• வைகையின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் துணையே - 12.

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
483

பகுதி – 12.

சந்திரன், தங்கள் அலுவலக அறையில் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்துக் கிடந்தான். திருமண வேலைகள் அனைத்தும் ஒரு பக்கம் வேகமாக நடந்து கொண்டிருக்க, இரண்டு நாட்களாக எதிலும் ஈடுபட முடியாமல் சோர்ந்து கிடந்தான்.

“சின்னவன் ரெண்டு நாளா வீட்டில் இருக்கானா? இல்லையான்னே தெரியலை. அவன் இருந்தா வீடே கலகலன்னு இருக்கும், எப்போ இந்த அமெரிக்காவுக்குப் போயிட்டு வந்தானுங்களோ ரெண்டுபேர் குணமும் சுத்தமா மாறிப் போச்சு” பாமா வாய்விட்டே புலம்பிக் கொண்டிருக்க, கீர்த்திக்கு உள்ளுக்குள் துணுக்கென்று இருந்தது.

“என் பிள்ளைங்க எல்லாம் வளந்துட்டாங்க, வீட்டில் மயான அமைதியா இருக்குன்னு நான் ஒரு நாள் கூட நினைச்சதே இல்லை. அந்த அளவுக்கு சந்திரன் வாயாடிகிட்டே இருப்பான். இப்போ என்னன்னா... என் மானு குரல் மட்டும்தான் கேக்குது” தன் இடுப்பில் இருந்த பேத்தியை கொஞ்சிக் கொண்டார்.

“பேத்தி குரல் கேக்க ஆரம்பிச்ச உடனே, தம்பி அவர் பொறுப்பை பாப்பாகிட்டே கொடுத்துட்டாரோ என்னவோ?” அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பாக்கியா சொல்ல, ஒரு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினார்.

“அத்த... முன்ன எல்லாம் அவங்க நினைச்ச நேரத்துக்கு வேலையை முடிச்சா போதும். ஆனா இப்போ அவங்க சொல்ற நாளுக்குள்ளே வேலையை முடிக்கணுமே, அந்த டென்ஷன் இருக்கும் தானே” கீர்த்தி அவரை சமாதானப் படுத்தினாள்.

அவளுக்குமே, திருமணம் நிச்சயமான நாளில் இருந்து, சந்திரனின் முகத்தில் இருந்த நிம்மதியும், சந்தோசமும் சுத்தமாக விடைபெற்றுச் சென்றுவிட்டதாகத் தோன்றியது. அதுவும் காஞ்சிபுரத்துக்கு சென்று வந்த பிறகு, அவன் சுத்தமாக ஆளே மாறிப்போன உணர்வு.

அதை பாமாவிடம் சொல்ல முடியாமல் அமைதியானாள். இந்திரன் வேறு அவசார வேலையாக நேற்று அமெரிக்கா கிளம்பிச் சென்றிருக்க, இன்னும் இரண்டு நாட்கள் கழித்துதான் வருவான். அதற்குள்ளாக திருமண நாளே வந்துவிடும் என்பதால், அவளே சந்திரனிடம் பேச முடிவெடுத்தாள்.

“என்னம்மா பொல்லாத வேலை, இப்போ நம்மகிட்டே இல்லாத பணமா? இந்த வேலையை விட்டுட்டு, முன்ன மாதிரி சின்ன கம்பெனிக்கு வேலைக்குப் போறது. இப்போ உள்ள பிள்ளைங்களுக்கு எல்லாம் இருந்தாலும், எப்படி சந்தோசமா இருக்கறதுன்னு மட்டும் தெரிய மாட்டேங்குது” ஒரு பெருமூச்சை வெளியிட்டார்.

“இப்போ பார், நைட் முழுக்க அமெரிக்க நேரத்துக்கு வேலை பாத்துட்டு, இன்னும் டீ குடிக்க கூட கீழே வரக் காணோம். இப்படியே போனா உடம்பு என்னத்துக்கு ஆகும்? சரி, அங்கேயே போய் இருந்துக்கோங்கடா ன்னா, எங்களை இங்கே தனியா விட மாட்டாங்களாம்.

