• வைகையின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் துணையே - 1.

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
483
உயிர் துணையே....

பகுதி – 1.


சந்திரன் சொன்னவற்றை கொஞ்சம் கூட நம்ப முடியாமல், அவனையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் இந்திரன். கையில் அவனது இரண்டு வயது மகள் மான்யா, தன் சித்தப்பாவையும், அப்பாவையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே நிலவிய அமைதிக்கான காரணம் அவளுக்கு சுத்தமாகப் புரியவே இல்லை.

ஆனால் தகப்பனின் முகத்தில் இருக்கும் அளவுக்கதிகமான கோபம் புரியவே, அவன் கரங்களில் இருந்து இறங்கிக் கொண்டாள்.

“என்னடா சொல்ற? நீ சொல்றது எல்லாம் உண்மையா?” கழுத்து நரம்புகள் புடைக்க இந்திரன் கத்தவே, குழந்தை மான்யா ஓடி வந்து தன் சித்தப்பாவை கழுத்தோடு சேர்த்து இறுக கட்டிக் கொண்டாள்.

“மானு குட்டி... ஒண்ணும் இல்லடா... சும்மா...” சந்திரன் குழந்தையை சமாதானப்படுத்த முயன்றான்.

அதைப் பார்த்த கீர்த்தி, “என்னங்க... கண்ட்ரோல் யுவர்செல்ஃப். குழந்தை பயப்படறா பாருங்க” வேகமாக அவனை அடக்கினாள்.

“அவ இருக்கறதாலதான் இவ்வளவு பொறுமையா பேசிகிட்டு இருக்கேன். இல்லன்னா என் கைதான் பேசி இருக்கும்” அடக்கப்பட்ட கோபத்தில் அவன் உரைக்க, கீர்த்திக்கு இந்த இந்திரன், முற்றிலும் புதியவன்.

“என்ன பேசறான்னு நீயும் கேட்ட தானே... ஒரு பொண்ணா இருந்துட்டு இதை எப்படி நீ இவ்வளவு சாதாரணமா எடுத்துகிட்டன்னுதான் எனக்குப் புரியவே இல்லை” அவனது பார்வை அவளை குற்றம் சுமத்த, அவளது முகத்தில் மெல்லிய கோபம் உதயமானது.

“இந்திரன், நான் என்னவோ அவர் பண்ணது சரின்னு சொன்ன மாதிரி நீங்க பேசறீங்க” அவளும் சிறு கோபத்திலே பதில் கொடுத்தாள்.

“அப்போ நீ பண்றதுக்கு என்ன அர்த்தம்? எனக்குப் புரியலை” இந்திரனுக்குள் ஏறிய கோபம் இறங்க மாட்டேன் என சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது.

“இதைச் செய்திருக்கறது உங்க தம்பிங்கறதுதான் காரணம். பாமா அத்தையோட புள்ளை தப்பு பண்ணியிருக்க மாட்டாருன்னு நான் நம்பறதுதான் காரணம்” இப்படிச் சொன்ன மனைவியை கண்கள் சிவக்க ஏறிட்டான்.

சந்திரனோ தலை கவிழ்ந்தான்... அவனுக்குமே தான் செய்து வைத்திருப்பதை எண்ணி உள்ளம் நைந்து கொண்டிருந்தான்.

“அவன் இப்போ பண்ணி வச்சிருக்கறதுக்குப் பேரு தியாகமா?” நக்கலாக கேட்க, அவளுக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

‘என்னடா இது?’ என்பதுபோல் அவள் சந்திரனைப் பார்க்க, அவனோ குழந்தையை இறுக அணைத்தவாறு அசையக்கூட செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தான். குழந்தைக்கோ அங்கே நிலைமை சரியில்லை என்பது புரிய, அவன் அணைப்பில் இருந்து விலகி கீழே சென்றுவிட்டாள்.

