பகுதி – 13.
தன் அறையில், சந்தியாவின் வருகைக்காக பெரும் போராட்ட மனநிலையோடு காத்திருந்தான் சந்திரன். இன்று காலையில், அவளது கழுத்தில் தாலி கட்டி, தன்னவளாக ஆக்கிக் கொண்டதை இன்னுமே அவனால் நம்ப முடியவில்லை.
அவளது முகத்தில் இருந்த இறுக்கமும், பயமும் உள்ளுக்குள் உயிரையே உருக்கினாலும், சற்று நம்பிக்கையோடும், தைரியத்தோடும் தாலி கட்டி இருந்தான். அதற்கு காரணம் இந்திரன்.
அமெரிக்காவின் இருந்து நேற்று காலையிலேயே வந்திருக்க வேண்டிய இந்திரன், இன்று காலை, நேராக மண்டபத்துக்குதான் வந்தான். வந்தவன் குளித்து, உடை மாற்றும் முன்பே, நேராக வந்து நின்றது தம்பியிடம்தான்.
தன் ஒரே தம்பி, வீட்டின் கடைசி திருமணம், அதற்கு இப்படி விருந்தினர் போன்று காலையில் வந்திருப்பது அவனுக்கு பெரும் வருத்தமாக இருந்தது.
“சகோ, ரொம்ப சாரிடா... நேத்தைக்கே வர எவ்வளவோ ட்ரை பண்ணேன். ஆனா என்னால் முடியவே இல்லை... ரியலி சாரி...” சந்திரனை இறுக அணைத்துக் கொண்டான்.
“ப்ரோ, நீ என்ன வேணும்னா வராமல் இருந்த? ஃப்ரீயா விடு... உன் சிச்சுவேஷன் எனக்குத் தெரியாதா என்ன? என் வேலையையும் சேத்து பாத்திருக்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். சோ...” இந்த புரிதல்தான் அவர்களுக்குள் எந்த ஈகோவையும் கிளப்பாமல் இருந்தது.
“தேக்ஸ் டா... எங்கே கோபமா இருப்பியோன்னு ரொம்ப பயந்தேன். இனிமேல் பத்துநாள் இங்கேதான்...”.
“ஓகே ப்ரோ, முதல்ல போய் குளிச்சுட்டு வா... கப்பு தாங்கல” அவன் சொல்ல, அவன் தோளில் குத்தினான்.
“வந்த உடனே உன்னைப் பாக்க வந்தேன் பார், என்னைச் சொல்லணும். சரி, இங்கே எல்லாம் ஓகேயா? நீ எப்படி இருக்க?” அவனிடம் கேட்க, சட்டென சந்திரனிடம் ஒரு அமைதி குடி கொண்டது.
“அவ கண்ணுக்கு நான் ஒரு முழு குடிகாரன், கெட்டவன். என்னால் இதை தாங்கிக்க முடியலை ப்ரோ” சொன்னவன் கண் கலங்க பதறிப் போனான்.
“சந்திரா... அழறியா? எனக்குப் புரியுதுடா... நம்ம மனசுக்குப் புடிச்ச பொண்ணுங்க கண்ணுக்கு நாம வில்லனா தெரியற விஷயம் எல்லாம் ரொம்ப கொடுமையானது.
“ஆனா, ஒரே ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ... இதை நான் முன்னாடியே செய்திருக்கணும், நடந்ததை யாராலும் மாத்த முடியாது. அதெல்லாம் நடக்கணும்னு இருந்தது விதி. அதுக்காக அதையே நினைச்சுட்டு இருந்தால் எதுவும் மாறப்போறது இல்லை.
“நடுவில் சில வருஷம் எங்களுக்காக நீ நீயா இருக்க முயற்சி பண்ணியா இல்லையா? அதே மாதிரி, அவகிட்டேயும் நீ நீயா இரு. அவ திட்டினாலும், அடிச்சாலும் அதை சிரிச்சுகிட்டே வாங்கிக்கோ. கொஞ்ச நாளில் உன்னை அவ புரிஞ்சுப்பா.