“நீயும்தான் அங்கே இருந்த, ஒரே வருஷம்... இங்கே ஓடி வந்துட்ட. என்னம்மா இதெல்லாம்?”.

“அத்த, அந்த கலாச்சாரத்துக்கு மிங்கிள் ஆக ரொம்ப நாளாகும். முதல்ல சாப்பாடு... எனக்கு தோசை, இட்லி, சாதம் மட்டும்தான் நல்லா செய்ய வருது. மத்தது எல்லாம் தரிகிடத்தோம். அந்த ஊர் சாப்பாடு ரெண்டுபேருக்கும் செட் ஆகலை.

“நல்ல வீட்டுக் கோழிங்களா இருக்காங்க. இதுக்காகவே இந்தியாவுக்கு ஓடி வர்றாங்க. அதைவிட, அவங்க வேலையை எல்லாம் எங்கே இருந்தாலும் செய்யலாம். மீட்டிங்க்கு மட்டும் அவங்க அங்கே இருந்தால் போதும்.

“மத்தபடி எல்லா வேலையையும் ஆன்லைன்லயே சொல்லிக்கலாம், அவங்களை செய்ய வைக்கலாம். பணத்துக்காக இல்ல, அவங்க பேஷன் அது, அதை எப்படி அவங்களால் விட முடியும்? என் வேலையை என்னால் விட்டுக்கொடுக்க முடியுமா? அப்படித்தான் அதுவும்”.

அவள் சொல்ல, “என்னவோ போம்மா... அவனுங்க கைக்குள்ளே இருந்த வரைக்கும் எல்லாம் புரிஞ்சது, இப்போ எதுவும் புரியலை. எனக்கு என்ன, அவங்க ரெண்டுபேரும் சந்தோசமா இருக்கணும் அவ்வளவுதான்.

“அதுசரி... நீ உன் வேலையையும், அவங்க வேலையையும் எப்படி சரின்னு சொல்லலாம்? உயிரை காப்பாத்துற உன் வேலை எல்லாம் ரொம்ப பெரிய விஷயம்...” தனக்கு மருத்துவ பணியின் மீது இருக்கும் பிரேமையை வெளியிட, பாக்கியாவும், கீர்த்தியும் சிரித்துக் கொண்டார்கள்.

“சரி அத்த, நான் மேலே போய் பாத்துட்டு வர்றேன்...” சொன்னவள், மாடி ஏறினாள்.

இந்திரன் இருந்திருந்தால் அவனைத்தான் அனுப்பி இருப்பாள். ஆனால் அவன் வேலை விஷயமாக சென்றிருக்கும் இந்த நேரத்தில், வீட்டு பிரச்னையை அவனிடம் கொண்டு செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை. அவனுக்கே அங்கே ஏகப்பட்ட டென்ஷன் இருக்கும் என அவளுக்குத் தெரியாதா என்ன?

அவள் மேலே செல்கையிலேயே, அலுவலக அறைக்கதவு திறந்திருக்கவே, சந்திரன் அங்கேதான் இருக்கிறான் என அவளுக்குப் புரிந்தது. அறைக்கதவை மெல்லியதாக அவள் தட்ட, தன் மோன நிலையில் இருந்து கலைந்தான்.

“அண்ணி... உள்ளே வாங்க...” சொன்னவன் படுக்கையில் எழுந்து அமர்ந்தான். அவனது தாயாக இருந்திருந்தால் குரல் கொடுத்தவாறே திறந்திருப்பார். குழந்தையோ அவள் இஷ்டத்துக்கு திறந்துகொண்டு வருவாள். கதவைத் தட்டிவிட்டு காத்திருக்கும் ஒரே ஆள் கீர்த்தி என்பதாலேயே சரியாக கணித்தான்.

உள்ளே சென்றவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “என்ன அண்ணி அப்படிப் பாக்கறீங்க? என்ன விஷயம்?”.

