• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 32

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 32

நந்தினி சக்தி இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்த கௌதம் ஆபீஸ் சென்றுவிட்டு மதியம் தான் வீட்டிற்கு வந்தான்.

அதுவரையுமே நந்தினி, வாசு, நிவி என பெண்கள் மாநாடு ஹாலில் ஒரு பக்கம் நடக்க, ராம் சக்தியுடன் அதே ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். இடையிடையே பெண்கள் கூட்டத்தில் அவ்வப்போது சகுந்தலாவும் எட்டிப் பார்த்துக் கொள்வார்.

"நந்தினி! சக்தி உன்னை மட்டும் விட்டுட்டு நாளைக்கு ஊருக்கு கிளம்புறதா சொல்லறாரே!" ராம் கேள்வியுடன் நிறுத்தினான்.

"ஆமா அண்ணா! அவருக்கு அங்கே வேலை இருக்கும். எனக்கு ஸ்கூல் லீவ் தான். அதான் அம்மாகூட இருக்கலாம்னு நான் தான் அவர்கிட்ட தங்கிட்டு வர்றதா சொன்னேன்"

நந்தினி ராம் கேள்விக்கு பதில் கூறினாலும் அவள் மனம் இப்போது ஏதோ யோசனைக்கு சென்றது. அதை மேலும் யோசிக்க விடாமல் நிவி கதையடிக்க, நேரம் போனதே தெரியாமல் அமர்ந்திருந்தனர்.

அப்போது தான் உள்ளே வந்த கௌதம் யோசனையுடன் நிற்க அவனுடன் அனைவரையும் சகுந்தலா சாப்பிட அழைக்க, முகம் கழுவி வருவதாக சொல்லி உள்ளே சென்று வந்தான் கௌதம்.

"அண்ணா வாசு உங்ககிட்ட ஏதோ சொல்லணுமாம்"

நிவி கௌதமிடம் சொல்ல, வாசுவை கேள்வியாய் நோக்கினான் கௌதம். கௌதமிடம் இருந்த அமைதியை யாரும் கவனிக்கவே இல்லை.

இதுவரை எதையும் அவள் நேரடியாய் சொல்லித்தானே பழக்கம். இப்போது என்ன தயக்கம்? ஏதோ தோன்ற, "சாப்பிட்டு பேசலாம் நிவி" என்றவன் முன்னே செல்ல, அவனோடு அனைவரும் அமர்ந்து கொண்டனர்.

"கௌதம் நீ பிரீயா? பிரீனா எங்கேயாச்சும் வெளில போலாம்" - ராம்.

ஏதோ யோசனையில் ஆழ்ந்த அமைதியில் இருந்தாலும் கெளதம் முகம் சரியில்லை என்பதை ராமும் வாசுவும் கவனித்து தான் இருந்தனர்.

"சுந்தரேசன் அங்கிள் ஆடிட்டிங் வர சொல்லியிருக்காரு டா. நாளைக்கு போலாமா?" - கௌதம் சாப்பாட்டில் மட்டும் கண் வைத்து கேட்டான்.

"ப்ச்! நாளைக்கு சக்தி ஊருக்கு கிளம்புறான். அதான் கேட்டேன்"

"ஏன்? மார்னிங் தானே வந்திங்க? அதுக்குள்ள கிளம்பனுமா நந்தினி?" கௌதம் கேட்க,

"இல்லை அத்தான்! நான் மட்டும் தான் கிளம்புறேன். நந்தினிக்கு லீவ் தான். ஒரு வாரம் இருந்துட்டு வரட்டும்" சக்தி வேகமாக கூறினான்.

இப்போது நிதானமாக யோசித்த நந்தினிக்கு ஏதோ புரிவது போல இருக்க, தன்னால் உதட்டில் புன்னகை பூத்தது.

சக்தியின் பதிலில் குழப்பம் வர கௌதம் திரும்பி நந்தினியை பார்த்தான். அவளோ எங்கோ பார்த்து சிரித்துக் கொண்டிருக்க தலையை உலுக்கிக் கொண்டான்.

"சரி டா போலாம். நான் போய்ட்டு எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன்" என ராமிடம் கொஞ்சம் தயங்கியே சொல்ல,

ராம் அவனை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் போதே கௌதம் மொபைல் அலறியது.