“நீ முழுக்க முழுக்க கெட்டவன் கிடையாது, அதை முதல்ல நீ மனசுக்குள் பதிய வை. நடந்ததில் உன்னோட தப்பு ஒரு சதவீதம் கூட கிடையாது. எல்லாம் உன்னோட இருந்த அவனுங்க செய்தது. நானே உன்மேல் ரொம்ப கோபமா இருந்தேன்தான்.
“எல்லாம் எங்கே நீ தானா குடிச்சுட்டியோ, அதுவும் உன் உடல்நிலை தெரிஞ்சும் அப்படி நடந்துகிட்டியோன்னு ரொம்ப அப்சட் ஆயிட்டேன். உண்மை எல்லாம் தெரிய வந்த பிறகு என்னால் உன்மேல் கோபப்பட முடியலை.
“ஒரு வருஷம் டைம் எடுத்துக்க. அது வரைக்கும், அவளை மனைவியா பாக்காமல், ஒரு பொண்ணா, ப்ரண்ட்டா பாரு. முதல்லேயே அவகிட்டே உண்மையை எல்லாம் சொல்லிடு. என்னை மாதிரி லேட் பண்ணி, உள்ளுக்குள்ளேயே வச்சு சாகாதே.
“நீ சொல்றதை எல்லாம் நம்பறதுக்கு, உன்னை அவ ஏத்துக்கறதுக்கு அவளுக்கு டைம் கொடு. என் தம்பியால் அது நிச்சயம் முடியும். அவகிட்டே பேசு, நிறைய பேசு. சீக்கிரமே அவ உன்னை புரிஞ்சுப்பா.
“உன் வாழ்க்கையும் ரொம்ப சந்தோசமா மாறும், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. என்னவோ தேவதாஸ் மாதிரி மூஞ்சியை வச்சுக்காதடா, என்னாலேயே பாக்க முடியலை. நடந்த தவறை சரி செய்யப் போற, நம்பிக்கையா செய். நீ என்ன சொல்ற?” இந்திரன் கேட்க, அவனிடம் புது நம்பிக்கை வந்திருந்தது.
“நீ சொல்ற மாதிரியே கேக்கறேன் ப்ரோ... நான் நானா இருக்கறேன், அவளைத் தட்டித் தூக்கறேன்” உற்சாகமாக குரல் கொடுத்தான்.
“இது... இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். ஆல் தி பெஸ்ட் சகோ... என் தம்பி எனக்கு முழுசா திரும்ப வேணும்” அவன் தோளில் தட்டிவிட்டு சென்றுவிட்டான்.
அதன் பிறகு பெரும் நம்பிக்கையோடுதான் இருந்தான். ஆனால் மணமேடையில் சந்தியாவின் கலங்கிய முகத்தைப் பார்த்த நொடி, அனைத்தும் ஆட்டம் கண்டது. அது இந்த நொடிவரைத் தொடர, சற்று பதட்டத்தோடு காத்திருந்தான்.
கீழே, கீர்த்தி சந்தியாவுக்கு அலங்காரம் செய்து கொண்டிருக்க, அவளது முகமோ ரத்தப்பசையின்றி வெளிறிப்போய் இருந்தது. அதைப் பார்க்கவே கீர்த்திக்கு பரிதாபமாக இருக்க, அவளுக்கு அருகே ஒரு மூங்கில் கூடையை இழுத்துப் போட்டு அருகில் அமர்ந்தாள்.
அவள் தன்னை தைரியமாக காட்டிக் கொள்ள போராடுவது கீர்த்திக்கு நன்றாகவே தெரிந்தது.
“சந்தியா, ரிலாக்ஸ்... நீ பயப்படற மாதிரி எதுவும் நடக்காது” அவளுக்கு தைரியம் சொல்ல முயன்றாள்.