“அதையேதான் நானும் கேக்கறேன்... என்ன விஷயம்? ஏன் ரெண்டு நாளா இப்படி இருக்க? என்கிட்டே சொல்ற விஷயமா இருந்தால் சொல்லலாம்” அவனிடம் சொன்னவள், அருகே இருந்த இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.

அவன் அமைதியாக தலை கவிழ்ந்திருக்கவே, “என்கிட்டே சொல்ல முடியாதுன்னா பிரச்சனை இல்லை. ஆனா எதையுமே உள்ளுக்குள்ளேயே போட்டு கொன்னுகிட்டு இருந்தால், அது நம்மளை விழுங்கிடும்.

“ஒண்ணு அதில் இருந்து வெளியே வா. இல்லையா யார்கிட்டேயாவது மனசு விட்டு பேசு” பிரச்சனை எதுவாக இருக்கும் என்ற கணிப்பு இருந்ததாலேயே அவ்வாறு பேசினாள்.

“இதை எப்படி உங்ககிட்டே சொல்லன்னு எனக்குத் தெரியல அண்ணி?” பெரும் தடுமாற்றத்துக்கு இடையில் முனகினான்.

“என்ன சந்தியா ஏதாவது சொல்லிட்டாளா? இல்லன்னா திட்டிட்டாளா?”.

“அது மட்டும் இல்ல... என்னவோ என்னை ரொம்ப தப்பானவனா நினைக்கறா அண்ணி. என்னால் அதை தாங்கிக்கவே முடியலை” நடந்தவற்றை அவளிடம் சொல்லமுடியாது என்பதால் அமைதியானான்.

“அந்த சம்பவம் நடந்து முடிஞ்ச இத்தனை வருஷமா, அதை வெளியே சொல்ல முடியாமல் மனசுக்குள்ளேயே போட்டு அழுத்தி வச்சிருந்ததன் வெளிப்பாடுதான் அது. சொல்லப்போனா இதுக்கு நீ சந்தோசப்படணும்” இப்படிச் சொன்ன அவளை புரியாமல் ஏறிட்டான்.

“என்ன புரியலையா? அவளுக்குள்ளே இருந்த மொத்த கோபமும், உன்கிட்டே மட்டும் வெளிப்படுதுன்னா, அவளோட உணர்வுகளை உன்கிட்டே மட்டும்தான் அவளால் வெளிப்படுத்த முடியுதுன்னு அர்த்தம். உரிமை உள்ள இடத்தில் மட்டும்தான் கோபம் வரும்.

“அதுவும் பொண்ணுங்களோட கோபம் எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல்தான். அவங்களால் அவங்க கோபத்தை சட்டுன்னு எங்கேயுமே காட்ட முடியாது. அப்படி அவ உன்மேல் கோபப்படறான்னா, அது ரொம்ப நல்ல விஷயம்.

“தள்ளி இருக்கற வரைக்கும் அவளுக்கு உன்னைப்பத்தி கண்டிப்பா புரியாது. ஏன்னா... நீ அவகிட்டே ஏற்படுத்தி இருக்கற பிம்பமே வேற. இதுவே அவ உன்கிட்டே வந்துட்டா, நாலே நாள்ல உன்னைப்பத்தி கண்டிப்பா புரிஞ்சுப்பா.

“சோ... இப்படி ரூமுக்குள்ளே அடைஞ்சு கிடக்காமல், எழுந்து வெளியே வா. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” அவள் சொல்ல, அவனுக்குள் புது நம்பிக்கை பிறந்தது.

“அண்ணி, அதெல்லாம் நடக்குதோ இல்லையோ, ஆனா நீங்க சொல்றதைக் கேக்க ரொம்ப சந்தோசமா இருக்கு”.

“கண்டிப்பா நடக்கும்... நம்பிக்கை தானே வாழ்க்கை...” அவள் சொல்லிவிட்டு கிளம்ப, அவள் பின்னாலேயே அவனும் வந்தான்.