"தோ வர்றேன் விஷ்வா" என மொபைலில் கூறியவன் எழுந்து கொள்ள,

"டேய்! எங்கே போற?" அழுத்தமாக கேட்டான் ராம்.

"வந்து சொல்றேன் டா" என கிளம்பியவன், பின் நின்று திரும்பி வாசுவையும் நிவியையும் பார்த்தான். வாசுவுக்கும் ஏதோ சரியில்லை என தோன்ற அவனை தான் பயத்துடன் பார்த்து நின்றாள்.

"வாசு! என்ன பேசணும்?"

'அவளுக்கு எதுவும் தெரிந்திருக்க கூடாது கடவுளே' என வேண்டிக் கொண்டே கேட்டான்.

வாசுவிற்கு அப்போதுதான் தான் பேச நினைத்ததும் ஞாபகம் வர, அனைவரும் இருக்கும் போதே பேசிவிடுவது நல்லது என்ற எண்ணத்தில் பேச ஆரம்பிக்கவும் சகுந்தலாவும் அங்கே வந்தார்.

"இல்லை கௌதம்! நம்ம கல்யாணம் பத்தி கொஞ்சம் பேசணும்" தயக்கம் இருந்தாலும் அவள் சொல்லிவிட,

"அதுக்கு தான் இன்னும் ரெண்டு மாசம் இருக்கே வாசு? இப்ப என்ன பேசணும்?" அவசரமாக கேட்டான் கௌதம்.

"இல்லை இல்லை கௌதம்! அது வந்து ஒரு ஆறு மாசத்துக்கு அப்புறம் நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாமே!"

"வாசு! ஏன் இப்படி சொல்ற? என்னாச்சு? எதாவது பிரச்சனையா?" ராம் தான் கேட்டது.

நந்தினி சக்தி இருவரும் அங்கே நடப்பதை கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருக்க, எல்லாம் அறிந்த நிவி வாசு அருகில் அமர்ந்திருக்க, சகுந்தலாவும் ராமும் தான் ஏன் இப்படி சொல்கிறாள் என பதறினர்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா. உங்களுக்கு தான் என்னோட பேமிலி பத்தி தெரியுமே! அனு அக்காக்கு மேரேஜ் பண்ணிட்டு....ஒரு ஆறு மாசத்துக்கு அப்புறம் என்னோட கல்யாணம்னா அம்மாக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்குமே! அக்காக்கு வரன் பார்த்து எல்லாம் செய்யவே கொஞ்சம் டைம் ஆகும். அதான் சொல்றேன்"

யார் முகத்தையும் பார்க்காமல் தலைகுனிந்து தான் சொல்ல வந்ததை வாசு சொல்லி முடித்திட, கௌதம் கோபம், ஆற்றாமை, வருத்தம் அனைத்தும் கலந்த பார்வை ஒன்றை பார்த்துவிட்டு வேகமாக வாசல் நோக்கி சென்றான்.

வாசுவின் எண்ணம் அனைவருக்குமே புரிந்தது. அவள் தன் வீட்டின் சொந்த செலவில் மட்டுமே அனுவின் திருமணத்தை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறாள்.

அன்னை முந்தைய நாள் கூறிய 'இவளுக்கும் ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி குடுத்துட்டேன்னா நான் நிம்மதியா இருப்பேன்' என அனுவை சொன்ன போதுதான்

'தான் எப்படி அக்கா திருமணத்தை மறந்து தன்னை பற்றி மட்டுமே நினைத்து சுயமாய் திருமணத்திற்கு சம்மதித்தோம்?' என்ற எண்ணத்தின் குற்ற உணர்ச்சியில் கலங்கி போனாள்.

அதன் தாக்கம் தான் இப்போது வாசு பேசியது. மல்லிகாவும் தவறாக சொல்லிவிடவில்லை. அனுவே தான் முதலில் வாசு திருமணம் நல்லபடியாக முடியட்டும். எனக்கு மெதுவாக பார்த்துக் கொள்ளலாம் என்றது.

அதனால் சாதாரணமாக அன்னை கூறியதும் தான் அவசரப்படுகிறோம் என வாசு நினைத்து அனைவரிடமும் உளற, கௌதம் எதுவும் சொல்லாமல் சென்றதும் அவளுக்கு கண்ணீர் வந்துவிட்டது.

"கௌதம்” வாசல் வரை சென்ற கௌதமை ராமின் குரல் நிற்க வைத்தது.