“ம்...” தலையை அசைத்தாலும், மூடிய அறைக்குள் சந்திரனை சந்திக்கும் தைரியம் அவளுக்கு சுத்தமாக இருக்கவில்லை.
“இங்கே பார்... மூணு வருஷத்துக்கும் மேல எனக்கு சந்திரனைத் தெரியும்”
“ஆனா என்கிட்டே தப்பா நடந்துக்கப் பார்த்த அவரை உங்களுக்கு கண்டிப்பா தெரியாதுக்கா” அவள் பட்டென சொல்ல, கீர்த்தி வாயடைத்துப் போனாள்.
‘சந்திரா... இவளை எப்படி சரிபண்ணப் போற?’ கீர்த்திக்கு கவலையாகப் போயிற்று.
“கண்டிப்பா தெரியாதுதான்... சில நேரம், சில விஷயங்களை ஏன் எதுக்குன்னே கேக்காமல் நாம அக்ஸப்ட் பண்ணித்தான் ஆகணும். மனுஷ பலவீனம் அது... இப்போ அவனோட பலவீனம் என்னன்னு உனக்குத் தெரியும் தானே, அதை நீ சாதகமா எடுத்துக்கோ.
“போ... போய் சண்டை போடு... உன் மனசுக்குள் உள்ளதை எல்லாம் கொட்டு. இப்போ உனக்கு முழு உரிமை இருக்கு. உனக்கு அவரால் ஏதாவது ஒண்ணுன்னா, முதல்ல கேக்கற ஆள் நம்ம அத்தையாதான் இருப்பாங்க.
“சோ... உன்னை கட்டாயப்படுத்தி ஏதாவது பண்ணிடுவாரோன்னு பயப்படாதே. நீ ஒரு சின்ன குரல் கொடுத்தாலும், நாங்க எல்லாம் அங்கே இருப்போம். அவனை நம்பலைன்னாலும், எங்களை நம்பறியா?” அவளது கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.
“நிஜமாவா? நீங்க பொய் சொல்லலையே...” கண்களில் பெரும் கலக்கத்தோடு இப்படிக் கேட்ட அவளைப் பார்த்து, கீர்த்திக்கு உள்ளுக்குள் மனம் கலங்கிப் போனது.
“என்னைப் பாத்தா பொய் சொல்ற மாதிரி உனக்குத் தோணுதா?” அவள் திருப்பிக் கேட்க, மறுப்பாக தலை அசைத்தாள்.
எப்படியோ ஒரு வழியாக அவளைச் சமாதானம் செய்து மாடிப் படிக்கருகே அவளை அழைத்துச் செல்ல, கையில் பால் டம்ப்ளரோடு பாமா அங்கே வந்தார்.
“அம்மாடி சந்தியா, சின்னவனும் பால் குடிக்கவே மாட்டான், சும்மா ஒரு மடக்கு சாங்கியத்துக்கு குடிக்கச் சொல்லும்மா. மிச்சத்தை எல்லாம் நீயே குடிச்சுடு. ஏன் முகமே சரியில்ல?” அவள் முகத்தைப் பார்த்துவிட்டு, பட்டென கேட்டுவிட்டார்.
“அது...” அவள் தடுமாற,
“அத்த, சந்தியாவுக்கு அவரைப் பாத்து பயமாம்...” கேலிபோல் சொல்வதாக இருந்தாலும், உண்மையைச் சொன்னாள்.
“அவன்கிட்டேயா? என்னம்மா நீ? ஒரு நிமிஷம் இரு... சந்திரா” பாமா குரல் கொடுக்க, அடுத்த நிமிடம் மேலே இருந்து எட்டிப் பார்த்தான்.
“ராஜமாதா... என்ன சவுண்டு ஜாஸ்தியா இருக்கு?” கேட்டவன், கீழே நின்ற பெண்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேகமாக இறங்கி வந்தான்.