அவன் கீழே இறங்கி வரவே, “சந்திரா, பொண்ணு வீட்டுக்கு பத்திரிகை கொடுக்கணும், இந்திரன் இருந்திருந்தா அவனை அனுப்பி இருக்கலாம். இப்போ நீதான் போயாகணும்... கொஞ்சம் போயிட்டு வந்துடு” பாமா சொல்ல,

“சரிம்மா... எப்போ போகணும்?”.

“டிபன் முடிச்சுட்டு கிளம்பி போயிட்டு வந்துடு” அவர் சொல்லவே, அடுத்த அரைமணி நேரத்தில் கிளம்பிவிட்டான்.

அடுத்த மூன்றுமணி நேரங்களில் சந்தியாவின் வீட்டில் இருந்தான். அவன் சென்று அழைப்புமணியை அடிக்க அவசியமே இன்றி, ரமணன், கேட்டுக்கே வந்து அவனை அழைத்துச் சென்றார்.

“வாங்க மாப்ள, நீங்க கிளம்பிட்டேன்னு சொன்ன உடனேயே எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. உள்ளே வாங்க...” சற்று டென்ஷனாக காணப்பட்டார்.

“மாமா, கொஞ்சம் நிதானமா இருங்க, எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன்?” கேட்டவன், அவர் சுட்டிக் காட்டிய சோபாவில் அமர்ந்தான்.

“அம்மாடி, மாப்ள வந்திருக்கார் பார்... தண்ணி எடுத்துட்டு வா” அவர் குரல் கொடுக்க, சந்தியா, தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.

“தேங்க்ஸ்...” சொன்னவன் அதை வாங்கிப் பருகினான். சந்தியா உடனே உள்ளே செல்ல முயல, ரமணனின் ஒற்றைப் பார்வை அவளை அங்கே தேக்கியது. அவள் சந்திரனைப் பார்த்துக் கொண்டே இருக்க, அவளை ஒரு நொடி ஏறிட்டவன், பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

“பத்திரிகை ரெடி ஆயிடுச்சு, அம்மா உங்ககிட்டே கொடுத்துட்டு வரச் சொன்னாங்க” சொன்னவன் அவரிடம் அதைக் கொடுத்தான்.

“ரொம்ப சந்தோசம் மாப்ள...” வாய்க்கு வாய் அவனை உறவு சொல்லி அழைத்து பூரித்துப் போனார். அவனுக்கோ, தன்னை பெயர் சொல்லி அழைக்கச் சொல்லி மனம் உந்தினாலும், அவரது ஆசையைக் கெடுக்க மனமின்றி அப்படியே விட்டுவிட்டான்.

“அப்போ நான் கிளம்பறேன்...” அவன் எழுந்துகொள்ள,

“சாப்ட்டு போகலாம் மாப்ள, எல்லாம் ரெடியா இருக்கு” அவனைத் தடுத்தார்.

“இல்ல மாமா, வர்ற வழியில் சாப்ட்டுதான் வந்தேன், கிளம்பறேன்” சந்தியாவோடு இரண்டொரு வார்த்தைகள், சில நிமிடங்கள் கழிக்க ஆசை இருந்தாலும், அதை அவன் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

“இப்போ உடனே கிளம்பறீங்களா?” அவரது பார்வை, மகளையும் அவனையும் பார்த்தது. அவரது எண்ணம் அவனுக்குப் புரிய, ‘எல்லா இடத்திலும், பையன்தான் பொண்ணை வெளியே கூட்டி போக ஆசைப்படுவான், பொண்ணோட அப்பா விடத் தயங்குவார்.

‘இங்கே... அவருக்கு அனுப்ப ஆசையா இருக்கு, ஆனா எனக்கு கொடுத்து வைக்கலை’ மனதுக்குள் புலம்பினான்.

“இல்ல மாமா... பீச் பக்கம் காத்து வாங்கிட்டு, பிறகுதான் கிளம்புவேன். சந்தியாவை கூட்டி போகவா?” அதென்னவோ அவரது ஆசையை, எதிர்பார்ப்பை கண்டும் காணாமல் செல்ல மனம் வரவில்லை.