வாசு இவ்வளவு சீரியஸ்ஸாய் பேசும் பொழுது கௌதம் கண்டும் காணாமல் செல்கிறான் என்றால் அவனுக்கு ஏதோ பிரச்சனை என யூகித்த ராம்தான் கௌதம் அருகே சென்றான்.

"வா! நானும் வர்றேன்" ராம் சொல்ல, தயங்கினான் கௌதம்.

"நீ எங்கே போனாலும் இப்ப நான் உன் கூட வருவேன்"

ராமின் அழுத்தமான பேச்சில் அங்கிருந்த அனைவருக்குமே ஏதோ பிரச்சனை என்று புரிய என்ன என கேட்கும் முன்பே ராமுடன் கௌதம் காரில் ஏறி சென்றுவிட்டான்.

"சரி! ஆபீஸ் பிரச்சனையை வீட்டுல காட்ட வேண்டாம்னு நினைச்சிருப்பாங்க. கவலைப்படாதீங்க. நந்தினி நீ சக்தியை ரூம்க்கு கூட்டிட்டு போ. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்"

என்ற சகுந்தலா வாசுவின் தோளை ஆறுதலாய் தட்டிக் கொடுத்து செல்ல, நிவி வாசுவும் குழப்பத்தில் நின்றனர்.

கார் ஓட்டிக் கொண்டிருந்த ராம் அமைதியாய் இருக்க, அருகில் அமர்ந்திருந்த கௌதம் மனதால் பயத்தில் உறைந்திருந்தான்.

"ராம்! அந்த பக்கம் இல்ல, இந்த பக்கம் போ"

கௌதமின் வெற்றுக் குரலில் ராம் திரும்பி அவனை பார்த்துவிட்டு அவன் சொன்ன திசையில் சென்றான்.

'ஆபீஸ் செல்லாமல் வேறு எங்கோ வழி சொல்கிறான்' என்பதிலேயே இது ஆபிஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை என்பதை தெரிந்ததும் ஒரு திருப்பத்தில் காரை நிறுத்தினான் ராம்.

'சொல்லு! எதையும் மறைக்காமல் முழுசா என்ன பிரச்சனைனு சொல்லு. என்னனு தெரியாமல் அங்கே போய் பிரச்சனை நீள்றதை நான் விரும்பல"

ராம் எங்கோ பார்த்தபாடி கேட்கவும் மீண்டும் கௌதமிற்கு போன் வர இம்முறை அவனிடம் இருந்து போனை பறித்தான் ராம்.

திரையில் விஷ்வா என்ற பெயர் வர அது கௌதம் ஆபீஸ்ல் வேலை செய்பவன் என அறிந்தவன், "சொல்லு விஷ்வா" என்றான்.

"சார் கௌதம் சார் இல்லையா?" ராம் குரலை அறிந்த விஷ்வாவும் தயங்கினான்.

"உங்க கௌதம் சார்கிட்ட சொல்றதை என்கிட்ட சொல்லலாம்"

ராம் குரலே கோபத்தில் ஒலிக்க, விஷ்வா அனைத்தையும் சொல்லவும் நிதானமாக கேட்க ஆரம்பித்தவன்,

"சீக்கிரம் வாங்க சார்" என்ற இறுதி பேச்சில் போனை அணைத்தானா என்று கூட பார்க்காமல் கெளதமை விட்ட அறையில் ராம் கோபம் கொஞ்சம் கூட குறையவில்லை.

அதன் மாறாய் காரின் வேகம் கூட, அடிவாங்கிய கௌதம் உணர்வே இன்றி அதே இடத்தில் அமர்ந்திருந்தான்

ஏதோ யோசித்த ராம் அவசரமாக அவன் போனை கையில் எடுக்க, "நான் ஆல்ரெடி போலீஸ்க்கு சொல்லிட்டேன்" என்ற கௌதமை முறைத்துவிட்டு திரும்பினான்.

"ஏன்டா நீ நல்ல பேர் வாங்க நான் தான் கிடைச்சனா? நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. அநியாயமா என்னை சாகடிச்சு என் அம்மா அப்பா சாபத்தை வாங்கிக்காதே! பேசாமல் வந்துடு ஓடிடலாம்

தெரியாம உன்னை லவ் பண்ணிட்டேன். என்னை எங்கேயாவது மெயின்ரோட்ல மட்டும் கொண்டுபோய் விடேன். சத்தியமா அடுத்து உன் கண்ணுலயே படமாட்டேன். எப்படி ஓடுறேன்னு மட்டும் பாரு!"