“டேய், பிள்ளையை மேலே கூட்டி போடா...” சாதாரணமாகச் சொன்னாலும், அவர் பார்வையில் இருந்த கவனத்தில் தன்னவளை ஒரு பார்வை பார்த்தான்.
அவள் சற்று நடுங்கிப்போய் நிற்பது அப்பட்டமாகத் தெரிந்தது. அதைக் கண்டுகொள்ளாமல், “என்னது... நான் மேலே போன பத்தே நிமிஷத்தில் பிள்ளையா? உங்களுக்கா? ஹையோ...” அவன் நெஞ்சில் கை வைத்து அதிர, கீர்த்தி பக்கென சிரித்துவிட்டாள்.
“டேய், உனக்கு எதில் விளையாடுறதுன்னு கிடையாது?” கேட்டவர் அவன் காதைப் பிடித்து முறுக்க, “ஆ...” வென அலறினான்.
“தாய்க்கிழவி வலிக்குது... இந்த புள்ளையை, என் சொந்த புள்ளையா நினைச்சே பாத்துக்கறேன் போதுமா? விடுங்க... ஸ்...” காதை கரத்தால் தேய்த்தவாறே முகத்தை சுழித்துக் கொண்டான்.
“கூட்டி போடா... அம்மாடி, நீ போ... நான் இவனை அனுப்பறேன்” அவர் சொல்ல, அங்கே நடந்த விஷயங்களில் அவளது மனம் சற்று இலகுவாகி இருக்க, வேகமாக மாடி ஏறிவிட்டாள்.
அவள் செல்லவே, கீர்த்தியும் தங்கள் அறைக்குச் சென்றுவிட, சந்திரனை தனியே அழைத்த பாமா, “சந்திரா, தாயில்லாத பிள்ளைடா... அவங்க வீட்டில் என்ன என்ன கஷ்டப்பட்டிச்சோ? எது எதுக்கு கஷ்டப்பட்டிச்சோ? ரொம்ப பயந்த சுபாவமா இருக்கா... பாத்து நடந்துக்கப்பா...” நாசூக்காக உரைக்க, தாயைப் பார்த்து புன்னகைத்தான்.
“அம்மா, இதை நீங்க சொல்லாமலே செய்வேன். இப்போ சொல்லிட்டீங்க, கண்டிப்பா பாத்துக்கறேம்மா” சொன்னவன், அவரிடம் விடை பெற்று தன் அறைக்குச் சென்றான்.
அவன் அறைக்குச் செல்ல, அவளோ, கையில் பால் டம்ளரோடு வாசலுக்கு அருகிலேயே நின்றிருந்தாள். அவளது முதுகைப் பார்த்தவாறே, உள்ளே நுழைத்து கதவைப் பூட்ட, அவளது உடம்பு பயத்தில் தூக்கிப் போட்டது. அதென்னவோ பால் டம்ளரை அங்கே இருந்த டீபாவின்மேல் வைத்து விட்டிருக்க, அது தப்பியது.
அவளைப் பார்த்தவாறே, கட்டிலுக்கு அந்தப்பக்கம் சென்றவன், சுற்றி வந்து அமர, அவனையே வெறித்தாள்.
“ஏன் நின்னுட்டே இருக்க, உக்கார்...” அவளிடம் பேச தன்னை தயார் படுத்திக் கொண்டான்.
“மாட்டேன்... நீங்க என்ன நினைச்சுருக்கீங்களோ அது கண்டிப்பா நடக்காது” படபடவென பொரிந்தாள். அவள் சொன்ன விதமே, அவனிடம் இதைச் சொல்ல அதிக நேரம் மனப்பாடம் செய்திருப்பாள் என்று தோன்றியது.
உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை மறைத்தவாறே, “நான் என்ன நினைச்சிருக்கேன்னு உனக்கு எப்படித் தெரியும்?” தலையைச் சாய்த்து, ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான்.