குழந்தை செல்லவே, “எப்படிடா அவ்வளவு பெரிய காரியத்தைப் பண்ணிட்டு நீ இன்னும் உசுரோட இருக்க?” இந்திரன் தன்னை மீறி வார்த்தையை விட,

“இந்திரன்... போதும்... என்ன இது? வார்த்தையை பேச முன்னாடி கொஞ்சமாவது யோசிக்கணும்” ஏற்கனவே செய்த தப்பை உணர்ந்து மருகிக் கொண்டிருக்கும் சந்திரனை மேலும் மேலும் நோகடிப்பதால் யாருக்கு என்ன பயன் இருந்துவிடும்?

“அவன் யோசிச்சானா? இதை எங்க அம்மாகிட்டே சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் உயிரையே விட்டுருவாங்கன்னு உனக்குப் புரியுதா இல்லையா?” பாமாவின் பேச்சு அங்கே வர, அவளால் அதற்கு ஒரு வார்த்தை கூட மறுத்துப் பேச முடியவில்லை.

அவர்களது விஷயத்தில், கணவன் மனைவிக்குள் நேர்ந்த செய்கைகளுக்கே அவ்வளவு வேதனைப் பட்டவர். இப்பொழுது சந்திரன் செய்து வைத்திருக்கும் விஷயம் மட்டும் தெரிந்தால், தன் உயிரையே விட்டுவிடுவார் என்றே தோன்றியது.

“என்னங்க, செஞ்ச தப்பை அவர் நியாயப்படுத்தினால் குத்தம் சொல்லலாம். ஆனா செஞ்சது தப்புன்னு மன்னிப்பு கேக்கறவரை குத்தி குதறிக்கிட்டு இருக்கீங்கன்னு உங்களுக்கு நான் ஞாபகப்படுத்திக்கறேன். எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு”.

விஷயம் தெரிந்ததுமுதல் காலில் சலங்கை இல்லாமல் ஆடிக் கொண்டிருக்கும் இந்திரனை எப்படி மலையிறக்குவது எனத் தெரியாமல் தலை சுற்றிப் போய் நின்றிருந்தாள்.

அவ்வளவு நேரம் பேசியதில், இந்த வார்த்தைகள் மட்டுமே அவனை கொஞ்சம் அமைதிப் படுத்தியது. ஆனாலும் தன் தம்பியை முறைப்பதை மட்டும் அவன் கைவிடவே இல்லை.

“ஏதோ ஒரு பொண்ணுக்கு, குடிச்சுட்டு தாலி கட்டிட்டேன்னு சொல்றானே, விஷயம் அவ்வளவுதானா இல்ல இன்னும் இருக்கா?” இந்திரன் இப்படிக் கேட்கவே, கீர்த்தியும், சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

தாலி கட்டிவிட்டான் எனத் தெரிந்ததற்கே இப்படி என்றால், அவன் அடுத்து செய்து வைத்திருப்பதைச் சொன்னால் அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ? என நினைக்கையிலேயே கீர்த்திக்கு திக்கென இருந்தது. சொல்லப்போனால் அடுத்து சந்திரன் சொன்னதை அவளாலேயே நம்ப முடியவில்லை என்பதுதான் உண்மை.

அவன் தன்னிடம் சொன்ன பொழுது, ‘அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை’ என அவனிடமே வாதாடியவள் அவள். ஆனால் நடந்தவை அனைத்தும் அவனுக்கே கேள்விஞானம்தான் என்கையில், எதையும் யாராலும் நம்பவோ, மறுக்கவோ முடியாத நிலையில் இருந்தார்கள்.

‘மகனே நீ இன்னைக்கு செத்தடா’ எண்ணியவாறே சந்திரனைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தாள்.

“ஏய், என்னடா... நீங்க ரெண்டுபேரும் அமைதியா இருக்கறதைப் பாத்தா, டேய்... அந்த பொண்ணை...”

“ப்ரோ... உன் கற்பனைக் குதிரையை கொஞ்சம் அடக்கு... நினைக்கவே சகிக்கலை” அவன் வார்த்தைகளை முடிக்கும் முன்பே, சந்திரன் வேகமாக இடையிட்டுக் கத்தினான்.

