• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 28

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 28

"அய்யோ! சொல்றத தெளிவா தான் சொல்லேன் டா" சகுந்தலாவிடம் இருந்து தனியாக அழைத்து வந்த கௌதமிடம் எகிறினான் ராம்.

"ஏன் டா சொல்லணும்? இல்ல ஏன் சொல்லணும் கேட்குறேன்? ஏன் இதை அவ போன் பண்ணும் போது எடுத்திருந்தா, என்கிட்ட இப்படி கத்திட்டு இருக்க வேண்டாம்ல? அப்படி என்ன டா பிடிவாதம் உனக்கு?

இல்லை நான் தெரியாமல் தான் கேட்குறேன், அன்னைக்கு நந்தினி சக்தி கல்யாணத்துக்கு நான் தான் காரணம். இப்ப நந்தினி வந்து அழுதா! சமாதானம் பண்ணி அனுப்பி வச்சிட்டோம்.

இதே அவ அந்த ராஜ்குமார கல்யாணம் பண்ணி, 'என் வாழ்க்கை போச்சி'ன்னு வந்து அழுதிருந்தா என்னடா பண்ணியிருப்ப? உன் நியாயம் சரின்னா எனக்கு பதில் சொல்லு. என்ன பண்ணியிருப்ப?"

கௌதம் கோபத்தில் கத்தவெல்லாம் இல்லை. அம்மாவிற்கு கேட்காதவாறு அழுத்தமாக, நிதானமாகவே கேட்டான்.

"பதில் சொல்ல முடியலைல? நான் சொல்லட்டா? பதில் நான் சொல்லட்டா? நீ அப்பவும் நிவிய தான்டா தண்டிச்சுருப்ப! 'உன் அண்ணா லவ் பண்ணினது உனக்கு தெரியாதா? பொய் சொல்லாத'ன்னு அவளை தான் தண்டிச்சிருப்ப! அடிச்சு சொல்றேன் இது தான் நடந்துருக்கும்"

ஏனோ கோபம்! கோபம்! அவ்வளவு கோபம் வந்தது கௌதமிற்கு. விரும்பி மணந்தவளை இப்படி ஈகோவால் வதைக்கிறானே என்ற கோபம்.

"அப்ப அவ பண்ணினது சரின்னு சொல்றியா?" கௌதம் பேச்சில் இருந்த உண்மை சுட்டாலும், 'அவள் செய்த தவறை இவன் ஏன் நியாயப்படுத்துகிறான்?' என வீம்புடன் கேட்டான் ராம்.

"இல்லையே தப்பு தான். அவ பண்ணினது பெரிய தப்பு தான். மணமேடை வர வந்த அப்புறம் தன் அண்ணன்னு கூட பார்க்காமல் நியாயத்துக்காக, முகம் தெரியாத பொண்ணுக்காக தன் அண்ணனையே அனுப்பி வச்சா பார்த்தியா! தப்பு தான். அண்ணன் கல்யாணம் நின்னா, தன் கல்யாணமும் நிக்கும்னு தெரிஞ்சே அனுப்பி வச்சா பாத்தியா? தப்பு தான்"

ஒவ்வொரு வார்த்தையையும் ராம் முகத்தருகே வந்து சொல்ல, ஏதோ ஒன்று உடைந்தது ராம் உள்ளே.

"உனக்கு ஞாபகம் இருக்கா ராம்? முதன் முதலா நிவியை பார்த்த தினம் ஞாபகம் இருக்கா?" கௌதம் கேட்க, கண்மூடி அந்த தினத்தை கண்முன் கொண்டு வந்தான் ராம்.

"எவ்வளவு தைரியமான பொண்ணு தெரியுமா அவ? உன்னோட கேரக்டர்க்கு அவ தான் சரியான ஆள்னு நான் அன்னைக்கே நினச்சேன். ஆனால் அது தப்பு ராம். அவ உன்னை மாத்துவானு நினச்சேன். ஆனால் நீ அவளை மாத்திட்ட" என்றவனை ராம் புரியாமல் பார்த்தான்.

"என்ன டா பார்க்குற? அன்னைக்கு தைரியமா அத்தனை பேர் முன்னால தப்பு பண்ணினவனை கைநீட்டி அடிச்சுட்டு ‘ஆமாம் அப்படி தான் பண்ணுவேன்னு’ நின்ன நிவி இன்னைக்கு உனக்காக, உன்னோட இந்த வீண் பிடிவாதத்தையும் பொறுத்து, அவ வேலையையும் ரிசைன் பண்ணிட்டு வீட்ல இருக்கா" என்று சொல்ல சத்தியமாக இது அவனுக்கு புதுசெய்தி.