“ஹாங்... அது... எனக்கு உங்களைப்பத்தி தெரியும். நீங்க கெட்டவர், என்கிட்டே தப்பா...” சொல்லிக்கொண்டே வந்தவள், அவன் முகத்தில் விரிந்த புன்னகையில், தான் எதையாவது தவறாக மாற்றிப் பேசுகிறோமோ என உள்ளுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.
தான் சரியாக சொல்வதாகவே அவள் மனசுக்குத் தோன்ற, அவனை முறைத்தாள். அவனோ அதைக் கண்டுகொள்ளாமல், “ஹப்பாடா... ரொம்ப நல்லதா போச்சு” அவன் கையைக் கோர்த்து, மேலே உயர்த்தி சோம்பல் முறிக்க, அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை.
“எ..எ..என்ன?” திணறியவாறு கேட்க,
“இல்ல, என்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சிருந்தா ரொம்ப கஷ்டமா போயிருக்கும். இப்போ பார், என்னை கெட்டவன்னே முடிவு பண்ணிட்ட, அப்போ நான் பண்ணப்போறது உனக்கு ஷாக்கா இருக்காது தானே, அதான்...” சொன்னவன், படுக்கையில் இருந்து எழ,
படபடவென பல அடிகள் பின்னால் நகர்ந்து, சுவரில் முட்டி, தடுமாறி கீழே விழுந்துவிட்டாள். அவள் இப்படி பயப்படுவாள் என்பதை எதிர்பாராத அவன், ஓடிவது அவளைத் தூக்க முயல, “நோ... நோ... எனக்குத் தெரியும்... நீங்க இப்படித்தான் செய்வீங்கன்னு எனக்குத் தெரியும்.
“இப்போ மட்டும் என்னை ஏதாவது பண்ணீங்க, என்னால் உங்களை எதுவும் செய்ய முடியாமல் போகலாம். ஆனா நாளைக்கே நான் தூக்குல தொங்கிடுவேன். என் பிணத்தோடதான் பிறகு நீங்க குடும்பம் நடத்தணும்” சொன்னவள், கால்களைக் குறுக்கி, முகத்தை கால்களுக்கு இடையில் புதைத்து, விம்மி வெடித்து அழுதாள்.
சில பல நிமிடங்கள் அழுது ஓய்ந்தவள், அவனிடமிருந்து எந்த விதமான செய்கையோ, குரலோ இல்லாமல் போகவே, தயக்கமாக நிமிர்ந்து பார்த்தாள்.
சந்திரன் அவளுக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்து, அவள் முகத்தையே பார்த்திருந்தான். அவன் கண்களை நேருக்கு நேராக பார்க்க, அவளால் முடியாமல் தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.
“அப்போ நான் ஒரு ரோக்... உன்னை கற்பழிக்கப் போறேன், அப்படித்தானே?” அவளிடம் நிறுத்தி நிதானமாக கேட்க, அவளோ கவிழ்ந்த நிலையில் இருந்து மாறவே இல்லை.
“ஒரு நிமிஷம் என்னை நிமிர்ந்து, நேருக்கு நேரா என் கண்ணைப் பாத்து சொல்லு சந்தியா?” அவனது குரலில் இருந்த அழுத்தத்தில், அதை மீற முடியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அந்த கண்களுக்குள் நிச்சயம் கயமையோ, அவள் எதிர்பார்த்த கொடூரமோ இல்லாமல் போக, சற்று நிதானித்தாள்.
“என்னைப் பார்த்து இவ்வளவு பயப்படுறவ, அவனையே கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியது தானே” அவன் சொல்ல, ‘இவன் எவனைச் சொல்கிறான்?’ என்பது புரியாமல் பார்த்தாள்.
“அதான்... ரகு...” அவன் சொல்ல, அவனை ஆனமட்டும் முறைத்தாள்.