“ஹப்பாடா... நெஞ்சில் பாலை வார்த்தடா... வேற என்னதான் பண்ணித் தொலைச்ச? சொல்லித் தொலை... கொஞ்சம் கொஞ்சமா கேக்க என் பிபி ஏறுது...”.

“அண்ணி, அவனைக் கொஞ்சம் என்னன்னு பாருங்க... என்னவோ பிபி ஏறுதுங்கறான்” இப்படிச் சொன்ன சந்திரனை, இப்பொழுது கீர்த்தியும் சேர்ந்து முறைத்தாள்.

‘குட் ஜோக் பட் ராங் டைமிங்...’ மனதுக்குள் எண்ணியவன், கீர்த்தியிடம் பார்வையால் கெஞ்சினான்.

“உனக்குதான் ஒரு ட்ராப் குடிச்சா கூட சுய நினைவே இருக்காதேடா. பிறகு எப்படி குடிச்ச? எதுக்கு குடிச்ச? எப்படி குடிச்ச?” இந்திரன் கேள்விகளை அடுக்க, தன் அண்ணனைப் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தான்.

“என்னடா ஒரு மார்கமா பாக்கற?” அவனது பார்வைக்கான பொருள் அவனுக்குப் புரியவே இல்லை.

“என் அறிவுக்குத் தெரிஞ்சு நான் குடிச்சிருப்பேன்னு நினைக்கறியா?” அவன் கேட்க, இந்திரனின் புருவம் இரண்டும் நெரிந்து யோசனையைக் காட்டியது.

“அப்படின்னா... உனக்கே தெரியாமல் நடந்ததுன்னு சொல்ல வர்றியா? அப்படியே இருந்தாலும் ஒரு பொண்ணுகிட்டே தப்பா நடந்ததை எப்படிடா நீ நியாயப்படுத்த முடியும்? அதுவும் முன்ன பின்ன தெரியாத பொண்ணுக்கு தாலி கட்டிட்டேன்னு சொல்றதை என்னன்னுடா எடுக்கறது?” இந்திரனின் கோபம் இப்பொழுது கொஞ்சமாக இறங்கியது.

“அவளை அன்னைக்கு முழுக்க நான் கவனிச்சுட்டுதான் இருந்தேன்” சந்திரன் ரோஷமாக உரைக்க, அவனைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்தான்.

“ஓஹோ... கண்டதும் காதலோ?” அதே பார்வையோடு நக்கலாக வினவ,

“ஏன் உனக்கு மட்டும்தான் லவ் அட் ஃபஸ்ட் சைட் வருமா? எங்களுக்கெல்லாம் வரக் கூடாதுன்னு ரூல்ஸ் ஏதாவது இருக்கா என்ன?” அவன் இப்படிக் கேட்கவே, அந்த நிலையிலும் கீர்த்தி பக்கென சிரித்துவிட்டாள்.

“அண்ணி, நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்” சந்திரன் உரைக்க,

“அதை சொல்லிட்டு சொல்லுங்க... எது காமெடி, எது சீரியஸ் போஸ்ட்ன்னு எனக்கு கன்பியூஸ் ஆகுதா இல்லையா?” இப்படிச் சொன்னவளை இப்பொழுது அண்ணனும் தம்பியும் சேர்ந்து முறைத்தார்கள்.

“நாம சீரியஸா பேசிகிட்டு இருக்கோம் கீர்த்தி...” இந்திரன் கோபமாகவே அவளுக்கு நினைவூட்டினான்.

“ரொம்ப சீரியஸா போகுதுன்னுதான் நானும் சொல்லிட்டு இருக்கேன். கொஞ்சம் நிதானத்துக்கு வாங்க. அவரை குற்றவாளி மாதிரி விசாரிக்கறதை விட்டு, பொறுமையா கேளுங்க. அடுத்து என்ன செய்யலாம்ன்னு யோசிங்க” அவள் சமயம் பார்த்து உரைக்க, அவள் சொல்வதில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டான்.