“தாராளமா கூட்டி போங்க... என்கிட்டே கேக்கணுமா என்ன?” வாயெல்லாம் பல்லாக, முகம் பூரிக்க அவர் சொல்ல, அவனுக்கு உள்ளுக்குள் குற்ற உணர்வாக இருந்தது.

“சந்தியா... போம்மா...” ரமணன் சொல்லவே,

“ஒரு நிமிஷம்...” சொன்னவள் தன் அறைக்குச் சென்று மறைந்தாள்.

“ரெண்டு நாளா நீங்க பேசவே இல்லையேன்னு அவகிட்டே கேட்டேன். அப்போதான் நீங்க தனியா போன் வாங்கிக் கொடுத்திருக்கீங்கன்னு சொன்னா. எனக்கு...” மெல்லியதாக கண் கலங்கியவர், “அவளுக்கு இனிமேலாவது வாழ்க்கையில் சந்தோசம் கிடைக்கணும் மாப்ள” தன் விரலால் கண்ணீரை சுண்டி விட்டார்.

“மாமா என்ன இது? கண்ணெல்லாம் கலங்கிட்டு”.

“இது... சந்தோசம் மாப்ள...” நெகிழ்ந்து போய் உரைத்தார். அவர்களது பேச்சு அவளுக்கும் கேட்க, தன் தந்தை தன்னைப்பற்றி இவ்வளவு கவலை கொண்டிருந்தாரா என்று எண்ணிக் கொண்டாள்.

அவள் தன்னை கொஞ்சமாக திருத்திக் கொண்டு வெளியே வர, “அப்போ நாங்க வர்றோம் மாமா...” அவன் வார்த்தையில் சொல்ல, அவள் தலையசைப்பில் விடை பெற்று வெளியே வந்தார்கள்.

அவன் காரில் ஏறி, அதைக் கிளப்ப, அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள். காரை தெருவுக்கு வெளியே கொண்டு வந்தவன், அவள் முகத்தைப் பார்த்தான்.

“சாரி, உங்க அப்பா முன்னாடி என்னால் மெஷின் மாதிரி நடந்துக்க முடியலை” அவன் தன்னை அழைத்து வந்ததைச் சொல்கிறான் என அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

சொல்லப்போனால் அவளுக்கு ஆச்சரியமே அதுதான்... மிருகமென அவள் மனதுக்குள் முத்திரை குத்தியவனது மறு முகம், அழகும், புரிதலுமாக இருக்க, தடுமாறிக் கொண்டிருந்தாள்.

அவள் பதில் சொல்லாமலே இருக்கவே, ‘இறங்கணும்னு சொல்வாளோ? இல்லன்னா எங்கே போகணும்னாவது சொல்வாளா?’ தனக்குள் கேட்டுக் கொண்டான்.

அவள் ஏதும் சொல்லும் முன்பே, காரை சாலை ஓரம் நிறுத்திவிட்டான். அவன் காரை நிறுத்தவே, அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் வாயைத் திறக்காமல் அப்படியே இருக்க, புருவம் நெரித்தாள்.

“ஏன் காரை நிறுத்திட்டீங்க?” அவனிடம் கேட்க, அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அவள் அப்படிக் கேட்கவே, அவளுக்கு இறங்கும் ஐடியா இல்லை என்பது புரிய, “எங்கே போக?” அவளைப் பார்க்காமல், சாலையில் பார்வையைப் பதித்தவாறே அவளிடம் கேட்டான்.

“ஹோட்டலுக்குப் போங்க” அவள் சொல்ல, பட்டென அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“நீங்க சாப்பிடலன்னு எனக்குத் தெரியும், பேசாமல் போங்க” அவள் அப்படிச் சொன்ன பிறகு மறுப்பானா என்ன? உள்ளுக்குள் பொங்கிய ஆச்சரியத்தோடு, காரைக் கிளப்பினான்.