“உங்களுக்கு எல்லாம் நல்லதாவே யோசிக்கத் தெரியாதா? அவன் என் ப்ரண்ட், ப்ரண்ட் மட்டும்தான். நீங்கன்னு இல்ல, ரெண்டு வருஷமா எங்க ரெண்டு வீட்டு ஆட்களும் கேக்கத்தான் செஞ்சாங்க. ஆனா, நட்பை தாண்டி எங்களால் எதையும் யோசிக்க முடியலை.
“இதையெல்லாம் போய் உங்ககிட்டே சொல்லிக்கிட்டு இருக்கேன் பாருங்க, ஒரு நட்பை புரிஞ்சுக்க முடியாத உங்ககிட்டே எல்லாம் அதைப்பத்தி சொல்றது வேஸ்ட். இன்னொரு முறை இப்படி பேசினீங்க, நான் என்ன செய்வேன்னே தெரியாது.
“இதெல்லாம் உங்களைச் சொல்லி குத்தமில்லை... எங்க கூடவே இருக்க அவங்களுக்கே புரியாத போது, இன்னைக்கு வந்த உங்ககிட்டே அதை நான் எதிர்பார்ப்பது ரொம்ப பெரிய தப்பு” கோபமும், ஆற்றாமையும், ஆத்திரமுமாக அவள் சொல்லி முடிக்க, சந்திரனின் முகமோ கனிந்து கிடந்தது.
“ஓகே, இன்னைக்குப் பிறகு அவனைப்பத்தி நான் பேசவே மாட்டேன்” அவன் உறுதியாக உரைக்க, நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள்.
“நடந்துமுடிஞ்சது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், நான் சொல்லப் போறதை ஒரு ரெண்டே நிமிஷம் எனக்காக கேக்கறியா? பிளீஸ்...” அவனது கெஞ்சல் குரலில் கொஞ்சம் மனம் இரங்கினாள்.
“தேங்க்ஸ்... முதல்ல எழுந்து ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு, இந்த பட்டுப் புடவையை மாத்திட்டு நைட்டி போட்டுக்கோ” அவன் சொல்ல, அவள் கண்களில் சிறு கவனம் ஏறியது.
அதைப் பார்த்தவன், “ஓ, ஒரு வேளை நீ ட்ரெஸ் மாத்தப்போற கேப்ல நான் உன்மேலே பாஞ்சுடுவேன்னு பயப்படுறியா? வேண்ணா, என் கண்ணையும், கையையும் கட்டிப் போட்டுட்டு போ.
“நான் கொஞ்சம் கூட அசையாமல் அப்படியே இருக்கேன்” அவள் குழந்தைக்குச் சொல்வதுபோல் சொல்ல, மறுப்பாக தலை அசைத்தவள், அங்கிருந்து எழுந்து கொண்டாள்.
“கண்ணை மூடிக்கோங்க...” அவள் சொல்ல, அதை மறுக்காமல் செய்தான்.
அவளுக்குத் தேவையான நைட்டி கட்டில் மீதே இருக்க, அதை எடுத்துக் கொண்டவள், பாத்ரூமுக்குச் சென்றாள். அங்கே தரை முழுவதும் ஈரமாக இருக்க, நிச்சயம் புடவை தரையில் பட்டு ஈரமாகிவிடும் என்பதால், கதவைத் திறந்து வெளியே பார்த்தாள்.
அவன் இன்னுமே அப்படியே அசையாமல் அமர்ந்திருக்க, தயக்கமாக வெளியே வந்தவள், அவனது முதுகில் ஒரு பார்வையைப் பதித்து, நொடியில் புடவையை உருவி படுக்கையில் போட்டவள், பட்டென பாத்ரூமுக்குள் சென்று புகுந்து கொண்டாள்.