அவ்வளவு நேரமாக நின்றுகொண்டிருந்தவன், பொறுமையாக தன் தம்பிக்கு எதிரே கிடந்த சோபாவில் அமர்ந்தான். “சரி சொல்லு, இது எப்போ, எங்கே நடந்தது?” அவன் கேட்க, நடந்தவற்றை சந்திரன் சொல்லத் துவங்கினான்.

“நான் எம்ஈ ல கோல்ட் மெடல் வாங்கினேனே... அதுக்கு மூணு மாசம் கழிச்சு ப்ரண்ட்ஸ்க்கு எல்லாம் பார்ட்டி கொடுத்தேனே அப்போ...” அவன் சின்னக் குரலில் உரைக்க, இந்திரன் அந்த நாளை நினைவுகூர முயன்றான்.

“பாண்டிச்சேரி போறேன்னு நீ சொன்னியே... அங்கேயா? டேய், நீ அங்கே போறேன்னு சொன்னப்போவே குடிக்கக் கூடாதுன்னு நான் சொன்னேனா இல்லையாடா?” கடுப்பில் கத்தினான்.

“உனக்கே என் உடல்நிலையைப் பத்தி தெரியும்போது எனக்குத் தெரியாதாடா? நானும் அன்னைக்கு முழுக்க குடிக்காமல்தான் இருந்தேன். அவனுங்களை நம்பாமல் கோக், தண்ணி கூட நானே என் கைப்பட வாங்கிக் குடிச்சுட்டும் இருந்தேன்”.

“பிறகு எப்படிடா அது நடந்தது?” இந்திரனிடம் கோபம் கொஞ்சமாக ஏற, கீர்த்தி அவன் அருகே வந்தாள்.

“அவரை சொல்லத்தான் விடுங்களேன்... இப்படி கேட் போட்டுகிட்டே இருந்தால் அவர் எப்போதான் சொல்றது?” கணவனை அடக்கினாள்.

அதைப் பார்த்த சந்திரன், “அண்ணி, கதை கேட்க அவ்வளவு ஆர்வம்...” அவன் கேட்க, அவன் தலையிலேயே நறுக்கென குட்டினாள்.

“உனக்குப்போய் சப்போட்டுக்கு வந்தேன் பாரு என்னைச் சொல்லணும். என் பொண்ணை மாதிரியே நானும் கீழே போறேன். நீங்க அண்ணனும் தம்பியும் என்னன்னும் போங்க” அவள் கீழே செல்ல முயல, வேகமாக அவளைத் தடுத்தான்.

“அண்ணி, நீங்களும் இருங்க...” சொன்னவனது நினைவுகள் அந்த நாளுக்குச் சென்றது.

(இந்திரன், சந்திரனின் வேலையைப் பற்றி “நேசம் தாங்குமோ நெஞ்சம்” கதையிலேயே படித்து தெரிந்துகொண்டவர்களுக்குத் தெரியும். புதிதாக இந்த கதையை படிப்பவர்களுக்காக இந்த விளக்கம்.

இந்திரனும் சந்திரனும் கணினிப் பொறியாளர்கள். அதிலும் புதுமையைப் புகுத்தும் அதி புத்திசாலிகள். அவர்கள் உருவாக்கும் ‘ஆப்’ கள் இல்லாத கைப்பேசிகளே இந்த உலகத்தில் கிடையாது எனலாம்.

இந்திரன் இப்பொழுது கூகுளுக்கே சவால்விடும் செயலியை கண்டுபிடித்து, அமெரிக்காவில் பல கோடி சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்திரனின் பாதி வேலைகளை சென்னையில் இருந்து பார்ப்பது சந்திரனே.

அமெரிக்கா போக தயங்கியே சென்னையிலேயே இருக்கிறான். ஆனாலும் சந்திரனும் உலக அளவில் அறியப்படும் பெரும் கணினி நிபுணன் என்பதால், அவனைத் தேடி பல பிராஜெக்ட்கள், அவன் தனியாக உருவாக்கும் ‘ஆப்’கள் என அவனது நேரங்கள் காலில் ரயிலைக் கட்டிய வேகம் கொண்டது.