'ஏன் வேலையை விட வேண்டும்? அது அவள் நேசித்து சேர்ந்த வேலை! அதனால் தானே அவளுக்காக இவன் எல்லாம் செய்தது?'

"ஏன்டா ரிசைன் பண்ணினா? எனக்கு தெரியாது கௌதம்" உள்ளடங்கிய குரலில் ராம் அதிர்ந்து கேட்க,

"உனக்காக, உன் காதலுக்காக. ஆனால் இதெல்லாம் உனக்கு எங்க புரிய போகுது. போ! போய் உன் ஈகோவை புடிச்சிட்டு தொங்கு. ஒன்னு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ! நிஜமா நிவி மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கனும்.

அவளோட முழு தைரியமா நீ இருந்திருக்கணும். ஆனால் அவ தைரியத்தை மட்டும் இல்லாமல் அவளோட இயல்பையும் உன்னால தொலைச்சிட்டு நிக்குறா. இனியாவது முடிஞ்சா அவளுக்கு நல்ல புருஷனா இரு. இல்லையா.. " என்று ஒரு நொடி நிறுத்தியவன்,

"அவளை விட்டுடு. அவளாவது சந்தோசமா இருக்கட்டும்" என்று சொல்லி வெளியேற முயல, தாவி அவனை அணைத்துக் கொண்டான் ராம்.

"சாரி டா கௌதம். ரியல்லி சாரி டா" என்று சொன்னவன் கண்களில் இருந்து இரு சொட்டு கண்ணீர் வடிய அவனை ஆதுரமாய் அணைத்து முதுகை நீவிய கௌதம்,

"இட்ஸ் ஓகே ராம்! உனக்கு புரியனும்னு தான் கொஞ்சம் ஹார்ஷா பேசினேன். கூல்" என்று சமாதானம் செய்தான்.

"எனக்கும் நிவிய புடிக்கும் டா. நிவிய மட்டும் தான் புடிக்கும். உன்கிட்ட நான் சொல்லியிருக்கேன்ல டா. ஆனால் என்கிட்ட அவ ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்..." என்றவன் கௌதம் கைகளில் முகம் புதைத்து அமர,

"அதுக்கு நீ என்கிட்ட கோபப்படனும். என்கிட்ட தான் பேசாமல் இருக்கனும். ஏன்னா அன்னைக்கு நிவி சொன்ன மாதிரி நான் தான் அவளை உன்கிட்ட சொல்ல விடல. அவ எவ்வளவோ முயற்சி பண்ணினா.. ஆனால் நான் தான் உன் குணம் தெரிஞ்சி மெதுவா சொல்லிக்கலாம்னு சொல்லி அவளை மணமேடைல உட்கார வச்சேன். அதுக்குள்ள அந்த ராஜ்குமார் ஆபீஸ் வந்து.. நீ இப்படி ரியாக்ட் பண்ணி.." என்று கௌதமும் சோர்ந்து அமர்ந்து விட,

"நான் விதுவ பார்க்கணும் டா" என்றான் ராம்.

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல டா. உனக்கு கோபம் வந்தா அவ நிவி. கொஞ்சல்ஸ் வந்தா அவ விதுவா?. இந்த வாய் மட்டும் தான் உனக்கெல்லாம்" கௌதம் தெளிந்து கலாய்க்க, இதழ்க்கடையில் சிறுபுன்னகை மெலிதாய் வந்தது ராமிற்கு.

மறுபடியும் கௌதம் நெற்றி சுருக்கி சீரியஸ்ஸாய் "கோபப்படாமல் சொல்றத பொறுமையா கேளு" என சொல்ல ராம் குழப்பமாய் அவனை பார்த்தான்.