ரேகா விஷ்வாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். பயத்தில் அவளது கைகால் எல்லாம் நடுங்கியது.

"ப்ச்! கொஞ்ச நேரம் பேசாமல் இரு டி. சும்மா தொண தொணனு. உன்னை கூட்டிட்டு வந்ததுக்கு பதில் அந்த அஞ்சலிய கூட்டிட்டு வந்திருக்கலாம்"

"என்னது?? அஞ்சலியா? டேய் என்னடா சொன்ன? ஓஹ் அப்ப நீ பொறுக்கியா? அய்யோ உன்னை போய் லவ் பண்ணி தொலஞ்சிட்டேனே! ச்சீ பிராடு பிராடு! அய்யோ! அம்மா! இவனை நம்பி வீட்டை ஏமாத்தி ஊர் சுத்துன எனக்கு இதெல்லாம் தேவை தான். கடவுளே"

"ஏய் ச்சீ! நிறுத்துடி! பொண்ணா நீ? சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா கத்தி ஊர கூட்டுற? அந்த அஞ்சலிகிட்ட என்னைக்காவது நான் பேசி பாத்துருக்கியா? உள்ள இருக்குறவனுங்க வெளில வந்தானுங்க வையி.. நம்ம காலி. முதல்ல இங்க இருந்து உயிரோட போறோமானு பாரு" விஷ்வா கோபம் கொள்ள,

"எனக்கு தெரியாதா என் விஷ்வாவை பத்தி. சும்மா நீ நடிச்ச மாதிரி நானும் நடிச்சேன்" ஈஈஈ என முப்பத்திரெண்டு பல்லையும் காட்டி ரேகா சொல்ல, பல்லை கடித்துக் கொண்டு ஒற்றை விரல் காட்டி கொன்னுடுவேன் என வாயசைத்து அவளை வாயடைக்க வைத்தான் விஷ்வா.

விஷ்வா, கௌதம் ஆபீஸ்ல் வேலை பார்க்க, ரேகா அனு வேலை பார்க்கும் அதே ஆசிரமத்தில் உடன் பணி புரிகிறாள். விஷ்வா ரேகா இருவரும் 2 வருடமாக காதலித்து வரும் நிலையில் ரேகா தான் இன்று நடந்த சம்பவத்தின் சாட்சி.

அந்த இருட்டு அறையில் ஒரு மூலையில் சேரில் கைகளை கட்டி வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு மயக்கத்தில் கிடந்தாள் அனு... அனாமிதா!

வெளியில் இருந்த அறையில் இருந்து வந்த குரல்கள் மட்டும் அனு அறியாமல் அவள் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது.

"நிரஞ்சா! கேஸ் என்னாச்சு?"

"அங்கிள்! இந்த முறையும் அவனை வெளியில எடுக்க முடியலை. கேஸ் ரொம்ப ஸ்ட்ரோங்கா இருக்குனு சொல்றாங்க" நிரஞ்சன் சொல்ல,

"என்னடா! என்ன? விளையாடுறீங்களா? தோ பாரு! அவன் மட்டும் அடுத்த வாய்தால வெளில வர்ல.."

கோபத்தில் நிரஞ்சன் சட்டையை பிடித்து கத்தியவன் எழுந்து வெளியே செல்ல, நிரஞ்சன் அங்கேயே அமர்ந்து ஆத்திரமாய் அடியாட்களை அருகே அழைத்தான்.

"அந்த வாசுவையும் சேர்த்து தூக்க சொன்னா இவளை மட்டும் தூக்கி ஏன்டா என் உயிரை வாங்குறீங்க? உங்களை வச்சு பத்து பைசாக்கு பிரயோஜனம் இல்லை. இன்னும் ஒரு மணி நேரம் தர்றேன். அதுக்குள்ள அந்த வாசுவோட வரல... ஒருத்தனும் உயிரோட இருக்க மாட்டிங்க"

நிரஞ்சன் மிரட்டலில் அவளை தேடி அனைவரும் வெளியேற, அந்த இடத்தில் நிரஞ்சனுடன் அனுவிற்கு பாதுகாப்பாய் இரு தடியன்களும் மட்டும்.

வெளியே உயிர் பயத்தில் ரேகா விஷ்வா......

தொடரும்..
 
Top