இந்திரனும், சந்திரனும் ஒன்றாக உருவாக்கிய பல செயலிகளுக்காக இளம் விஞ்ஞானிகள் விருதுகளை வாங்கிக் குவித்து இருக்கிறார்கள். அவர்களது முகங்கள் சிரிக்காத பத்திரிக்கைகள் இல்லை. அவர்களது பேட்டிகள் இல்லாத தொலைக்காட்சிகள் அரிது.

இந்திரன் வேலை செய்யும் கம்பெனியில், சந்திரனும் பகுதி பணி புரிவதால், அவர்களது கம்பெனியே மறைமுக பாதுகாப்புக்கு எப்பொழுதும் ஆட்களை ஏற்பாடு செய்து இருந்தார்கள். அவர்களுக்கே தெரியாமல் நிழலாக தொடர்வதே அவர்களது வேலை).

****சந்தியா, கிச்சனுக்குள் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள். காலைநேர வேலைகள் அவளைப் பிடித்து அமிழ்த்திக் கொண்டிருந்தது. அவளது சித்தி கனகம் எழுந்து வருவதற்குள்ளாகவே அனைத்து வேலைகளையும் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பு அவளிடம் இருந்தது.

சந்தியா... அவளைப்பற்றி சொல்வது என்றால், நீங்கள் அன்றாடம் வழியில் சந்திக்கும் ஒரு கல்லூரிப் பெண்ணை ஒத்திருந்தாள். அவளது தனித்துவம் எனச் சொல்வது என்றால் அவளது அடர்ந்த கூந்தலைச் சொல்லலாம்.

ஒரு கைப்பிடிக்குள் அவளது கூந்தலை அடக்கிவிட முடியாது. அவ்வளவு அடர்த்தியாக இருக்கும். இடையைத் தாண்டியும் நீண்டு வளரும். ஆனால் அப்படி வளர்வது வீட்டுக்கு நல்லதில்லை என அவளது சித்தி கனகம் திட்டுவாள் என்பதால், இடையில் வைத்து அதை வெட்டி விடுவாள்.

இடது மூக்கில் ஒரு சிறிய மூக்குத்தி, அதைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். தன் தாயின் நினைவாக, தாயைப் போலவே மூக்கு குத்திக் கொண்டாள் என்பதுதான் உண்மை.

குணமோ தங்கமான குணம்... கூடவே பயந்த சுபாவம் உடையவள். பயம் என்றால் சாதாரணமாக இல்லை... அனைத்துக்குமே பயப்படுவாள். பன்னிரண்டு வயதுமுதல் வீட்டு வேலையை செய்யத் துவங்கியவள், இருபத்தைந்து வயது வந்த பிறகு இன்னும் அதை நிறுத்தவே இல்லை.

அவளது இந்த பயந்த சுபாவத்தாலேயே அவளது சித்தி அவளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். சந்தியாவின் தாய் அவளுக்கு பத்து வயதாக இருந்த பொழுது டெங்கு காய்ச்சலில் மாண்டு போனாள்.

சந்தியாவின் தாய் இறந்த இரண்டே வருடங்களில், அவளது தந்தை ரமணன், கனகத்தை திருமணம் செய்து அழைத்து வந்தார். திருமணத்தின் பொழுதே, தன் மகளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் திருமணம் செய்தார்.

ஆனால் ரமணனின் அமைதியான குணத்தை ஒரே நாளிலேயே புரிந்துகொண்ட கனகம், அவரை அடக்கியதோடு மட்டுமல்லாமல், சந்தியாவையும் ஒரு வேலைக்காரியாகவே நடத்தினாள். அதோடு அவள் வந்த மறு வருடமே, தன் மகள் மஹதியை பெற்றெடுக்கவே அவளது ஆட்டம் அதிகரித்தது.