"நிவி அம்மாக்கு ஹார்ட் அட்டாக். அந்த ராஜ்குமார் அவன் பொண்டாட்டியோட வெளியூர் போய்ட்டானாம். யாரும் இல்லாமல் அவங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. நிவி அப்பா தான் எனக்கு போன் பண்ணினார். மனசு கேட்கல. நிவிகிட்ட நீ போய் பார்த்துட்டு வா நான் ராம்கிட்ட சொல்லிக்குறேன்னு சொன்னேன். அப்பவும் அவ உனக்கு தான் போன் பண்ணினா. நீ அட்டென் பண்லனதும் போக மாட்டேன்னு சொன்னா. நானும் அம்மாவும் தான் பேசி, நான் தான் அவளை கொண்டு விட்டுட்டு வந்தேன். இப்பவும் நீ என்மேலே தான் கோபப்படனும்" இனி உன் இஷ்டம் என்பதை போல கௌதம் ராமை பார்க்க,

இறுகிய முகத்துடன் அவனை பார்த்தவன் "என்னை என்ன மனசாட்சி இல்லாதவன் நினைச்சியா டா?" எனக் கோபத்தில் கேட்க,

"அப்ப உனக்கு அது இருக்கா?" எனக் கேட்டவனை முறைத்துவிட்டு, காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

.................................

"சக்தி நாளையில் இருந்து ஸ்கூல் போனும். எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?" இயல்பாய் கேட்டாள் நந்தினி.

"அட என்ன நீ பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு.. செய்யினு சொன்னா செய்ய போறேன். சொல்லு என்ன செய்யணும்"

அவளாக வந்து பேசும் போது இவன் கால்கள் பறப்பது தவறில்லையே?

"ஆனால் தப்பா நினச்சிக்க கூடாது. அப்படியே பழகிட்டேன் அதான்.." அவள் தயங்கி இழுக்க,

"என்னனு சொல்லு நந்தினி. என்னால முடிஞ்ச எல்லா உதவியும் உனக்கு செய்ய நான் கடமைப்பட்டிருக்கேன்"

அவன் வார்த்தைகள் கொடுத்த தைரியத்தில் "இல்ல, நான் ஸ்கூல், காலேஜ் போகும் போது எல்லாம் முதல் நாள்க்கு தனியா பர்ச்சேஸ் பண்ணுவேன். பழசு... யூஸ் பண்ணி பழக்கம் இல்லை. அதுனால... இங்கே வரும்போது கூட தேவைப்படாதுனு அவசரத்துக்கு ஒரு ஹாண்ட்பேக் கூட இல்லை... இந்த ஒரு முறை மட்டும் கொஞ்சம் கடைக்கு கூட்டிட்டு போறிங்களா?. அடுத்து என்னோட சேலரி.. சாரி சம்பளம் வந்துடும்"

'பேசி பழகிய பின்னும் வீட்டில் உரிமையாய் கேட்டது போல இவனிடம் கேட்க வரமாட்டுதே' நினைத்துக் கொண்டது நந்தினி மனம்.

"இதுக்கு ஏன் இவ்வளவு தயங்கி கேட்குற நந்தினி. நீ அங்கே எப்படி இருந்தன்னு சொன்னா தானே எனக்கும் தெரியும். நீ எப்பவும் போலயே இங்கேயும் இரு. அங்கே என்னென்ன பண்ணுவியோ அதையே பண்ணு. நானோ அம்மாவோ எதுவுமே சொல்ல போறதில்ல. உனக்கு புடிச்ச மாதிரியே இரு. கடைக்கு தானே போகணும். சாயந்திரமா போலாமா? இப்ப தோட்டத்தில தேங்காய் பறிக்க வர்ராங்க. ஆள் இல்லைனா வேலை நடக்காது"

அவன் மனதில் உள்ளதை தெளிவாய் சொல்லிவிட்டான் அவளுக்கு புரியும்படி. சரி என அவள் சிரிப்புடன் தலையாட்ட, அவனும் அதே சிரிப்புடன் கிளம்ப,

"ஒரு நிமிஷம்" என்றவளை என்ன என திரும்பி பார்த்தான் சக்தி.

"நானும் வரவா?" என கேட்டதும் நெற்றி சுருக்கியவன் "எங்கே?" என கேட்க,

"தோட்டத்துக்கு தானே போறீங்க?" என்றாள்.

"ஆமா! ஆனால் நீ…?"

"சும்மா வர்றேனே. டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்" அவள் கெஞ்ச, இவன் தான் தன் மனதுடன் அனைத்தையும் இழுத்து பிடிக்க வேண்டியதாயிற்று.

"ம்ம்! அம்மா வயலுக்கு போய்ட்டாங்க. நீ கிளம்பி வா. நான் வெளில நிக்குறேன்" என்றவன் வேகமாக வெளியே சென்றுவிட்டான்.

