைபடுறேன். எங்க! உன் சிஸ்டர்க்கு அது தான் புரியவே மாட்டேன்னுதே" பெருமூச்சுடன் அவன் சொல்லி முடிக்க,

"ஏன் மாமா, ஒருவேளை அவ கல்யாணமே பண்ண மாட்டேன்னு உறுதியா இருந்துட்டா?" அனு கேள்வியாய் நிறுத்த,

"ஹப்பா! அப்படினா பரவால்ல அனு. நானும் அப்படியே இருந்துடுவேன். மத்தவங்க மாதிரி நீ யாரை கல்யாணம் பண்ணிகிட்டாலும் உன் சந்தோசம் தான் என் சந்தோசம்னு எல்லாம் என்னால சொல்ல முடியாதுமா" என்று சொல்லி அவன் சிரிக்க, அனுவும் சேர்ந்து சிரித்தாள்.

அவன் எவ்வளவு சிரித்து பேசினாலும் அவள் தனியாய் இருந்தால் இவனும் தனியாய் இருந்து கொள்வான் என்பது அவன் கூறிய அழுத்தத்திலேயே நன்றாய் அனுவுக்கு புரிந்தது.

அன்று நடந்ததை அப்படியே ஒன்று விடாமல் அனு வாசுவிடம் சொல்லி முடிக்க, ஏனோ இம்முறை வாசுவிற்கு கண்ணீரெல்லாம் வரவில்லை. அவனிடம் நேசத்தை உணர்ந்து விட்டாளோ?

அனு மொபைல் அப்போது அலற, எடுத்து பேசிவிட்டு வைத்த அனு "கௌதம் மாமா தான். இங்கே தான் வந்துட்டு இருக்காராம். நீ போய் துப்பட்டாவை போடு" என்று சொல்லிவிட்டு செல்ல அப்படியே நின்றாள் வாசு.

அவள் சொல்லிச் சென்ற சில நிமிடங்களிலேயே கௌதம் கார் சத்தம் கேட்க முதன்முறையாக அவளுக்கு தோன்றியது 'இப்போது என் முகத்தை பார்த்தால் அவன் முகம் எப்படி மாறும்' என்று.

இதை ஒரு பரீட்சையாய் இல்லாமல் ஏனோ தோன்றியதும் செய்ய முடிவெடுத்து ஒரு சாதாரண மனுஷியாய் அவன் முன் நிற்க முடிவெடுத்தாள்.

நினைக்க எளிதாய் இருந்தது தான். ஆனால் செயல்படுத்த கைகால் நடுங்க வியர்வை நெற்றியை தொட்டது.

"வா கௌதம். எப்படி இருக்க?" அன்னை வரவேற்பது காதில் கேட்டது.

"சேமமா இருக்கேன். ஆமாம் வாசு எங்கே?"

"ஒரு பேச்சுக்கு கூட எங்களை எல்லாம் எப்படி இருக்கீங்கனு கேட்காமல் நேராவே என் பொண்ணை பத்தி கேட்கிறீயே ம்ம் தைரியம் தான்" மல்லிகா குறையாய் சொன்னாலும், அவர் முகத்தில் சந்தோசம் மட்டுமே இருந்தது.

"என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க. நீங்க நல்லா இருக்கீங்கனு உங்களை பார்த்தாலே தெரியுது மா. போன முறை பார்த்ததை விட ஒரு சுத்து அதிகமா ஆகிட்டீங்களே! பாவம் என் டார்லிக்கு சாப்பாடு குடுத்தீங்கலோ இல்லையோ! அதனால தான் கேட்டேன்" கௌதமின் கலகல பேச்சுக்கு சிரிக்காமல் இருப்பாரா என்ன?.

"உனக்கு ரொம்ப தைரியம் தான் கௌதம்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அனு காபியுடன் வர, அவள் நடந்து வருவதை சந்தோசத்துடன் பார்த்தான் கௌதம்.

"ரொம்ப சந்தோசமா இருக்கு கௌதம். உனக்கு நன்றி சொல்லணும்னு தோணுது. ஆனால் அதை எப்படி சொல்லனு தெரியல" மல்லிகா சொல்ல,

"அதெல்லாம் சொல்லலாம். எங்க போய்ட போறேன். இப்ப வாசுவை நீங்க கூப்பிடுறீங்களா இல்ல நானே உள்ளே போகவா?" இதற்கு தான் வந்தேன் என அவன் போட்டு உடைக்க அனு, மல்லிகா இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

"வாசு! கௌதம் வந்துருக்காங்க. உள்ளே என்ன பண்ற?" மல்லிகா குரல் கொடுக்க,

அதுவரை அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு நின்றவள் ஒருவாறு தைரியத்தை வரவைத்து, அவன் முன் சென்றாள்.

..............................

"நந்தினி! நான் அந்த ஸ்கூல்ல விசாரிச்சுட்டேன். இன்னைக்கு தான் இன்டெர்வியூவாம். நீங்க கிளம்பி வந்தீங்கன்னா நானே கூட்டிட்டு போறேன்" சக்தி அவனே போய் நந்தினி முன் நின்றான்.