மஹதிக்கும் சந்தியாவுக்கும் பதிமூன்று வருட வித்தியாசம் இருந்தது. மஹதிபிறந்த மூன்று வருடங்கள் கழித்து இரட்டையர்களான தர்ஷனும் – வர்ஷனும் பிறந்தார்கள். தம்பிகளுக்கும் சந்தியாவுக்கும் பதினாறு வருட இடைவெளி இருந்தது.

அதாவது அவளது தங்கை ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க, தம்பிகள் இருவரும் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். மஹதிபிறக்கையில் தாய் வீட்டுக்குச் சென்றிருந்த கனகம், இரட்டை மகன்கள் பிறந்த பொழுது தாய்வீடு செல்லவே இல்லை.

அவளது தாய் இங்கே வந்துவிட, அனைவருக்கும் பணிவிடை செய்தது சந்தியா தான். சமையல் வேலை, வீட்டு வேலை, துணி துவைப்பது என அனைத்து வேலையையும் சந்தியாதான் செய்தாள். குழந்தைகளுக்கு டயப்பர் போடும் பழக்கம் அங்கே இல்லாமல் இருக்க, குழந்தைகளின் ஆய் துணியை அலசிப் போடுவதும் அவளது வேலைதான்.

அனைத்து வேலையையும் வாங்கினாலும், குழந்தைகளை அவள் தொடக் கூட விட மாட்டார்கள். மஹதிக்கு கிட்டத்தட்ட ஒரு வயது ஆகும் வரைக்குமே அவள் பெற்றவளின் வீட்டிலேயே இருந்ததால், மஹதி இங்கே வந்த பிறகு புதியவளான சந்தியாவோடு உறவாட மறுத்தாள்.

அதைவிட, சந்தியாவுக்கு வேலைகள் இல்லாமல் இருந்தால் தானே மஹதியை கொஞ்சவோ தூக்கவோ நேரம் கிடைக்கும். அப்படியே நேரம் கிடைத்து, மஹதி அவளாகவே சந்தியாவை நெருங்க முயன்றால், கனகா அதற்கு அனுமதிக்கவே இல்லை.

இரட்டை குழந்தைகளை பார்த்த பொழுதோ, சந்தியாவுக்கு குழந்தைகளைக் கொஞ்சிக் கொள்ள, தூக்கி வைத்துக் கொள்ள பெரும் ஆசையாக இருந்தது. ஆனால் குழந்தைகளை அவளது கண்களில் கூட காட்ட மறுத்தார்கள்.

கனகம் தன் பிள்ளைகளை அவளது கண்ட்ரோலில் வைத்திருக்க, அவர்களும் சந்தியாவிடமிருந்து விலகியே நின்றார்கள். ஆனாலும் தம்பிகள் இருவரும் தாய்க்குத் தெரியாமல் அவளிடம் பேசுவார்கள். அதையும் மஹதி பார்த்து தாயிடம் சொல்லிவிட்டால், வளர்ந்த பெண் என்றும் பாராமல் சந்தியாவைக் கை நீட்டி விடுவாள்.

தங்களால் சந்தியா அடிவாங்க வேண்டாமே என்ற நினைப்பில் தம்பிகளும் அவளிடம் பேச முயல்வது இல்லை. பார்த்து சிரிப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். அதுவும் சந்தியாவை கூடத்தில் பார்த்தால்தான் நிகழும். அவள் கிச்சனுக்குள்ளோ, அவளது அறைக்குள்ளேயோ முழு நேரமும் இருக்கையில், எங்கே சிரிப்பது?

இது ஒரு பக்கம் என்றால், ரமணன் தன் பெரிய மகளிடம் பேச முயன்றாலே வீட்டில் சண்டையும், பிரச்சனையும் நடந்தேற, சந்தியாவுக்கு அந்த வீட்டில் தான் ஒரு அங்கம் என்ற நினைப்பே இல்லாமல் போனது. தந்தையிடமிருந்து முழுதாக விலகிக் கொண்டாள். அந்த வீட்டில் அவளை வேலைக்காரியாகவே கனகம் அவளை நடத்தினாள்.