'ப்பா! அவ வாய் திறக்காமல் கண்ணே பேசுது. இனி இவக்கிட்ட ஜாக்கிரதையா தான் பேசணும். அப்பப்ப தடுமாற வச்சிடுறா. இப்ப தான் மூஞ்சி கொடுத்து பேசுறா. கெடுத்துக்காத சக்தி'

தனக்கு தானே அவன் எச்சரித்துக் கொண்டு நிற்க, ஐந்து நிமிடத்தில் கிளம்பி வந்துவிட்டாள்.

"போலாமா?" என்றவனிடம் அவளும் சிரித்துக் கொண்டே தலை சாய்த்து "போலாமே" என்று சொல்ல, 'அட போங்க டா' என்ற நிலைக்கு ஆளானான் சக்தி.

"எண்டே ஏய்! யாருடா அது புதுசா இருக்கு?"

தோட்டத்தில் கணக்கு பார்ப்பவர் ஒரு தென்னை மரத்தின் கீழே சிறுவன் ஒருவன் தேங்காய் எண்ணிக் கொண்டிருக்க, அவனை பற்றி அங்கே வேலை செய்பவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

"அண்ணே! அது என் தம்பி பைய தான். பள்ளிக்கூடம் லீவு தான, சும்மா சுத்திட்டு இருந்தான் அதான் கூட்டிட்டு வந்தேன்"

"நீ சொல்றது சரிதான். ஆனால் தம்பி வந்தா திட்டும். அவனை அனுப்பிவிட்டு அந்த ராமசாமிய வர சொல்லு" என்ற கணக்கர்,

"டேய்! நீ போய் விளையாடு. வேலை பார்க்க வயசு இருக்கு" என்று சிறுவனை அனுப்பிவிட்டார்.

"என்ன அண்ணே! தத்துவம் பேசினாப்புல இருக்கு?" ராமசாமி கேட்டுக் கொண்டே, சிறுவன் விட்டு சென்ற வேலையை தொடர்ந்தார்.

"உனக்கு தெரியாததா? சக்தி தம்பி வந்தாலும் இதை தான் செய்யும். கூட எனக்கும் ரெண்டு திட்டு விழுகும். அதான் நானே அனுப்பிட்டேன்" என்று சொல்லி முடிக்க, மனைவியுடன் வந்து சேர்ந்தான் சக்தி.

வண்டியில் இருந்து இறங்கி அந்த தென்னந்தோப்புக்குள் நுழையும் அந்த இரண்டு நிமிட இடைவெளியில் அத்தனை வணக்கங்களை பெற்றிருந்தான் சக்தி.

மற்ற நாட்களில் புன்னகையோடு பதில் வணக்கம் சொல்லி கடப்பவனுக்கு இன்று ஏனோ மனைவி அருகே சிறு கூச்சம் வந்தது.

அதெல்லாம் நந்தினி கண்களுக்கு தெரியவில்லை. வாய் பிளந்து பார்த்துக் கொண்டு வந்தவளுக்கும் வணக்கம் விழ, சிறு தடுமாற்றத்துடனே சிரித்து வைத்தாள்.

"வாங்க தம்பி! வாங்க மா! ஏன்டா அந்த இளநீர்ல ரெண்டு கொண்டு வா. உட்காருங்க மா" கணக்கு பார்ப்பவர் எழுந்து கொள்ள,

"இல்ல.. இல்ல.. நீங்க இருங்க. நான் சும்மா தான் வந்தேன்" என்றவளை சக்தியும் சேர்ந்து அமர சொல்ல, சில நிமிடம் அமர்ந்திருந்தவள் இளநீரை சிந்தி சிதறி குடித்து முடித்து தோப்பின் உள்ளே நடந்து செல்ல,

அங்கே இருந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் சக்தியின் கண்கள் மனைவியின் செயல்களை தான் நொடிக்கு நொடி பார்த்துக் கொண்டிருந்தது.

அங்கிருந்தவர்களும் அதை உணர்ந்து அவனை கேலி சிரிப்புடன் பார்க்க வேலையை அவர்களிடமே ஒப்படைத்து விட்டு நந்தினியை தேடி சென்றான்.

வேறு யாரும் இல்லாத அந்த தோப்பில் தன் அருகே யாரோ ஓடி வரும் காலடி சத்தத்தில் நந்தினி திரும்பிப் பார்க்க, அதுவரை யாரும் பார்க்காமல் ஓடி வந்த சக்தி அவள் திரும்பவுமே ஓட்டத்தை நடையாக மாற்றினான்.

தொடரும்..
 
Top