‘என்னதான் கோபமா இருந்தாலும், இந்த பெண்களுக்குள் இருக்கும் தாய்மைக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது’ அவளது அந்த ஒரு செய்கை, அவனுக்குள் சிறு நம்பிக்கையை விதைத்தது.

அடுத்த அரைமணி நேரத்தில் உண்டு முடித்து, இருவரும் பீச்சின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, கார்க் கதவுகளை அகலத் திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். யார் முதலில் பேச்சைத் துவங்குவது என்ற போராட்டம் இருவருக்குள்ளும் இருந்தது.

தன் கையில் இருந்த அலைபேசியை அவன் முன்னால் நீட்டியவள், “எனக்கு இவ்வளவு காஸ்ட்லியான போனை எல்லாம் யூஸ் பண்ணி பழக்கம் இல்லை” அவனிடம் சொன்னாள்.

“அது அவ்வளவு பெரிய வித்தையெல்லாம் இல்லை. பழகப் பழக தெரிஞ்சுடும்”.

“இல்ல... எனக்கு... எங்கே இதை கீழே போட்டுடுவோமோன்னு பயமா இருக்கு. கூடவே, எதையாவது ப்ரெஸ் பண்ணி, ரிப்பேர் ஆயிடுச்சுன்னா, அது இன்னும் பயமா இருக்கு” நேற்று வரைக்கும் தன் பயத்தை தனக்குள்ளேயே பாதுகாத்தவள், இன்று அவனிடம் வெளிப்படுத்தினாள்.

அவன் கொடுக்கும்பொழுதே அது அலைபேசி என அவளுக்குத் தெரிந்தது. ஆனால், அவன் கொடுத்த அந்த பரிசுப்பொதிக்குள் இவ்வளவு விலை உயர்ந்த அலைபேசி இருக்கும் என அவள் கற்பனை கூட பண்ணிப் பார்த்திருக்கவில்லை.

அவனுக்கோ உள்ளுக்குள் பெரும் சந்தோசமாக இருந்தது. தான் கொடுத்ததை அவள் பிரித்தே பார்த்திருக்க மாட்டாள் என அவன் எண்ணியிருக்க, அவள் அதைப் பார்த்திருக்கிறாள், உபயோகப்படுத்த முயன்றிருக்கிறாள் என்பதே ஆச்சரியமாக இருந்தது.

“அதுக்கு... ஓ... அப்போ இதைச் சொல்லணும், திரும்பக் கொடுக்கணும்னு தான் என்னோட வந்தியா?” ஒருவித ஏமாற்றம் மனதைக் கவ்வியது.

“அவ்வளவு பயமா இருந்தா பெட்டிக்குள் போட்டு பூட்டி வச்சுக்கோ. ஆனா ஒண்ணு, நீ அதைப் போட்டு உடைச்சாலும், ரிப்பேர் பண்ணாலும் நான் உன்னை எதுவும் சொல்லப் போறதில்லை. வேற புதுசு வாங்கித் தந்துட்டுப் போய்டுவேன், புரியுதா?

“சரி, எனக்கு கொஞ்ச நேரம் தூங்கணும்... ரெண்டு நாளா சுத்தமா தூக்கமே இல்லை. வர்ற வழியில் ரெண்டு தடவை கண் அசந்துட்டேன், மறுபடியும் என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது. நான் தூங்கி எழுந்து போய்க்கறேன்” சொன்னவன், சீட்டை நன்றாக சாய்த்து போட்டுவிட்டு படுத்துவிட்டான்.

‘என்னது... இதை உடைச்சாலும் புதுசு வாங்கித் தர்றதா?’ அவள் வீட்டில், கிச்சனில் காபி மேக்கரின் கைப்பிடி கீழே விழுந்து உடைந்ததற்கே அவளது சித்தியிடம் அவ்வளவு பேச்சு வாங்கி இருக்கிறாள்.