சந்தியாவுக்கு அவளது பயந்த சுபாவம் அவளது தந்தையிடமிருந்து வந்தது என்றே சொல்லலாம். ஆனாலும் சில நேரம் தன் சித்தியை அவள் எதிர்த்து பேச முயல, கனகம் அவளை அடிப்பதும், வீட்டின் வெளியே அவளைத் தள்ளி கதவைப் பூட்டுவதும் நடந்தேற, அவளால் என்ன செய்ய முடியும்?

அதுவும் அவளை அப்படி வெளியே தள்ளுகையில், அண்டை வீட்டினரின் பரிதாபமான பார்வையை எல்லாம் பார்க்கையில் கூனிக் குறுகிப் போவாள். அதனாலேயே தன் சித்தியை எதிர்ப்பதை விட்டுவிட்டாள். அவள் எதுவும் சொல்லும் முன்பே அனைத்தையும் செய்யப் பழகியும் கொண்டாள்.

ஆனாலும் இப்பொழுதெல்லாம் சந்தியாவைப் பார்த்தாலே கனகம் ஏதாவது வாய்க்கு வந்தபடி பேசத் துவங்கி விட்டாள். அதற்குக் காரணம் இருந்தது... சந்தியாவுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என ரமணன் சொன்னதுதான் காரணம்.

சந்தியா எம்ஈ கம்பியூட்டர் சயின்ஸ் முடித்திருக்கிறாள். அவளது படிப்பை முடக்க கனகம் எவ்வளவோ போராடிப் பார்த்தாள். ஆனால் இயல்பிலேயே நன்றாகப் படிக்கும், ஸ்காலர்ஷிப்பணத்திலேயே தன் படிப்பு செலவைப் பார்த்துக் கொண்ட அவளை கனகத்தால் எதுவும் செய்ய முடியவில்லை என்றே சொல்லலாம்.

சந்தியா இவ்வளவு படித்திருந்தாலும், அவளால் வெளி உலகில் தனியாக நின்று தன் திறமையை நிரூபிக்கும் தைரியம் எல்லாம் அவளுக்கு இருக்கவில்லை. சொல்லப்போனால் வேலைக்கான இன்டர்வியூ செல்லக் கூட அவளுக்கு பயம். அதனாலேயே இவ்வளவு படித்தும் வேலையின்றி இருந்தாள்.

அவளது தந்தை பாண்டிச்சேரியில் சின்னதாக ஒரு ஹோட்டல் நடத்தி வந்தார். சில நேரங்களில் அங்கே சென்று ஏதாவது வேலைகளைப் பார்ப்பாள். அதற்கே கனகம் அவளை அனுமதிப்பது இல்லை. அவளுக்குத் தெரியாமல்தான் அங்கே சென்று வருவாள்.

அவளது இந்த பயந்த சுபாவம்தான் அனைத்துக்கும் எதிரியாக இருந்தது என்றே சொல்லலாம். அவளுக்கென இந்த உலகில் ஒரு ஜீவன் உண்டு எனச் சொன்னால் அது ரகு... ரகுவரன். அவளது பள்ளித் தோழன். அவளுக்கென பரிந்து பேசும், உடனிருக்கும் ஒரே உறவு.

இன்று அவனுக்குப் பிறந்தநாள்... அவனைக் காணப் போக வேண்டும் என்பதற்காகவே வேலைகளை எல்லாம் வேகமாகச் செய்து கொண்டிருந்தாள். அவனைப்பற்றி எண்ணினாலே இதழ்களில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொள்ளும்.

அவனைப்பற்றிய நினைப்பிலேயே அவள் வேலை செய்து கொண்டிருக்க, “என்ன இளிப்பு வேண்டிக் கிடக்கு? எவனையாவது நினைச்சு சிரிக்கறியா என்ன? அப்படி இருந்தாலும் எனக்கு சம்மதம்தான்...

“போறதுன்னா கிளம்பி போய்கிட்டே இரு... இங்கே யாரும் வருத்தப்படப் போறதில்லை” திடுமென ஒலித்த கனகத்தின் குரலில் பதறிபோய் கையில் இருந்த கத்தியை நழுவ விட்டாள்.