அவள் சரி என தலையாட்டுவாள், இல்லை எதுவும் சொல்லாமல் கிளம்ப சென்றுவிடுவாள் என்பது தான் சக்தி எதிர்பார்த்தது.

"ஒரு அரை மணி நேரம். நான் கிளம்பி வந்திடுறேன்" என அவள் விரிவாய் சொல்லி செல்ல, ஒரு முறை தன்னை தானே கிள்ளி பார்த்துக் கொண்டான் சக்தி.

சொன்னது போலவே வந்தவளை எதுவும் சொல்லாமல் பார்த்தவன் தயங்கி நிற்க இவளுக்கு தான் எரிச்சலாக வந்தது.

அதை குரலிலும் காட்டி "போலாம் தானே?" என கேட்க, அதை உணர்ந்தவனோ, "போலாம்ங்க. நீங்க.. நெற்றி வகிடுல.. குங்குமம் எல்லாம்.. வைக்க மாட்டிங்களா?" எவ்வளவு தைரியம் இவனுக்கு. பேச கூட மாட்டேன் என்றவள் இரண்டே வார்த்தை பேசவும் அவன் ஆசையை கூறுகிறான்.

அனிச்சை செயலாய் அவள் கை வகிடை தொட பின் என்ன நினைத்தாளோ அவளே குங்குமமிட்டுக் கொண்டு வந்தாள்.

அப்போதும் 'நான் வைத்து விடவா' என்று நா வரை வந்த வார்த்தையை மென்று முழுங்கியே விட்டான். இதுவரை அவள் சண்டை போடாததே நல்லது. அதை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில்.

அவன் பைக்கில் இவளும் ஏற, திருமணத்திற்கு பின் இன்று தான் ஏனோ முழு சந்தோஷத்தையும் அனுபவித்து இந்த அருகேயான பயணத்தையும் ரசித்து வண்டியை கிளப்பினான் சக்தி.

நந்தினிக்கு அந்த மாதிரியான எந்த எண்ணமும் இல்லை போலும். வழியில் தெரிந்த வயல்கள், மோட்டார் செட், அதில் குளிக்கும் பெண்கள், ஆண்கள், மாந்தோப்பு, கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் என அவள் பார்வை அந்த ஊரை எடை போட்டுக் கொண்டிருந்தது.

எதோ கௌதம் சொன்ன காரணத்திற்காகவும், அவளுக்காக அவன் அம்மாவிடம் பேசிய காரணத்திற்காகவும் அவனிடம் வம்பை வழக்காமல், அதே சமயம் பேச்சையும் வளர்க்காமல் அமைதியாய் வருகிறாள்.

ஆனால் இதற்கே முழு கணவன் ஆன சந்தோஷத்தில் சிரிப்புடன் வண்டி ஓட்டும் சக்தியை என்னவென்று சொல்வது?.

வண்டியை கேட் அருகே நிறுத்தியவன் "நீங்க உள்ளே போங்க. முடிஞ்சதும் எனக்கு ஒரு போன் பண்ணுங்க உடனே வந்துடுறேன்" என்றான்.

நானே வந்துடுறேன்னு சொல்ல அவளுக்கும் ஆசை தான். இந்த பட்டிக்காட்டில் திக்குதிசை தெரியாமல் எப்படி சொல்வது என்ற நினைப்பில் சரி என்று தலையாட்டி அவள் திரும்ப,

"நந்தினி" என்று அழைத்தான் சக்தி.

'இன்னும் என்னடா வேணும் உனக்கு' என்ற கடுப்பில் அவள் திரும்பி பார்க்க,

"இல்ல, போன் பண்ண சொன்னேன். உங்க நம்பர்.."

அவனவன் காதலிக்கிறேன் என்று சொல்லும் முன்பே போன் நம்பரோடு சுற்றுவான். இவன் தாலி கட்டிய பொண்டாட்டியிடம் போன் நம்பர் வாங்க இந்த தயங்கு தயங்குகிறான்.

'நீ ரொம்ப நல்லவன் தான் டா. அப்டியே அப்பாவினு நினைப்பு' மனதோடு நினைத்தவள் அவள் நம்பரில் இருந்து அவனுக்கு அழைக்க, அவன் மொபைல்

'நினைத்து நினைத்து பார்த்தால்..
நெருங்கி அருகில் வருவேன்'
என அழகாய் சிணுங்க அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் நந்தினி.

ஆனால் சக்திக்கு தான் நடந்தது புரிய சில நிமிடம் பிடித்தது.

'நந்தினிகிட்ட என் நம்பர் இருக்குதா? எப்ப, யாருகிட்ட வாங்கியிருக்கும்? ச்ச! நாமளும் இருக்குற மாதிரியே நடிக்கவாச்சும் செஞ்சுருக்கலாம். அதுசரி அதுக்கு கொஞ்சமாச்சும் மூளை வேணுமே!' சந்தோசப் புலம்பலுடன் திரும்பினான்.

...........................