வாட்ச், குடை கம்பி, ஆசையாக அவளது தங்கையின் சைக்கிளை எடுத்து உருட்டி, அதன் கண்ணாடி உடைந்ததற்கு வளர்ந்த பிள்ளை என்றும் பாராமல், கனகம் அவளைக் கைநீட்டி அடித்துவிட்டாள். இப்படி எத்தனையோ சின்ன விஷயங்களைச் சொல்லலாம்.

அதற்கே அப்படி என்றால், லட்ச ரூபாய்க்கு குறையாத இதற்கு ஏதாவது ஒன்று என்றால், தான் என்ன ஆவோமோ என்ற பயத்தில்தான் அவனிடம் அதைச் சொல்லி, திரும்பக் கொடுத்துவிடலாம் என்ற முடிவில்தான் இங்கே வந்தாள்.

ஆனால் அவன் வெகு சாதாரணமாக அதைக் கடந்துவிட, அதை தனக்குள் உள்வாங்கி கிரகிக்கவே சிலபல நிமிடங்கள் தேவைப் பட்டது.

எங்கே அவன் விளையாட்டுக்கு சொல்கிறானோ என எண்ணியவள் அவனைத் திரும்பிப் பார்க்க, அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இரண்டு நிமிடங்கள் கூட கடந்திருக்காது, அதற்குள்ளாகவே அவனது மூச்சுக்காற்று சீராக வெளியேறி, அவன் ஆழ்ந்த தூக்கத்துக்குச் சென்றுவிட்டதை அவளுக்கு உணர்த்தியது.

‘என்னது... அதுக்குள்ள தூங்கிட்டாங்களா?’ எண்ணியவள் அவனையே பார்த்திருந்தாள். கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக் கொண்டு, தலையை காரில் சாய்த்தவாறு அவன் உறங்கிக் கொண்டிருக்க, பீச் காற்றுக்கு அவனது முன் சிகை கலைந்து, அவன் நெற்றியில் விளையாடிக் கொண்டிருந்தது.

‘நான் தூங்கப் போகிறேன், நீ என்ன வேண்டுமோ செய்’ என அவன் சொல்லாமல் சொன்னது அவளுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், அவனை அப்படியே விட்டுச் செல்ல மனமின்றி அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவன் கடந்த இரண்டு நாட்களாக ஏன் தூங்கவில்லை என்ற காரணம் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. ‘நீங்களாவது ரெண்டு நாளாத்தான் தூங்கலை. நான் நிம்மதியா தூங்கி பல வருஷமாச்சு. நான் பேசியதுக்கே இப்படின்னா, நீங்க நடந்துகிட்ட முறைக்கு உங்ககிட்டே என்ன பதில் இருக்கு?’ அவனிடம் மானசீகமாக கேள்வி கேட்டாள்.

எவ்வளவு நேரமோ தெரியாது... வெளியே கேட்ட சிறு சத்தத்தில் உறக்கம் கலைந்து கண் விழித்தான்.

“சந்தியா, கையில் ஆப்பிள் லேட்டஸ்ட் போன்... என்ன உன் ஆள் கொடுத்ததா? நல்லா இருக்கே... உனக்குதான் இதை யூஸ் பண்ணத் தெரியாதே, பேசாமல் எனக்கு கொடுத்துடு. என் விவோ போனை நீ வச்சுக்கோ” ரகுவின் குரல் அவனைத் தீண்ட, மனம் தகித்தது.

‘கொடுத்துடுவாளோ?’ மனம் ஒரு பக்கம் அதை நினைத்து அடித்துக் கொண்டது.

“ரகு, போனைக் கொடுத்துடு... உனக்கு வேண்ணா, அவர்கிட்டே கேட்டு வேற வாங்கித் தர்றேன். அதை என்கிட்டே கொடுத்துடு...” அவள் குரலில் சிறு கோபமும், எங்கே அதைக் கீழே போட்டுவிடுவானோ என்ற படபடப்பும் தெரிந்தது.

‘ஹப்பா, எப்படியோ இதைக் கொடுக்க மாட்டா’ சந்திரனின் மனம் நிம்மதி அடைந்தது.