அது சரியாக அவளது காலில் விழ, லேசாக கீறி ரத்தம் வழியத் துவங்கியது. “ஸ்...” வேகமாக அங்கே இருந்த மஞ்சள்தூள் டப்பாவை எடுத்தவள், விரலில் மஞ்சளை அள்ளி, கீறிய இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

“ம்கும்... ஒண்ணுமே தெரியாத பாப்பா... *** தாப்பாங்கற மாதிரி முகத்தை வச்சுகிட்டு அமுக்குணி வேலை பாக்க வேண்டியது. என்ன சொன்னாலும் எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி இருக்கறது. சுரணை கெட்ட ஜென்மம்” எதற்கு வந்தாள், எதற்காக திட்டுகிறாள் என்றே சந்தியாவுக்குப் புரியவே இல்லை.

வலியினால் எழுந்த கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டவள், மீண்டுமாக எழுந்து வேலையைத் தொடர்ந்தாள்.

“மகாராணிகிட்டே காபின்னு கேட்டாத்தான் கிடைக்குமோ? நீயா குடுக்க மாட்டியா?” அதிகாரமாக அவள் கேட்க, வேகமாக அவளுக்கு காபியைக் கலந்து கொடுத்தாள். காலையில் ஐந்து மணிக்கே எழுந்து சமையல் செய்யும் களைப்போ, சோர்வோ எதுவும் அவளிடம் இருக்கவில்லை.

‘இது என் வீடு, இவை எல்லாம் என் வேலை’ என்ற ஆத்மார்த்த நினைப்பு மட்டுமே அவளிடம் இருந்தது. இன்று விடுமுறை என்பதால், தம்பிகளும், தங்கையும் உறக்கத்தில் இருக்க, தன் வேலைகளை முடித்தவள், குளித்து கிளம்பினாள்.

அவள் கிளம்பி வெளியே செல்ல, கனகம் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவளிடம் எங்கே செல்கிறாய்? என்ன விஷயம்? என எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. சந்தியாவுக்கு ஒரு பக்கம் அது வருத்தமாக இருந்தாலும், மறுபக்கம் நிம்மதியாகவும் இருந்தது.

சந்தியா வீட்டு வேலைகளை செய்யவில்லை என்றால் ஏன் எனக் கேட்பாளேதவிர, வேறு எதற்காகவும் அவளது விஷயத்தில் கனகம் தலையிடுவதே இல்லை. வந்தாயா வா... இருக்கிறாயா இரு... போகிறாயா போ... இதுதான் அவளது மனநிலை.

அனைத்தையும் யோசித்தவாறே, இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த ரகுவரனின் வீட்டுக்கு அவள் சென்றாள். வீட்டின் அழைப்புமணியை அழுத்திவிட்டு அவள் காத்திருக்க, கதவைத் திறந்தார் ரகுவரனின் தாய் மகேஸ்வரி.

அவளைப் பார்த்தவுடன் பூவாக மலர்ந்த அவரது முகம், மறு நொடியே இறுகிப் போக, அதைப் பார்த்தவளது மனமும் வாடிப் போனது.

துணைவருவான்............
 
Last edited:

saru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 24, 2022
Messages
78
Sandiy tan heroine yaaa super
Lovely start infaa
 

ஆனந்த ஜோதி

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
40
அருமை சிஸ்டர்,

ஆரம்ப அத்தியாயமே அருமையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. வெயிட்டிங்...
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
483
அருமை சிஸ்டர்,

ஆரம்ப அத்தியாயமே அருமையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. வெயிட்டிங்...

நன்றி....

மகிழ்ச்சி.
 

Lakshmi murugan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
494
சந்தியா தான் சந்திரன் தாலி கட்டிய பெண்ணா.
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
483
சந்தியா தான் சந்திரன் தாலி கட்டிய பெண்ணா.

ஆமாம்.... அவளேதான்....

நன்றி.
 
Top