இங்கே வருவதற்கு முன்னர்தான் குளித்திருந்தாள் என்பதால், பிளவுசை கழற்றிவிட்டு, நைட்டியை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள். அவன் இன்னுமே இருந்த இடத்தை விட்டு அசையாமலே அமர்ந்திருக்க சற்று நிம்மதியானாள்.
“ம்கும்...” மெதுவாக குரல் கொடுக்கவே, கண்களைத் திறந்தவன், தரையில் இருந்து எழுந்து கொண்டான்.
“நீ உக்கார்...” சொன்னவன், கப்போர்டைத் திறந்து, இரண்டு வர்ண ஃபயில்களோடு திரும்பி வந்தான்.
“உனக்கு இங்கிலீஷ் படிக்கத் தெரியும் தானே? இந்த ரெண்டு ஃபயிலையும் படிச்சுப் பார். ரெண்டு நிமிஷம் கழிச்சு நான் பேசறேன். பதட்டப்படாமல், நிதானமா படி, ஒண்ணும் அவசரம் இல்லை” அவன் சொல்ல, நெரித்த புருவத்தோடு அதை வாங்கிக் கொண்டாள்.
அதை பிரித்த உடனேயே, ஏதோ மருத்துவ டெஸ்ட் ரிசல்ட் என்பது அவளுக்குப் புரிந்தது. கூடவே, மேலே அவனது பெயரும் இருக்கவே, அது அவனது மருத்துவ அறிக்கை என்பது புரிய, இதயம் தாறுமாறாக துடித்தது.
‘இவங்களுக்கு ஏதும் பெரிய வியாதியா?’ நினைப்பே ஒருவித பதட்டத்தை அளிக்க, வேகமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது எண்ணம் புரிந்தவன் போன்று, “எனக்கு சாகப்போற அளவுக்கான நோய் எல்லாம் எதுவும் இல்லை, பொறுமையா படி” அவன் சொல்ல, மீண்டுமாக பார்வையை அதில் செலுத்தினாள். அவளது முதல் பயத்தையும், தவிப்பையும் சிறு சந்தோசத்தோடு உள்வாங்கினான்.
அவளுக்குப் பிடிக்காத கணவனாக இருந்தாலும், தனக்கு ஏதுமோ என்ற அவளது பதட்டம் அவனுக்குப் பிடித்திருந்தது. ‘ஹப்பா, இந்த அளவுக்காவது எனக்காக பாக்கறாளே’ என உள்ளுக்குள் குதூகலித்தான்.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் செலவழித்து, அவள் அனைத்தையும் படித்து முடித்தாள். கூடவே, மருத்துவர் எழுதி வைத்திருந்த குறிப்பையும் படித்து முடிக்க, நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள்.
மருத்துவ அறிக்கை சொன்னது இதுதான்... சந்திரன் வெகு குறைவான ஆல்க்கஹால் எடுத்துக் கொண்டாலும், அவனது சிறுமூளை உடனடியாக பாதிக்கப்படும். அடுத்த பன்னிரண்டு மணி நேரங்களுக்கு, அவன் செய்வது எதுவும் அவனது கட்டுப்பாட்டில் இருக்காது.
கூடவே, அந்த பன்னிரண்டு மணி நேரத்தில் நடந்தது எதுவும் அவன் நினைவிலும் இருக்காது’ இதைத்தான் அது விவரித்திருக்க, ‘அப்படின்னா, அன்னைக்கு நடந்தது எதுவும் இவங்களுக்கு ஞாபகம் இல்லையா? சுய நினைவே இல்லாமலா செஞ்சாங்க?’ கேள்விகள் படையெடுக்க அவனைப் பார்த்தாள்.
“என்னைப்பத்தி உனக்குப் புரிஞ்சதா? என்கிட்டே ஏதாவது கேக்கணுமா?” அவன் கேட்க,
“அன்னைக்கு குடிச்சிருந்தீங்களா?” அவள் கேட்க, இவன் திகைத்தான்.
துணைவருவான்............