“சரி, சரி கெஞ்சாதே பிழைச்சுப் போ... என்ன மாப்ள தூங்கிட்டு இருக்கார், நீ காவலுக்கு இருக்க போல?” நக்கல் சிரிப்பில் வினவ, அவனை முறைத்தாள்.

“ம்ச், கத்தாதடா... இப்போ உனக்கு என்ன வேணும்? எதுக்கு இங்கே வந்த? சத்தம்போட்டு பேசாதன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன், கேக்காமல் கத்துற?” அவனைக் கடிந்து கொண்டாள்.

“ஐத்தான் மேலே கரிசனையோ?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது... ஆனா நல்ல தூக்கத்தில் அலறிகிட்டு எழற கஷ்டம் என்னன்னு எனக்குத் தெரியும்” அவள் சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் எப்படி இருக்குமாம்? அதிலும் சந்திரனின் நிலை சொல்லவும் வேண்டாம்...

‘நான் அவளை இத்தனை வருஷமா பாக்க வராமல் போனது தப்பு. அப்போவே வந்து, என் நிலையை விளக்கி இருக்கணும், தப்பு பண்ணிட்டேன்’ உள்ளுக்குள் நொந்து போனான். அதைவிட, தூக்கத்தில் அலறி எழுவதாக அவள் சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை.

‘என்னடா பண்ணி வச்சிருக்க?’ தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.

‘இதையெல்லாம் பாக்கும்போது, அவ உன்னைப் பேசுவது எல்லாம் ஒண்ணுமே இல்லை. அவ என்ன பேசினாலும் நீ கேட்டுக்கத்தான் வேணும்’ தன் வேதனையை உள்ளுக்குள் விழுங்கியவன், மெதுவாக எழுந்து அமர்ந்தான்.

அவன் எழுவதைப் பார்த்த ரகு, “உன் ஆள் எழுந்துட்டார், நீ என்னன்னு பார். நான் கிளம்பறேன்”.

“டேய், அவர்கிட்டே வந்து ஒரு ‘ஹாய்’சொல்லிட்டுப் போடா” அவனைத் தடுக்க, “முதல்ல அவரை என்கிட்டே பேசச் சொல்லு...” முறைப்பாக சொன்னவன் விலகிச் சென்றுவிட்டான்.

“டேய் இருடா, நானும் வர்றேன்” அவள் கத்தியதை அவன் கண்டுகொள்ளவே இல்லை.

அவன் செல்லவே, சந்திரனின் அருகே வர, “நீ போயிருப்பன்னு நினைச்சேன்” அவன் சொல்ல, அவள் அதைக் கண்டுகொண்டதாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை.

நேரம் மாலை ஆகி இருக்கவே, அவளை அழைத்துக் கொண்டு, வழியில் ஆளுக்கொரு டீயைப் பருகிவிட்டு, அவளை வீட்டின் முன்னால் காரை நிறுத்தினான். அவள் இறங்கும் முன்னர், “சாரி...” அவன் சொல்ல, “இந்த ‘சாரி’யால் இப்போ யாருக்குமே யூஸ் கிடையாது” சொன்னவள் இறங்கி நடந்துவிட்டாள்.

துணை வருவான்..........
 

Lakshmi murugan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
494
சந்தியாவின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப் படுகிறது.
 

gomathy

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 16, 2022
Messages
29
Nice update ma Chandran thanudaya nilamaiya vilaki irukkalam:unsure:
 

saru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 24, 2022
Messages
78
Lovely update
Evlo thitnalum ini kepan ha ha
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
483
சந்தியாவின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப் படுகிறது.

ஆமா.... ஆனால் தெளிஞ்சுடுவா........

நன்றி.
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
483
Nice update ma Chandran thanudaya nilamaiya vilaki irukkalam:unsure:

அவளுக்கு கேக்கற பொறுமை வேணுமே......

நன்றி.
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
483
Lovely update
Evlo thitnalum ini kepan ha ha


அதெல்லாம் சம்மாளிப்பான்.....

நன்றி.
 
Top