டைனிங் டேபிளில் நிவிக்கு காய்களை வெட்ட சகுந்தலா ட்ரைனிங் கொடுத்துக் கொண்டிருக்க, "ம்மா! இப்ப தான் கால் வந்துச்சு. அர்ஜென்ட்டா ஒரு ப்ராஜெக்ட் விஷயமா பெங்களூரு போறேன். வர டூ த்ரீ டேஸ் ஆகும். கௌதம் போன் ரீச் ஆகல. நீங்க சொல்லிடுங்க மா" வேகமாய் படிக்கட்டுகளில் ஒரு ட்ராவல் பேக்குடன் தாவி இறங்கிய ராம் அன்னையிடம் சொல்லிக்கொண்டே ஷூ லேசை மாட்ட,

"என்ன டா நினைச்சுட்டு இருக்க? உனக்கு கல்யாணம் ஆன நினைப்பு இருக்கா? இந்த புள்ளைகிட்ட கூட சொல்லாம திடுதிப்புன்னு கிளம்பி வந்து அந்த தடியனுக்கு சொல்ல சொல்லுற? எனக்கு எதுவும் தெரியாது. இப்ப நிவிய கூட்டிட்டு போறதா இருந்தா போ. இல்ல நீ மட்டும் தான் போவேன்னு அடம் புடிச்சேன்னா என்கிட்ட பேசாத!"

அவர்களுக்குள் இருக்கும் சண்டை தெரியாமலே சகுந்தலா பொங்கி எழ, நிவி தான் ராமிற்கு பரிந்து வந்தாள்.

"அத்தை! ராம் என்கிட்ட அப்பவே சொன்னாங்க. நான் தான் உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். அப்புறம் எனக்கும் இன்னைக்கு லீவ் முடியுதே! நாளைக்கு ஆஃபீஸ் போகணும். அவங்க போய்ட்டு வரட்டும் அத்தை"

"என்ன டி புருஷனுக்கு சப்போர்ட்டா? உனக்கு தெரியும்னு என்கிட்டயே பொய் சொல்லுறியா? அப்ப நீ இவ்வளவு நேரம் அவனுக்கு ஹெல்ப் பண்ணிட்டு தான இருந்திருக்கனும்"

சரியான பாயிண்ட்டை பிடித்து நான் உனக்கு மாமியார் என்பதை அவர் நிரூபிக்க, முதலில் அம்மா பேச்சை கேட்டு ஷாக் ஆனவன் நிவியின் சமாதானத்தில் அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளை உடன் அழைத்து செல்லும் எண்ணம் இல்லை. அவனுக்கு இப்போது தனிமை தான் தேவைபட்டது. அதற்கு ஏதுவாய் ஒரு ப்ராஜெக்ட்டும் கிடைத்த பின் சொல்ல வேண்டுமா? அதற்குள் சகுந்தலாவை சமாதானப்படுத்தி இருந்தாள் நிவி.

"என்னவோ போ! ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமா இருக்கீங்க. காலையில நந்தினி கிளம்பும் போது அவ முகமே சரி இல்ல. இப்ப இவனும் போறேன்னு வந்து நிக்குறான். பாத்து பத்திரமா போய்ட்டு சீக்கிரமா வா"

அடிக்கடி இப்படி செல்வது தான் என்றாலும் இன்று ஏனோ சுத்தமாய் அவருக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் வழியனுப்பி வைத்தார்.

"நான் அனுப்பிட்டு வர்றேன் அத்தை" என்று நிவி ராம் பின்னோடு செல்ல, சகுந்தலா அங்கேயே நின்று கொண்டார்.

"ராம் உங்களுக்கும் எனக்கும் உள்ள பிரச்சனையை பேசி தீர்த்துக்கலாம்.. இல்ல என்ன அடிச்சு கூட தீர்த்துக்கோங்க. ஆனால் இப்படி அத்தை முன்னாடி கண்டுக்காமல் இருக்காதிங்க. அவங்களுக்கு டவுட் வந்தா எவ்வளவு கஷ்டப்படுவாங்க?" நிவி அவனுக்கு புரிய வைக்க முயல கௌதமும் இதை சொன்னது ஞாபகம் வந்தது.

"நீ தானே இழுத்துவிட்ட! நீயே சமாளி!" என்றவன் காரில் ஏற, "நாளையில் இருந்து ஆஃபீஸ் கிளம்புறேன் ராம்" என்றவளை திரும்பியும் பார்க்காமல்,

"எல்லாம் என்கிட்ட சொல்லிட்டா செய்வ?" என்றவன் சென்றே விட்டான்.

கார் கண்ணில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்தாள் நிவி. நிவிக்கு அவன் மேல் கோபம் எல்லாம் இல்லை. இதுவே பழைய நிவியாய் இருந்திருந்தால் சண்டை கூட போட்டிருப்பாள் அவனோடு.

இது அவனை மட்டும் காதலிக்கும் நிவி. திருமணம் முடிந்ததும் அவனிடம் சொல்லியிருக்க வேண்டும். மறைத்ததும் என் தவறு தானே என்ற குற்ற உணர்வில் தான் அவன் கோபத்தை பொறுத்துக் கொண்டிருக்கிறாள்.

தொடரும்..
 
Top